புனைவுகளால் புதைக்க முடியாத உண்மைகள்

Posted by அகத்தீ Labels:

 





புனைவுகளால் புதைக்க முடியாத உண்மைகள்

 

கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எதிராகவும் ஆட்சிகளுக்கு எதிராகவும் உலகெங்கும் புனையப்பட்ட கதைகள் நிறைய உண்டு . நான் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள் குறிப்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி [மார்க்சிஸ்டுகள் ]க்குள் வந்த ஆரம்ப நாட்களில் கட்சியின் மீது வீசப்பட்ட குற்றச்சாட்டு களையும் அவதூறுகளையும்  கண்டு முதலில் அதிர்ச்சி அடைந்தேன் . அப்போது இப்படிப்பட்ட நூல்களைப் படிக்காதே என சில தலைவர்கள் சொன்னார்கள் .

 

தோழர் து.ஜானகிராமனும் ,உ.ரா.வரதராஜனும் எதை வேண்டுமானாலும் படி . விவாதிப்போம் என வாசல் திறந்தனர் . விலங்குப் பண்ணை போன்ற நாவல்கள் தொடங்கி நிறைய கம்யூனிச எதிர்ப்பு நூல்களை வாசித்தேன் . முதலில் கொஞ்சம் அது சொல்வது சரியாக இருக்கும் என நம்பினேன் . படிக்க படிக்க அவற்றின் நம்பகத்தன்மையை என் மூளையே கேள்வி கேட்கத் துவங்கியது . நான் எப்போதும் கம்யூனிச நூல்களை மட்டுமல்ல ; எதிர்ப்பு நூல்களையும் வாசிக்கத் தவறுவதில்லை . ஜெயமோகனின் ”பின் தொடரும் நிழலின் கதைகள்”எனும் கம்யூனிச எதிர்ப்பு நாவலை முழுதாகப் படித்து விமர்சனமும் எழுதினேன் . நான் எங்கெங்கோ படித்த கம்யூனிச எதிர்ப்பு நாவல்களின் கலவையாக ஜெயமோகன் சாமர்த்தியமாக காப்பி அடித்து உள்ளூர் சாயம் பூசியிருப்பதையும் கண்டேன்.

 

சரி ! மரிச்ஜாப்பிக்கு வருவோம் .லயோலா கல்லூரியில் நடந்த ஓர் உரையாடலில் கிறுஸ்துதாஸ் காந்தி மூலம் முதலில் கேள்விப்பட்டதும் அதிர்ந்தேன் . தோழர் ஹன்னன் முல்லாவிடம் விவரம் கேட்டேன் .அவர் விளக்கம் சொன்னார் . மேலும் தேடினேன் .வீ.பா.கணேஷனிடம் பேசினேன் . அவரும் சில செய்திகளைச் சொன்னார் . புனிதப் பாண்டியரும் அதிதீவிர புனித புரட்சியாளர்களும் தொடர்ந்து பேசியவற்றை வாசித்தேன். நான் முன்பத்தியில் குறிப்பிட்ட புனைவுகள் புளுகுகள் நினைவுக்கு வந்தன , மேலும் என்னுள்  பெருங்கேள்வி எழுந்தது .

 

’விமோச்சன சமரம்’ நடத்தி பொய்களை ஊர்வலம் விட்டு கேரளாவில் தோழர் இ எம் எஸ் ஆட்சியைக் கவிழ்த்த காங்கிரஸ் கட்சி , ஜோதிபாசு ஆட்சியில் மின்வெட்டை சாக்காக்கி உஷா உதுப்பை பாடவிட்டு பிரச்சனையை ஊதி பெரிதாக்கிய ஊடகங்கள் , மேற்கு வங்கத்தில் முப்பதாயிரம் பேரைக் கொன்று ஒரு தீவில் புதைத்தால் அதனை ஆளும் வர்க்கம் வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்குமா ? இந்தியா முழுவதும் பற்றி எரியும் பிரச்சனை ஆக்கி இருக்காதா ? கம்யூனிச எதிர்ப்பில் உயிர் வாழும் ஊடகங்கள் மவுனம் காக்குமா ? ஏதோ ஈரைப் பேனாக்கி ,பேனை பெருமாளாக்குகிறார்கள் என்று யூகித்தேன் .என் யூகம் சரியென இந்நூல் காத்திரமாக நிறுவி இருக்கிறது .

 

முதலில் நாம சூத்திரர்கள் யார் , தேசப் பிரிவினையின் போது வந்து குவிந்த அகதிகள் நிலமை என்ன , அதிலும் மேற்கு இந்தியாவிலும் கிழக்கு இந்தியாவிலும் ஒரே அணுகுமுறையா ; போன்ற கேள்விகள் முக்கியமானவை .

