மாவோயிஸ்டுகள் சுயரூபம் அறிய....

Posted by அகத்தீ Labels:


மாவோயிஸ்டுகள் வன்முறை குறித்த செய்திகள் கிட்டத்தட்ட தினசரி கேள்விப் படுகிறோம். அறிவு ஜீவிகள், எழுத்தாளர்கள் சிலர் இந்த மாவோயிஸ்டுகள் பழங்குடி மக்கள் நலனுக்காக நிற்பதாக பேசியும் எழுதியும் வருகின்றனர். ஆக ஒரு பக்கம் அராஜக முகமும் மறுபக்கம் பழங்குடிகள் காவலர் முகமும் என இரு தோற்றமளிக்கும் இவர்கள் யார்? இவர்களின் நோக்கம் என்ன? தத்துவம் என்ன? இவர்கள் எப்படி வளர்ந்தார்கள்? இவர்களின் மூலம் எது? இவர்கள் இரக்கமற்ற வன்முறை மூலம் எதைச் சாதிக்கப் போகிறார்கள்? இவர்கள் பால் ஊடகங்கள் சில அக்கறை காட்டுவது ஏன்? இப்படி அடுக்கடுக்காய் எழும் கேள்விகளுக்கு விடையாக நக்சலிசம் முதல் மாவோயிசம் வரைஎனும் நூல் வெளிவந்ததுள்ளது. அன்வர் உசேன் இந்நூல் மூலம் ஒரு தத்துவப் போராட்டத்திற்கு வாசலைத்திறந்துள்ளார். பாராட்டுகள்.

ஒரு நூலின் முன்னுரையை படித்துவிட்டு நூலுக்குள் செல்வதா? அல்லது நூலைப்படித்த பின் முன்னுரையை படிப்பதா?இரண்டு வழக்கமும் நடப்பில் உண்டு. முன்னுரையை, அணிந்துரையை படிக்காமல் போகிறவர்களும் உண்டு. இதில் எது சரி? இது அவரவர் தேர்வு. ஆயினும் இந்நூலைப் பொறுத்தவரை வே. மீனாட்சி சுந்தரம் எழுதியுள்ள முன்னுரை மிக முக்கியமானது இதில் இந்த பயங்காரவாத நோய் எப்படி பிரெஞ்சுப் புரட்சியின் போது உருவானது என்பதை விவரிப்பதை கட்டாயம் முதலில் படிப்பது அவசியம். நூலைப் புரிந்து கொள்ள அது சாவி ஆகிறது.

வரலாற்றைக் கவனித்தால் அரசு அடக்கு முறைக் கருவியாக இருக்கும் வரை பயங்கரவாதஅரசியலும் விளைந்து கொண்டே இருக்கும் என உறுதிபடக் கூறுவதுடன் மார்க்சியவாதிகள் மட்டுமே இதனை எதிர்ந்து சித்தாந்தப் போரை பிரெஞ்சுப் புரட்சி காலம் தொட்டு இன்றுவரை நடத்தி வருகின்றனர் என்கிறார் வே. மீனாட்சி சுந்தரம்

பயங்காரவாத அரசியலை ஒரு அரசு எதிர்கொள்வது எப்படி என்ற சர்ச்சை இன்று உலகளவிலும் நாட்டிற்குள்ளும் சூடாக நடைபெறுகிறது என்று கூறும் இவர்; சரியான அரசியல்,பொருளாதார மேம்பாடு, மக்களின் உன்னத உணர்வுகளை மதிக்கும் சிவில் உரிமைகள் பாதுகாப்பு எனப்பாதையும் காட்டுகிறார். பிரெஞ்சுப் புரட்சியின் போது மாக்சிமிலியன் ராபஸ்பியர் தொடங்கிய இந்த தீமை அவரையே பலிவாங்கியதையும் இன்றும் தொடர்வதையும் முன்னுரை பதிவு செய்துள்ளது. இந்த அறிமுகத்தோடு அன்வர் உசேன் எழுத்துகளுக்குள் நுழைவது புரிதலை வலுவாக்கும்.

