விளக்குவீரா !!!
சு.பொ.அகத்தியலிங்கம்
இந்தியா நெடுகிலும்
தேடிச் சலித்தேன்
நாகரீக மனிதர்
ஊருக்கு ஒருவரேனும்
அகப்படவே இல்லை...
இன்னும்
இந்தியா நாகரீக நாடெனச்
சொல்லித் திரியாதீர் !!
இப்படிச் சொல்லுவதால்
தேசபக்தி இல்லாதவனென்றோ
தேச விரோதி என்றோ
என்மீது முத்திரை குத்துவதில்
எனக்கு வருத்தமே இல்லை !!
எனது கவலை எல்லாம்
நாகரீக இந்தியரைத்
தேடிக் கண்டுபிடிப்பதுதான்..
சாதியை
வரதட்சணையை
தொலைக்காதவரை
நாகரீக மனிதரென்று
எப்படிச் சொல்வது ?
அருள்கூர்ந்து விளக்குவீரா !!!
எங்களுக்கு இல்லை குழப்பம்..
சு . பொ .அகத்தியலிங்கம்
குழப்பம் ஊடகங்களுக்குத்தான்a
எங்களுக்கு இல்லை..
வறுமையை அளப்பது எப்படி
அளவுகோல் தேவை இல்லை
எங்கள் அனுபவம் சொல்லும்...
ஊரை இரண்டாக்குவது யார் ? எது ?
ஆராய்ச்சி எதுவும் தேவை இல்லை
எங்கள் காயங்கள் சொல்லும்..
விலைவாசியை யார் குறைப்பார்கள் ?
யாரையாவது நம்பித் தொலைக்க
நாங்கள் இன்னும் இளிச்சவாயர்களா ?
வேலையின்மை எப்போது தொலையும் ?
வாக்குறுதிகள் சோறு போடாது
எங்களுக்குத் தேவை தலைகீழ் மாற்றங்கள் !!
குழப்பம் ஊடகங்களுக்குத்தான்
எங்களுக்கு இல்லை..
அற்புத சுகமளிப்பவர் அவரா ? இவரா ?
சிபாரிசுகளும் பரிந்துரைகளும் தேவை இல்லை
உண்மையான சிகிட்சையை யாமறிவோம்..
தொழுகையும் வழிபாடும் பூஜையும் பிரார்த்தனையும்
வியாபாரமாய் அரசியலாய் வலுத்தவன் கைப்பாவையாக
கடவுளே கண்கலங்கி சூழ்நிலைக் கைதியாய்...
அடுக்களையும் பள்ளிக்கூடமும் மருத்துவமனையும் சாலைகளும்
முகமூடிகளை கழற்றி எறிந்துகொண்டிருக்கின்றன
எங்களின் அடிவயிறு எரிந்து கொண்டிருக்கிறது...
அடிவயிற்று வெப்பத்தை அளவிட இயலுமோ ?
யுகநெருப்பை பன்னீரா அணைக்கும் ?
சூடேறிக்கொண்டிருக்கிறது எங்கள் ரத்தமும் கண்ணீரும்
எங்கள் உணர்வுகளைக் கணிக்க அளக்க
எந்தக் கொம்பனுக்கும் சக்தி இல்லை - வாழ்நிலை
அணுதினம் கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கிறது
.நங்கள் தெளிவாக இருக்கிறோம்
எங்கள் ரட்சகர்கள் ஊடகங்களில் இல்லை
அவரும் இல்லை இவரும் இல்லை
நாங்கள் தெளிவாக இருக்கிறோம்
நாங்கள் நிச்சயம் வாக்களிப்போம்
அது தீர்வல்ல என்பதறிவோம்..
உண்மையான மாற்று அருகில் இல்லை
வெகுதூரப் பயணத்துக்கு தயாராகிறோம்
இளைப்பாறுதலாய் இடைக்கால ஏற்பாடுகள்...
குழப்பம் ஊடகங்களுக்குத்தான்
எங்களுக்கு இல்லை..
அழகானதா எங்கள் கிராமம் ?
- சு.பொ.அகத்தியலிங்கம்
எங்கள் கிராமம் அழகென்று
கர்வம் கொள்ள முடியலில்லை ..
பசுமை போர்த்திய வயல்களை
லேஅவுட் போட்டு விற்கிறோம் ; - ஆனால்
சாதிச் சனியனை விடாமல் இன்றும்
கட்டிக் கொண்டு அழுகிறோம்..
எங்கள் கிராமம் அழகென்று
கர்வம் கொள்ள முடியலில்லை ..
