புரட்சிப் பெருநதி : 45
பேராசிரியர் - விஞ்ஞானி - தளபதி -
போராளியானார் .
பாரீஸ் கம்யூன் நிகழ்வுகள் குறித்துநம்பகமான
தகவல்களைத் திரட்ட மார்க்ஸ் பெரிதும்
லாப்ரோவையே சார்ந்திருந்தார்.
“நாடுகடத்தப்பட்ட ரஷ்யப் புரட்சிக்காரர்களின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி நீங்கள் . மறைந்த பெரியவரின் ஸ கார்ல் மார்க்ஸின் ] பழம்பெரும் நண்பர். ஒருசேரக் கிடைக்கும் இந்தப் புத்தகத் திரட்டைப் பெறுவதற்கு ; வேறு யாரையும்விட உங்களுக்குத்தான் அதிக உரிமை உண்டு. உங்களின் - நமது ரஷ்ய நண்பர்களின் உணர்வுக்கும், அர்ப்பணிப்புக்கும் எனது நன்றி !நாடு கடத்தப்பட்ட ரஷ்யப் புரட்சிக்காரர்களின் நூலக மையத்தில் வைக்கும் நோக்குடன் உங்களிடம் இவற்றை ஒப்படைக்கிறேன்.” மார்க்ஸ் மறைவைத் தொடர்ந்து ஏங்கெல்ஸ் எழுதிய கடிதம் இது. யாருக்கு?
பியோதர் லாவ்ரோவிச் லாவ்ரோவ் 1823-இல் ரஷ்ய நிலப்பிரபு குடும்பத்தில் பிறந்தவர். 14 வயதுக்குள் ரஷ்யன், பிரெஞ்சு, ஜெர்மன், ஆங்கிலம் என பல மொழிப் புலமை பெற்றவர். கணிதத்தில், இயற்கை விஞ்ஞானத்தில் மிகவும் கெட்டிக்காரர். இலக்கியத்தில் தோய்ந்தவர். 1837-இல் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் படைக் கல்லூரியில் பயின்றார்.
1842-இல் அதே கல்லூரியில் கணிதப் பேராசிரியரானார். 1849-இல் கர்னலாக –தளபதியாக பதவி உயர்வு பெற்றார்.கிட்டத்தட்ட 20 வருடம் பேராசிரியராய், விஞ்ஞானி யாய், இயங்கினார். எதுவும் அவரது இதயத்துக்கு உவப்பானதாக இல்லாமல் போனது. தளபதிகளின் ஆடையோ மிடுக்கோ அவரை ஈர்க்கவில்லை; ரஷ்யாவில் நிலவிய கொடுங்கோன்மையை வெறுத்தார்; 1850, 60-களில் எழுந்த புரட்சிக்கனலே அவரை அழைத்தது.இளமையிலேயே லெனினை கவர்ந்த செர்னி செவ்ஸ்கி நடத்திய ‘சமகாலம்’ ஏட்டில் லாவ்ராவ் ராணுவவிவகாரங்கள், இயற்கை விஞ்ஞானம் குறித்து கட்டு ரைகள் எழுதினார். தனது கவிதைகளை லண்டனில் உள்ள ஹெர்சானுக்கு அனுப்பினார்.
