மரணத்தை மறுவாசிப்பு செய்கிறேன்

Posted by அகத்தீ Labels:

மரணத்தை மறுவாசிப்பு செய்கிறேன்

மரணத்தை மறுவாசிப்பு செய்கிறேன்
வலி இல்லா மரணங்கள் இல்லை
எல்லா மரணங்களும்
ஒரே மாதிரி வலிப்பதில்லை

வெறும் தகவல்களாகும்
மரணங்கள் பல
சற்றே அனுதாபத்தை கிளர்த்திவிடும்
மரணங்கள் பல
பார்த்த போது மட்டும்
நெஞ்சம் வெடிக்கும்
மரணங்கள் பல

சில நாட்கள்
சில மாதங்கள்
சில வருடங்கள்
என அவரவர் நெருக்கத்தில்
வலிஅறிவர்
எல்லாமே சாவுதான்
எனினும்
சில சாவுகளே
தலைப்பு செய்தியகிறது

எந்த சாவு எனினும்
இழந்தவர் அறிவர் இழப்பின் வலியை

அகால மரணகளும்
அற்பாயுள் மரணங்களும்
படுகொலை மரணங்களும்
பரிதாப மரணங்களும்
தற்கொலை சாவுகளும்
பட்டினி சாவுகளும்
ஏதோஒரு வகையில்
ஊர் வாயில் அரைபடுகிறது
அவரவர் பார்வையில்
விதவிதமான அர்த்தங்கள்
ஆனாலும்
எல்லாமே சில நாட்களில்
தடம் மறைந்து போகிறது

களசாவுகள் மட்டுமே எப்போதும்
"காலம் "ஆகிறது
காலமானார் என்பதன் பொருள் ஆகிறது
தனக்காக இல்லாமல்
பிறருக்காக துடிக்கும் இதயத்தின்
வலியை பறைசாற்றும்
வல்லமை அதற்கு மட்டுமே உண்டு
ஆனாலும் அதிலும் கூட கேள்விகள் உண்டு
தள்ள தக்கன கொள்ளத்தக்கன உண்டு
நீதி கேட்போர் பக்கம் நின்று
நிலத்தில் விதையாய் விழ்ந்தவர் உண்டு
அநீதியாளர்கள் அருகில் நின்று
அகாலமரணம் அடைந்தவர் உண்டு
எந்த சாவு களசாவு என காலம் சொல்லும்

காரணத்தோடு சாவுகள் வரலாம்
காரணம் இல்லாமலும் சாவுகள் வரலாம்
பிரச்சனைகளால் சாவு வரலாம்
சில சாவே பிரச்சினை ஆகலாம்...
எது எப்படியோ ?
மரணம் வலிக்கத்தான் செய்யும்

ஊர்வன பறப்பன எல்லாம் மரணித்தாலும்
மனித மரணம் மட்டும் பெரிதாய் போவதேன்
மரணம் பற்றிய கேள்விகளே தத்துவ விசாரணையோ
இல்லை இல்லை வேதாந்த விளக்கமோ

மரணம் நிச்சயம்
யோசித்து பார்க்கின்
நேற்று முடிந்த கதை
நாளை வெறும் கனவு
இன்று மட்டுமே நிஜம்
ஆடு ..விளையாடு அனுபவி


ஞாநியும் சாகிறான்
மூடனும் சாகிறான்
தியாகியும் சாகிறான்
துரோகியும் சாகிறான்
முடிந்தவரை அனுபவி
முடிந்தபின் எ ச்சம் எது
இப்படித்தான் பலர் வாழ்வு
வரலாறாய் ஆவதில்லை
அவர் வாழ்வும் சாவும்

இப்போதே இக்கணமே
உன் வீட்டு கதவை மரணம் தட்டலாம்
விதைப்பதும் விதையாவதும்
உன்கையில்
பிறப்பின் பயன்
இறப்பில் தெளிவாகும்
இலக்கு தெளிவானால்
இறப்பு என்செய்யும் ?

உறங்குவது போல்தான் சாக்காடு
உள்ளுக்குள் உண்மை ஓளி உண்டானால்
சந்ததி வாழ சிந்தனை ஊறும்
சந்ததி வாழ்த்தும்
விதைப்பதும் விதையாவதும்
உன்கையில் .......

சு பொ அகத்தியலிங்கம்