ஆறு ,குளத்தை விழுங்கிவிட்டோம்
ஒரு வாய்த் தண்ணிக்கு அலைகின்றோம் ; - ஆனாலும்
மூட பழக்க வழக்கங்கள் ஒன்றுவிடாமல்
மூட்டைகட்டி சுமக்கின்றோம்
எங்கள் கிராமம் அழகென்று
கர்வம் கொள்ள முடியலில்லை ..
கழிப்பறை இல்லை சுகாதாரமில்லை
வழிந்தோடும் சாக்கடை வண்டி வண்டியாய்க் குப்பை
மூக்கைமூடி வாழ்ந்தாலும் - கோவில்
சண்டையில் மண்டை உடைகிறோம்.
எங்கள் கிராமம் அழகென்று
கர்வம் கொள்ள முடியலில்லை ..
வயிற்றைக் கழுவவும் வேலையில்லை
பஞ்சம் பிழைக்கப் பட்டிணம் போனோம்
சாதி வீம்பை விட்டுவிடாமல் மூடப் பகைமையை
நெஞ்சில் சுமந்தே செல்கிறோம்
எங்கள் கிராமம் அழகென்று
கர்வம் கொள்ள முடியலில்லை ..
ஊரையும் சேரியையும் இணைக்கும்
சாலையோ பாதையோ உண்டு நிச்சயம்
உள்ளத்தை இணைக்கவோ ஒர்வழி இல்லை
சுருங்கிய உள்ளம் விரிந்தபாடில்லை.
எங்கள் கிராமம் அழகென்று
கர்வம் கொள்ள முடியலில்லை ..
- நன்றி : தீக்கதிர் - வண்ணக்கதிர் 27-10-2013
திருமண நாளில்...
இன்று நான் சி.கலாவதியை
என் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொண்ட இனிய நாள் . சென்ற ஆண்டு இதே நாளில் பதிந்ததை திரும்பவும் அசைபோடுகிறேன்
[ கீழுள்ள
சுட்டியை அமுக்கி அதனை வாசிக்க வேண்டுகிறேன் ]
மகன் திருமணம் சாதிமறுப்பு காதல் திருமணமாய் நடந்தேறியது ; இந்த ஓராண்டில் என் வாழ்வில் முக்கிய நிகழ்வாகும் .
மகன் மருமகளோடு பெங்களூர்
சென்றுவிட்டோம் ; எனினும்
என் சமூகப்பணியும் பத்திரிகையாளர் பணியும் சென்னையும் பெங்களூருமாய் மாறிமாறித் தொடர்கிறது .
கழுத்தை நெரித்த சிக்கல்களிலிருந்து
பெருமளவு விடுபட்டுவிட்டோம் .
வாழ்வைத் திரும்பிப்
பார்க்கிறபோது இயன்றவரை ஒரு நேர்மையாக லட்சியபூர்வமாக வாழ்ந்திருக்கிறோம் .தவறுகளும் பிழைகளும்
போராட்டங்களும் இல்லாமல் வாழ்க்கை இல்லை . நாங்களும் விதிவிலக்கல்ல . ஆயினும் திரும்பிப்
பார்க்கும் போது மனத்திருப்தி இருக்கிறது . அதுதான் எம் வாழ்க்கை வெற்றி எனபதன் அளவுகோல் .
வாழ்க்கையில் முக்கால்
பகுதியைத் தாண்டிவிட்டோம் .மீதமுள்ள பகுதியையும்
சமூகத்துக்கும் குடும்பத்துக்கும் பயனுள்ளபடி நிச்சயம் தாண்டுவோம்..
மகள் ,மகன் , மருமகன் , மருமகள் , பேரன் , பேத்தி எல்லோரும் அன்பைப்
பொழிகிறார்கள் ; தோழமையும்
நட்பும் சூழ நிற்கிறது ;கட்சி [ சிபிஎம்] வாழ்வும் குடும்ப வாழ்வும் முரணின்றி தொடர்கின்றது ;பதவிப் பொறுப்புகளிலிருந்து
சுயமாக விலகிக் கொண்டாலும் சமூகப் பொறுப்பையும் லட்சியக் கடமையையும் ஒல்லும் வகையெல்லாம்
ஆற்றுகிறோம் .
32 ஆண்டுகளுக்கு
முன் வாழ்க்கைத் துணை என்பதுதான் சரியான சொல்லாட்சியாகவும் ; அன்றையப் புரிதலாகவும்
இருந்தது ; இன்றைக்கு
வாழ்க்கை இணையர் என்கிற சமுத்துவப் புரிதலாகவும் சொல்லாட்சியாகவும் பரிணமித்துள்ளது . ஆம் , எம் வாழ்விலும் அப்படித்தான் .
பசுமையான நினைவுகளோடும்
வாழ்க்கை கற்றுக் கொடுத்த பாடங்களோடும் பயணம் தொடர்கிறோம் .
