சும்மா கிடந்த சொல்லை எடுத்து - 17

Posted by அகத்தீ Labels:
சும்மா கிடந்த சொல்லை எடுத்து –- 17


அவர் பாட்டு சொல்லும் ரகசியம்


சு.பொ.அகத்தியலிங்கம்


“சிறுகுழந்தை விழியினிலே ஒளியாய் நின்றாள்;
திருவிளக்கில் சிரிக்கின்றாள்; நாரெடுத்து
நறுமலரைத் தொடுப்பாளின் விரல் வளைவில்
நாடகத்தைச் செய்கின்றாள்! அடடே, செந்தோள்
புறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும்
புதுநடையில் பூரித்தாள்; விளைந்த நன்செய்
நிறத்தினிலே என்விழியை நிறுத்தினாள்; என்
நெஞ்சத்தில் குடியேறி மகிழ்ச்சி செய்தாள்!”என அழகின் சிரிப்பை பாரதிதாசன் பட்டியலிடுவார் . கலப்பை சுமக்கும் உழவனையும் , நஞ்சை வயல்களையும் அதில் போற்றுவார் .அதே கவிதையில்" நகையோடு நோக்கடா எங்கும் உள்ளாள்! / நல்லழகு வசப்பட்டால் துன்ப மில்லை" என அழகினையும் நல்லழகு என்பார் .

அழகியல் கவிதையில் வசப்படுமா ? பாடலில் வசப்படுமா? நல்ல பட்டிமன்றத் தலைப்பு . இலக்கிய ஜாம்பவான்கள் கவி தையை வியந்து நயந்து உச்சி மோந்து கொண்டாடுவதுபோல் பாடல்களைக் கொண்டாடுவதில்லை . கவிதையில் கிடைக் கும் சுதந்திரமும் வெளியும் பாடல்களில் சாத்தியமில்லை என்று ஒரே போடாய் போட்டுவிடுவர் . ஆனால் மக்கள் நெஞ் சில் சிம்மாசனம் அமைத்து வீற்றிருப்பது பாடல்களே ! கவிதை கள் போய்ச் சேராத கடைக்கோடி குக்கிராமத்தையும் திரைப் படப்பாடல் எட்டிவிடுகிறது . அதன் வலிமையும் வீச்சும் அதுவே. பாடல்களே கலைகளின் மூத்தப் பிள்ளை. “ ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு / ஒரு கோலமயில் என் துணையிருப்பு / இசைப்பாடலிலே என் உயிர்த்துடிப்பு / நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு” இப்பாடல் கண்ண தாசனைக் காட்டிடும் கண்ணாடி என்பர் ; முதல் இரு வரிகள் அவரின் ஒரு முகம் காட்டும் .

இசைப்பாடல்தான் அவர் உயிர்த் துடிப்பு . இன்றும் கண்ணதாசன் அவரது பாடல்களில்தான் வாழ் கிறார் என்பது என் கணிப்பு . அழகின் சிரிப்பு அவரது சிறப்பு . பட்டுக்கோட்டையோ புனைந்ததெல்லாம் பாடலே . அவனைப் “பாட்டுக்கோட்டை ” என்று அழைப்பது உயர்வு நவிற்சி அல்ல; உண்மை .ஆம்! பட்டுக்கோட்டை இயல்பில் ஒரு பாடகனே . நாட்டுப் புற மரபில் உதித்த பாடகன் . பாரதியையும் பாரதிதாசனையும் தன் குருவாய் கொண்டவன். ஒரு தத்துவத்தை வரித்துக் கொண்டவன் . அவன் பாடல்களில் கொஞ்சும் இசையமுதை - உவமை நயத்தை - உவமான அழகை - பூத்துக்குலுங்கும் அழகின் சிரிப்பை எழுத எழுத நீளும். விலங்குகள், பறவை கள் , இயற்கை இவற்றோடு பின்னிய அவனது கருத்தாழமும் கவித்துவமும் மிக்க பல பாடல்களைக் கடந்த பல வாரங்க ளாய்த் தொடர்ந்து பார்த்து வருகிறோம் .

மீண்டும் கூறியது கூறல் வேண்டாம் என்பதால் அவற்றை நீங்களே நினைவு படுத்திக் கொள்ளுங்கள் . வேறு சிலவற்றைப் பார்ப் போம் . “எல்லோரும் இந்நாட்டு மன்னர்” (1960) திரைப்படத்தில் ஒரு பாடல் .“ என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே - நீ / இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே ” நிலவோடு காதலியை ஒப்பிடுவது கவிஞர்கள் இயல்பே. ஆனால் நில வைக் காதலிக்கு உறவாக்கிய கற்பனையில் ரத்தபந்தம் பட்டுக்கோட்டையின் தனித்துவமோ ! “கன்னத்தில் காய மென்ன வெண்ணிலாவே - உன் / காதலன்தான் கிள்ளியதோ வெண்ணிலாவே” என்கிற போது நகக்குறி, பற்குறி என்கிற பழந்தமிழ் பாடல் மரபின் தொடர்ச்சியும்; மெல்லிய இதயத் துடிப்பையும் ஒருங்கே காணலாம் . “ மின்னும் இயற்கையெல்லாம் / உன்னழகைக் காட்டுதடி/ எண்ணமெனும் தேன்கூட்டில் / இன்பக் கனல் மூட்டுதடி ” இப்படி தேனெடுக்க நெருப்பு மூட்டுவர் . இங்கே காதல் நெருப்பு. அழகான கற்பனை .

இந்தத் தனிப்பாடலின் இறுதிவரிகளில் “ இல்லத்தில் நீ இருந்தால் / இருள்வர அஞ்சுதடி / மெல்லத் தமிழ் உனது / சொல்லில் வந்து கொஞ்சுதடி” என்பார். அடடா! அடடா !இன்னொரு தனிப்பாடல் . “ சின்னஇடை துவளச் செங்கை வளை குலுங்கத் / தென்றலொடு கூந்தல் சிலிர்த்து விளை யாட / மண்ணுக்கு மேனி வலியெடுக்கும் என்பது போல் / அன்னநடை போட்டு அழகு விழி அம்பு விட்டு” “தன்னைத் தாங்காத் தளிர்மேனி மீதிலொரு / சன்னஇழை மெல்லுடைதாங் கித் தனமிரண்டும் / முன்னே வழிகாட்ட முகத்தில் ஒளிமிதக்க / வண்ணக் கழுத்தில் மணிபுரள தோளசைய” - இளமை முறுக் கேறிய வர்ணிப்பைக் கொட்டித்தரும் இப்பா டல் திரைப்படத்தில் இடம் பெறாமல் போய் விட்டதே ! இப்பாடலின் கடைசி இருவரி பட்டுக்கோட்டை எங்கே சுற்றினாலும் தஞ்சாவூருக்கு வந்துவிடுவான் என்பதன் சாட்சியாகும், “தன்னந்தனியே தமிழ்நாட்டுச் சாலையிலே / செந்நெற் கதிர்போல் சிரம் வணங்கி வந்தாள் ” அழகான ஒரு பெண் தன்னந்தனியாய் பாதுகாப்புடன் தமிழ்நாட்டுச்சாலையில் வரும் நாளைக் காந்தி போல் கனவு கண்டது வியக்கவைக்கிறது .

இனிய கீதம் எப்போதும் பட்டுக்கோட்டையின் நாடிநரம்போடு பிணைந்திருந்தது போலும் , “கல்யாணப்பரிசு”(1959) படத்தில் பட்டுக்கோட்டையின் ஒவ்வொரு பாடலும் தேனமுது. ‘துள்ளாத மனமும் துள்ளும் / சொல்லாத கதைகள் சொல்லும் / இல்லாத ஆசையைக் கிள்ளும் / இன்பத் தேனையும் வெல்லும் – இசை / இன்பத் தேனையும் வெல்லும் ” இந்த பாட்டு வரிகள் இப்போது காற்றில் மிதந்து வந்தாலும் மனம் அதில் லயிக்கும் . அதில் தொடர்ந்து சொல்லுவார் , “ துன்பக்கடலைத் தாண்டும் போது தோணியாவது கீதம்” மெய்தானே உழைப்போடு பிறந்ததன்றோ பாட்டு . உழைப்பின் களைப்பை சிரமத்தைக் குறைக்க பாரம் சுமக்கையிலும் கடினமான உழைப்பில் ஈடுபடும்போதும் கூட்டாக பாடப் பிறந்ததே பாடல் .

ஜார்ஸ் தாம்சன் எழுதிய “ மனித சமூகத்தின் சாரம் ” எனும் நூலில் இதனைத் தெளிவாகக் காண லாம். உழைப்பின் வலியை உணர்ந்த பட்டுக்கோட்டை துன்பக் கடலைத் தாண்ட கீதத்தைத் தோணியாக்கியது வியப்பே அல்ல. கீதத்தின் பெருமைகளை அடுக்குவார் . “ அன்புக் குரலில் அமுதம் கலந்தே / அருந்தத் தருவது கீதம்”… “ எங்கும் சிதறும் எண்ணங்களை / இழுத்து வருவதும் கீதம் / இணைந்து மகிழ் வதும் கீதம் துயர் / இருளை மறைப்பதும் கீதம் ” பாட்டு நெஞ் சுக்கு ஒத்தடம் கொடுப்பதுபோல் வருடிவிடுவது போல் உசுப்பி விடுவது போல் உற்சாகம் தருவது போல் உத்வேகம் ஊட்டுவது போல் வேறொன்று உண்டாமோ ! இந்த கீதம் போல் காதலையும் இயற்கையான மனிதத் தேடலாக தேவையாக பட்டுக்கோட்டைப் பார்த்தார் . அதனால் தான் அந்தப் பாடலில் தொடர்ந்து எழுதும் போது சொல்வார் , “சோர்ந்த பயிரும் நீரைக் கண்டால் / தோகை விரித்தே வளர்ந்தி டும் / சாய்ந்த கொடியும் கிளையைக் கண்டால் / தாவி அணைத்தே மகிழ்ந்திடும்...” எவ்வளவு நயமான கற்பனை.

அதே திரைப்படத்தில் தீபாவளியை முன்வைத்து ‘உல்லாசம் பொங்கும் இன்பத் தீபாவளி’ ‘கண்ணீரும் கதை சொல்லும் தீபாவளி’ என இரு நிலைகளில் பாடிய இரு பாடல்களிலும் கற்பனை சிறகுவிரிக்கக் காணலாம் “சித்திரப் பூப்போல சிதறும் மத்தாப்பு / தீயேதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு” என ஒரு நிலையிலும் “ ஆசைக்கு அணைபோட்ட / அறிவான நங்கை ..பாசத்தின் சுமையோடு / பறந்து சென்றாளே” என மறு நிலையிலும் ..பட்டுக்கோட்டை வரிகளின் அற்புதம் இன்னும் பசுமையாய் இருக்கிறதே !சரி! சரி! பட்டுக்கோட்டை தன் பாடலை எங்கிருந்து எப்படிப் பெறுவார் ? இயற்கையோடு இயைந்து . ஆம்! .அதை அவரே சொல்லுகிறார் கேளுங்கள்! (ஆதாரம் : பா. வீரமணியின் நூல்)“உண்மையான அழகும் , மனங்கனிந்த அன்பும், செவி களுக்கு இனிமையான ஒலிகளும்தான் என் உள்ளத்தைக் கவர்ந்த காதற்துணைவிகளாகும் . நான் கவிதை எழுத ஆரம்பிக் கும் முன் பறவை இனங்களையும் , மிருக இனங்களையும், தாவர இனங்களையும் கண்டு ரசிப்பேன் .

விளைவற்ற தரிசு நிலங்களை எனக்குப் பிடிக்காது . அது போல் அன்பில்லாத முகங்களையும் அறிவில்லாத செயல்களையும் எனக்குப் பிடிக்காமற் போனதில் வியப்பில்லை என்று எண்ணுகிறேன்” “அழகியப் பூங்காவிலும் , பெருங்காடுகளிலும், வயல்வெளி களிலும் வாழும் பறவை இனங்களும் என் மனதைக் கவருவதுண்டு. அவை இரைதேடி வந்ததும் குஞ்சுகளுக்கு உணவு ஊட்டுவதைக் கண்டு மெய்மறந்து ரசிப்பேன் . அவைக் கொஞ்சிக் குலவிக் கத்தும் ஒலிகள் , நான் எந்த வாத்தியத்திலும் கேட்டறியாத இனிய கீதங்களாகும் . இவை தான் நான் அமைக்கும் கவிதைகளுக்கு மூலகாரணமாகும்.” கவிஞரின் இயற்கைமீதான காதலும் அளவற்ற அன்பும் அவரை எழுதத் தூண்டின . அவர் பாடலில் இரண்டறக் கலந்து நின்ற அன்புக்கும் ஓசை நயத்துக்கும் அழகிய கற்பனைக்கும் இந்தப் பார்வை ஊற்றுக்கண்ணாய் இருந்தன . நகரத்தில் இயந்திர வாழ்க்கையில் அரைபடும் கவிஞனுக்கு இந்தப் பேரனு பவம் கிட்டுமோ ? அவர் எழுதியதெல்லாம் பாடலே . ஆயினும் அவற்றையும் கவிதை என்றே கூறினார் . கவிதையின் பேரரசி தானே பாடல்.
கம்யூனிஸ்ட்டுகள் எப்போதும் இயற்கையை ரசிப்பவர்கள் . போற்றுபவர்கள் . வியட்நாமின் மாபெரும் தலைவர் தோழர் ஹோ –சி-மின் எழுதிய கவிதைநெடுக இம்முத்திரையைக் காணலாம் . சிறையில் அடைக்கப்பட்டிருந்த பொழுது அவர் எழுதிய கவிதை இதோ ! .

 “ யன்னல் வழியாக

அழகு நிலா பொழிகிறது

யாத்திடுக ஓர் கவிதை

என்றெனக்குச் சொல்கிறது

மின்னல் மனப் போர் வீரன்

நிலைமையிலே யானுள்ளேன்

மீதமில்லை நேரமிங்கு

கவியேதும் பாடுதற்கு”

பட்டுக்கோட்டை தம் பாடல்களில் சமூக அக்கறையையும் பொதுவுடைமைச் சிந்தனையையும் வலிந்து திணித்தாரா ? அடுத்து பார்ப்போம்.

