“பாலஸ்தீனர்களிடம் பரிசோதிக்கப்பட்டு ,
காஷ்மீரிகளிடம் பயன் படுத்தப்பட்டவை “
“இந்திய நிலப்பரப்பில்
ஏற்கெனவே வணங்கப்பட்டு வந்த லட்சக்கணக்கான கடவுள்களை அப்படியே சுருக்கி எல்லோரையும்
ராமராகவோ கிருஷ்ணராகவோ மாற்றி அவர்கள் இருவரையும் தாண்டி வேறு கடவுள்கள் எவருமே இந்திய
நிலப்பரப்பில் இல்லை என்று நம்பவைக்கும் திட்டமும் இதில் அடங்கும்.”
என்கிற அனுஸ்தாப்
பாசு என்பவரின் மேற்கோளை இந்நூலில் நான்படித்த போது ; கடந்த சில நாட்களாக மோடி முன்னின்று நடத்தும் “ராம் புரோமோஷன் ஷோக்கள்” நினைவுக்கு வந்தன .
இந்நூல் ராமர்
கோயில் சார்ந்ததல்ல . ஆனால் அதைப் பேசாமல் இந்துத்துவ அரசியலை பேச முடியாதே .காஷ்மீரில்
நடப்பதற்கும் பாலஸ்தீனத்தில் நடப்பதற்குமான அரசியல் –பொருளாதார- நச்சு சித்தாந்தத்
தொடர்பு குறித்ததே இந்நூல் . தெரிந்த செய்திகளையும் தெரியாத செய்திகளையும் இணைத்து
புதிய கோணத்தில் இரண்டு பாசிச சக்திகளைத் தோலுரிக்கும் ஓர் அரிய நூல் . அவசியம் படித்தே
ஆக வேண்டிய நூல்.
நியூயார்க்கில்
இருந்து இயங்கிவரும் ‘ மிடில் ஈஸ்ட் ஐ’ என்கிற இதழில் பணிபுரியும் பத்திரிகையாளர் ஆசாத்
எஸ்ஸா எழுதியுள்ள காத்திரமான நூல் ,” கைவிடப்பட்ட காஷ்மீரும் பறிக்கப்பட்ட பாலஸ்தீனமும் [
கைகோர்த் திருக்கும் இந்திய – இஸ்திரேலிய புதுக்கூட்டணி]”.அன்புத் தோழன் இ.பா.சிந்தன்
தமிழில் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார் .
“இந்தியாவுக்கும்
இஸ்ரேலுக்குமான உறவினால் இன்றைக்கு உலகில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களையும் ,அது சர்வதேச
சமூகத்துக்கு எந்தளவு கேடு விளைவித்துக் கொண்டிருக்கிறது என்பதையும் ஆதாரங்களைக் கொண்டு
நம்மைச் சிந்திக்க வைக்கிறார் ஆசாத்.”என்கிறார் முன்னுரையில் பாலஸ்தீன பத்திரிகையாளர்
லினா அல்சாஃபின்.
“ஒரு நாட்டின் உள்நாட்டுக் கொள்கையும் வெளிநாட்டுக்
கொள்கையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.” என்பது நான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில்
இணைந்த காலத்தில் அரசியல் வகுப்புகளில் சொல்லிக் கொடுத்த பாலபாடம். இந்த புத்தகம் அதனை
நூறு சதம் மெய்யென்று சொல்லுகிறது .
இப்புத்தகம்
ஐந்து பெரும் அத்தியாயங்களைக் கொண்டது . முதல் அத்தியாயம் ,“இந்தியாவும் பாலஸ்தீனமும் : பிரிவினையைச் சந்தித்த இரு நாடுகளின் கதை .”
. இஸ்ரேலை ஆதிக்க வெறி கொண்ட நாடாகவும் ,இந்தியாவை அமைதியின் தூதுவனாகவும் பொதுபுத்தியில்
ஊறவைக்கப்பட்டுள்ள கரடுதட்டிப்போன கருத்தியலை இந்நூல் சல்லிசல்லியாக நொறுக்குகிறது
.விடுதலைப் போரட்ட காலத்தில் காந்தி ,நேரு எடுத்த பாலஸ்தீன ஆதரவு நிலைபாட்டிலிருந்து
படிப்படியாக சரிந்து இராஜீவ் காலத்தில் இந்தியாவை நவீனமயமாக்குவதற்கு என்ற சாக்கில்
இஸ்ரேலுடன் அரசுமுறை உறவினைக் கொண்டு சென்றார். இது ராமர் கோவிலை திறந்துவிட்டு இந்து
எழுச்சிக்கு உதவியதுபோலவே இஸ்ரேல் விவகாரத்திலும் இந்துத்துவவாதிகளுக்கு வாசல் திறந்துவிட்டது
. சோவியத் யூனியன் தகர்விற்கு பின் உருவான தாராளமய தனியார்மயப் பொருளாதாரக் கொள்கைக்கும்
இதற்கும் நெருங்கிய பிணைப்புண்டு .