 

நாம சூத்திரர்கள் என்பவர்கள் சண்டாளர்கள் என அழைக்கப்பட்ட தலித் சமூகப் பிரிவிலிருந்து தங்களைத் தாங்களே மேல்நிலையாக்கம் செய்துகொண்டவர்கள் . 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டில் மத்வரின் துவைத கோட்பாட்டை பின்பற்றி அரிச்சந்திரதாகூர் எனும் மகானைப் பின் தொடர்ந்து  தங்களை நாமசூத்திரா என அழைத்து தனி வைணவ பிரிவாக நிறுவிக் கொண்டவர்கள். இந்து மதத்தின் இதர பிரிவுகளில் இருந்து ஒதுங்கி நின்றனர் .விவசாயம் ,மீன்பிடித்தல் ,படகோட்டுதல் இவர்கள் தொழில் .கிழக்கு பாகிஸ்தானை யொட்டி குவியலாக வாழ்ந்தனர் . விடுதலைப் போரில் பிரிட்டிஷாரை ஆதரித்தனர் . கிழக்கு பாகிஸ்தானில் அவர்கள் ஆட்சியாளர் பக்கம் நின்ற போதும் சமூக இழிவும் பொருளாதார நசிவும் துரத்தியதால் மேற்கு வங்கம் நோக்கி அகதிகளாக இடம் பெயர்ந்தனர் . மேலும் அறிய , புலம் வெளியிட்ட அப்பணசாமி மொழியாக்கத்தில் சேகர் பந்தோபாத்யாயா எழுதிய  “நாமசூத்திரர்கள் இயக்கம்” எனும் சிறிய நூலை வாய்ப்பிருந்தால் வாசிக்கவும்.

 

தேசப் பிரிவினையின் போது பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் நோக்கி வந்த அகதிகளுக்கு ஒன்றிய அரசு  பெருமளவு நிதி ஒதுக்கி  எல்லா உதவிகளும் செய்து வாழ்வுரிமை அளித்தது .ஆனால் கிழக்கு பாகிஸ்தானில் இருந்து மேற்கு வங்கம் மற்றும் அண்டை மாநிலங்கள் நோக்கி வந்தவர்களை சரியாக கையாளாமல் போதிய நிதியும் ஒதுக்காமல்  அலட்சியப் படுத்தியது . அதன் வலியும் ரணமும் இன்னும் கிழக்கு இந்தியாவில் உறுத்திக் கொண்டே இருக்கிறது . மரிச்ஜாப்பியும் அதன் ஒரு பகுதியே . இலங்கை ,பர்மா தமிழ் அகதிகளுக்கு இங்கும் அதே நிலை என்பதைச் சொல்லவும் வேண்டுமோ ?ஒன்றிய அரசு திட்டமிட்ட குடியுரிமைச் சட்டத்தில் இலங்கைத் தமிழர்கள் ஒதுக்கப்பட்டதை மறுக்க முடியுமா ?

 

நாம சூத்திரர் என்ற தலித் சாதியினருக்கு எதிரான சாதிய ஒடுக்குமுறை அல்ல மரிச்ஜாப்பி ; அது முழுக்க முழுக்க அகதிகள் வாழ்வுரிமை பிரச்சனை . அவர்கள் தண்டகாருணயத்தில் வாழ ஒன்றிய அரசு ஏற்பாடு செய்தது .அங்கு அடிப்படை வசதிகள் இன்மை பெரும் பிரச்சனையே . அதனை முன்நிறுத்தி தீர்வு நோக்கி போராடியவர்கள் இடதுசாரிகளே ! [ விபரம் நூலில் ]செவிமடுக்க மறுத்தது ஒன்றிய ஆட்சியாளர்களே ! அகதிகளின் ஒரு பிரிவினரை சில அதிதீவிரவாதிகள் தூண்டி விட்டு சுந்தரவனம் எனும் மேற்கு வங்க அலையாட்டிக் காடுகளில் , குடியிருப்பு வசதி வாய்ப்பற்ற தீவில் , தடுக்கப்பட்ட வனப்பகுதியில் மரிச்ஜாப்பி எனும் தீவில் குடியேற்றி தனித்துவைக்க முயன்றனர் .பிரச்சனையின் மையம் இதுவே .

 

 “அங்கு பிரச்சனையே இல்லை , எல்லாம் கட்டுக்கதை” என மொத்தமாக படுதா போட்டு மூடுவதல்ல இந்நூல் . மாறாக ஒவ்வொரு படியாக அங்கு ஏற்பட்ட பிரச்சனை ,அதனை தீர்க்க இடதுசாரி அரசு ஜோதிபாசு அரசு நிதானமாக மேற்கொண்ட முயற்சிகள் , ஓன்றிய ஆட்சியும் ஜனதாதளமும் காங்கிரஸூம் ஆடிய இரட்டை வேடம் ,சில தன்னார்வ அமைப்புகள் உள்நோக்கோடு காய்நகர்த்தியது என அனைத்தும் இந்நூலில் சொல்லப்பட்டுள்ளது . புனைவுகளால் புதைக்க முடியாத உண்மையை இந்நூல் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது .

