புரட்சி வென்றது; முடியவில்லை…

Posted by அகத்தீ Labels:




புரட்சிப் பெருநதி  : 44


புரட்சி வென்றது; முடியவில்லை…


சு.பொ.அகத்தியலிங்கம்




ஜார் மன்னனுக்கு அனுப்பப்பட்ட தந்தியில்
 இந்த விலாசதாரர் எங்கிருக்கிறார் 
எனத் தெரியவில்லை என 
ஒரு தபால்காரர் கிறுக்கினார்.




“போரில் யாரையேனும் பறிகொடுத்தவர்கள் உங்களில் எவர் ?’’ –என்று கேட்டேன். அனேகமாக எல்லோர் கைகளும் உயர்ந்தன . மரங்களில் ஏக்கத்துடன் முனகும் பனிக்காலக் காற்று போன்ற ஓலம் ; சற்றுமுன் சிரித்துக்கொண்டிருந்த அந்தக்கூட்டத்தில் பரவியது . முதியவர்கள் இருவர் அழுது கொண்டே என் வண்டிச்சக்கரத்தில் சாய்ந்தனர். ‘என் அண்ணன்! என் அண்ணனைக் கொன்றுவிட்டார்கள்!’ எனக் கத்திக்கொண்டே வெளியே ஓடினான் சிறுவனொருவன். மாதர்களோ தலைக்குட்டைகளால் கண்களை மறைத்துக் கொண்டோ , ஒருவரையொருவர் தழுவிக்கொண்டோ ஆறாய்க் கண்ணீர் பெருக்கினார்கள்.இவ்வளவு கண்ணீர் எங்கிருந்தது? வியந்தேன். சலனமற்ற அந்த முகங்களின் பின் இவ்வளவு துயரம் தேங்கியிருக்கும் என்று யார்தான் நினைத்திருக்க முடியும்? திடமான எல்லா ஆண்களையும் போரில் பறிகொடுத்துவிட்ட ஆயிரக்கணக்கான ருஷ்யக் கிராமங்களில் இதுவும் ஒன்று.” 




முதல் உலகயுத்தம் தொடங்கியது. போல்ஷ்விக் கட்சி போர்க்கொடி உயர்த்தியது .“சோஷலிசமும் யுத்தமும்” என்கிற லெனின் பிரசுரம் பெரும் தாக்கத்தைஉருவாக்கியது. லெனின் சுட்டினார், “100 அடிமைகளைக்கொண்டுள்ள ஒரு எஜமானன் 200 அடிமைகளைக் கொண்டுள்ள எஜமானனுடன் போர் செய்கிறான்– ‘அடிமைகளைப் பங்கிடுவது’ நியாயமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே.இதனை ‘பாதுகாப்பு யுத்தம்’ என்பதோ, “தந்தையர் நாட்டைப் பாதுகாக்கும் யுத்தம்” என்பதோ சரித்திரப் பிழையாகும்.”மென்ஷ்விக்குகளும் தேசபக்தி முகமூடியோடு யுத்த ஆதரவில் மும்முரமாயினர் .



போலீஸ் அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்ட போதிலும் போல்ஷ்விக்குகளான டூமா உறுப்பினர்கள் படயெவ், பீட்ரோவ்ஸ்கி, முரனோவ், சாமிலோவ், ஷாகோவ் நாடெங்கும் பயணித்து யுத்த எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இவர்கள் கைது செய்யப்பட்டு ‘தேசவிரோத’ வழக்கில் சைபீரியாவுக்கு நாடுகடத்தப்பட்டனர். 



லெனின் எழுதிய “ஏகாதிபத்தியம் முதலாளித்துவத் தின் உச்சகட்டம்” நூல் காத்திரமானது. 117 பக்க நூலுக்காக ஜெர்மன், ஆங்கிலம், பிரெஞ்சு, ருஷ்யன் மொழிகளில் 148 நூல்களிலிருந்தும், 232 கட்டுரைகளி லிருந்தும், 49 பத்திரிகைகளிலிருந்தும் லெனின் எடுத்த குறிப்புகள் 800 பக்கங்களுக்கு மேல் . இன்றும் மிகமுக்கிய பங்களிப்பாய் இந்நூல் திகழ்கிறது . யுத்தத் தேவையை பூர்த்தி செய்ய அரசு ‘யுத்தக் குழு’ உருவாக்கியது. தொழிலாளர் பிரிவை அதில் துவக்கியது. மென்ஷ்விக்குகள் இதில் இடம் பெறத் துடித்தனர். க்வோஜ்டேவ், அப்ராசிவ்மோவ் போன்றோர் தலைமையில் முயன்றனர். தொழிலாளர்கள் ஆவேசமாய் எதிர்த்தனர்.


