உலகளாவிய மூன்றாவது பெருமுயற்சி

Posted by அகத்தீ Labels:புரட்சிப் பெருநதி -46


உலகளாவிய மூன்றாவது பெருமுயற்சி


சு.பொ.அகத்தியலிங்கம்
அகிலம் இருவழிப் போராட்டப் பாதையை வளர்த்தெடுத்தது. 
முதலாளித்துவத்தை நிர்ப்பந்தித்து தொழிலாளி வர்க்கத்துக்கு 
சலுகைகளைப் பெறுவது; அடுத்து 
முதலாளித்துவத்தையே முடிவுக்குக் கொண்டுவருவது.


“இந்த அரங்கில் கூடியிருக்கும் தோழர்கள் முதல் சோவியத் குடியரசு அமைந்ததைக் கண்டார்கள். இப்போது அவர்கள் மூன்றாவது கம்யூனிஸ்ட் அகிலம் அமைவதைக் கண்டுகொண்டிருக்கிறார்கள். சோவியத்துகளின் உலக கூட்டாட்சியாய் குடியரசு அமைவதை அவர்கள் காணத்தான் போகிறார்கள்.”


உலகப் புரட்சியின் வெற்றியில் தளராத நம்பிக்கையை லெனின் உரக்கச் சொன்னார்.1919 மார்ச் 2 தொடங்கிய சர்வதேச கம்யூனிஸ்ட் மாநாட்டில் 21 நாடுகளிலிருந்து 35 அமைப்புகள் சார்பாக52 பிரதிநிதிகள் பங்கேற்றனர். 6 ஆம் தேதி ஆற்றிய நிறைவுரையின் போதே லெனின் மேலே சொன்ன நம்பிக்கையைப் பிரகடனப்படுத்தினார்.


“கம்யூனிச அகிலம் உருவாக்கப்பட்டதானது உலகத் தொழிலாளர் இயக்கம், பொதுவான உலகம் ஆகியவற்றின் வரலாற்றில் ஒரு மகத்தான திருப்பு முனையாக அமைந்தது, முதலாளித்துவக் காட்டுமிராண்டித்தனமான சுரண்டலுக்கும்- திட்டமிட்டு ஊட்டப்படும் அறியாமைக்கும்- மூடநம்பிக்கைக்கும் - ஈவிரக்கமற்ற கொடுங்கோன்மைக்கும்- கொலைகார யுத்தங்களுக்கும் நிரந்தர முடிவுகட்ட உறுதிபூண்டது பாட்டாளிவர்க்கம். அந்த பாட்டாளிவர்க்கத்தால், கம்யூனிஸ்டுகளால் தலைமை தாங்கப்படும் ஒரு இயக்கத்தை - அகிலத்தை- உறுதிமிக்க மக்கள் இயக்கத்தை; இனி உலகு தழுவிய அளவில் ஏகாதிபத்தியம் எதிர்கொள்ள நேரிடும்” என்கிறார் சுகுமால் சென். 


மேலும் இரண்டாவது அகிலம் எடுத்த சந்தர்ப்பவாத நிலையால் உருவான அடிமைத்தனத்தை உடைத் தெறிய கம்யூனிஸ்ட் அகிலம் உதவும் என்றார். ரஷ்யப் புரட்சியை தன்னுடைய முதல் கட்டமாகக் கொண்டிருந்த உலக சோஷலிசத்தின் மெய்யான போராட்டம் முழுவீச்சுடன் தொடங்கிவிட்டது என்றும் சுகுமால் சென் தன் நூலில் பதிவு செய்தார்.முதலாவது அகிலத்தின் மரபில் புது அமைப்பு மலர்ந்தது.


புதிய சகாப்தம் தொடங்கியது. லெனின் நம்பியது போல் முதலாளித்துவத்தின் வீழ்ச்சிக்கும் அதன் உட்கூறு சின்னாபின்னமாவதற்கும், பாட்டாளிவர்க்க கம்யூனிசப் புரட்சி யுத்தத்திற்கான சகாப்தம் தொடங்கியதாக அறிவித்துக் கொண்டு மூன்றாவது அகிலம் பிறந்தது. கோமின்டர்ன் என தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்டது. கம்யூனிஸ்ட் அகிலம் என்பதே இதன் பொருள்.இந்த மாநாடு கூடிய பின்னணி மிக முக்கியமானது


