சும்மா கிடந்த சொல்லை எடுத்து - [ 9 ]

Posted by அகத்தீ Labels:


 


சும்மா கிடந்த சொல்லை எடுத்து - [ 9 ]

இதுக்கும் அதுக்கும் ஏங்க வச்சான்....

சு.பொ.அகத்தியலிங்கம்

“ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்
கொண்டாட்டம் கொண்டாட்டம் - தேதி ஒண்ணிலே இருந்து -
சம்பள தேதிஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் -
இருபத்தொண்ணிலே இருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம் -
இருபத்தொண்ணிலே இருந்து முப்பது வரைக்கும்
திண்டாட்டம்திண்டாட்டம் திண்டாட்டம் -
சம்பளத் தேதிஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும்
கொண்டாட்டம்கொண்டாட்டம் கொண்டாட்டம் ..”
இப்படித் தொடங்கும் பாடலைக் கேட்டு நம்ம வாழ்க்கையும் அதுபோல் இருக்கே என எண்ணாத நெஞ்சுண்டோ ?

“ சில்லரையைப் போட்டு வைப்பார் தேதி ஒண்ணிலே /தென்பழனி திருப்பதிக்கும் ஸ்ரீரங்கம் போவதற்கும் / சில்லரையைப் போட்டு வைப்பார் தேதி ஒண்ணிலே /அன்புடனே போட்டு வைத்த உண்டியல் வாயைக் கொஞ்சம் / அகலமாக்கி ஆட்டிப் பார்ப்பார் இருபத் தொண்ணிலே – ஆமா / தென்பழனி திருப்பதிக்கும் ஸ்ரீரங்கம் போவதற்கும்../ “ கிண்டல் செய்வது நம்ம வாழ்க்கையை மட்டுமல்ல அந்த சாமியையும்தான். 1955 ஆம் ஆண்டு “ முதல் தேதி ” படத்தில் என் . எஸ் . கிருஷ்ணன் பாடிய பாடல் இது . இயற்றியவரும் அவரே !2014 லிலும் நிலைமை மாறவில்லையே ! இன்னும் மோச மடைந்திருக்கிறது .

கடன் வாழ்க்கையாய் போயிருக்கிறது . கவிஞர் ஜீ.வி “ நொம்பளம்தான் எம் பொழப்பு ” என்ற கவிதையில் பாடுவார் ,

“ சம்பளத் தேதி வந்தா / சங்கடமும் கூட வரும் / நொம்பளந்தான் எம் பொழப்பு / நோகுறத எங்க சொல்ல ? / ஆபிசில் கடனுக்கு / அங்க இங்க குடுத்த பின்னால் / எண்ணூறு ரூபாய / எங்கிட்ட / தருவாக ” அதனால் என்ன ஆகும் ? “ கவரப் பிரிக்கையிலே / கைகாலில் நடுக்கம் வரும் / கடன் பாக்கி நெனச்சாலோ / செலவழிக்க தயக்கம் வரும் / எதைக் கொடுக்க எதை மறுக்க / விடுகதைக்கும் பதில் கிடைக்கும் / இதற்கு விடை கிடையாது ” இப்படிச் செல்லும் கவிதை இன்றைய கடன்கார வாழ்க்கையையும் வாழ்க்கை நெருக்கடியையும் உரக்கப் பேசும் .

என். எஸ் .கிருஷ்ணன் கொண்டாட்டத்தையும் திண்டாட்டத்தையும் பட்டியல் போட்டு ஐந்து வருடங்களுக்குப் பின்னால் “ இரும்புத் திரை” ( 1960) படத்தில் பட்டுக்கோட்டை பாடிய பாடல் இன்றைய உலகமயச் சூழலிலும் கனகச்சிதமாக நம் வாழ்க்கையை அச்சுஅசலாய் பிரதிபலிக்கிறதை என்னென்று சொல்ல .

அவர் பாடுவார் , “ கையிலே வாங்கினேன் பையிலே போடல்லே /காசு போன இடம் தெரியலே - என் / காதலிப் பாப்பா காரணம் கேப்பா / ஏது சொல்வ தென்றும் புரியல்லே / ஏழைக்கு காலம் சரியில்லே ” அது சரி ‘ ஏழைக்கு காலம் சரியில்லே ’ன்னு கவிஞர் புலம்பலாமா ? நம்ம மக்கள் கவிஞர் காரணம் இல்லாமல் எதையும் சொல்லமாட்டார் . கொஞ்சம் நிதானமாய் பாடலை மொத்தமாய் கேட்டால் விளங்கிவிடும் . நாமும் பார்ப்போம் .

உழைக்கிறவன் பிழைப்பு எப்படி நாறுதுன்னு முதல்லே சொல்லு கிறார் , “ மாசம் முப்பது நாளும் ஒளைச்சு / வறுமை பிடிச்சு உருவம் இளைச்சு / காசை வாங்கினாக் கடன்காரனெல்லாம் / கணக்கு நோட்டோட நிக்குறான் - வந்து / எனக்கு உனக்குன்னு பிய்க்கிறான் ” உழைக்கிறவன் இப்படி நொந்து நொம்பலமாகும் போது என்ன நடக்குது ? பட்டுக்கோட்டைத் தொடர்கிறார் .

“ சொட்டுச் சொட்டா வேர்வை விட்டா / பட்டினியால் பாடுபட்டா / கட்டுக் கட்டா நோட்டுச் சேருது / கெட்டிக்காரன் பொட்டியிலே - அது / குட்டியும் போடுது வட்டியிலே ” இப்படி இன்னொரு பக்கம் இருப்பதைக் காட்டிய பட்டுக்கோட்டை சாதாரண மனிதன் பொருட்களை வாங்க முடியாமல் பார்த்துப் பார்த்து ஏங்குவதை அனுபவித்துப் பாடினாரோ என்னவோ ? இப்பவும் நம்ம மனநிலையை அந்த வரிகள் அப்படியே எதிரொலிக்கின்றன .

“ விதவிதமாய்த் துணிகள் இருக்கு / விலையைக் கேட்டா நடுக்கம் வருது / வகைவகையா நகைகள் இருக்கு / மடியைப் பார்த்தா மயக்கம் வருது / எதை எதையோ வாங்கணுமின்னு / எண்ணமிருக்கு வழியில்லே - இதை / எண்ணாமலிருக்கவும் முடியல்லே ” . இந்த வரிகளில் மிரட்டும் உவமைகளோ உவமேயங்களோ படிமங்களோ இல்லை . ஆனால் உண்மை இருக்கிறது . வாழ்க்கை இருக்கிறது . கேட்கிறவன் நெஞ்சுக்குள் மின்சாரமாய் ஊடுருவுகிறது . அதுதான் பட்டுக்கோட்டையின் தனித்துவம் . காலத்தை வென்று நிற்கும் கவித்துவம் .

இந்தப்பாடல் இந்த ஏக்கதோடு முடியவில்லை .தொடரும் , “ கண்ணுக்கு அழகா பெண்ணைப் படைச்சான் / பொண்ணுக்குத் துணையா ஆணைப் படைச்சான் / ஒண்ணுக்குப் பத்தா செல்வத்தைப் படைச்சான் / என்னைப் போலவே பலரையும் படைச்சான் / என்னைப் போலவே பலரையும் படைச்சு - அண்ணே / என்னைப் போலே பலரையும் படைச்சு / இதுக்கும் அதுக்கும் ஏங்க வச்சான் / ஏழையை கடவுள் ஏன் படைச்சான் ? ” அடேயப்பா ! நெற்றியடிக் கேள்வி . ஆண், பெண் , செல்வம் எல்லாவற்றையும் படைச்சது கடவுள்ங்கிறீய அப்படின்னா ‘ ஏழையை கடவுள் ஏன் படைச்சான் ’ வக்கிரமா ? பழிவாங்கலா ? விளையாட்டா ? கொடுமை அல்லவா ? இப்படி கோபச்சிந்தனையைக் கிளறிவிட்டான் பட்டுக்கோட்டை .