“ஜாரை வீழ்த்துவதும் சமாதானமுமே” லட்சியமென பிரகடனம் செய்தனர் .யுத்தம் தொடங்கி மூன்று வருடங்கள் உருண்டோடிவிட்டன .ஜார் தோல்வியையே நுகர்ந்து கொண்டிருந்தான் . யுத்த மந்திரி சுக்ஹோம் லினோவ் ஜெர்மன் கையாளென நிரூபணமானது.துப்பாக்கியோ, குண்டுகளோ, ராணுவ உடையோ, பூட்ஸுகளோகூட இல்லாத நிலையில் ராணுவத்திலும் கலகங்கள் தோன்றின. காண்டிரக்டர்களும் தளபதிகளும் கொள்ளையடித்தனர் மக்கள் பஞ்சத்தில் தள்ளப்பட்டனர். ஒரு கோடியே 40 லட்சம் தொழிலாளர்கள் ராணுவப் பணிக்கு கட்டாயமாக அனுப்பப்பட்டனர். பல லட்சம் பேர் உறுப்புகளை இழந்தனர்.நம்ம ஊரில் ஆடு, மாடு திருடுவதுபோல் குதிரை திருடும் கிரிகோரி ரஷ்புடின் திடீரென சாமியார் அவதாரம் எடுத்தான்; ஜாரும் ஜாரினியும் இவன் சொல்லுக்கு ஆடலானார்கள்;


இவன் கோடிக்கணக்கான பணத்தை உறிஞ்சினான். மந்திரம், தந்திரம் என மோசடியில் ஈடுபட்டான்.மக்கள் கோபம் எல்லை மீறியது. 1916 முதல் மூன்று மாதத்தில் மட்டும் ஒரு லட்சம் பேர் பங்கேற்ற வேலை நிறுத்தங்கள் நடந்தன. தலைநகர் பெட்ரோகிராடில் மட்டுமல்ல உஸ்பெக்கிஸ்தான், கஜகிஸ்தான், துர்க்மேனியா என எங்கும் யுத்த எதிர்ப்பு பேரலை சுழன்றடித்தது. 1916 டிசம்பர் மத்தியில் சாமியார் ரஷ்புடின் கொலைசெய்யப்பட்டான். 1916 ஆம் ஆண்டு ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட படைவீரர்கள் ராணுவத்தைவிட்டு வெளியேறினர். “1905 ஆம் ஆண்டு உணர்வு கிராமத்தில் புதுப்பிக்கப்படுகிறது” என ரகசிய போலீஸ் அறிக்கைகள் எச்சரித்தன, ராணுவத்தைவிட்டு வெளியேறியவர் கிராமப்புற புரட்சிக்கு உதவலானார்கள் . கொதிநிலை நெருங்குவதைக் கண்ட முதலாளிவர்க்கம் மிரண்டது.


ஜாரை இனி நம்பிப் பயனில்லை ; புரட்சியை திசை திருப்ப ஜாரின் தம்பி மைக்கேல் ரோமனாவ் அல்லது பருவம் எய்தாத மகனுக்கு முடிசூட்டுவது; சில வாக்குறுதிகளை அளித்துவிட்டு புரட்சியை நசுக்குவது என்று திட்டமிட்டனர் .மக்களின் பேரலை முன் இந்த திட்டம் தவிடுபொடியானது.1917ஆம் ஆண்டு கொந்தளிப்போடு விடிந்தது.பெட்ரோகிராடு, பாகு, மாஸ்கோ, நிஜினி, நவ்கிராட் எங்கும் ஜனவரி 9 ,18,22,25 என மாறிமாறி வேலை நிறுத்தங்களும் ; ஆர்ப்பாட்டங்களும் வெடித்தன ; ‘ஜாராட்சி ஒழிக!’ என்பதே முழக்கமானது . பெண்கள் வீதியில் திரண்டனர்; போலீசும் துப்பாக்கியை தொழிலாளர்கள் பக்கம் திருப்ப மறுத்தது .பிப். 25 புரட்சி வெற்றி பெற்றது; 