நன்றி : தீக்கதிர் இலக்கியச் சோலை 25 ஆகஸ்ட் 2014

சும்மா கிடந்த சொல்லை எடுத்து .. 16

Posted by அகத்தீ Labels:
சும்மா கிடந்த சொல்லை எடுத்து - 16

அறிவுக்கதவைச் சரியாய் திறந்தால்...

சு.பொ.அகத்தியலிங்கம்

“எரிமலை எப்படிப் பொறுக்கும்? / நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்?” - எனத் தொடங்கும் சிவப்புமல்லி திரைப்படப் பாடல் இன்னும் நெஞ்சில் கனன்று கொண்டிருக்கிறது .இப்பாடலில் இந்த வரிகளுக்கு அடுத்து வந்த வரியை தணிக்கைத் துறையின் கத்திரி காவு வாங்கியிருக்கிறது. அடுத்து ‘ரத்தச் சாட்டை எடுத்தால் /கையை நெரிக்கும் விலங்கு தெறிக்கும்‘ என்று எழுதியிருந்தார் வைரமுத்து . ‘ரத்தச் சாட்டை’ என்ற சொல் லில் வன்முறை இருப்பதாக தணிக்கைத்துறை கருதியது.பாடல் பதிவாகி படம் எடுத்து முடிக்கப்பட்டுவிட்ட நிலையில்.. இந்தப் பாடலின் வரிகளை தணிக்கைக்காக பின்வரு மாறு மாற்றவேண்டிய நிலை ஏற்பட்டது என்கிறார் வைரமுத்து . “சிங்கக் கூட்டம் நிமிர்ந்தால் /துன்பச் சிறையின் கதவு தெறிக்கும்.” இந்த வரிகளே திரைப்படத்தில் இடம் பெற்றது .“நாம் கண்ணீர் விற்கும் ஜாதி / இனி அழுதால் வராது நீதி” போன்ற வரிகள் நரம்பை முறுக்கேற்றும் .

“ஓடி ஓடி உழைக்கணும்... / ஊருக்கெல்லாம் கொடுக்கணும்... ” என்கிற பாடல் நல்லநேரம் திரைப்படத்தில் இடம் பெற்றது . புலமைப் பித்தன் எழுதியது . “வயித்துக்காக மனுஷன் இங்கே / கயித்தில் ஆடுறான் பாரு / ஆடி முடிச்சி இறங்கி வந்தா / அப்புறம் தாண்டா சோறு” என்ற வரிகள் நெஞ்சைப் பிசையும் . பாடலில் ஒவ்வொரு வரியும் கருத்துச் செறிவோடு இருக்கும் . அதே பாடலில் ஒரு சரணத்தில் பாடுவார் , “ வலிமை உள்ளவன் வச்சது எல்லாம் / சட்டம் ஆகாது தம்பி/ பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம் / சட்டம் ஆகணும் தம்பி” இப்படி சமூகச் சிந்தனையும் சமத்துவத் தேடலும் தமிழ் திரைப்பட பாடல்களில் தொடர்ந்து எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது .

இங்கே திராவிட இயக்கமும் , பொது வுடைமை இயக்கமும் வீரியமாகச் செயல்பட்ட அரசியல் - சமூகச் சூழல் தொடர்ந்து திரைப்பட உலகிலும் தாக்கத்தை உருவாக்கியது . முன்னத்தி ஏர் எனச் சொல்லத் தக்கவர் நம் பட்டுக்கோட்டையே ! அவர் பார்வை நெருப்பு வார்த்தைகளால் அல்ல நெருப்புச் சிந்தனைகளால் வார்க்கப் பட்டிருந்தது .கூர்மையாக இருந்தது .

“ வாழவைத்த தெய்வம் ” ( 1959) திரைப்படப் பாடல் ஏழைகளின் புது உலகம் எதுவென முகவரி காட்டும் . “ வெங்கிமலை உச்சியிலே ! - புது / வெற்றி நின்று அழைக்குதடா ! - புகழ் / மங்கிக் கிடந்தவர்க்கே ! - அங்கே / வாழ்க்கை இருக்குதடா” என ஒருவன் அழைப்பு விடுகிறபோது மேலும் சொல்வான் , “ பொங்கி ஓடும் வெள்ள மெல்லாம் / பள்ளத்தில் வீழந்து வீணாய்ப் / போகுதடா ! உள்ளம் வேகுதடா ! / புறப்படடா ! உடனே புறப்படடா ! பொறுப்புடன் உழைத்துழைத்து / வெறுப்படைந் திருப்பவனே / வரப்பெடுத்து வயலமைத்து / வானம் பார்த்து நிற்பவனே ! / புறப்படடா ! புறப்படடா ! “ என இவன் அழைக்க கூட்டமே “ புறப்படுவோம் ! உடனே புறப்படுவோம்” என வழிமொழிய பாடல் விறுவிறுப்பாகும் .

ஓட்டுவீட்டு முருகப்பா , ஓலைக்குடிசை மருதப்பா , மேட்டுக்கொல்லை வேலப்பா,வேப்பந்தோப்பு மாரப்பா , கருப்பாயி , செவப்பாயி , காடக்குப்பம் வெள்ளை யம்மா .. என பெயர் சொல்லி அழைக்கும் போது இப்பாடல் ஒவ்வொருவரோடும் நேரா கப் பேசி விடுகிறது . மண்ணின் வாசமும் மனதின் உறவும் பளிச்சிடும் . “ ஈரமில்லா பாறைகளை / நொறுக்கிடுவோம் ! - அணையை / எழுப்பிடுவோம் / மரங்கள் போட்டுத் / தடுத்திடுவோம் ! / ஏழைகளின் திசையிலதைத் / திருப்பிடுவோம் தண்ணியை / ஏரி குளம் வயல் நிறையப் / பெருக்கிடுவோம் ” அடடா ! தண்ணியை குறியீடாக்கி சமூகத் தில் யாருக்காக சட்டங்களும் திட்டங்களும் வேண்டும் என விவசாயியின் நெஞ்சில் கருத்தை பதியம் இடுகிறார் பட்டுக்கோட்டை .

அதே பாடலில் ஆணும் பெண்ணுமாய் மாறிமாறி தொடரும் வரிகள் நறுக்கெனப் பாயும். “ கொடுமையையும் வறுமையையும் / கூடையிலே வெட்டிவை ! ” “ கொஞ்ச நஞ்ச பயமிருந்தால் / மூலையிலே கட்டிவை !” “ நெடுங்கவலை தீர்ந்ததென்று / நெஞ் சில் எழுதி ஒட்டிவை !” “ நெரிஞ்சிக் காட்டை அழித்து - அதில் / நெல்லுவிதையைக் கொட்டிவை !” “ ஏழைகளின் புது உலகம் தெரியுதடா !- நாம் / ஏமாந்து வந்த நிலை ஒழியுதடா !” அதை நோக்கி அனைவரையும் புறப்படச் சொன்ன பட்டுக்கோட்டை நெருப்பு, எரிமலை என வார்த்தைகள் போடாமலே நெஞ்சில் எரிமலையை கொதிக்கச்செய்தார் .

“ உண்மை ஒரு நாள் வெளியாகும் - அதில் / உள்ளங்களெல்லாம் தெளிவாகும்/ பொறுமை ஒரு நாள் புலியாகும் - அதற்குப் பொய்யும் புரட்டும் பலியாகும் ” என ‘ பாதை தெரியுது பார் ’ ( 1960) படத்தில் நம்பிக்கை ஊட்டுவார் . “ காலம் அறிந்து கூவும் சேவலைக் / கவிழ்த்துப் போட்டாலும் நிறுத்தாது ; / கல்லைத் தூக்கி பாரம் வைத்தாலும் / கணக்காய் கூவும் தவறாது ” என உறுதியாய் உரைப்பார் . “ தாழம்பூவைத் தலையில் மறைத்தாலும் / வாசம் மறைவது கிடையாது / சத்தியத்தை உலகில் எவனும் / சதியால் மறைக்க முடியாது ” இப்படி அவர் சொல்வது ஆழமானது . ஏனெ னில் நமது நாடு மகாபாரதத்தை கேட்டு வளர்ந்த நாடு. அதில் சதிகள் அதிகம் . அதி லும் வஞ்சகன் கிருஷ்ணன் செய்யும் சதிகள் மூலமே அர்ச்சுணன் கர்ணனைக் கொல் லுவான் . போர் நெடுக கிருஷ்ணனின் சதிகளே வெற்றிக்கு வழிசமைக்கும் .ஆனால் இங்கே சதியால் முடியாதென்று அழுத்தம் திருத்தமாய்ச் சொன்னார் . தீர்வும் சொன்னார் ,

“ அன்பு நெஞ்சிலே ஆத்திரம் வந்தால் / ஆண்டவன்கூட அஞ்சிடு வான் ; / அறிவுக் கதவைச் சரியாய்த் திறந்தால் பிறவிக் குருடனும் கண் பெறுவான் ” அறிவுக்கண்ணைச் சரியாகத் திறக்கும் போது வம்பும் கலகமும் சிக்கலும் தீரும் ; மனிதனை மனிதன் நம்பிடுவான் ; அப்போது மடையனும் அதிலே திருந்திடு வான் . இந்தத் தெளிவும் தீர்க்கமான பார்வையும்தான் பட்டுக்கோட்டையின் சிறப்பு என தோழர் என்.நன்மாறன் அடிக்கடிச் சொல்லுவார் ; நீ ஆத்திரப்பட்டுப் பயனில்லை; உன் பேச்சைக் கேட்பவன் உணரவேண்டும் . பட்டுக்கோட்டை பாடலைக் கேட்பவர் எழுச்சி கொள்வர் . அவன் ஒரு பாட்டுப் போராளி. அறிவுக்கதவைச் சரியாகத் திறக்க நாம் பயில வேண்டும் ; பட்டுக்கோட்டை அதற்கு உதவுவார் .

பழம் பெரும் நடிகர் டி.கே.பாலசந்திரன் தனது நினைவுகூரலில் பட்டுக்கோட்டை வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை சொல்லுகிறார் (ஆதாரம் தாமரை 1959 / 3 ) “ ஒரு நாள் கவிஞரும் நானும் மைலாப்பூர் லஸ் கார்னரிலிருந்து 3- ஆம் நம்பர் பஸ் ஏறி னோம் . ஆழ்வார்பேட்டைத் திருப்பத்தை நெருங்கிக்கொண்டிருந்தது . வேக மாக வந்து கொண்டிருந்த பஸ் மெதுவாகப் போக ஆரம்பித்தது .ரோட்டை எட்டிப் பார்த்த கவிஞர் ‘ என்ன செங்கொடி தெரிகிறது ?’ என்றார் என்னிடம் . நான் ரோட்டைப் பார்த்துவிட்டு ‘ தண்ணீர்க் குழாய் பழுது பார்ப்பதற்காகப் பள்ளம் தோண்டியிருக்கிறார்கள் . அதற்காக எச்சரிக்கை செய்யும் முறையில் அபாயக் கொடி போட்டிருக்கிறார்கள் ’ என்றேன் .அதற்கு நம் கவிஞர் , ‘ ஓ ஹோ.. ஏற்றத்தாழ்வு எங்குண்டோ அங்கெல்லாம் இந்தக்கொடி உயர்ந்துவிடும் போலிருக்கிறது ’ என்றார் . சிரித்தார் . நானும் சிரித்தேன். ஆனால் என்னை வெகுநேரம் சிந்திக்க வைத்தது . எவ்வளவு கருத்தாழம் ?

“ உன் நாள் காட்டியை / நீதான் கிழிக்க வேண்டும்../ நாளுக்கென்ன ” .. “ பையைத் துழாவுகிறேன் / புரண்டு படுக்கிறேன் / நகம் உராய்கிறது அரிசிப்பானையில்” என்பார் இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் . குறுகத்தறித்த சமூக வெடிப்பல்லவா இது !

சிவசாகர் எனும் தெலுங்கு கவிஞர் எழுதினார் , “ ஒரு புன்னகை ../ அது / இதயத்தை நெருடும் / கண்ணீர் ஓடையைப் / பெருக்கெடுத்து ஓடச் செய்யும் , / ஒரு போராளியின் / முகத்தில் பூவாக மலரும் / என்றெல்லாம் நான் / எண்ணியதே இல்லை.. / அந்தப் புன்னகை - / கத்தியைவிட கூர்மையானது../ரத்தத்தைவிட பிரகாச மானது ../ அந்தப் புன்னகை ஒளிவீசிக் கொண்டிருக்கிறது / அந்த ரத்தசாட்சிகளின் முகத்தில்....” ஆம் மெய்யே. … தொடர்ந்து பார்ப்போம்...
நன்றி : தீக்கதிர் 18 ஆகஸ்ட் 2014

கொடியென்பது..

Posted by அகத்தீ Labels:

கொடியென்பது...


தேசியக் கொடியை - எங்கும்
கம்பீரமாய்ப் பறக்கவிடுங்கள்
அது வெறும் துணி அல்ல
எம் தேசத்தின் ஆத்மா ...

நூலால் நெய்யப்படதல்ல
தியாகவேள்வியில் முறுக்கேறிய
எமது மக்களின் நரம்புகளே
ஊடும் பாவுமாய் பிணைந்திருக்கிறது

வண்ணங்கள் சாயப்பூச்சல்ல
மக்கள் ரத்தமும் வியர்வையுமே..
அதில் மதம் இல்லை சாதி இல்லை
தியாகம் உண்டு தீரம் உண்டு

நேற்றைய தியாகத்தைப் போற்றுவோம்
நாளைய தியாகத்துக்கு தயாராவோம்
ஆனால் .. ஒன்று .. அப்போது - அசோகச்சக்கரம்
மேட்டுக்குடி பக்கமாய் சுழலவிடமாட்டோம் .