இரண்டாவது
அத்தியாயம் , “ இராணுவம் ,அரசு மற்றும் ஆயுத
உற்பத்தி நிறுவனங்களின் தொழிற்கூட்டு” .தலைப்பே உள்ளடக்கத்தைச் சொல்லும். “ அரசும்
,அரசியலும் ,இராணுவமும் ஆயுத உற்பத்தி நிறுவனங்களும் ஒன்றாகக் கூட்டுச் சேர்ந்து இயங்கும்
ஒரு வியாபார முறையைத்தான் இஸ்ரேல் உருவாக்கி இருக்கிறது .இப்படியான வியாபார முறையில்
மிகச் சமீபத்தில் இந்தியா சிக்கி இருக்கிறது .இது வெறும் ஆரம்பம்தான்.” என்பதுதான்
இந்த அத்தியாயத்தின் சாரம் .ஆனால் இந்த இடத்தை வந்தடைந்த சூழலை ,அரசியல் பொருளாதார
சீரழிவை, இந்துத்துவா தலையெடுத்து விஸ்வரூபமெடுத்த பின்னணியை தக்க விவரங்களோடு விவரிக்கிறது
. “ இது வெறும் ஆரம்பம்தான்” என்கிற இந்த அத்தியாயத்தின் இறுதி வாக்கியம் கடும் எச்சரிக்கை
மணியாகும்.
மூன்றாவது
அத்தியாயம் “ இந்துத்துவமும் சியோனிசமும்
: நெருங்கிய உறவின் கதை “ இது இருபெரும் அழிவு சித்தாந்தங்களின் தோற்றமும் வளர்ச்சியும்
ஒருங்கிணைப்பும் குறித்துப் பேசுகிறது . இந்துத்துவா சக்திகளும் இந்திய தேசிய காங்கிரசும்
இப்பிரச்சனையில் ஒன்றுதான் என மட்டையடியாக தள்ளிவிடவில்லை .அதே சமயம் இரண்டு அமைப்புகளின்
தலைமையும் ஆதிக்க சாதியினரின் கட்டுப்பாட்டில்தான் இருந்தன. காங்கிரசுக்குள்ளும் இந்துத்துவ
தன்மை சிறிது அளவிலேனும் இருந்தது .இருக்கிறது . , இந்தத் தெளிவான புரிதலோடு இந்நூலாசிரியர்
பயணிக்கிறார் . இஸ்ரேலை முன்வைத்து முஸ்லீம்களை எதிர்க்கும் மையப்புள்ளியில் கிறுத்துவமும்
யூதமும் இணைந்து சியோனிசமானதைபோல் ,முஸ்லீம் எதிர்ப்பு புள்ளியில் இந்துத்துவா வளர்க்கப்பட்ட
கதையை சொல்கிறார் . நாமும் அப்படி புரிந்து பயணித்தால்தான் சரியான முடிவை எட்ட இயலும். 1947
ல் இந்தியா என்கிற தேசத்தின் முகமாக என்னென்ன கொள்கைகள் இருந்தனவோ அவை எல்லாம் அப்படியே
தலைகீழாக 1980 களில் மாற்றம் அடையத் தொடங்கின . அதன் அரசியல் பொருளாதார வேரினை இந்த
அத்தியாயம் புட்டு புட்டு வைக்கிறது .
“அமெரிக்க
வாழ் இந்தியர்களும் இஸ்ரேலியர்களும் “ என்பது நான்காவது அத்தியாயம். அமெரிக்க வாழ்
இந்தியர்களும் அங்கு வாழும் இஸ்ரேலியர்களும் எப்படி தங்கள் நலனுக்காக பரஸ்பரம் நெருங்கி
வந்தனர் . தாராளமய பொருளாதாரத்துக்கு பின்னர் அமெரிக்கா செல்லுவோர் எண்ணிக்கை உயர்ந்தது
.இதுவும் இவர்களுக்கு சாதகமானது .அதில் முக்கியமான செய்தி என்ன வெனில் மேல்சாதியினரே
நல்ல வருவாய் ஈட்டும் பொறுப்புகளில் அமர்ந்தனர் ,ஆகவே இந்துத்துவாவின் ஏஜெண்டுகளாக
மாறிவிட்டனர் . அவர்கள் செய்த மூன்று முக்கிய வேலையாக இந்நூல் சுட்டுவது என்னவெனில்
; 1]உயர் சாதி அல்லாத இந்துக்கள் ,முஸ்லீம்கள் ,கிறுத்துவர்கள் ,தலித்துகள் ,இதரர்கள் என பெரும்பகுதியான இந்தியர்களின் நலன்கள் தூக்கி
எறியப்பட்டு ,மேல்சாதியினர் நலன் மட்டுமே ஒட்டுமொத்த இந்தியர் நலன் என முன்னிறுத்தப்பட்டது
.2] முஸ்லீம்களால் யூதர்கள் மோசமாக பாதிக்கப்பட்டதுபோல் இந்துகளும் பாதிக்கப்பட்டவர்கள்
என ஒரு பொய்மை தோற்றத்தை உருவாக்குவது . 3] மேல்சாதியினர் அங்குள்ள பெருமுதலாளிகளோடு
இணைந்து முதலாளி ஆவது . மேலும் வெறுப்பு அரசியலை
கட்டமைக்க பேச்சுகளை உண்மைகளை சிதைத்து திரித்து பிரச்சாரம் செய்ய ,அதற்கு நவீன ஊடகங்களை
பயன்படுத்தல் என எல்லாவற்றையும் இஸ்ரேலிடம் இருந்து இந்துத்துவர்கள் கற்க அதன்படி செயல்பட
வெளிநாடு தளமானது . இந்துத்துவ கருத்தியலை எதிர்ப்பவர்கள் மட்டுமல்ல சந்தேகப்படுபவர்களையும்
கேள்வி கேட்பவர்களை எல்லா வகையிலும் அழித்து ஒழிப்பது இவர்களின் வேலைத் திட்டமானது
. இந்த அத்தியாயத்தை வாசிக்க வாசிக்க நெஞ்சு பதறுகிறது .
