சும்மா கிடந்த சொல்லை எடுத்து [ 13 ]

Posted by அகத்தீ Labels:
சும்மா கிடந்த சொல்லை எடுத்து [ 13 ]


அன்புப் பாலம் பழுதாய்க் கிடக்குது..


சு.பொ.அகத்தியலிங்கம். " ஊரை எழுதுகிறாய் / பேரை எழுதுகிறாய் / எப்போது / உண்மையில் நீ யாரென்று எழுதப்போகிறாய் ? ” .. “ மதத்தைச் சொல்லுகிறாய் / சாதியைச் சொல்லுகிறாய் / எப்போது / மனிதன் என்று நீ / சொல்லப் போகிறாய் ? ” இவ்வாறு கேள்வி எழுப்புவார் ‘ மனிதனைத் தேடி ’ என்ற கவிதையில் மு.மேத்தா .சாதி , மத , பிரிவினை பகைமையால் மனிதம் எங்கும் பொசுங்கி நாறுகிறது .  மனிதம் நேசிப்போர் , விடியலை யோசிப்போர் அனைவரும் ஒற்றுமை கீதத்தை மீண்டும் மீண்டும் பாடுகின்றனர் . விடுதலைப் போராட்டத்திலும் இதன் குரல் வலுவாகத் தேவைப் பட்டது . விடியலுக்கானப் போராட்டத்திலும் இதன் தேவை மிக அதிகம் . குறைந்த பட்ச மனிதாபிமானமுள்ள எந்தக் கவிஞனும் ஒற்றுமைப் பாடலை இசைக்காது இருக்கமாட்டான் . இயல்பிலேயே மானுடவிடுதலைக்காக பாடும் மக்கள் கவிஞன் பட்டுக்கோட்டை பாடாதிருப்பானோ !“ கத்தும் பறவை கனிமரத்தில் வந்து / ஒற்றுமை காட்டிடுதே - தலைப் / பித்தம் பிடித்தொரு கூட்டம் தனித்தனி / பேதம் வளர்த்திடுதே ” [ ஜனசக்தி 15 - 8 - 1958 ] என மனம் நொந்து புலம்பியவர் . இதற்கு முந்தைய ஆண்டில் ஜனசக்தி சுதந்திர மலரிம் எழுதிய  48 வரி நெடுங்கவிதையில் அழுத்தமாகக் கேட்பார் ;

“...................................................... /

சுதந்திரத்தைப் பெற்ற முதல் ஓர் நாளேனும் / துளியும் மகிழ்ந்ததுண்டா ? - உந்தன் மக்கள் / உகந்துமன ஒற்றுமையாய் வாழ்ந்ததுண்டா ? / உன்னைத்தான் மதித்ததுண்டா ? உயர்ந்ததுண்டா ? / எங்கோர் பகுதியில் ஒன்றுபட்டார் / எனிலதனை ஆதரிக்கும் முறைதானுண்டா ? / பெருவெயிலிலால் வண்டல் நிலம் வெடிப்பதைப் போல் / பிளவுபட்டு பிளவுபட்டுச் சுயநலத்தால் / வருமான வேட்டையிலே புகுவதின்றி / மனதிலேதும் விசாலமுண்டா ? பொது நோக்குண்டா ? ” என கொந்தளித்துப் பாடிவிட்டு  இதுவரை நீ மகிழ்திருப்பாய் என்ற எண்ணம் என்போன்றோர்க்கில்லை இனியேனும் அந்நாள் வரட்டும் எனக் கூறுவார் ; அவர் பாடிச்சென்று 65 ஆண்டுகளாகியும் அதே ஏக்கம் தொலையவில்லை என்பது மட்டுமல்ல அதிகரிக்கவும் செய்திருக்கிறதே !இயற்கையோடு இயைந்து ஒறுமையை வலியுறுத்தியவர் பட்டுக்கோட்டை . “ ஓங்கி வளரும் மூங்கில் மரம் / ஒண்ணையொண்ணு புடிச்சிருக்கு / ஒழுங்கா குருத்துவிட்டு / கெளை கெளையா வெடிசிருக்கு , / ஒட்டாம ஒதுங்கி நின்னா ஒயர முடியுமா ? – எதிலும் / ஒற்றுமை கலஞ்சுதுன்னா வளர முடியுமா ? / ஒ..ஓ..ஓ.. ” விவசாயியின் கூர்த்த பார்வையும் ஒற்றுமை பெருவிருப்பமும் இதில் ஒன்றாய் கலந்துள்ளது .

கன்னியின் சபதம்  [ 1958 ] திரைப்படத்தில்  பள்ளம் மேடுள்ள பாதையிலே பார்த்து நடக்கணும் என மாடுகளை விழித்துப் பாடுவார்  . அதில் விவசாயியின் அவலம் இருக்கும் அதோடு ஒற்றுமையின் அவசியத்தை இயற்கையிலிருந்து சாறெடுத்து நெஞ்சில் பிழிவார் , “ உச்சி மலையில் ஊறும் அருவிகள் / ஒரே வழியில் கலக்குது ; / ஒற்றுமையில்லா மனித குலம் /  உயர்வும் தாழ்வும் வளர்க்குது .../ பச்சைக் கொடிகள் வேலியிலே / பாகுபாடின்றித் தழைக்குது - அதைப் / பார்த்திருந்தும் சில பத்தாம் பசலிகள் / பக்கம் ஒண்ணாய் பறக்குது - அன்புப் / பாலம் பழுதாய்க் கிடக்குது. ” இன்றோ பத்தாம் பசலிகள் கை ஓங்கி இருக்கும் நேரம் இப்பாடலை இன்னும் அழுத்தமாய் எல்லோர் இதயத்திலும் கொண்டு சேர்க்க வேண்டும் . “ உள்ளத்தில் கள்ளமில்லாமல் / ஊருக்குள்ளே பல பேதங்கொள்ளாமல் ” ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ’[1960] என முழங்கினார் ; மிகத் தெளிவான நோக்கு அவரின் தனிச் சிறப்பு . திராவிட நாடு பிரிவினை கோஷம் உச்சத்திலிருந்த காலத்தில் , “ மனுசனைப் பார்த்திட்டு உன்னையும் பாத்தா – மாற்ற மில்லேடா ராஜா - எம் / மனசிலே பட்டதை வெளியிலே சொல்றேன் / வந்ததுவரட்டும் போடா ” ன்னு  “ கண் திறந்தது ” [ 1959 ] திரைப்படத்தில் நெஞ்சுநிமிர்த்தி சொல்லுவார் ; “ எழுதிப் படிச்சு அறியாதவன் / உழுது ஒளச்சு சோறு போடுறான்../ எல்லாம் படிச்சவன் ஏதேதோ பேசி / நல்லா நாட்டைக் கூறுபோடுறான் – இவன் / சோறு போடுறான் – அவன் / கூறு போடுறான் ” நிகழ்கால அரசியலையும் சமூக அக்கறையையும் குழைத்து பாடுகிற சாதுரியமும் துணிச்சலும் நம் பட்டுக்கோட்டைக்கு கைவந்த கலையன்றோ ?திண்ணைப்பேச்சு வீரரிடம் கண்ணாயிருக்கணும் ஒண்ணாயிருக்கணும் என  ‘பதிபத்தி’ [ 1958]யில் குரல் கொடுத்தவர் அதில் தொடர்ந்து ஒரு செய்தி சொல்லுவார் ; அதுவும் திராவிட இயக்கம் கடவுள் மறுப்பை முன்னுறித்திய காலத்தில் சொல்லுவார், “ கடவுள் இருப்பதும் இல்லை என்பதும் / கவைக்குதவாத வெறும் பேச்சு / கஞ்சிக் கில்லாதவர் கவலை நீங்கவே / கருத வேண்டியதை மறந்தாச்சு - பழங் / கதைகளைப் பேசி காலம் வீணாச்சு ..” . இது காலத்தின் குரலாய் இன்றும் சேதி சொல்லி நிற்கிறது . இறுதிவரியில் நெற்றியடியாய் , “ உண்டாலும் காய்ந்தாலும் ஒன்றாகணும் ”என்பார் .மக்கள் ஒற்றுமையை , தேசிய ஒருமைப்பாட்டை உயர்த்திப் பிடிப்பதில் தமிழ்திரையுலகம் என்றைக்கும் சளைத்ததில்லை .  “ ஒன்றே குலம் என்று ஓதுவோம் ஒருவனே தெய்வம் என்று போற்றுவோம் ” என மக்களிடம் ஒற்றுமையை பேசியது தமிழ் திரைப்படப்பாடல்கள் .  “ ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே , / உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே !/ வெள்ளை மனிதன் வேர்வையும் கருப்பு மனிதன் கண்ணீரும் / உப்பு நீரின் வடிவிலே ஒன்று சேரும் கடலிலே !” என கண்ணதாசன் பாடல்  “ பணக்காரக் குடும்பம் ” பட்த்தில் வலுவாகப் பேசும் . இப்படி ஒற்றுமை விதையை ஆழமாக விதைத்தது தமிழ் திரப்படப்பாடல்கள் எனில் மிகை அல்ல . இவ்வாறு தொடரும் சங்கிலியின் ஒரு கண்ணியே பட்டுக்கோட்டை ! ஆயின் அவருக்கு இருந்த அரசியல் தெளிவும் ; வர்க்க சமூகத்தில் உழைக்கும் வர்க்க ஒற்றுமையே அதிமுக்கியம் என்கிற புரிதலும் இவர் பாடல் நெடுக நீக்கமற நிறைந்திருந்தது

. “ கிளைவெடிக்கும் பயிர்களுக்கு / உயர்வளிக்கும் கூட்டம்” ஒண்ணாவந்து சேரணும்னு  “அரசிளங்குமரியில்”  [ 1957 ] கோடு போடுவார் ; “ நன்றி கெட்ட மனிதருக்கு / அஞ்சி நிற்க மாட்டோம் / நாவினிக்க பொய்யுரைக்கும் / பேரை நம்ப மாட்டோம் – என்று  / கூறுவோமடா – ஒன்று / சேருவோமடா / வீறுகொண்டு சிங்கம்போல் / முன்னேறுவோமடா “ என வர்க்க ஒற்றுமைக்கு கட்டியம் கூறியவர் . இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் .

இன்று நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது “ கண்ணீரில் கதறி அழுகிறாள் ; / தள்ளாடும் அன்னை பாரதம் / பொல்லாத சாதி மதங்களால் / உண்டான மேனி ரணங்களால் ..” என இந்திய தேசம் காயம் பட்டிருப்தாய் மறைந்த பாடலாசிரியர் இ.மு.வெற்றிவளவன் கூறியது நிஜமல்லவா ? “ ஈசன் , யேசு , நபிகளால் – நம் / பாசவலைக ளறுவதா ? / ஓது மந்திர மொழிகளால் – நம் / ஒருமைப்பாடு சிதைவதா ?..” என அவர் தொடர்ந்து கேட்டது  காலத்தின் குரலாய் இன்றும் எம் காதுகளில் எதிரொலித்துக்கொண்டிருக்கிறதே !

 “ ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்
பறவைகளோடு எல்லை கடப்பேன்
பெயர் தெரியாத கல்லையும் மண்ணையும்
எனக்குத் தெரிந்த சொல்லால் விளிப்பேன்
ஒவ்வொரு புல்லையும்...