அதுவும் சினிமாவில் என்பதுதான் விசேஷம் . ஜோ கொர்ரி என்ற ஸ்காட்லாந்து கவிஞன் சொன்னது சட்டென நினைவுக்கு வந்தது ,
“ ‘ நிறையச் சாப்பிடுங்கள் ’-
கோஷங்கள் சொல்கின்றன ‘ நிறைய மீன்கள் ’

‘ நிறைய இறைச்சி ’ ‘ நிறைய சோறு ’
சாப்பிடுங்கள்..- கோஷங்கள் வற்புறுத்துகின்றன..

ஆனால்.... ... நானோ
சம்சாரிவேலையில்லாத
மூன்றாவது வருடத்தில் இருக்கிறேன் ..

எனக்கு
இந்த கோஷங்கள்
இப்படித்தான் பொருந்துகின்றன ..
‘ நிறைய புல்லைச் சாப்பிடுங்கள் ’..”

எதுக்கும் ஒரு முடிவிருக்கா ? இல்லையா ? பட்டுக்கோட்டை நம்பிக்கையோடிருந்தான் . அவனின் பன்முகத்தை நம்பிக்கையைத் தொடர்ந்து பார்ப்போம்...

நன்றி : தீக்கதிர் 30 ஜூன் 2014 இலக்கியச் சோலை

சும்மா கிடந்த சொல்லை எடுத்து ....[ 8 ]

Posted by அகத்தீ Labels:


 
சும்மா கிடந்த சொல்லை எடுத்து ..[ 8 ]

புரட்சி நண்டு உங்கள் ஊரிலும் உண்டு

சு.பொ.அகத்தியலிங்கம்

“ கடலோரத்தில் நண்டு நடந்து கொண்டிருந்தது . மணலில் பதிந்த நண்டின் கால்தடத்தை அலை அழித்துக்கொண்டே இருந்தது .நண்டுக்கு ஒன்றும் புரியவில்லை.

ஒரு நாள் நரி கடற்கரை ஓரம் நண்டின் கால்தடம் இருக்கிறதா என்று தேடி அலைந்தது .

வளைக்குள் இருந்து ஓரக்கண் ணால் எட்டிப்பார்த்த நண்டுக்கு அலை தன் கால் தடத்தை அழித்த காரணம் இப்போதுதான் தெளிவா னது .

அலையின் நட்பை அடிமனதால் போற்றியது .தமக்குள்ளே அது சொல்லிக் கொண்டது ;

‘ முன்பே காப்பான்
அன்பு நட்பு,…”

காசி அனந்தனின் இந்தக்குட்டி கதைக்கவிதை அசைபோட அசை போட ஆயிரம் சேதி சொல்லும் .

“நண்டூ ருது நரி யூருது ” என குழந்தைகளுக்கு பாட்டுப்பாடி கிசுகிசு ஊட்டும் வழக்கம் இன்னும் உள்ளது . “ நண்டின் காலை ஒடிக் காதே / நாயைக் கல்லா லடிக்காதே /வண்டைப் பிடித்து வருத்தாதே /வாயில்லாப் பிராணியை வதைக் காதே” என்ற மழலைப்பாடலை மறக்க முடியுமா ? நண்டையும் மனிதனையும் இணைத்துப் பார்ப்பது பாரம் பரியமாகத் தொடர்கிறது .

கவிஞர்களின் பாடு பொருளிலும் உவமான உவமேயத்திலும் இடம் பெறும் உயிரினங்கள் பட்டியலைப் பரிசோதித்தால் அதில் வண்ணத்துப் பூச்சியும் குயிலும் முதலிடம் பெற லாம். நண்டு போன்றவை விதிவிலக் காகவே இடம் பெறும் . எனினும் பெரும் சேதியைச் சொல்வதாகவே இருக்கும் .நாளும் பேசப்படும் .

பட்டுக்கோட்டையை திரைப் படத்துறைக்கு அறிமுகம் செய்ய முதல் அடியெடுத்துக் கொடுத்தவர் பாரதிதாசன் என்பர் . தன் முன்னத்தி ஏராக பாரதியையும் பாரதி தாசனை யுமே பட்டுக்கோட்டை ஏற்றார் என்பதை அனைவரும் அறிவர். அந்த பாரதிதாசன் கவிதையில் நண்டு வரும்.

“வெள்ளிய அன்னக் கூட்டம் விளையாடி வீழ்வ தைப்போல
துள்ளியே அலைகள் மேன்மேல் கரையினிற் சுழன்று வீழும்!
வெள்ளலை, கரையைத் தொட்டு மீண்டபின் சிறுகால் நண்டுப்
பிள்ளைகள் ஓடி ஆடிப் பெரிய தோர் வியப்பைச் செய்யும்.”

என்று “ அழகின் சிரிப்பு ” எனும் பெரும் கவிதையில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் வியந்து நிற்பார்.

“நண்டுப்பிள்ளை” என குழந்தை யோடு ஒப்பிட்டு அக்குழந்தை ஓடி ஆடி விளையாடுவதாய் கற்பனை செய்து மகிழ்ந்தார் பாரதிதாசன் எனில் அவரது சீடன் பட்டுக் கோட்டை நண்டு ஒரு சமூகப்புரட்சியே செய் வதாகக் கனவு காண்கிறார் .ஏழைவிவசாயியான நாகனையும் அவன் மனைவியையும் கொண்டு பின்னப்பட்ட கதைப்பாடல் அது .

“ ஊரையடுத்த ஓடைக்கரையில் / ஓட்டை நிறைந்த ஒரு சிறுகுடிசை / நாற்புறம் வயல்கள் நல்ல விளைச்சல் / நாகனும் வள்ளியும் வசிக்கும் இட மது ” என முதலில் கதைக்களத்தை யும் நம் கதாபாத்திரங்களையும் அறிமுகம் செய்கிறார் .

சொல்லச் சொல்ல சுவையேறு தமிழில் வள்ளியுரைக்கிறாளாம் மச்சான் நாகனிடம் , “…… வாரக்குத் தகை தர்ரதாச் சொல்லி வாம்பலில் கொஞ்சம் நட்டுவச்சோமே ” .வள்ளி முடிக்கும் முன் நாகன் இடைமறித்து , “ ஆமா அதுக்கென்ன இப்போது..” என வினவ உரையாடலாய் தொட ரும் அதில் கொஞ்சம் தண்ணி இருந் தால் பத்துநாளில் கதிர் முற்றி தலை சாயும் நிலையில் உள்ளதையும் , ஆனால் நீர் பாய்ச்ச விடாமல் பக்கத்து வயல் பெருந்தனக்காரர் தடுப்பதை யும்; அவர் வயலுக்கு மட்டுமே பாயும் படி மடை மாற்றியதையும் ; யாராவது தடுத்தால் அடிப்பேன் உதைப்பேன் என மிரட்டுவதையும் விவரிக்கிறாள் வள்ளி . அதுவரை சாதாக்கதைதான் ; அப்புறம் தான் பட்டுக் கோட்டையின் முகம் பளிச்சிடும்.

“பொழுது விடிஞ்சுப் போய்ப் பார்த்தா / பொங்கித் ததும்புது நம்ம வயலும் / வாய்க்காலும் வெட்டலே மடையும் திறக்கலே / வழியும் அளவுக்குத் தண்ணி ஏது ? ” புதிர் போட்ட வள்ளியே பதிலும் சொல்லலானாள் :“நண்டு செஞ்ச தொண்டு மச் சான் /நாட்டு நிலைமையை நல்லாப் பார்த்து / ஏற்றத் தாழ்வை ஒழிக்க வரப்பில் / போட்டது வளையில் புரட்சி நண்டு / பாய்ந்தது தண்ணி பரவி எங்குமே / காய்ந்த பயிர்களும் கதிரைக் கக்கின ”இதனால் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவு உண்டோ ! “ ஆகா ஆகா அருமை நண்டே / உனக்கு இருக்கும் உயர்ந்த நோக்கம் / உலக மனிதர்க்கு உண்டோ நண்டே / பெருநிலக்காரன் வரப்பைக் குடைந்து / சிறு நிலங் காத்த சிறந்த நண்டே!” என இருவரும் நன்றி கூறி கூத்திட்டனர் .

