முடிவற்ற பயணம்

Posted by அகத்தீ Labels:


முடிவற்ற பயணம்
======================================

பயணம் இனிது
நெடிய பயணம் அதனினும் இனிது .
சிரமங்கள் , சிராய்ப்புகள் .
காயங்கள் , கஷ்டங்கள்
எவ்வளவு இருப்பினும்
பயணங்கள் இனிது .

சக பயணிகள் இனியர்
இணைந்து பயணிப்பது இனிதினும் இனிது
ஒவ்வொரு சகபயணியும்
சேரும் இடம் வெவ்வேறு
ஆயினும்
பயணம் நெடுக வந்தவரெல்லாம்
நெஞ்சில் தங்குவதில்லை
சிலர் நெஞ்சைவிட்டு நீங்குவதில்லை
எப்போதும்
சக பயணியர் இனியர் .

பயணம் மதிப்புவாய்ந்தது
பயணத்தில்
ஏமாந்ததுண்டு , தடுமாறியதுண்டு ,
திகைத்து நின்றதுண்டு ,
விபத்துகளும் உண்டு
கொண்டதும் கொடுத்ததும்
இழந்ததும் பெற்றதும்
நிறையவே உண்டு .
எப்படியிருப்பினும்
பயணம் மதிப்பு வாய்ந்தது .

பயணம் முடிந்தபின்
திரும்பிப் பார்த்திட முடியாது
பின் தொடரும் பயணிகள்
நடைபாதையில்
முன்சென்றவர் விட்டுச்சென்ற
தோட்டங்களில் உலவியவாறே..
பதித்த முட்களை அகற்றியவாறே..
புதிய தோட்டங்களை எழுப்பியவாறே..
புதிய முட்களை புதைத்தவாறே...
பயணம் முடிந்தபின்
திரும்பிப் பார்த்திட முடியாது

- சு.பொ.அகத்தியலிங்கம்

0 comments :

Post a Comment