.“கார்ல் லீப்னெக்ட் மற்றும் ரோசா லக்சம்பர்க்கை கொலை செய்வதில் வெற்றி பெற்றுவிட்டோம் என பெர்லினில் இன்று முதலாளிகளும் சமூகத் துரோகிகளும் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். அந்த நாட்டின் ஆட்சியாளர்கள் பாட்டாளிகளின் தலைவர்களைக் கொல்லும் கசாப்புக் கடைக்காரர்கள் ஆகிப்போனார்கள். முதலாளித்துவக் கொள்ளைக்கும் காட்டுமிராண்டித்தனமான வன்முறைக்கும் ஜனநாயகம் ஒரு வேஷம் என்பதை ஜெர்மன் புரட்சி நிரூபித்துள்ளது.”


இது இந்தப் படுகொலையைக் கண்டிக்க ஜனவரி 19 அன்று மாஸ்கோவில் செஞ்சேனை வீரர்களும் தொழிலாளர்களும் திரண்டனர். லெனின் உரையாற்றிய போதே இவ்வாறு குறிப்பிட்டார். லூனாச்சார்ஸ்கி, ஸ்வெர்ட்லோவ் ஆகியோரும் கண்டன உரையாற்றினர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சர்வதேச ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையிலேயே பணி துவங்கி மூன்றாம் அகிலம் அமைக்கப்பட்டது. டிராஸ்கி, அலெக்சாண்டர் கொலந்தாய் ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர். குறிப்பாக முதலாளித்துவ ஜனநாயகத்தின் போலித்தனத்தையும் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தின் மேன்மையையும் வலியுறுத்துவதாகவே அவர்களின் பங்கு இருந்தது.1926 வரை லெனினால் முன்மொழியப்பட்ட ஜெனிலோவ் தலைமை ஏற்றார்.


அதன் பின் அவர் விலகிக்கொண்டதை அடுத்து பல்கேரிய கம்யூனிஸ்ட் ஜார்ஜ் டிமிட்டிரோவ் தலைமை ஏற்றார். அகிலம் கலைக்கப்படும் வரை அவர் தொடர்ந்தார்.அகிலத்தின் இரண்டாவது மாநாட்டிற்கு லெனின் இருபத்தியோரு ஆலோசனைகளை அனுப்பினார். அவை ஒவ்வொன்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் சோஷலிஸ்ட்கட்சிகளுக்கும் நெருக்கத்தை வளர்க்க உதவுகின்றனவாகவே இருந்தன.அகிலம் இருவழிப் போராட்டப் பாதையை வளர்த்தெடுத்தது. 


முதலாளித்துவத்தை நிர்ப்பந்தித்து தொழிலாளி வர்க்கத்துக்கு சலுகைகளைப் பெறுவது; அடுத்து முதலாளித்துவத்தையே முடிவுக்குக் கொண்டுவருவது.1909இல் உருவான ஐஎப்டியூ எனப்படும் சர்வதேசத் தொழிலாளர் சம்மேளனத்தின் துரோகத்துக்கு எதிராய் 1921இல் எழுந்த ஆர்ஐஎல்யூ எனப்படும் சர்வதேசத் தொழிற்சங்கங்களின் சிகப்பு அகிலம் - சில சீர்குலைவு அமைப்புகள் என பலவும் களத்தில் செயல்பட்ட காலமாயிற்று.


இரட்டை உறுப்பினர் பிரச்சனை அகிலத்தை உலுக்கியது; இது வெறும் நடைமுறை பிரச்சனை என்பதைத் தாண்டி இரு வேறு பார்வைகளுக்கு இடையிலான மோதலாக மாறியது.ஏகாதிபத்தியத்துக்கு எதிராக உலகம் முழுவதுமுள்ள உழைப்பாளிகளை அணிதிரட்ட வேண்டும் என்கிற கனவோடு வழிகாட்டிக் கொண்டிருந்த லெனின் 1924 ஜனவரியில் மறைந்தார். அகிலத்துக்கு இது முதல் பின்னடைவாகும்.லெனின் மறைவுக்குப் பின்னர் தோழர் ஸ்டாலின் தலைமையில் இயங்கிய மூன்றாவது அகிலம், பல்வேறு நாடுகளிலும் கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தொடங்கவும் வளரவும் துணைநின்றது.1917 முதல் 1935 வரை ஏழு மாநாடுகளும், பத்து விரிவடைந்த பிளீனம் எனப்படும் கூட்டங்களும் மேலும் ஆறு சிறப்புக் கூட்டங்களும் நடைபெற்றன. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ஏற்கப்பட்டது.


