சும்மா கிடந்த சொல்லை எடுத்து - 6

Posted by அகத்தீ Labels:

சும்மா கிடந்த சொல்லை எடுத்து - 6



ஆடி அடங்கும் வாழ்க்கையில்


சு. பொ. அகத்தியலிங்கம்


“ அவன் உப்பை / கையில் வைத் திருக்கிறான் / நானோ நெஞ்சிலிருக் கும் / காயத்தில் வைத்திருக்கிறேன்” என்றார் பாரசீகக்கவி சாஅதி . காயம் படா மனிதன் யார் ? காயத்தில் உப்பைத் தடவும் சமூகச்சூழலில் அதன் வலியை, துடிப்பை  பிறருக்கு புரியவைப்பது அவ்வளவு சுலபமல்ல.


“நீ கேட்டது இன்பம்/  கிடைத் தது துன்பம் / வாழ்க்கை இது தானோ ? - எதிர் / பார்த்தது நிழலை அடைந்தது வெயிலைப் / பாடம் இதுதானோ ? ” (ஆளுக்கொரு வீடு 1960 ) என பட்டுக்கோட்டை பாடுவது நம் ஒவ்வொருவரையும் பார்த்து கேட்பதுபோலுள்ளதே !


அடுத்து அவன் சொல்வான், “பேசிப்பேசி பலநாள் பேசி / நேசம் வளர்த்து நெஞ்சம் மகிழ்ந்தே / ஆசைக் கனியாய் ஆகும் போது / அன்பை இழந்தால் லாபம் ஏது ? ” ஆம் , கைக்கு எட்டியது வாய்க்கு எட்டா மல் போகும்போது  இதயம் எப்படி புழுங்கும் ? புலம்பும் ? ஆறுதல் தேடி அலையும் ! தலை சாய்ந்திட மடி தேடி நிற்கும் !


தனிமனிதன்  தனக்கு  நேரும் துன்ப துயரங்களுக்கு யார் மீதாவது பழிபோட்டு தன்னைத் தானே ஆறு தல்படுத்திக் கொள்ள வேண்டியவ னாக இருக்கிறான் . கடவுள் மீதோ , விதி மீதோ பழி போடுவது உலக இயற்கை . பகுத்தறிவு அதனை ஏற்கா தெனினும்  பாமரருக்கு அதுவே சுமைதாங்கியாய்த் தெரிகிறது. பட்டுக்கோட்டைக்கு திரைப்பட கதைச் சூழலில் அத்தகு மனிதனின் குரலில் பாடவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது . பாடுகிறான் ;
“ விதியென்னும் குழந்தை கையில் / உலகந்தன்னை / விளையாடக் கொடுத்துவிட்டாள் / இயற்கை அன்னை - அது / விட்டெறியும் உருட்டிவிடும் / மனிதர் வாழ்வை / மேல் கீழாய் புரட்டிவிடும் ”      (தங்கப்பதுமை 1959 )


நமது வாழ்க்கையை எந்தச் சூறாவழி எப்படி எங்கே பிய்த்தெறி யும் ? யாரறிவார் ?அந்த நேரம் இந்த விதியை நொந்து சமாதானம் ஆவது இயல்புதானே ! அப்படியானால் பட்டுக்கோட்டையும் விதிவசம் என்பவரோ ! இது குறித்து சாலமன் பாப்பையா , பா.வீரமணி , குன்றக் குடிஅடிகளார் உட்பட பலரும் அலசியுள்ளனர் .


55 திரைப்படங்களுக்கு எழுதிய 186 திரைப்படப் பாடல்களில் ,ஐந்து திரைப்படங்களில் ஐந்து இடங்களில் பட்டுக்கோட்டை விதியைச் சார்ந்து எழுதியுள்ளார் என புள்ளிவிவரம் தரும் பா. வீரமணி  அதற்கு எதிராக அவர் புனைந்த பாடல்களையும் பட்டியலிடுகிறார்.


திரைக்கதைக்கு எழுதப் படுகிற பாடல்களில் கதைமாந் தரின் மன இயல்பையே கவிஞர் பாடவேண்டும்.  பட்டுக் கோட்டைக்கும் அதுவே பொருந்தும் . அது கவிஞரின் சொந் தக் கருத்தாக இருக்கவேண்டிய அவசியமில்லை . பட்டுக்கோட் டையை அறிந்தவர் அவர் விதியைச் சரணடைபவரல்ல என்பதை ஒப்புக் கொள்வர் . இதில் மிகவும் முக்கியமா னது என்னவெனில் அந்தச்சூழலி லும்  கொஞ்சம் நூல் நுழைய வாய்ப் பிருப்பினும் அதனுள் புகுந்து தன் கருத்தைப் புகுத்துவதில் பட்டுக் கோட்டை எப்படி நுட்பமாக இயங்கினான் என்பதுதான்.


மேலே மேற்கோள் காட்டிய விதிப்பாடலிலும் முற்பகுதி அப்படி யெனில் பிற்பகுதி இதற்குப் பதிலடி யாய் இருக்கும் . “ மதியுண்டு கற் புடைய / மனைவியுண்டு / வலிமை யுண்டு வெற்றி தரும் / வருந்திடாதே / எதிர்த்து வரும் துன்பத்தை / மிதிக் கும் தன்மை / எய்திவிட்டால் காண்பதெல்லாம் / இன்பமப்பா ” என்று விதியை மதியால், போராட்ட வலியால் வெல்லலாம் என்கிறார் பட்டுக்கோட்டை . அதுதான் அவரின் பழுதற்ற சமூக அக்கறையின் சாட்சி. விதிக்கு இரைகொடுக்க ஒப்பாதவரல்லவா அவர் . சில பாடலில் இப்படி எழுத இயலாத அளவுக்குப் பாத்திரப்படைப்பின் தன்மை இருக்கும் போது திரைப்பட விதியை அவரும் ஏற்றுத்தானே ஆகவேண்டும் ?