நீளும் கைகளில் தோழமை தொடரும்
நீளாத கையிலும் நெஞ்சம் படரும்
எனக்கு வேண்டும் உலகம் ஓர் கடலாய்
உலகுக்கு வேண்டும் நானும் ஓர் துளியாய்
ஒவ்வொரு புல்லையும்...

கூவும் குயிலும் கரையும் காகமும்
விரியும் எனது கிளைகளில் அடையும்
போதியின் நிழலும் சிலுவையும் பிறையும்
பொங்கும் சமத்துவப் புனலில் கரையும்!
ஒவ்வொரு புல்லையும்...

எந்த மூலையில் விசும்பல் என்றாலும்
என் செவிகளிலே எதிரொலி கேட்கும்
கூண்டில் மோதும் சிறகுகளோடு
எனது சிறகிலும் குருதியின் கோடு!
ஒவ்வொரு புல்லையும்...

சமயம் கடந்து மானுடம் கூடும்
சுவரில்லாத சமவெளி தோறும்
குறிகளில்லாத முகங்களில் விழிப்பேன்
மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன்!
ஒவ்வொரு புல்லையும்...”என இன்குலாப் கவிதையில் மானுடம் புன்னகைக்கிறது . ஒற்றுமையின் இலக்கு அதுவல்லவோ !சாதி பேதம் தூண்டிவிடப்படுகிற காலம் இது . . சாதி பேதம் கண்டு பட்டுக்கோட்டை நொந்ததும் அதற்கெதிராய் ஒன்றுபடத்தூண்டியதும் பேசவேண்டிய செய்திகள் . அதையும் பேசுவோம் .

நன்றி : தீக்கதிர் இலக்கியச் சோலை 28 ஜூலை 2014. 

ரஸ்தோகி... அமித்ஷா... சுப்பிரமணியன்சாமி...

Posted by அகத்தீ Labels:


ரஸ்தோகி... அமித்ஷா... சுப்பிரமணியன்சாமி...

சு.பொ.அகத்தியலிங்கம்

சென்ற பாஜக ஆட்சியில் முரளி மனோகர் ஜோஷி என்சிஇஆர்டி [NCERT] அமைப்பின் கல்வித் துறைப் பணி நியமனங்கள் செய்வதற்கான் குழுவில் கே.ஜி.ரஸ்தோகி என்பவரை நியமித்தார். இவரது சுய சரிதை 1998ல் வெளிவந்திருந்தது. இதை அவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்குச் சமர்ப்பணம் செய்திருந்தார். இந்நூலுக்கு முன்னுரை எழுதியிருந்தது அன்றைய ஆர்.எஸ்.எஸ் தலைவர் கே. சி.சுதர்சன். ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராக இருந்த காலத்தில் தான் வெடிகுண்டு முதலான ஆயுதங்களைப் பயன்படுத்தப் பயிற்சி எடுத்துக் கொண்டது பற்றியெல்லாம் அதில் விலாவாரியாக எழுதியிருப்பார்.

அந்தச் சுய சரிதையில் ஒரு சம்பவம்: புரண்கல்யாண் என்னும் இடத்தில் ரஸ்தோகி இருந்தபோது ஒரு வகுப்புக் கலவரம். ஒரு அழகிய முஸ்லிம் பெண்ணை நோக்கி ஒரு இந்துத்துவ வெறிக் கும்பல் ஓடி வருகிறது. அவர்களின் நோக்கம் பாலியல் வன்முறை. இதைக் கவனித்தார் ரஸ்தோகி.“எனக்கு ஒரு ‘ஐடியா’ வந்தது. தாக்கவந்தவர்களை மிரட்டினேன், திட்டினேன். பிறகு இந்தப் பிரச்சனைக்கெல்லாம் காரணமான அந்தப் பெண்ணைச் சுட்டுக் கொன்றேன். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். முதலில் எல்லோரும் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு அவரவர்கள் வேலையைப் பார்க்கப் போனார்கள்.” (ரஸ்தோகியின் சுய சரிதை, பக். 46)அ.மார்க்ஸ், எழுதிய ‘ஆட்சியில் இந்துத்துவம்‘, நூலில் இடம் பெற்றிருக்கும் செய்திகள் இவை .

தகுதியற்ற நியமனம்

இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கழகத்தின் (ICHR) தலைவராக பா.ஜ.க அரசின் கல்வி அமைச்சர் (அவரேதான், தன் கல்வித் தகுதி குறித்துத் தேர்தல் ஆணையத்துக்குக் கொடுத்த தகவலில் பொய் கூறினாரே அவர்தான்) ஸ்மிருதி ராணி ஒருவரை நியமித்துள்ளார். அவர் பெயர் எல்லப் பிரகத சுதர்ஷன் ராவ் (இப்படி ஒரு பெயரை நீங்கள் எங்காவது வரலாறு தொடர்பாகக் கேள்விப்பட்டது உண்டா?). தகுதியற்ற நபர் என வரலாற்றறிஞர் ரொமிலா தாப்பர் இன்று இந்த நியமனத்தைக் கண்டித்துள்ளார். பா.ஜ.க ஆட்சியில் இதெல்லாம் வியப்புக்குரிய ஒன்றல்ல. சென்ற முறை பி.ஆர்.குரோவர் என்று ஒரு ஆளை முரளி மனோகர் ஜோஷி இந்தப் பதவியில் நியமிக்கவில்லையா? பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் இருந்தது எனவும், 1992ல். பாபர்மசூதி (தானாக) விழுந்தது எனவும் புத்தகம் எழுதியதற்காக அவருக்கு இந்தப் பரிசு வழங்கப்பட்டது.

ஐ சி ஹெச்ஆர் [ICHR] அமைப்பின் தலைவராக பி.எல்.சோந்தி என்கிற நபர் அப்போது நியமிக்கப்பட்டார். அவருடைய தகுதி பாரதிய ஜனசங் கட்சி சார்பில் ஒருமுறை எம்.பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது மட்டுமே. இந்த நியமனங்கள் மட்டுமல்ல; ஏற்கனவே ICHRல் பணியில் இருந்த தகுதி பெற்ற வரலாற்றறிஞர்கள் 18 பேர்களைப் பணி நீக்கமும் செய்தார் ஜோஷி. சரி அந்தக் கதை கிடக்கட்டும். இப்ப இன்றைய கதைக்கு வருவோம். நம்ம இன்றைய தலைவர் எல்லப் பிரகத சுதர்ஷன் ராவ் “இந்திய சாதி அமைப்பு - ஒரு மறுபார்வை” என்றறொரு கட்டுரை எழுதியுள்ளார்.அதன் முத்தாய்ப்பான வரிகள்:

“The (caste) system was working well in ancient times and we do not find any complaint from any quarters against it. It is often misinterpreted as an exploitative social system for retaining economic and social status of certain vested interests of the ruling class”

இந்தியச் சாதி அமைப்பு மிகச் சிறப்பாகச் செயல்பட்டதாம். எந்தக் ‘கம்ப்ளெய்ன்ட்’டும் இல்லையாம். இது எப்டி இருக்கு? வரலாற்றறிஞர் டி.என்.ஜா இது குறித்து அடித்துள்ள கமென்ட்:”அவருக்குத் தெரியாது போல இருக்கு .அந்த ‘சிஸ்டம்’ இப்ப இருந்தா மோடி (போன்ற ஒரு பிற்படுத்தப்பட்ட சாதிக்காரர்) பிரதமர் ஆகியிருக்க முடியாதென” இந்த விவரங்களை முகநூலில் அ.மார்க்ஸ் சுட்டிக் காட்டி இருக்கிறார்.

அவுட்லுக்கில் வித்தியாசமான கட்டுரை ஒன்று படித்தேன். நான் புரிந்து கொண்டது இது. என்கிற குறிப்புடன் விபாவி என்பவர் ஹைதராபாத்திலிருந்து எமக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சல் வருமாறு
கறிக்கடை கூடாதாம்

”நாங்கள் 68 கறிக்கடைக்காரர்களை அடையாளம் கண்டு கொண்டோம்.அவர்கள் அனைவருக்கும் 5 லட்சத்திலிருந்து பத்து லட்சம் வரை பணம் கொடுக்க முயன்று வருகிறோம். அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் பலித்னாவில் (Palitana) இனிமேல் கறிவெட்ட மாட்டோம் என்ற உறுதிப்பத்திரத்தில் கையெழுத்து போட வேண்டியதுதான்” என்று சொல்கிறது அங்குள்ள ஜைன அடிப்படைவாத அமைப்பு.ஏனென்றால் பலித்னா ஜைனர்களின் புனிதஸ்தலம். 24 தீத்தங்கரர்கள் தரிசித்த மலை. சத்ருன்ஜேயா மலையில் மட்டும் 3000 ஜைன கோவில்களும், 27000 சிலைகளும் இருக்கின்றன. எங்கள் புனித நகரத்தில் ஏன் இப்படி உயிர்வதை செய்கிறீர்கள் என்பது அவர் வாதம்.

வெங்காயம், பூண்டையும் எதிர்த்தால்...

“அப்படியெல்லாம் சொல்லாதீர்கள். பலித்னா நகரம் எங்களுக்கும் சொந்தம். நாங்கள் 25 சதவிகிதம் இருக்கிறோம். எங்கள் உணவு பழக்கம் மாமிச உணவு உண்பது. நீங்கள் யார் எங்கள் உரிமையில் தலையிட”. இது பலித்னா நகரத்தில் வாழும் முஸ்லிம்களின் பதில்.கோவிலைச் சுற்றி 250 மீட்டரில் கறிவெட்டக்கூடாது, உண்ணக்கூடாது என்ற சட்டம் ஏற்கனவே இருக்கிறது. இந்த ஜைனர்கள் நகரத்தை தங்கள் வீடாக்கப் பார்க்கிறார்கள்.இது தவறான உதாரணம் ஆகிவிடும். இன்று பலித்னாவில் கறி சாப்பிடுவதை எதிர்க்கும் ஜைனர்கள் நாளை வெங்காயம், வெள்ளைப் பூண்டையும் எதிர்த்தார்கள் என்றால் அதையும் சாப்பிடக்கூடாதா? இது என்ன அநியாயம். இது சமூக ஆர்வலர்களின் குரல்.பலித்னா இருப்பது குஜாரத்தில். பாஜகவின் அமித் ஷா ஒரு ஜைனர்.

அதனால் பலித்னா ஜைனர்கள் அவர்கள் நினைத்ததை சாதித்துவிடுவார்கள் என்று வருத்தத்துடன் சொல்கிறார்கள் அங்குள்ள முஸ்லிம்கள்.குஜராத் சைவ மாநிலம் என்பது மாதிரியான தகவல்கள் திட்டமிட்டு கட்டமைக்கப்படுகின்றன. உண்மை அதுவல்ல. 68 சதவிகித, அதாவது எழுபது சதவிகித குஜராத் மக்கள் மாமிசம் உண்பவர்கள் தான் என்ற உண்மை எத்தனை பேருக்கு தெரியும் என்கிறார் இன்னொரு சமூக ஆர்வலர்.இதற்கு அவரால் முடிந்த ஒரு வழியைச் சொல்கிறார் எழுத்தாளர் ரேணுகா நாராயணன். இசைக்கலைஞர் ”உஸ்தாத் பதே குலாம் அலிகான்” சென்னை வந்தாராம். வந்தவர் எம்.எல் வசந்தகுமாரியின் வீட்டில்தான் தங்குவேன் என்று ஹோட்டலை மறுத்து எம்.எல்.வியின் வீட்டுக்கு வந்தாராம். எம்.எல் வசந்தகுமாரி சைவம்.