சு.பொ.அகத்தியலிங்கம் .
[ 1998 ஆம் ஆண்டு ‘ விடுதலைத் தழும்பு’ நூல் முதல் பதிப்பு வந்தபோது அதில் இடம்பெற்றது ]

வேட்டி.. சேலை... கைலி.. : சமூகச் சேதிகள் சில...

Posted by அகத்தீ Labels:


வேட்டி.. சேலை... கைலி.. :
சமூகச் சேதிகள் சில...சு.பொ.அகத்தியலிங்கம்.


நாடு அடிமைப் பட்டிருந்த காலத்தில் வெள்ளைக்காரர்களும் பெருந்தனக்காரர்களும் மட்டுமே பங்கேற்கும் வகையில் கிளப்புகள் மன்றங்களில் வேட்டிதடை செய்யப்பட்டிருந்தது. விடுதலை பெற்ற பிறகும் அந்த அடிமை இழிவு தொடரக்கூடாது. எதிர்க்க வேண்டும். வேட்டி அணிவதை தடை செய்தால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதே வேளையில் அந்த வேட்டி நம் ஊரில் படும்பாடு கொஞ்சமா ?

வேட்டி, சேலை , கைலி எல்லாவற்றுக்கு பின்னாலும் பெரிய பெரிய சமூகச் சேதிகள் உள்ளன என்பதை மறக்கலாமா ? வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டோ - தெருவை பெருக்கும் அளவுக்கு இறக்கிக் கட்டிக் கொண்டோ ஊர் தெருவில் உலவ தலித் மற்றும் சில சமூகத்தினருக்கு உரிமையுண்டா ? கணுக்கால் தெரியும் படி வேட்டிகட்ட வேண்டிய நிலையில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் நிலை இன்னும் தொடர்கிறதே !

தோளில் துண்டு போட உரிமையுண்டா ? நாதஸ்வர வித்துவான் ராஜரத்தினம் பிள்ளையைக்கூட தோளில் துண்டு போட அனுமதிக்கவில்லை . பெரியார் தலையிட்டு அந்த உரிமையைப் பெற்றுத் தந்தது வரலாறல்லவா ? தஞ்சையில் தோளில் துண்டு போடவும் செருப்பணியவும் போராடி வென்றது செங்கொடி இயக்கமன்றோ ! இந்த வரலாறு பள்ளி பாட புத்தகத்தில் உண்டா ?

தஞ்சையில் இளைஞர்கள் கூட சிவப்புத் துண்டணிந்து கம்பீரமாய் நடை போட்டது சமூகசமத்துவப் போராட்டத்தின் குறியீடு அல்லவா ? திராவிட இயக்கத்தின் நிகழ்கால அரசியலில் ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம் ; அவர்கள் தோளில் துண்டணிந்ததும் இதன் தொடர்ச்சியன்றோ ! ஆனால் சோவும் சில ஆதிக்க பத்திரிகையாளர்களும் இதனை கேலிப்பொருளாகச் சித்தரித்தது இந்த குறைந்தபட்ச சமத்துவத்தைக் கூட சகிக்க முடியாத ஆதிக்க வெறியினாலன்றோ !

அதேசமயம் பேண்ட் அணிந்தால் இந்தச் சிக்கல் இல்லை . ஆகவேதான் இப்போதும் தலித்துகளும் ஒடுக்கப்பட்ட மக்களும் ஜீன்ஸ் பேண்டும் சர்ட்டும் அணிவதை பொறுக்க இயலாத ராமதாஸ்கள் விஷம் கக்குகின்றனர் . இன்னும் இலவச வேட்டி சேலையை நம்பியே கணிசமான பகுதி மக்களை வாழும்படி தரித்திரத்தில் அமுக்கிவைத்திருப்பது எந்த வித பண்பாட்டு நியாயமா ?

சரி ! எது எப்படியோ வேட்டியும் சேலையும் நம் பண்பாட்டு குறியீடு எனக் கொண்டாலும் ; ஆயிரம் விவகாரங்கள் நெஞ்சில் எழுகிறதே ! “உண்பது நாழி உடுப்பது இரண்டே” என்று சொன்ன ஒளவை அது ஆணுக்கு மட்டுமா அல்லது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொருந்தக்கூடியதா எனச் சொல்லவில்லை . அந்த நாலு முழத்தை பெண்கள் எப்படி உடுத்தியிருப்பர் ? ஐயா கேலிக்காகக் கேட்கவில்லை மெய்யாகவே கேட்கிறேன் . கொஞ்சம் கோயில் சிற்பங்களையும் ஓவியங்களையும் உற்று நோக்கினால் நம் வரலாறு புலப்படும் .

ஏவல் மகளிர் மேலாடை அணியும் உரிமையற்றிருந்த காலம் ஒன்றிருந்தது . மேல்தட்டுப் பெண்களே கச்சணிந்தனர் .ஜாக்கெட் என்பது முஸ்லிம்கள் வருகை வரை இங்கு வழக்கத்தில் இல்லை. ஒளவைப் பாட்டியும் காரைக்கால் அம்மையாரும் ஜாக்கெட் அணிந்ததில்லை. நம் பெண் தெய்வங்களும் ஜாக்கெட் அணிந்ததில்லை . பண்டைய சிற்பங்களும் ஓவியங்களுமே சாட்சி . பெண்கள் மேலாடை அணிவதற்கும் ஜாக்கெட் அணிவதற்கும் பெரும் போராட்டங்கள் நடத்த வேண்டியிருந்தது என்பதை வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் தெரியும் .

இப்போதும் முன் கொசுவம் வைத்து சேலை கட்டுவது குறிப்பிட்ட சமூகத்தின் உரிமை. அதிலும் கிராமப் புற விதவைகள் இவ்வாறு முன்கொசுவம் வைத்து சேலை அணிய அனுமதி கிடையாது. தாழ்த்தப்பட்ட மக்கள் இன்னும் பாதம் மூழ்க தழையத் தழைய சேலை கட்ட தடை இருந்தது.கணுக்காலுக்கு மேலேதான் அணியவேண்டும் . பிராமணர்கள் மடிசார் கட்டு தனி; இதர சாதிகள் சேலைக்கட்டு தனித்தனி . மாராப்பு இடது புறமா வலது புறமா என்பதில் வேறுபாடு உண்டு .பிராமணர்களிலும் சவுண்டிப் பார்ப்பான் என அழைக்கப்படுவோர் வீட்டுப் பெண்கள் கணுக்கால் தெரியும்படித்தான் சேலைகட்ட வேண்டும் .

பட்டுக்குத் தீட்டுக் கிடையாது என்பதால் எல்லா சாதிகளும் புழங்கும் கல்யாணம் போன்ற பொது நிகழ்வுகளில் மேல்தட்டினர் பட்டு கட்டத் தொடங்கினர்; அதுவே அந்தஸ்தின் குறியீடுமாகிப் போயிற்று . இன்றைக்கு திருமண வரவேற்புகளில் குஜராத் பாணி சேலை கட்டே மணமகளுக்கு உரியதாகிப் போனது !

சுடிதார், பேண்ட், கவுண், லெக்கின்ஸ், மிடி, குர்தா பைஜாமா, ஜீன்ஸ், டி- சர்ட், பனியன், பெர்முடாஸ் இன்னும் பல ஆடைகள் புழக்கத்தில் வந்துவிட்டன .அதிலும் நவீன ஜவுளிக் கடைகளில் போய் பார்த்தால் பெண்களுக்கு விதவிதமான டிசைன்களில் குவிந்து கிடக்கும். ஆண்களுக்கு அவ்வளவு தேறாது . இந்த நவீன உடைகள் பல பெண்களின் சுதந்திர பயணத்துக்கும் பணியிட பாதுகாப்புக்கும் உகந்ததாக உள்ளன . சாதி ரீதியான ஒடுக்கு முறையை அனுபவிக்கும் பெண்கள் சுடிதாரோ பேண்டோ அணியும் போது நாம் மேலே சுட்டிய கட்டுப்பாடுகள் அண்டாது; ஆனால் சேலை கட்டும் போது மட்டும் தலைதூக்கி விடுகின்றன. இதை எங்கு சொல்லியழ !

வேட்டி சேலைக்கு கிடைக்கிற அந்தஸ்தைக் கூட கைலிக்கு தருவதில்லை. 80 களில் கைலி கட்டிக் கொண்டு மாலை வேளைகளில் தெருவில் நிற்கும் இளைஞர்களைப் பிடித்து அடிப்பார் சென்னை வியாசர்பாடி காவல்துறை துணை ஆய்வாளர் . அதிலும் அப்பகுதியில் பர்மாவிலிருந்து வந்த அகதிகள் அதிகம் . அவர்களிடம் கைலி அணியும் வழக்கம் மிகப் பரவலாக இருக்கும் .இந்நிலையில் இளைஞர்களைத் திரட்டி காவல் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போராடியது என் நினைவில் பசுமையாக உள்ளது .

இப்போதுகூட கைலி என்பது ரவுடிகளின் உடை என்கிற தப்பான கண்ணோட்டம் இருப்பதும் பொது இடங்களில் கைலி கட்டுவதை அகவுரவமாகக் கருதும் போக்கும் நிலவுகிறது . முஸ்லிம் சமூகத்தின் கண்ணியமிக்க உடை கைலி; சில நாடுகளின் தேசிய உடை கைலி; இதனை சமூகம் சரியாக உள்வாங்காதிருப்பது சரியோ?இதில் வேடிக்கை என்ன தெரியுமா? கிட்டத்தட்ட பெரும்பாலோர் வீட்டுக்குள் புகுந்ததும் முதலில் கைலிக்கு மாறிவிடுவர். ஆம் அதுதான் சுதந்திரமானது; வசதியானது. மூட்டித் தைப்பதால் காற்றடிக்கும் போதும் வேட்டி மாதிரி விலகும் தொல்லை இல்லை. அதிலும் நெடுந்தொலைவு ரயில் பயணத்தில் கைலியின் தேவை மிகமிக அதிகம்.

ஆனால் இந்தக் கைலியை உரியபடி மதிக்க மறுப்பது ஏன் ?காவி, நீலம், பச்சை சாயம் தோய்த்த வேட்டிகளை அணிந்து இங்கு கோவிலுக்குள் செல்லத் தடையில்லை . ஆனால் கட்டம் போட்ட வேட்டியை மூட்டித்தைத்து பாதுகாப்பாக அணிந்தால் அது லுங்கியாகிவிடுகிறது, கோவிலுக்குள் அனுமதிகிடையாது.

கைலியை ஒரு உடையாக பாதுகாப்பான சுதந்திரமான உடையாகப் பார்க்காமல் அதனை முஸ்லிம் உடையாகவும் பொதுஇடத்தில் அணிந்து திரிவதை இழிவானதாகவும் பார்க்கும் பழுதுபட்ட பார்வையை எப்போது துடைத் தெறியப்போகிறது ஆதிக்க மனோபாவம் கொண்ட சமூகப்பகுதி!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்த தோழர் ஏ.நல்லசிவன் கியூப நாட்டிற்கு சென்றிருந்த போது ஒரு சுவையான அனுபவம் , அவர் எப்போதும் சாரம் அணிபவர் .ஆம் கைலி , லுங்கி என்று பிறமாவட்டங்களில் அழைப்பதை நெல்லை , குமரி மக்கள் சாரம் என்றே அறிவார்கள். தோழர் ஏ.நல்லசிவன் சாரம் என்றே சொல்லுவார் . அவர் சாரம் அணிவதில் பெரு விருப்பங் கொண்டவர் .கியூபாவில் இருந்த போது பல சமயங்களில் தான் விரும்பும் சாரத்தில் இருந்ததாகவும் ; ஊரைச் சுற்றிப் பார்க்கும்போதும் பொது நிகழ்வொன்றில் கலந்து கொள்ளும் போதும் சாரம் அணிந்ததையும் பெருமை பொங்கக் கூறினார் . அங்கே எல்லா உடைக்கும் சமமரியாதையே வழங்கப்பட்டதாகக் கூறினார் . இவ்வளவுக்கும் கியூப தேசிய உடை சாரம் அல்ல ; பொதுவாக வெளிநாட்டு விருந்தினர் அவரவர் நாட்டு தேசிய உடையிலோ அல்லது கோட்டு சூட்டிலோதான் இருப்பது மரபு . மரபை தோழர் நல்லசிவன் மீறினார் . கியூபா அதனை அங்கீகரித்தது . அது மட்டுமல்ல பல நேரங்களில் மாநிலக்குழு அலுவலகத்தில் - மாநிலக்குழு கூட்டங்களில் - மாநாடுகளில் தோழர் ஏ . நல்லசிவனை சாரத்தில் பார்க்கலாம் .அண்மையில் சென்னை புத்தகக் காட்சியின் போது பத்திரிகையாளர் ஞானி சில நாட்கள் கைலி அணிந்து வந்து சிறு பண்பாட்டு அசைவை முன்னெடுத்தார் ?

தொழிற்சாலை , பணியிடம் , ராணுவம் , காவல்துறை , பள்ளிகூடம் என சீருடைகள் கட்டாயம் அவசியப்படுகிற இடம் தவிர வேறெங்கும் அவரவர் விருப்பத் தேர்வாகவே ஆடை அமைய வேண்டும் . ஆடையையும் பாலியல் வக்கிரத்தையும் முடிச்சிப் போட்டு கலாச்சார ரவுடிகளாக சிலர் திரிவதை ஏற்க இயலாது . ஆறுவயது குழந்தையை வன்புணர்வு செய்ய எந்த ஆபாச உடை காரணம் ?

வேட்டி - சேலை - கைலி எல்லாமே நம் பண்பாட்டின் கூறு என்பதை ஏற்பதே சரி; தேவை, ஆனால் அதற்கு சாதி மத வேலி கட்டுவதையும் நிபந்தனைகள் விதிப்பதையும் ஒரு போதும் அனுமதிக்கவே கூடாது . அதை மட்டுமே அணிய கட்டாயப்படுத்தக்கூடாது.ஆணாயினும் பெண்ணாயினும் எந்தெந்த உடை யார்யாருக்கு தேவையோ யார்யாருக்கு எது வசதியோ அதை அணியத் தடை இருக்கவே கூடாது . பாதுகாப்பும் பணிச் சூழலுமே முக்கியம். ஆடைத் தேர்வு தனிப்பட்ட விருப்பம் . உரிமை . அதில் அத்துமீறி மூக்கை நுழைக்க யாரையும் அனுமதிக்கக் கூடாது .

