புதிய சகாப்தத்தை தொடங்கிவைத்த பீரங்கி முழக்கம்

Posted by அகத்தீ Labels:


புரட்சிப் பெருநதி -47


புதிய சகாப்தத்தை தொடங்கிவைத்த பீரங்கி முழக்கம்


- சு.பொ.அகத்தியலிங்கம்
லெனினின் முதல் பிரகடனமே யுத்தத்திற்கு எதிரான 
சமாதான முழக்கமாயிருந்தது. 
இரண்டாவது பிரகடனம் 
நிலத்தை உழுபவனுக்கு வழங்குவதாக அமைந்தது
“சமாதானப்பூர்வமான மாற்றமாக இருந்தாலும் சரி - சமாதானப்பூர்வமற்ற மாற்றமாக இருந்தாலும் சரி - எதுவாக இருந்தாலும் சரி; தொழிலாளி வர்க்கத்தையும் அனைத்து உழைக்கும் மக்களையும் ஆயுதபாணி ஆக்குவது அவசியம்.”“


 " பொறுமை, பொறுமை என்று அவர்கள் நமக்கு ஓயாமல் உபதேசிக்கிறார்கள். ஆனால் நாம் பொறுமை காக்க அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள்? நாம் உண்பதற்கு ஜார் கொடுத்ததைவிட கெரென்ஸ்கி கொடுத்திருக்கிறானா? அதிகமாக வாய்ப்பறை கொட்டியிருக்கிறான்; வாக்குறுதிகளை வீசியிருக்கிறான். ஆனால் துளியூண்டு ரொட்டியும் அதிகம் தரவில்லை. செருப்புக்கும் ரொட்டிக்கும் இறைச்சிக்கும் இரவு முழுக்க கொட்டும் பனியில் கால் மரத்துப் போகுமளவு காத்துக்கிடக்கிறோம். அதே சமயம் நம் பதாகையின் மீது விடுதலை என பொறித்துக் கொள்கிறோம். ஆனால் நமக்கு இருக்கும் ஒரே விடுதலை- அடிமை வேலை செய்வதும் - பட்டினி கிடப்பதும்தானே; முன்பும் இப்படித்தானே இருந்தது.
”இப்படித்தான் அந்த இடைக்கால ஆட்சி குறித்து மக்கள் பேசிக்கொண்டார்கள்; கசப்பும் வெறுப்பும் ஓங்கியது. 


லெனின் இக்காலத்தில் வகுத்தளித்த ஏப்ரல் கோட்பாடு மிகச்சரியானது என்பதை ஒவ்வொரு நொடியும் மக்கள் உணர்ந்து கொண்டிருந்தனர்.பின்லாந்தில் கவர்னர் அவ்வட்டார போலீஸ் அதிகாரியை அழைத்து லெனினை கைது செய்ய ஆணை பிறப்பித்துகொண்டிருந்த அதே வேளையில் அதே அதிகாரி வீட்டில்தான் லெனின் தலைமறைவாக இருந்து புரட்சிக்கு வழிகாட்டிக் கொண்டிருந்தார்.


நிலைமை கைமீறிப் போவதைத் தடுக்க அனைத்து ரஷ்ய ஜனநாயக மாநாடு, தற்காலிக அவை என பஞ்சுக் கேடயங்களால் நெருப்புக் கணைகளைத் தடுக்கமுயற்சித்து தடுமாறிக்கொண்டிருந்தனர் மென்ஷ்விக்குகள்.


பின்லாந்திலிருந்து லெனின் இரு கடிதங்கள் எழுதினார். ஒரு கடிதம் போல்ஷ்விக்குகள் அதிகாரத்தை ஏற்கவேண்டும் என வலியுறுத்தியது; அடுத்தகடிதம் மார்க்சியமும் ஆயுதம் தாங்கிய எழுச்சியும் குறித்து விவரித்தது. இக்கட்டுரைத் தொடக்கத்தில் குறிப்பிட்டவிவரத்தை மேலும் இது உறுதி செய்தது.ஆயுதம் தாங்கிய எழுச்சி ஒரு கலை எனும் மார்க்ஸின் வார்த்தைகளுக்கு லெனின் உயிரூட்டிக் கொண்டிருந்தார்.


அங்கே கட்சிக்குள் சிலர் திரிபு வேலை செய்ய லானார்கள். சோவியத்துகளுக்கே அனைத்து அதிகாரங்களும் என முழங்கிவந்த சூழலில் சோவியத்துகளை கைப்பற்றி தங்கள் அதிகாரத்தை வலுப்படுத்த சூழ்ச்சி பின்னினர் துரோகிகள். கட்சி தற்காலிகமாக தன் கோரிக்கையை அடக்கி வாசித்தது. “சமாதான முறையில் புரட்சி வளர்ச்சி அடைகிறகாலகட்டம் முடிந்துவிட்டது.


கைகலப்புகளும் அதிர்வெடி களும் நிரம்பிய காலம் ஆரம்பமாகிவிட்டது.” என்றார் ஸ்டாலின்.டிராஸ்ட்கியவாதி ப்ரியோபிரஜன்ஸ்கி புரட்சியை தள்ளிப்போட முயன்றபோது ஸ்டாலின் சொன்னார். “சோஷலிச நாடாக ரஷ்யா மாறுவதற்கான வாய்ப்புகள் வற்றிவிடவில்லை. ஐரோப்பாவினால்தான் நமக்கு வழிகாட்டமுடியும் என்கிற மக்கிப்போனக் கருத்தை நாம்ஒதுக்கியாக வேண்டும். இரண்டுவகை மார்க்சியம் உண்டு,ஒன்று வறட்டுச் சூத்திர வகை மார்க்சியம்; இன்னொன்று படைப்பாற்றல் மார்க்சியம் [CREATIVE MARXISM]. இதில் இரண்டாவதை நாம் பின்பற்றுவோம்.”


ஜெனரல் கோர்னிலாவ் வஞ்சகமாக தாய் நாட்டைக்காக்கப் போகிறேன் என சொல்லிக் கொண்டு கெரென்ஸ்கியோடு ரகசிய ஒப்பந்தம் செய்து எதிர்க்கலகம்துவங்கினான். மக்கள் முறியடித்தனர்.


ஜெனரல் கிரை மோவ் தற்கொலை செய்துகொண்டான். விளைவு எங்கும்சோவியத்துகளில் போல்ஷ்விக் பலம் பன்மடங்கு கூடியது.சோவியத்துகளுக்கே அதிகாரம் எனும் முழக்கம் இப்போது அர்த்தச் செறிவுடன் வலுவாக முழங்கியது.1917 அக்டோபர் 20 ஆம் தேதி லெனின் ரகசியமாகப் பெட்ரோகிராடு வந்து சேர்ந்தார்.


மத்தியக் குழு கூடியது. ஆயுதப் புரட்சியைத் துவக்க தீர்மானித்தது. டிராஸ்ட்கி எதிர்த்தார். மத்தியக் குழு உறுப்பினராக இருந்த காமெனவ், ஜினோவிச் இருவரும் மென்ஷ்விக் ஏட்டில் இம்முடிவை விமர்சித்து கட்டுரை எழுதி திட்டத்தை எதிரிகளுக்குப் போட்டுக் கொடுத்துவிட்டனர்.“இவர்களோடு எனக்கு முன்பு இருந்த தொடர்புகளின் காரணமாக இந்த முன்னாள் தோழர்களைக் கண்டனம் செய்யத் தயங்குவேனானால் நான் பெருந்தவறு செய்தவனாவேன்.” என்றார் லெனின். அரசில் குழப்பம் மேலிட்டது. இராணுவ அமைச்சர் ராஜினாமா செய்துவிட்டார்.


“இன்று வெற்றிக்கு வாய்ப்பு இருக்கும் போது- கண்டிப்பாக இன்று வெற்றிகரமாக நடக்கும் -அதைத் தவறவிட்டால் புரட்சியாளர்களை வரலாறு மன்னிக்காது.” என லெனின் மிகக் கச்சிதமாக நாள் குறித்தார். கிழவர் வேடம் பூண்டு நள்ளிரவில் 18 கிமீ நடந்து லாதகா ஏரிக்கு அருகிலுள்ள ஸ்மோல்னி மாளிகை புரட்சி அலுவலகத்தை அடைந்தார்.


“தாமதம் செய்வது சாவுக்குச் சமானம். தந்தி, தொலைபேசி, ரயில் நிலையங்கள், பாலங்கள் என ஆதாரமான அனைத்தையும் கைப்பற்ற வேண்டும் - இப்போதே இன்றிரவே ஸநவம்பர் 6] என லெனின் ஆணையிட்டார். 