ஆனால் அலிகானோ மாமிச உணவில் ஈடுபாடு உடையவர். எம்.எல். வசந்தகுமாரியின் கணவர், சொன்ன யோசனைப்படி உஸ்தாத் பதே குலாம் அலிகான் மாடி போர்ஷனில் சாப்பிட்டுக் கொண்டாராம். சென்னையிலுள்ள பிரபல மிலிட்டிரி ஹோட்டலில் இருந்து அசைவ உணவு போகுமாம்.இதுமாதிரி பலித்னாவிலும் மக்கள் அட்ஜஸ்ட் செய்து போனால் நல்லது என்று சொல்கிறார் எழுத்தாளர்.

வயிற்றிலடிப்பது

இங்கே சில இந்து அமைப்புகளும் மதவெறியர்களும் கோவிலிருக்கும் ஊரில் கறிக்கடை வேண்டாம் ; கோவிலுக்கு போகும் முன்பும் பின்பும் அசைவ உணவு கூடாது என்கிறார்கள். கூடவே ஒரு நாளும் கோவிலுக்குப் போகாமல் இருக்கக் கூடாது என்றும் கூறுகிறார்கள். இதன் பொருள் என்ன? ஒரு நாளும் கறி, மீன் சாப்பிடக்கூடாது என்பதுதானே! இது உழைப்பாளிகள் வயிற்றிலடிக்கும் செயல் அல்லவா ? இதனைத் தொடர்ந்து நான் முகநூலிலிட்ட பின்னோட்டம்

“கோவிலருகே இறைச்சிக்கடை கூடாது
கோவிலுக்கு போகும்போது இறைச்சி வேண்டாம்
மனம் உருக வேண்டினார் உபதேசி
கண்ணப்பரின் சிவனைஎப்போது நாடுகடத்தினீர் ?
ஏழை பக்தனின் எளிய கேள்வி...”

அது இருக்கட்டும் இந்த அமித் ஷா மீது இப்படி நம்பிக்கை வைப்பது இவர் மட்டுமா ? இல்லை. பஞ்சாபில் சீக்கியர்கள் மனமுவந்து முஸ்லிம்களுக்கு இப்தார் விருந்து கொடுக்கிற படத்தை தன் டுவிட்டர் பக்கத்தில் பதிந்துள்ள சுப்பிரமணியன் சாமி அதில் குறிப்பிட்டிருக்கிறார் அமித் ஷாவை பஞ்சாபுக்கு அனுப்பி இவனுகளை திருத்த வேண்டும். என்கவுண்ட்டர் புகழ் - கலவர புகழ் அமித் ஷா என்ன பணி செய்யப் போகிறார் என்பதற்கு இது அறிகுறி. அமித் ஷா சைவ உணவு பழக்கம் உள்ளவர் .

சைவ உணவு பழக்கம் உள்ளவர்கள் மென்மையானவர்கள், அகிம்சாவாதிகள் என கூறுவோர் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? கொலைவெறிக்கு காரணம் உணவு அல்ல; வெறிவுணர்வு என்பதறிக! சமஸ்கிருதத்தை எல்லாமொழிக்கும் தாயென்பதும்இந்தியை திணிப்பதும் இன்னொரு தாக்குதல் . உணவு , மொழி , வரலாறு அனைத்திலும் ஒற் றைப் பண்பாட்டு ஆதிக்க திணிப்பு-பிராமணிய ஆதிக்கப் பண்பாட்டுத் திணிப்பு நடந்தேறிக் கொண்டிருக்கிறது நாம் எதிர்கொள்ளும் சவால் கொஞ்சமல்ல என்பதுணர்க !

தீக்கதிர் 21 ஜூலை 2014

சும்மா கிடந்த சொல்லை எடுத்து - 12

Posted by அகத்தீ Labels:


சும்மா கிடந்த சொல்லை எடுத்து - 12

எங்கும் தொழிலாளர் கூட்டம்
பங்காளி போன்றோரைக் காப்பார்


சு.பொ.அகத்தியலிங்கம்.


“உழவன் கழனியில் விதையாவேன் / உழுகின்ற ஏருக்குக் கொழுவாவேன் / அவனது சோற்றில் ஒரு பருக்கையாய் / ஆவதற்கே நான் ஆளாவேன்”. இவ்வாறு ஆசைப்பட்டார் கவிஞர் நவகவி. ஒவ் வொரு கவிஞரும் இப்படி ஆசைப்படுவ தெந்நாள்? “உலகம் பிறந்த கதை தெரிந் தவரே / உழவன் பிறந்த கதை தெரியுமா? கதையில் உயர்ந்த கதை என்பதனால் / கவிதையில் பாடவந்தேன் விவரமா?” என்றும் அவர் கூறுவார்.

விவசாயியின் வாழ்வைப் பாடாத கவிஞனின் வாழ்நாள் பாழென்பேன்.மக்கள்தொகையில் விவசாயியே பெரும்பான்மை. ஆயினும் கலை இலக்கியத்தில் அவர்களுக்கு உரிய பங்கு இதுவரை வழங்கப்பட்டுள்ளதா? அண்மை யில் வைரமுத்துவின் “மூன்றாம் உலகப் போர்” நாவலையும் மேலாண்மை பொன்னுச்சாமியின் ‘உயிர் நிலம்’ நாவலையும் ஒப்பிட்டு விமர்சனம் எழுதிய போது விவசாய நாவல்களை தேடித்தேடி பட்டியலிட்டேன்.ஒரு டஜனைத் தாண்டு வதே பெரும்பாடாகிவிட்டது. விவசாயி குறித்த திரைப்படங்கள் எத்தனை பட்டியலிடுங்கள்.

“கடவுளென் னும் முதலாளி! கண்டெடுத்த தொழி லாளி! விவசாயி”பாடலில் விவசாயியின் வாழ்க்கை உள்ளபடி இருந்ததா? இது போல் சில பாடல்கள் நினைவிற்கு வரும்.

“மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி / வயக்காட்ட உழுதுபோடு சின்னக்கண்ணு” இந்தப் பாடலை இன்றைக்கும் விரும்பிக் கேட்காதவர் யார்? சொல் வீர்!இதனை பட்டுக்கோட்டை எழுதிய தாய் கருதுவோர் இன்றும் உண்டு; ஆனால் எழுதியவர் மருதகாசி.

பட்டுக்கோட்டை குறைந்த காலமே வாழ்ந்தாலும் ; மிகக்குறைவாகவே பாடல்கள் கவிதைகள் எழுதிய போதும் அதிலும் விவசாயிக்கு உரிய இடம் தந்தவர் .விவசாயியின் குரலை மிகச்ச ரியாக ஒலித்தவர். இவரெழுதிய “நண்டு செய்த தொண்டு” கவிதையை முன் அத்தியாயமொன்றில் பார்த்தோம்.

அரசிளங் குமரி ( 1957) படத்தில் “ஏற்ற முன்னா ஏற்றம் / இதிலேயிருக்கு முன்னேற்றம்” என் கிறபாடலில் விவசாயியின் பெருமையை; “ஓதுவார் தொழுவரெல்லாம் / உழுவார் தலைக்கடை யிலே.. உலகம் செழிப்ப தெல்லாம் / ஏர் நடக்கும் நடையிலே ..” என வள்ளுவன் குறளை இவர் மொழியில் சொல்வார்.

“ஏரோட்டும் ஏழை இதயம் குமுறி னால் / போராட்டமே எழுமே! புவியிலே/ போராட்டமே எழுமே” என்கிற பட்டுக் கோட்டைக் கவிதையை தன் கட்டுரை யில் மேற்கோள்காட்டுவார் தோழர் ஜீவா. “கதிராடும் கழனியிலே / சதிராடும் பெண்மணி” எனத் தொடங்கும் பாடலை “கண்ணின் மணிகள்” நாடகத்திற்காக எழுதினார்.அது காதல் பாடல் எனிலும் அதிலும் உழவர் வாழ்வைப் பேசுவார். அதில் இருவரும் சேர்ந்து பாடும் இறுதிவரிகளில், “உழவனும் ஓயாத / உழைப்பும் போல் நாமே / ஒன்றுபட்ட வாழ்க்கையினில் / என்றுமிருப்போம்” என்பார் .கல்யாணிக்கு கல்யாணம் (1959) திரைப்பட்த்தில் “தை பொறந்தா வழி பொறக்கும் / தரணியில் எல்லோருக்கும்” என்ற பாடலில் “பண்ணையிலே வேலை பார்க்கும் /பாட்டாளி குடியிருக் கும் / சின்னஞ்சிறு சேரியிலும் / அம்மா வீரம்மா இனி / தென்பாங்கு பாட்டு கேக் கும் / ஆமா மருதம்மா” என்பதுடன் நில்லாமல் இறுதியில் சொல்வார், “கஞ்சிப் பானை கவலை தீரக் / கலப்பைத் தொழிலை நம்பிடணும்”. எவ்வளவு பொருள் பொதிந்த வாக்கு! “பயிரை வளர்த்தால் பலனாகும் அது / உயிரைக்காக்கும் உணவாகும் / வெயிலே நமக் குத் துணையாகும் இந்த, வேர்வைகள் எல்லாம் விதையாகும்..” என்பார் ஆளுக்கொரு வீடு ( 1960) படத்தில். இதுபோல் இன்னும் சிலவற்றைச் சொல்ல இயலும்.

1958ல் வெளிவந்த “நாடோடி மன்னன்” திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் விவசாயிகள் தங்கள் தேசியகீதம் போல் இன்றும் கொண்டாடுவர்.

“சும்மாகிடந்த நிலத்தைக் கொத்தி / சோம்பலில்லாம ஏர் நடத்தி / கம்மாக்கரையை ஒசத்திக்கட்டிக் / கரும்புக் கொல்லை யில் வாய்க்கால் வெட்டிச் / சம்பாப் பயிரைப் பறிச்சு நட்டுத் / தகுந்த முறையில்தண்ணீர் விட்டு / நெல்லு வெளைஞ்சிருக்கு - வரப்பும் -உள்ள மறைஞ்சிருக்கு-அட / காடு வெளைஞ் சென்ன /மச்சான் - நமக்கு / கையும் காலுந்தானே / மிச்சம்?” - இக்கேள்வியில் ஆயிரம் காலத்து சோகம் இருக்கு. விவசாயத்தையும் விவசாயியையும் முழுமையாய் அறிந்த கவிஞரின் பார்வை பளிச் செனப் பாய்கிறது.

“இப்போ /காடு வெளையட்டும் பொண்ணே - நமக்கு / காலமிருக்குது பின்னே ..” எனக் கவிஞர் சொல்லும் போது அதில் விவசாயியின் பொறுமையும் நேர்மையும் தெறிக்கும். அந்தப் பாடலில் ஓரிடத்தில் பெண் கேட்பாள், “மாடா ஒழைச்சவன் வாழ்க் கையிலே - பசி / வந்திடக் காரணம் என்ன மச்சான்?” ; அதற்கு அவன் சொல்லும் பதில் “அவன் தேடிய செல்வங்கள் வேறே இடத்தில் சேர்வதினால் வரும் தொல்லையடி “அவன் சொல்லுகிற பதில் நமக்கு நாட்டு நடப்பை நச்சுன்னு புரியவைக்கும்.