152 பக்கங்களில் 40 அத்தியாயங்களில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் நிலை பாட்டிலிருந்தும் ஆவண ஆதாரங்களிலிருந்தும் எளிமையாக ஆனால் வலுவாக இப்பிரச்சனை குறித்து எடுத்து வைக்கிறார் அன்வர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து இந்த தீவிரவாத குழுக்கள் பிளவு பட்டவர்கள் எனினும். இவர்கள் அடிப்படையான மார்க்சியப் பார்வையைக் கைவிட்டவர்கள் என்பதை வரலாற்றுப் பின்புலத்தோடு கூறுகிறார். மேற்கு வங்கத்தில் நக்சல்பாரி என்ற இடத்தில் பிறந்த இந்த இயக்கம்; சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவோடு ஆரம்பத்தில் செயல்பட்டதை எடுத்துக் காட்டுகிறார்.
ஆரம்பத்தில் உற்சாகமான எழுச்சி என்கிற தோற்றத்தோடு எழுந்த இயக்கம் எப்படி சீரழிந்து உடைந்து உருமாறி இணைந்து பிரித்து என பல அவதாரம் எடுத்ததை காட்டுகிறார்.

நக்சல்பாரிகள் ஆரம்பத்தில் கொன்றழிக்கும் வேலைகளில் ஈடுபட்டபோது எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை இந்நூலை படிக்கிற யாருக்கும் இவர்களின் குரூரமனம் நிச்சயம் புலப்படும்

இடது சாரிகள் என்று கூறிக் கொண்டாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு எதிராக அவர்கள் இருப்பது ஏன்? ஜோதிபாசு தலைமையில் அன்று மேற்கு வங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இவர்களை எப்படி எதிர்கொண்டது?ஒருபுறம் சித்தாந்தப் போராட்டம்; மறுபுறம் சிபிஎம் தொண்டர்களின் உயிர்த்தியாகம், அரசின் உறுதியான அரசியல் நடவடிக்கைகள், நிலவிநியோகம் இவற்றை நாம் அறிய இந்நூல் உதவுகிறது. இதனைபிரச்சாரம் செய்தாக வேண்டும்.

அதுபோல நக்சலிசம் முதல் இன்றைய மாவோயிசம் வரை எல்லோரும் தங்களை தெலுங்கானா வீரப்போராட்டத்தின் வாரிசுகள் என்று கூறிக் கொண்டாலும் உண்மையில் அவர்கள் அந்த தியாக பராரம்பரியத்தின் வாரிசு அல்ல என்பதையும்; தரகு முதலாளித்துவம், தனிநபர் படுகொலை போன்றவை தவறான கணிப்புகள் என்பதையும்; கொன்றழிக்கும் பயங்கரவாதம், போன்ற அச்சுறுத்தல் மூலம் எதையும் சாதிக்க முடியாது என்பதையும் கடந்தகால வரலாற்று அனுபவம் மூலம் நன்றாக இந்நூலில் அன்வர் வாதிடுகிறார்.

சில வாதங்களும், பதில்களும் திரும்பத் திரும்பச் சொல்லுவது பல அத்தியாயங்களில் உள்ளன. ஆனால் அவர்களின் தவறான தத்துவத்தை தவறான பாதையை திரும்பத் திரும்ப எடுத்துக் காட்டுவது தவிர்க்க முடியாதது. காங்கிரஸ் கட்சி, மம்தா கட்சி, ஊடகங்கள் இவைகள் கண்மூடித்தனமாக மார்க்சிஸ்ட் கட்சி எதிர்ப்பு மனோநிலையில் பயங்கரவாதத்துக்கு துணைபோவதும்; அதன் நாசகர விளைவுகளும் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. உண்மையில் மார்க்சிஸ்ட் கட்சித் தொண்டர்களே தொடர்ந்து இவர்களின் வன்முறைக்கு பலியாகி வருகின்றனர். என்ற உண்மையை இந்நூல் சரியாக பட்டியலிட்டு காட்டுகிறது.

மாவோயிஸ்டுகள் செயல்பாடு இடதுசாரி சக்திகளை சீர் குலைக்கவே பயன்படுகிறது. என்று கூறுகிற அன்வர்; அவ்வாறு இடது சாரிகள் பலவீனப்பட்டால் பலனடைவது யார்? என்ற கேள்வியை எழுப்புகிறார். சிபிஐ (எம்) ஐ பலவீனப்படுத்த மாவோயிஸ்டுகள் செய்யும் ஒவ்வொரு செயலும் வலதுசாரி சக்திகளுக்கு, உள்நாட்டு வெளிநாட்டு முதலாளிகளுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.மாவோயிஸ்டுகள் ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்கின்றனர் என்பதை அழுத்தம் திருத்தமாக அன்வர் இந்நூலில் பதிவு செய்துள்ளார்.

