அவநம்பிக்கை கேள்விகளை.........????

Posted by அகத்தீ Labels:

அவநம்பிக்கை கேள்விகளை.........????

குப்புற விழுந்த பிறகும் மீசையை முறுக்கி நிற்கிறீர்களே  அது எப்படி சாத்தியமாகிறது ?

கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெற்றியின் கடைக்கண் பார்வைகூட தெரியாத போதும் நம்பிக்கையோடு புன்னகைக்கிறீர்களே அது எப்படி சாத்தியமாகிறது ?

நூற்றாண்டை இன்னும் ஆறுவருடங்களில் எட்டிப்பிடிக்கப் போகிறீர்கள் ஆயினும் இந்திய மக்கள் ஒரு தூசியைப் போல் துடைத்தெறிந்து விட்டார்களே ! இன்னுமா நம்பிக்கையோடு இருக்கிறீர்கள் ?

கடைக்கோடி கோவணாண்டியும் ‘ அம்பாணி ’கனவில் மிதக்கும் போதும்  எந்த நம்பிக்கையில் இன்னும் சோசலிசமே தீர்வென செப்பித் திரியமுடிகிறது ?

இப்படியாக நண்பர்களும் எதிரிகளும் குத்திக்குதறுகிறபோது என் நம்பிக்கை கெட்டிப்படுகிறது ஏனெனில் அது கற்பனையால் கட்டப்பட்டதல்ல விஞ்ஞானத்தால் புடம்போடப்பட்டது .

பதவிக்கனவிலும் பணக்கணக்கிலும் அரசியலுக்கு வந்தவராயின் அற்றகுளத்து அறுநீர் பறவையாய் எப்போதோ பறந்து போயிருப்போம் ! காற்றுள்ளே போதே தூற்றும் கலை தேர்ந்திருப்போம் !

நாங்களோ நாளைய தலைமுறைக்காக இன்று வியர்வை சிந்துகிறவர்கள் . இதனைப் புரியாதவகள் அவநம்பிக்கை கேள்விகளைக் கேட்டுக்கொண்டேதான் இருப்பார்கள் !

வரலாற்றில் நூற்றாண்டென்பது நொடியே  ! சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யமும் தகர்ந்தது வரலாறு  !  இந்தியா அடிமை விலங்கொடிக்கும் என்று சொன்னபோது என் முப்பாட்டன் நம்பினானா  சொல் !

உலகம் உருண்டை என்று சொன்னதை நம்ப மனித குலத்துக்கு எவ்வளவு ஆண்டுகள் தேவைப்பட்டது ! இன்றும் சோதிடக் கட்டத்தில் பூமியை சூரியன் சுற்றுவதாய் சொல்லும் பொய்யை நம்புவோரே அதிகம் உள்ளனரே !

மக்களின் அறிவுக்கண்ணைத் திறப்பது அவ்வளவு சுலபமில்லை என்பதறிவோம் ; அதுவும் சாதி மத இருட்டறையில் சுகங்காணும் எம்மக்களை ; வெளுத்ததெல்லாம் பாலென நம்பி ஏமாறும் எம்மக்களை விழிக்கச்செய்வது சுலபமல்ல என்பதறிவோம்.

ஆயினும் , உழைப்பை நம்பியே வாழும் மக்களின் வாழ்க்கை அனுபவம்  மார்க்ஸின் மூலதனத்தைப் புரியவைக்கும் ; ஆளப்பிறந்த வர்க்கம் எதுவென்பதை , சுரண்டும் வர்க்கம் எதுவென்பதை பட்டுத் தெளியும் நாள் வெகுதொலைவில் இல்லை .

ஹிட்டலரையும் மக்கள் கொண்டாடிய நாட்கள் இருந்தனவே ; ஆயினும் வரலாறு ஆழப்புதைத்ததே ! மாற்றங்கள் ஏமாற்றங்களாகும் போது மீண்டும் மாற்றை தேடுவது மனித இயல்பு ; பொறு அதுவரை !ஆனால் சும்மா இராதே ! இயங்கிக்கொண்டே இரு ! விதைத்துக்கொண்டே இரு !

பதவிக்கனவிலும் பணக்கணக்கிலும் அரசியலுக்கு வந்தவனாயின் அற்றகுளத்து அறுநீர் பறவையாய் எப்போதோ பறந்து போயிருப்போம் ! காற்றுள்ளே போதே தூற்றும் கலை தேர்ந்திருப்போம் !

நாங்களோ நாளைய தலைமுறைக்காக இன்று வியர்வை சிந்துகிறவர்கள் . இதனைப் புரியாதவகள் அவநம்பிக்கை கேள்விகளைக் கேட்டுக்கொண்டேதான் இருப்பார்கள் !

- சு.பொ.அகத்தியலிங்கம்.

0 comments :

Post a Comment