உடை விஷயத்தில் எளிமை வேண்டும் சரிதான். காந்தி காலத்தில் கதர் எளிமை . ஆனால் இன்று கதரோ ஆடம்பரம். விலையும் அதிகம் . பராமரிப்புச் செலவும் அதிகம். ஒரு முறை கேரளத்தின் மூத்த தலைவர் மாபெரும் மார்க்சிய சிந்தனையாளர் தோழர் இ எம் எஸ்ஸிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது . நீங்கள் நாலுமுழ வேட்டியும் அரைக் கை சட்டையும் மட்டுமே அணிந்து ஏழ்மையைப் பிரகடனப்படுத்துகிறீர்கள். ஆனால் புதிய தலைமுறைத் தோழர்களிடம் அந்த எளிமை மெல்ல மெல்ல விடை பெற்று வருகிறதே ? இந்தக் கேள்விக்கு தோழர் இ எம் எஸ் அளித்த நேர்மையான பதில் புதிய வெளிச்சம் பாய்ச்சியது. நாங்கள் அதாவது முதல் தலைமுறை கம்யூனிஸ்டுகளிடம் காணப்படும் எளிமை சுதந்திரப் போராட்ட பாரம்பரியத்தினுடையது.அது காந்திய எளிமை . மார்க்சியம் எல்லோரும் நல்ல உடை உடுக்க வேண்டும் என்கிற பார்வை கொண்டதே ! புதிய தலைமுறை இன்றைய சமூகச்சூழலிலிருந்து வளர்கிறார்கள் அவர்கள் எங்களைப் போல் உடை அணிய வேண்டும் என எதிர்பார்ப்பது யதார்த்தமல்ல . ஆகவே அவர்கள் நவீன உடை அணிவதில் தவறில்லை . மக்களிடமிருந்து அந்நியப்படாமல் இருக்கவேண்டும் என்பதே முக்கியம் . இதைவிட தெளிவாய் யார் சொல்லுவார் ?

நேற்றின் வேர் அறாமலும் இன்றின் தேவைகளை நிறைவு செய்வதாகவும் மனிதமாண்புகளை மேலும் முன்னெடுப்பதாகவும் அமையட்டும் நம் உடை பற்றிய விவாதம்.

நன்றி : தீக்கதிர் 13 ஆகஸ்ட் 2014 வண்ணப்பக்கம்

சும்மா கிடந்த சொல்லை எடுத்து ( 15)

Posted by அகத்தீ Labels:

சும்மா கிடந்த சொல்லை எடுத்து ( 15)


நரியும் கழுகும் உலவும் போது...சு.பொ.அகத்தியலிங்கம்

“ கடந்த வருடம் மட்டும் / நாம் / இருபத்தி மூன்று / கருத்தரங்கங்க ளும் / பதினொரு /பட்டறைகளும் / நடத்தினோம். / நாற்பத்தி ஏழு /புள்ளி இரண்டு / சுற்றாய்வுகள் / மேற்கொண் டோம் / அறுபத்தி எட்டு / புள்ளி ஐந்து / ஆராய்ச்சியாளர்களை / நியமித்தோம் . / பதின்மூன்று /அந்நிய வல்லுநர்களை / வரவழைத்தோம் . / பதினெட்டு / சிறப்பு கமிஷன்களை / நியமித்தோம் / பதினாறு / ஆய்வறிக் கைகளை / சமர்ப்பித்தோம் . / முந் நூற்றி / நாற்பத்தினாலு / செய்தி அறிக் கைகளை / வெளியிட்டோம்.... / இப் போது / சமுதாய மறுசீரமைப்பில் / நாங்கள் / தீவிரமாக இல்லையென்று / சொல்வது யார் ? / உள்ளோருக்கும் இல்லோருக்கும் / இடையே உள்ள / இ.. டை.. வெ.. ளி.. யை / ஒழிக்க / நாங்கள் துணியவில்லை / என்று கூறுவது எவன் ? ”

1992ம் ஆண்டு வெளியான “தலைப்புச் செய்திகள் : மூன்றாம் உலகக் குரல் ”என்ற கவிதைத் தொகுப் பில் இடம் பெற்ற - மலேசியக் கவிஞன் சிசில் ராஜேந்திரன் எழுதிய கவிதையையே மேலே படித்தோம் . “ இப்பொழுது தீவிரமாக..” என்பது கவிதைக்கு தலைப்பு .இப்போது இதற்கு மேல் என்னத்தைச் சொல்ல.

“கல்லைத்தான் மண்ணைத்தான் / காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித் தானா? / இல்லைத்தான் பொன்னைத் தான் / எனக்குத்தான் கொடுத்துத் தான் இரட்சித்தானா? / அல்லைத் தான் சொல்லித்தான் /ஆரைத்தான் நோவத்தான் அச்சோ எங்கும் / பல் லைத்தான் திறக்கத்தான் பதுமத்தான்/.புவியில்தான் பண்ணினானே!” இராமச்சந்திரக் கவிராயர் எழுதிய தனிப்பாடல் பிரம்மா! ( பதுமத்தான்) வறுமையோடு ஏன் என்னைப் படைத்தாய் எனக் கேட்கிற இத்தனிப் பாடல் காலம் கடந்தும் வழக்கொழியவில்லை. காரணம் வறுமை ஒழியவில்லை. நேற்றைய திரைப்படங்களும் சரி இன்றைய திரைப்படங்களும் சரி வறுமையைப் பேசியிருக்கின்றன . பாடி இருக்கின்றன . இனியும் பேசும். பாடும் .வறுமை ஒழியும் வரை கலை இலக்கியம் வறுமையை எழுதாமல் இருக்க இயலாது .

“வறுமையின் தத்துவம் / சமய வாதிகளுக்குப் / பிரசங்கத் தலைப்பு / குருவி ஜோசியக்காரனுக்கு / வயிற் றுப் பிழைப்பு / கலாசிருஷ்டியோடு / எழுதுபவனுக்கு /நிலாச்சோறு / கல்லூரி மாணவனுக்கு – வெறும் /பரீட்சைக் கேள்வி !” என்பார் தமி ழன்பன் .

நமது பட்டுக்கோட்டையின் காலம் பசியும் பஞ்சமும் தலைவிரித் தாடிய காலம் . கவிஞன் அதனைக் கண்டு சுருண்டு படுக்கவா முடியும் ? மக்கள் கவிஞனிடம் சமூகக் கோப மும் ஏழைகள்பால் பெரும் அக்கறை யும் பொங்கிவழிந்தது திரைப்படத் துக்கானது மட்டுமல்ல ; இதயத்தின் துடிப்பும் கூட.


“ ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ” (1960) திரைப்படத்தில் ஒரு பாடல் .“ உலகத்திலே இந்த மரணத்தில் மட்டுமே / உயர்வும் தாழ்வும் இல்லை - இது / உருவமில்லா எவனோ ஒரு வன் / உண்டாக்கி வைத்த எல்லை” என தொகையறாவில் தொடங்கிய போது இது ஏதோ தத்துவ தரிசனம் போல் இருக்கிறதே என எண்ணத் தோன்றும். “ கலங்காதே கவலைப் படாதே / கவனித்துக் கேளடி தங்கமே / உறங்காதே பயந்துவிடாதே / உலகத்தைப் பாரடி தங்கமே !” என பல்லவியில் தொடர்ந்த போதும் அதே எண்ணம் தான் ; எனினும் கவனித்துக் கேள் , உலகத்தைப் பார் என ஏதோ பொடிவைத்துப் பாடுகி றானே என பாட்டைத் தொடர்ந்து கேட்டால் ஒவ்வொரு சரணமும் சவுக்கடியாக சுளீர் சுளீரென விழுகி றது .

“இன்பத்தைத் தேடித்தேடி / ஏழை நெஞ்சம் ஏங்குது / அன்பில் லார் வீட்டில் அது / ரொம்ப நாளாத் தூங்குது /எந்த சாமிக்கும் காது கேக்கலே / இல்லாதவனை எட்டிப் பார்க்கலே / வந்தாலும் போனாலும் / வாழ்ந்தாலும் கெட்டாலும் / ஏனென்று கேட்க ஆளேது ? ” சாதாரண மக்கள் அன்றாடம் அழுது புலம்பும் வரி களை அப்படியே திரைப்படத்தில் இலக்கியநயம் சொட்ட எழுதும் வல்லமை நம் பட்டுக்கோட்டைக்கு அன்றி வேறுயாருக்கு வரும் ?


இதனைத் தொடர்ந்து மேலும் சொல்லுவார் ,“ மலை பிளந்தோம் கல்லை உடைத்தோம் / மரம் பிளந்து வழிகள் அமைத்தோம் / வாடிக்கை யாய் உள்ளம் உடைந்தோம் / வாழ்க்கையெல்லாம் துன்பம் அடைந்தோம் / எல்லோரும் சேர்ந்து ஏமாத்தும்போது / முன்னேறும் பாதை ஏது ? ”. சரியான கேள்வி . விடாமல் கேட்பார் , “ வியர்வையிலே மேனிகரைந்து / வெயிலாலே அழகு கரைந்து / பசியாலே பலமும் குறைந்து/ பாடுபடும் முதுகு வளைந்து / தாங்காத துயரில் போராடும்போது / சந்தோஷ நாளும் ஏது ? ”. திரைப் படத்தின் தன்மைக்கு ஏற்ப வேதனை பொங்க இப்பாடலில் வெகுண்டு கேட்டவர் ; அதே ஆண்டு வெளிவந்த “ எல்லோரும் இந்நாட்டு மன்னர் ” படத்தில் நம்பிக்கையூட்டுவார் . அதைப் பார்ப்போம் .


“ஆ..விஷயம் ஒன்று சொல்லப் போறேன் / கேளடி கேளு – உண்மை / வெளியாகும் நேரம் வந்தது / கேளடி கேளு ” என உற்சாகமாய் அழைத்து ; “ ஓ.. நடந்தது எல்லாம் தேவையில்லை / தள்ளடி தள்ளு / நடக்கப் போற சங்க தியைத்தான் / சொல்லடி சொல்லு ” என்பார் .நம்பிக்கையோடு பீடிகை போட்டவர் தொடர்வார் , “ ஒ.. வறு மையில்லே வாட்டமில்லே / வயிற்றி லடிக்கும் கூட்டமில்லே / ”எவ்வளவு சுகமான கற்பனை . கற்பனை மேலும் விரியும். “ கொடுமையெல்லாம் மாறி வருது / கேளடி கேளு / குடிசையைத் தான் – இன்பம் / குடிசையைத்தான் நாடிவருது / கேளடி கேளு”


முந்தைய பாடலில் இன்பத்தைத் தேடித்தேடி ஏங்குவதையும் அது அன்பில்லாதவர் வீட்டில் தூங்கு வதையும் படம் பிடித்தவர் இங்கு குடிசையை இன்பம் தேடி வருவ தாகச் சொல்கிறாரே எப்படி ? அவருக்கும் வந்தது அந்த சந்தேகம் அதனால் தான் அடுத்தவரியில் பாடுவார் ; “ ஆ… நல்லவர் போல உலகம் மீது / நரியும் கழுகும் உலவும் போது / நம்மை இன்பம் நாடி வருமா? / சொல்லடி சொல்லு ” “ நிம்மதியா – உலகம் / நிம்மதியா வாழவிடுமா? / சொல்லடி சொல்லு” அடே அப்பா ! எவ்வளவு அழுத்தமாய் கேள்வியோடு சமூக யதார்த்தத்தைப் பதித்துச் செல்கிறார்.


அடுத்து அப்படியே விரக்தியில் தள்ளிவிட பட்டுக்கோட்டை சாதா ரண ஆளா , போராளி ஆயிற்றே! தொடர்கிறார் .. “ நடந்தது எல்லாந் தேவையில்லை / தள்ளடி தள்ளு – இனி / நடக்கப் போற சங்கதியைத் தான் / சொல்லடி சொல்லு ” என கைப்பிடித்து விடியல்பாதை காட்ட அழைக்கிறார் .

“ ஏமாத்தும் போர்வையிலே / ஏழைகளின் வேர்வையிலே / எக்கா ளம் போடுற கூட்டம் – நாட்டில் / எக்காளம் போடுற கூட்டம் /– மக்கள் / எதிர்த்துகிட்டா எடுக்க வேணும் ஓட்டம்” . மக்கள் எதிர்த்துப் போராடி இன்பத்தைக் குடிசைக்குக் கொண்டுவரவேண்டும் எனத் திரைபடத்துக்குள் நின்றுகொண்டு சொல்லுகிற துணிச்சலும் சாதுரி யமும் பட்டுக்கோட்டைக்கே உரி யது.

கவிஞர் தமிழ் ஒளி ஒரு கவிதையில் முத்தாய்ப்பாய் பாடுவான் :-

“ மாளிகையில் வாழ்ந்தவரை கீழே தள்ளு
மண்குடிசை தனில் வாழ்ந்த மனிதா ! உன்னை
ஏளனமாய் இதுவரையில் நடத்திவந்த
எதிரிகளைப் பணக்கார நரிக்கூட்டத்தை
தேளனைய முதலாளி திருடர் தம்மைச்
சிரங்கொய்து கர்ஜித்து முரசு கொட்டி
‘ ஆளவந்தோம் உலகத்தை ஏழை மக்கள்
அடிபணியோம்’ எனச்
சொல்லிக் கொடிஉ யர்த்து ! ”

கொடுமைதீர என்ன செய்ய வேண்டும் எனப் பட்டுக்கோட்டை சொன்னவற்றை மேலும் தொடர்ந்து பார்ப்போம்.