செம்படை அணிவகுத்தது. மக்கள் ஆவேசமாய் வீதியில் திரண்டனர்.நவம்பர் 6 எதிர்ப்புரட்சியின் கடைசித் தடுப்பும் தகர்க்கப்பட்டது. அன்று மாலை அரோரா போர்க்கப்பல் மாரிக்கால அரண்மனை நோக்கி தன் வரலாற்றுப் புகழ்மிக்ககுண்டுவீச்சைத் தொடங்கியது. அந்த குண்டு வீச்சு உலகெங்கும் எதிரொலித்து ஓர் புதிய சகாப்தம் தொடங்கிவிட்டதை அறிவித்தது.


அரண்மனை கைப்பற்றப்பட்டது. அரசுப்படை சரணடைந்தது. அமைச்சர்கள் கைது செய்யப்பட்டனர்.நவம்பர் 7 காலை 10 மணி. லெனின் அறிவிக்கிறார்;“தற்காலிக அரசாங்கம் நீக்கப்பட்டுவிட்டது. அரசு அதிகாரமானது பெட்ரோகிராடு தொழிலாளர், படைவீரர் பிரதிநிதிகளின் சோவியத்துகளுக்கு மாறியுள்ளது; அதாவது பெட்ரோகிராடு பாட்டாளிகளுக்கும் படைவீரர்களுக்கும் தலைமை தாங்கிக் கொண்டிருக்கிற புரட்சிகரஇராணுவக் குழுவிற்கு மாறியுள்ளது. எந்த லட்சியத்திற்காக மக்கள் போராடினார்களோ அந்த லட்சியம் - உடனடியாக ஜனநாயகம்- சமாதானம் -நிலவுடைமை ஒழிப்பு - உற்பத்தியின் மீது தொழிலாளர் கண்காணிப்பு-சோவியத் அரசமைப்பு எனும் லட்சியம் எட்டப்பட்டுள்ளது. தொழிலாளர்-படைவீரர்-விவசாயி புரட்சி நீடூழி வாழ்க!”கட்சியின் இரண்டாவது மாநாடு புரட்சி அலை களிடையே கூடி முடிவெடுத்தது சாதாரணச் செய்தியா?


தனி நபர் அதிகாரமாக இல்லாமல் கூட்டுமுடிவாகவே துவக்கமே வழிகாட்டியது.ஜான் ரீடு சொல்வது போல; தொலைவில் இடை யறாது எழுந்த பீரங்கி முழக்கம் ஜன்னல் வழியாகக் கேட்டது. பிரதிநிதிகள் இடையறாது விவாதித்துக் கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர்...இவ்விதம் பீரங்கி வெடி அதிர்ச்சிக்கிடையே இருட்டில்வெறுப்புக்கும் அச்சத்துக்கும் எதற்கும் தயங்காத துணிவுக்கும் நடுவில் புதிய ரஷ்யா பிறந்து கொண்டிருந்தது.ரஷ்யப் புரட்சி மானுட வரலாற்றில் புதிய சகாப்தத்தைதொடங்கிவைத்தது என்பது மிகை அல்ல; வெறும் ஆள் மாற்றமோ அதிகார மாற்றமோ அல்ல உழைக்கும் மக்களின் கையில் அதிகாரம் எனும் கனவு மெய்ப்படத் தொடங்கிய தருணம் அது.
லெனினின் முதல் பிரகடனமே யுத்தத்திற்கு எதிரான சமாதான முழக்கமாயிருந்தது. இரண்டாவது பிரகடனம் நிலத்தை உழுபவனுக்கு வழங்குவதாக அமைந்தது.இரவு இரண்டரை மணிக்கு அரசாங்க அமைப்பு பற்றிய அறிக்கை வெளியிடப்பட்டது. 

அரசியல் நிர்ணயசபை கூடுகிறவரை நாட்டை நிர்வகிக்க தொழிலாளர் கள், விவசாயிகளது இடைக்கால அரசாங்கம் அமைக்கப் படுகிறது. மக்கள் கமிசார் என்று அழைக்கப்படும் அவை. தலைவராக லெனினை முன்மொழிந்தது. உற்சாகமும் சீட்டிகை ஒலியும் கரகோஷமும் முழக்கமும் இடியென எழுந்தது. அதேசமயம் நாடு முழுவதும் என்ன நடந்து கொண்டிருந்தது? தோற்றவர்களும் துரோகிகளும் சும்மா இருப்பார்களா?


புரட்சி தொடரும்...

நன்றி ; தீக்கதிர் 25.09.2017.

உலகளாவிய மூன்றாவது பெருமுயற்சி

Posted by அகத்தீ Labels:புரட்சிப் பெருநதி -46


உலகளாவிய மூன்றாவது பெருமுயற்சி


சு.பொ.அகத்தியலிங்கம்
அகிலம் இருவழிப் போராட்டப் பாதையை வளர்த்தெடுத்தது. 
முதலாளித்துவத்தை நிர்ப்பந்தித்து தொழிலாளி வர்க்கத்துக்கு 
சலுகைகளைப் பெறுவது; அடுத்து 
முதலாளித்துவத்தையே முடிவுக்குக் கொண்டுவருவது.


“இந்த அரங்கில் கூடியிருக்கும் தோழர்கள் முதல் சோவியத் குடியரசு அமைந்ததைக் கண்டார்கள். இப்போது அவர்கள் மூன்றாவது கம்யூனிஸ்ட் அகிலம் அமைவதைக் கண்டுகொண்டிருக்கிறார்கள். சோவியத்துகளின் உலக கூட்டாட்சியாய் குடியரசு அமைவதை அவர்கள் காணத்தான் போகிறார்கள்.”


உலகப் புரட்சியின் வெற்றியில் தளராத நம்பிக்கையை லெனின் உரக்கச் சொன்னார்.1919 மார்ச் 2 தொடங்கிய சர்வதேச கம்யூனிஸ்ட் மாநாட்டில் 21 நாடுகளிலிருந்து 35 அமைப்புகள் சார்பாக52 பிரதிநிதிகள் பங்கேற்றனர். 6 ஆம் தேதி ஆற்றிய நிறைவுரையின் போதே லெனின் மேலே சொன்ன நம்பிக்கையைப் பிரகடனப்படுத்தினார்.


“கம்யூனிச அகிலம் உருவாக்கப்பட்டதானது உலகத் தொழிலாளர் இயக்கம், பொதுவான உலகம் ஆகியவற்றின் வரலாற்றில் ஒரு மகத்தான திருப்பு முனையாக அமைந்தது, முதலாளித்துவக் காட்டுமிராண்டித்தனமான சுரண்டலுக்கும்- திட்டமிட்டு ஊட்டப்படும் அறியாமைக்கும்- மூடநம்பிக்கைக்கும் - ஈவிரக்கமற்ற கொடுங்கோன்மைக்கும்- கொலைகார யுத்தங்களுக்கும் நிரந்தர முடிவுகட்ட உறுதிபூண்டது பாட்டாளிவர்க்கம். அந்த பாட்டாளிவர்க்கத்தால், கம்யூனிஸ்டுகளால் தலைமை தாங்கப்படும் ஒரு இயக்கத்தை - அகிலத்தை- உறுதிமிக்க மக்கள் இயக்கத்தை; இனி உலகு தழுவிய அளவில் ஏகாதிபத்தியம் எதிர்கொள்ள நேரிடும்” என்கிறார் சுகுமால் சென். 


மேலும் இரண்டாவது அகிலம் எடுத்த சந்தர்ப்பவாத நிலையால் உருவான அடிமைத்தனத்தை உடைத் தெறிய கம்யூனிஸ்ட் அகிலம் உதவும் என்றார். ரஷ்யப் புரட்சியை தன்னுடைய முதல் கட்டமாகக் கொண்டிருந்த உலக சோஷலிசத்தின் மெய்யான போராட்டம் முழுவீச்சுடன் தொடங்கிவிட்டது என்றும் சுகுமால் சென் தன் நூலில் பதிவு செய்தார்.முதலாவது அகிலத்தின் மரபில் புது அமைப்பு மலர்ந்தது.