காவிப்படை வலுவாக உருவான கடந்த பத்து ஆண்டுகளில் பல நக்சல் அமைப்புகளும் சரி, ஆயுதப் போராட்டத்தினரும் சரி -ஏனையோரும் சரி-எந்த எதிர்ப்பையும் காட்டாமலே இருந்தனர். அத்வானியின் ரதயாத்திரையையோ அல்லது அர்எஸ்எஸ் பஜ்ரங்கள் கொலைக்காரக் கும்பலையோ எதிர்த்து எந்த நக்சல் அமைப்பும் வீதிக்கு வரவில்லை அல்லது தமது ஆயுதக் குழுக்களை சங்பரிவாரத்திற்கு எதிராக அனுப்பவில்லை (EPW நவம்பர் 1,2003) சுமந்தர் பானர்ஜியின் மேற்கோள்களை சுட்டிக் காட்டி இந்த பயங்கரவாத அமைப்புகளின் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்டுகின்றார் அன்வர்.

அது மட்டுமல்ல ஏகாதிபத்திய சக்திகள் இவர்களுக்குள் எப்படி ஊடுருவி உள்ளனர். என்பதையும் சுட்டிக் காட்டுகிறார். எப்படி ஏகாதிபத்தியம் காசு பணத்தைக் கொட்டி இவர்களை விலைக்கு வாங்கியது என்பது அதிர்ச்சியான உண்மை.

குட்டி பூர்ஷ்வாக்கள், மத்திய தர வர்கத்தினர், உதிரிப்பாட்டாளிகள் என சமூகத்தில் குறிப்பிட்ட பகுதியினரே இவர்களின் அதிதீவிர பேச்சிலும் செயலிலும் மயங்குவதை, தடுமாறி திசைமாறுவதை; தாக்குதலை எதிர்கொள்ளும் போது சிதறி ஒடுவதை வரலாற்று அனுபவங்களூடே இந்நூலில் அன்வர் பதிவு செய்துள்ளார்.

அதே சமயம் நேற்றை நக்சலைட்டுகள் அல்ல இன்றைய மாவோயிஸ்டுகள்; இவர்களுக்கு பழங்குடி மக்கள் ஆதரவு அதிகம் உள்ளது என்கிற மயக்கம் ஊடகங்களால் ஊட்டப்பட்டுள்ளது. அதை அன்வர் அவருக்கே உரியபாணியில் எதிர்கொள்கிறார். 160 மாவட்டங்களில் இவர்கள் பரவி உள்ளதாகக் கூறுவது உண்மையல்ல; இம்மாவட்டங்களில் இருக்கும் எல்லா குழுக்களும் ஒன்றல்ல; இவர்களுக்குள் இணைப்பும் இல்லை ஒற்றுமையும் இல்லை. 12476 காவல் நிலையங்களில் உள்ள நிலப்பரப்பில் 509 காவல் நிலைய எல்லைக்குள் அதாவது 4 சதவீத காவல்நிலையப் பகுதிகளில் மட்டுமே இவர்கள் செயல்பாடு ஒரளவு உள்ளது என்பதைக் காட்டுகிறார்.

மேலும் இவர்களுக்கு மிகப்பெரும் அளவில் நிதி எப்படிக் கிடைக்கிறது? கஞ்சா பயிரிடுவது, போதை மருந்து கடத்தல், ஆயுதக் கடத்தல், சட்ட விரோத சுரங்கங்கள் என இவர்களின் நிதி திரட்டும் வழிகள் குறித்து அன்வர் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். அது முக்கியமான அம்பலப் படுத்தலாகும் முன்னுரையில் வே. மீனாட்சிசுந்தரம் கஞ்சா பிடிபட்ட விபரங்களை சுட்டிக் காட்டி பயங்கரவாத அரசியலுக்கு எது விளை நிலமோ அந்த இடம் கஞ்சா அபினி உற்பத்திக்கும் விளை நிலமாக உள்ளது என்கிறார். இந்த அம்சமும்; ஆயுத வியாபாரம், போதை மருந்து கடத்தல் இவற்றோடு சட்டவிரோத கனிம சுரங்கங்கள் செய்லபட இவர்கள் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் அனுமதிக்கப்படுவதும் அவர்களிடம் பெருமளவு பணம் கறப்பதும் முக்கியம். இவர்கள் வனக் காவலர்களோ, பழங்குடி நலன்பேணுபவர்களோ, சுற்றுச் சூழல் அக்கறையாளர்களோ அல்ல என்பதை நிறுவ இச் செய்தியை அன்வர் அடுத்துவரும் பதிப்புகளில் விரிவாக பதிவு செய்யவேண்டும்.