வாழ்த்திய நெஞ்சங்கள்
அனைத்திற்கும் நன்றி .
உயர் கல்வியின் வரலாறாகவும்...
சு.பொ. அகத்தியலிங்கம்
குழந்தைசாமி என்கிற கல்வி சார் ஆளுமை யின் வாழ்க்கை சவால்களும் சாதனைகளும் ஒவ் வொரு தமிழரும் அறியவேண்டிய அரிய செய்தியாகும் . தனிமனித வரலாறு என்ற வரையறையைத் தாண்டி அண்ணா பல்கலைக் கழக வரலாறாகவும் ; தமிழக உயர் கல்வியின் வரலாறாகவும் ; தமிழ கத்தில் பல்கலைக் கழகங்களின் வரலாறாகவும் இந்நூல் விரிவு பெற்றிருக்கிறது எனில் அது மிகையாகாது .என்னுரை என்கிற தலைப்பில் வா.செ . எழுதியுள்ள கருத்தாள மிக்க உரை வெறுமே வாசிப்ப தற்கு மட்டுமே உரியதன்று, அதற்கும் அப்பால் ஒரு நெடிய விரிந்த, மனம் திறந்த விவாதத்திற்கும் உரியது .
மொழிப் பிரச்சனை , உயர்கல்வியின் முன்னுள்ள சவால்கள் , சமுதாயம் எதிர் கொள்ளும் சாதி நஞ்சு இவை குறித்து உரத்த சிந்தனை களை விதைத்துள்ளார் . “அரசமைப்பு முறை நடைமுறைப்படுத்தப் படுவதைத் தாமதிக்கலாம் ; ஆனால் தடுத்துவிடமுடியாது”. என்று கூறும் வா.செ. இந்தியா வின் அரசமைப்பில் இந்தி ஆட்சிமொழி யாவது தவிர்க்க முடியாது என்கிற கசப்பான உண்மையை அங்கீ கரித்து ; “இந்திய அரசமைப்பில் மாநில மொழிகட்கு இரண்டாம் இடம் தவிர்க்க இயலாது .அந்த இரண்டாமிடமும் கண்ணியமாக இருக்க வேண்டுமெனில் கீழ்கா ணும் அலுவல்களிலாவது தமி ழும் அல்லது மாநில மொழியும் பயன்படுத்தப்பட வேண்டும் ” என நடைமுறை சாத்தியமான வழி காட்டுதல்களை முன்வைக்கிறார்.
உணர்ச்சிகளை கொம்புசீவி முட்டிக்கொள்ளாமல் தமிழக மொழிக்கொள்கை குறித்த விவா தத்தை துவக்கிட வழிகாட்டியுள் ளார் . .அறிவார்ந்த முன்னெடுப்பு. “ உலக மக்கள் தொகையில் 16 சதவீதத்தினர் இந்தியாவில் இருக் கிறார்கள் . ஆனால் உலக அறிவி யல் ஆய்வாளர்களில் இந்தியர்கள் 2 சதவீதம்தான். இந்தியாவில் ஒரு மில்லியன் மக்கட்கு 137 பேர்தான் ஆய்வாளர்கள். இந்த எண்ணிக்கை சீனாவில் 1070, அமெரிக்காவில் 4663 , ஜப்பானில் 5573 ” எனக் கவலையோடு வா. செ. உயர்கல்வி குறித்து ஒரு ஸ்கேன் ரிப்போர்ட் தருகிறார். சீனாவோடு ஒப்பிட்டு நாம் செல்ல வேண்டிய தூரத்தை இடித்துக் காட்டுகிறார் .
கல்வி சமூகத்திலும் அரசியல் தளத்திலும் விவாதித்து அரசியல் உறுதியோடும் கல்வி அக்கறையோடும் முடிவெடுக்க வேண்டிய தலையாயப் பிரச்சனை.தீக்குணம் அனைத்தினுள்ளும் தீயதாம் சாதிப்பற்று குறித்து கண்ணீர் உகுத்து வா.செ . தன் கவ லையை, கோபத்தை நச்செனப் பதிவு செய்துள்ளார் . “பயணத் தின் சுமையைக் குறைக்க நான் மேலே குறிப்பிட்ட பாரங்களை இறக்கி வைக்க வேண்டும் என்பது என் வாழ்க்கை வரலாறு பற்றிய பதி வின் நோக்கம் .” என்கிறார் . அதில் வென்றுள்ளார் என்பதை இந் நூலைப் படித்து முடிக்கும் அனை வரும் ஒப்புக்கொள்வர் .