புதிய சகாப்தம் தொடங்கியது. லெனின் நம்பியது போல் முதலாளித்துவத்தின் வீழ்ச்சிக்கும் அதன் உட்கூறு சின்னாபின்னமாவதற்கும், பாட்டாளிவர்க்க கம்யூனிசப் புரட்சி யுத்தத்திற்கான சகாப்தம் தொடங்கியதாக அறிவித்துக் கொண்டு மூன்றாவது அகிலம் பிறந்தது. கோமின்டர்ன் என தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்டது. கம்யூனிஸ்ட் அகிலம் என்பதே இதன் பொருள்.இந்த மாநாடு கூடிய பின்னணி மிக முக்கியமானது


.“கார்ல் லீப்னெக்ட் மற்றும் ரோசா லக்சம்பர்க்கை கொலை செய்வதில் வெற்றி பெற்றுவிட்டோம் என பெர்லினில் இன்று முதலாளிகளும் சமூகத் துரோகிகளும் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். அந்த நாட்டின் ஆட்சியாளர்கள் பாட்டாளிகளின் தலைவர்களைக் கொல்லும் கசாப்புக் கடைக்காரர்கள் ஆகிப்போனார்கள். முதலாளித்துவக் கொள்ளைக்கும் காட்டுமிராண்டித்தனமான வன்முறைக்கும் ஜனநாயகம் ஒரு வேஷம் என்பதை ஜெர்மன் புரட்சி நிரூபித்துள்ளது.”


இது இந்தப் படுகொலையைக் கண்டிக்க ஜனவரி 19 அன்று மாஸ்கோவில் செஞ்சேனை வீரர்களும் தொழிலாளர்களும் திரண்டனர். லெனின் உரையாற்றிய போதே இவ்வாறு குறிப்பிட்டார். லூனாச்சார்ஸ்கி, ஸ்வெர்ட்லோவ் ஆகியோரும் கண்டன உரையாற்றினர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சர்வதேச ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையிலேயே பணி துவங்கி மூன்றாம் அகிலம் அமைக்கப்பட்டது. டிராஸ்கி, அலெக்சாண்டர் கொலந்தாய் ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர். குறிப்பாக முதலாளித்துவ ஜனநாயகத்தின் போலித்தனத்தையும் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தின் மேன்மையையும் வலியுறுத்துவதாகவே அவர்களின் பங்கு இருந்தது.1926 வரை லெனினால் முன்மொழியப்பட்ட ஜெனிலோவ் தலைமை ஏற்றார்.


அதன் பின் அவர் விலகிக்கொண்டதை அடுத்து பல்கேரிய கம்யூனிஸ்ட் ஜார்ஜ் டிமிட்டிரோவ் தலைமை ஏற்றார். அகிலம் கலைக்கப்படும் வரை அவர் தொடர்ந்தார்.அகிலத்தின் இரண்டாவது மாநாட்டிற்கு லெனின் இருபத்தியோரு ஆலோசனைகளை அனுப்பினார். அவை ஒவ்வொன்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் சோஷலிஸ்ட்கட்சிகளுக்கும் நெருக்கத்தை வளர்க்க உதவுகின்றனவாகவே இருந்தன.அகிலம் இருவழிப் போராட்டப் பாதையை வளர்த்தெடுத்தது. 


முதலாளித்துவத்தை நிர்ப்பந்தித்து தொழிலாளி வர்க்கத்துக்கு சலுகைகளைப் பெறுவது; அடுத்து முதலாளித்துவத்தையே முடிவுக்குக் கொண்டுவருவது.1909இல் உருவான ஐஎப்டியூ எனப்படும் சர்வதேசத் தொழிலாளர் சம்மேளனத்தின் துரோகத்துக்கு எதிராய் 1921இல் எழுந்த ஆர்ஐஎல்யூ எனப்படும் சர்வதேசத் தொழிற்சங்கங்களின் சிகப்பு அகிலம் - சில சீர்குலைவு அமைப்புகள் என பலவும் களத்தில் செயல்பட்ட காலமாயிற்று.


இரட்டை உறுப்பினர் பிரச்சனை அகிலத்தை உலுக்கியது; இது வெறும் நடைமுறை பிரச்சனை என்பதைத் தாண்டி இரு வேறு பார்வைகளுக்கு இடையிலான மோதலாக மாறியது.ஏகாதிபத்தியத்துக்கு எதிராக உலகம் முழுவதுமுள்ள உழைப்பாளிகளை அணிதிரட்ட வேண்டும் என்கிற கனவோடு வழிகாட்டிக் கொண்டிருந்த லெனின் 1924 ஜனவரியில் மறைந்தார். அகிலத்துக்கு இது முதல் பின்னடைவாகும்.லெனின் மறைவுக்குப் பின்னர் தோழர் ஸ்டாலின் தலைமையில் இயங்கிய மூன்றாவது அகிலம், பல்வேறு நாடுகளிலும் கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தொடங்கவும் வளரவும் துணைநின்றது.1917 முதல் 1935 வரை ஏழு மாநாடுகளும், பத்து விரிவடைந்த பிளீனம் எனப்படும் கூட்டங்களும் மேலும் ஆறு சிறப்புக் கூட்டங்களும் நடைபெற்றன. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ஏற்கப்பட்டது.


ஜனநாயக மத்தியத்துவத்தை அகிலத்துக்கும் பொருத்த முயற்சிக்கப்பட்டது. இதன் எதிர்வினைகளும் இருந்தன.இக்காலகட்டத்தில் சிகப்பு தொழிற்சங்க அகிலம் போல; இளங் கம்யூனிஸ்ட் அகிலம், பெண்கள் கம்யூனிஸ்ட் அகிலம், சிகப்பு உதவி அகிலம். சிகப்பு விவசாயி அகிலம், பாட்டாளி வர்க்க சிந்தனையாளர் அகிலம், ஏகாதிபத்திய எதிர்ப்புக்கழகம், தொழிலாளர் சர்வதேச உதவிக் கழகம் உள்ளிட்ட துணை அமைப்புகள் உருவாக்கப்பட்டு செயல்பட்டன. ஒவ்வொன்றும் வரலாற்றில் மறக்கவே முடியாத முத்தான சாதனைகளைப் படைத்து பாட்டாளி வர்க்கத்தை தலைநிமிரச் செய்தது.ஐரோப்பாவில் இட்லரின் பாசிச ஆக்கிரமிப்புக்கு எதிராக- நாடுகளின் சுதந்திரத்தையும் மக்களின் விடுதலையையும் இலட்சியமாகக் கொண்டு செயல்பட்டது.


பாசிசத்துக்கு எதிராக ஐக்கிய முன்னணியைக் கட்டியமைத்துப் போராடவும் வழிகாட்டியது.அனைத்துலக பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான பொதுத் திட்டத்தின் அடிப்படையில், ஒவ்வொரு நாட்டின் தனிச்சிறப்பான நிலைமைகளையும், அந்நாட்டின் அரசியல்- சமூக வளர்ச்சியின் நிலைமையையும் வர்க்க முரண்பாடுகளையும் கணக்கில் கொண்டு வழிகாட்டுவதில் உள்ள சிக்கல்கள் முன்னுக்கு வந்தது.ஆயினும் இரண்டாம் உலகப் போர் பற்றிய நிலைபாட்டில் இரண்டாம் அகிலம் போல் முதல் கட்டத்தில் பெரும் திணறல் எதுவும் இல்லை என்றே சொல்லலாம். அங்கொன்றுஇங்கொன்றாய் முணுமுணுப்புகளே இருந்தன. ஆனால் சோவியத் யூனியனை நோக்கி இட்லர் திரும்பிய போது அதன் போக்கும் குணமும் மாறின. எதிரொலி அகிலத்திலும் கேட்டது.


சோவியத் ரஷ்யா மீதான பாசிச இட்லரின் ஆக்கிரமிப்புப்போரைத் தொடர்ந்துநிலைமையில் ஏற்பட்ட குணாம்சமாறுதலை உள்வாங்குவதிலும் பல்வேறு கட்சிகளிடையேகுழப்பம் ஏற்பட்டன. போர்ச்சூழல் காரணமாக வழிகாட்டுவ திலும் முடிவெடுப்பதிலும் இடர்ப்பாடுகள் எழுந்தன. ஸ்டாலின் மற்றும் டிராட்ஸ்கி இருவருக்கும் ஏற்பட்ட கருத்து மோதல் அகிலத்திலும் பிரதிபலித்தது.இச்சூழல் காரண்மாக அனைத்துலகப் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான பொதுவழியை அடிப்படையாகக் கொண்டுஅந்தந்த நாடுகளின் பாட்டாளி வர்க்கக் கட்சிகள் பருண்மையான நிலைமைகளுக்கேற்ப இதனைச் செயல்படுத்த வேண்டுமென்ற பொது வழிகாட்டுதலுடன்; இனி சர்வதேச அகிலங்கள் தேவை இல்லை என்கிற முடிவுடனும் 1943 மே 15-ஆம் நாளன்று இந்த அகிலம் கலைக்கப்பட்டது.ஆயினும் தொழிலாளி வர்க்க சர்வதேச ஒருமைப் பாட்டிற்கான மாற்று வாயில்கள் திறக்கப்பட்டன.புரட்சி தொடரும்...

