பழங்கறியும் கட்லெட்டும்

Posted by அகத்தீ Labels:

 

பழங்கறியும் கட்லெட்டும்

 

நான் சிறுவனாக இருந்த போது பொங்கலன்றும் மாட்டுப்பொங்கலனறும் வீட்டில் தடபுடல்தான். சர்க்கரைப் பொங்கல்,பொங்கல்,வடை , கரும்பு ,பழங்கள் ,கற்கண்டு, பனங்கிழங்கு என நாங்கள் மூழ்கிவிடுவோம் . சோறு ,காய்கறிக்கூட்டு ,அவியல் ,பச்சடி ,பொரியல் ,சாம்பார்.ரசம் எல்லாம் மீந்துவிடும் . எல்லாம் நாஞ்சில் நாட்டு பக்குவம்.

 

மறுநாள் காணும் பொங்கலன்று , மீதமான அனைத்தையும் போட்டு சுண்டவைத்து தருவார்கள் .அதனை பழங்கறி அல்லது சுண்டக்கறி என்போம். பழைய சாதத்தில் கட்டித் தயிர்விட்டு பிசைந்து பழங்கறி சேர்த்து அம்மாவோ /ஆச்சியோ உருட்டித் தரும் போது சுற்றி இருந்து உண்ணும் எங்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான் . ஆச்சி எனில் கூடவே கதையும் கிடைக்கும். அதன் ருசியே தனி . வழக்கத்தைவிட அதிக உருண்டைகள் உள்ளே சென்றுவிடும் அந்த ருசி இனி எந்த ஜென்மத்திலும் கிடைக்காது .

 

[ தீபாவளியின் போதும் வேறு  பண்டிகைகளின் போதும் இதுபோல் நடக்கும்]

 

சரி ! வெறொன்றை பார்ப்போம். நான் ஐடிஐ [சிடிஐ]படிக்கிற காலம் .நான் ,உத்தண்டராமன் ,ஜெயராஜ் ,மிலான், சைதை நண்பர் சிவராஜ் எல்லோருக்கும் கட்லெட்டை எப்படியாவது ஒரு நாள் ருசி பார்த்துவிட வேண்டும் என்கிற ஆவல் . அதற்கு ஒரு திட்டம் போட்டோம். கிட்டத்தட்ட ஐந்தாண்டு திட்டம் மாதிரிதான் .காசு வேண்டுமே !

 

ஒரு நாள் எல்லோரும் சைதாப்பேட்டையில் இருந்து நடந்து தி.நகர் போனோம். அங்கு ஒரு ஹோட்டலில் [சரஸ்வதி பவன் நின நினைவு ] நுழைந்தோம் . கட்லெட் விலைக் கேட்டு உறுதி செய்துகொண்டோம் .ஆளுக்கொரு கட்லெட் சாப்பிட காசு இருந்தது . கட்லெட் விலை அப்போது ஆறு காசு [ஒரு அணா] என நினைவு. ஐந்து கட்லெட் வாங்கி ஆளுக்கு ஒன்றாய் ஐவரும் சாப்பிட்டோம் .டீ /காபி குடிக்க காசு கிடையாது .தண்ணீர் குடித்தோம்.

 

 “ நம்ம வீட்ல பழங்கறி செய்வோம்ல அதுமாதிரி ஹோட்ல மிச்சம் வர்றத எல்லாம் சேர்த்து செய்தால் அது கட்லெட்.. ஆனாலும் நம்ம பழங்கறியை அடிச்சிக்க முடியாது ” என உத்தண்டராமன் ஜோக் அடிக்க . ஆமாம் போட்டு சிரித்தோம் . எங்க ஞானமும் அப்போது அம்புடுத்தான். அப்புறம் ரொம்ப காலம் கட்லெட் பக்கம் நாங்க திரும்பிப் பார்க்கவே இல்லை.

 

பின்னர்  கட்லெட் சாப்பிட வாய்ப்புகள்  அமைந்த போதும் ; என்னை அது பெரிதாய் ஈர்க்கவே இல்லை . ஏனோ தெரியவில்லை . ஆயின் என்றோ சாப்பிட்ட பழங்கறி சுவை இன்னும் நாக்கில் ஒட்டிக்கொண்டிருக்கிறதே என்ன செய்ய ?

 

சுபொஅ.

16/01/2024.

0 comments :

Post a Comment