வாங்கலாம்பாளையத்தில் மாடு மேய்த்த அனுபவம் தொடங் கி அண்ணாபல்கலைக் கழகம் , மதுரை பல்கலைக் கழகம் , இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக் கழகம் , யுனெஸ்கோ என ஒவ்வொன்றி லும் உயர் பொறுப்பில் பணியாற்றிய அனுபவம் ஈறாக 75 அத்தியாயங் களில் வா.செ.வரலாறு நீள்கிறது.இளமையில் கடும் சிரமத் தோடு கல்வி பயின்ற வா.செ வின் அனுபவமும் வாழ்நாள் முழுவ தும் கிராமப்புற மாணவர்கள் பயன் பெற வேண்டும் என்கிற உந்துதலும் கல்விமேம்பாட்டில் தீவிரமான பங் களிப்பும் இந்நூலை வாசிக்கிறவர் யாராயினும் அவரை சுண்டி ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை.
குறிப்பாக எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் வா. செ. முயற்சியில் ஊழல் முறைகேட்டை ஒழித்து பரவலாக அனைத்து மாணவர்களும் பயன் பெற நுழைவுதேர்வு வழிகாணப்பட் டது மிக முக்கிய பாய்ச்சல் முன் னேற்றமே ; அந்த நுழைவுதேர்விலும் சிக்கல்கள் ஏற்பட்டு பள்ளிஇறுதி யாண்டு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு என்றானது அடுத்த கட்டம் ; எது எப்படியிருப்பினும் நேர்முகத் தேர் வில் தலைதூக்கும் சிபாரிசு சலுகை ஒழிந்து ஒரு கறாரான அளவுகோல் உருவானது மிக முக்கியம் . இதில் வா.செ முன்கை எடுத்த நுழைவுதேர் வுக்கு காத்திரமான பங்குண்டு . இந்நூல் மூலம் இதனை அறிகிறோம் .அண்ணா பல்கலை உருவாக எவ் வளவு நிர்வாகத் தடைகள், தாமதங்கள் ; அனைத்தும் பொறுமையாக வும் நுட்பமாகவும் எதிர்கொள்ளப்பட்ட விவரங்கள் நிச்சயம் தமிழ்கூறும் நல் லுலகம் அறியவேண்டிய அரிய செய் திகளே.
குடியரசு தலைவராய் திகழ்ந்த அப்துல் கலாம் எழுதிய அக்னிச் சிறகுகள் எனும் சுயசரிதையில் விண் வெளி ஆய்வில் ஏவுகணை செலுத்துவதில் பெறப்பட்ட வெற்றியின் பின்னா லுள்ள வலியும் - நிர்வாக ரெட்டேப் பிசத்தை எதிர்கொண்டு போராடி வென்றதையும் அறியலாம் . அதே போல் உயர்கல்வித்துறையில் தற் போது ஈட்டப்பட்டுள்ள வெற்றியும் தனக்கே உரிய வலியை காயத்தை போராட்டத்தைக் கொண்டுள்ளதை வா . செ . வரலாற்றூடே அறிய முடிகி றது இவ்விரு புத்தகங்களையும் பெரும் பதவிகளை வகிப்போர் கட்டாயம் வாசிப்பது அவசியம் .மனைவியின் நியாயமான பதவி உயர்வை தடுத்ததும் , மகன் பொறியி யல் கல்வி ஓராண்டு நீடிப்பதில் உறுதிகாட்டியதும் ; சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராய் இருக்கவேண்டும் என்பதை வா. செ . கறாராக பற்றி நின்றதை பறை சாற்று கின்றன . இவர் பெற்ற விருதுகளின் பட்டியலும் வகித்த பொறுப்புகளின் பட்டியலும் மலைக்க வைக்கின்றன விருதுகளும் பரிசுகளும் நிறையப் பெற்றிருந்தும் பாராட்டுவிழாக்க ளைத் தவிர்த்தது அருங்குணமாகும். மு.வ குறித்தும் இதுபோன்ற செய்திஉண்டு.
பாராட்டு போதை, புகழ் போதையில் மயங்காதிருக்க அசாத்திய மன உறுதி வேண்டும். சான்றோர்களிடமே இதனைக் காண இயலும்.நீரியல் துறை சார்ந்த வல்லுநர் ஆய்வாளர் ஆயினும் தமிழ்மீது இவர் கொண்ட காதல் அளவற்றது . 15 கவிதை நூல்கள், 16 உரைநடை நூல்கள் தமிழிலும் , ஒரு கவிதை நூல் உட்பட ஏழு நூல்கள் ஆங்கிலத்தி லும் யாத்துள்ளார் . இவர் எழுதிய மானுட யாத்திரை என்கிற காவியம் இரண்டு பாகங்கள் பொருண்மையி லும் அழகியலிலும் புதுமை முயற்சி யாகும். மானுட வரலாற்றை அறிவியல் பூர்வமாக அதிலும் கவிதையாக தந்தது இதற்கு முன்னர் யாரும் செய்யாத முயற்சியாகும். இந் நூல் குறித்து இப்பகுதியில் ஏற் கெனவே விரிவான அறிமுகம் எழு திவிட்ட தால் இங்கு இத்துடன் நிறுத்திக் கொள்கிறோம். தமிழ் எழுத்து சீர்திருத்தம் குறித்து இவரது முன்மொழிவு கவனிப்புக் குரியது.சுவையான செய்திகளும் ஏராள மான தகவல்களும் நிரம்பிய இந்த வாழ்க்கை வரலாற்று நூல் ஆழ்ந்த வாசிப்புக்குரியது . சாதிக்கத் துடிக் கும் இளைஞர்களுக்கு ஒரு அரிய கையேடு . தன்வரலாறாகவே இந்நூல் எழுதப்பட்டிருந்தால் இன்னும் வலுவாக இருந்திருக்குமோ?