அங்கே செழித்து பூரித்து நின்ற கதிர்களை பட்டுக்கோட்டை விவரிக்கும் பாங்கே தனி . அவரின் வியர்வை பாசம் அதில் ஓங்கி ஒலித்தது . அவர் விவரிப்பார். “ படுத்திருந்த பசுந்தரை அடியில் /வெடித்த கிளையிலும் விஷயமிருந்தது / உழைப்பாளர் பலனை ஒட்ட உறிஞ்சி / ஒதுக்கிப் பதுக்கும் உல்லாச மனிதரின் / கள்ளத் துணிவையும் கருங்காலிச் செயலையும் / கொல் லும் ஈட்டிபோல் குருத்துகள் நின்றன ” .இந்தக் காட்சியைக் கண்டு சந் தோஷம் பொங்க வாளை மீன்போல் வள்ளி வரப்பில் குதித்தாளாம் .

கம்யூனிஸ்ட் கட்சி ஏடான “ ஜனசக்தி” யில் 17 -7 -1955 ல் இது வெளிவந்தது . இதுதான் ஜனசக் தியில் வெளிவந்த கவிஞரின் முதல் கவிதை என தீக்கதிர் , செம்மலர் ஆசிரியராக இருந்த கே.முத்தையா வும் , ஆய்வாளர் வீரமணியும் பதிவு செய்துள்ளனர் . ஆனால் இதற்கு முன் 1954 ல் ஜனசக்தி நவம்பர் புரட்சி மலரில் “புதிய ஒளி வீசுது பார் இமயம் தாண்டி ..” எனத் தொடங்கும் ரஷ்யப்புரட்சி பற்றிய கவிதையே முதலில் பிரசுரமானதென்று கே . ஜீவபாரதி சுட்டிக்காட்டி இந்த ‘நண்டு செய்த தொண்டு’ கவிதை இரண்டாவதென நிறுவுகிறார் .

என்.ராமகிருஷ்ணன் தொகுப்பும் இதையே உறுதி செய்கிறது .எத்தனையாவது என்பதைவிட இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் நண்டு செய்த புரட்சியை நாம் பேசுகிறோமே அதுவே வெற்றி

. " ஏலேயேலோ....... தந்தையாம் 
ஏலேயேலோ.......ஏலேயேலோ.......
தந்தையாம்ஏலேயேலோ.......

சிறுநண்டு மணல் மீது
படம் ஒன்று கீறும்;
சிலவேளை இதை வந்து
கடல் கொண்டு போகும்.

எறிகின்ற கடல் என்று
மனிதர்கள் அஞ்சார்
எது வந்த தெனின் என்ன?
அதை வென்று செல்வார்.

ஏலேயேலோ...... தத்தைதாம்
ஏலேயேலோ......ஏலேயேலோ......
தத்தைதாம்ஏலேயேலோ......”

என்கிற ஈழக்கவிஞர் மகாகவியின் மீனவர் பாடல் நம்பிக்கை ஊட்டும் . நம் கவிஞர் பட்டுக்கோட்டையின் சமூகப்பார்வை விரிவும் ஆழமும் கொண்டவை அன்றோ அதைத் தொடர்ந்து பார்ப்போம்

நன்றி : தீக்கதிர் இலக்கியச் சோலை 23 -06-2014

சும்மா கிடந்த சொல்லை எடுத்து [ 7 ]

Posted by அகத்தீ Labels:

சும்மா கிடந்த சொல்லை எடுத்து  [ 7 ]


மந்திரம் இல்லை வசியம் இல்லை தாயத்து..

சு.பொ.அகத்தியலிங்கம்

“எது மனிதனைப் படுகுழியி லிருந்து கைதூக்கி விடுகிறதோ / எது பொன்னைப் போலவே மண்ணை யும் மதிக்கிறதோ / எது உழைத்துத் தேய்ந்தவனின் உடலிலும் மனதிலும் மெத்தென்ற மென்மையைப் பூக்க வைக்கிறதோ / எது ராஜ கம்பீரத்தை இகழ்ந்து மனித கம்பீரத்தை மதிக் கிறதோ / எது அரச ஆடைகளைப் புறக்கணித்து உழவனின் உடல்மேற் புழுதியை பூஜிக்கிறதோ / அதனை - அந்த சிந்தனைக்கு அடிப்படையான தத்துவத்தை - நான் வரவேற்கிறேன் வணங்குகிறேன் ” எனக் கம்பீரமாகத் தொடங்கும் “மனிதம் ”என்கிற நவகவியின் நெடுங்கவிதை . மனிதத்தைப் போற்றுபவனே வரலாற்றை மீறி வாழும் கவிஞனா வான். நவகவியின் முன்னத்தி ஏர் பட்டுக்கோட்டை. அவன் பாடல் களோ என்றும் மனிதம் பாடுபவை. அவனின் சமகாலக் கவிஞர்களும் மனிதம் பாடினர்.

மனிதனை போற் றிப் பாடுவது மட்டுமல்ல மனிதனி டம் மண்டிக்கிடக்கும் தீங்குகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பதும் மானுடம் பாடுவோர் இயல்பே !இதனால் மருதகாசி பாடல்கள் , உடுமலை நாராயணகவிப் பாடல்கள் இவற்றை பட்டுக்கோட்டைப் பாடல்கள் என்று கருதுகிற மயக்கம் எப்போதும் ஏற்படுவதுண்டு.

“மனுஷனை மனுஷன் சாப்பிடு றாண்டா தம்பிப் பயலே - இது / மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை ”இப்படிக் கவலைப் பட்டவர் மருதகாசி .

“எத்தனைக் காலம்தான் ஏமாற்று வார் இந்த நாட்டிலே - இன்னும் / எத்தனை காலந்தான் / ஏமாற்றுவார் இந்த நாட்டிலே/ சொந்த நாட்டிலே நம் நாட்டிலே” என தஞ்சை ராமையாதாஸ் வருந்துவார் .

“மனுசனை மனுசன் ஏச்சுப் பொழைச்சது /அந்தக் காலம் /மடமை நீங்கிப் பொதுவுடைமை கோருவது /இந்தக் காலம்... ”இப்படி நம்பிக்கையூட்டுவார் உடுமலை நாராயண கவியார்.

இப்படி திரையுலகில் மனிதம் பூக்க ஏற்ற தட்பவெப்பம் நிலவிய காலம் அது . பொதுவுடமை இயக்க மும் திராவிட இயக்கமும் இளமை மிடுக்கோடு நடைபோட்ட காலச் சூழலின் விளைச்சல் அது .

பட்டுக் கோட்டையை கேட்கவா வேண் டும் ? தன் கருத்தை வலிமையாக எடுத்துவைத்தான் .

“ சூழ்ச்சியால் சுவரமைத்து / சுய நலத்தால் கோட்டைகட்டிச் / சுடர் விட்ட நீதிதன்னைத் தூக்கி எறிந்து விட்டுச் / சாட்சிகள் வேண்டாம் / சகலமும் நானென்று / சதிராடும் வீணர்களின் / அதிகார உலகமடா ” ( மகாதேவி - 1957 ) . இவை இன்றைய சமூக அரசியல் சூழலுக்கு எழுதிய வரிகள் போலிருக்கும்; ஆயின் எழுதியது 57 ஆண்டுகளுக்கு முன்பு.

இதைத் தொடர்ந்து அடுத்தவரிகள் சவுக்கடியென சுளீரெனப்பாயும். , “புதிரான உலகமடா /– உண்மைக்கு எதிரான உலகமடா/ – இதில் / பொறுமையைக் கிண்டிவிடும் போக்கிரிகள் அதிகமடா”இப்படி நொந்து வருந்தி முடிந்து விடாமல் அடுத்து பளாரென கன்னத் தில் அறையும் பட்டுக்கோட்டை யின் வார்த்தைகளும் அனுபவமும் , “ குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் / குருட்டு உலகமடா – இது / கொள் ளையடிப்பதில் வல்லமை காட்டும் / திருட்டு உலகமடா – தம்பி / தெரிந்து நடந்து கொள்ளடா – இதயம் திருந்த மருந்து சொல்லடா ” இத்தோடு நின்றாரா ? இல்லையே ! அறிவை மடமை மூடிய இருட்டு உலகம் , சண்டை ஓயாத முரட்டு உலகம் என்றெல்லாம் அடுக்கிவிட்டு இவ்வுலகம் என்னென்ன செய்யும் என்றும் பட்டியலிடுவார்.

