ரஸ்தோகி... அமித்ஷா... சுப்பிரமணியன்சாமி...

Posted by அகத்தீ Labels:


ரஸ்தோகி... அமித்ஷா... சுப்பிரமணியன்சாமி...

சு.பொ.அகத்தியலிங்கம்

சென்ற பாஜக ஆட்சியில் முரளி மனோகர் ஜோஷி என்சிஇஆர்டி [NCERT] அமைப்பின் கல்வித் துறைப் பணி நியமனங்கள் செய்வதற்கான் குழுவில் கே.ஜி.ரஸ்தோகி என்பவரை நியமித்தார். இவரது சுய சரிதை 1998ல் வெளிவந்திருந்தது. இதை அவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்குச் சமர்ப்பணம் செய்திருந்தார். இந்நூலுக்கு முன்னுரை எழுதியிருந்தது அன்றைய ஆர்.எஸ்.எஸ் தலைவர் கே. சி.சுதர்சன். ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராக இருந்த காலத்தில் தான் வெடிகுண்டு முதலான ஆயுதங்களைப் பயன்படுத்தப் பயிற்சி எடுத்துக் கொண்டது பற்றியெல்லாம் அதில் விலாவாரியாக எழுதியிருப்பார்.

அந்தச் சுய சரிதையில் ஒரு சம்பவம்: புரண்கல்யாண் என்னும் இடத்தில் ரஸ்தோகி இருந்தபோது ஒரு வகுப்புக் கலவரம். ஒரு அழகிய முஸ்லிம் பெண்ணை நோக்கி ஒரு இந்துத்துவ வெறிக் கும்பல் ஓடி வருகிறது. அவர்களின் நோக்கம் பாலியல் வன்முறை. இதைக் கவனித்தார் ரஸ்தோகி.“எனக்கு ஒரு ‘ஐடியா’ வந்தது. தாக்கவந்தவர்களை மிரட்டினேன், திட்டினேன். பிறகு இந்தப் பிரச்சனைக்கெல்லாம் காரணமான அந்தப் பெண்ணைச் சுட்டுக் கொன்றேன். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். முதலில் எல்லோரும் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு அவரவர்கள் வேலையைப் பார்க்கப் போனார்கள்.” (ரஸ்தோகியின் சுய சரிதை, பக். 46)அ.மார்க்ஸ், எழுதிய ‘ஆட்சியில் இந்துத்துவம்‘, நூலில் இடம் பெற்றிருக்கும் செய்திகள் இவை .

தகுதியற்ற நியமனம்

இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கழகத்தின் (ICHR) தலைவராக பா.ஜ.க அரசின் கல்வி அமைச்சர் (அவரேதான், தன் கல்வித் தகுதி குறித்துத் தேர்தல் ஆணையத்துக்குக் கொடுத்த தகவலில் பொய் கூறினாரே அவர்தான்) ஸ்மிருதி ராணி ஒருவரை நியமித்துள்ளார். அவர் பெயர் எல்லப் பிரகத சுதர்ஷன் ராவ் (இப்படி ஒரு பெயரை நீங்கள் எங்காவது வரலாறு தொடர்பாகக் கேள்விப்பட்டது உண்டா?). தகுதியற்ற நபர் என வரலாற்றறிஞர் ரொமிலா தாப்பர் இன்று இந்த நியமனத்தைக் கண்டித்துள்ளார். பா.ஜ.க ஆட்சியில் இதெல்லாம் வியப்புக்குரிய ஒன்றல்ல. சென்ற முறை பி.ஆர்.குரோவர் என்று ஒரு ஆளை முரளி மனோகர் ஜோஷி இந்தப் பதவியில் நியமிக்கவில்லையா? பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் இருந்தது எனவும், 1992ல். பாபர்மசூதி (தானாக) விழுந்தது எனவும் புத்தகம் எழுதியதற்காக அவருக்கு இந்தப் பரிசு வழங்கப்பட்டது.