நன்றி : தீக்கதிர் 18/09/2017.

செக்கு எண்ணெயும் நாட்டு மாட்டுப்பாலும்

Posted by அகத்தீ Labels:


அறிவு - மூடநம்பிக்கை - அறிவியல் பார்வை
செக்கு எண்ணெயும் நாட்டு மாட்டுப்பாலும்


சு.பொ. அகத்தியலிங்கம்நவீன தகவல் தொடர்பு சாதனங்களில் வந்திருக்கிறது, ஊடகம் சொல்லியிருக்கிறது, வீடியோ, போட்டோ வந்திருக்கிறது என்பதற்காகவெல்லாம் ஒன்றை அப்படியே நம்பிவிடுவதும் மூடநம்பிக்கைதானே? யாரோ ஒரு கிரிமினல் தன் தொழில்நுட்பத் திறனை உபயோகித்து பொய்யை மெய்போல் ஆக்கிவிடக்கூடும் அல்லவா?


தலைப்பில் அறிவை முதலிலும் மூடநம்பிக்கையை இரண்டா வதாகவும் வைத்தேன். ஏனெனில் அறிவைப் பற்றிய மூடநம்பிக்கையே அதிகமாகிவிட்டதால் அது பற்றியும் பேசவேண்டி இருப்பதால் அப்படி அமைத்தேன் .வழக்கமாக அறியாமையோடு சடங்கு, சம்பிரதாயங்களில் மூழ்கிக் கிடப்பதையே மூடநம்பிக்கை என்று நம்பிப் பழகிவிட்டோம். இதுவும் தவறான பார்வையே. யோசித்து கேள்வி கேட்டு சோதித்துப் பார்க்காமல் ஒப்புக் கொள்கிற எதுவும் மூடநம்பிக்கையே!


என் நண்பர் ஒருவர் - “செக்கு எண்ணெய் வாங்கியே உபயோகிக்கிறேன். உங்களுக்கு வேண்டுமெனில் நான் வர வைத்துத் தருகிறேன். எனக்குத் தெரிந்தே பெங்களூருவில் நூறு பேருக்கு மேல் செக்கு எண்ணெய் வாங்குகிறார்கள். இப்போது இந்தப் பழக்கம் வேகமாகப் பரவுகிறது,” என்று பெருமையோடு சொன்னார்.


நான் கேட்டேன்: “செக்கு என்றால் என்ன?”கேள்வி அவருக்கு கோபத்தை உண்டாக்கியது. பல்லைக் கடித்துக்கொண்டு, “செக்கு தெரியாதா? மரத்தால் பெரிய உரல் போலச் செய்திருப்பார்கள். மாடுகட்டி இழுப்பார்கள்,” என விவரிக்க ஆரம்பித்தார். “ அதாவது மாடு கட்டி இயக்குகிற பிழி இயந்திரம் -அப்படித்தானே,” என்றேன் குறுக்கிட்டு .“ஆமாம் ஆமாம்,” என வேகமாகத் தலையாட்டினார் .மின்சாரத்தின் உதவியால் இயந்திர சக்தியைக்கொண்டு பிழியும் இயந்திரம் செக்கு ஆகாதோ?” என்றேன். “ மாடுகட்டி பிழிந்து கோடிக்கணக்கான மக்களுக்கு எண்ணெய் தர முடியுமோ,” என்றேன். விவாதம் சூடு பிடித்தது..ஒரு விளம்பரம் சொல்லுகிறது: “நாட்டு மாட்டுப் பாலில் தயாரான எங்கள் பிஸ்கெட் உடலுக்கு நல்லது.” அந்த நிறுவனத்துக்கு தினசரி பெருமளவு விற்கும் பிஸ்கெட் தயாரிக்கும் அளவுக்கு திடீரென்று நாட்டுப் மாடும் பாலும் எங்கிருந்தது குதித்தது? பச்சையான மோசடி விளம்பரம்தானே. யோசிக்காமல் நாட்டு மாட்டுப் பாலில் தயாரித்தது என நம்புவதும் - நாட்டு மாட்டுப் பால் என பெருமளவில் விற்கப்படும் எதையும் விரும்பி வாங்குவதும்; அது நல்லது என பிறருக்குச் சொல்லுவதும் ... இதெல்லாம் சரியா ?இன்னொரு விளம்பரம்: குட்டி திரிகைக்கல்லில் ஒரு கை மூலிகையை அரைத்துக் கொண்டிருக்கிறது . பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்ட எங்கள் ஹேர் ஆயிலை உபயோகித்தால் முடிப் பிரச்சனை தீர்ந்துவிடும் என்கிறது. அந்த நிறுவன ஹேர் ஆயில் தினசரி பல ஆயிரம் பாட்டில்கள் விற்கப்படுகிறது.அவை அனைத்துக்கும் திரிகைக்கல்லில் அரைப்பதெனில் எவ்வளவு மனித கரங்கள் தேவைப்படும்? எவ்வளவு கூலி கொடுக்க வேண்டும் ? நடைமுறையில் இப்படி செய்து லாபகரமாய் தொழில் செய்ய முடியுமா ? யோசிக்காமல் இந்த விளம்பரங்களை நம்புவதும் பிறருக்கு பரிந்துரைப்பதும் சரியா ?நண்பரிடம் நான் சொன்னேன்: “நான் திறந்த மனதோடு இருக்கிறேன். நாட்டு மாட்டுப் பால் பிற மாட்டுப் பாலைவிட எந்த விதத்தில் சக்தியானது? எந்த விதத்தில் அது சிறந்தது? செக்கு எண்ணை எந்த விதத்தில் ஆரோக்கியமானது? எந்த விதத்தில் சிறந்தது? சோதனைச் சாலையில் ஆய்வுக்கு உட்படுத்துங்கள் . ஆதாரத்தோடு நிரூபியுங்கள் . போட்டோ ஷாப் ஜோடனை ஆதாரமல்ல ; அந்த அமெரிக்க ஆய்வகம் சொன்னது - இந்த ஆய்வு சொன்னது என்கிற சரடல்ல . நிரூபிக்கப்பட்ட ஆய்வு முறையில்; எங்கே எத்தனை முறை சோதித்தாலும் ஒரே முடிவு கிடைப்பதே அறிவியல் ஆய்வு. அந்த முறையில் நிரூபியுங்கள் . நான் சொன்னது தவறெனில் ஒப்புக் கொள்வேன். என் முடிவை மாற்றிக் கொள்வேன் .அதுவரை இவற்றை அறிவாளித்தனமான மூட நம்பிக்கை என்பேன் .அவ்வளவுதான் .இது மட்டுமல்ல “எங்கள் சிட் பண்டில் முதலீடு செய்தால் ஒரே ஆண்டில் இரட்டிப்பாய்த் திருப்பித் தருவோம்,” என்றதும் முட்டிமோதி முதலீடு செய்ய ஓடுகிறோமே! அதனை எப்படி தரமுடியும்? சாத்தியக்கூறென்ன? யோசிக்காமல் முதலீடு செய்துவிட்டு ; சீட்டுக் கம்பெனி ஓடியபின் புகார் கொடுக்க முண்டியடிப்பதும் ; ஊடகங்கள் முன் புலம்புவதும் அறிவு பூர்வமானதா ?அறிவியல் பார்வை என்பது ஏதோ பழைய காலத்துக்கொவ்வாத சடங்குகளைச் சாடுவதில் மட்டும் போதுமா ?