70களில் இடது தீவிரவாதம் மேலோங்கிய சூழலில் வாலிபர் சங்கத்தை கட்டி எழுப்ப மார்க்சிஸ்ட் கட்சி ஆர்வம் காட்டியது. மாணவர், வாலிபர் அமைப்புகள் களம் கண்டுதும் இளையதலைமுறையினரை ஆகர்ஷித்ததும் வரலாறு இன்று மீண்டும் அதே இடது சாரி அதி தீவிரம் இளைஞர்களை தங்கள் பக்கம் இழுக்க முயலும் போது வாலிபர் சங்கம், மாணவர் சங்கம் இவற்றில் செயல்பாடு வேகப்படுத்தப்படவேண்டும். விரிவுபடுத்தப்பட வேண்டும். இளைஞர்களிடையே சரியான தத்துவ அரசியல் விவாதம் எடுத்துச் செல்லப்பட்ட வேண்டும். அதற்கு இந்நூலும் உதவும். இளைஞர்கள் மாணவர்கள் இந்நூலைப் படித்து விவாதிப்பது அவசியம். தக்க நேரத்தில் தக்க நூலைத் தந்த அன்வருக்குப் பாராட்டுகள்
எல்லோரும் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது வெனில் மிகை அல்ல.

நக்சலிசம் முதல் மாவோயிசம் வரை
-அன்வர் உசேன்
பாரதி புத்தகாலயம் 7, இளங்கோதெரு,
சென்னை 600018
பக். 152. விலை ரூ. 80

நன்றி: தீக்கதிர் 18.07.2010

இடதுசாரிகளும் புதிய உலகமும்

Posted by அகத்தீ Labels:


சோஷலிசம் காலாவதியாகிவிட்டதென ஒரு பகுதி அறிவிஜீவிகள் உரக்கப் பேசுகின்றனர்.சோஷலிசம் அல்லது மரணமென லத்தின் அமெரிக்க நாடுகளிலிருந்து அறைகூவல் வலுவாக எழுகிறது. எல்லாம் மாறும் என்ற விதியைத்தவிர எல்லாம் மாறும் என்பதே மார்க்சியமெனில் அந்த மார்க்சியமும் மாறாதாவென கேள்வி எழுப்புவோரும் உண்டு..

உலகமயமும் தாராளமயமும் தனியார்மயமும் மனித வாழ்வை மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது, மார்க்சியம் குறித்த மறுவாசிப்புக்கு உரிய தருணம் இது.’21-ஆம் நூற்றாண்டுக்கான சோஷலிசம் ‘ என்ற பெயரில் லத்தின் அமெரிக்கச் சிந்தனையாளர் மைக்கேல் லெபோவிச் எழுதிய நூல் மீதான விமர்சனம் விவாதமேடைக்கு அழைப்பு விடுத்து தீக்கதிர் ஏட்டில் 2010 பிப்ரவரி 4,5 தேதிகளில்வெளியானது. akathee.blogspot என்றமுகவரியிலுள்ள எமது ஃப்ளாக் ‘அகத்தீ‘ யில் பிப்ரவரி மாத பதிவிலும் பார்க்கலாம். அதன் தொடர்ச்சியே மார்த்த ஹர்னேக்கர் எழுதிய ‘இடதுசாரிகளும் புதிய உலகமும்‘ என்ற நூலாகும். ஆக இந்த இரண்டு நூலையும் .இரண்டின் மீதான எமது விமர்சனங்களையும் இணைத்து வாசித்து பயனுள்ள உரையாடல்கள் நடத்த முன்வருமாறு அழைக்கிறோம்.

நூல்கள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம். இது ஒரு அரசியல் நூல். ஆனால் இருப்பதைப் போற்றிட எழுதப்பட்ட நூல் அல்ல; எதிர்ப்பதற்காகவே எழுதப்பட்ட நூலும் அல்ல; வித்தியாசமாய் எழுத வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட நூலும் அல்ல; ஏதேனும் விவகாரத்தை உண்டாக்க வேண்டும் என்பதற்கான நூலும் அல்ல; மாறாக, மாற்றத்தைக் கொண்டுவர மனம் திறந்த விவாதத்திற்கு துவக்கபுள்ளியாகும் நூல். மனிதகுலத்தின் மீதான மாளாக்காதலோடும் - மார்க்சிய பற்றார்வத்துடனும் எழுதப்பட்ட நூல்.

