பிறந்த நாளில் எனது அகத்தாய்வு...

Posted by அகத்தீ




பிறந்த நாளில் எனது அகத்தாய்வு....




ஜூன் 15 , 2014 ஞாயிற்றுக் கிழமை .

இன்று இன்னொரு நாளே ! ஆயினும் 1953 ஆம் ஆண்டு இதே நாளில் நான் பிறந்ததாகப் பள்ளிச் சான்றிதழ் கூறுகிறது . இதைத் தவிர இந்நாளுக்கென எச்சிறப்பும் இல்லை . இந்நாள் வாழ்வின் இன்னொரு நாளே !

பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்த அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி !


பிறவிப் பெருங்கடலென்று வருந்தவும் இல்லை .
பிறவி பெரும் பேறு என மகிழ்ச்சி கூத்திடவுமில்லை .
நொடி தோறும் பிறந்து கொண்டும் இறந்து கொண்டுமிருக்கிற மக்கள் பெருவெள்ளத்தில் நானொரு சிறுதுளி .
காலவெள்ளத்தில் கரைந்து காணாமல் போகும் எமது இருப்பும் தடயமும் என்பதறிவேன்.


வாழும் காலத்தில் எப்படி வாழ்ந்தார் என்பது மட்டுமே ஒருவரை மதிப்பிடும் ஆகச்சிறந்த முறை . பிறந்த நாளன்று ஒவ்வொருவரும் தன்னை அகத்தாய்வு செய்வது ஆக்கபூர்வமான வாழ்வியல் அணுகுமுறை என்பது என் கருத்து . கம்யூனிஸ்ட்டுகள் இதனை சுயவிமர்சனம் என்பர் . நற்றமிழில் இதனை அகத்தாய்வு என இம்மண்ணுகேற்ப நான் வழங்குகிறேன் .இதன் பொருள் பொதுவெளியில் தன்னைத்தானே வார்த்தைச் சவுக்கால் அடித்துக் கொள்ளவேண்டும் என்பதல்ல ;மாறாக தனக்குத் தானே பாராட்டிதழ் வாசித்து மகிழ வேண்டும் என்பதுமல்ல ; செய்ததை பெருமையோடு நினைவு கூரவும் , செய்யத்தவறியவற்றை நினைவுத்திரையில் ஓடவிடவும் இது ஒரு அரிய வாய்ப்பு . இதனால் வாழ்க்கைப் பயணம்  இலகுவாகும்.


கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து இப்பணியில் அக்கறையுடன் ஈடுபட்டுள்ளேன் . எனது முந்தைய அகத்தாய்வுகளை கீழ்க்கண்ட சுட்டிகளில் உள்ளன . ஆர்வம் உள்ளோர் உள்நுழைந்து பார்க்க வேண்டுகிறேன் .


http://akatheee.blogspot.in/2011/10/blog-post.html

http://akatheee.blogspot.in/2012/06/2.html

http://akatheee.blogspot.in/2013/06/blog-post_17.html


கடந்த ஓராண்டில் வழக்கமான எழுத்துப்பணி மற்றும் கொள்கை பரப்புரைப் பணியில் சுணக்கமின்றி ஈடுபட்டேன் . தீக்கதிரிலும் எழுதினேன் . சமூகவலைதளங்களில் தீவிரமாக செயல்பட்டேன் . மதவெறியர் கோபத்துக்கும் மிரட்டலுக்கும் ஆளானேன் .அதன் மூலம்  சரியான திசையில் செல்வதாய் நான் உணர்கிறேன் .

சொந்தவாழ்வில் பெரிய குறிப்பிடத்தக்க மாற்றம் ஏதும் நிகழவில்லை . கைக்காசு கரைந்து விட்டதால் கொஞ்சம் நெருக்கடி உள்ளது . மாத ஊதியத்தை கடந்த நான்கு ஐந்து மாதங்களாகப் பெறவில்லை . விரைவில் நிலைமை மாறலாம் அல்லது இதுவே தொடரலாம். .