ஒருவர் நான் கறுப்புப் பணத்தைக் கைப்பற்றி ஆளுக்கு 15 லட்சம் ரூபாய் போடுவேன் என்று காதில் பூ சுற்றுகிறார். காதைக் கொடுத்தது அல்லாமல் ஆட்சியையும் அவரிடம் கொடுப்பது எந்த வகையில் அறிவியல் பார்வையாகும் ?இப்போது இன்னொரு கேள்வி அரசுப் பள்ளி மாணவருக்கு அறிவுத் திறன் குறைவு ; தகுதி போதாது என நீட்டர்கள் கூப்பாடு போடுகின்றனர் .
என் கேள்வி, அறிவு என்பதென்ன? டாக்டர் படிப்புக்கு நீட் தேர்வில் வெற்றிபெறுவது மட்டுமே அறிவா? நம் சராசரி ஆயுள் காலம் கூடியிருக்கிறது, அதன் காரணம் யார்? இந்த மருத்துவ வளர்ச்சியை உருவாக்கியதெல்லாம் நீட் தேர்வு எழுதியவர்களா? சாதாரண பஞ்சாயத்து போர்டு பள்ளியில் படித்தவர்தாமே?சரி மருத்துவராவதும் கம்ப்யூட்டர் நிபுணராவதும் மட்டுமே அறிவா? நாம் உண்பது - உடுப்பது -காண்பது -அனுபவிப்பது -களிப்பது - எல்லாம் அறிவற்றவர்களால் உருவாக்கப்பட்டதா? சாதாரண அரசு பள்ளிகளில் பயின்ற அல்லது அரைகுறையாய் படித்த இவர்களின் உழைப்பும் அறிவும் இன்றி ஒரு நிமிடம் கூட உன்னால் என்னால் வாழ முடியுமா?ஒரு துறை வல்லுநர் இன்னொரு துறை பற்றி அறியவில்லை என்பதால் முட்டாளாகிவிடுவாரா? என் தாய்க்கு குடும்பத்தை நிர்வகிக்கத் தெரியும் - சமைக்கத் தெரியும் - ஆனால் கணினி தெரியாது. இதனால் என் தாய் முட்டாளாகிவிடுவாரா?சந்தி தெரு பெருக்குவதிலிருந்து விண்வெளிக்கு செயற்கைக்கோள் விடுவது வரை பூமிப் பந்தில் நாம் செய்கிற ஒவ்வொன்றும் அறிவார்ந்த செயல்கள்தாம் .உழைப்பும் வியர்வையும் சேர்ந்ததே உலகின் வளர்ச்சி. இதைப் புரியாமல் தரம், தகுதி என அவரவர் விரும்பும் படிப்பைப்படிக்கவிடாமல் தடுப்பதும் நியாயப்படுத்துவதும் அறிவாளித்தனமான மூடநம்பிக்கையே! ஏமாற்றே!அறிவியல் பார்வை என்பது எதையும் சந்தேகிப்பதும், கேள்விகேட்பதும், சோதனைக்கு உட்படுத்தச் சொல்வதும், நிரூபிக்கப் பட்டவைகளையே ஏற்பதும், மற்றவைகளை ஐயத்தோடே அணுகுவதும்தான்.நவீன தகவல் தொடர்பு சாதனங்களில் வந்திருக்கிறது, ஊடகம் சொல்லியிருக்கிறது, வீடியோ, போட்டோ வந்திருக்கிறது என்பதற்காகவெல்லாம் ஒன்றை அப்படியே நம்பிவிடுவதும் மூடநம்பிக்கைதானே? யாரோ ஒரு கிரிமினல் தன் தொழில்நுட்பத் திறனை உபயோகித்து பொய்யை மெய்போல் ஆக்கிவிடக்கூடும் அல்லவா ?அறிவு என்பது நடைமுறையோடு உரசி உரசி உண்மை காண்பதல்லவா ?எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதன்றோ அறிவு ?அரசியல் நடத்தவும் குடும்பம் நடத்தவும் அறிவியல் பார்வை தேவை,” எனச் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் கூறியது எவ்வளவு பொருள் பொதிந்தது ?இந்துத்துவா பெயரில் சொன்னாலும்; தமிழ் மொழி, இனத்தின் பெயரால் சொன்னாலும் கேள்வி கேட்காமல் எதையும் நம்பக்கூடாது; நிரூபிக்கப்படாத எதையும் ஏற்கக்கூடாது . பாரம்பரியம் என்பதாலோ -நம் முன்னோர் வாக்கு என்பதாலோ எதையும் ஏற்கவும் வேண்டாம்; கண்ணை மூடி நிராகரிக்கவும் வேண்டாம். கேள்விக்கு உட்படுத்துங்கள். சோதனைக்கு உட்படுத்துங்கள். சரியானதை மட்டுமே ஏற்பதே அறிவு . அறிவியல் பார்வை.நன்றி : வண்ணக்கதிர் , 17/09/2017 .தீக்கதிர்.


பேராசிரியர் - விஞ்ஞானி - தளபதி - போராளியானார் .

Posted by அகத்தீ Labels:புரட்சிப் பெருநதி : 45


பேராசிரியர் - விஞ்ஞானி - தளபதி -
போராளியானார் .


பாரீஸ் கம்யூன் நிகழ்வுகள் குறித்துநம்பகமான
 தகவல்களைத் திரட்ட மார்க்ஸ் பெரிதும் 
லாப்ரோவையே சார்ந்திருந்தார்.
“நாடுகடத்தப்பட்ட ரஷ்யப் புரட்சிக்காரர்களின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி நீங்கள் . மறைந்த பெரியவரின் ஸ கார்ல் மார்க்ஸின் ] பழம்பெரும் நண்பர். ஒருசேரக் கிடைக்கும் இந்தப் புத்தகத் திரட்டைப் பெறுவதற்கு ; வேறு யாரையும்விட உங்களுக்குத்தான் அதிக உரிமை உண்டு. உங்களின் - நமது ரஷ்ய நண்பர்களின் உணர்வுக்கும், அர்ப்பணிப்புக்கும் எனது நன்றி !நாடு கடத்தப்பட்ட ரஷ்யப் புரட்சிக்காரர்களின் நூலக மையத்தில் வைக்கும் நோக்குடன் உங்களிடம் இவற்றை ஒப்படைக்கிறேன்.” மார்க்ஸ் மறைவைத் தொடர்ந்து ஏங்கெல்ஸ் எழுதிய கடிதம் இது. யாருக்கு?

பியோதர் லாவ்ரோவிச் லாவ்ரோவ் 1823-இல் ரஷ்ய நிலப்பிரபு குடும்பத்தில் பிறந்தவர். 14 வயதுக்குள் ரஷ்யன், பிரெஞ்சு, ஜெர்மன், ஆங்கிலம் என பல மொழிப் புலமை பெற்றவர். கணிதத்தில், இயற்கை விஞ்ஞானத்தில் மிகவும் கெட்டிக்காரர். இலக்கியத்தில் தோய்ந்தவர். 1837-இல் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் படைக் கல்லூரியில் பயின்றார்.

1842-இல் அதே கல்லூரியில் கணிதப் பேராசிரியரானார். 1849-இல் கர்னலாக –தளபதியாக பதவி உயர்வு பெற்றார்.கிட்டத்தட்ட 20 வருடம் பேராசிரியராய், விஞ்ஞானி யாய், இயங்கினார். எதுவும் அவரது இதயத்துக்கு உவப்பானதாக இல்லாமல் போனது. தளபதிகளின் ஆடையோ மிடுக்கோ அவரை ஈர்க்கவில்லை; ரஷ்யாவில் நிலவிய கொடுங்கோன்மையை வெறுத்தார்; 1850, 60-களில் எழுந்த புரட்சிக்கனலே அவரை அழைத்தது.இளமையிலேயே லெனினை கவர்ந்த செர்னி செவ்ஸ்கி நடத்திய ‘சமகாலம்’ ஏட்டில் லாவ்ராவ் ராணுவவிவகாரங்கள், இயற்கை விஞ்ஞானம் குறித்து கட்டு ரைகள் எழுதினார். தனது கவிதைகளை லண்டனில் உள்ள ஹெர்சானுக்கு அனுப்பினார்.

லாப்ரோவ் பத்திரிகையாளராக மாறினார். “ஒரு வெளியீட்டாளருக்கு ஒரு கடிதம்” என்ற கட்டுரையில் தனது அரசியல் கருத்துகளை முதன் முதல் பகிரங்கப்படுத்தினார். 1862-இல் எழுதிய “ கொஞ்சம் கொஞ்சமாக” எனும் கட்டுரையில் கட்டம் கட்டமாக ரஷ்ய சமுதாயத்தை மாற்ற முடியும் என்ற கருத்தைக் கேலி செய்தார். நடைமுறை தத்துவம் மற்றும் தோற்ற மயக்கம் குறித்த இவரது புத்தகம் அனைவரின் கவனத்தையும் தொட்டது. பகுனின், பிளக்கனோவ் இவர்களின் அரசியல் சித்தாந்தப் பார்வையே இவருள் ஆழமாக வேரிட்டது.1862-இல் ‘நிலமும் சுதந்திரமும்’ என்ற பெயரில் இயங்கிய புரட்சிக்குழுவில் இணைந்தார். அங்கு ஆசிரியர் குழுவின் தலைவர் என்ற முறையில் ‘ ஒரு கலைக் களஞ்சிய அகராதி’ யைத் தொகுத்தார். அதில் மதத்தின் ஏமாற்றுகளைக் கடுமையாகச் சாடினார்.

