உங்கள் நம்பிக்கை உன்னதமானது ..

Posted by அகத்தீ Labels:உங்கள் நம்பிக்கை உன்னதமானது ..
சரியோ தப்போ - அது
உங்களின் மேலான நம்பிக்கை
எதை வேண்டுமானாலும்
நீங்கள் நம்பலாம் - அது
உங்கள்  உரிமை


பூமியை தட்டை என்று சொல்லுங்கள்
சந்திரனை பாம்பு விழுங்கியது எனச் சொல்லுங்கள்
மின்வெட்டுக்கு சிம்மத்தில் சனியே காரணம் எனச் சொல்லுங்கள்
செவ்வாய் தோஷம் , ஏழரைச் சனி ,குருபெயர்ச்சி
பதிமூன்று ராசி இல்லாத எண்
எதை வேண்டுமானாலும் நம்புங்கள்
பரிகாரம் . பூஜை , தொழுகை , பிரார்த்தனை
எதை வேண்டுமானாலும் செய்யுங்கள்!

சரியோ தப்போ - அது
உங்களின் மேலான நம்பிக்கை
எதை வேண்டுமானாலும்
நீங்கள் நம்பலாம் - அது
உங்கள்  உரிமை

எவனாவது இதைக் கேள்விகேட்டால்
நாத்திகனுக்கு இதைப் பற்றி என்ன கவலை
என கேள்வியைப் புறந்தள்ளுங்கள்
சொந்த மதத்தவன் வினவின்
பிறமதத்தை கேட்பாயோ என வாயடையுங்கள் !
அடுத்த மதத்தவன் சொல்லிவிட்டால்
ஆக்ரோஷத்தோடு கொலைவாள் தூக்குங்கள் !

சரியோ தப்போ - அது
உங்களின் மேலான நம்பிக்கை
எதை வேண்டுமானாலும்
நீங்கள் நம்பலாம் - அது
உங்கள்  உரிமை

உங்கள் மதம் உயர்வானது
உங்கள் மதம் மட்டுமே உயர்வானது
உங்கள் சடங்குகள் உன்னதமானது
உங்கள் சடங்குகள் மட்டுமே உன்னதமானது
அடுத்தவர் மதமும் கடவுளும் அழுக்கானவை
அடுத்தவர் நம்பிக்கை இழிவானது
பகுத்தறிவு ஒழுக்கக் கேடானது !
மதநல்லிணக்கம் கோழைத்தனம்!
மதச்சார்பின்மை அயோக்கியத்தனம்
மதவெறி புனிதமானது
எங்கும் எல்லா மதத்தவருக்கும்
மதவெறியே உயர் கலாச்சாரம்!

சரியோ தப்போ - அது
உங்களின் மேலான நம்பிக்கை
எதை வேண்டுமானாலும்
நீங்கள் நம்பலாம் - அது
உங்கள்  உரிமை!

ஆமாம் ! ஆமாம் !
உங்கள் மத , சாதி பெருமை குறையவிடாதீர்
தவறியும் பிற சாதியர் மதத்தவர்
வியர்வையில் விளைந்த எதையும் உண்ணாதீர் !
தவறியும் பிற சாதியர் மதத்தவர்
உழைப்பில் உருவான எதையும்  உடுத்தாதீர்
தெரியாமல் கூட பிற சாதியர் மதத்தவர்
காய்ப்பேறிய கையில் உருவான வீட்டில் குடியிருக்காதீர் !
எந்தச் சூழலிலும் பிறமதத்தவர் சாதியர்
கையால் மருத்துவம் செய்யாதீர் !
மாட்டுக்கறி பன்றிகறி திங்கிறவன் கண்டுபிடித்த
எந்த அறிவியல் பொருளையும் உபயோகிக்காதீர் !
ஆம் ! அலை பேசி , இணையம் , பஸ் , விமானம் ,
வெடிகுண்டு . துப்பாக்கி , ஒலிபெருக்கி , தொலைகாட்சி
எதுவும் வேண்டவே வேண்டாம்
சாதி மத சம்பிரதாயப் பெருமை குலையவே வேண்டாம் !

சரியோ தப்போ - அது
உங்களின் மேலான நம்பிக்கை
எதை வேண்டுமானாலும்
நீங்கள் நம்பலாம் - அது
உங்கள்  உரிமை

ரகசியம்
மதுவுக்கும் மாதுக்கும்
சாதி மதம் இல்லை
யாரிடமும் சொல்ல வேண்டாம்
இருட்டு துணையிருக்கும் !

சரியோ தப்போ - அது
உங்களின் மேலான நம்பிக்கை
எதை வேண்டுமானாலும்
நீங்கள் நம்பலாம் - அது
உங்கள்  உரிமை !!!!!

- சு.பொ.அகத்தியலிங்கம் .


0 comments :

Post a Comment