 

துப்பாக்கி சூட்டில் இறந்தவர் எண்ணிக்கையை 2 ,6 ,12 ,38 ,மூவாயிரம் ,பத்தாயிரம் ,முப்பதாயிரம் என கற்னையாய் ஆதரமின்றி ஊதி ஊதிப் பெருக்கிய கதையை இந்நூல் நன்கு தோலுரிக்கிறது . அவதூறு எழுத ஆதாரம் தேவை இல்லை  வெறும் கற்பனை வளம் போதும் என்பதே கம்யூனிச எதிர்ப்பாளர்கள் வழிமுறை . புலிகள் மனித உண்ணியாக மாறவே மரிச்ஜாப்பிதான் காரணம் என்று சொல்லும் அளவுக்கு அவர்களின் கற்பனை நீண்டது .

 

சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் தண்டகாருண்யத்தில் அகதிகளாக இருந்தனர் . அதில் கால்பகுதியினர் கூட தீவிரவாதிகள் சொல்கேட்டு மரிச்ஜாப்பி செல்லவில்லை என்பதே உண்மை .சென்றவர்களும் அது தாங்கள் வாழ ஏற்ற இடமில்லை என விரைவில் தெளிந்தனர் . அருகிலுள்ள ஊர்களில் வாழும் தம் சொந்த சாதியினரை நம்பியே சென்றனர் .அதுவும் பெரிதும் கைகொடுக்கவில்லை . சமூக விரோத செயல்கள் மூலம் சிலர் பணம் பண்ண முயன்றனர் .பெரும்பாலோர் இதில் வெறுப்புற்றனர் . மீண்டும் தண்டகாருண்யம் சென்றனர் . போலீஸ் எங்கேயும் எப்போதும் அடக்குமுறைக் கருவிதான் . ஆயினும் ஜோதிபாசு ஆட்சி அவர்களின் கைகளைக் கட்டிப்போட்டு அகதிகளை பரிவுடன் அணுகி உண்மையை உரைக்க முயன்றதை இந்நூல் சொல்கிறது .

 

ஜலாய்சு என்பவர் தன் கட்டுரையில் மரிச்ஜாப்பியில் பள்ளிகள் , சுகாதார நிறுவனங்கள் என ஏற்பட்ட வளர்ச்சியை அங்கு குடியேறியவர்கள் செய்ததாக எழுதினார் .நேரடி சாட்சியான  கமலா பாசு அதற்கு நேர் எதிராக எழுதி உள்ளார் . மரிச்ஜாப்பி நேரடி அனுபவம் பெற்றவர் அல்லாதவர் இருவருமே கற்பனையையே விரித்திருக்கின்றனர் . நோக்கம் கம்யூனிச எதிர்ப்பு ஒன்றே .

 

மரிச்ஜாப்பி பற்றி ஊளையிட்டோர் திரும்பிச் சென்ற அகதிகள் நிலை என்ன ஆனது என சொன்னார்களா ? கவலைப்பட்டார்களா ? அவர்களின் கண்ணீர் நாடகம் அகதிகளுக்காக அல்ல ; மாறாக கம்யூனிச எதிர்ப்பு அரசியலுக்காகவே என்பதை இந்நூல் அழுத்தமாக பதிவு செய்கிறது . முக்கியமாக மரிச்ஜாப்பி பற்றி எதிர்மறையாய் எழுதிய கட்டுரை விவரங்களை குறிப்பிட்டே இந்நூல் எழுதுகிறது ஏனெனில் உண்மையைச் சொல்ல முக்காடு தேவை இல்லை அல்லவா ?

 

வழக்கமாக நூல் அறிமுகத்திலிருந்து மேற்கோள் தருவேன் . இங்கு தரவில்லை .சாறு மட்டுமே பிழிந்துள்ளேன் காரணம் ஒற்றை மேற்கோளை வைத்துக் கொண்டு கயிறு திரிப்போர் சூழ்ந்துள்ள உலகில் உண்மையை உள்ளபடி அறிய முழுதாய் படிக்கத் தூண்டுவதுதான். நூல் நெடுக வரிசைப்படுத்தப்பட்டுள்ள சம்பவங்களின் பின்புலமும் நோக்கமும் சரியாக உள்வாங்கப்பட நூலை முழுதாய் வாசியுங்கள் .

 

இந்நூலை எழுதிய ஹரிலால் நாத் அவர்களுக்கும் ,நன்கு மொழியாக்கம் செய்த ஞா.சத்தீஸ்வரன் அவர்களுக்கும் , முன்முயற்சி எடுத்த  தமிழ் மார்க்ஸ் குழுவுக்கும் , உண்மையே உன் விலை என்ன எனக் கேள்வி எழுப்பும் வீ.பா.கணேஷன் அவர்களுக்கும் என் பாராட்டுகள் .

 

மரிச்ஜாப்பி : உண்மையில்  என்ன நடந்தது ?

ஆசிரியர் : ஹரிலால் நாத் , தமிழில் : ஞா. சத்தீஸ்வரன் ,

பாரதி புத்தகாலயம் , தொடர்புக்கு : 044 24332924 / 8778073949

பக்கங்கள் : 328 , விலை : ரூ.330/

 

 

சு.பொ.அகத்தியலிங்கம் .

26/01/2024.

 

 

 


0 comments :

Post a Comment