நூல் தடை செய்யப்பட்டது .1864-66 இல் லாவ்ரோவால் வெளியிட்ட வெளிநாட்டுச் செய்தித் தொகுப்பும் தடை செய்யப்பட்டது. இவரது பிரசங்கங்கள் இளைஞர்களுக்கு உணர்ச்சியூட்டியதால் அவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டது.ஜார் மன்னரை கொலை செய்ய முயற்சி நடந்ததைத் தொடர்ந்து லாவ்ரோவின் வீடு சோதனைக்குள்ளானது. கைது செய்யப்பட்டு ஒன்பது மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலை ஆனதும் வோலோக்டோ மாநிலத்திற்கு நாடு கடத்தப்பட்டார். அங்குதான் “வரலாற்று ரீதியான கடிதங்கள்” நூலை எழுதினார். நரோத்னிக் இயக்கத்தின் வழிநடத்தும் நூலானது இது. இவரை ஜாரின் போலீஸ் சதா கண்காணிக்கத் தொடங்கியது. 1870 மார்ச் மாதம் வெய்மர் என்ற போலி கடவுச் சீட்டில் பாரீஸுக்கு பறந்தார்.பாரீஸில் விஞ்ஞான வட்டாரத்துடன் உறவு கொண்டார். முதல் அகிலத்தில் பாரீஸ் பகுதி உறுப்பினரானார்.

பாரீஸ் கம்யூன் நிகழ்வுகளில் பங்கெடுத்தார். பாரீஸ் கம்யூன் குறித்து இவரெழுதிய இரு கட்டுரைகள் எல் இண்டர்நேஷனில் வெளிவந்தன.கம்யூன் சார்பில் மார்க்ஸ் தலைமையிலான அகிலத்தின் தலைவர்களைச் சந்திக்க லண்டன் சென்றார். பாரீஸ் கம்யூன் நிகழ்வுகள் குறித்து நம்பகமான தகவல்களைத் திரட்ட மார்க்ஸ் பெரிதும் லாப்ரோவையே சார்ந்திருந்தார்.1871-இல் பாரீஸ் திரும்பினார். இவரது பாரீஸ் நண்பர் பலருக்கு மார்க்ஸ் இல்லத்தில் அடைக்கலம் கொடுத்தது குறித்தும்; பல வழக்கு விவரங்களைக் கேட்டும் ஏங்கெல்ஸ் இவருக்குக் கடிதம் எழுதினார். ‘பார்வர்டு’ பத்திரிகை ஆசிரியர் குழு லண்டனுக்கு இடம் மாறியபின் இதழ் ஒன்றை மார்க்சுக்கு அனுப்பினார் லாவ்ரோவ். மூலதனம் நூல் ஜெர்மன் பதிப்பைஅனுப்பியதோடு ஒரு கடிதமும் எழுதினார் மார்க்ஸ்; அதில் தனது உடல் நிலை சரியானதும் வந்து சந்திப்பதாகத் தெரிவித்திருந்தார்.

1875-77இல் இருவரும் அடிக்கடி சந்தித்து உரையாடினர். ரஷ்யா குறித்து லாப்ரோவிடம் மார்க்ஸ் நிறைய விவரங்கள் கேட்டறிந்தார். லாப்ரோவ் ரஷ்யப் புரட்சிக் குழுக்களுடன் தொடர்பில் இருக்க மார்க்ஸ் உதவினார்.1883-இல் மார்க்ஸ் மரணத்தால் லாப்ரோவ் பெரிதும் பாதிக்கப்பட்டார். மார்க்ஸ் சேகரித்து வைத்திருந்த ரஷ்யா குறித்த நூல்களை லாப்ரோவுக்கு அனுப்பியபோது ஏங்கெல்ஸ் எழுதிய கடிதத்தையே முதலில் பார்த்தார்.மார்க்ஸ் ஏங்கெல்ஸ் இவர்களுடனான நட்பு லாப்ரோவ் வார்த்தைகளில் சொல்வதானால் “அவருக்கு ஒரு அற்புதமான கல்விக்கூடமாக இருந்தது.”பாரீஸ் கம்யூன் அனுபவங்களும் லாப்ரோவுக்கு பாடமாகின. 1873 – 1876 வரை பார்வர்டு இதழையும், செய்தி ஏட்டையும் தொகுத்தளித்தார்.
இவை சோஷலிஸ்ட், சர்வதேச தொழிலாளி வர்க்க ஏடாகத் திகழ்ந்தன.நரோத்னிசம் ரஷ்யாவில் செல்வாக்கு இழக்கத் துவங்கியது; நரோத்னயா ஓல்யா எனும் குழுவோடு தொடர்புடன் இருந்தார். வெளிநாட்டிலுள்ள ரஷ்யப் புரட்சியாளர்களை இணைப்பதிலும்; சோஷலிசத்துக்காக வாதாடுவதிலும் தன் பெரும் பகுதி நேரத்தைச் செலவிட்டார்.


1898-இல் அவரது 75 ஆவது பிறந்த நாளை பாரீஸ் நண்பர்கள் விழாவாக நடத்தினார்கள். வாழ்த்து தெரிவித்த செய்திகள் ரஷ்ய, உலக புரட்சி இயக்கங்களுக்கு அவர் ஆற்றிய பணியை நினைவு கூர்ந்தன.

19 ஆம் நூற்றாண்டின் விடுதலை இயக்கங்களின் அனைத்துக் கட்டங்களையும் பார்த்தார்; உறுதியான சோஷலிஸ்டாக இருந்தார்;எனினும் நரோத்னிச பிரமை அவரோடு பிணைந்தே இருந்தது. மார்க்ஸ் எடுத்துரைத்த பாட்டாளி வர்க்கப் பாத்திரத்தைப் புரிந்து கொள்ளவே இல்லை.1900 பிப்ரவரி 6 ஆம் நாள் பாரீஸில் காலமானார். பாரீஸிலுள்ள ரஷ்யர்களும் புரட்சியாளர்களும் இறுதி நிகழ்வில் பங்கேற்றனர். பிரெஞ்சு சோஷலிஸ்ட் சார்பில் இரங்கல் உரை ஆற்றிய பால் லாஃபர்க் சொன்னார்,

 “பியோதர் லாவ்ரோவில் பெயர் ரஷ்யச் சிந்தனையோடும்; ரஷ்ய புரட்சிகர ஜனநாயக இயக்கத்தோடும் என்றென்றைக்கும் இணைந்திருக்கும்.”புரட்சிக்குப் பின்னரும் இவரை லெனின் நினைவுகூர்ந்தார்; ஏனெனில் பழைய உலகைக் கைகழுவி புத்துலகைக் கனவு கண்ட ஒருவரை தலைமுறை தலைமுறைக்கும் நினைவூட்டிக்கொண்டே இருக்க வேண்டும்தானே !

புரட்சி தொடரும்…


நன்றி : தீக்கதிர்  11/09/2017

அளவுகோல்களை உடைத்தெறியுங்கள் !!!

Posted by அகத்தீ Labels:
// போட்டியில் வென்றும் முருகனுக்கு கனி மறுக்கப்பட்டது ; போட்டியே கர்ணனுக்கு மறுக்கப்பட்டது ; இதுதானே தரம் தகுதியின் லட்சணம் ?//


அளவுகோல்களை உடைத்தெறியுங்கள் !!!

சு .பொ . அகத்தியலிங்கம்.ஞானசிகாமணிகளே ! அறிவின் பிதாமகன்களே ! உங்கள் அளவுகோல்களை உடைத்தெறியுங்கள் ! அறிவை விசாலாமாக்குங்கள் !பாபம் ,புண்ணியம் ,பவித்திரம் ,சாதாரணம் , தர்மம் ,அதர்மம் , வார்த்தை விளையாட்டுகளை நிறுத்துங்கள் !

அறம் , விழுமியம் , தகுதி ,திறமை , நீதி ,நேர்மை சொற்சிலம்பங்கள் இனியும் வேண்டாம் விட்டொழியுங்கள் !

