மனம் முழுக்க அழுக்கு இருள்

Posted by அகத்தீ Labels:
மனம் முழுக்க அழுக்கு இருள்
மருந்துக்கும் ஒளி துளி இல்லை .
மரத்துப்போன இதயம் அதற்கு !
மனிதர் என்ற பெயர் எதற்கு ?

மதம் பிடித்தே அலைகின்றாய்
மனிதத்தை வெறுப்பில் அழிக்கின்றாய்
அன்பெனும் அமுத ஊற்றை – உந்தன்
அறியாமை நெருப்பில் தூர்க்கின்றாய்

கடவுளின் மதம் எது ? மொழி எது ?
தேசம் எது ? இனம் எது ?தெரியுமா ?
ஆராய்ந்து அடையாளம் காட்ட
ஆகுமோ உன்னால் ! உன் வாழ்நாளில் !

அண்டை அயலானை நேசித்தால்
ஆண்டவனுக்கு அடுக்காதோ ஐயா !
வெறுப்பில் வேர்கொண்ட மதவெறி
மானுடத்தைச் சுட்டுப் பொசுக்கிடுமே!

சுபொஅ.கட உபநிஷதம்

Posted by அகத்தீ Labels: யதா ஸர்வே ப்ரபித்யந்தே ஹ்ருதயஸ்யேஹ க்ரந்தய :
அத மர்த்யோசம்ருதோ பவதி ஏதாவத்யனு சாஸ்னம் .”

 “ மனதின் எல்லா முடிச்சுகளும் அவிழும்போது மனிதன் மரணமற்றவன் ஆகிறான் . உபதேசம் இவ்வளவுதான் .”

 என்ன தோழரே ! ஊரடங்கில் ஒரு மாதிரி ஆகிட்டீங்கன்னு நீங்க கேட்கலாம் . ஆனால் இது நேற்று ஒரு நண்பர் என்னை உசுப்பியதின் எதிர்வினை .

ஆம் .எம் பள்ளி கால நண்பர் .சுசீந்திரத்திலிருந்து அழைத்தார் . “ என்ன நண்பா ! உன் அலமாரி முழுவதும் கம்யூனிச புத்த்தகங்கள் மட்டும்தான் இருக்குமா ? ஆன்மீகம் மருந்துக்கும் இருக்காதா ?” எனக் கேட்டார் .

நான் அவருக்குச் சொன்னேன் . “ நண்பா ! பகவத் கீதை ,குரான்  எல்லாம் இருக்கிறது .பைபிள்  பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் இணைந்தது .இருந்தது .வீடு மாறும் போது தவறிவிட்டது .யாரேனும் நன்கொடையாத் தரலாமே !

நான் எந்த நூலாயினும் ஆன்மீக  ,ஜோதிடம் ,மந்திரம் ,பலான புத்தகம்   என எது கிடைத்தாலும்  ஒதுக்காமல் வாசிப்பவன் . கம்யூனிஸ்ட்டுகள் எதையும் ஒதுக்காமல் வாசித்து உண்மை ,பொய் அறிபவரே .

சரி ! நண்பர் கேட்டுவிட்டார் ! அதுவும் பால்ய நண்பர் . எனவே  ,

“ கட உபநிஷதம் “  மரணத்துக்கு பின்னால் எனும் உபதலைப்போடு 190  பக்கங்களில்  சுவாமி ஆசுதோஷானந்தர் விளக்கதோடு ,ஸ்ரீ ராமகிருஷ்ன மடம் வெளியீட்ட நூலை முன்வைத்துப் பேசப்போகிறேன்.

கதைச் சுருக்கம் : வாஸசிரவஸ் எனும் பிராமணர் ஒருவர் விசுவஜித் என்கிற ஒரு யாகத்தைச் செய்தார் . அந்த யாக முடியில் தான் விரும்பிய அனைத்தையும் தியாகம் செய்ய வேண்டும் என்பது விதி . ஆனால் அவரோ வறண்ட நிலம் ,பால்வற்றிய மாடு போன்ற தனக்கு பயனற்றவற்றையே தானம் செய்தார் .

இதைக் கண்ட அவர் மகன் நசிகேதன் வருந்தினான் .இப்படி பயனற்றவைகளை தானம் செய்தால் நரகம் கிட்டுமே என கலங்கினான் . தந்தை தனக்குப் பிரியமானதை தானம் செய்ய வலியுறுத்த எண்ணி , “ தந்தையே ! என்னை யாருக்குத் தானம் செய்யப் போகிறீர்கள் ?” எனக் கேட்டான் . கோவம் கொண்ட தந்தை , “ உன்னை எமனுக்குக் கொடுக்கப் போகிறேன் .”என்றார் .