ஜனநாயக மத்தியத்துவத்தை அகிலத்துக்கும் பொருத்த முயற்சிக்கப்பட்டது. இதன் எதிர்வினைகளும் இருந்தன.இக்காலகட்டத்தில் சிகப்பு தொழிற்சங்க அகிலம் போல; இளங் கம்யூனிஸ்ட் அகிலம், பெண்கள் கம்யூனிஸ்ட் அகிலம், சிகப்பு உதவி அகிலம். சிகப்பு விவசாயி அகிலம், பாட்டாளி வர்க்க சிந்தனையாளர் அகிலம், ஏகாதிபத்திய எதிர்ப்புக்கழகம், தொழிலாளர் சர்வதேச உதவிக் கழகம் உள்ளிட்ட துணை அமைப்புகள் உருவாக்கப்பட்டு செயல்பட்டன. ஒவ்வொன்றும் வரலாற்றில் மறக்கவே முடியாத முத்தான சாதனைகளைப் படைத்து பாட்டாளி வர்க்கத்தை தலைநிமிரச் செய்தது.ஐரோப்பாவில் இட்லரின் பாசிச ஆக்கிரமிப்புக்கு எதிராக- நாடுகளின் சுதந்திரத்தையும் மக்களின் விடுதலையையும் இலட்சியமாகக் கொண்டு செயல்பட்டது.


பாசிசத்துக்கு எதிராக ஐக்கிய முன்னணியைக் கட்டியமைத்துப் போராடவும் வழிகாட்டியது.அனைத்துலக பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான பொதுத் திட்டத்தின் அடிப்படையில், ஒவ்வொரு நாட்டின் தனிச்சிறப்பான நிலைமைகளையும், அந்நாட்டின் அரசியல்- சமூக வளர்ச்சியின் நிலைமையையும் வர்க்க முரண்பாடுகளையும் கணக்கில் கொண்டு வழிகாட்டுவதில் உள்ள சிக்கல்கள் முன்னுக்கு வந்தது.ஆயினும் இரண்டாம் உலகப் போர் பற்றிய நிலைபாட்டில் இரண்டாம் அகிலம் போல் முதல் கட்டத்தில் பெரும் திணறல் எதுவும் இல்லை என்றே சொல்லலாம். அங்கொன்றுஇங்கொன்றாய் முணுமுணுப்புகளே இருந்தன. ஆனால் சோவியத் யூனியனை நோக்கி இட்லர் திரும்பிய போது அதன் போக்கும் குணமும் மாறின. எதிரொலி அகிலத்திலும் கேட்டது.


சோவியத் ரஷ்யா மீதான பாசிச இட்லரின் ஆக்கிரமிப்புப்போரைத் தொடர்ந்துநிலைமையில் ஏற்பட்ட குணாம்சமாறுதலை உள்வாங்குவதிலும் பல்வேறு கட்சிகளிடையேகுழப்பம் ஏற்பட்டன. போர்ச்சூழல் காரணமாக வழிகாட்டுவ திலும் முடிவெடுப்பதிலும் இடர்ப்பாடுகள் எழுந்தன. ஸ்டாலின் மற்றும் டிராட்ஸ்கி இருவருக்கும் ஏற்பட்ட கருத்து மோதல் அகிலத்திலும் பிரதிபலித்தது.இச்சூழல் காரண்மாக அனைத்துலகப் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான பொதுவழியை அடிப்படையாகக் கொண்டுஅந்தந்த நாடுகளின் பாட்டாளி வர்க்கக் கட்சிகள் பருண்மையான நிலைமைகளுக்கேற்ப இதனைச் செயல்படுத்த வேண்டுமென்ற பொது வழிகாட்டுதலுடன்; இனி சர்வதேச அகிலங்கள் தேவை இல்லை என்கிற முடிவுடனும் 1943 மே 15-ஆம் நாளன்று இந்த அகிலம் கலைக்கப்பட்டது.ஆயினும் தொழிலாளி வர்க்க சர்வதேச ஒருமைப் பாட்டிற்கான மாற்று வாயில்கள் திறக்கப்பட்டன.புரட்சி தொடரும்...

நன்றி : தீக்கதிர் 18/09/2017.

0 comments :

Post a Comment