வில்லுக்கு விஜயன் , சொல்லுக்கு அகத்தியன் என இன்னும் எத்தனை நாள் பொய் பித்தலாட்டம் செய்யப்போகிறீர்கள் ?ஞானசிகாமணிகளே ! அறிவின் பிதாமகன்களே ! உங்கள் அளவுகோல்களை உடைத்தெறியுங்கள் ! அறிவை விசாலாமாக்குங்கள் !ஏகலைவனோடு எந்தப் போட்டியில் அர்ச்சுனன் ஜெயித்தான் ? கட்டை விரலை காணிக்கை கேட்டதாலன்றோ பிழைத்தான் ?

கர்னனின் குலம் கோத்திரம் கேட்டு போட்டியை தவிர்த்ததாலன்றோ அர்ச்சுனனன் போட்டியின்றி ஜெயித்தான் ?

கர்ணனின் கவச குண்டலத்தை யாசித்துப் பெற்றும் ; குந்தி மூலம் நிபந்தனைகள் விதித்தும்தானே போர்க்களத்திலும் வென்றான் ?ஞானசிகாமணிகளே ! அறிவின் பிதாமகன்களே ! உங்கள் அளவுகோல்களை உடைத்தெறியுங்கள் ! அறிவை விசாலாமாக்குங்கள் !
கர்ணனின் புண்ணியங்களையும் பார்ப்பானாய் வேஷமிட்டுப் போய் தானம் பெற்றுத்தானே கர்ணனை கொன்றான் கிருஷ்ணன் ?

பஞ்சபாண்டவரும் பாண்டுவின் இரத்த வாரிசுகளா ? குந்தியும் மாத்திரியும் சுதந்திர உறவில் பெற்ற பிள்ளைகளுக்கு எது உரிமை ?

குந்தி பெற்ற தர்மன் ,அர்ச்சுனன் ,பீமன் பெறும் உரிமை ,சலுகை கர்ணனுக்கு ஏன் மறுக்கப்பட்டது ?ஞானசிகாமணிகளே ! அறிவின் பிதாமகன்களே ! உங்கள் அளவுகோல்களை உடைத்தெறியுங்கள் ! அறிவை விசாலாமாக்குங்கள் !

போட்டியில் வென்றும் முருகனுக்கு கனி மறுக்கப்பட்டது ; போட்டியே கர்ணனுக்கு மறுக்கப்பட்டது ; இதுதானே தரம் தகுதியின் லட்சணம் ?

மூன்றடி என்பது மகாபலிக்கு மட்டும் எல்லையற்று நீண்டதும் ; கொன்றதும் தானே உங்கள் தர்மத்தின் அளவுகோல் ?

வேதம் படித்த தொல்குடி மகன் சம்புகன் தலையைக் கொய்தவன்தானே உங்கள் மகாபுருஷன் ராமச்சந்திர பிரபு ?


ஞானசிகாமணிகளே ! அறிவின் பிதாமகன்களே ! உங்கள் அளவுகோல்களை உடைத்தெறியுங்கள் ! அறிவை விசாலாமாக்குங்கள் !


எள்ளுப்பாட்டியும் கொள்ளுப்பாட்டியும் இடுப்புவலியால் துடித்தபோது ஓடிவந்தது நாசுவத்திதானே ?

அவள் வராவிடில் சந்ததி ஏது ? சமஸ்கிருதம் தெரியாதென அவள் மருத்துவம் படிக்க தடை போட்டது யார் ?

அந்த தடையை உடைத்ததும் ; அவள் மருத்துவம் படிக்க இடம் ஒதுக்கியதும் எம் தாடிக்காரன் போராட்டமல்லவா ?


ஞானசிகாமணிகளே ! அறிவின் பிதாமகன்களே ! உங்கள் அளவுகோல்களை உடைத்தெறியுங்கள் ! அறிவை விசாலாமாக்குங்கள் !


நீங்கள் எப்போதும் பூணூலால் அளக்கிறீர்கள் ! நாங்களோ எப்போதும் பனைநாரால் அளக்கிறோம் ; அதிலென்ன பிழை ?

நீங்கள் எப்போதும் புராணப்புளுகுகளால் புன்னகைக்கிறீர்கள் ! நாங்களோ உண்மைக் கதைகளால் உருகவைக்கிறோம் ; தவறென்ன ?

நீங்கள் யாககுண்டத்தில் உணவை துணியை எரிக்கிறீர்கள் ; நாங்கள் வியர்வையால் படைத்தளிக்கிறோம் ; எது தேவை ?ஞானசிகாமணிகளே ! அறிவின் பிதாமகன்களே ! உங்கள் அளவுகோல்களை உடைத்தெறியுங்கள் ! அறிவை விசாலாமாக்குங்கள் !புரட்சி வென்றது; முடியவில்லை…

Posted by அகத்தீ Labels:
புரட்சிப் பெருநதி  : 44


புரட்சி வென்றது; முடியவில்லை…


சு.பொ.அகத்தியலிங்கம்
ஜார் மன்னனுக்கு அனுப்பப்பட்ட தந்தியில்
 இந்த விலாசதாரர் எங்கிருக்கிறார் 
எனத் தெரியவில்லை என 
ஒரு தபால்காரர் கிறுக்கினார்.
“போரில் யாரையேனும் பறிகொடுத்தவர்கள் உங்களில் எவர் ?’’ –என்று கேட்டேன். அனேகமாக எல்லோர் கைகளும் உயர்ந்தன . மரங்களில் ஏக்கத்துடன் முனகும் பனிக்காலக் காற்று போன்ற ஓலம் ; சற்றுமுன் சிரித்துக்கொண்டிருந்த அந்தக்கூட்டத்தில் பரவியது . முதியவர்கள் இருவர் அழுது கொண்டே என் வண்டிச்சக்கரத்தில் சாய்ந்தனர். ‘என் அண்ணன்! என் அண்ணனைக் கொன்றுவிட்டார்கள்!’ எனக் கத்திக்கொண்டே வெளியே ஓடினான் சிறுவனொருவன். மாதர்களோ தலைக்குட்டைகளால் கண்களை மறைத்துக் கொண்டோ , ஒருவரையொருவர் தழுவிக்கொண்டோ ஆறாய்க் கண்ணீர் பெருக்கினார்கள்.இவ்வளவு கண்ணீர் எங்கிருந்தது? வியந்தேன். சலனமற்ற அந்த முகங்களின் பின் இவ்வளவு துயரம் தேங்கியிருக்கும் என்று யார்தான் நினைத்திருக்க முடியும்? திடமான எல்லா ஆண்களையும் போரில் பறிகொடுத்துவிட்ட ஆயிரக்கணக்கான ருஷ்யக் கிராமங்களில் இதுவும் ஒன்று.” 
முதல் உலகயுத்தம் தொடங்கியது. போல்ஷ்விக் கட்சி போர்க்கொடி உயர்த்தியது .“சோஷலிசமும் யுத்தமும்” என்கிற லெனின் பிரசுரம் பெரும் தாக்கத்தைஉருவாக்கியது. லெனின் சுட்டினார், “100 அடிமைகளைக்கொண்டுள்ள ஒரு எஜமானன் 200 அடிமைகளைக் கொண்டுள்ள எஜமானனுடன் போர் செய்கிறான்– ‘அடிமைகளைப் பங்கிடுவது’ நியாயமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே.இதனை ‘பாதுகாப்பு யுத்தம்’ என்பதோ, “தந்தையர் நாட்டைப் பாதுகாக்கும் யுத்தம்” என்பதோ சரித்திரப் பிழையாகும்.”மென்ஷ்விக்குகளும் தேசபக்தி முகமூடியோடு யுத்த ஆதரவில் மும்முரமாயினர் .போலீஸ் அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்ட போதிலும் போல்ஷ்விக்குகளான டூமா உறுப்பினர்கள் படயெவ், பீட்ரோவ்ஸ்கி, முரனோவ், சாமிலோவ், ஷாகோவ் நாடெங்கும் பயணித்து யுத்த எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இவர்கள் கைது செய்யப்பட்டு ‘தேசவிரோத’ வழக்கில் சைபீரியாவுக்கு நாடுகடத்தப்பட்டனர். லெனின் எழுதிய “ஏகாதிபத்தியம் முதலாளித்துவத் தின் உச்சகட்டம்” நூல் காத்திரமானது. 117 பக்க நூலுக்காக ஜெர்மன், ஆங்கிலம், பிரெஞ்சு, ருஷ்யன் மொழிகளில் 148 நூல்களிலிருந்தும், 232 கட்டுரைகளி லிருந்தும், 49 பத்திரிகைகளிலிருந்தும் லெனின் எடுத்த குறிப்புகள் 800 பக்கங்களுக்கு மேல் . இன்றும் மிகமுக்கிய பங்களிப்பாய் இந்நூல் திகழ்கிறது . யுத்தத் தேவையை பூர்த்தி செய்ய அரசு ‘யுத்தக் குழு’ உருவாக்கியது. தொழிலாளர் பிரிவை அதில் துவக்கியது. மென்ஷ்விக்குகள் இதில் இடம் பெறத் துடித்தனர். க்வோஜ்டேவ், அப்ராசிவ்மோவ் போன்றோர் தலைமையில் முயன்றனர். தொழிலாளர்கள் ஆவேசமாய் எதிர்த்தனர்.