சினிமாவுக்காக இதில் “வேறே இடம்” எனக் குறிப்பிட்டாலும் முதலில் “சீமான் வீட்டில்” என்றுதான் குறிப்பிட்டாராம். கவிதையில் அப்ப டித்தான் உள்ளது. தணிக்கைச் சிக்க லுக்காக மாற்றினாராம். மேலும் இப்பாடலின் இறுதியில் “நானே போடப் போறேன் சட்டம் - பொதுவில் நன்மைபுரிந்திடும் சட்டம்...” எனக் கதைக்காக வும் நாயகன் எம். ஜி. ஆர் அரசியலுக் காகவும் எழுதப்பட்டது. இவ்வளவு சம ரசத்துக்கு இடையிலும் திரைப்படத்தில் ஒலித்த விவசாயியின் குரலில் இதுவே உச்சம் .இதில் ஒரு உண்மை தெரியுமா?

இப் படம் வெளிவருவதற்கு இரண்டாண்டுக ளுக்கு முன்னால் 18-8-1956ல் கம்யூ னிஸ்ட் கட்சி ஏடான ஜனசக்தியில் “புது நாளினை எண்ணி உழைப்போம்” என வெளியான தமது 54 வரிக் கவிதையிலி ருந்தே இந்தத் திரைப்படப் பாடல் உரு வாக்கினார் பட்டுக்கோட்டை. கம்யூ னிஸ்ட் கட்சி ஏட்டில் அக்கவிதை இன் னும் உரக்கப் பேசியது. அதில் ஓங்கி நின்ற வீரியத்தை சற்று மென்மையாக்கி ஆயினும் உள்ளடக்கம் கெட்டுவிடாமல் திராவிட இயக்க நடிகருக்கு தருகிறார். அவரும் ஏற்கிறார். திரையுலகில் அன்று அப்படியொரு ஐக்கிய முன்னணி யாரும் திட்டமிடாமலேயே உருவாகியிருந்தது போலும்.

ஏட்டில் வந்த கவிதையைவிட திரைப்படத்தில் வந்த பாடல் முழுவீச் சோடு மக்களைச் சென்றடைந்ததை மறுக்க இயலாது.அந்தக் கவிதை முழுவதையும் கூற இங்கு இடமில்லை. எனவே சில நறுக்கு வரிகளை மட்டும் இங்கே பார்ப்போம் .“வாழை நிலைக்குது சோலை தழைக்குது / ஏழைக்கு அதில் என்ன கிடைக்குது?” “கூழைக்குடிக்குது ; நாளைக் கழிக்குது /ஒலைக் குடிசையில் ஒட்டிக்கிடக்குது..” “சீறும் புயலால் மெலிந்த வருக்குச் - சர்க்கார் செஞ்ச உதவிகள் என்ன மச்சான்” “அங்கு நாளும் பிணத் தைப் புதைப்பதற்கு - நம்ம / நாணய சர்க் கார் உதவுமடி” இப்படித் தொடரும் கவி தையில், “தங்கவும் வீடின்றித் திங்கவும் சோறின்றித் / தத்தளிப்போர் கெதி என்ன மச்சான்” “நாட்டில் - /எங்கும் தொழிலா ளர் கூட்டமடி - அவர் பங்காளி போன் றோரைக் காப்பாரடி” என வர்க்கப் பார் வையை முன்வைப்பார்.முழுக்கவிதை யையும் மெட்டுப்போட்டு இசைத்தட்டில் கொணர்வது இடதுசாரிகளின் இன்றை யக் கடமை. தேவை .

அதுபோல் “எங்கும் விவசாய சங்கம் அமைத்ததில் / அங்கம் வகித்திடு வோம்..”என ஜனசக்தியில் வெளிவந்த கவிதை விவசாயிகள் கையாயுதமாகும். இப்படி இவர் பாடல் நெடுக விவசாய மனோநிலை எதிரொலிப்பதை அவ தானிக்கலாம் .

வைரமுத்து எழுதிய “விதைச் சோளம் “எனும் நெடுங்கவிதையி லிருந்து சில வரிகள் ; வெதச் சோளம் நனஞ்சிருச்சே /வெட்டியா பூத்திருச்சே / மொளைக்காத படிக்கு /மொளைகட்டிப் போயிடிச்சே / ஏர் புடிக்கும் சாதிக்கு / இதேதான் தலையெழுத்தா?விதிமுடிஞ்ச ஆளுக்கே /வெவசாயம் எழுதிருக்கா /காஞ்சு கெடக்குதேன்னு / கடவுளுக்கு மனு செஞ்சா /பேஞ்சுக் கெடுத்திருச்சே /பெருமாளே என்ன பண்ண?”

தமிழன்பன், இன்குலாப், தணிகைச் செல்வன் போன்றோர் கவி தைகளில் விவசாயியின் வாழ்க்கை சிறப்பாக இடம் பெற்றதுண்டு இடம் கருதி தர இயலவில்லை . சோறுபோடுவோர் வாழ்க்கையை உரக்க ஆழமாக பரவலாக விரிவாகப் பாடாதவரை இலக்கியம் அரைக்கிணறு தாண்டுவதாகவே பொருள் .

உழவன் பிறந்த கதை சொன்ன நவகவி முத்தாய்ப்பாய் முடிப்பார் ; “அவனே எனது கதாநாயகன் /அழுக்குடன் வேர்வை நாறும் தூயவன் /ஓதும் பொருளைத் தேடி அலைகையில் /‘உழைப் ’பெனும் சொல்லெடுத்துத் தந்தவன் /எளிமை கொலுவிருக்கும் மேனியன் /ஏரின் கூரைப்போல நேர்மையன் ..” மெய்தானே! அந்த உழவனைப் பாடுங்கள் கவிஞர்களே! பட்டுக்கோட்டையின் கிராமத்து இதயம் கசிவதை தொடர்ந்து படிப்போம்! பாடுவோம்!

நன்றி : தீக்கதிர் 21 ஜூலை 2014

சிந்திக்க வைக்க .. நம்பிக்கை அளிக்க ..

Posted by அகத்தீ Labels:


“சட்டமன்ற , நாடாளு மன்றத்திற்கு அரசியல் கட்சிகள் தேர்ந்தெடுக் கும் வேட்பாளர்களுக்கு முதலாளிகள்தான் செலவழிக்கிறார்கள். நடைமுறையில் இந்த முதலாளிகள் வாக்காளர்களை இது போன்ற மக்கள் மன்றங்களிலிருந்து பிரித்து விடுகிறார்கள். இதன் விளைவாக மக்கள் பிரதிநிதிகள் எளியமக்கள் நலன்களைப் பாதுகாப்பதில்லை. மேலும் இன்றைய சூழலில் பத்திரிகை , வானொலி , கல்வி தற்போது தொலைக்காட்சி மற்றும் மின்னணு ஊடகங்களையும் சேர்க்கலாம் தகவல் தொடர்பின் முக்கியமான பகுதிகள் அனைத்தையும் முதலாளிகள்தான் நேரடியாகவோ மறைமுகமாகவோ தம் கையில் வைத்திருக்கிறார்கள் .எனவே தனிப்பட்ட ஒரு குடிமகனால் சரியான முடிவுகள் எடுக்கவோ , தனது அரசியல் உரிமை களை சரியானபடி பயன்படுத்தவோ முடி வதில்லை .”
...........................................................................................................................................................
...........................................................................................................................................................


சிந்திக்க வைக்க .. நம்பிக்கை அளிக்க ..

சு.பொ. அகத்தியலிங்கம்

நிகழ்ந்தபோதே எழுதப்பட்ட வரலாறு ,உலகப் புகழ்பெற்ற ‘ மன்த்லி ரெவ்யூ ’ கட்டுரைகள், தொகுத்தவர்கள் : பாபி எஸ் ஒர்டிக்ஸ் , திலக் டி .குப்தா, தமிழில் : ச . சுப்பாராவ்வெளியீடு : பாரதி புத்தகாலயம் ,7 , இளங்கோ தெரு , அண்ணாசாலை ,சென்னை - 600 018.பக் : 240 , விலை : ரூ . 150.

“சட்டமன்ற , நாடாளு மன்றத்திற்கு அரசியல் கட்சிகள் தேர்ந்தெடுக் கும் வேட்பாளர்களுக்கு முதலாளிகள்தான் செலவழிக்கிறார்கள். நடைமுறையில் இந்த முதலாளிகள் வாக்காளர்களை இது போன்ற மக்கள் மன்றங்களிலிருந்து பிரித்து விடுகிறார்கள். இதன் விளைவாக மக்கள் பிரதிநிதிகள் எளியமக்கள் நலன்களைப் பாதுகாப்பதில்லை. மேலும் இன்றைய சூழலில் பத்திரிகை , வானொலி , கல்வி தற்போது தொலைக்காட்சி மற்றும் மின்னணு ஊடகங்களையும் சேர்க்கலாம் தகவல் தொடர்பின் முக்கியமான பகுதிகள் அனைத்தையும் முதலாளிகள்தான் நேரடியாகவோ மறைமுகமாகவோ தம் கையில் வைத்திருக்கிறார்கள் .எனவே தனிப்பட்ட ஒரு குடிமகனால் சரியான முடிவுகள் எடுக்கவோ , தனது அரசியல் உரிமை களை சரியானபடி பயன்படுத்தவோ முடி வதில்லை .”

மேலே சொன்னவை நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவு குறித்து எழுதப்பட்ட விமர்சனம் போல் தோன்றி னும் இது எழுதப்பட்டது மே 1949 என்ப தையும் அதை எழுதியவர் அறிவியல் மேதை ஐன்ஸ்டீன் என்பதையும் அறி யும் போது நம்பமுடியுமா ? ஆனால் அதுவே உண்மை . “ சோஷலிசம் எதற்கு? ” என்ற கட்டுரையில்தான் இவ்வாறு குறிப்பிட் டுள்ளார் .

“ தனி மனிதர்களின் சமூக உணர்வு முடங்குகிறது .முதலாளித்துவத்தின் மோசமான தீங்கு என்று நான் கருதுகி றேன். நமது கல்விமுறை முழுவதும் இத்தீங் கால் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு மிகைப்படுத்தப்பட்ட போட்டி மனப் பான்மையை மாணவர் மத்தியில் புகட்டுகிறது. தன் வருங்காலத்திற்கான தயாரிப்பிற்காக பொருளீட்டும் வெற்றியை வழிபட மாணவன் பயிற்று விக்கப்படுகிறான்.” - இதுவும் மேற்படி கட்டுரையின் ஒரு பகுதி தான். எட்டுபக்க முழுகட்டுரையையும் படிக்க ஆவலாக உள்ளதா ? இந்நூலை வாங்குங்கள் .