ஆடு, மாடு மேய்ப்பதில் தொடங்கிஅண்ணா பல்கலை தாண்டி...!வா.செ.குழந்தைசாமி வாழ்க்கை வரலாறு,பதிப்பாசிரியர் : ராணிமைந்தன்,வெளியீடு : பாரதி பதிப்பகம்,126/108 , உஸ்மான் சாலை ,தியாகராய நகர் , சென்னை 600 017.பக் : 614 + 36 , விலை : ரூ .349
நன்றி: தீக்கதிர் - புத்தக மேசை 20 -10 - 2013
நரம்புகளை முறுக்கேற்றும்
சிந்தனை கூரேற்றும்
சு. பொ. அகத்தியலிங்கம்
"வரும்
அவரது தலை முறை யினரும் எங்களுடன் இல்லாது போகும் ஒரு நாள் வரும்போது ,
அந்த சிந்தனைக ளையும் கோட்பாடுகளையும் தம்மு டையதாக கியூப மக்கள்
மாற்றியிருப் பார்கள் என நான் நிச்சயமாகக் கூறுகி றேன் ." என அணிந்துரையில்
ஃபிலிப் பெரொஸ் ரோக் கூறியிருப்பது கவனத்திற்குரியது . அந்த சிந்தனை களை
நாம் அறிய இந்த 28 காப்பிய உரைகளும் உதவும் எனில் மிகை அல்ல . 5000க் கும்
மேற்பட்ட உரைகளி லிருந்து இந்த 28 உரைகளை தேர்வு செய்திருப்பதொன்றே இதன்
முக் கியத்துவத்தை உரைக்கப் போதுமா னது. நூலின் தலைப்பே உள்ளடக் கத் தையும்
வீச்சையும் தன்னகத்தே கொண்டிருக்கும் போது நூல் அறி முகமொன்று தேவையா?
என்கிற கேள்வி எழத்தான் செய்கிறது ; ஆயி னும் யாம் பெற்ற இன்பத்தை வாசகர்
கள் பெற விண்டுரைப்பது வழக்கம் தானே!!
90 பக்கம் கொண்ட முதல் உரை வரலாறு என்னை விடுதலை செய் யும்
என்பதாகும். மன்கடா தாக்குத லில் கைதாகி பாடிஸ்டா என்கிற ராணுவ
சர்வாதிகாரியின் விசாரணை கொட்டடியில் காஸ்ட்ரோ சிங்க மென சிலிர்த்து
வாதிட்ட உரை - 36 ஆண்டுகளுக்கு முன் வீ.பா.கணே சனின் சீரிய மொழிபெயர்ப்பில்
படித்தது . மீண்டும் படிக்கும் போதும் அதே உத்வேகம் . இளைய தலை முறை
அவசியம் வாசிக்க வேண்டிய உரை.
புரட்சி என்றால் என்ன ? கியூபப் புரட்சி எப்படி நிகழ்ந்தது ? எவ் வாறு
பாதுகாக்கப்படுகிறது ? முதலா ளித்துவம்எத்தகையது?அமெரிக்கப் பேரரசு
எவ்வளவு வஞ்சகமானது , கொடியது ?அணிசேரா இயக்கம் ஏன் ?கோரிக்கைகள் எவை ?
இப்படி எழும் பல கேள்விகளுக்கு எளிமையாய் , உணர்ச்சிகரமாய் , மலைக்க
வைக்கும் புள்ளிவிபரங்க ளுடன் இந்நூல் பதில் சொல்கிறது. காஸ்ட்ரோவின்
வரலாற்றுப் புரித லும், தத்துவத் தெளிவும், மக்கள் மீதான அசைக்க முடியாத
பற்றும் நம்பிக்கையும் அடடா ! அடடா! நரம்பை முறுக்கேற்றும் சிந்தனை யைக்
கூரேற்றும் உரைகள் எனில் மிகை அல்ல.