“விதி என்று ஏதுமில்லை வேதங் கள் வாழ்க்கையில்லை; உடலுண்டு உள்ளம் உண்டு முன்னேறு மேலே மேலே ” என பாடல் எழுதியவன் கண்ண தாசன் . ஆனால் அவன் விதியை, வேதத்தை, முரட்டுத்தனமாக நம்பி யவன்; அதனைத் தொடர்ந்து நியாயப்படுத்தியவன். ஆயினும் கதைமாந்தருக்காக வேறுகுரலில் பாட்டு எழுதினான் . விதியை கேள் விகேட்டு சில வரிகள் எழுதியதால் கண்ணதாசன் பகுத்தறிவுவாதி ஆகி விடமாட்டான். விதியைச் சார்ந்து சில வரிகள் திரைப்படத்தில் எழுத நேரிட்டதால் பட்டுக்கோட்டை விதியை நம்பியவனாகான் . பட்டுக் கோட்டை என்றும் முற்போக்கின் பக்கமே !
இதே திரைப்படம்  ‘தங்கப் பதுமை’ யில்  அவர் பாடிய இன் னொரு பாடல் , “அடடா ! மனுஷன்  இப்படியும் பெண்ணிய நோக்கில் அன்றே இயங்கியுள்ளாரே ! ”என நம்மை வியக்கவைக்கிறது . அதுவும் ஆண் வாயால் பேசவைத்ததுதான் அருமை. மனைவிக்கு துரோகம் செய்ததை எண்ணி  குமைகிற பாத்திரம் அது .  “ ஈடற்ற பத்தினியின் இன்பத்தைக் கொன்றவன் நான்..” எனத் தொடங்கி இதயத்தில் கொந்த ளித்த எண்ணத்தைக் கொன்றவன் - பண்பதனைக் கொன்றவன்  என நெஞ்சோடு புலம்பும் தொகையறா வைத் தொடர்ந்து வரும் பல்லவியில் சொன்ன வரிகள் என்றும் நிலைக்கும் சத்தியவாக்கு என்பார்களே அந்த வகையானது. நீங்களே அதைச் சொல்லிப் பாருங்கள்!


“ஆரம்பமாவது பெண்ணுக் குள்ளே - அவன் / ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே / ஆராய்ந்து பார் மனக் கண்ணுக்குள்ளே / ஆத்திரங் கொள்ளாதே நெஞ்சுக்குள்ளே ! ” இந்தப்பாடல் இப்போதும் அடிக் கடி ஒளிபரப்ப ஒலிபரப்ப பார்க்கி றோம் . கேட்கிறோம்.
இந்தப்பாடலின் முத்தாய்ப்பாய் இறுதிப்பத்தி அமையும் . “ சிங்காரம் கெட்டுச் சிறைப்பட்ட பாவிக்குச் / சம்சாரம் எதுக்கடி - என் தங்கம் / சம் சாரம் எதுக்கடி ..” சரி ! சரி ! இதெல் லாம் எல்லோரும் புலம்புவதே ! ஆனால் அடுத்த அடிகள் தாம் இடியாய் இறங்கும்  “ மனைவியைக் குழந்தையை / மறந்து திரிந்தவனை / வாழ்த்துவதாகதாடி - என் தங்கம் / மன்னிக்கக்கூடாதடி”
கணவன் எவ்வளவு தப்புகள் செய்திருந்தாலும் மன்னித்து ஏற்க வேண்டியது மனைவியின் கடமை என விதித்திருந்த பழமைச் சங்கிலியை உடைத்தெறிந்து மன்னிக்கக்கூடாதென உரக்கச் சொன்னவன் பட்டுக்கோட்டை .


இரத்தக்கண்ணீர் படத்தில் தவறு செய்த கணவனே ( எம். ஆர். ராதா) தன் மனைவியை தன் நண்பனோடு சேர்த்துவைப்பது மிகப்பெரும் சமூகச்சீர்திருத்தம் . இப்படி சமூகச் சீர்திருத்தம் அலையடித்த காலம் அது .  மீண்டும் பழமையின் சங்கிலி இறுகும் இன்றையச் சூழலில் பட்டுக் கோட்டையின் பாடல்களை மீண் டும் மீண்டும் உரக்கப் பாட வேண் டும் .பாடுவோம்.


 “ வீட்டுக்கு வெளியே
ஓர் ஓரமாய்த்
தயங்கித் தயங்கி
உட்கார்ந்திருக்கிறது
நம்பிக்கை
வெகு நேரமாய்!”
என கவிஞர் மேத்தா கூறியது நினைவுக்கு வருகிறது . பட்டுக் கோட் டையின் பாடல்களில் சம்மணம் போட்டு உட்கார்ந்திருக்கும் விடியல் கீற்றை பேசலாம் தொடர்ந்து .

நன்றி : தீக்கதிர் இலகியச்சோலை 9 ஜூன் 2014

0 comments :

Post a Comment