நன்றி : தீக்கதிர் இலக்கியச் சோலை 11 ஆகஸ்ட் 2014

இது எச்சரிக்கை அல்ல..

Posted by அகத்தீ Labels:


இது எச்சரிக்கை அல்ல...


அவர்களை
குறைத்து மதிப்பிட்டுவிடாதீர்கள்!!
சட்டபூர்வமாகவும் சட்டவிரோதமாகவும்
சமூகத்தில் விஷம் பீய்ச்சத் தெரிந்தவர்கள் .

அவர்கள் வார்த்தைகளை
மெய்யென்று நம்பிவிடாதீர்கள் !!
கருப்பட்டிக்குள்  நஞ்சை பொதிந்துதரும்
வித்தையில் கைதேர்ந்தவர்கள் .

அவர்கள் புன்னகையையில்
உங்களை இழந்துவிடாதீர்கள் !!
முகத்தையே முகமூடியாய்த் தரிக்கும்
கலையைக் கற்றுத் தேர்ந்தவர்கள் .

அவர்கள் இப்போது வென்றதால்
சரணடைந்து விடாதீர்கள் !!
சாதி - மதச் சவக்கிடங்காய் தேசத்தை
சிதைத்திடவே காய்நகர்த்துகிறார்கள் .

- சு.பொ.அகத்தியலிங்கம் .


சும்மா கிடந்த சொல்லை எடுத்து - [ 14 ]

Posted by அகத்தீ Labels:


சும்மா கிடந்த சொல்லை எடுத்து - [ 14 ]


சேரியின் வெற்றி.. நீதியின் வெற்றி..

சு.பொ. அகத்தியலிங்கம்


“ எக்களிப்புக் கொள்ளுதடா / பறையோசை எங்கும் ! / எதிர் நின்ற சாதிவெறி / மதவெறி எல் லாம் / சுக்காகப் போயிற்றுப் / பறையோசை ஓடிச் / சுதந்திரத் தைச் சொல்லியுமே / முழக்கு தடா ஊரில் . ”கவிஞர் தமிழ் ஒளியின் இக் காவியக் கனவு கைகூடும் நாள் விரைவதாக என ஆசைப்படத் தான் முடிகிறது . அனுபவம் வேறாக இருக்கிறது .

“ பயணம் ” என்ற தலைப்பில் கவிஞரும் சட்டமன்ற உறுப்பி னருமான பாலபாரதி எழுதிய கவிதை சமூக ஏற்றத்தாழ்வையும் சாதியக் கொடுமையையும் ஒருங்கே சொல்லும் :

“ சாலை ஓர மரங்களற்ற /நாற்கர சாலையில் பயணித்து, / ஆங்காங்கே தடுத்த / சுங்கச் சாவடிக்கு வரிசெலுத்தி / குண் டும் குழியுமான மாநில / நெடுஞ் சாலையில் திரும்பி, / பல ஆண்டு களாய்க் கட்டி / முடிக்கப்படாத பாலத்தின் / மீதேறி, / வீட்டடி மனைகளாக மாறி நின்ற / முன் னாள் விளை நிலங்களை / கடந்து, / ஒத்தையடி மண்பாதையில் / நடந்து, / எப்படியெல்லாமோ / தூரங்களைக் கடந்தும் / உன் னைப் பார்க்க முடியாத / பயணக் களைப்போடு / திரும்பி வந்தது / காதல் / சாதியைக் கடக்க / வழி இல்லையென்று !”தருமபுரி இளவரசன் மரணம் தந்த வலியோடு இக்கவிதையை மீண்டும் அசைபோட்டால் இரத் தக்கண்ணீர் வரும் .

பட்டுக்கோட்டை தனக்கு திரைப்படத்துறையில் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு திரைப்பட உலக வரம் புக்குள் நின்று கொண்டு சாதிக்கு எதிராக நிறையவே பாடினான் . “நீதியின் வெற்றியடா / சேரி யின் வெற்றி - அதை / நிரந்தர மாக்குதுபார் /பொதுஜன சக்தி” (புதுமைப்பெண் 1959) என முழங்குவார். பொதுஜன சக்தி வீறு கொண்டெழும்போதுதான் சேரியின் வெற்றி நிரந்தரமாகும் என்கிற கூர்மையான பார்வை இதில் எளிமையாய் வெளிப்பட் டிருப்பதைக் காணலாம் . அதே பாடலில் தொடர்ந்து கூறுவார் “ஜாதிகள் பேசி நம்மைத் / தள்ளி வச்சி வாழ்ந்தவங்க / சாக்கடைப் பூச்சிகளாய் / ஏழைகளை நினைச் சவங்க / தனக்கே ஊர்முழுவதும் / சொந்தமென்று வளைச்சவங்க / சட்டங்கள் மாறிவரும் / நேரம் என்ன ஆனாங்க - எல்லாம் / சரிசமமாய்ப் போனாங்க ” என நில உறவையும் சாதிக்கொடு மையையும் பிணைத்துத் தீர்வு சொன்னார் .


“ ஜாதிகள் யாவும் ஒன்றாக மாறும் / தேதியில் தோன்றும் பொதுமை ” (ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960) பெண் ஜாதி பேதம் தொலைந்து ஒன்றாகும் போதே சமூகக் கொந்தளிப்பு மாறும் என்று பெண் சொல்லு வாள்.அதற்கு ஆண் சொல்லு வான் , “ சண்டைகள் தீர்ந்தே மனி தர்கள் சேர்ந்தால் / தாரணியில் அது புதுமை.” மெய்தானே சாதிச் சண்டைகள் தீர்வது நம் சமூகத் தில் மகாபுதுமைதான் . அவ்வளவு சீக்கிரம் நடந்துவிடுமா என்ன ?இப்படி சிலபாடல்களில் சாதியத்துக்கு எதிராகச் சீறி இருப்பார் பட்டுக்கோட்டை . ‘ஆளுக்கொரு வீடு’( 1960) படத் தில் அங்காளம்மனுக்கு பொங் கல் வைக்கும் நாட்டுப்புற வழிப் பாட்டை முன்வைத்து பாடிய பாடலில் முழுமையாக சாதியத் துக்கு எதிராக உரக்கப் பேசியி ருப்பார் .

“ ஊருக்கெல்லாம் ஒரே சாமி / ஒரே சாமி ஒரே நீதி / ஒரே நீதி ஒரே ஜாதி / கேளடி கண்ணாத்தா” என தொடங்கும் அப்பாடலில் அடுத்தடுத்த வரிகளில் எளிமை யும் கூர்மையும் மிகுந்த வாதங் களை அடுக்குவார் . “ மூச்சுக் கெல்லாம் ஒரே காத்து / ஒரே காத்து ஒரே தண்ணி / ஒரே வானம் ஒரே பூமி / ஆமடி பொன்னாத்தா!” மேலும் தொடர்வார் , “ எல் லொருக்கும் உலகம் ஒண்ணு / இருளும் ஒண்ணு ஒளியும் ஒண்ணு / இன்னும் சொன்னா நீயும் ஒண்ணு / நானும் ஒண்ணு தானே / யாரு மேல கீறினாலும்/ ரத்தம் ஒண்ணுதானே / ஆக மொத் தம் பிறந்ததெல்லாம் / பத்தாம் மாசம் தானே ” இதுக்கு மேலுமா சாதி இயற்கையானதல்ல என் பதை நெற்றிப் பொட்டில் அறைந்து கூற முடியும் ? ஆனால் இங்கே ‘படித்த சில டாக்டர்’களுக்கே இது இன்னும் புரியவில்லையே! பட்டுக்கோட்டை மேலும் சொன்னார் , “ உயிருக்கெல் லாம் ஒரே பாதை / ஒரே பாதை ஒரே வாசல் / ஒரே கூடு ஒரே ஆவி / பாரடி கண்ணாத்தா ."

இப்படி அம்மனை கும்பிட்டு ஆடும் போதே சாதியத்துக்கு எதிரான கலகக்குரலை உரக்க ஒலித்திடு வார் . வார்த்தைகள் இந்த வரிக ளில் ஆடைகட்டியிருந்தாலும் கேள்வி அவ்வளவு பட்டவர்த் தமானது அல்லவா ? மண்டை யில் ஆணி இறக்கும் வாதம் .ஆயினும் ஒரு கேள்வி இப் போது எழுவது தவிர்க்க இயலாது; சாதிக்கு எதிராக சங்கநாதம் முழங்கிய பட்டுக்கோட்டை சாதி யத்தின் கொடிய கூறான தீண் டாமை குறித்து ஏன் பாடவில்லை ? அதற்கு மூன்று காரணங்களைக் கூற முடியும் .

முதலாவதாக , அவர் வாழ்ந்த பயின்ற தஞ்சை மண்ணில் தீண் டாமையையும் சாதிய ஒடுக்கு முறையையும் வர்க்க ஒடுக்கு முறை யையும் ஒன்றாகக் கருவறுக்கும் செங்கொடிப் போராட்டம் நடந் ததும் ; சாணிப்பால் சவுக்கடிக் கும் பண்ணை அடிமைத்தனத் துக்கும் எதிராக சீனிவாசராவ் தலைமையில் செங்கொடி நிழலில் உழைக்கும் மக்கள் அணிதிரண் டதும் ; இவர் அந்த இயக்கத் தோடு உறவு கொண்டிருந்ததும் அவரை அதே திசைவழியில் சிந்திக்கத் தூண்டியிருக்கலாம் . நாம் முதலில் மேற்கோள் காட்டிய பாடல் அதற்குச் சான்று .

இரண்டாவதாக , சாதியக் கொடுமையை அவர் அறிந்த போதிலும் திரைப்பட உலகின் வரம்பில் அவரால் ஒரு எல்லை யைத் தாண்ட இயலவில்லையோ! அடுத்து வரும் மேற்கோள்களில் அதனை உணர முடியும். இன்றைக்குகூட தீண்டாமை யின் கொடிய வலியைச் சொல்லும் பாடலை திரைப்படத்தில் இடம் பெற்றுவிடச் செய்யும் சூழல் இல்லையே ! பட்டுக்கோட்டை காலத்தின் நெருக்கடிகளுக்குள் நின்று கொண்டி ருந்த போதிலும் இயன்றவரை பாடினான் என்றே கொள்ள வேண்டும் .

மூன்றாவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெ ரும் தலைவர் தோழர் பி.டி. ரணதிவே சுட்டிக்காட்டியது போல் கடந்த கால்நூற்றாண் டுகளாக தலித் மக்களிடம் வலுப் பெற்றுள்ள “போர்க்குணம் மிக்க விழிப்புணர்வு”;பட்டுக்கோட்டை காலத்தில் அதே வேகத்தில் அதே தொனியில் மாநிலம் முழுமையிலும் இருந்ததாகச் சொல்ல இயலாது .கீழத்தஞ்சையிலும் வேறுசில இடங்களிலும் உழைக்கும் வர்க்க எழுச்சியோடு சாதியத்துக்கு எதிரான உரத்த குரல் ஒலித்தது.. இத்த னைக்கு மத்தியிலும் சாதியத் துக்கு எதிராய் தனது வலுவான குரலை பட்டுக்கோட்டை பதிவு செய்திருப்பதை மேலே கண்டோம் . அதுதான் பட்டுக் கோட்டையின் வெற்றி .

இன்று சாதி ஆதிக்க சக்தி கள் வேறு வகையில் தலித் மக்க ளுக்கு எதிராக அணிதிரள்வதும்; சாதியை உயர்த்திப் பிடிப்பதும் கவலை அளிக்கிறது . நுட்ப மானமுறையில் இந்த வக்கிரம் வெளிப்படுத்தப்படுகிறது; காலந்தோறும் தொடரும் இக் கொடுமையை அதன் போக் கிலே படம் பிடிக்கிறார் “ வலி” என்ற கவிதையில் ராசை.கண் மணி ராசா,

“ சாணிப்பால் ஊற்றி
சவுக்கால் அடித்தான்
என் பூட்டனை உன் பூட்டன்.

காலில் செருப்பணிந்தால்
கட்டி வைத்து உதைத்தான்
என் பாட்டனை உன் பாட்டன்

பறைக்கு எதுக்குடா படிப்பு என
பகடி செய்து ஏசினான்
என் அப்பனை உன் அப்பன்

‘உங்களுக்கென்னப்பா?
சர்க்காரு வேலையெல்லாம்
உங்க சாதிக்குத்தானே’-என
சாமர்த்தியம் பேசுகிறாய் நீ!

ஒன்று செய்
உன்னை அறியாத ஊரில் போய்
உன்னைப் பறையனென்று சொல்!
அப்போது புரியும் என் வலி! "

இது போன்ற வலியைப் பாடும் சூழல் பட்டுக் கோட் டைக்கு வாய்க்கவில்லை . ஆயி னும்பட்டுக்கோட்டை ஏழைக ளின்வலியை எப்படி எதிரொலித் தான் எனத் தொடர்ந்து பார்ப் போம்.

நன்றி : தீக்கதிர் இலக்கியச் சோலை  4ஜூலை 2014

இந்திய சிந்தனை மரபும் மார்க்சியமும்

Posted by அகத்தீ Labels:இந்தியச் சிந்தனை மரபும் மார்க்சியமும்

சு.பொ. அகத்தியலிங்கம்


இந்திய நாத்திகம்,
ஆசிரியர் : தேவிபிரசாத் சட்டோபாத்யாயா,
தமிழில் : சாமி,
வெளியீடு : பாரதி புத்தகாலயம்.
7 - இளங்கோ தெரு, தேனாம் பேட்டை,
சென்னை - 600 018.
பக் : 344, விலை : ரூ.220.

“இந்தியாவின் மரபு எனக் கறாராக வரை யறுக் கப்படக்கூடிய தத்து வத்தை விருப்பு வெறுப்பின்றி ஆராய்கிற போது கடவுளுக்கு அங்கே இடம் தேடுவது வேண் டாத வேலையே என்பது தெளிவாகும். இந்தியாவின் தத்துவங்களில் இரண்டே இரண்டை மட்டுமே ஆத்திகம் சார்ந்தவை என மிகுந்த தயக்கத் துடன் கூறலாம்.....”