நாலு பாகங்களாக - 14 அத்தியாயங்களாக இந்நூல் உள்ளது. முன்னுரையே முக்கியமான விவாதவெளியை நமக்கு அறிமுகம் செய்கிறது.
ஐம்பது வருடங்களுக்கு முன் இருந்த உலகின் சாயல் எதுவும் இல்லாத உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் எனத் தொடங்கி; சோவியத் யூனியன் தகர்வுக்குப் பிறகு - நவீன தொழில்நுட்பச் சகாப்தத்தில் நிலவும் சூழலையும் விவரித்து, புரட்சி என்பதே பரந்துபட்ட மக்களைத் திரட்டுவது என்பதை முன்வைத்து அதற்கே இந்நூல் என்கிறது முன்னுரை. முதல் பார்வையில் முற்றிலும் சரி என்ற எண்ணமே துளிர்க்கும்.

முதல் பாகத்தின் தலைப்பே இடதுசாரிகளும் புதிய உலகமும் என்பதுதான். உலகமயம் என்பதனை நிலை நிறுத்துவதற்காக ஒற்றைக் கலாச்சாரத் திணிப்பு நடைபெறுவதை, மக்களை பிளவுபடுத்திக் கொண்டிருப்பதை, மக்களிடம் அதிருப்தி மேலோங்குவதை, சாத்தியமான புதிய மாற்றை; இந்தப் பாகத்திலுள்ள மூன்று அத்தியாயங்களும் விவரிக்கின்றன. ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஒன்றுக்கு இரண்டுமுறை படிக்க வேண்டும்; ஒவ்வொரு வரியிலும் ஒவ்வொரு வார்த்தையிலும் உள்ளுறையாக இருக்கிற உண்மைகளை அசைபோட வேண்டும். பொலிவாரியக் கண்ணாடி மூலமே - லத்தின் அமெரிக்க அனுபவத்தின் ஊடாகவே - அவர் இவ்வுலகைத் தரிசிப்பது புலனாகும். அவற்றுள் நம் அனுபவத்தோடு பொருந்துவன பல. முரண்படுவன பல. ஆயினும் நம்நாட்டு அனுபவ உரைகல்லில் உரசியே நாம் உண்மையைத் தேட வேண்டும்.
புதிய இடதுசாரிக் கலாச்சாரத்தின் தேவையை மற்றும் இன்று இடதுசாரிக் கட்சிகள் சந்திக்கும் நெருக்கடியை விவரிக்கிறது இரண்டாவது அத்தியாயம். மார்க்சியம் நெருக்கடியில் இருக்கிறது என ஒப்புக்கொண்டு மார்க்சியத்தை நிராகரிக்கிற சக்திகளைப் போல் அல்லாமல், மார்க்சியம் எதிர்கொள்ள வேண்டிய சவால்களை இனங்காணும் முயற்சியாகவே இந்தப் பாகம் உள்ளது. இதில் நான்கு அத்தியாயங்கள் உள்ளன.