“இப்போது இந்தியாவில் இந்து ஆட்சியை உருவாக்க நினைக்கிற
மோடி அரசு ,இஸ்ரேலிடமிருந்து ஏராளமான பாடங்களைக்
கற்றுக்கொண்டு அவற்றை தன் முதன்மையான எதிரிகளான முஸ்லீம்கள் மேல் அமல்படுத்திவருகிறது
.” இதில் காஷ்மீரும் பாலஸ்தீனமும் பாதிக்கப்பட்டுள்ளது .அது எப்படி ? அதன் வேர் என்ன
? காஷ்மீர் எப்படி இஸ்ரேல் வழியில் சீர்குலைக்கப்பட்டு
பணக்கார முதலாளிகளுக்கு தாரை வார்க்கப்படுகிறது என்பதை “காஷ்மீரும் பாலஸ்தீனமும் : இரண்டு
ஆக்கிரமிப்பு நிலங்களின் கதை “ என்கிற ஐந்தாவது அத்தியாயம் நிறுவுகிறது .
காவி பாசிசம்
,க்குரோனி கார்ப்பரேட் கேப்டலிசம் , காஷ்மீர் சிதைப்பு ,பாசிச மோடி ஆட்சி .இஸ்ரேல்
உறவு , ஆயுத உற்பத்தி வியாபாரிகளின் லாபவெறி எல்லாம் ஒரே சேர இந்நூலில் பேசப்படுவதே
இதன் ஆழமான பார்வைக்கு சான்று .
இந்நூலின்
கடைசி அத்தியாயத்தில் இறுதியில் ஒரு செய்தி உள்ளது .பாலஸ்தீனத்துக்கு எதிராக இஸ்ரேல்
பயன் படுத்தும் ஆளில்லா விமானத் தயாரிப்பிற்கான நான்கு தொழிற்சாலைகள் இங்கிலாந்தில்
உள்ளன .அங்கு பாலஸ்தீனத்தை ஆதரித்து யுத்தத்தை எதிர்ப்போர் ஆர்ப்பாட்டம் செய்தனர்
. அந்த கம்பெனி கட்டிடத்தில் கிராஃபிட்டி என்னும் சுவர் ஓவியம் வரைந்து எதிர்ப்பைத்
தெரிவித்தனர் . அதில் எழுதப்பட்ட ஓர் வாசகம் ;
“பாலஸ்தீனர்களிடம் பரிசோதிக்கப்பட்டு ,காஷ்மீரிகளிடம் பயன் படுத்தப்பட்டவை
“
இந்த நூலை
ஒரு முறைக்கு இருமுறை வாசித்து உள்வாங்குவது நமது இன்றைய அரசியல் சமூக பண்பாட்டுப்
போராட்டத்தை சரியான திசையில் முன்னெடுக்க ஆயுதமாகும்.
இந்நூலை பிசிறு
தட்டாமல் தமிழாக்கம் செய்த என் தோழன் இ.பா.சிந்தன் பாராட்டுக்குரியவர் .எம் ஞானப் பிள்ளை
என உச்சிமோந்து பாராட்டுகிறேன். எம் பாட்டாளி வர்க்கப் போராட்டத்தை தொடர் ஓட்டமாக முன்னிலும் வீரியமாக முன்னெடுக்க எம் வாரிசுகள்
வந்துவிட்டனர் என்கிற முழு மனநிறைவோடு வாழ்த்துகிறேன்.
கைவிடப்பட்ட காஷ்மீரும்
பறிக்கப்பட்ட பாலஸ்தீனமும்
[ கைகோர்த்திருக்கும்
இந்திய – இஸ்திரேலிய புதுக்கூட்டணி]
ஆசிரியர்
: ஆசாத் எஸ்ஸா
,தமிழில் : இ.பா.சிந்தன்,
வெளியீடு
: எதிர் வெளியீடு
,தொடர்புக்கு : 04259 226012 / 9942511302 ,
Email
: ethirveliyeedu@gmail.com பக்கங்கள் : 296 , விலை : ரூ.399 /
சு.பொ.அகத்தியலிங்கம்.
20/01/2024.