முன்னணிப்படையான தொழிலாளிவர்க்கம்.இராணுவ உடுப்பு உடுத்தியிருந்த லட்சக்கணக்கான விவசாயிகளைத் திரட்டி – ‘சமாதானம், ரொட்டி, சுதந்திரம் என முழங்கச் செய்தது.சமாதானத்தை முன்னிறுத்தியது நடைமுறையுத்தி அல்ல ; மக்களின் உள்ளார்ந்த விருப்பம். ஆரம்பத்தில் பார்த்த வரிகள் ஆ.ரைஸ் வில்லியம் ‘நேரில் கண்ட ரஷ்யப் புரட்சி’ எனும் நூலில் பதிந்த சாட்சியாகும்



.புரட்சி ஆரம்பம் ஆனதுமே தொழிலாளர் பிரதிநிதிகளையும், இராணுவவீரர் பிரதிநிதிகளையும் கொண்ட சோவியத் என்ற அடித்தள ஜனநாயக அமைப்பு உருவாக்கப்படலாயிற்று. போல்ஷ்விக்கில் ஒரு பகுதியினர் வீதிப் போராட்டக் களத்திலும் தலைவர்கள் சிறையிலும் தலைமறைவாகவும் இருந்த சூழலில் சோவியத்துகளில் மென்ஷ்விக்குகளும் சீர்குலைவாளர்களும் அதிக இடம்பிடித்தனர்.



“ஜார் மன்னனுக்கு அனுப்பப்பட்ட தந்தியில் இந்த விலாசதாரர் எங்கிருக்கிறார் எனத் தெரியவில்லை என ஒரு தபால்காரர் கிறுக்கினார்” என நேரு தன் நூலில் சுட்டுவார்.1917 மார்ச் 12 ஜாரின் டூமாவிலிருந்த கையாள் ரோட்ஜ் யான்சோ தலைமையில் ஒரு தற்காலிகக் கமிட்டி அமைத்தது. ரகசியமாகப் பேசி இடைக்கால அரசொன்று பிரகடனப்படுத்தப்பட்டது. ஜாரின் நம்பிக்கைக்குரிய இளவரசன் லவாவ் அரசின் தலைவரானார். கெரன்சி என்ற மென்ஷ்விக் பிரதமரானார். மில்யூகோவ், குச்சுகோவ் போன்ற பிற சீர்குலைவாளர்களும் அரசில் இடம் பெற்றனர் 



.“இந்த நாட்டில் பிரம்மாண்டமான குட்டி முதலாளித்துவ அலையடித்திருக்கிறது - யாவற்றையும் உருட்டிப் புரட்டிச் சென்றிருக்கிறது. இது வர்க்க உணர்ச்சியுள்ள பாட்டாளியைவிட அதிக எண்ணிக்கையில் மட்டுமல்லாமல்; கருத்துலகிலும் மிஞ்சிவிட்டது.தொழிலாளர்களில் ஒரு பெரும் பகுதியினரிடையே குட்டிமுதலாளித்துவ அரசியல் கண்ணோட்டம் ஊடுருவிப் பாய்ந்து மயக்கத்தை ஏற்படுத்தியது” என்றார் லெனின். மிகவும் பொறுமையுடன் மக்களிடம் உண்மையை விளக்கிச் சொல்லி மென்ஷ்விக்குகளின் துரோகத்தை அம்பலப்படுத்தி சோவியத்துகளின் மெய்யான அதிகாரத்தை நிலைநிறுத்தும் சவால் மிக்க பணியை தோளில் சுமந்தபடி- புரட்சியைத் தொடரும் உத்வேகத்துடன் லெனின் தாய்நாடு திரும்பினார்.



புரட்சி தொடரும்

நன்றி : தீக்கதிர் - 4/09/2017.

0 comments :

Post a Comment