ஐ சி ஹெச்ஆர் [ICHR] அமைப்பின் தலைவராக பி.எல்.சோந்தி என்கிற நபர் அப்போது நியமிக்கப்பட்டார். அவருடைய தகுதி பாரதிய ஜனசங் கட்சி சார்பில் ஒருமுறை எம்.பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது மட்டுமே. இந்த நியமனங்கள் மட்டுமல்ல; ஏற்கனவே ICHRல் பணியில் இருந்த தகுதி பெற்ற வரலாற்றறிஞர்கள் 18 பேர்களைப் பணி நீக்கமும் செய்தார் ஜோஷி. சரி அந்தக் கதை கிடக்கட்டும். இப்ப இன்றைய கதைக்கு வருவோம். நம்ம இன்றைய தலைவர் எல்லப் பிரகத சுதர்ஷன் ராவ் “இந்திய சாதி அமைப்பு - ஒரு மறுபார்வை” என்றறொரு கட்டுரை எழுதியுள்ளார்.அதன் முத்தாய்ப்பான வரிகள்:

“The (caste) system was working well in ancient times and we do not find any complaint from any quarters against it. It is often misinterpreted as an exploitative social system for retaining economic and social status of certain vested interests of the ruling class”

இந்தியச் சாதி அமைப்பு மிகச் சிறப்பாகச் செயல்பட்டதாம். எந்தக் ‘கம்ப்ளெய்ன்ட்’டும் இல்லையாம். இது எப்டி இருக்கு? வரலாற்றறிஞர் டி.என்.ஜா இது குறித்து அடித்துள்ள கமென்ட்:”அவருக்குத் தெரியாது போல இருக்கு .அந்த ‘சிஸ்டம்’ இப்ப இருந்தா மோடி (போன்ற ஒரு பிற்படுத்தப்பட்ட சாதிக்காரர்) பிரதமர் ஆகியிருக்க முடியாதென” இந்த விவரங்களை முகநூலில் அ.மார்க்ஸ் சுட்டிக் காட்டி இருக்கிறார்.

அவுட்லுக்கில் வித்தியாசமான கட்டுரை ஒன்று படித்தேன். நான் புரிந்து கொண்டது இது. என்கிற குறிப்புடன் விபாவி என்பவர் ஹைதராபாத்திலிருந்து எமக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சல் வருமாறு
கறிக்கடை கூடாதாம்

”நாங்கள் 68 கறிக்கடைக்காரர்களை அடையாளம் கண்டு கொண்டோம்.அவர்கள் அனைவருக்கும் 5 லட்சத்திலிருந்து பத்து லட்சம் வரை பணம் கொடுக்க முயன்று வருகிறோம். அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் பலித்னாவில் (Palitana) இனிமேல் கறிவெட்ட மாட்டோம் என்ற உறுதிப்பத்திரத்தில் கையெழுத்து போட வேண்டியதுதான்” என்று சொல்கிறது அங்குள்ள ஜைன அடிப்படைவாத அமைப்பு.ஏனென்றால் பலித்னா ஜைனர்களின் புனிதஸ்தலம். 24 தீத்தங்கரர்கள் தரிசித்த மலை. சத்ருன்ஜேயா மலையில் மட்டும் 3000 ஜைன கோவில்களும், 27000 சிலைகளும் இருக்கின்றன. எங்கள் புனித நகரத்தில் ஏன் இப்படி உயிர்வதை செய்கிறீர்கள் என்பது அவர் வாதம்.

வெங்காயம், பூண்டையும் எதிர்த்தால்...

“அப்படியெல்லாம் சொல்லாதீர்கள். பலித்னா நகரம் எங்களுக்கும் சொந்தம். நாங்கள் 25 சதவிகிதம் இருக்கிறோம். எங்கள் உணவு பழக்கம் மாமிச உணவு உண்பது. நீங்கள் யார் எங்கள் உரிமையில் தலையிட”. இது பலித்னா நகரத்தில் வாழும் முஸ்லிம்களின் பதில்.கோவிலைச் சுற்றி 250 மீட்டரில் கறிவெட்டக்கூடாது, உண்ணக்கூடாது என்ற சட்டம் ஏற்கனவே இருக்கிறது. இந்த ஜைனர்கள் நகரத்தை தங்கள் வீடாக்கப் பார்க்கிறார்கள்.இது தவறான உதாரணம் ஆகிவிடும். இன்று பலித்னாவில் கறி சாப்பிடுவதை எதிர்க்கும் ஜைனர்கள் நாளை வெங்காயம், வெள்ளைப் பூண்டையும் எதிர்த்தார்கள் என்றால் அதையும் சாப்பிடக்கூடாதா? இது என்ன அநியாயம். இது சமூக ஆர்வலர்களின் குரல்.பலித்னா இருப்பது குஜாரத்தில். பாஜகவின் அமித் ஷா ஒரு ஜைனர்.