" இன்று உலகம் ஓர் போர்க்களம் எல்லா
இடங்களிலும் எல்லா கண்டங் களிலும் , எல்லா நிறுவனங்களிலும் , எல்லா
அமைப்புகளிலும் அது போர்க் களமாகவே உள்ளது ." என்கிற காஸ்ட் ரோ ,அதனை
எதிர்கொள்ள சிந்தனை யை வளப்படுத்துவதும் வலுப்படுத்துவ தும் மிக மிக
அவசியம் என்கிற திசை யில் மக்களை சிந்திக்கச் செய்ய ஆற்றிய உரைகள். இவை
நம்மையும் சிந்திக்கச் செய்யும்.
"ஒவ்வொரு புரட்சியாளரின் கட மையும் புரட்சி செய்வது . அமெரிக் காவி
லும் ஏன் உலகம் முழுவதிலும் புரட்சி வென்றே தீரும் என்பதுவும் அறிந்ததே !
ஆனால் தமது வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு ஏகாதிபத்தியத் தின்
சடலம் நம்மைக் கடந்து செல்லுமென காத்துக்கிடப்பது புரட்சியாளனின் வேலை அல்ல"
என்றார் . அதே சமயம் அவரின் கனவு என்னவாக இருந்தது ?
"நாங்கள் கம்யூனிச சமூகத்துக்காக மட்டும் ஆசைப்படவில்லை அனைத்து
நாடுகளுக்கும் சம உரிமையுள்ள ஒரு கம்யூனிச உலகுக்காக ஆசைப்படுகி றோம் .
எந்த நாட்டுக்கும் ரத்து அதிகா ரம் இல் லாத ஒரு கம்யூனிச உலகுக்காக ஆசைப்
படுகிறோம் . முதலாளித்துவ உலகம் உள் முரண்பாடுகளால் கிழிந்து போயிருப்பது
போன்ற சித்திரத்தை நாளைய கம்யூனிச உலகம் அளிக்காது . அனைத்துபெரிய, சிறிய
நாடுகளுக்கும் சம உரிமையுள்ள ,சுதந்திர நாடுகளைக் கொண்ட சுதந் திர
சமூகம்தான் எமது நம்பிக்கை ." அதை உறுதிப்படுத்துவன தாம்இவ்வுரைகள்.
சாதாரணமாக நெடிய உரைகள் அலுப்பூட்டும் ; அதிலும் புள்ளிவிப ரங்கள்,
வரலாற்றுத்தகவல்கள் நிரம்பிய உரை எனில் கொட்டாவியை வரவழைத் துவிடும் ;
ஆனால் புள்ளிவிவரங்களைக் கூட உணர்ச்சியை கொம்பு சீவும் விதத் தில் சொல்ல
முடியும் - வரலாற்றுத்தக வல்களை எழுச்சியூட்டும் விதத்தில் விவரிக்க
முடியும் - நெடிய உரை மூலம் கேட்ப வரை தன் சிந்தனை யோட்டத்தோடு இயக்க
முடியும் என நிரூபிப்பவை காஸ்ட் ரோவின் உரைகள் . ஆனால் ஒரு பெரும் ரகசியம்.
உண்மைகளின் அணிவகுப் பாய் அவர் உரை அமைவதால் உள்ளத்தை அவரால்
கொள்ளையடிக்க முடிந்தது .நான் இவ்வுரைகளில் என்னைப் பறி கொடுத்தேன்..
நீங்களும் பறிகொடுங் கள்.. எடுத்துக்காட்டாக ;
"..உலகில் இராணுவச் செலவு 300 பில்லியன் டாலரை விடவும் அதிகம் . 300
பில்லியன் டாலர்களைக் கொண்டு 400 மில்லியன் குழந்தைகளுக்காக 6,000, 000
பள்ளிகளை கட்ட முடியும் ; 300 மில்லியன் வசதியான வீடுகளைக் கட்ட முடியும் ;
18 மில்லியன் படுக்கைகளைக் கொண்ட 30,000 மருத்துவமனைகளைக் கட்டமுடியும் ;
20 மில்லியன் தொழிலாளர் களுக்கு வேலையளிக்கக் கூடிய 20,000 தொழிற்சாலைகளை
கட்ட முடியும் ; அல்லது 150 மில்லியன் ஹெக்டேர் நிலத் துக்கு பாசன வசதி
அளிக்கலாம் ;அதைச் சரியான தொழில் நுட்பத்தைக் கொண்டு உருவாக்கினால் ஒரு
கோடி மக்களுக்கு உணவளிக்கலாம் . மனித இனம் இவ் வளவு பெரிய தொகையை ஓவ்வொரு
வரு டமும் இராணுவச் செலவில் வீணடிக் கிறது ."