“விளையும் பயிரை வளரும் கொடியை வேருடன் அறுத்து விளையாடும் ; அதனைக் கண்டு மனம் வெந்திடும் தோட்டக்காரனை மிரட்டும் ; அன்பு படர்ந்த கொம் பிலே அகந்தைக் குரங்கு தாவும்; அழகைக்குலைக்க மேவும் ; கொம் பும் ஒடிந்து கொடியும் குலைந்து குரங்கு விழுந்து சாகும்”. இப்படிக் குறுகிப்போன கிறுக்கு உலகம் திருந்த மருந்து விற்பார். அந்தப் படத்தில் தாயத்து விற்பது போல் அமைந்தது இந்தப் பாடல் . தாயத்து என்பது மூடநம்பிக்கையின் குறியீடு. ஆனால் அதனை வைத்தே விழிப்புணர்வை விதைத்ததில்தான் பட்டுக்கோட்டையின் சாமர்த்தியம் அடங்கிக் கிடக்கிறது .

“ மந்திரம் வசியமில்லை / மாயா ஜாலமில்லை / வாழ்க்கைக்கு ரொம்ப ரொம்ப அவசியம் – இதில் / மறஞ் சிருக்கு அரிய பெரிய ரகசியம் ( தாயத்தோ)” ஒருவன் இப்படி முழக்கமிட மற்றவன் கேட்பான் ,

“ஏம்பா ! பணவருமானத்துக்கு ஏதாவது வழி இருக்கா இதிலே ” இதற்கான பதில்தான் பட்டுக் கோட்டையின் தனித்துவம், “ஒடம்பை வளைச்சு நல்லா ஒழச்சுப் பாரு – அதில் / உனக்கும் உலகத்துக் கும் நன்மையிருக்கு / உக்கார்ந்து கிட்டு சேக்கிற பணத்துக்கு / ஆபத் திருக்கு அது உனக்கெதுக்கு ” அடேயப்பா !
இன்றும் பொருந்தும் பதில் அல்லவா இது ; அதுவும் பணக்கிறுக்கு பிடித்தலையும் இன்றைய உலகில் இது ஒரு கசப்பு மருந்து .

அடுத்து ஒருவன் கேட்பான், “ஏய்யா இதனாலே பொம்பளைகள மயக்க முடியுமா?” அன்று மட்டுமல்ல இன்றும் இப்படி தேடி அலைவோருண்டே . அவர்களுக்கு மண்டையில் குட்டிச் சொல்லுகிறார் பட்டுக்கோட்டை , “ கண்ணும் கருத்துமே பெண்ணைக் கவர்ந்திடும் / காதம் வாழ்வு தொடர்ந்திடும் / கண்ட கண்ட பக்கம் திரிஞ்சா / கையும் காலும் வாழ்வும் துண்டு துண்டாகத் தொங்கும்படி நேர்ந்திடும் ”! ஆமாம் காதல் வாழ்வே இனிக்கும் .உயர்வா னது. கண்டபடி மேய எண்ணுவது தப்பானது. ஆபத்தானது.கூடவே கூடாது. என்றைக்கும் அதுதானே சரி !

இந்த நெடிய பாடல் சமூக வாழ் வில் குறுக்கிடும் தீமைகளை மிகச் சரியாகப் பட்டியலிட்டு எச்சரித்து நல்வழிப்படுத்துகிறது . இப்பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக் காது . தெவிட்டாது . இசையும் கருத் தும் நம்மை ஈர்த்துக்கொண்டே இருக்கும் . ஏனெனில் மானுடமே இதன் பாடுபொருள் .

“ வேறுள குழுவையெல்லாம் மானுடம் வென்றதம்மா ” என கம்பனும் “ மனிதன் என்பதினும் உயர் சொல்லில்லை ” என மயா கோவஸ்கியும் சொன்னதன் உட் பொருளை உள்வாங்கிய பட்டுக் கோட்டையின் மானுடநேசத்தைத் தொடர்ந்து பார்ப்போம்.

நன்றி : தீக்கதிர் இலக்கியச்சோலை 16 ஜூன் 2014

பிறந்த நாளில் எனது அகத்தாய்வு...

Posted by அகத்தீ
பிறந்த நாளில் எனது அகத்தாய்வு....
ஜூன் 15 , 2014 ஞாயிற்றுக் கிழமை .

இன்று இன்னொரு நாளே ! ஆயினும் 1953 ஆம் ஆண்டு இதே நாளில் நான் பிறந்ததாகப் பள்ளிச் சான்றிதழ் கூறுகிறது . இதைத் தவிர இந்நாளுக்கென எச்சிறப்பும் இல்லை . இந்நாள் வாழ்வின் இன்னொரு நாளே !

பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்த அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி !


பிறவிப் பெருங்கடலென்று வருந்தவும் இல்லை .
பிறவி பெரும் பேறு என மகிழ்ச்சி கூத்திடவுமில்லை .
நொடி தோறும் பிறந்து கொண்டும் இறந்து கொண்டுமிருக்கிற மக்கள் பெருவெள்ளத்தில் நானொரு சிறுதுளி .
காலவெள்ளத்தில் கரைந்து காணாமல் போகும் எமது இருப்பும் தடயமும் என்பதறிவேன்.


வாழும் காலத்தில் எப்படி வாழ்ந்தார் என்பது மட்டுமே ஒருவரை மதிப்பிடும் ஆகச்சிறந்த முறை . பிறந்த நாளன்று ஒவ்வொருவரும் தன்னை அகத்தாய்வு செய்வது ஆக்கபூர்வமான வாழ்வியல் அணுகுமுறை என்பது என் கருத்து . கம்யூனிஸ்ட்டுகள் இதனை சுயவிமர்சனம் என்பர் . நற்றமிழில் இதனை அகத்தாய்வு என இம்மண்ணுகேற்ப நான் வழங்குகிறேன் .இதன் பொருள் பொதுவெளியில் தன்னைத்தானே வார்த்தைச் சவுக்கால் அடித்துக் கொள்ளவேண்டும் என்பதல்ல ;மாறாக தனக்குத் தானே பாராட்டிதழ் வாசித்து மகிழ வேண்டும் என்பதுமல்ல ; செய்ததை பெருமையோடு நினைவு கூரவும் , செய்யத்தவறியவற்றை நினைவுத்திரையில் ஓடவிடவும் இது ஒரு அரிய வாய்ப்பு . இதனால் வாழ்க்கைப் பயணம்  இலகுவாகும்.


கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து இப்பணியில் அக்கறையுடன் ஈடுபட்டுள்ளேன் . எனது முந்தைய அகத்தாய்வுகளை கீழ்க்கண்ட சுட்டிகளில் உள்ளன . ஆர்வம் உள்ளோர் உள்நுழைந்து பார்க்க வேண்டுகிறேன் .


http://akatheee.blogspot.in/2011/10/blog-post.html

http://akatheee.blogspot.in/2012/06/2.html

http://akatheee.blogspot.in/2013/06/blog-post_17.html


கடந்த ஓராண்டில் வழக்கமான எழுத்துப்பணி மற்றும் கொள்கை பரப்புரைப் பணியில் சுணக்கமின்றி ஈடுபட்டேன் . தீக்கதிரிலும் எழுதினேன் . சமூகவலைதளங்களில் தீவிரமாக செயல்பட்டேன் . மதவெறியர் கோபத்துக்கும் மிரட்டலுக்கும் ஆளானேன் .அதன் மூலம்  சரியான திசையில் செல்வதாய் நான் உணர்கிறேன் .

சொந்தவாழ்வில் பெரிய குறிப்பிடத்தக்க மாற்றம் ஏதும் நிகழவில்லை . கைக்காசு கரைந்து விட்டதால் கொஞ்சம் நெருக்கடி உள்ளது . மாத ஊதியத்தை கடந்த நான்கு ஐந்து மாதங்களாகப் பெறவில்லை . விரைவில் நிலைமை மாறலாம் அல்லது இதுவே தொடரலாம். .