“நமது முக்கியமான தத்துவங் களுக்குள் வேதாந்தமும் (அதுவும் கூட ஒரளவுக்கே எனலாம்) நியாய - வைசேசிசமும் குறிப்பாகப் பிற் கால நியாய - வைசேசிசமும் மட்டுமே ஆத்திகம் சார்ந்தவை.இதற்கு மாறானவை பவுத்தம், சமணம், பூர்வ - மீமாம்சம், சாங்கியம், லோகாயதம் மற்றும் ஆதி நியாய - வைசேசிசம் ஆகி யன; அவையனைத்தும் தீவிரநாத்திகவயமானவை. ஆக,இந்திய ஞானத்தில் நாத்திகத் திற்குள்ள ஆகப்பெரும் முக்கியத்துவத்தைக் கேள்விக் குள்ளாக்க விரும்பினால் அதைப் பிரதிநிதித்துவப் படுத்திய பல்வேறு இந்திய தத்துவ ஆசான்களைப் புறந்தள்ளியாக வேண்டும்”
சட்டோபாத்யாயா போகிற போக்கில் சொல்லவில்லை; ஆழ்ந்த புலமையோடு மேற் கண்ட தத்துவச் சாரங்களைக் கற்றுத் தேர்ந்து; சாறு பிழிந்து இந்நூலில் தந்துள்ளார் .“நமது நாகரீகத்தின் வரலாற்றைப் பின்னோக்கி நுணுகி ஆராய்ந்து பார்க்கும் போது வரலாற்றுக்கு முந்தைய ஒரு காலகட்டத்தில் அங்கே கடவுளே காணப்படவில்லை என்பதால் நாம் புரிந்து கொண் டிருக்கிற பொருளிலான மதம்இருக்கவில்லை என்பதை அறியமுடிகிறது ; ஆகவே தான் வேதங் களில் பேசப்படும் ஆதி ஆத்திகம் முக்கியமானது” என்கிறார் சட்டோபாத்யாயா.சொல்வதோடு நில்லாமல் அதனுள்ளும் நுழைந்து ஆதியில் எவ்வித சிறப்பு மற்ற எண்ணற்ற தெய்வங்களின் நம்பிக்கையில் தொடங்கி ஒரு கடவுள் நோக்கிய பயணமாக ரிக் வேதத்தில் வெளிப் படுவதை சுட்டிக் காட்டுகிறார். ஆதி நாத்திகம் தொடங்கிய சூழலுக்கு நம்மை அழைத்துச் செல்கிறார் .

ஈஸ்வர வாதமென அழைக்கப் பட்ட கடவுள் கோட்பாடு ; அதற்கு எதிர்நிலையில் நிரீஸ்வர வாதம் எனப்படும் கடவுள் மறுப்பு கோட் பாடு என இரண்டு சிந்தனைப் போக்கு உருவானதை மிகச்சரியாகச் சுட்டுகிறார். அதே போல் “ஈஸ்வர வாதத்துக்கும் ஸ்வபாவ வாதம் எனப்படும் இயற்கை வாதத்துக்கும் இடையில் தோன்றிய வாக்குவாதமே இந்திய சிந்தனை மரபில் தோன்றிய மதத் துக்கும் அறிவியலுக்குமான மோதலின் தெளிவான முன்னோட்டம்” என் பதை எடுத்துக்காட்டுகிறார்.

“சுருங்கக் கூறின் “ ஸ்வேதஸ் வதரா ” உபநிடதம் புத்தருக்கு முந் தைய காலத்திலேயே என்று சொல் லுமளவுக்கு மிகத் தொன்மையான காலத்திலேயே தோன்றியிருந்த எண்ணற்ற நாத்திக நிலைப்பாடுக ளுக்குரிய சான்றுகளை நமக்காகப் பாதுகாத்து வைத்துள்ளது..” என்கி றார் சட்டோபாத்யாயா. “ இத்தத் துவங்கள் அனைத்திலும் மிகப் பழமையானது சாங்கியம் ; அதன் நாத்திக உள்ளடக்கமே இந்தியச் சிந்தனை வரலாற்றில் மிகவும் புகழ் பெற்றது எனலாம் ” என்கிற தீர்ப்பை வழங்குவதோடு அது எங்ஙனம் என நிறுவுகிறார் . லோகாயதம் எவ்வாறு வேர்கொண்டது என்பதையும் விளக்குகிறார் .

“…உயிரியல் ஆய்வு நோக்கில் கடவுள் நம்பிக்கையின் பொருத்த மின்மை என்கிற ஒரம்சத்தை மட்டும் கருதுவது வரலாற்று முக்கியத் துத்தைக் குறைத்து மதிப்பிடுவதில் போய் முடியும். உண்மையில் சாங்கிய அறிஞர்கள் அதற்கும் மேலே சென்று ஏனையோரால் ஏற்றுக் கொள்ளப் பட்ட கடவுள் எனும் கருத்து தருக்கவியல்பாங் கில் எந்த அளவு உயர்ந்த பலம் கொ ண்டது என வினவினார்.”புத்தம் , சமணம் ஆகியவை ஆதியில் கடவுள் மறுப்புச் சிந்தனை யோடு விளங்கியதையும்; காலப்போக்கில் அதனுள்ளும் கடவுள் நம்பிக்கை நுழைக்கப் பட்டதையும் மிக நுட்பமாக ஆதரத்தோடு நிறுவுகிறார்.

“ எழுப்பு சுவர் உண்டெனில் / எழுப்பியவன் ஒருவனுண்டே / இவ் வுலகு கண்டு நீ நானும் (கடவுளும் எனப் பொருள் ) உண்டென அறிக/ என்றுரைத்தார் . அவரை நான் / ‘கனமான கடவுளே உனைச் செய்த சிற்பி எவன் ? / காட்டுவீர் என்றவுடனே/ கடவுளைக் காண்கி லேனே..” என்பார் பாரதிதாசன். அவர் சுவரை வைத்து வாதிடு வார்; பழங்கால தர்க்கங்கள் மண்பானையை வனைந்தவர் யாரென்றேவிவாதம் தொடரும். அதனை பலகோணங்களில் பல தத்துவஞானி கள் வாதங்கள் மூலம் இந்நூல் நெடுக சொல்லியுள்ளார் .

அதுமட்டுமல்ல ? “உலகப் படைப்பின் வழி நிறைவடையும் கடவுளின் நோக்கம்தான் என்ன? எந்தவொரு நோக்கமுமின்றி எந்த வொரு அடி மடையன் கூட எதை யும் செய்திடான்?” என குமரிலப் பட்டரின் கேள்வியையும் “ கடவுளின் திருவிளையாடல்” என பாதராயண ரின் பதிலையும் மிகச்சரியாக இணைத்து தெளிவுப்படுத்துகிறார் . கபிலரின் தத்துவ மேன்மையை நிறு வுகிறார்
.ஒவ்வொரு தத்துவ ஞானி யும் எங்கே சரியாக அடியெடுத்து வைத்தார்கள்; எங்கே கோட்டை விட்டார்கள் என நுணுகி ஆய்ந்து இந்நூல் எழுதப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக : “ நியாய – வைசேசியத்தில் கடவுள் நுழைந்த பிறகு வேதங்கள் அவரால் அருளப் பட்டவை என்றும் அவரிடமிருந்தே அவை தம் மேலதிகாரத்தைப் பெற் றன என்றும் பேசுவது ..” எப்படி இயல்பாய் போனது என்கிறார் .

விவாதத்தில் “சாமானிய சள” எனப்படும் போக்கு; அதாவது உண்மையான மைய இழையை விட்டு விட்டு குறுக்குசால் ஓட்டுகிற போக்கு; வார்த்தைகளைப் பிடித்து தொங்குகிற போக்கு; ஆத்திகவாதிகளிடம் மேலோங்கி இருந்ததை அம்பலப் படுத்துகிறார் சட்டோபாத்யாயா.

“ சோசலிசத்தின் இந்திய முயற்சி என்பது இந்திய தத்துவ மரபுக்கான போராட்டத்துடன் தொடர்புடை யது என்கிற புரிதலே இந்நூலின் அடிப்படை” என்கிறார் சட்டோ பாத்யாயா . இந்திய தத்துவ மரபில் மார்க்சியத்தை கண்டெடுப்பது எனக் கொச்சையாகப் புரிந்து கொள்ளாமல் ; இந்திய தத்துவ மரபின் சில கூறுகளை அடியொற் றிப் போகிற ஒருவன் இறுதியில் சேருமிடம் மார்க்சியமாகத்தான் இருக்கும் என்கிற சரியான இலக் கோடு இந்நூல் பயணப்பட்டுள்ளது.

“மார்க்சியம் : மாயத் தோற்றமும் எதார்த்தமும்” என கடைசி அத் தியாயத்துக்கு பெயரிட்டிருப்பதும்; அவ்வாறு பேசுவதும் இந்நூலின் செல்நெறியை நன்கு புலப் படுத்தும்.இந்திய தத்துவ ஞானிகள் பெரும்பாலும் நாத்திகராகவே விளங்கிய போதிலும் ; தத்துவப் பாங்கில் வலிமையாக வாதிட்டுக் கடவுள் மறுப்பை நிறுவிய போதி லும் ; இந்திய மக்களில் பெரும் பாலோர் மத மயக்கத்தில் ஆழ்ந் தது ஏன் ? அதற்கான விடை மார்க்சியத்தில்தான் இருக்கிறது. இறுதிஅத்தியாயம் அதைத்தான் சொல்லு கிறது.

முன்னுரையில் சட்டோபாத் யாயா முத்தாய்ப்பாகச் சொல்லி யவரிகள் , “மார்க்சியம் மிகக் கடு மையான நாத்திகவாதம் ஆதலால் அது , இறைவன் ஒருவனில் மட்டுமே (நம்மை உள்ளிட்ட இப்பேரண்ட த்தில்) இருத்தலைக் காண்கிற நமது தேசிய மரபினை அழித்தொழித்து விடும்’ என்கிற கூற்றுதான் மார்க்சி யத்துக்கு எதிரான பிரச்சாரங்களில் ஓங்கி ஒலிப்பது; இப்பிரச்சாரப் பீரங்கிகளைப் பார்த்து நான் கேட்கவிரும்புகிற ஒரேயொரு எளிய கேள்வி இதுதான்: மார்க்சியத்தை நாத்திகவாதம் என நிரூபிக்கிற நீங்கள் இக்கேள்வியை எழுப்புமுன் நமது தத்துவ ஆசான்களின் எழுத்துகளைக் கருத்தில் இருத்த எப்போதாவது உண்மையாகவே முயன்றதுண்டா ? அல்லது இந்தியஞானம் சாராம்சத்தில் இறையை சார்ந்தது எனும் புரட்டை நிலை நாட்டி அதன் வழி மார்க்சியத்தை மடக்கிப்போடும் தமது நோக்கத்தை நிறைவேற்றிட அவையனைத்தை யும் அழித்தொழித்துவிடப் போகி றார்களா ?”

ஆம்.இப்போது தேர்தலில் இட துசாரிகள் பின்னடைந்திருக்கிற சூழலில் - – வலதுசாரி சக்திகள் குறிப்பாக மதவாதப் பிற்போக்கு சக்திகள் கை ஓங்கி இருக்கிற சூழ லில்; சட்டோபாத்யாயாவின் மேற்கண்ட கேள்வி அதிமுக்கியத் துவம் பெறுகிறது. இந்நூலை முன்னணி ஊழியர்கள் அவசியம் பயின்று உள்வாங்கி தத்துவ ஆயுதமாக்கவேண்டியது காலத்தின் கட்டாயம். சாமியின் மொழியாக் கம் நன்று. காலத்தே வெளியிட்ட பாரதி புத்தகாலயத்துக்குப் பாராட்டுகள்.

நன்றி : தீக்கதிர் புத்தக மேசை   3ஜூலை 2014

இன்சூரன்ஸில் அந்நியமுதலீடு : மோடியிடம் 30 கேள்விகள்

Posted by அகத்தீ Labels:

 இன்சூரன்ஸ் தொழிலின் நேர்மையே பாலிசிஉரிமப் பட்டுவாடாவில்தான் உள்ளது. எல்ஐசி 99.5 சதவித உரிமங்களை ஒழுங்காகத் தருவது உலக சாதனை. ஆனால் சில தனியார் நிறுவனங்கள் 60 சதவீத உரிமங்களைக் கூட வழங்காமலிருப்பது இன்சூரன்ஸ் கட்டுப்பாடு மற்றும் வளர்ச்சி ஆணையத்தின் புள்ளி விவரம். இதுவெல்லாம் உங்கள் மேசைக்கு வரும் கோப்புகளில் அதிகாரிகளால் எழுதப்படாதா? இன்றைக்கு இன்சூரன்ஸ். நாளை சில்லரை வர்த்தகத்தைக் குறி வைக்க மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம்?


இன்சூரன்ஸில் அந்நிய முதலீடு : மோடியிடம் 30 கேள்விகள்

க.சுவாமிநாதன்

இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீட்டை 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக உயர்த்துவதற்கான மசோதாவை மாநிலங்களவை யில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்போவதாக நரேந்திர மோடியின் அரசு அறிவித்திருக்கிறது. புதிய அரசு பதவியேற்று இரண்டு மாதங்களே முடிந்துள்ள நிலையில் அவசர அவசரமாக இம்மசோதா விவாதிக்கப்பட இருக்கிறது. “நல்ல நிர்வாகம் வாயிலாக வளர்ச்சி” என்ற முழக்கத்தை மக்களி டம் வெற்றிகரமாக விற்பனை செய்து ஆட்சியில் அமர்ந்துள்ள மோடியிடம் 30 கேள்விகள்.

1. மே மாதம் 2014 வரை காங்கிரஸ் அரசு கொண்டு வந்த இன்சூரன்ஸ் அந்நிய முதலீட்டு மசோதாவை உங்களின் பிஜேபி எதிர்த்து வந்தது. 2008ல் தாக்கலான மசோதா ஆறு ஆண்டுகளாக நிறைவேறவில்லை. ஆனால் ஆட்சியில் அமர்ந்த60 நாட்களில் என்ன ஒளிவட்டம் புதிய ஞானோ தயத்தை தந்திருக்கிறது மோடி அவர்களே?