அதனால் பலித்னா ஜைனர்கள் அவர்கள் நினைத்ததை சாதித்துவிடுவார்கள் என்று வருத்தத்துடன் சொல்கிறார்கள் அங்குள்ள முஸ்லிம்கள்.குஜராத் சைவ மாநிலம் என்பது மாதிரியான தகவல்கள் திட்டமிட்டு கட்டமைக்கப்படுகின்றன. உண்மை அதுவல்ல. 68 சதவிகித, அதாவது எழுபது சதவிகித குஜராத் மக்கள் மாமிசம் உண்பவர்கள் தான் என்ற உண்மை எத்தனை பேருக்கு தெரியும் என்கிறார் இன்னொரு சமூக ஆர்வலர்.இதற்கு அவரால் முடிந்த ஒரு வழியைச் சொல்கிறார் எழுத்தாளர் ரேணுகா நாராயணன். இசைக்கலைஞர் ”உஸ்தாத் பதே குலாம் அலிகான்” சென்னை வந்தாராம். வந்தவர் எம்.எல் வசந்தகுமாரியின் வீட்டில்தான் தங்குவேன் என்று ஹோட்டலை மறுத்து எம்.எல்.வியின் வீட்டுக்கு வந்தாராம். எம்.எல் வசந்தகுமாரி சைவம்.

ஆனால் அலிகானோ மாமிச உணவில் ஈடுபாடு உடையவர். எம்.எல். வசந்தகுமாரியின் கணவர், சொன்ன யோசனைப்படி உஸ்தாத் பதே குலாம் அலிகான் மாடி போர்ஷனில் சாப்பிட்டுக் கொண்டாராம். சென்னையிலுள்ள பிரபல மிலிட்டிரி ஹோட்டலில் இருந்து அசைவ உணவு போகுமாம்.இதுமாதிரி பலித்னாவிலும் மக்கள் அட்ஜஸ்ட் செய்து போனால் நல்லது என்று சொல்கிறார் எழுத்தாளர்.

வயிற்றிலடிப்பது

இங்கே சில இந்து அமைப்புகளும் மதவெறியர்களும் கோவிலிருக்கும் ஊரில் கறிக்கடை வேண்டாம் ; கோவிலுக்கு போகும் முன்பும் பின்பும் அசைவ உணவு கூடாது என்கிறார்கள். கூடவே ஒரு நாளும் கோவிலுக்குப் போகாமல் இருக்கக் கூடாது என்றும் கூறுகிறார்கள். இதன் பொருள் என்ன? ஒரு நாளும் கறி, மீன் சாப்பிடக்கூடாது என்பதுதானே! இது உழைப்பாளிகள் வயிற்றிலடிக்கும் செயல் அல்லவா ? இதனைத் தொடர்ந்து நான் முகநூலிலிட்ட பின்னோட்டம்

“கோவிலருகே இறைச்சிக்கடை கூடாது
கோவிலுக்கு போகும்போது இறைச்சி வேண்டாம்
மனம் உருக வேண்டினார் உபதேசி
கண்ணப்பரின் சிவனைஎப்போது நாடுகடத்தினீர் ?
ஏழை பக்தனின் எளிய கேள்வி...”

அது இருக்கட்டும் இந்த அமித் ஷா மீது இப்படி நம்பிக்கை வைப்பது இவர் மட்டுமா ? இல்லை. பஞ்சாபில் சீக்கியர்கள் மனமுவந்து முஸ்லிம்களுக்கு இப்தார் விருந்து கொடுக்கிற படத்தை தன் டுவிட்டர் பக்கத்தில் பதிந்துள்ள சுப்பிரமணியன் சாமி அதில் குறிப்பிட்டிருக்கிறார் அமித் ஷாவை பஞ்சாபுக்கு அனுப்பி இவனுகளை திருத்த வேண்டும். என்கவுண்ட்டர் புகழ் - கலவர புகழ் அமித் ஷா என்ன பணி செய்யப் போகிறார் என்பதற்கு இது அறிகுறி. அமித் ஷா சைவ உணவு பழக்கம் உள்ளவர் .

சைவ உணவு பழக்கம் உள்ளவர்கள் மென்மையானவர்கள், அகிம்சாவாதிகள் என கூறுவோர் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? கொலைவெறிக்கு காரணம் உணவு அல்ல; வெறிவுணர்வு என்பதறிக! சமஸ்கிருதத்தை எல்லாமொழிக்கும் தாயென்பதும்இந்தியை திணிப்பதும் இன்னொரு தாக்குதல் . உணவு , மொழி , வரலாறு அனைத்திலும் ஒற் றைப் பண்பாட்டு ஆதிக்க திணிப்பு-பிராமணிய ஆதிக்கப் பண்பாட்டுத் திணிப்பு நடந்தேறிக் கொண்டிருக்கிறது நாம் எதிர்கொள்ளும் சவால் கொஞ்சமல்ல என்பதுணர்க !

தீக்கதிர் 21 ஜூலை 2014

0 comments :

Post a Comment