மகனைத் தொடர்ந்து மகளின் குடும்பமும் பெங்களூர் வந்துவிட்டது ஒருவகையில் நல்லதே ! எல்லோரும் அன்றாடம் சந்திக்கலாம் . குறிப்பாக பெயரன் பெயர்த்தியோடு கொஞ்சி மகிழலாம் . குழந்தைகளோடு குழந்தையாகி  கொண்டாடி மகிழ்வது ஆனந்தமே ! மனதை எவ்வளவு இலேசாக்குகிறது ! குதூகுலமாக்குகிறது ! அடடா ! அடடாவோ!  என்னே  ஆனந்தம் !

அதே சமயம் நம்மோடு இருப்பவர்கள் சொல்லுகிற பொய்களும் ஏமாற்றுகளும் நெஞ்சைக் காயப்படுத்தத்தான் செய்கிறது . ஆயினும் சகித்துக் கொள்வதைத் தவிர வேறுவழி இல்லை . இதுதான் வாழ்க்கையோ !எல்லாம் எப்போதும் நாம் விரும்புகிறபடிதான் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதே தவறுதானே !

நான் வரித்துக் கொண்டுள்ள மார்க்சிய இலட்சியம் காலாவதியாகிவிட்டதா என்கிற ஐயத்தை நடந்து முடிந்த தேர்தல்கள் எழுப்பின . எனக்குள் நடத்திய நெடிய உரையாடலுக்குப் பிறகு மார்க்சியம் தோற்காது ; ஏனெனில் அது சமூக விஞ்ஞானம் என்பதை மீண்டும் ஒரு முறை தெளிந்தேன் .

சென்னைப் பல்கலைக்கழகத்தில் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் நினைவுச் சொற்பொழிவாற்றிய போது [2012 ஆம் ஆண்டு ] நிறைவுப்பகுதியில் நான் சுட்டிக்காட்டியதை இங்கு மீண்டும் நினைவுகூர்கிறேன் ;

 “இன்றைக்கு இக்கட்டான சூழ்நிலையிலிருந்து மனிதகுலத்தை விடுதலை செய்வதற்கான போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது. மார்க்சிய அணுகுமுறையின் அடிப்படையில் களச் சூழலை ஆய்வு செய்து முதலாளித்துவத்தை கடந்து செல்வதற்கான முடிவை சிந்தித்து எடுக்க வேண்டியுள்ளது. அவ்வாறு செயல்படாவிட்டால் அதிகரித்துவரும் துன்ப துயரங்களுக்கு உள்ளாக்கப்படும் மக்கள் பயங்கரவாதம், மதத்தீவிரவாதம், இனக்குழுவாதம் பிற அடிப்படை வாதங்கள் போன்ற அழிவுத்தன்மையுடன் கூடிய வீண்வேலைகளில் ஈடுபடும் நிலை உருவாகும். நாம் எட்ட வேண்டிய இறுதி லட்சியத்தைப் பற்றி முன்னரே குறிப்பிட்டுள்ளோம். அது புரட்சிகரத்தன்மை கொண்டதாகவும் சமூகக் கட்டுமானத்தை மறு உருவாக்கம் செய்வதாகவும் இருக்கும். மக்கள் தங்கள் உள்ளார்ந்த ஆற்றலைப் பயன்படுத்திக்கொள்ளக் கூடிய சுதந்திரம் அளிக்கும் வகையில் அது அமைந்திருக்கும். அந்த லட்சியத்தை நாம் எட்டவில்லை என்றால் பொருளற்ற, குறிக்கோளற்ற, முடிவற்ற வன்முறைச் சுழற்சியே நம் கண்முன் மற்றொரு இறுதிக்கட்டமாக இருக்கும். அது மக்களின் துன்ப துயரங்களை மேலும் அதிகரிக்கும். இரண்டாவதாகக் குறிப்பிட்ட நிலை ஏற்படாமல் தவிர்ப்பதற்கான ஒரே நம்பிக்கை (வேறு எதனையும் தவிர) மார்க்சியம்தான் என்று குறிப்பிடலாம்”. இது இன்றைய மார்க்சிய சிந்தனையாளர் சீத்தாராம் யெச்சூரியின் எச்சரிக்கையும் வழிகாட்டலுமாகும்.


 "எம் இயல்பு " என்ற தலைப்பில் மே 20 ஆம் நாள் சமூகவலை தளத்தில் நானிட்ட ஒரு பதிவை - அக்கவிதையை இங்கு நினவுகூர்வது பொருத்தம் என நினைக்கிறேன் .

யானை பொம்மை கேட்டு
அடம்பிடித்து அழுதழுது
காய்ச்சலே வந்துவிட்டதாம் எனக்கு..

நான் கேட்டமாதிரி
சுசீந்திரம் கோவில் திருவிழாவில்
ஊர்வலம்வரும்
முகப்படாம் பூண்ட யானையை
மாமா வாங்கிவர
என் அழுகை நின்றதாம்
அம்மா சொல்லி இருக்கிறாள்.

எட்டாம் வகுப்பு படிக்கையில்
காது தோட்டை
கழுத்து உத்திராட்சத்தை
முடி முன்வெட்டை
தூக்கி எறிய
சாப்பாட்டை மறுத்து
அப்பாவோடு சண்டை போட்டு
சாதித்த நாட்கள்
நினைவில் நிற்கிறது .

குரோம்பேட்டை பள்ளியில்
பள்ளி இறுதி வகுப்பில் சேர்ந்ததும்..
ஒரு நாள்
உள்ளத்தில் கனந்த நாத்திகம்
உசுப்பிவிட
கோவில் நவக்கிரக பொம்மைகள்
நகர்த்தி அங்கே ஏறி உட்கார்ந்ததும்
தலைமையாசிரியர் கோபவிழியில்
தண்டனையாய்
101 முறை
நவக்கிரகம் சுற்றியதும்
நன்றாய் நினைவிருக்கிறது .

குடும்ப வறுமையை
கொஞ்சமும் யோசியாது
இருக்கிற வேலையை துறந்து
தந்தையின் மனது காயப்பட்டபோதும்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சி முழுநேர ஊழியனாய் ஆனது
இன்னும்
நெஞ்சில் பதிந்திருக்கிறது..
தொடர்கிறது அந்த பெருமிதம்

இன்னும்
சொல்லச் சொல்ல நீளும்
கொல்வறுமையோ
பாசவலையோ
என்னை சிறைப்பிடிக்க
ஒருபோதும்
அனுமதித்ததில்லை
லட்சியவெறியில்
சுழன்றுகொண்டிருந்தேன்
சோர்வு அண்டியதில்லை ..

வாங்கப்படுகிற நீதிபோல்
கார்ப்பரேட்டுகளால்
வாங்கப்பட்ட வெற்றியால்
வெறிகொண்ட பித்தனொருவன்
கடையை சாத்திவிட்டு நடையைக் கட்டென
முகநூலில் பதிவிடுகிறான்

அவனறிவானா?
லட்சிய நெருப்பை
தோல்விக் கறையான்கள்
தின்ன முடியாதென்பதை..

அவனறிவான ?
 “ அறத்தினால் வீழ்ந்துவிட்டாய்..”
என்ற பாரதிவரிகளை ...
 “ கிளர்ச்சிகொண்டு உயிர்த்து வாழ்தல் “
எம் இயல்பு என்பதை ..


இதற்கு மேலும் இது குறித்து பேசுதல் தேவையா ? முன்னிலும் உறுதியாய் முன்னிலும் நுட்பமாய் மக்களின் மனங்களை வெல்ல எம்மால் இயன்ற வகையில் முயல்வேன் . தனிப்பட்ட முறையில் எனக்கு அமைப்புக்குள் சில கசப்புகள் தொடரத்தான் செய்கின்றன . எனினும் அவை தற்காலிகமானவையே . எந்தப் பதவி பொறுப்பும் இல்லாமல் கட்சிக்காக உழைக்க இயலும் என்பதை கடந்த மூன்று ஆண்டுகளாய் செயலில் காட்டியுள்ளேன் . சுயவிருப்பத்தினடிப்படையிலேயே அவ்வாறு செய்தேன் . செய்தது சரியே என இப்போதும் நம்புகிறேன் . பணி தொடர்வேன் .