“உண்மை நம் பக்கம் . கேட்பவர் இணங்கும் வகையில் தெளிவாக அந்த உண்மையைச் சொல்வதுதான் சோஷலிச பிரச்சாரகரின் வேலை . ஆனால் இன்று பிரச்சாரம் அவ்விதத்தில் இல்லை என்பது வருத்தத்திற்குரியது.‘ பாசிச பூதம் ’ , ‘ ஏகாதிபத்திய அடி வருடி’ போன்ற வார்த்தைகள் பணிச்சுமை யால் துன்புறும் எழுத்தாளருக்கு எழுத எளிமையாக இருக்கலாம் . ஆனால் இடதுசாரி வட்டத்திற்குள் இன்னும் வராத வாசகருக்கு இவை புரியாதது . நம்மைப் போன்ற உறுதியான சோஷலிஸ்டுகளே எத்தனையோ முறை இடதுசாரிப் பத்திரிகைகள் முன்வைக்கும் வாதங்களால் சங்கடப் பட்டிருப்போம் அல்லவா ? ”

இதனைப் படிக்கும்போது நம் நெற்றிப் பொட்டில் யாரோ அறைவது போல் இருக் கிறதா ? “ இடதுசாரி பிரச்சாரம் பற்றிய குறிப் புகள் ” எனும் தலைப்பில் லியோ ஹூபெர் மன் எழுதிய கட்டுரையில் இடம் பெற் றுள்ள கருத்து அது . கட்டுரை வெளிவந்தது 1950 என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய தகவல் . முழுக்கட்டுரையையும் படிக்க இந் நூலை வாசியுங்கள் .

1953ல் எழுதப்பட்ட “ வர்க்க நீதி ” கட் டுரை ரோசம் பர்க தம்பதியருக்கு வழங்கப் பட்ட மரணதண்டனையை அவசர அவசர மாக நிறைவேற்றியதையும் அதே சமயம் மூன்று கிரிமினல்களின் மரணதண்டனை யை நிறுத்திவைத்ததையும் ஒப்பிட்டு வர்க்க நீதியை தோலுரிக்கிறது . நமது உச்சநீதிமன் றம் தீர்ப்புகள் நினைவுக்கு வருகிறது .

“முதலாளித்துவ சமூகத்தில் மதப்பழக் கங்கள் எப்படி ஒடுக்குமுறைக்கான சாதனங் களாக உள்ளன என்பதைப் புரிந்து கொள் வதுதான் மார்க்சிய அரசியலுக்கு அடிப் படை சவாலாக உள்ளது ” – என்ன இது ? நாம் இப்போது எதிர்கொள்ளும் பிரச்ச னையை பேசுவது யார் ? கார்னெல் வெஸ்ட். எழுதியது 1984.
“விஞ்ஞானம் மதநம்பிக்கைப் பிரச்சனை யைத் தீர்ப்பதில்லை . வரலாறு நாம் எதிர்த் துப் போராட வேண்டிய, அதே சமயம் பணிந்தும் செல்ல வேண்டிய ஒரு பாரம் பரியத்தைத் தருகிறது. உண்மைக்கான தேடல் முற்றிலும் வரலாற்று பூர்வமானது. சமூக யதார்தங்களைப் புரிந்து கொண்டு ஆராய்ந்த அடிப்படையில் நடைமுறை சாத்தியமான வடிவங்களை அது எடுக்கும் .அவ்வப்போது பிரச்சனையைத் தீர்க்கும் வழக்கத்தோடு உண்மைக்கான தேடல் தொடரும்.” என் கிறது அக்கட்டுரை. இந்நூலில் இடம் பெற்றுள்ள இக்கட்டுரை ஆரோக்கியமான விவாதத்துக்கு வழிசெய்கிறது. “புரட்சி – மதம் – மக்கள்” (அலைகள் வெளியீடு) என்கிற ஃபிடல் காஸ்ட்ரோ புத்தகத்தை படிப்பது புரிதலை மேலும் கூர்மையாக்கும் .

சோஷலிசத்திற்கு அமைதியான பாதை இல்லை என்பதைக் கூறும் சிலி குறித்த கட் டுரை , மக்களே முக்கியம் எனக் கூறும் கணித வியலாளரின் கட்டுரை ,பாலஸ்தீனம், கியூபா, இஸ்ரேல் , யெல்ட்சினின் ரஷ்யா, நிதிமூலதனச் சிக்கல் , மூலதனத்தின் கோரமுகம், கல்வி, அறிவுஜீவிகள் என இந்நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் ஒவ்வொன்றும் காத்திரமானவை . 1949 முதல் 1998 வரை 50 ஆண்டுகளில் “ மன்த்லி ரெவ்யூ” ஏட்டில் எழுதப்பட்ட கட்டுரைக் குவியல்களில் இருந்து சலித்துஎடுக்கப்பட்ட ஆகச் சிறந்த 24 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல் எனில் இதன் உள்ளடக்க மேன்மையை வீரியத்தை காலத்தை வென்று நிற்கும் அதன் உயிர் துடிப்பைச் சொல்லவும் வேண்டுமோ ?

“நம் எதிரிகள் தோற்கடிக்கப்பட முடியாதவர்கள் என்று மக்கள் சோர்வும் சலிப்பும் அடைந்திருக்கும் நேரத்தில் அவர்களைச் சிந்திக்க வைக்கவும் , செயலில் இறங்கும் அளவுக்கு உத்வேகமளிக்கவும், இயலாத காரியம் ஒன்றைச் செய்வது சிரமமானது, ஆனால் சிரமப்பட்டு அதைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை அளிக்கவும் ஒரு பத்திரிகை தேவைப்பட்டது . அதுதான் ‘ மன்த்லி ரெவ்யூ ’ என்கிறார் அஸ்திறார் டானி குளோவர் என்ற எழுத்தாளர் .

இந்நூலுக்கு ஆர் . விஜயசங்கர் எழுதி யுள்ள முன்னுரையும் மிக முக்கியம் . ஊடகங்களின் முக்கியத்துவம் பாத்திரம் இவற்றை அறிய உதவும். ச.சுப்பாராவ் மொழியாக்கம் நன்று. ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் ஆழ்ந்த விவாதங்களும் புரிதலும் தேவைப்ப டுகிற காலகட்டத்தில் இந்நூலை வெளிக் கொணர்ந்த பாரதி புத்தகாலயம் பாராட்டுக் குரியது .

நன்றி :  தீக்கதிர்  புத்தகமேசை  20 ஜூலை 2014

The Top 10 Reasons I Don’t Believe in God

Posted by அகத்தீ

The Top 10 Reasons I Don’t Believe in God

முடிவற்ற பயணம்

Posted by அகத்தீ Labels:


முடிவற்ற பயணம்
======================================

பயணம் இனிது
நெடிய பயணம் அதனினும் இனிது .
சிரமங்கள் , சிராய்ப்புகள் .
காயங்கள் , கஷ்டங்கள்
எவ்வளவு இருப்பினும்
பயணங்கள் இனிது .

சக பயணிகள் இனியர்
இணைந்து பயணிப்பது இனிதினும் இனிது
ஒவ்வொரு சகபயணியும்
சேரும் இடம் வெவ்வேறு
ஆயினும்
பயணம் நெடுக வந்தவரெல்லாம்
நெஞ்சில் தங்குவதில்லை
சிலர் நெஞ்சைவிட்டு நீங்குவதில்லை
எப்போதும்
சக பயணியர் இனியர் .

பயணம் மதிப்புவாய்ந்தது
பயணத்தில்
ஏமாந்ததுண்டு , தடுமாறியதுண்டு ,
திகைத்து நின்றதுண்டு ,
விபத்துகளும் உண்டு
கொண்டதும் கொடுத்ததும்
இழந்ததும் பெற்றதும்
நிறையவே உண்டு .
எப்படியிருப்பினும்
பயணம் மதிப்பு வாய்ந்தது .

பயணம் முடிந்தபின்
திரும்பிப் பார்த்திட முடியாது
பின் தொடரும் பயணிகள்
நடைபாதையில்
முன்சென்றவர் விட்டுச்சென்ற
தோட்டங்களில் உலவியவாறே..
பதித்த முட்களை அகற்றியவாறே..
புதிய தோட்டங்களை எழுப்பியவாறே..
புதிய முட்களை புதைத்தவாறே...
பயணம் முடிந்தபின்
திரும்பிப் பார்த்திட முடியாது

- சு.பொ.அகத்தியலிங்கம்

சும்மா கிடந்த சொல்ல எடுத்து...11

Posted by அகத்தீ Labels:சும்மா கிடந்த சொல்லை எடுத்து - [ 11]


என்னடி கண்ணம்மா இன்னுஞ் சொல்ல வேணுமா?

சு.பொ.அகத்தியலிங்கம்
“ ஜிங்குசா ஜிங்குசா செகப்புக் கலரு ஜிங்குசா /பச்ச கலரு ஜிங்குசா/ மஞ்ச கலரு ஜிங்குசா /வண்ண வண்ண சேலைங்க / வசதியான சேலைங்க /வானவில்லப் புழுஞ்சிவந்து சாயம்போட்ட சேலைங்க / எங்க உள்ளம் ஓடும் சேலைங்க /உறுதி யான சேலைங்க உடுத்துவாங்க ஏழைங்க.... ” – பொற்காலம் திரைப் படத்தின் பாடல் காற்றில் தவழ்ந்து காதைத் தீண்டியது . நெசவாளர் நிலையும் கைத்தறித் துணியும் நினை வில் விரிந்தது .

காலந்தோறும் நெசவாளரும் நெசவும் உன்னதக் கவிஞர்களின் பாடுபொருளாகவே இருந்துள்ளது சுதந்திரப் போராட்டத்தில் முன்நின்ற கவிக்குயில் சரோஜினி நாயுடு “ நீலம்..வெள்ளை..” என்ற தலைப்பில் பாடிய கவிதை மறக்க முடியாதது .“ விடியற்காலையில் , நெசவாளர்களே / இவ்வளவு அழகான ஆடையை/ யாருக்காக நெய்து கொண்டிருக்கிறீர்கள் ? / காட்டுப் பறவையின் நீலச்சிறகு போல் / புதிதாகப் பிறந்த குழந்தைக்கு / ஆடை நெய்து கொண்டிருக்கி றோம் / இருள் சூழும் வேளையில் நெசவாளிகளே / இவ்வளவு பள பளப்பான ஆடையை / யாருக்காக நெய்து கொண்டிருக்கிறீர்கள் ? / பச்சையும் நீலமும் உள்ள மயில் தோகை போல் /ஒரு மகாராணியின் திருமணத்திற்காக / முகத்திரையை நெய்து கொண்டிருக்கிறோம் / அடக்கத்துடன் அமைதியாக / நெய்து கொண்டிருக்கும் நெசவாளிகளே / இந்தக் குளிர் நிலவில் / என்ன நெய்து கொண் டிருக்கிறீர்கள்? / இறகு போன்ற மேகம் மாதிரியான வெண்மையில் / இறந்துபோன ஒரு மனிதனுக்கு / சவச்சீலை நெய்து கொண்டிருக் கிறோம் ” நம் வாழ்வோடு இரண்டறக் கலந்தவர்கள் நெசவாளிகள் என்பதை இக்கவிதை பிரகடனம் செய்யும் .