இன்றைய உலக நிலைமையில் இடதுசாரிகளை கடுமையாகப் பாதிக்கும் ஒரு விஷயம் உண்டென்றால் அது புதிய சவால்களை சமாளிக்கக்கூடிய கட்சி இல்லாததுதான் என்ற பீடிகை வலுவாகவே பதிவாகியுள்ளது. `மதம் ஒரு அபினி என்ற கண்ணோட்டத்தோடு மட்டுமே இன்றைய நடைமுறைகளை வகுக்க இயலுமா? ஜனநாயகத்தன்மை மறுக்கப்பட்ட கட்சி அமைப்பு எப்படி எதேச்சாதிகாரத்திற்கு போகிறது என்பதையும்; முற்றிலும் கீழ்படிந்த ஆளுமை அற்ற கட்சி உறுப்பினர்களை உண்டாக்கும் நிலை உருவாவதையும்; அதனால் தத்துவம் படிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி நடைமுறை உலகை காண மறுப்பதையும் நிறுவன பக்தி என்பது இடதுசாரிக் கோட்டையின் இதயத்தில் புகுந்து கிருமியாகிவிட்டதையும் ஆறு அத்தியாயங்களில் விளக்கப்பட்டுள்ளது.
`புதிய அரசியல் சாதனம் பற்றிய பார்வையை விவரிப்பது நான்கு அத்தியாயங்கள் கொண்ட மூன்றாவது பாகம், ஜனநாயகத்திற்கான போராட்டமும் சோஷலிசத்திற்கான போராட்டமும் ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிக்க முடியாதவை என்பதால் புதிய அரசியல் அமைப்பு ஜனநாயகத்தை தன்னுடைய லட்சியமாகக் கொள்ள வேண்டும் என்பதே இந்த அத்தியாயத்தின் மைய இழை. சர்வாதிகார ஆட்சிகளைத் தூக்கி எறியும் லத்தின் அமெரிக்க எழுச்சிகளூடே பெறப்பட்ட பாலபாடம் இது. அங்குள்ள சூழலில் இது பெரிதும் சரியாக இருக்கக்கூடும். அதனை வரலாறு தீர்மானிக்கட்டும். அரசியல் ஜனநாயகம் அது முதலாளித்துவ ஜனநாயகம்தான் எனினும் இங்கு அமலில் உள்ளது. இந்தியாவில் ஒருவித ஜனநாயகக் காற்று வீசுகிறது. ஆகவே லத்தின் அமெரிக்க அளவுகோல் இங்கு அப்படியே பொருந்திப்போகாது அல்லவா?
அனைவரும் பங்கேற்கும் ஜனநாயகம் என்று இந்நூலாசிரியர் வாதிடுவதை நம் நாட்டுச் சூழலில் எப்படிப் பொருள் கொள்வது? `சர்வாதிகாரம் என்ற சொற்றொடர் மக்கள் இதயத்தில் ஒருவித படிமத்தை வலுவாக உருவாக்கிவிட்டது. மார்க்ஸ் அதனை எப்படிச் சரியான பொருளில் உபயோகித்திருந்தாலும் `பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற சொற்றொடர் தற்போது தவறான பொருள் மயக்கத்தோடுதான் மக்களால் புரிந்துகொள்ளப்படுகிறது. எனவே ஜனநாயக உணர்வுமிக்க கட்சி இது என்ற எண்ணம் மக்களிடம் துளிர்விட `பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற சொற்றொடரைக் கைவிட வேண்டும் என்கிற இந்நூலாசிரியர் வாதம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏற்புடையது அல்ல.
தலைமை மீது மக்கள் நம்பிக்கை இழந்துவரும் சூழலில் புரட்சிகர ஒழுக்கம் உள்ள ஒரு தலைமையே இப்போதைய தேவை என நூலாசிரியர் வாதிடுவதை யாரும் மறுக்க முடியாது.

இடதுசாரிகளின் போராட்ட முறைகளும், ஸ்தாபன முறைகளும் ஈர்ப்பை இழந்துவிட்டன. சலிப்பை ஊட்டுகின்றன. அனைவருக்கும் பொதுவாக அலமாரியிலுள்ள ஒரு சிறு அறைக்குள் பொருந்திப் போகிறவர்கள் மட்டுமே, அதாவது வாரத்தில் ஏழு நாளும், நாளில் இருபத்தி நாலு மணி நேரமும் செயல்படுகிறவர்கள் மட்டுமே உறுப்பினர்களாக முடியும் என்கிற நிலையிலுள்ள இன்றைய நடைமுறையை இந்நூல் கேள்விக்குள்ளாக்குகிறது.
`தியாகம் பற்றிய பார்வையை தலைகீழாக மாற்ற இந்நூல் முன்வைக்கும் விவாதம்; இன்றைய நடைமுறையில் ஊறி கடந்த காலத்தில் வாழ்ந்து கொண்டிருப்போர்களுக்கு கசப்பாகவே இருக்கும். சிலர் மனதுக்கு உவப்பாக இருப்பினும் அவர்களுக்குள் இருக்கும் ஒருவித போலித்தனம் இதனை மறுதலிக்கச் செய்துவிடும்.