2. 1999ல் 26 சதவீத அந்நிய முதலீட்டை இன்சூரன்ஸ் துறையில் அனுமதித்த வாஜ்பாய் அரசில் நிதித்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்காவின் தலைமையிலான நாடாளுமன்ற நிதியமைச் சக நிதிக்குழுவே ஒருமித்த குரலில் அந்நிய முத லீட்டை 49 சதவீதத்திற்கு உயர்த்தக் கூடாதென 2011 ல் அறிக்கை அளித்ததே! உங்கள் கட்சியை சார்ந்த அனுபவசாலித் தலைவரின் ஆலோ சனையைக்கூட ஏன் கேட்கவில்லை?

பூங்கொத்தா?

3. அமெரிக்காவிற்கு செப்டம்பர் 2014ல் விசிட்அடித்து பாரக் ஒபாமாவை சந்திக்கப் போகிறீர்களே, அதற்குள்ளாக இன்சூரன்ஸ் அந்நிய முதலீட்டு மசோதாவை நிறைவேற்றிவிட்டு போக வேண்டு மென என்ன நிர்ப்பந்தம்! இந்திய இன்சூரன்ஸ் துறை என்ன பூங்கொத்தா?

4. அமெரிக்காவுக்கு போகப் போகிற மோடி அவர்களே பாரக் ஒபாமாவை சந்திக்கும் போது 2008ல் இருந்து அலைக்கழித்த உலக நிதி நெருக்கடியால் ஏன் பெரும் பெரும் பன்னாட்டு இன் சூரன்ஸ் நிறுவனங்களும், 500க்கும் மேற்பட்ட தனியார் வங்கிகளும் திவாலானது என்று கேட் பீர்களா?

5. இந்தியாவில் ஆயுள் இன்சூரன்ஸ் தேசியமயமாக்கப்பட்டு 57 ஆண்டுகளாகவும், பொது இன்சூரன்ஸ் தேசியமயமாக்கப்பட்டு 41 ஆண்டுகளாக வும் திவால் என்ற வார்த்தைக்கே இடமில்லாமல் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றனவே. உங்கள் நாட்டின் மிகப் பெரும் ஏஐஜி இன்சூரன்ஸ் நிறுவனத்தைக் காப்பாற்ற அதன் 80 சதவீதப் பங்குகளை அமெரிக்க அரசே வாங்க வேண்டி வந்தது ஏன் என ஒபாமாவை கேட்பீர்களா?

6. 2000க்குப் பிறகு இந்தியாவிற்குள் டாடா வோடு கைகோர்த்து இணைவினையில் அனுமதிக்கப்பட்ட ஏஐஜி இந்தியாவைவிட்டு வெளியேறியது ஏன்? ஆஸ்திரேலியாவிலிருந்து வந்து சன்மாரோடு கைகோர்த்த ஏஎம்பி இந்திய இன்சூரன்ஸ் துறையைவிட்டு வெளியே சென்றது ஏன்? பத்தாண்டுகள் கூட தொழிலில் நீடிக்காத பன்னாட்டு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் எப்படி பாலிசிதாரர்களுக்கு தரக்கூடிய உத்தரவாதத்தை ஒழுங்காக காப்பாற்றுவார்கள்?

7. இந்திய இன்சூரன்ஸ் சந்தையை விரிவாக்கி சாதாரண மக்களுக்கு அப்பயனை கிடைக்கச் செய்வதே அந்நிய முதலீட்டு உயர்வின் நோக்கம் என்கிறீர்களே, ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் சராசரி பிரீமியத் தொகை ரூ.12018. தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சராசரி பிரீமியத் தொகை ரூ. 30184. மோடி அவர்களே. சாதாரண மக்களுக்கு இன்சூரன்ஸ் பயனை கொண்டு போய் சேர்ப்பது யார்? சராசரி பிரீமியம் குறைவாக உள்ளது என்றால் சராசரி மனிதனை எட்டுவது எல்ஐசி என்றுதானே அர்த்தம்?

8. இந்தியாவிற்கு பன்னாட்டு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வருவது நமது நாட்டின் தேவைக் காகவா! அல்லது அவர்களின் வணிக வாய்ப்பு களுக்காகவா! வடஅமெரிக்காவில் இன்சூரன்ஸ் சந்தையின் வளர்ச்சி மைனஸ் 2.9 சதவீதம். ஐரோப்பிய நாடுகளில் மைனஸ் 0.6 சதவீதம் என்று கூறுகிற “சிக்மா” அறிக்கை மார்ச் 2014 ஐ நீங்கள் பார்க்கவில்லையா? அங்கே குளம் வற்றிப் போனதால் இங்கு இரை தேடி அவர்கள் வருகிறார்கள் என்பதுதானே உண்மை?

9. இந்தியாவிலுள்ள தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு முதலீடுகள் அதிகம் தேவைப்படுகிறது என்பதால் அந்நிய முதலீட்டை வரவழைப்பதாக உங்கள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறுகிறரே. ஆனால் இன்சூரன்ஸ் துறை மூலதனத்தை அதிகம் சார்ந்ததல்ல (Not Capital Intensive)பலநாடுகளில் பல நிறுவனங் களில் துவக்க மூலதனம் இந்தியாவை விட மிகக்குறைவாக உள்ளதே. எனவே Solvency Margin என்ற பெயரில் முதலீடுகள் அதிகம் தேவையெனச் சொல்வது அந்நிய முதலீடு தேவைஎன்கிற கருத்தை உருவாக்குகிற உத்தியே யாகும். இப்படிப் பட்ட கருத்துக்களை இத்துறையில் பெரும் நிபுணத்துவம் கொண்ட ஆர்.இராம கிருஷ்ணன் போன்றோர் வெளியிட்டுள்ளனர் என்பது உங்களுக்குத் தெரியாதா?

முரண்பாடில்லையா?

10. இன்சூரன்ஸ் தொழிலில் ஈடுபட்டுள்ள பெரும் தொழிலகங்களான டாடா, பிர்லா, அம்பானி போன்றோர் பன்னாட்டுச் சந்தையில் மிகப்பெரும் முதலீடுகளை செய்பவர்கள். இப்படி அந்நியச் சந்தைகளுக்கு 2010-2013ல் வெளியேறியுள்ள இந்திய முதலீடுகள் ரூ.2லட்சத்து 12ஆயிரத்து 556 கோடிகள். உண்மை இவ்வாறு இருக்கும்போது இப்பெரும் தொழிலகங்களுக்கு அந்நிய முதலீடு தேவைப்படுகிறதென வாதாடுவது பிரபல வழக் கறிஞர் அருண் ஜெட்லிக்கு முரண்பாடாகத் தெரிய வில்லையா ?

11. ‘அதிக முதலீடு வந்தால் அதிக வணிகம், அதனால் இன்சூரன்ஸ் பெருக்கம்’ என்பது அருண்ஜெட்லியின் வாதம். ஆனால் மூலதனத்திற்கும் வணிகத்திற்கும் இன்சூரன்ஸ் துறையில் சம்பந்தமே இல்லை. எல்ஐசி 100 கோடி மூல தனத்தைக் கொண்டு ரூ.2,08,000 கோடி பிரீமிய வருமானத்தை திரட்டியுள்ளது. HDFC Standard Life Insurance கம்பெனி ரூ.2ஆயிரத்து 204 கோடி மூலதனத் தைக் கொண்டு 11ஆயிரத்து 373 கோடியை பிரீமிய வருமானமாக திரட்டி யுள்ளது. இதைவிட அதிகமான மூலதனத்தை ரூ.4ஆயிரத்து 844 கோடி கொண்ட பஜாஜ் அலையன்ஸ் 6ஆயிரத்து893 கோடி பிரீமியத்தையே திரட்டியுள்ளது. மோடி அவர்களே இன்சூரன்ஸ் வணிகத்தின் அச்சாணியே நம்பகத்தன்மைதானே தவிர அதிகமுதலீடு அல்ல என்பது உங்களுக்குத் தெரியாதா?

12. உலகப் பொருளாதார அமைப்பு (World Economic Forum) இன்சூரன்ஸ் வணிகப் பெருக்கத் தில் இந்தியாவுக்கு ஆயுள் இன்சூரன்ஸில் முத லிடத்தையும், பொது இன்சூரன்ஸில் மூன்றாவது இடத்தையும் தந்துள்ளது. ஆனால் உங்களின் நிதியமைச்சர்களும், கொள்கைப் பிரச்சாரகர்களும் ஏதோ இந்தியா ரொம்ப இன்சூரன்ஸ் பெருக்கத்தில் பின்தங்கியுள்ளதாகச் சித்தரிப்பது எதற்காக?

13. அந்நிய இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இந்தியாவிற்குள் வந்தால் சந்தை வளருமென நிதியமைச்சக நிபுணர்கள் கூறுகிறார்கள். 1999ல் முன்வைத்த அதே சொத்தை வாதம். அந்நிய முதலீடு எங்கேயும், எதையும் வளர்ப்பதற்காக போவதில்லை. மாறாக சந்தை வளர்வதற்கான முதிர்ச்சி ஏற்பட்டவுடன் அறுவடைக்கு வந்து விடுவார்கள் என்பதுதான் உண்மை. எல்ஐசி மட்டுமே வணிகம் செய்து வந்த 1990 களில் அதன்ஆண்டு குவிவு வளர்ச்சி விகிதம் (CAGR - Compounded Annual Growth Rate) 19.5 சதமாகஇருந்தது. அதே விகிதம் 2013-14 வரை தொடர்ந் திருந்தாலே எல்ஐசியின் மொத்த பிரீமியம் 3,37,526 கோடிகளாக இருக்கும். இன்று எல்ஐசியும், 24 தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களும் சேர்ந்து திரட்டியுள்ள மொத்த பிரீமியத் தொகையும் இதுவே யாகும். மோடி அவர்களே இதற்கு என்ன அர்த்தம்! வளர்ந்த சந்தையில் பங்கு போட்டுள்ளார்கள் என்பதுதானே. மண்ணைப் பண்படுத்தி, உழுது, விதைத்து, நீர் பாய்ச்சி, உரம் போட்டு வளர்த்த பயிரை களவாடிப்போகிற வேலையைத்தானே அந்நிய முதலீடு செய்துள்ளது!14. அந்நிய முதலீடுகள் வந்தால் இந்தியப் பொருளாதாரம் பயன் பெறும் என்பது உங்கள் அரசின் வாதம். 2000 லிருந்து 13 ஆண்டுகளில் இந்திய ஆயுள் இன்சூரன்ஸ் துளையில் வந்துள்ள அந்நிய முதலீடுகள் ரூ.6300 கோடிகள். ஆனால் எல்ஐசி 11வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் மட்டும் ரூ.7,04,000 கோடிகளை அரசின் திட்டங் களுக்காகத் தந்துள்ளது. இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு. ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கு நிதியாதாரம் வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும்? அந்நிய முதலீட்டிற்கு கதவு திறப் பதா? எல்ஐசியைப் பலப்படுத்துவதா?

15. நாடாளுமன்ற நிலைக்குழுவின் முன்பு சாட்சியமளித்த ஐசிஐசிஐ-லொம்பார்டு போன்ற தனியார் இன்சூரன்ஸ் நிறுவனப் பிரதிநிதிகளே அந்நிய முதலீட்டு உயர்வு வேண்டாமெனக் கூறி யுள்ளார்களே! காரணம் என்ன? 49 சதவீதமாக அந்நிய முதலீட்டு வரம்பை உயர்த்தினால் அந்நியநிறுவனங்கள் இந்திய இணைவினைகளை தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிடாதா?

16. இந்திய நாட்டின் ஆதாரத் தொழில் வளர்ச் சிக்கு கடந்த 13 ஆண்டுகளாக இந்தியத் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பெரிதாக எதையும் செய்து விடவில்லை என்பது அரசின் பொருளாதார ஆய்வறிக்கைகளே தந்துள்ள ஒப்புதல் வாக்குமூலம் இல்லையா? அப்புறம் எப்படி உங்களுக்கு மட்டும் அந்த நம்பிக்கை வருகிறது? ஏதாவது சூடம் வளர்த்து அடித்துச் சத்தியம் செய்திருக்கிறார்களா?

பரிதவிப்பு கேட்கலையா?

17. இந்திய இன்சூரன்ஸ் துறையைப் பாரம்பரியக் காப்பீட்டு வணிகத்தை விட்டு பங்குச் சந்தையின் சூதாட்டத்திற்குள் தள்ளிவிட்டதே 10 ஆண்டுகால தனியார்துறையின் அனுபவம் என் பது உங்களுக்குத் தெரியாதா? பங்குச் சந்தை சரிந்த வுடன் இன்சூரன்ஸ் பாலிசிதாரர்களின் பரிதவித்த குரல் உங்கள் காதுகளில் கேட்கவில்லையா?

18. அந்நிய இன்சூரன்ஸ் நிறுவனங்கள் புதியபுதிய பாலிசி திட்டங்களை இந்தியாவிற்கு அறிமுகம் செய்வார்கள் எனக் கூறப்பட்டது. அப்படிஏதும் புதிய திட்டங்கள் இந்திய இன்சூரன்ஸ் சந்தைக்கு கிடைக்கவில்லை என நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்விலேயே வெளிப்பட்டிருப் பது உங்களுக்கு தெரியாதா?

19. நீங்கள் தீவிரவாதத்திற்கு எதிராக ‘விஜய காந்த்’ பாணி வசனம் பேசுபவர். மும்பை தாஜ் ஓட்டல் மீதான தாக்குதலில் தீரத்தோடு போராடி உயிர் நீத்த தீவிரவாத எதிர்ப்புப் படைத் தலைவர் ஹேமந்த் கர்கரேவின் பாலிசி உரிமத்தை எல்ஐசி வீடு தேடி 24 மணி நேரத்திற்குள்ளாக காசோலை மூலம் வழங்கியது உங்களுக்குத் தெரியாதா?