பட்டுக்கோட்டை 1957 ல் “ புதையல்” திரைப்படத்திற்கு என்ன பாட்டு எழுதலாம் என நெடுநேரம் யோசித் தாராம். பாரதிதாசனிடமும் கலந்து ரையாடினார் .அவர் ஆலோசனையின் பெயரில் கைத்தறி நெசவாளர்களை சந்தித்து அவர்களோடு தங்கி இருந்து ஒரு பாடலை எழுதினார் . இன்றும் கைத்தறி என்றதும் ஒவ்வொருவர் உதடும் முணுமுணுக்கும் பாட லாகும் அது . அதன் முதல் வரியே கலக்கும் ; “ சின்னச் சின்ன இழைப் பின்னிப் பின்னிவரும் / சித்திரக் கைத்தறி சேலையடி - நம்ம / தென்னாட்டில் எந்நாளும் கொண்டாடும் சேலை யடி / தய்யா தய்யா தந்தத்தானா தய்யா தய்யா தந்தத்தானா ” இதைவிட எளிமையும் எழிலும் கொஞ்ச யார் சொல்லி விட முடியும் . சித்திரக்கைத்தறி என் கிற ஒற்றை வார்த்தையில் கைத்திற னும் கலைநுட்பமும் கைகோர்ப் பதை அற்புதமாய் வடித்து தந்துவிட் டார் .அடுத்த பத்தியில் யார்யாரெல் லாம் கைத்தறி ஆடை அணிவர் என ஒரு பட்டியல் தருவார் பட்டுக் கோட்டை ; அன்னையர் , தந்தையர் வண்ணக்குழந்தைகள் , புன்னகை மங்கையர் , சிந்தனைச் சிற்பிகள், தேசத்தலைவர்கள் , செந்தமிழ் சோலையில் பூத்த கலைஞர்கள் , மங்கலமா நிலம் காக்கும் மறவர் , வாழ்வை உயர்த்தும் மக்கள் என எல்லோருக்கும் ஏற்றது என்றார் .

கைத்தறி என்றால் விலை குறைவா னது சாதாரண ஏழைகளுக்கானது என்று மக்களில் ஒரு சாராரிடம் அன்றைக்கு இருந்த கருத்தைத் துடைத் தெறிகிறார் . எல்லோரும் வாங்கி மகிழும் பொன்னாடை என் றார் .அதுமட்டுமா ? சாயம் போகுமா? அதற்கும் பதில் சொன்னார் ; “ உழைத்திடும் எளியவர் அடிக்கடி துவைத்து வந்தாலும் / மங்காது பார்வை சிங்காரப் போர்வை ” அது சரி இது ஏழைகளுக்கு என எண் ணாதே என சொன்னால் மட்டும் போதுமா பணம் படைத்தவர்களின் தேவைக்கு வழி உண்டா என்பதை யும் கூறவேண்டாமோ ! கூறினார் ; “ பணத்தொகை மிகுந்தவர் படித்தவர் பெருத்தவர் நாடும் பச்சைப் பட் டாடை பார்த்தால் கிளிஜாடை” கிளி ஜாடை என்ற சொல்லாட்சியில் ஆடையின் மென்மையையும் வண் ணச்சேர்க்கையையும் ஒருங்கே காட் சிப்படுத்திவிட்டார் பட்டுக்கோட்டை .

இந்த கைத்தறித் தொழிலின் பெருமையையும் தொழிலாளர் பெருமையையும் அடுத்து பிணைத்து தரும் அழகை என்னென்பது ? “ஒற்று மையோடு அத்தனை நூலும் / ஒழுங்கா வந்தால் வளரும். – இதில் / ஒரு நூலறுந்தால் குளரும். – இதை / ஓட்டும் ஏழைக் கூட்டுறவாலே / உலகில் தொழில் வளம் உயரும் – இந்த / உலகில் தொழில் வளம் உயரும் ” . இது மெய்யன்றி வேறென்ன ? “என்னடி கண்ணம்மா இன்னுஞ் சொல்ல வேணுமா ? ” எனக் கேள் வியும் கேட்டுப் பதிலும் சொல்லு வார்; “ வள்ளுவர் வழி வந்த பெரும் பணி வாழ்வில் / நன்மை உண்டாக் கும் தன்மானம் காக்கும் / புதுமைப் புடவைகள் விதவிதப் பறவைகள் போலே / நல்ல நிறங்காட்டும் நாளும் புகழ் நாட்டும்” இதற்கிணையாக கைத்தறி பற்றி இன்னொரு பாட்டு பிறக்கவில்லை என்கிறார்கள் சான் றோர்கள்.

பெரியாரும் ஜீவாவும் அண்ணா வும் கைத்தறித் துணிகளை தலையில் சுமந்து விற்றகாலம் . கைத்தறியை ஊக்குவிக்க திராவிட இயக்கமும் பொதுவுடைமை இயக்கமும் பாடு பட்ட காலம் .கைத்தறித் தொழிலா ளர் வாழ்வில் சூழ்ந்த இருள் விலக பொதுவுடைமை இயக்கம் சங்கம் அமைத்த காலம் . அன்றைய சமூக தேவையை நிறைவு செய்ய பாட்டு எழுது என்கிற பாரதிதாசன் திராவிட இயக்கத்தவர் ; பாட்டுக்கட்டியவர் பொதுவுடைமை இயக்கத்தவர் . ஒலித்தது திரைப்படத்தில். இதனை மனதில் கொண்டால் எங்கேயும் எச் சூழலிலும் சமூக அக்கறை மிக்கோர் அதற்கொப்பவே சிந்திப்பர் செயல் படுவர் என்பது புலனாகும் . கிடைக் கும் சிறிய சந்தர்ப்பத்தையும் சரியாகப் பயன்படுத்திய சமூகப் போராளிக் கவிஞர் அல்லவா பட்டுக்கோட்டை. அவர் காலம் கைத்தறியை கைதூக்கி விடும் காலம். எனவே அதற்கேற்ற வாறு பாடல் புனைந்தார் .

 மார்க்ஸ் ஏங்கெல்ஸ் இருவரின் நெருங்கிய நண்பரான ஹென்ரிச் ஹெய்னே என்ற ஜெர்மானிய மகாகவிஞனின் “ நெசவாளர் ” எனும் பாடல் புகழ்பெற்றது . அதிலி ருந்து சில வரிகளை இங்கே நினை வூட்டுவது சாலப் பொருந்தும் .

“ அவர்கள் கண்களில் கண்ணீர் இல்லை -ஏனெனில் /கண்ணீர் பார்வையை மறைக்கும்தறியில்அமர்ந்திருக்கிறார்கள்;/பற்கள் நறநறக்கின்றன .  / ஓ ! ஜெர்மனியே ! / உனது சவத்துணியைநாங்கள் நெய்துகொண்டிருக் கிறோம்;/குளிர்பனியில் கொடும்பசியில்  / மரித்துக் கொண்டிருந்த போது  / நாங்கள் கதறியழைத்தோமே  / அந்தக் கடவுளை சபிக்கிறோம்! / அந்த அரசனை சபிக்கிறோம்கீச்சிடும்  /  தறியில் நாடா பறக்கிறது /இரவெல்லாம் பகலெல்லாம் / உன் விதியை நெய்து கொண்டிருக்கிறோம் / உன் சவத்துணியை நெய்துகொண்டிருகிறோம் ; / ஓ , கிழட்டு ஜெர்மனியே ! / உனக்கொருசாபத்தை நெய்து கொண்டிருக்கிறோம் / உனக்கொரு சாவை நெய்து கொண்டிருக்கிறோம் / நாங்கள் நெய்து கொண்டிருக்கிறோம் / நாங்கள் நெய்து கொண்டிருக்கிறோம் ”

பட்டுக்கோட்டையின் பாடல் களில் அவலச்சுவையும் அறிவுரை யும் மட்டுமல்ல ; தத்துவப் பார்வை யும் சமத்துவ நோக்கும் மட்டுமல்ல ஆவேசக்குரலும் போர்ப்பரணியும் உரக்கக் கேட்கும். அடுத்து அவற்றை யும் பார்ப்போம் .

நன்றி : தீக்கதிர்  இலக்கியச்சோலை 14 ஜூலை 2014

மதம் பிடிக்காத மனிதர்களைச் செதுக்க வாரீர் !

Posted by அகத்தீ Labels: "மதம்பிடிக்காத" மனிதர்களை செதுக்க வாரீர் !

சு.பொ.அகத்தியலிங்கம் .


“மும்மதத்தினர் முக்கிய கவனத் திற்கு” என்கிற தலைப்பில் நண்பர் திருப்பூர் கிருஷ்ணன் தினமணி (11-07-2014 ) இதழில் ஒரு கட்டுரை தீட்டி இருக்கிறார். திருப்பூர் கிருஷ்ணன் இந்துமத நம்பிக்கையாளர்; ஆயினும் பகைமையை விதைப்பவ ரல்ல என்பதை அறிவேன். அவர் இக்கட்டு ரையில் இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களின் நற்கூறுகள், தீமைகளை பட்டிய லிட்டு; முத்தாய்ப்பாகச் சொல்வது என்ன தெரியுமா?

“இந்துக்கள் சிலரிடையே தென்படும்தீண்டாமை, கிறிஸ்துவர்கள் சிலரி டையே தென்படும் மதமாற்றப் போக்கு, இஸ் லாமியர்கள் சிலரிடையே தென்படும் தீவிர வாதம் - இந்த மூன்றில் முதலில் அழிக்கப்பட வேண்டியது எது?"

இப்படி அவர் கேட்ப தின் பொருள் பட்டவர்த்தனமானது. தீவிரவாதமே உடனடியாகக் களைய வேண்டியது என்கிறார்; அதிலும் தெளிவாக இஸ்லாமிய தீவிரவாதமே ஆகப் பெரும் ஆபத்து என்கிறார்.

தீவிரவாதம் ஒரு மதத்துக்கே உரியஅடையாளமாகப் பார்ப்பது ஊனப்பார்வையே! ஒருதலைப் பார்வையே! இந்தியாவில் இந்து தீவிரவாதமும் பேயாட்டம் தானே போடுகிறது. மகாத்மாவை பலி கொண்டது.ஆஸ்திரேலியப் பாதிரியார் ஸ்டெயினையும் அவரது குழந்தைகளையும் உயிரோடு எரித்தது. இரத்த யாத்திரை நடத்தியது. பாபர் மசூதியை இடித்தது. மதக்கலவரங்களுக்கு விதை தூவியது எல்லாம் எது? சுவாமி அசிமானந்தாவின் வாக்கு மூலம்இந்து பயங்கரவாதத்தின் முகமூடி யைக் கழற்றிக்காட்டுமே! இதையெல்லாம் திருப்பூர் கிருஷ்ணன் அறியமாட்டாரா? அறிவார். ஆயினும் ஏன் கவனத்தில் கொள்ளவில்லை?

இஸ்லாமிய தீவிரவாதம் உலகில் போடும் வன்முறை ஆட்டத்தை யாரும் அங்கீ கரிக்க முடியாது. இஸ்லாம் தீவிரவாதம் ஆனாலும் இந்து தீவிரவாதம் ஆனாலும் எல் லாம் கொடும் விஷமே! ஆபத்தானதே! ஒன்றையொன்று கொம்பு சீவிவிடுபவையே. ஆகஎந்த மத தீவிர வாதமானாலும் எதிர்ப்ப தென்பது அல்லவா நல்லிணக்கம் விரும்பு வோர் செயலாக இருக்கவேண்டும். நண்பர் திருப்பூர் கிருஷ்ணன் யோசிப்பாராக! தீவிரவாதத்தை ஒரு மதத்தோடு மட்டும் பிணைத் துப் பார்க்கும் பழுதுபட்ட பார்வையைத் தவிர்ப்பாராக!