`ஜனநாயக மத்தியத்துவம் என்ற கோட்பாடு உருவான சூழலில் அது சரியாக இருந்தது; தலைமறைவு கட்சிக்குத் தேவையாக இருந்தது. பகிரங்கமாகச் செயல்படும் ஜனநாயகச் சூழலில் இது பொருந்திப்போகுமா என்கிற விவாதம் இந்நூலில் வலுவாக முன்வைக்கப்படுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரபூர்வமாக `ஜனநாயக மத்தியத்துவ கோட்பாட்டையும், `மேலிருந்து கட்டப்படும் கட்சி என்பதையும் வலுவாக இன்றும் பற்றிநிற்கிறது. எனவே நானும் அதனையே கூற வேண்டியவனாக இருக்கிறேன். எனினும் இந்நூலாசிரியர் இது பற்றிக் கூறுவதை ஒட்டியும் வெட்டியும் ஒரு பகிரங்க விவாதம் நடத்துவது புரிதலை செழுமைப்படுத்த தவறுகளைக் கைவிட அவசியத் தேவை அல்லவா? அதைச் செய்வதற்கு இதுவே தக்க தருணம். சோவியத் கட்சி அமைப்பை காப்பியடிப்பது மற்றும் கோஷ்டிகள் உள்கட்சி ஜனநாயகம் பற்றி எல்லாம் இந்நூல் பேசுகிறது. சால்க்கியா பிளீனம் என்ற சால்க்கியாவில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சிறப்பு மாநாடு நிறைவேற்றிய ஸ்தாபன அமைப்புத் தீர்மானங்களும் - நிறைவேற்றிய கோட்பாடுகளும் வழிகாட்டல்களுமே இந்தியச் சூழலுக்குப் பொருத்தமானவை.

`உள்கட்சி ஜனநாயகம், `சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி? என்கிற இரண்டு புத்தகங்கள் - சீனக் கம்யூனிஸ்ட் தலைவர் லியோசூசி எழுதியது - ஏற்கெனவே வெளிவந்துள்ளன. அந்நூல்களுக்கு முன்னுரை வழங்கிய தோழர் இஎம்எஸ் கூறினார்: இந்நூலை நன்கு படியுங்கள். உள்வாங்கிக்கொள்ளுங்கள். ஆனால் இது சீன அனுபவம். நமக்கு வழிகாட்டுவது சால்க்கியா பிளீன முடிவுகளே என்றார் அதனையே இப்போதும் வழிமொழிவது தவறு இல்லை. அதே சமயம் திறந்த மனதோடு விவாதம் தொடங்குவதும் தப்பு இல்லை.

நான்காவது பாகம் சீர்திருத்தங்களிலிருந்து புரட்சிக்கு மாறிய பொலிவாரிய அனுபவத்தை புகட்டுகிறது. இதில் நான்கு அத்தியாயங்கள் உள்ளன. பொதுவான படிப்பினைகள் மட்டுமே இதிலிருந்து நாம் பெறமுடியும். அதே சமயம் `முதலாளித்துவமே இறுதியானது என்கிற மாயத்தோற்றத்தை உடைத்தெறியும் இந்த அனுபவங்கள். புதிய மாற்று சாத்தியம் என்பதை நிறுவி நம்பிக்கை ஊட்டுகிறது.

உலகின் பெரும் நகரங்களின் செல்வச் செழிப்பு மிக்க பகுதிகளில் சீரமைத்தல் மூலமும் ஒற்றைத்தன்மையாக்குதல் மூலமும் நாசகரத்தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறது. எங்கெங்கும் உலகளாவிய கலாச்சாரம் வெற்றி அடைந்துகொண்டிருக்கிறது என்கிற பொதுவான கசப்பான உண்மையை இந்நூல் பதிவு செய்கிறது. ஒளிக்காட்சி ஊடகங்கள் இந்தக் கருத்துப் போரில் காத்திரமான பங்கு வகிப்பதையும், அதில் இடதுசாரிகள் பிடிமானம் இல்லாமல் இருப்பதையும் இதனால் உருவாகும் வெற்றிடத்தையும் இந்நூல் சரியாக நிறுவுகிறது. புதிய அமைப்பு கோட்பாட்டை முன்னிறுத்துகிறது. பழைய கோட்பாட்டை கேள்விக்கு உட்படுத்துகிறது.

இந்நூலைப் படித்து முடித்த பின் நெஞ்சுக்குள் பூதாகரமாக தலைதூக்கும் கேள்விகள் பல. இதோ அவற்றுள் சில.

1. `பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் இன்றைக்கும் தவறாகவே புரிந்துகொள்ளப்படும் சூழலில் மீண்டும் மீண்டும் அதே சொற்றொடர் பயன்பாடு தேவையா? பார்வை மாற வேண்டாமா?