தனிப்பட்ட முறையில் எனக்கும்  அமைப்புக்குள் சில கசப்புகள் தொடரத்தான் செய்கின்றன . காயங்கள் உறுத்தத்தான் செய்கின்றன . காலம் அவற்றை ஆற்றும் என நம்புகிறேன் .

எந்தப் பதவி பொறுப்பும் இல்லாமல் கட்சிக்காக உழைக்க இயலும் என்பதை கடந்த மூன்று ஆண்டுகளாய் செயலில் காட்டியுள்ளேன் . சுயவிருப்பத்தினடிப்படையிலேயே அவ்வாறு செய்தேன் . செய்தது சரியே என இப்போதும் நம்புகிறேன் . பணி தொடர்வேன் .


கடந்த ஆண்டு சில புத்தகங்கள் எழுத திட்டமிட்டேன் . இயலவில்லை . விவரம் சேகரிப்பதிலேயே காலம் கரைகிறது . இவ்வாண்டு செய்து முடிக்க திட்டமிட்டுள்ளேன் .


நான் கடந்துவந்த பாதையில் கழிவிரக்கம் கொள்ள ஏதுமில்லை . கொண்ட கொள்கையும் அதனையொட்டிய வாழ்வும் சரியே . தவறே செய்யாத - பிழையே நேராத  - யாரும் இல்லை  - எதுவும் இல்லை . இதற்கு நானும் விதிவிலக்கு இல்லை . ஆயினும்  வருந்தத்தக்க ஏதுமில்லை .

என்ன சாதித்தாய் என வினவின் பெரிதாக ஏதுமில்லை என்பேன் . இதன் பொருள் ஒன்றுமில்லை என்பதல்ல . அரசியல் களத்திலும் எழுத்துப் பணியிலும் என் சக்திக்கு செய்துள்ளேன் . எனது எழுத்துகள் சில காலம் கடந்து நிற்கும் என நம்புகிறேன் .

என் நண்பர்கள் அதிலும் என்னைவிட இளையவர் சிலர் அண்மையில் இறந்தது மனதைப் பிசைந்தது . மரணம் எப்போதும் யார் வீட்டுக் கதவை வேண்டுமானாலும் தட்டலாம் அல்லவா ? மரணத்தை எதிர்பார்த்து இயன்றவரை திட்டமிட்ட பணிகளை விரைந்து செய்வேன் .

என் மனைவியும் மக்களும் சுற்றமும் நட்பும் தோழமைகளும் , “ இன்னும் கொஞ்சகாலம் இவன் வாழ்ந்திருக்கலாம் ” என்கிற அந்த நொடிப்பொழுதில் மரணம் எமை அணைக்க வேண்டும் என விழைகிறேன் .

மரணத்திற்குப் பிறகு உடலை மருத்துவமனைக்கு வழங்கிவிடவேண்டும் . எந்த மத சாதிச் சடங்கும் செய்யக்கூடாது . தேங்காய் ,பழம் , ஊதுவத்தி , திருநீறு எதுவும் கூடாது . கருமாதி , திவசம் எதுவும் கூடவே கூடாது . நானும் என் அம்மா அப்பாவுக்கு இவற்றை செய்ததில்லை . வாழும் காலத்தில் அவர்களை இறுதிவரை என்னோடு வைத்திருந்தேன் . அம்மா கண் தானம் செய்யப்பட்டது .இவையே இன்றும் மனநிறைவாக இருக்கின்றது . என் பிள்ளைகளுக்கும் அதையே சொல்லுகிறேன் . வேறொன்றுமில்லை .

62 வயதிலேயே சாவு பற்றி பேசவேண்டுமா எனக் கேள்வி எழலாம் .  என் செய்ய ? பிறப்பு இறப்பு நம் வசத்தில் இல்லையே !

பிறந்த நாளில் வாழ்த்திய -
என் இம்மடலை பொறுமையாக வாசித்த -

அனைவருக்கும் நன்றி ! நன்றி!


தோழன்

சு.பொ.அகத்தியலிங்கம் .

சும்மா கிடந்த சொல்லை எடுத்து - 6

Posted by அகத்தீ Labels:

சும்மா கிடந்த சொல்லை எடுத்து - 6ஆடி அடங்கும் வாழ்க்கையில்


சு. பொ. அகத்தியலிங்கம்


“ அவன் உப்பை / கையில் வைத் திருக்கிறான் / நானோ நெஞ்சிலிருக் கும் / காயத்தில் வைத்திருக்கிறேன்” என்றார் பாரசீகக்கவி சாஅதி . காயம் படா மனிதன் யார் ? காயத்தில் உப்பைத் தடவும் சமூகச்சூழலில் அதன் வலியை, துடிப்பை  பிறருக்கு புரியவைப்பது அவ்வளவு சுலபமல்ல.


“நீ கேட்டது இன்பம்/  கிடைத் தது துன்பம் / வாழ்க்கை இது தானோ ? - எதிர் / பார்த்தது நிழலை அடைந்தது வெயிலைப் / பாடம் இதுதானோ ? ” (ஆளுக்கொரு வீடு 1960 ) என பட்டுக்கோட்டை பாடுவது நம் ஒவ்வொருவரையும் பார்த்து கேட்பதுபோலுள்ளதே !


அடுத்து அவன் சொல்வான், “பேசிப்பேசி பலநாள் பேசி / நேசம் வளர்த்து நெஞ்சம் மகிழ்ந்தே / ஆசைக் கனியாய் ஆகும் போது / அன்பை இழந்தால் லாபம் ஏது ? ” ஆம் , கைக்கு எட்டியது வாய்க்கு எட்டா மல் போகும்போது  இதயம் எப்படி புழுங்கும் ? புலம்பும் ? ஆறுதல் தேடி அலையும் ! தலை சாய்ந்திட மடி தேடி நிற்கும் !


தனிமனிதன்  தனக்கு  நேரும் துன்ப துயரங்களுக்கு யார் மீதாவது பழிபோட்டு தன்னைத் தானே ஆறு தல்படுத்திக் கொள்ள வேண்டியவ னாக இருக்கிறான் . கடவுள் மீதோ , விதி மீதோ பழி போடுவது உலக இயற்கை . பகுத்தறிவு அதனை ஏற்கா தெனினும்  பாமரருக்கு அதுவே சுமைதாங்கியாய்த் தெரிகிறது. பட்டுக்கோட்டைக்கு திரைப்பட கதைச் சூழலில் அத்தகு மனிதனின் குரலில் பாடவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது . பாடுகிறான் ;
“ விதியென்னும் குழந்தை கையில் / உலகந்தன்னை / விளையாடக் கொடுத்துவிட்டாள் / இயற்கை அன்னை - அது / விட்டெறியும் உருட்டிவிடும் / மனிதர் வாழ்வை / மேல் கீழாய் புரட்டிவிடும் ”      (தங்கப்பதுமை 1959 )


நமது வாழ்க்கையை எந்தச் சூறாவழி எப்படி எங்கே பிய்த்தெறி யும் ? யாரறிவார் ?அந்த நேரம் இந்த விதியை நொந்து சமாதானம் ஆவது இயல்புதானே ! அப்படியானால் பட்டுக்கோட்டையும் விதிவசம் என்பவரோ ! இது குறித்து சாலமன் பாப்பையா , பா.வீரமணி , குன்றக் குடிஅடிகளார் உட்பட பலரும் அலசியுள்ளனர் .


55 திரைப்படங்களுக்கு எழுதிய 186 திரைப்படப் பாடல்களில் ,ஐந்து திரைப்படங்களில் ஐந்து இடங்களில் பட்டுக்கோட்டை விதியைச் சார்ந்து எழுதியுள்ளார் என புள்ளிவிவரம் தரும் பா. வீரமணி  அதற்கு எதிராக அவர் புனைந்த பாடல்களையும் பட்டியலிடுகிறார்.


திரைக்கதைக்கு எழுதப் படுகிற பாடல்களில் கதைமாந் தரின் மன இயல்பையே கவிஞர் பாடவேண்டும்.  பட்டுக் கோட்டைக்கும் அதுவே பொருந்தும் . அது கவிஞரின் சொந் தக் கருத்தாக இருக்கவேண்டிய அவசியமில்லை . பட்டுக்கோட் டையை அறிந்தவர் அவர் விதியைச் சரணடைபவரல்ல என்பதை ஒப்புக் கொள்வர் . இதில் மிகவும் முக்கியமா னது என்னவெனில் அந்தச்சூழலி லும்  கொஞ்சம் நூல் நுழைய வாய்ப் பிருப்பினும் அதனுள் புகுந்து தன் கருத்தைப் புகுத்துவதில் பட்டுக் கோட்டை எப்படி நுட்பமாக இயங்கினான் என்பதுதான்.