அவர் யாருக்காகப் பேசினார் ? கேளுங் கள் ; " இந்த உலகில் ஒரு கவளம்
சோறு கூட கிடைக்காத குழந்தைகள் சார்பாக நான் பேசுகிறேன் . மருந்து
கிடைக்காத நோயாளிகள் சார்பாக பேசுகிறேன் . உயிர் வாழும் உரிமையும்
மரியாதையும் மறுக்கப்பட்டவர்கள் சார்பில் பேசுகி றேன் ." இதைவிட தெளிவாக
எப்படிக் கூறுவது ?
இன்னும் விளக்கமோ, விவரமோ விண்டுரைத்தலோ தேவையா ? யாருடைய பரிந்துரையும் தேவைப்படா மலே வாசகனைத் தூண்டும் நூலுக்கு ஏன் அறிமுகம் ?
ஃபிடல் காஸ்ட்ரோ பேருரைகள்,
தமிழில் : கி. ரமேஷ் ,
வெளியீடு : பாரதி புத்தகாலயம் ,
421 , அண்ணா சாலை , தேனாம் பேட்டை, சென்னை - 600 018 .
பக் : 672 , விலை : ரூ .420/-

காமராசர் : ஐம்பெரும்
காப்பியக் குணங்கள்
சு.பொ.அகத்தியலிங்கம்
வாழும்
தலைவரைப் பற்றி புகழ்ந்துரைப்பது பலனை எதிர்பார்த்து செய்யும் பாசாங்குத்தனம். மறைந்த
தலைவரைப் பேசுவது அப்படி ஆகாது . பெருந்தலைவர் காமராசரை இப்போது முன்னிறுத்திக் காட்டுவது
நிச்சயம் கைமாறு கருதாகக் கடமையாகும்.
ஒரு
கம்யூனிஸ்ட் என்கிற முறையில் எனக்கு காமராசரின் அரசியல் நிலைபாடுகளில் மாறுபாடான கருத்துகள்
நேற்றும் உண்டு . இன்றும் உண்டு . ஆனால் அவரின் தேசபக்தியும், அடித்தட்டு மக்கள் மீதான
பரிவும் சந்தேகத்திற்கே இடமில்லாத சிகரம். அவர் குறித்து நிறைய பேசலாம். எழுதலாம்
. எனினும் ஐம்பெரும் காப்பிய குணங்களை மட்டும் இங்கே சுட்ட விழைகிறேன்.
சுதந்திர
இந்தியாவில் தீட்டப்படும் எந்தத் திட்டமானாலும்
அது கடையனுக்கும் கடையனாய் உள்ள தரித்திர நாராயணர்களுக்கு உதவுவதாக இருக்கவேண்டும்
என்றார் மகாத்மாகாந்தி . தோழர் இ எம் எஸ் நம்பூதிரிபாடு அவர்கள் கேரள மாநிலத்தின் முதல்வராய்
பொறுப்பேற்றுக் கொண்டபோது,
மாநில அரசின் பட்ஜெட்டில் ஏறத்தாழ 30 விழுக்காடு நிதியை ஆரம்பக் கல்விக்கு
ஒதுக்கி வழிகாட்டினார் ; கிட்டத்தட்ட அதே போல் ஆரம்பக் கல்விக்கு
நிதி ஒதுக்கியவர் காமராசர் . ஒருவர் கம்யூனிஸ்ட். இன்னொருவர் காங்கிரஸ். ஆனால் இருவரும்
தரித்திர நாராயணர்களை கைதூக்கிவிட கல்வி ஒரு நெம்புகோல் என உளப்பூர்வமாக உணர்ந்து செயலாற்றியவர்கள்.
இன்றைக்கு கல்விக்கு செலவிடுவதை பெரும் செலவாக கருதி ஆட்சியாளர்களும் பொருளாதார நிபுணர்களும்
புலம்புகின்றனர் . கல்விக்கு செலவிடும் பணமென்பது வருங்காலத்திற்கான முதலீடு என்கிற
தீர்க்கமான பார்வையோடு செயல் பட்டவர்கள் இந்த இருபெரும் தலைவர்களும்.
சிந்தனைச்
சிற்பி சிங்காரவேலரால் மிகச் சிறிய அளவில் பிரிட்டிஷ் ஆட்சியில் சென்னை மாநகராட்சியில்
துவங்கப்பட்ட ஏழை மாணவருக்கான மதிய உணவுதிட்டம், பின்னர் தொலைநோக்கோடு தமிழகம் தழுவிய மதிய
உணவுத்திட்டமாய் காமராஜரால் அறிமுகமானது. இதுதான் மிகப்பெரிய அளவில் சத்துணவுத் திட்டமாக
- நாடே வியந்து போற்றும் திட்டமாக எம் ஜி ஆரால் உருப்பெற்றது . கல்வியின் மீதும் அதனை
ஏழைகள் பெறவேண்டும் எனவும் காமராசர் காட்டிய அக்கறை அவரின் முதல் காப்பிய குணம் எனில்
மிகை அல்ல.