லாப்ரோவ் பத்திரிகையாளராக மாறினார். “ஒரு வெளியீட்டாளருக்கு ஒரு கடிதம்” என்ற கட்டுரையில் தனது அரசியல் கருத்துகளை முதன் முதல் பகிரங்கப்படுத்தினார். 1862-இல் எழுதிய “ கொஞ்சம் கொஞ்சமாக” எனும் கட்டுரையில் கட்டம் கட்டமாக ரஷ்ய சமுதாயத்தை மாற்ற முடியும் என்ற கருத்தைக் கேலி செய்தார். நடைமுறை தத்துவம் மற்றும் தோற்ற மயக்கம் குறித்த இவரது புத்தகம் அனைவரின் கவனத்தையும் தொட்டது. பகுனின், பிளக்கனோவ் இவர்களின் அரசியல் சித்தாந்தப் பார்வையே இவருள் ஆழமாக வேரிட்டது.1862-இல் ‘நிலமும் சுதந்திரமும்’ என்ற பெயரில் இயங்கிய புரட்சிக்குழுவில் இணைந்தார். அங்கு ஆசிரியர் குழுவின் தலைவர் என்ற முறையில் ‘ ஒரு கலைக் களஞ்சிய அகராதி’ யைத் தொகுத்தார். அதில் மதத்தின் ஏமாற்றுகளைக் கடுமையாகச் சாடினார்.
நூல் தடை செய்யப்பட்டது .1864-66 இல் லாவ்ரோவால் வெளியிட்ட வெளிநாட்டுச் செய்தித் தொகுப்பும் தடை செய்யப்பட்டது. இவரது பிரசங்கங்கள் இளைஞர்களுக்கு உணர்ச்சியூட்டியதால் அவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டது.ஜார் மன்னரை கொலை செய்ய முயற்சி நடந்ததைத் தொடர்ந்து லாவ்ரோவின் வீடு சோதனைக்குள்ளானது. கைது செய்யப்பட்டு ஒன்பது மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலை ஆனதும் வோலோக்டோ மாநிலத்திற்கு நாடு கடத்தப்பட்டார். அங்குதான் “வரலாற்று ரீதியான கடிதங்கள்” நூலை எழுதினார். நரோத்னிக் இயக்கத்தின் வழிநடத்தும் நூலானது இது. இவரை ஜாரின் போலீஸ் சதா கண்காணிக்கத் தொடங்கியது. 1870 மார்ச் மாதம் வெய்மர் என்ற போலி கடவுச் சீட்டில் பாரீஸுக்கு பறந்தார்.பாரீஸில் விஞ்ஞான வட்டாரத்துடன் உறவு கொண்டார். முதல் அகிலத்தில் பாரீஸ் பகுதி உறுப்பினரானார்.
பாரீஸ் கம்யூன் நிகழ்வுகளில் பங்கெடுத்தார். பாரீஸ் கம்யூன் குறித்து இவரெழுதிய இரு கட்டுரைகள் எல் இண்டர்நேஷனில் வெளிவந்தன.கம்யூன் சார்பில் மார்க்ஸ் தலைமையிலான அகிலத்தின் தலைவர்களைச் சந்திக்க லண்டன் சென்றார். பாரீஸ் கம்யூன் நிகழ்வுகள் குறித்து நம்பகமான தகவல்களைத் திரட்ட மார்க்ஸ் பெரிதும் லாப்ரோவையே சார்ந்திருந்தார்.1871-இல் பாரீஸ் திரும்பினார். இவரது பாரீஸ் நண்பர் பலருக்கு மார்க்ஸ் இல்லத்தில் அடைக்கலம் கொடுத்தது குறித்தும்; பல வழக்கு விவரங்களைக் கேட்டும் ஏங்கெல்ஸ் இவருக்குக் கடிதம் எழுதினார். ‘பார்வர்டு’ பத்திரிகை ஆசிரியர் குழு லண்டனுக்கு இடம் மாறியபின் இதழ் ஒன்றை மார்க்சுக்கு அனுப்பினார் லாவ்ரோவ். மூலதனம் நூல் ஜெர்மன் பதிப்பைஅனுப்பியதோடு ஒரு கடிதமும் எழுதினார் மார்க்ஸ்; அதில் தனது உடல் நிலை சரியானதும் வந்து சந்திப்பதாகத் தெரிவித்திருந்தார்.