மேலே மேற்கோள் காட்டிய விதிப்பாடலிலும் முற்பகுதி அப்படி யெனில் பிற்பகுதி இதற்குப் பதிலடி யாய் இருக்கும் . “ மதியுண்டு கற் புடைய / மனைவியுண்டு / வலிமை யுண்டு வெற்றி தரும் / வருந்திடாதே / எதிர்த்து வரும் துன்பத்தை / மிதிக் கும் தன்மை / எய்திவிட்டால் காண்பதெல்லாம் / இன்பமப்பா ” என்று விதியை மதியால், போராட்ட வலியால் வெல்லலாம் என்கிறார் பட்டுக்கோட்டை . அதுதான் அவரின் பழுதற்ற சமூக அக்கறையின் சாட்சி. விதிக்கு இரைகொடுக்க ஒப்பாதவரல்லவா அவர் . சில பாடலில் இப்படி எழுத இயலாத அளவுக்குப் பாத்திரப்படைப்பின் தன்மை இருக்கும் போது திரைப்பட விதியை அவரும் ஏற்றுத்தானே ஆகவேண்டும் ?


“விதி என்று ஏதுமில்லை வேதங் கள் வாழ்க்கையில்லை; உடலுண்டு உள்ளம் உண்டு முன்னேறு மேலே மேலே ” என பாடல் எழுதியவன் கண்ண தாசன் . ஆனால் அவன் விதியை, வேதத்தை, முரட்டுத்தனமாக நம்பி யவன்; அதனைத் தொடர்ந்து நியாயப்படுத்தியவன். ஆயினும் கதைமாந்தருக்காக வேறுகுரலில் பாட்டு எழுதினான் . விதியை கேள் விகேட்டு சில வரிகள் எழுதியதால் கண்ணதாசன் பகுத்தறிவுவாதி ஆகி விடமாட்டான். விதியைச் சார்ந்து சில வரிகள் திரைப்படத்தில் எழுத நேரிட்டதால் பட்டுக்கோட்டை விதியை நம்பியவனாகான் . பட்டுக் கோட்டை என்றும் முற்போக்கின் பக்கமே !
இதே திரைப்படம்  ‘தங்கப் பதுமை’ யில்  அவர் பாடிய இன் னொரு பாடல் , “அடடா ! மனுஷன்  இப்படியும் பெண்ணிய நோக்கில் அன்றே இயங்கியுள்ளாரே ! ”என நம்மை வியக்கவைக்கிறது . அதுவும் ஆண் வாயால் பேசவைத்ததுதான் அருமை. மனைவிக்கு துரோகம் செய்ததை எண்ணி  குமைகிற பாத்திரம் அது .  “ ஈடற்ற பத்தினியின் இன்பத்தைக் கொன்றவன் நான்..” எனத் தொடங்கி இதயத்தில் கொந்த ளித்த எண்ணத்தைக் கொன்றவன் - பண்பதனைக் கொன்றவன்  என நெஞ்சோடு புலம்பும் தொகையறா வைத் தொடர்ந்து வரும் பல்லவியில் சொன்ன வரிகள் என்றும் நிலைக்கும் சத்தியவாக்கு என்பார்களே அந்த வகையானது. நீங்களே அதைச் சொல்லிப் பாருங்கள்!


“ஆரம்பமாவது பெண்ணுக் குள்ளே - அவன் / ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே / ஆராய்ந்து பார் மனக் கண்ணுக்குள்ளே / ஆத்திரங் கொள்ளாதே நெஞ்சுக்குள்ளே ! ” இந்தப்பாடல் இப்போதும் அடிக் கடி ஒளிபரப்ப ஒலிபரப்ப பார்க்கி றோம் . கேட்கிறோம்.
இந்தப்பாடலின் முத்தாய்ப்பாய் இறுதிப்பத்தி அமையும் . “ சிங்காரம் கெட்டுச் சிறைப்பட்ட பாவிக்குச் / சம்சாரம் எதுக்கடி - என் தங்கம் / சம் சாரம் எதுக்கடி ..” சரி ! சரி ! இதெல் லாம் எல்லோரும் புலம்புவதே ! ஆனால் அடுத்த அடிகள் தாம் இடியாய் இறங்கும்  “ மனைவியைக் குழந்தையை / மறந்து திரிந்தவனை / வாழ்த்துவதாகதாடி - என் தங்கம் / மன்னிக்கக்கூடாதடி”
கணவன் எவ்வளவு தப்புகள் செய்திருந்தாலும் மன்னித்து ஏற்க வேண்டியது மனைவியின் கடமை என விதித்திருந்த பழமைச் சங்கிலியை உடைத்தெறிந்து மன்னிக்கக்கூடாதென உரக்கச் சொன்னவன் பட்டுக்கோட்டை .


இரத்தக்கண்ணீர் படத்தில் தவறு செய்த கணவனே ( எம். ஆர். ராதா) தன் மனைவியை தன் நண்பனோடு சேர்த்துவைப்பது மிகப்பெரும் சமூகச்சீர்திருத்தம் . இப்படி சமூகச் சீர்திருத்தம் அலையடித்த காலம் அது .  மீண்டும் பழமையின் சங்கிலி இறுகும் இன்றையச் சூழலில் பட்டுக் கோட்டையின் பாடல்களை மீண் டும் மீண்டும் உரக்கப் பாட வேண் டும் .பாடுவோம்.


 “ வீட்டுக்கு வெளியே
ஓர் ஓரமாய்த்
தயங்கித் தயங்கி
உட்கார்ந்திருக்கிறது
நம்பிக்கை
வெகு நேரமாய்!”
என கவிஞர் மேத்தா கூறியது நினைவுக்கு வருகிறது . பட்டுக் கோட் டையின் பாடல்களில் சம்மணம் போட்டு உட்கார்ந்திருக்கும் விடியல் கீற்றை பேசலாம் தொடர்ந்து .

நன்றி : தீக்கதிர் இலகியச்சோலை 9 ஜூன் 2014

சும்மா கிடந்த சொல்லை எடுத்து - 5

Posted by அகத்தீ Labels:

சும்மா கிடந்த சொல்லை எடுத்து - [5 ]

சூடுபட்ட மடமை கூடுகட்டி வாழுதாம்

சு.பொ.அகத்தியலிங்கம்.


“ சொர்க்கத்தில் /சைத்தான் அலைந்து திரிவதைக் கண்டு / கட வுள் கேட்டார் : / ‘ இங்கு ஏன் வந் தாய் ?/ உன் வேலை கீழே தானே ? ’ /அதற்கு சைத்தான் சொன்னது : /‘இங்கே ஒளிந்து கொள்வதற்காகவே / வந்தேன் ஆண்டவரே , / கீழே நடப் பவற்றைப் கண்டு /திகைத்துப் போ னேன். / எனக்கு /எந்த வேலையையும் /மனிதன் /விட்டுவைக்கவில்லை . /என் கலை எல்லாவற்றையும் /அவன் கற்றுத் தேர்ந்துவிட்டான்..