20. அதே ஹேமந்த் கர்கரே பாலிசி எடுத்திருந்த தனியார் இன்சூரன்ஸ் கம்பெனி எங்களின் பாலிசி விதிமுறைகளில் ‘தீவிரவாதத் தாக்குதல்கள் உள்ளடங்கவில்லை’ என்றும் ‘உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தே அவர் அப்பணியில் ஈடுபட்டார்’ என்று கூறியும் உரிமத்தைத் தர மறுத்தது உங்களுக்குத் தெரியாதா?

21. இன்சூரன்ஸ் தொழிலின் நேர்மையே பாலிசிஉரிமப் பட்டுவாடாவில்தான் உள்ளது. எல்ஐசி 99.5 சதவித உரிமங்களை ஒழுங்காகத் தருவது உலக சாதனை. ஆனால் சில தனியார் நிறுவனங்கள் 60 சதவீத உரிமங்களைக் கூட வழங்காமலிருப்பது இன்சூரன்ஸ் கட்டுப்பாடு மற்றும் வளர்ச்சி ஆணையத்தின் புள்ளி விவரம். இதுவெல்லாம் உங்கள் மேசைக்கு வரும் கோப்புகளில் அதிகாரிகளால் எழுதப்படாதா?

22. சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும். மக்களின் வாங்கும் சக்தி அரிக்கப்பட்டதால் நிதிச் சேமிப்புகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு மத்தியில்தான் எல்ஐசி 2013-14ல் 3 கோடியே 45 லட்சம் பாலிசிகளை விற்பனை செய்துள் ளது. தனியார் நிறுவனங்களும் சேர்ந்து விற்ற மொத்தபாலிசிகளில் 85 சதவீதம். உங்களின் கொள்கைகள்சட்டியைக் காலியாக்கும் போதும் அகப்பையில் வருகிறதென்றால் அதுதான் எல்ஐசி மீது மக்க ளுக்கு உள்ள நம்பிக்கை. மோடி அவர்களே கடைசிமனிதனையும் இன்சூரன்ஸ் தொட வேண்டுமென் றால் அதற்கு அந்நிய முதலீட்டு உயர்வு உதவாது. இந்த அனுபவம் நீங்கள் அறியாததா?

சேவை வரி நீக்கலாமே?

23. கிராமங்களை நோக்கி இன்சூரன்ஸ் நகர்வதற்கு பன்னாட்டு இன்சூரன்ஸ் நிறு வனங்களோ, தனியாரோ நகர்ந்துள்ளார்களா? எத்தனை கிராமங்களில் அவர்கள் அலுவலகம் திறந்துள்ளார்கள் என்ற பட்டியல் தரமுடியுமா?24. கடந்த ஓராண்டில் எல்ஐசி மினி அலுவலகங்களைக் கிராமங்களில் திறந்துள்ளது. முன் னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் சொந்த ஊர்கண்டனுhரில் கூட எல்ஐசிதான் மினி அலுவல கத்தை திறந்துள்ளதே தவிர வேறு எந்த தனியார் நிறுவனமும் திறக்கவில்லை. மோடி அவர்களே உங்கள் ஊரில் எப்படி? அருண்ஜெட்லி ஊரில் என்ன?

25. இன்சூரன்ஸ் அந்நிய முதலீட்டில் இப்படித் தலைகீழாகப் பேசுகிற நீங்கள் எந்த மாற்றத்தை மக்களுக்குத் தரப் போகிறீர்கள்?

27. இன்றைக்கு இன்சூரன்ஸ். நாளை சில்லரை வர்த்தகத்தைக் குறி வைக்க மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம்?

28. வல்லபாய் பட்டேலுக்கு சிலை வைக் கிற நீங்கள் அந்த இரும்பு மனதை அந்நிய முத லீட்டிற்கு எதிராகக் காட்டாமல், இந்தியச் சாமானி யமக்களிடம் காட்டுவது ஏன்?

29. இன்சூரன்ஸ் விரிவாக்கம் பற்றி இவ்வளவு கவலைப்படும் நீங்கள் ஆயுள் இன்சூரன்ஸ் மீதானசேவை வரியை நீக்கினால் சாமானிய மக்கள் பயன்படுவார்களே?

30. அறுதிப் பெரும்பான்மையை நாடாளு மன்றத்தில் தனிக்கட்சியாகப் பெற்றுவிட்ட துணிச்சலில் மக்களின் கருத்தை மதிக்காமல் மசோதாவின் தூசியைத் தட்டுகிறீர்கள். ஆனால் இந்திய மக்களின் 31 சதவீதம் மட்டுமே உங்களுக்கு வாக்களித்துள்ளார்கள் என்ற மக்கள் மன்றக் கணக்கு நினைவில் உள்ளதா?மோடி அவர்களே இந்தக் கேள்விகள் காதுகளில் விழுகிறதா? கார்ப்பரேட் ஊடகங்களின் இரைச்சலும், பன்னாட்டு மூலதனத்தின் பாராட்டுக்களும் மட்டுமே கேட்கிற இயர்ஃபோனைக் கொஞ்சம் கழட்டுவீர்களா?

கட்டுரையாளர் : பொதுச் செயலாளர், தென்மண்டல இன்சூரன்ஸ்ஊழியர் கூட்டமைப்பு
மேலதிக விபரங்களுக்கும் கட்டுரையாளரைத் தொடர்பு கொள்ளவும் உங்கள் தோழமையை உறுதி செய்யவும் மின்னஞ்சல் முகவரி : swaminathank63@gmail.com
நன்றி : தீக்கதிர்  3 ஜூலை 2014

அறிவியல் வேறு ஆன்மீகம் வேறு

Posted by அகத்தீ Labels:ஆன்மிகம் வேறு அறிவியல் வேறு

சு.பொ.அகத்தியலிங்கம்

30.7.2014 தீக்கதிர் வண்ணப் பக்கத்தில் “அறிவியல் அரிதாரத்துடன் ஒரு புராணப் புரட்டு” என்ற தலைப்பில் ஒரு செய்திக் கட்டுரை படித்திருப்பீர்கள். இதனை வாசித்த பொழுது என்னுள் எதிரொலித்த சில செய்திகளை பரிமாறிக் கொள்கிறேன்.

முதலாவதாக நெடுங்காலம் தீக்கதிர் ஆசிரியர் குழுவோடு இணைந்து பணியாற்றிய சியாமளம் என்கிற காஸ்யபன் நாகபுரியிலிருந்து முகநூலில் பதிந்த தகவல் வருமாறு:

டாக்டர் அப்துல் கலாம் மதுரை வந்திருந்தார்! அப்போது அவர் ஏவுகணை பற்றிய தீவிர ஆராய்ச்சியில் இருந்தார்! அவரை சந்திக்க தீக்கதிர் பத்திரிகை நிருபர் நாராயணன் சென்றிருந்தார்! அவரிடம் புஷ்பக விமானம் பற்றி கேட்டார்!“அன்றைய புராண காலத்தில் அறிவியல் அந்த அளவுக்கு வளர்ந்திருக்க வாய்ப்பு இல்லை! ஆனால் பறவைகள் போல தானும்பறக்க வேண்டுமென்று ஒரு மனிதன் சிந்தித்திருக்கிறான்! அதனைக் கற்பனையாக எழுதி பார்த்திருக்கிறான்!பல நூற்றாண்டுகள் மனிதன் கனவு கண்டிருக்கிறான்! அதன் முடிவில் ரைட் சகோதரர்கள் அதனைவென்றெடுத்துள்ளார்கள்” என்று விளக்கினார்!எல்லாம் இருந்தது என்பது எவ்வளவு தவறோ, அவ்வளவு தவறு எதுவும் இல்லை என்பது!மொழி மக்களுக்குச் சொந்தமானது!”சியாமளம் கூறியது கவனத்தில் கொள்ளத்தக்கது.

அதுமட்டுமல்ல கலாமின் அரசியலோடு நமக்கு மாறுபாடு இருக்கலாம். ஆனால் குடியரசுத் தலைவர் பதவி ஏற்க உகந்தநாள் எதுவெனக் கேட்ட போது சூரியனைப் பூமி சுற்றுகிறது எனத் தொடங்கி ஒவ்வொரு நிமிடமும் நல்ல நிமிடமே. தனக்கு இறை நம்பிக்கை உண்டு. ஆனால் மூடநம்பிக்கை இல்லை. நல்ல நேரம், கெட்ட நேரம் என எதுவும் இல்லை என்றார். மேலும் வானவியல் அறிவியல் தேவை.சோதிட நம்பிக்கை தனக்கு இல்லை என்றார்.

ஒரு மணி நேரத்துக்கு 60 நிமிடங்கள், ஒரு நிமிடத்துக்கு 60 நொடிகள் என்று நிர்ணயித்தவர்கள் பாபிலோனியர்கள் என்பது அதிகத் தகவல். நாம் இன்று பயன்படுத்தும் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ஆகிய எண்கள் அரேபியர் கண்டுபிடிப்பு. இதில் நம்முடைய பங்களிப்பாக “0” சேர்ந்தபின் கணக்கு அறிவியலில் பெரும் புரட்சியே உருவானது என்பது வரலாறு. ஆக, வரலாற்றுரீதியாக இந்தியாவும் அரபும் பல அறிவியல் துறையில் முன்னின்றது உண்மை. ஆரியபட்டரும் வராகமித்திரரும் வானவியலில் வியத்தகு கண்டுபிடிப்புகள் நிகழ்த்தியது உண்மையே! ஆயினும் சோதிடமாக அதனை மதவாதிகள் குறுக்கியதால் நாம் பின்னடைந்தோம். நம்மிடமிருந்து பெற்ற அறிவினை அறிவியல் ரீதியாக முன்னெடுத்துச் சென்றதால் மேலைநாட்டினர் முன்னேறினர்.

அன்றைக்கு கட்டிய குதுப்மினாரும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் கோபுரமும், தஞ்சை கல்லணையும் இன்றுவரை நம் கட்டிடக் கலைக்கு சான்று பகரும். ஆயினும் இந்த தொழில்நுட்பங்கள் அடுத்த தலைமுறைக்கு கைமாற்றப்படாமல் சாதி சிமிழுக்குள்ளும் மதக் கூண்டுக்குள்ளும் அடைபட்டு ரகசியமாக்கப்பட்டதால் நாம் இழந்த அறிவுச் செல்வம் அநேகம்!

இத்துடன் ஒரு அனுபவம்: நான் இளைஞனாக இருந்த பொழுது என் நண்பர்கள் சிலர் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றனர். அவர்கள் முற்போக்கான குறும்பு மாணவர்கள். வகுப்பில் நரம்பியல் நிபுணர் ராமமூர்த்தி பாடம் நடத்திய போது அவரிடம் இம்மாணவர்கள் ஒரு கேள்வி எழுப்பினர். “ மனம் மற்றும் ஆன்மா உடலில் எங்கே இருக்கிறது?” பொதுவாக யாரை நோக்கி இக்கேள்வி கேட்பினும் இதயத்தை நோக்கியே சுட்டுவிரல் நீளும். அவரோ மருத்துவ விஞ்ஞானி மறுபுறம் தினசரி சந்தியா வந்தனம் செய்யும் ஐதீக மரபில் வந்தவர். கேள்வி நுட்பமானது.

அவர் சொன்னார், “ மருத்துவ அறிவியலின்படி மூளையின் உணர்ச்சிப் பிரதேசமே அது. மனது என்பது இதயம் அருகே இல்லை. அது வெறும் எண்ணமே. ஆன்மாவுக்கு அறிவியல் நிரூபணம் கிடையாது. இதற்கு மேல் இங்கு நான் கூற விரும்பவில்லை. நேரில் கேளுங்கள் என்றார். அத்துடன் நில்லாமல் வகுப்பு முடிந்த பின்னர் மேலும் ஒன்று சொல்வேன் என முடித்துவிட்டார்.

வகுப்பு முடிந்தது. மாணவர்கள் சுற்றிச் சூழ்ந்தனர். அவர் சிரித்துக்கொண்டே சொன்னார். “வகுப்பறையில் நான் மருத்துவ விஞ்ஞானி. அங்கே நான் மருத்துவ விஞ்ஞானத்துக்கு எதிராகப் பேசக்கூடாது. அதுதான் முறை. இப்போது நான் தனி மனிதன். நான் வைதீகக் குடும்பத்தில் வந்தவன். இந்து மத நம்பிக்கையுள்ளவன். ஆன்மா உள்ளது. இதயத்தைச் சுட்டிக் காட்டி இங்கே உள்ளது. இது என் தனிப்பட்ட நம்பிக்கை. இதற்கும் நான் பாடம் நடத்தும் மருத்துவ விஞ்ஞானத்துக்கும் சம்பந்தம் இல்லை.அது வேறு. இது வேறு” என்றார்.

அது வேறு இது வேறு என்கிறபோது பிரச்சனை இல்லை. மதநம்பிக்கை தனிமனித நம்பிக்கை சார்ந்தது. புராணத்தையும் அதன் புரட்டுகளிலும் மூழ்குவது தனிமனித விருப்பம். அதனை யாரும் கேட்கமுடியாது. ஆனால் அதற்கு அறிவியல் முலாம் பூசி விற்பதுதான் பெரும் தவறு. ஆபத்தான பாதை.இந்தியாவும் அரபும் கீழைதேசங்களும் மதக் கூண்டுக்குள் சிக்கியும் இந்தியா சாதிச் சிமிழுக்குள் முடங்கியும் தனது அளப்பரிய சிந்தனைச் செல்வத்தை இழந்தது போதும். இனியும் அது தொடரக் கூடாது. மத நம்பிக்கை, ஆன்மீகம் தனிமனித நம்பிக்கை சார்ந்ததாக மட்டும் இருக்கட்டும்! அறிவியலை அதன் போக்கில் விடுங்கள்! ஆன்மிகத்துக்கு அறிவியல் முலாம் பூசி மயக்குவது பேரபத்தாகும்.

நன்றி : தீக்கதிர்