மகனைத் தொடர்ந்து மகளின் குடும்பமும் பெங்களூர் வந்துவிட்டது ஒருவகையில் நல்லதே ! எல்லோரும் அன்றாடம் சந்திக்கலாம் . குறிப்பாக பெயரன் பெயர்த்தியோடு கொஞ்சி மகிழலாம் . குழந்தைகளோடு குழந்தையாகி  கொண்டாடி மகிழ்வது ஆனந்தமே ! மனதை எவ்வளவு இலேசாக்குகிறது ! குதூகுலமாக்குகிறது ! அடடா ! அடடாவோ!  என்னே  ஆனந்தம் !

அதே சமயம் நம்மோடு இருப்பவர்கள் சொல்லுகிற பொய்களும் ஏமாற்றுகளும் நெஞ்சைக் காயப்படுத்தத்தான் செய்கிறது . ஆயினும் சகித்துக் கொள்வதைத் தவிர வேறுவழி இல்லை . இதுதான் வாழ்க்கையோ !எல்லாம் எப்போதும் நாம் விரும்புகிறபடிதான் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதே தவறுதானே !

நான் வரித்துக் கொண்டுள்ள மார்க்சிய இலட்சியம் காலாவதியாகிவிட்டதா என்கிற ஐயத்தை நடந்து முடிந்த தேர்தல்கள் எழுப்பின . எனக்குள் நடத்திய நெடிய உரையாடலுக்குப் பிறகு மார்க்சியம் தோற்காது ; ஏனெனில் அது சமூக விஞ்ஞானம் என்பதை மீண்டும் ஒரு முறை தெளிந்தேன் .

சென்னைப் பல்கலைக்கழகத்தில் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் நினைவுச் சொற்பொழிவாற்றிய போது [2012 ஆம் ஆண்டு ] நிறைவுப்பகுதியில் நான் சுட்டிக்காட்டியதை இங்கு மீண்டும் நினைவுகூர்கிறேன் ;

 “இன்றைக்கு இக்கட்டான சூழ்நிலையிலிருந்து மனிதகுலத்தை விடுதலை செய்வதற்கான போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது. மார்க்சிய அணுகுமுறையின் அடிப்படையில் களச் சூழலை ஆய்வு செய்து முதலாளித்துவத்தை கடந்து செல்வதற்கான முடிவை சிந்தித்து எடுக்க வேண்டியுள்ளது. அவ்வாறு செயல்படாவிட்டால் அதிகரித்துவரும் துன்ப துயரங்களுக்கு உள்ளாக்கப்படும் மக்கள் பயங்கரவாதம், மதத்தீவிரவாதம், இனக்குழுவாதம் பிற அடிப்படை வாதங்கள் போன்ற அழிவுத்தன்மையுடன் கூடிய வீண்வேலைகளில் ஈடுபடும் நிலை உருவாகும். நாம் எட்ட வேண்டிய இறுதி லட்சியத்தைப் பற்றி முன்னரே குறிப்பிட்டுள்ளோம். அது புரட்சிகரத்தன்மை கொண்டதாகவும் சமூகக் கட்டுமானத்தை மறு உருவாக்கம் செய்வதாகவும் இருக்கும். மக்கள் தங்கள் உள்ளார்ந்த ஆற்றலைப் பயன்படுத்திக்கொள்ளக் கூடிய சுதந்திரம் அளிக்கும் வகையில் அது அமைந்திருக்கும். அந்த லட்சியத்தை நாம் எட்டவில்லை என்றால் பொருளற்ற, குறிக்கோளற்ற, முடிவற்ற வன்முறைச் சுழற்சியே நம் கண்முன் மற்றொரு இறுதிக்கட்டமாக இருக்கும். அது மக்களின் துன்ப துயரங்களை மேலும் அதிகரிக்கும். இரண்டாவதாகக் குறிப்பிட்ட நிலை ஏற்படாமல் தவிர்ப்பதற்கான ஒரே நம்பிக்கை (வேறு எதனையும் தவிர) மார்க்சியம்தான் என்று குறிப்பிடலாம்”. இது இன்றைய மார்க்சிய சிந்தனையாளர் சீத்தாராம் யெச்சூரியின் எச்சரிக்கையும் வழிகாட்டலுமாகும்.