“ஜாரை வீழ்த்துவதும் சமாதானமுமே” லட்சியமென பிரகடனம் செய்தனர் .யுத்தம் தொடங்கி மூன்று வருடங்கள் உருண்டோடிவிட்டன .ஜார் தோல்வியையே நுகர்ந்து கொண்டிருந்தான் . யுத்த மந்திரி சுக்ஹோம் லினோவ் ஜெர்மன் கையாளென நிரூபணமானது.துப்பாக்கியோ, குண்டுகளோ, ராணுவ உடையோ, பூட்ஸுகளோகூட இல்லாத நிலையில் ராணுவத்திலும் கலகங்கள் தோன்றின. காண்டிரக்டர்களும் தளபதிகளும் கொள்ளையடித்தனர் மக்கள் பஞ்சத்தில் தள்ளப்பட்டனர். ஒரு கோடியே 40 லட்சம் தொழிலாளர்கள் ராணுவப் பணிக்கு கட்டாயமாக அனுப்பப்பட்டனர். பல லட்சம் பேர் உறுப்புகளை இழந்தனர்.நம்ம ஊரில் ஆடு, மாடு திருடுவதுபோல் குதிரை திருடும் கிரிகோரி ரஷ்புடின் திடீரென சாமியார் அவதாரம் எடுத்தான்; ஜாரும் ஜாரினியும் இவன் சொல்லுக்கு ஆடலானார்கள்;


இவன் கோடிக்கணக்கான பணத்தை உறிஞ்சினான். மந்திரம், தந்திரம் என மோசடியில் ஈடுபட்டான்.மக்கள் கோபம் எல்லை மீறியது. 1916 முதல் மூன்று மாதத்தில் மட்டும் ஒரு லட்சம் பேர் பங்கேற்ற வேலை நிறுத்தங்கள் நடந்தன. தலைநகர் பெட்ரோகிராடில் மட்டுமல்ல உஸ்பெக்கிஸ்தான், கஜகிஸ்தான், துர்க்மேனியா என எங்கும் யுத்த எதிர்ப்பு பேரலை சுழன்றடித்தது. 1916 டிசம்பர் மத்தியில் சாமியார் ரஷ்புடின் கொலைசெய்யப்பட்டான். 1916 ஆம் ஆண்டு ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட படைவீரர்கள் ராணுவத்தைவிட்டு வெளியேறினர். “1905 ஆம் ஆண்டு உணர்வு கிராமத்தில் புதுப்பிக்கப்படுகிறது” என ரகசிய போலீஸ் அறிக்கைகள் எச்சரித்தன, ராணுவத்தைவிட்டு வெளியேறியவர் கிராமப்புற புரட்சிக்கு உதவலானார்கள் . கொதிநிலை நெருங்குவதைக் கண்ட முதலாளிவர்க்கம் மிரண்டது.


ஜாரை இனி நம்பிப் பயனில்லை ; புரட்சியை திசை திருப்ப ஜாரின் தம்பி மைக்கேல் ரோமனாவ் அல்லது பருவம் எய்தாத மகனுக்கு முடிசூட்டுவது; சில வாக்குறுதிகளை அளித்துவிட்டு புரட்சியை நசுக்குவது என்று திட்டமிட்டனர் .மக்களின் பேரலை முன் இந்த திட்டம் தவிடுபொடியானது.1917ஆம் ஆண்டு கொந்தளிப்போடு விடிந்தது.பெட்ரோகிராடு, பாகு, மாஸ்கோ, நிஜினி, நவ்கிராட் எங்கும் ஜனவரி 9 ,18,22,25 என மாறிமாறி வேலை நிறுத்தங்களும் ; ஆர்ப்பாட்டங்களும் வெடித்தன ; ‘ஜாராட்சி ஒழிக!’ என்பதே முழக்கமானது . பெண்கள் வீதியில் திரண்டனர்; போலீசும் துப்பாக்கியை தொழிலாளர்கள் பக்கம் திருப்ப மறுத்தது .பிப். 25 புரட்சி வெற்றி பெற்றது; 


முன்னணிப்படையான தொழிலாளிவர்க்கம்.இராணுவ உடுப்பு உடுத்தியிருந்த லட்சக்கணக்கான விவசாயிகளைத் திரட்டி – ‘சமாதானம், ரொட்டி, சுதந்திரம் என முழங்கச் செய்தது.சமாதானத்தை முன்னிறுத்தியது நடைமுறையுத்தி அல்ல ; மக்களின் உள்ளார்ந்த விருப்பம். ஆரம்பத்தில் பார்த்த வரிகள் ஆ.ரைஸ் வில்லியம் ‘நேரில் கண்ட ரஷ்யப் புரட்சி’ எனும் நூலில் பதிந்த சாட்சியாகும்.புரட்சி ஆரம்பம் ஆனதுமே தொழிலாளர் பிரதிநிதிகளையும், இராணுவவீரர் பிரதிநிதிகளையும் கொண்ட சோவியத் என்ற அடித்தள ஜனநாயக அமைப்பு உருவாக்கப்படலாயிற்று. போல்ஷ்விக்கில் ஒரு பகுதியினர் வீதிப் போராட்டக் களத்திலும் தலைவர்கள் சிறையிலும் தலைமறைவாகவும் இருந்த சூழலில் சோவியத்துகளில் மென்ஷ்விக்குகளும் சீர்குலைவாளர்களும் அதிக இடம்பிடித்தனர்.“ஜார் மன்னனுக்கு அனுப்பப்பட்ட தந்தியில் இந்த விலாசதாரர் எங்கிருக்கிறார் எனத் தெரியவில்லை என ஒரு தபால்காரர் கிறுக்கினார்” என நேரு தன் நூலில் சுட்டுவார்.1917 மார்ச் 12 ஜாரின் டூமாவிலிருந்த கையாள் ரோட்ஜ் யான்சோ தலைமையில் ஒரு தற்காலிகக் கமிட்டி அமைத்தது. ரகசியமாகப் பேசி இடைக்கால அரசொன்று பிரகடனப்படுத்தப்பட்டது. ஜாரின் நம்பிக்கைக்குரிய இளவரசன் லவாவ் அரசின் தலைவரானார். கெரன்சி என்ற மென்ஷ்விக் பிரதமரானார். மில்யூகோவ், குச்சுகோவ் போன்ற பிற சீர்குலைவாளர்களும் அரசில் இடம் பெற்றனர் .“இந்த நாட்டில் பிரம்மாண்டமான குட்டி முதலாளித்துவ அலையடித்திருக்கிறது - யாவற்றையும் உருட்டிப் புரட்டிச் சென்றிருக்கிறது. இது வர்க்க உணர்ச்சியுள்ள பாட்டாளியைவிட அதிக எண்ணிக்கையில் மட்டுமல்லாமல்; கருத்துலகிலும் மிஞ்சிவிட்டது.தொழிலாளர்களில் ஒரு பெரும் பகுதியினரிடையே குட்டிமுதலாளித்துவ அரசியல் கண்ணோட்டம் ஊடுருவிப் பாய்ந்து மயக்கத்தை ஏற்படுத்தியது” என்றார் லெனின். மிகவும் பொறுமையுடன் மக்களிடம் உண்மையை விளக்கிச் சொல்லி மென்ஷ்விக்குகளின் துரோகத்தை அம்பலப்படுத்தி சோவியத்துகளின் மெய்யான அதிகாரத்தை நிலைநிறுத்தும் சவால் மிக்க பணியை தோளில் சுமந்தபடி- புரட்சியைத் தொடரும் உத்வேகத்துடன் லெனின் தாய்நாடு திரும்பினார்.புரட்சி தொடரும்

நன்றி : தீக்கதிர் - 4/09/2017.