இக்கட்டுரையில் திருப்பூர் கிருஷ்ணன் இந்துமதத்தின் தீங்காக தீண்டாமையை அடையாளம் காட்டி யிருப்பது நல்லது. சாதியத்தையும் இந்துமதத்தையும் பிரித்துப் பார்க்க இயலுமா? என்பதே எம் கேள்வி .“இந்து மதத்தின் பலம் என்பதுஎதையும் பரந்த கண்ணோட்டத்தில் ஏற்கும் அதன் விசாலத் தன்மை” என்கிறார் அவர்; ஆனால் நம் கேள்வி என்னவெனில் தன் சொந்த மதத்தில் சாதிரீதியாக பாகுபாடு காட்டுவது விசாலத் தன்மையா? தீண்டாமையைவிட மோச மான சகிப்புத்தன்மையற்ற போக்கு வேறு என்னவாக இருக்க முடியும்? சாதிப் படிநிலை என்பதும் அதற்கு கடவுளின் ஆசீர்வாதத்தை நல்கு வதும் எப்படி விசாலப் பார்வையாகும்.

“தீண்டாமை என்கிற கொடுமை முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டால், கணிசமான அளவு மதமாற்றமும் கூடக்குறைந்துவிடும். ஒரே கல்லில் மூன்று மாங்காயை வீழ்த்துவது கடினம். ஆனால்முயற்சி செய்தால் ஒரே கல்லில் இரண்டுமாங்காயை வீழ்த்தி விடலாம். தீண்டாமை யை எதிர்த்துக் கல்லெறிந்தால் மதமாற்றப் போக்கும் தானே உதிர்ந்துவிடும் அல்லது குறையத் தொடங்கும்” எனத் திருப்பூர் கிருஷ்ணன் கூறுவதை பொத்தாம் பொதுவாக நிராகரிக்க முடியாது.

“எல்லா மதங்களும் கடவுள் என்கிற கடலில் சென்று சேரும் நதிகள் போன்ற வையே. எல்லா மத நெறிகளும் அதனதன் அளவில் முக்கியமானவையே. சம அந்தஸ்து உள்ளவையே.எல்லா மதநெறிகளாலும் இறைவனை அடையலாம் என்பது ராமகிருஷ்ணரின் சித்தாந்தம். இந்தப் பேருண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்” என ராமகிருஷ்ணர் உபதேசத்தை கட்டுரையின் ஓரிடத்தில் மேற்கோளாகக் காட்டும் திருப்பூர் கிருஷ்ண னிடம் ஒரு கேள்வி; ராமகிருஷ்ணர் விளக்கத் தை ஏற்றபின் ஒருவர் எந்த மதத்திற்கு யார் போனால் என்ன? ஏன் கவலைப்பட வேண்டும்? எங்கு போனாலும் முடிவில் கடலில் தானே சங்கமமாகிறார்கள்!

முதலில் மத மாற்றம் ஏன் எனப் பார்ப் போம்? தத்துவ ரீதியில் ஒரு மதத்தைவிட இன்னொரு மதம் மேலானது என விவா தங்கள் மூலம் அறிந்து மதம் மாறுவது. இது ஆரம்ப காலத்தில் இருந்திருக்கும். இப்போது அவ்வாறு நடப்பது சுலபமல்ல. விதிவிலக்காக நடக்கலாம். அதே சமயம் மனம் திறந்த விவாதம் அறிவியல் வழியில்தான் கொண்டு சேர்க்கும். மதத்தை இறுதி யில் நிராகரிக்கவே இட்டுச்செல்லும்.

இரண்டாவதாக, சலுகைகள், பதவி,பணம் இவற்றுக்காக மதமாற்றம்நடக்கலாம். பிரிட்டிஷார் இருநூறாண்டுகள் இந்தியாவை ஆண்ட போதிலும் இந்தியர்கள் எல்லோரையும் மதமாற்றம் செய்துவிடமுடியவில்லை என்பதும்; கடும் தீண்டா மைக் கொடுமைகளில் உழன்ற போதும் பெரும்பான்மை தலித்துகளை மதம்மாற்றி விட முடியவில்லை என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தி.இஸ்லாமிய சாம்ராஜ்யம் நீடித்துநின்றபோதும் இந்தியா இஸ்லாமிய நாடாக வில்லை. இந்தியர்கள் எல்லோரும் இஸ் லாமியர் ஆகிவிடவில்லை. மதம் நாம் விரும் பாவிடிலும் கலாச்சாரக் கூறாக உள்ளதால் தீடீர் ஆசைகாட்டி மாற்றுவது எளிதல்ல .

மூன்றாவதாக, கலக நடவடிக்கையாக, எதிர்ப்பு நடவடிக்கையாக மதம்மாறுவது எங்கும் நடக்கும். அமெரிக்காவில் கிறித்துவத்திலிருந்து முஸ்லீமாக மாறிய மால்கம்எக்ஸ் வாழ்க்கை வரலாறு அதைஉணர்த்தும். குத்துச்சண்டை வீரர் முகமது அலி கிறித்துவத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறியதும் அதனைப்படம் பிடிக்கும். இந்தியாவில் சில கிராமங்கள் கூட்டாக இந்துமதத்திலிருந்து வேறுமதங்களுக்கு மாறுவதும் அத்தகையதே! அம்பேத்கரின் மதமாற்றமும் அத்தகையதே! அங்கே பணம், பதவி எல்லாவற்றையும்விட சுயமரியாதையே மிகமுக்கியம். இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களின் சுயமரியாதையை கேலிக்குள்ளாக்கும் தீண்டாமை உள்ளிட்ட சாதியக்கொடுமைகள் மதமாற்றத்திற்கு இட்டுச் செல்லும்.ஆனால் எங்கேபோயினும் இந்த இழிவுதொலையவில்லை என்பது நமக்கு பெரும் தலை குனிவு. திருப்பூர் கிருஷ்ணன் இதனையெல்லாம் அறிவார்; தீண்டாமைக்கு எதிராக செயல்படுவோர் யாரெனவும் அறிவார் எனவே இன்னும் கொஞ்சம் பகிரங்கமாய் பேசவேண்டும். தீண்டாமைக்கு எதிராக உரக்கப் பேச வேண்டும். ஆனால் தீண்டாமை பற்றி பேசும்போது சாதிய படிநிலை பற்றி பேசாமல் இருக்க முடியுமா ? அதனை காத்து நிற்கும் தத்துவ அரண் இந்து மதம் அல்லவா? அதனை விமர்சிக்காமல் தீண்டாமையை ஒழிப்பது சாத்தியமா ?

திருமூலர், வள்ளலார், சித்தர்கள், பசவப்பா, நாராயணகுரு, சொக்கமேளா எனஎண்ணற்ற ஆன்மீகவாதிகள் கல்லும் கசிந்துருக எடுத்தோதியும் இந்தத் தீண் டாமை பெரு நோயிலிருந்து இந்துமதம் வெளிவரவில்லையே! போத னைகளால் புண்ணு ஆறவில்லையே! திருப்பூர் கிருஷ்ணன் போன்ற நலம் விரும்பிகள் இதனை ஆழமாக யோசிக்க வேண்டும்.கோளாறு எங்கே எனத் தேடவேண்டும்.

மதத்தை வெறுமே தனிநபர் உரிமை என்பதோடு விட்டுவிட்டு சமூகத்தை அறிவியல் ரீதியாக பயிற்றுவிக்க முனைவதுதான் புத்திசாலித்தனம். எம்மதத்துக்கும் அதுவேபொருந்தும். இரண்டு உலகப்போர்களால் இறந்தவர் களைவிட மதக்கலவரங்களால் இறந்தவர்களே அதிகம். எனவே “மதம்பிடிக்காத” மனிதர்களைச் செதுக்க திருப்பூர் கிருஷ்ணன் போன்றோரின் பேனா ஆயுதமாகட்டுமே!

நன்றி : தீக்கதிர் 13 ஜூலை 2014

சும்மா கிடந்த சொல்லை எடுத்து [10 ]

Posted by அகத்தீ Labels: 
சும்மா கிடந்த சொல்லை எடுத்து  [10  ]

வெம்பி விடாதே தம்பி ...

சு.பொ. அகத்தியலிங்கம்

“ கல்லெல்லாம் சிலை செஞ்சான் பல்லவ ராஜா.. அந்தக் / கதை சொல்ல வந்தேனே சின்ன ராஜா.. வா.ராஜா வா../ஒட்டுக்கல்லை சேர்க்காம../ ஒரே கல்லை குடைஞ்செடுத்து / கட்டி வச்சான் மண்டபத்தை பல்லவராஜா / அதைக் கச்சிதமா சொல்ல வந்தேன் சின்ன ராஜா.. / சொல்லு ராஜா சொல்லு..”பல்லவ மன்னவனின் படைப்பில் உருவான மாமல்லபுரத்தின் சிறப்பு களை குழந்தையும் அறியும் வகை யில் சொல்லும் இப்பாடல் “ வா ராஜா வா ” திரைப்படத்தில் இடம் பெற்றது. குழந்தைக் கவிஞராக நாமெல்லாம் கொண்டாடும் அழ. வள்ளியப்பா எழுதிய பாடல் இது.

இப்பாடலில் மேலும் சொல்லுவார்;“கடலோரம் கோபுரம் மலை மேலே மண்டபம் / எப்படித்தான் செஞ்சானோ பல்லவராஜா.. / அதை அப்படியே சொல்ல வந்தேன் சின்ன ராஜா / ஆமா ராஜா ஆமா.. / சிற்பிய ரைக் கூட்டிவந்து சிற்பங்களை செய்யச்சொல்லி / கற்பனையைக் காட்டிவிட்டான் பல்லவராஜா / அந்த அற்புதத்தை சொல்ல வந்தேன் சின்ன ராஜா..வா. ராஜா வா.. ” பெரிய வரலாற்றை இந்த வரி களில் சுண்டக்காய்ச்சி குழந்தைக்குச் சொன்னதன் மூலம் முத்திரை பதித்தார் அவர் .

அவருக்கெல்லாம் முன்பே திரைத்துறையில் குழந்தைகளை முன்வைத்து சொல்லும் பாடலிலும் காலத்தை வென்று நிற்கும் கருத்துகளை நரம்போடு ஊட்டி வளர்த்தவர் பட்டுக்கோட்டை. இவரின் குரு பாரதிதாசன்.பெண்குழந்தைத் தாலாட்டு , ஆண்குழந்தைத் தாலாட்டு என எழுதி ; வேண்டாத சாதி இருட்டு வெளுக்கவும் - மூடத்தனத்தின் முடை நாற்றம் போகவும் - மானிடத் தோளின் மகத்துவத்தை போற்றவும் முயன்றார் .

பட்டுக்கோட்டை அந்த வழித் தடத்தில் அடுத்த அடியெ டுத்து வைத்தார் . குங்குமச் சிமிழே என ஆராரோ பாடும் போதும் , “ ஏழை நம் நிலையை எண்ணி நொந்தாயோ? / எதிர்கால வாழ்வில் கவனம் கொண்டாயோ? ” (பதிபத்தி - 1958எனத் தாலாட்டுப் பாடியவர் பட்டுக்கோட்டை . “அழாதே பாப்பா அழாதே ” என குழந்தையை தூங்கவைக்கப் பாடும் போதும் “ பேசாத நீதி நமக்காகப் பேசும் ” (பெற்ற மகனை விற்ற அன்னை - 1958) என ஆறுதல் சொன்னவர்.