 "எம் இயல்பு " என்ற தலைப்பில் மே 20 ஆம் நாள் சமூகவலை தளத்தில் நானிட்ட ஒரு பதிவை - அக்கவிதையை இங்கு நினவுகூர்வது பொருத்தம் என நினைக்கிறேன் .





யானை பொம்மை கேட்டு
அடம்பிடித்து அழுதழுது
காய்ச்சலே வந்துவிட்டதாம் எனக்கு..

நான் கேட்டமாதிரி
சுசீந்திரம் கோவில் திருவிழாவில்
ஊர்வலம்வரும்
முகப்படாம் பூண்ட யானையை
மாமா வாங்கிவர
என் அழுகை நின்றதாம்
அம்மா சொல்லி இருக்கிறாள்.

எட்டாம் வகுப்பு படிக்கையில்
காது தோட்டை
கழுத்து உத்திராட்சத்தை
முடி முன்வெட்டை
தூக்கி எறிய
சாப்பாட்டை மறுத்து
அப்பாவோடு சண்டை போட்டு
சாதித்த நாட்கள்
நினைவில் நிற்கிறது .

குரோம்பேட்டை பள்ளியில்
பள்ளி இறுதி வகுப்பில் சேர்ந்ததும்..
ஒரு நாள்
உள்ளத்தில் கனந்த நாத்திகம்
உசுப்பிவிட
கோவில் நவக்கிரக பொம்மைகள்
நகர்த்தி அங்கே ஏறி உட்கார்ந்ததும்
தலைமையாசிரியர் கோபவிழியில்
தண்டனையாய்
101 முறை
நவக்கிரகம் சுற்றியதும்
நன்றாய் நினைவிருக்கிறது .

குடும்ப வறுமையை
கொஞ்சமும் யோசியாது
இருக்கிற வேலையை துறந்து
தந்தையின் மனது காயப்பட்டபோதும்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சி முழுநேர ஊழியனாய் ஆனது
இன்னும்
நெஞ்சில் பதிந்திருக்கிறது..
தொடர்கிறது அந்த பெருமிதம்

இன்னும்
சொல்லச் சொல்ல நீளும்
கொல்வறுமையோ
பாசவலையோ
என்னை சிறைப்பிடிக்க
ஒருபோதும்
அனுமதித்ததில்லை
லட்சியவெறியில்
சுழன்றுகொண்டிருந்தேன்
சோர்வு அண்டியதில்லை ..

வாங்கப்படுகிற நீதிபோல்
கார்ப்பரேட்டுகளால்
வாங்கப்பட்ட வெற்றியால்
வெறிகொண்ட பித்தனொருவன்
கடையை சாத்திவிட்டு நடையைக் கட்டென
முகநூலில் பதிவிடுகிறான்

அவனறிவானா?
லட்சிய நெருப்பை
தோல்விக் கறையான்கள்
தின்ன முடியாதென்பதை..

அவனறிவான ?
 “ அறத்தினால் வீழ்ந்துவிட்டாய்..”
என்ற பாரதிவரிகளை ...
 “ கிளர்ச்சிகொண்டு உயிர்த்து வாழ்தல் “
எம் இயல்பு என்பதை ..


இதற்கு மேலும் இது குறித்து பேசுதல் தேவையா ? முன்னிலும் உறுதியாய் முன்னிலும் நுட்பமாய் மக்களின் மனங்களை வெல்ல எம்மால் இயன்ற வகையில் முயல்வேன் . தனிப்பட்ட முறையில் எனக்கு அமைப்புக்குள் சில கசப்புகள் தொடரத்தான் செய்கின்றன . எனினும் அவை தற்காலிகமானவையே . எந்தப் பதவி பொறுப்பும் இல்லாமல் கட்சிக்காக உழைக்க இயலும் என்பதை கடந்த மூன்று ஆண்டுகளாய் செயலில் காட்டியுள்ளேன் . சுயவிருப்பத்தினடிப்படையிலேயே அவ்வாறு செய்தேன் . செய்தது சரியே என இப்போதும் நம்புகிறேன் . பணி தொடர்வேன் .