”காஷ்மீரியக் கவிஞன் நூர்முகமது ரோஷன் எழுதிய அனுபவ வரிகள் இவை .வாழ்க்கைதரும் அனுபவமே தனி . திரைத்துறையில் கண்ணதாசன் எழுதிய தத்துவப் பாடல்களும் சோகப்பாடல்களும் இன்றைக்கும் மனதை துயரம் அறுக்கும்போது ஒத்தடம் கொடுப்பவை . “ போனால் போகட்டும் போடா” , “ சோதனை மேல் சோதனை போதுமடா சாமி” போன்ற பாடல்களை முணுமுணுக் காத உதடுகள் மிகமிக சொற்பம்

.ஒரு முறை ‘’மெட்டுக்குப் பாட் டெழுத மாட்டாராமே பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம்... உண் மையா?’’ என்ற கேள்விக்கு எம் . எஸ். விஸ்வநாதன் ஒரு பேட்டியில் சொன் னார் , “உண்மைதான். தன்னோட பாட்டு வரிகளுக்குத்தான் மெட்டுப் போடணும்கிறதை ஒரு வைராக்கிய மாகவே வெச்சிருந்தார் பட்டுக் கோட்டையார். ‘பாசவலை’னு (1956) ஒரு படம். அந்தப் படத்துல ஒரு காட்சிக்குரிய பாடலை முதலில் கண் ணதாசன் எழுதினார். தயாரிப்பாளர், இயக்குநரை அந்தப் பாட்டு வரிகள் அவ்வளவா ஈர்க்கலை. அப்புறம் கவிஞர் மருதகாசிகிட்ட எழுதச் சொன்னோம். அதுவும் சிறப்பா அமையலை. அப்போ ஒரு நண்பர் மூலம் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எனக்கு அறிமுகமானார். ‘சரி...’ எதுக்கும் இவரையும் எழுதச் சொல்லிப் பார்ப்போம்’னு அவர் கிட்டே சிச்சுவேஷனைச் சொல்லி எழுதச் சொன்னோம். எழுதிட்டு வந்து கொடுத்தார். பிரமாதமான வரி களா இருந்தன... ‘குட்டி ஆடு தப்பி வந்தால் / குள்ளநரிக்குச் சொந்தம் / குள்ளநரி மாட்டிக்கிட்டா / கொற வனுக்குச் சொந்தம்! / தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில் / பட்டதெல்லாம் சொந்தம் ! / சட்டப்படி பார்க்கப் போனால் / எட்டடிதான் சொந்தம்’ -பாட்டு எங்க எல்லாருக்கும் பிடிச்சுப் போச்சு ”இந்த எட்டடிக்கு மேல் வாழ்க் கையை யாரு பாடிட முடியும் என கவிஞர் வாலி தலையில் வைத்துக் கொண்டாடினார் .அடுத்தடுத்த வரிகள் கூட வாழ் வின் நிலையாமையை பாடும் .

பொது வாக கவிஞர்கள் வாழ்க்கை துயரத்தை பாடும்போது தன்னை மறந்து விடுவர் . நம்பிக்கை வறட்சி தலைதூக்கிவிடும் . கவிதையிலாவது அதனை கட்டுப்படுத்துவது கவிஞ ருக்கு சாத்தியமாகும் . திரைப்பட பாடலெனில் கதைச் சூழல் கதை மாந்தரின் மனோ நிலை இவற்றை எதிரொலிக்க வேண்டும் . இச்சூழ லில் கவிஞரின் வரம்பு குறுகிவிடும். ஆயினும் அந்தக் குறுகிய எல்லை யில் நிற்கும் போதும் சமூகப்பார்வை யோடு எப்படி பட்டுக்கோட்டை யால் பாட முடிந்தது என்பதுதான் ஒரு புதிர் . கவிஞரின் ஆற்றல் .சரி விஷயத்துக்கு வருவோம். வாழ்க்கை நிலையாமையை பாடும் சூழலிலும் “ கூட்டுலே குஞ்சு பறக்க நினைத்தால் / குருவியின் சொந்தம் தீருமடா / ஆட்டுலே குட்டி ஊட்ட மறந்தால் / அதோட சொந்தம் மாறு மடா ..” என்றார் .

முடிவாகப் பார்க் காமல் ஒன்றின் முடிவை இன்னொன் றின் தொடக்கமாக நம்பிக்கையோடு பார்க்க பட்டுக்கோட்டையாலன்றி வேறுயாரால் முடியும் . ஆம்! குருவி குஞ்சு பறக்க எத்தனித்தால் சாத்தியம்; ஆட்டுக்குட்டி தன் பாதையை தேர்வது சாத்தியம் என்றார் . ஒரு பிடி வாய்க்கரிசியிலே வாழ்க்கை முடிந்து போகும் “ செத்த பின்னே அத்தனைக்கும் சொந்தக்கா ரர் யாரு” எனக் கேள்வி எழுப்பி மரணம் நிச்சயம் அதற்கு முன் வம்பு ஏன் பாசாங்கு ஏன் ஆட்டம் ஏன் என நுட்பமாய் கேட்டு மனம் திருந்தச் சொன்னவர் பட்டுக்கோட்டை எனில் மிகை அல்ல .பதிபக்தி (1958 ) பாடலில் வேறொரு விதமாக ஆட்டோடு நம் வாழ்வை இணைப்பார் .

“ இரை போடும் மனிதருக்கே / இரையாகும் வெள்ளாடே / இதுதான் உலகம் வீண் / அனுதாபம் கொண்டு நீ / ஒரு நாளும் நம்பிவிடாதே ! / டேயண்ணா ..டேயண்ணா .. டேயண்ணா .. ட்ரியோ ..டேயண்ணா ..” என எச்சரித்தார் .ஆனால் இந்த உலகம் எப்படிப் பட்டது தெரியுமா ? “ முறையோடு உழைத்துண்ண / முடியாத சோம் பேறி / நரிபோல் திரிவார் புவிமேலே –நல்ல / வழியோடு போகின்ற / வாய் பேசா உயிர்களை / வதச்சுவதச்சு தின்பார் வெறியாலே ..” இந்த சோம்பேறிகள் பிறரை ஏய்த்து வாழ்பவர்கள். திருந்த மாட்டார்கள்; போதனைகளை காதில் கேட்டு ரசிப்பாங்க அத்தோடு விட்டுரு வாங்க என சொன்னவன் பட்டுக் கோட்டை.அதனாலே என்ன ? இந்த குணம் தனிமனிதரோடு போகுமா ? போகா தென்பது பட்டுக்கோட்டை வாதம் . “ பாடுபட்டுக் காத்த நாடு கெட்டுப் போகுது / கேடுகெட்ட கும்பலாலே – இந்த / கேடுகெட்ட கும்பலாலே” (விக்கிரமாதித்தன் – 1962) எனச் சரியாக அடையாளம் காட்டினான் . எதனால் இந்த நிலைமை? அதையும் சரியாக அடையாளம் காட்டினான். “ சூடுபட்ட மடமை கூடுகட்டி வாழுது / மூடர்களின் தலையிலே – பெரும் .. சூடுபட்ட / வேடிக்கையான பல வித்தைகள் கண்டு பயந்து / வேதனையில் மாட்டிக்கிடும் வீணராலே “அதென்ன சூடுபட்ட மடமை ? பட்டுக்கோட்டையின் கற்பனைக் கும் ஆழ்ந்த கூர்மையான பார்வைக் கும் இவ்வரி சான்று . “ சூடு.என்பது வெளியே உள்ளவர்களால் போடு வதுதானே !” என்பார் பா .வீரமணி .

ஆம் சுரண்டல் சமூக அமைப்பு போட்ட சூடு அது . அங்கு மடமை முட்டையிட்டு குஞ்சு பொரித்து பல்கிப் பெருகி பெருகி சவாலா கிவிடுகிறது . அதனாலே “ வாடிக்கையாய் நடக்கும் வஞ்சகச் செயல்களுக்கு / வாழ இடமிருக்கு மண் மேலே – இன்னும் / வாழ இடமிருக்கு மண் மேலே.”என அவர் சுட்டிய சமூக யதார்த் தம் இன்றும் தொடர்கதையாய் உள்ளதே ! என் செய்ய ?

“ தோள் கனக்குது சுமை கனக்குது
தொல்லை வழிப்பயணம் ! – இது
தொல்லை வழிப்பயணம்!
நாள் கனக்குது நடை கனக்குது
நைந்த வழிப்பயணம் – இது
நைந்த வழிப்பயணம் ” என்பார் கவிஞர் தமிழ் ஒளி .இந்த நைந்த வாழ்வைக் கண்டு வாடியவர் . திரைப்படப் பாடல்க ளூடே பாடியவர் . சாடியவர் . . மீள வழி தேடியவர் பட்டுக்கோட்டை . தொடர்ந்து பார்ப்போம் .

நன்றி : தீக்கதிர் இலக்கியச்சோலை 2 ஜூன் 2014