2. `ஜனநாயக மத்தியத்துவம் என்கிற கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்புக் கோட்பாடு கட்சிக்குள் எதேச்சாதிகாரத்தனத்தை கொண்டுவந்துவிட்டதா? ஆளுமையற்ற படைப்பாக்கத்திறனற்ற கட்சி உறுப்பினர்களையும் ஊழியர்களையும் மட்டுமே உருவாக்கும் பாணியாக அது மாறிவிட்டதா? சோவியத் பாணி கட்சி அமைப்பு இன்னும் தேவையா?

3. எழுத்துக் கலாச்சாரமும் புத்தகக் கலாச்சாரமும் மேல்தட்டுக் கலாச்சாரமாக ஆகிவிட்டதால்; ஒலி-ஒளி ஊடகங்கள் மட்டுமே வெகுஜன கலாச்சாரமாகிவிட்டதால் இடதுசாரிகளாகிய நாம் செய்ய வேண்டியது என்ன?

4. `தொழிலாளி வர்க்கக் கட்சி `மதம் மக்களுக்கு அபின் போன்ற பார்வைகள் இப்போதும் பொருந்துமா?

5. மக்களிடமும் கட்சி அணிகளிடமும் நம்பிக்கை இழந்துள்ள கட்சித் தலைமை நம்பிக்கையைப் பெற புரட்சிகர ஒழுக்க விழுமியங்களை கைக்கொள்ள வேண்டாமா?

6. தத்துவமற்ற நடைமுறை குருட்டுத்தனமானது; நடைமுறையற்ற தத்துவம் மலட்டுத்தனமானது. இதில் ஏதேனும் ஒரு தவறை செய்பவர்களாகவே நிலைமை தொடர்வது ஏன்?

7. கருத்துப் பிரச்சாரம் என்பது ராணுவ ரீதியானதாக-வெறும் போதனையாக மட்டுமே இருக்க முடியுமா? ஜனநாயகபூர்வமான விவாதமாக்கப்பட-கருத்துப்போர் நடத்தப்பட வேண்டாமா?

8. கட்சித் தலைமை அறிவிக்கும் போராட்டங்கள் வெறும் சடங்காகவும், நம்பிக்கை ஊட்டாததாகவும் உள்ளதே. இதனை மாற்ற வேண்டாமா? பழைய போராட்ட வடிவங்கள் இன்றும் பொருந்துமா?

9. 24x7 என்ற செய்தி அலைவரிசை மாதிரி - அதில்கூட இடையிடையே விளம்பரம், விவாதம் எல்லாம் உண்டு. அதுவுமற்ற வகையில் கட்சி உறுப்பினர்களையும் கட்சி ஊழியர்களையும் கருதி குழாய்ப்புட்டு போன்று தொடர் இயக்கங்கள் நடத்துவது சரியா?

10. `மேலிருந்து கட்டப்படும் கட்சி என்பதற்குப் பதிலாக `கீழிருந்து வலுவான உள்கட்சி - ஜனநாயக ரீதியான கட்டமைக்கப்பட்ட கட்சிதானே இன்றைய தேவை?

இவையும் இவை போன்ற இன்னபிற கேள்விகளும் இந்நூலைப் படிக்கும் புரட்சிகர அக்கறை உள்ள கம்யூனிஸ்டுகள் எல்லோருக்கும் ஏற்படும்; அதன் விளைவாக எல்லாவற்றையும் இன்றைய சமூக அரசியல் பொருளாதாரச் சூழலில் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய அவசியம் தெறிக்கும். இந்நூல் சொல்வது எல்லாம் சரி என்று நிச்சயம் கூற இயலாது, கூறவும் கூடாது. ஆனால் உண்மையைத் தேடிடத் தூண்டும்; துரத்தும்; தூக்கத்தைத் தொலைத்து சிந்திக்கத் தூண்டும் கேள்விகளை இந்நூல் விதைக்கிறது. இன்றையத் தேவையும் இதுவே. ஆகவே இந்நூலை அக்கறையோடு வாசியுங்கள்-விவாதியுங்கள். அதுவே எம் வேண்டுகோள்.
(இந்நூலுக்கு எழுதப்பட்ட அணிந்துரை)

இடதுசாரிகளும் புதிய உலகமும் - மார்த்தா ஹர்னேக்கர் தமிழில்: அசோகன் முத்துசாமி, வெளியீடு: பாரதி புத்தகாலயம், விலை: ரூ. 110\- பக். 200