“கல்யாணப் பரிசு ” ( 1959 ) படத் தில் “ உன்னைக் கண்டு நானாட..” எனவும் , “ உன்னைக் கண்டு நான் வாட” எனவும் பாடிய இரு பாடல் களும் ஒலிக்காத தீபாவளி இன்று வரை இல்லை . இனியும் அப்படித் தானோ ! கவிஞன் காலத்தை வென்று நிற்பதன் சாட்சி இவை .

“சின்னப் பயலே சின்னப் பயலே / சேதி கேளடா / நான் சொல்லப் போற வார்த்தையை நல்லா / எண்ணிப் பாரடா - நீ / எண்ணிப் பாரடா” (அரசிளங்குமரி - 1957) இப்பாடலைப் போல் பிறிதொன்று சொல்ல இயலுமோ! எம்ஜிஆர் படம் . திராவிட இயக்கமும் பொதுவுடமையும் கைக்கோர்க்க பட்டுக் கோட்டை பிள்ளைகளுக்குக் கூறிய போதனை பெரியவர்களுக்கும் பொருந்துமே!“ஆளும் வளரணும் அறிவும் வளரணும்” என வளர்ச்சிக்கு இலக் கணம் சொன்னார்;

நரம்போடு பின்னி வளரணும் தன்மான உணர்ச்சி என்றார் ; மனிதனாக வாழ்ந்திடச் சொன்னார்; தனியுடைமைக் கொடுமைகள் தீர தொண்டு செய்யச் சொன் னார் ; தானாக எல்லாம் மாறும் என்பதை பொய்யிலும் பொய் பழைய பொய்யென உமிழ்ந்தார்; கடைசியாகச் சொன்னார் ,

“ வேப்பமர உச்சியில் நின்னு / பேயொன்னு ஆடுதுன்னு /விளை யாடப் போகும்போது / சொல்லி வைப்பாங்க - உன் / வீரத்தைக் கொழுந்திலேயே / கிள்ளிவைப் பாங்க / வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை / வேடிக்கையாகக் கூட / நம்பி விடாதே / வீட்டுக் குள்ளே பயந்து கிடந்து / வெம்பி விடாதே - நீ வெம்பி விடாதே!”

வெம்புகிறவர்களும் வெம்பச் செய்கிறவர்களும் இன்னும் இருக் கிறார்களே !இப்பாடலின் தேவை இன்னுமிங்கு முடியவில்லையே ! மூடத்தனத்தின் முடை நாற்றம் இன்னும் எப்படியுள்ளது ?

நகைச் சுவை நடிப்பில் பல்கலையாகத் திகழும் ஆச்சி மனோரமாவின் வாழ்க்கையில் ஒரு சம்பவம் . அண்மையில் மீண்டும் படித்தேன் . அதனைப் பகிர்கிறேன்.“மனைவிக்காக இல்லேன்னா லும், பிள்ளைக்காக சரியாகிடுவா ருனு முகத்துல சிரிப்பு வந்துடுச்சு. எனக்கு என்ன குழந்தை பிறந்துச்சு... தாயும் பிள்ளையும் செத்தாங்களா... பொழைச்சாங்களா...னு கூடஎட்டிப் பார்க்கலை என் காதல் கணவர். பொண்ணை தூக்கி வளர்த்தோம். இனி அவ பெத்த பிள்ளையத் தூக்கி சுமக்க வேண்டியதுதான்னு பதறி அடிச் சுக்கிட்டு ஓடி வந்தாங்க என் அம்மா. ஆண் பிள்ளை பிறந்திருக் குன்னு அவருக்குச் சொல்லி அனுப் பினதும், பிள்ளையப் பார்க்க வராம ஜோசியக்காரன பார்க்கப் போயிருக்கார்.அந்த ஜோசியக்காரனோடு பேர் என்னனு தெரியாது.ஊரு என்னனு தெரியாது. கறுப்பா, வெள்ளையா, நல்லவனா, கெட்டவனான்னு எது வும் தெரியாது. ஆனா, அவன் விளையாடின விளையாட்டு தான் என் வாழ்க்கையில பெரிய விபரீத விளையாட்டாச்சு.இந்தக் குழந்தையால தகப்பன் உயிருக்கு ஆபத்துன்னு சொல்லிருக் கான் ஜோசியக்காரன். நல்ல புரு ஷனா இல்லன்னாகூட ஒரு நல்ல தகப்பனா இருக்கிற வாய்ப்புல பெரிய குழிதோண்டி தன் வார்த்தை களால மண்ணை அள்ளி கொட்டிட் டான் அந்த புண்ணியவான். ஆஹா, பிள்ளையப் பார்க்க தகப்பன் வந்துட்டான்னு நிமிர்ந்தா, இந்தக் குழந்தை வேண்டாம்னு சொன்னதும் இடிஞ்சு போய் உட் கார்ந்தேன்.குழந்தையைத் தூங்க வெச்சுட்டு வாசலுக்கு வந்தா, திடீர்னு வீறிட்டு அழறான் குழந்தை. உள்ள போனா, குழந்தையோட தொடை சிவந்திருக்கு. பக்கத்துல பெத்தெடுத்த மகராசன் கல்லு மாதிரி நிக்கிறான்.வன்மத் தோட பச்ச புள்ளைய கிள்ளிப் பார்க்கிற ஒருத்தன் இதுக்கு மேல எதுக்கு நம்ம வாழ்க்கைக்குன்னு வெறுத்துப் போய் அந்த உறவைத் தூக்கி எறிஞ்சேன். “ நடிகை மனோரமா (குங்குமம், 14 .2. 2008 )

ஆச்சியோடு இந்நிலை முடிய வில்லையே ! அதனால் தானோ என்னவோ , “ பெண்ணடிமை பேசுகிற நாடு - பணப் / பேய்கள் உலவும் சுடு காடு / முன்னடி வை கம்பீர மொடு - உன் / மூச்சையே புயலாய் / விடணும் கோபக்குறியோடு ! / உன்னடிமை தீர / ஓங்கி வளர்ந்து வா / பாரதிக் கவிஞன் பாட்டு பலத்தோடு” ன்னு கவிதை எழுதிய கவிஞர் நவகவியும் இன்னும் பல பட்டுக் கோட்டைகள் வரணும் பாட்டுகள் கட்டித் தரணும்னு ஆசைப் பட்டார். நியாயந்தானே ! தொடர்ந்து பார்ப்போம்...

நன்றி : தீக்கதிர் இலக்கியச்சோலை 7 ஜூலை 2014

உங்கள் நம்பிக்கை உன்னதமானது ..

Posted by அகத்தீ Labels:உங்கள் நம்பிக்கை உன்னதமானது ..
சரியோ தப்போ - அது
உங்களின் மேலான நம்பிக்கை
எதை வேண்டுமானாலும்
நீங்கள் நம்பலாம் - அது
உங்கள்  உரிமை


பூமியை தட்டை என்று சொல்லுங்கள்
சந்திரனை பாம்பு விழுங்கியது எனச் சொல்லுங்கள்
மின்வெட்டுக்கு சிம்மத்தில் சனியே காரணம் எனச் சொல்லுங்கள்
செவ்வாய் தோஷம் , ஏழரைச் சனி ,குருபெயர்ச்சி
பதிமூன்று ராசி இல்லாத எண்
எதை வேண்டுமானாலும் நம்புங்கள்
பரிகாரம் . பூஜை , தொழுகை , பிரார்த்தனை
எதை வேண்டுமானாலும் செய்யுங்கள்!

சரியோ தப்போ - அது
உங்களின் மேலான நம்பிக்கை
எதை வேண்டுமானாலும்
நீங்கள் நம்பலாம் - அது
உங்கள்  உரிமை

எவனாவது இதைக் கேள்விகேட்டால்
நாத்திகனுக்கு இதைப் பற்றி என்ன கவலை
என கேள்வியைப் புறந்தள்ளுங்கள்
சொந்த மதத்தவன் வினவின்
பிறமதத்தை கேட்பாயோ என வாயடையுங்கள் !
அடுத்த மதத்தவன் சொல்லிவிட்டால்
ஆக்ரோஷத்தோடு கொலைவாள் தூக்குங்கள் !

சரியோ தப்போ - அது
உங்களின் மேலான நம்பிக்கை
எதை வேண்டுமானாலும்
நீங்கள் நம்பலாம் - அது
உங்கள்  உரிமை

உங்கள் மதம் உயர்வானது
உங்கள் மதம் மட்டுமே உயர்வானது
உங்கள் சடங்குகள் உன்னதமானது
உங்கள் சடங்குகள் மட்டுமே உன்னதமானது
அடுத்தவர் மதமும் கடவுளும் அழுக்கானவை
அடுத்தவர் நம்பிக்கை இழிவானது
பகுத்தறிவு ஒழுக்கக் கேடானது !
மதநல்லிணக்கம் கோழைத்தனம்!
மதச்சார்பின்மை அயோக்கியத்தனம்
மதவெறி புனிதமானது
எங்கும் எல்லா மதத்தவருக்கும்
மதவெறியே உயர் கலாச்சாரம்!

சரியோ தப்போ - அது
உங்களின் மேலான நம்பிக்கை
எதை வேண்டுமானாலும்
நீங்கள் நம்பலாம் - அது
உங்கள்  உரிமை!

ஆமாம் ! ஆமாம் !
உங்கள் மத , சாதி பெருமை குறையவிடாதீர்
தவறியும் பிற சாதியர் மதத்தவர்
வியர்வையில் விளைந்த எதையும் உண்ணாதீர் !
தவறியும் பிற சாதியர் மதத்தவர்
உழைப்பில் உருவான எதையும்  உடுத்தாதீர்
தெரியாமல் கூட பிற சாதியர் மதத்தவர்
காய்ப்பேறிய கையில் உருவான வீட்டில் குடியிருக்காதீர் !
எந்தச் சூழலிலும் பிறமதத்தவர் சாதியர்
கையால் மருத்துவம் செய்யாதீர் !
மாட்டுக்கறி பன்றிகறி திங்கிறவன் கண்டுபிடித்த
எந்த அறிவியல் பொருளையும் உபயோகிக்காதீர் !
ஆம் ! அலை பேசி , இணையம் , பஸ் , விமானம் ,
வெடிகுண்டு . துப்பாக்கி , ஒலிபெருக்கி , தொலைகாட்சி
எதுவும் வேண்டவே வேண்டாம்
சாதி மத சம்பிரதாயப் பெருமை குலையவே வேண்டாம் !

சரியோ தப்போ - அது
உங்களின் மேலான நம்பிக்கை
எதை வேண்டுமானாலும்
நீங்கள் நம்பலாம் - அது
உங்கள்  உரிமை

ரகசியம்
மதுவுக்கும் மாதுக்கும்
சாதி மதம் இல்லை
யாரிடமும் சொல்ல வேண்டாம்
இருட்டு துணையிருக்கும் !

சரியோ தப்போ - அது
உங்களின் மேலான நம்பிக்கை
எதை வேண்டுமானாலும்
நீங்கள் நம்பலாம் - அது
உங்கள்  உரிமை !!!!!

- சு.பொ.அகத்தியலிங்கம் .