1875-77இல் இருவரும் அடிக்கடி சந்தித்து உரையாடினர். ரஷ்யா குறித்து லாப்ரோவிடம் மார்க்ஸ் நிறைய விவரங்கள் கேட்டறிந்தார். லாப்ரோவ் ரஷ்யப் புரட்சிக் குழுக்களுடன் தொடர்பில் இருக்க மார்க்ஸ் உதவினார்.1883-இல் மார்க்ஸ் மரணத்தால் லாப்ரோவ் பெரிதும் பாதிக்கப்பட்டார். மார்க்ஸ் சேகரித்து வைத்திருந்த ரஷ்யா குறித்த நூல்களை லாப்ரோவுக்கு அனுப்பியபோது ஏங்கெல்ஸ் எழுதிய கடிதத்தையே முதலில் பார்த்தார்.மார்க்ஸ் ஏங்கெல்ஸ் இவர்களுடனான நட்பு லாப்ரோவ் வார்த்தைகளில் சொல்வதானால் “அவருக்கு ஒரு அற்புதமான கல்விக்கூடமாக இருந்தது.”பாரீஸ் கம்யூன் அனுபவங்களும் லாப்ரோவுக்கு பாடமாகின. 1873 – 1876 வரை பார்வர்டு இதழையும், செய்தி ஏட்டையும் தொகுத்தளித்தார்.
இவை சோஷலிஸ்ட், சர்வதேச தொழிலாளி வர்க்க ஏடாகத் திகழ்ந்தன.நரோத்னிசம் ரஷ்யாவில் செல்வாக்கு இழக்கத் துவங்கியது; நரோத்னயா ஓல்யா எனும் குழுவோடு தொடர்புடன் இருந்தார். வெளிநாட்டிலுள்ள ரஷ்யப் புரட்சியாளர்களை இணைப்பதிலும்; சோஷலிசத்துக்காக வாதாடுவதிலும் தன் பெரும் பகுதி நேரத்தைச் செலவிட்டார்.
1898-இல் அவரது 75 ஆவது பிறந்த நாளை பாரீஸ் நண்பர்கள் விழாவாக நடத்தினார்கள். வாழ்த்து தெரிவித்த செய்திகள் ரஷ்ய, உலக புரட்சி இயக்கங்களுக்கு அவர் ஆற்றிய பணியை நினைவு கூர்ந்தன.
19 ஆம் நூற்றாண்டின் விடுதலை இயக்கங்களின் அனைத்துக் கட்டங்களையும் பார்த்தார்; உறுதியான சோஷலிஸ்டாக இருந்தார்;எனினும் நரோத்னிச பிரமை அவரோடு பிணைந்தே இருந்தது. மார்க்ஸ் எடுத்துரைத்த பாட்டாளி வர்க்கப் பாத்திரத்தைப் புரிந்து கொள்ளவே இல்லை.1900 பிப்ரவரி 6 ஆம் நாள் பாரீஸில் காலமானார். பாரீஸிலுள்ள ரஷ்யர்களும் புரட்சியாளர்களும் இறுதி நிகழ்வில் பங்கேற்றனர். பிரெஞ்சு சோஷலிஸ்ட் சார்பில் இரங்கல் உரை ஆற்றிய பால் லாஃபர்க் சொன்னார்,
“பியோதர் லாவ்ரோவில் பெயர் ரஷ்யச் சிந்தனையோடும்; ரஷ்ய புரட்சிகர ஜனநாயக இயக்கத்தோடும் என்றென்றைக்கும் இணைந்திருக்கும்.”புரட்சிக்குப் பின்னரும் இவரை லெனின் நினைவுகூர்ந்தார்; ஏனெனில் பழைய உலகைக் கைகழுவி புத்துலகைக் கனவு கண்ட ஒருவரை தலைமுறை தலைமுறைக்கும் நினைவூட்டிக்கொண்டே இருக்க வேண்டும்தானே !
புரட்சி தொடரும்…
நன்றி : தீக்கதிர் 11/09/2017
0 comments :
Post a Comment