தனிப்பட்ட முறையில் எனக்கும்  அமைப்புக்குள் சில கசப்புகள் தொடரத்தான் செய்கின்றன . காயங்கள் உறுத்தத்தான் செய்கின்றன . காலம் அவற்றை ஆற்றும் என நம்புகிறேன் .

எந்தப் பதவி பொறுப்பும் இல்லாமல் கட்சிக்காக உழைக்க இயலும் என்பதை கடந்த மூன்று ஆண்டுகளாய் செயலில் காட்டியுள்ளேன் . சுயவிருப்பத்தினடிப்படையிலேயே அவ்வாறு செய்தேன் . செய்தது சரியே என இப்போதும் நம்புகிறேன் . பணி தொடர்வேன் .


கடந்த ஆண்டு சில புத்தகங்கள் எழுத திட்டமிட்டேன் . இயலவில்லை . விவரம் சேகரிப்பதிலேயே காலம் கரைகிறது . இவ்வாண்டு செய்து முடிக்க திட்டமிட்டுள்ளேன் .


நான் கடந்துவந்த பாதையில் கழிவிரக்கம் கொள்ள ஏதுமில்லை . கொண்ட கொள்கையும் அதனையொட்டிய வாழ்வும் சரியே . தவறே செய்யாத - பிழையே நேராத  - யாரும் இல்லை  - எதுவும் இல்லை . இதற்கு நானும் விதிவிலக்கு இல்லை . ஆயினும்  வருந்தத்தக்க ஏதுமில்லை .

என்ன சாதித்தாய் என வினவின் பெரிதாக ஏதுமில்லை என்பேன் . இதன் பொருள் ஒன்றுமில்லை என்பதல்ல . அரசியல் களத்திலும் எழுத்துப் பணியிலும் என் சக்திக்கு செய்துள்ளேன் . எனது எழுத்துகள் சில காலம் கடந்து நிற்கும் என நம்புகிறேன் .

என் நண்பர்கள் அதிலும் என்னைவிட இளையவர் சிலர் அண்மையில் இறந்தது மனதைப் பிசைந்தது . மரணம் எப்போதும் யார் வீட்டுக் கதவை வேண்டுமானாலும் தட்டலாம் அல்லவா ? மரணத்தை எதிர்பார்த்து இயன்றவரை திட்டமிட்ட பணிகளை விரைந்து செய்வேன் .

என் மனைவியும் மக்களும் சுற்றமும் நட்பும் தோழமைகளும் , “ இன்னும் கொஞ்சகாலம் இவன் வாழ்ந்திருக்கலாம் ” என்கிற அந்த நொடிப்பொழுதில் மரணம் எமை அணைக்க வேண்டும் என விழைகிறேன் .

மரணத்திற்குப் பிறகு உடலை மருத்துவமனைக்கு வழங்கிவிடவேண்டும் . எந்த மத சாதிச் சடங்கும் செய்யக்கூடாது . தேங்காய் ,பழம் , ஊதுவத்தி , திருநீறு எதுவும் கூடாது . கருமாதி , திவசம் எதுவும் கூடவே கூடாது . நானும் என் அம்மா அப்பாவுக்கு இவற்றை செய்ததில்லை . வாழும் காலத்தில் அவர்களை இறுதிவரை என்னோடு வைத்திருந்தேன் . அம்மா கண் தானம் செய்யப்பட்டது .இவையே இன்றும் மனநிறைவாக இருக்கின்றது . என் பிள்ளைகளுக்கும் அதையே சொல்லுகிறேன் . வேறொன்றுமில்லை .

62 வயதிலேயே சாவு பற்றி பேசவேண்டுமா எனக் கேள்வி எழலாம் .  என் செய்ய ? பிறப்பு இறப்பு நம் வசத்தில் இல்லையே !

பிறந்த நாளில் வாழ்த்திய -
என் இம்மடலை பொறுமையாக வாசித்த -

அனைவருக்கும் நன்றி ! நன்றி!


தோழன்

சு.பொ.அகத்தியலிங்கம் .

0 comments :

Post a Comment