தந்தை ஆத்திரத்தில் சொன்னாலும் சொன்னதுதான் .அதுதான் யாகவிதி .தந்தை கண்ணீர் உகுக்க நசிகேதன் எமனுலகம் புறப்பட்டான் .

நசிகேதன் போனபோது அங்கே எமனில்லை .எனவே மூன்று நாட்கள் காத்திருக்க நேர்ந்தது . எமன் திரும்பியதும் அவனிடம் மந்திரிகள் சொல்கிறார்கள் .

“யாருடைய வீட்டில்  ‘பிராமணன்’ ஒருவன் உணவின்றி இருக்க நேர்கிறதோ ,அற்ப புத்தியுடையவனான அவனுடைய நம்பிக்கைகள் , எதிர்பார்ப்புகள் எல்லாம் அழிகின்றன … ” எனத் தொடங்கி ராஜ்யமே அழியும் என எமதர்மனை மிரட்டிவிடுகின்றனர் .

பயந்துபோன எமதர்மன் நசிகேதனை அழைத்து என்னால் மூன்று இரவுகள் காத்திருக்க நேரிட்டதால் மூன்று வரங்களைக் கேள் தருகிறேன் என்கிறான் .

கதையைத் தொடர்வதற்கு முன் இரண்டு செய்திகள் .

ஓன்று , மேலே  ‘பிராமணன் ஒருவன் உணவின்றி’ என்று நான் சொல்லியுள்ளேன் .நூலிலோ ’தூயவன்’ என்றே தமிழில் தரப்பட்டுள்ளது . ஸ்லோகத்திலோ ’ப்ராஹ்மணோ’ என்றே இருக்கிறது. முப்பது வருடங்களுக்கு முந்தைய பதிப்புகளில் பிராமணன் என்ற மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கும் .பார்ப்பனர் என்றே தமிழாக்கம் செய்திருக்க வேண்டும் .இப்போது தூயவன் ,சான்றோன் , அறிவாளி ,ஞானி என இடத்திற்கு ஏற்ப ராமகிருஷ்ண மட வெளியீடுகள் அனைத்திலும் ஆம் எல்லா நூல்களிலும் இடம் பெறுவதை தொடர்ந்து கவனிக்கிறேன் .இது ஒரு கருத்துத் திரிபு ,  கருத்துத் திணிப்பு ஆகும்.  பார்ப்பனரை மறைமுகமாக உயர்த்திக் கூறும் யுத்தியே !

இரண்டாவது செய்தி , சங்கி ஹெச் ராசா அண்மையில் கோவில் பிராமண பூஜாரிகளுக்கும் இதர பிராமண ஊழியர்களுக்கும் கொரனா நிவாரணம் பதினைந்தாயிரம் ரூபாய் தர வேண்டும் என்றார் . உணவின்றி தவிக்கும் யாருக்கும் சாதி ,மத வேறுபாடின்றி உதவக்கோருவதே மானுட அறம் .ஆனால் அது அவரிடம் இல்லை . பிராமணன் உணவின்றி கிடந்தால் அது பெரும்பாவம் என உபநிஷத் சொல்லும் வர்ணநீதியே சங்கிகள் எழுத்திலும் பேச்சிலும் செயலிலும் எதிரொலிக்கிறது என்பதறிக !

மீண்டும் கதைக்கு வருவோம் .

நசிகேதன் ,தன்னை தந்தை மகிழ்ச்சியோடு வரவேற்க வேண்டுமென புத்திசாலித்தனமாய் முதல் வரம் கேட்டு தனக்கும் , தந்தைக்கும் நல்ல காப்பரண் அமைத்துக் கொண்டான் .

இரண்டாவது வரமாக , மரணத்தை வெல்லும் யாகம் செய்யும் முறையை கேட்டறிகிறான் .அந்த யாகத்துக்கு நசிகேத யாகம் எனும் பெயரும் பெறுகிறான் .

மூன்றாவதாக ,  “மரணம் என்றால் என்ன ? மரணத்துக்கு பின் என்ன ?” என்கிற கேள்விக்குப் பதில் கேட்கிறான் . எமனோ சாவே இல்லாத வாழ்க்கை தருகிறேன் ,காமதேனு தருகிறேன் ,கற்பகதரு தருகிறேன் , அது தருகிறேன் ,இது தருகிறேன் என ஆசையை விதைக்கிறானே தவிர கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல மறுக்கிறான் . நசிகேதன் பிடிவாதமாக இருக்கிறான் .

எமதர்மன் , “ வாக்கினாலோ ,மனதினாலோ ,கண்களாலோ அந்த இறுதி நிலையை அடைய இயலாது .’இருக்கிறது’ என்று சொல்பவனைத் தவிர வேறு யார் இதனை அடைய முடியும் “ இப்படித் தொடங்கி ஆத்மா அனுபூதி என உபதேசம் நீள்கிறது . நாம் முதலில் சொன்ன வரிகளோடு உபதேசம் முடிகிறது . கடைசி வரை நசிகேதன் கேள்விக்கு கறாரான பதில் சொல்லவே இல்லை .

ஆயின் இந்த  ‘கட உபநிஷதம்’ சொல்ல வருவது என்ன ?

மரணம் யாருக்கு வேண்டுமானாலும் ,எப்போது வேண்டுமானாலும் வரும் அதற்கு தயாராய் மனதை விசாலப்படுத்து . வாழும் போது பிறருக்கு பயனுள்ள வாழ்க்கை வாழ் என்பதுதானே !

இதனை சுவாமி விவேகானந்தர் தன் பிரச்சாரங்களில் போதனைகளில் எடுத்தாண்டார் ; ஆனால் ஆர் எஸ் எஸ் கடைக்கோடி சங்கி முதல் உச்சாணி தலை வரை இந்த உபநிஷத்தை – உபதேசத்தை எடுத்துச் சொல்வது கிடையாது .சொன்னால் அவர்களுக்கே அது கேடாகிவிடுமே !

நாம் சொல்வோம் ; தாங்க முடியா துன்பஙளை ,துயரங்களை ,அவமானங்களை ,அடிஉதைகளைத் தாங்கிக் கொண்டு மனித குலத்துக்காக உழைப்போர் மட்டுமே பல நூறாண்டாயினும் சாகாது மக்கள் மனங்களில் வாழ்வர் ஆகிறார் ,

காந்தி ,அம்பேத்கர் ,பெரியார் ,மார்கஸ் ,எங்கெல்ஸ் ,பகத்சிங் போன்றோரே அதற்கு உதாரணம் . மரணத்தைத் தாண்டி மக்கள்நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்துள்ள ‘ஆன்ம பலம் மிக்க ‘ மானுடர்   இவர்களே !

யதா ஸர்வே ப்ரபித்யந்தே ஹ்ருதயஸ்யேஹ க்ரந்தய :
அத மர்த்யோசம்ருதோ பவதி ஏதாவத்யனு சாஸ்னம் .”

 “ மனதின் எல்லா முடிச்சுகளும் அவிழும்போது மனிதன் மரணமற்றவன் ஆகிறான் . உபதேசம் இவ்வளவுதான் .”


[ இன்னொரு முறை ஆன்மீக நூல் பற்றி அந்த நண்பர் கேட்பாரோ ?]

சுபொஅ.

உனக்குள் நீயே சுருங்கிவிடு ! [ ஆன்மீக அரிச்சுவடி ]

Posted by அகத்தீ Labels:
உனக்குள் நீயே சுருங்கிவிடு !
[ ஆன்மீக அரிச்சுவடி ]


மனதே!மனதே !
நீயாய் ஒன்றும் நாடாதே !
உனது துன்பம் நீயே காண் !

உன்னைச் சுற்றிப் பார்க்காதே !
வீட்டுக்குள்ளே முடங்கி இரு !
உனக்குள் நீயே சுருங்கிவிடு !
உண்மை என்பது சுடும் நெருப்பு .

[மனதே!மனதே ! ]


அறிவை அடகு வைத்துவிடு !
அன்பை சுயநலம் ஆக்கிவிடு!
மனிதம் கொன்று புதைத்துவிடு!
மதத்தைத் தூக்கிக் கொண்டாடு !

[மனதே!மனதே ! ]

கணமும் உண்மையை நெருங்காதே !
கனவிலும் பொய்யை மறவாதே !
கயமை ,வஞ்சகம் கைக்கொள்க !
கடவுளின் பின்னால் ஒழிந்திடுக !

[மனதே!மனதே ! ]

நோயிலும் மதத்தைக் கலந்துவிடு!
சடங்காய் எதையும் கடந்துவிடு!
உன்னை மட்டுமே காத்துக்கொள்!
உலகை தீமை சூழந்து அழிக்கட்டும் !

சுபொஅ.