“ இந்திய முயற்சியில் - இந்திய மூலதனத்தின் அடிப்படையில் உருவாகும் தொழில்
முன்னேற்றத்தில்தான் நாட்டின் உண்மையான பொருளாதாரதார வளர்ச்சி அடங்கியுள்ளது “ என்று
1885-90 களில் தாதாபாய் நெளரோஜி போன்றவர்கள் கூறிவந்தனர் . தொழில் வளர்ச்சி மீதான
- அது முதலாளித்துவ வளர்ச்சியாக இருப்பினும் - அளப்பரிய ஈர்ப்பு விடுதலைப் போரில் நம்
தலைவர்களிடம் கருக்கொண்டது . அந்த பட்டறையின் வார்ப்பான காமராசரிடம் அந்த ஈர்ப்பு செயல்
வேகத்துடன் வெளிப்பட்டது . கிண்டி தொழிற்பேட்டையும் சிவகாசியும் இன்னபிற சிறுதொழில்
மையங்களும் இவரின் புகழ்பாடி நிற்கும். இது இவரின் இரண்டாவது காவிய குணம்.
அடுக்கு
மொழி துடுக்கு மொழி இவரறியார் . தெற்கு சீமையின் பாமர மொழியில் பேசினார். பள்ளிப்படிப்பு
மிகக்குறைவு. ஆனால் அகில இந்தியாவும் இவர் தலைமை ஏற்றது. எதனால் ? எப்படி ? எளிமை, கைக்கொண்ட
அரசியலில் உறுதி . ஆம் அதுதான் காமராசரின் பலம் . தோற்றத்திலும் பேச்சிலும் செயலிலும்
காந்திய சகாப்தத்தின் தொடர்ச்சியான எளிமையும் உறுதியும் இவரிடம் இறுதிவரை நிறைந்திருந்தது.
இன்றைய அரசியலில் அரிதான ஒன்றாக மாறிவிட்ட ஒன்றல்லவா அது !
காமராசரை
விருதுநகரில் தோற்கடித்தவர் பெயரை நாளைய தலைமுறை வரலாற்றை ஆய்வு செய்துதான் தெரிந்துகொள்ள
வேண்டியிருக்கும் . ஆனால் காமராசர் பெயர் இருக்கும். ஆவடி சோசலிசம் குறித்து விமர்சனங்கள்
உண்டு. எனினும் வரலாற்றில் அதற்கொரு இடம் உண்டு . அந்த வரலாற்றில் காமராஜர் பெயரும்
நீக்கமற நிறைந்திருக்கும். இருபதாம் நூற்றாண்டின் முதல் எழுபதைந்தாண்டு இந்திய தமிழக
வரலாற்றை எழுதுகிற யாரும் காமராசரை மறைத்துவிடவோ மறந்துவிடவோ இயலாது. வயதானாலும் பதவியைவிட
மனதில்லாத இன்றைய தலைமுறைக்கு தெரியுமா கே பிளான். அதுதான் அடுத்த தலைமுறைக்கு மூத்த
தலைமுறை வழிவிட்டொதுங்கும் திட்டம். இதை மற்றவர்களுக்கு முன்மொழிந்தவரல்ல காமராசர்; தானே பதவி விலகி முன்னுதாரணமானவர்
. இந்த பதவி பற்றற்ற அருங்குணம் காப்பிய வகையன்றோ!
தானே
முன்மொழிந்து பிரதமராக்கிய இந்திராகாந்தி சர்வாதிகாரப் பாதையில் நடைபோடத் துவங்கியபோது
- அவசர காலத்தைப் பிரகடனப்படுத்திய போது மனம் நொந்தவர் ; எதிர்த்தவர் ;
அந்த மனப்புழுக்கமே அவரின் மரணத்தை விரைவுபடுத்திவிட்டது. எதை இழந்தாலும்
எதிர்த்துப் போராட ஜனநாயக உரிமை இருந்தால்
– அது முதலாளித்துவ ஜனநாயகமாக இருப்பினும் போராடித் திரும்பப் பெறலாம். ஆனால்
அந்த ஜனநாயகத்தையே இழந்துவிட்டால் அது பெரும் துயரமல்லவா ? கையறு
நிலை அல்லவா ? எந்த ஜனநாய உரிமைகளுக்காக சுதந்திரப் போரில் கண்ணீரும்
செந்நீரும் சிந்தினோமோ அந்த உரிமைகள் பறிபோவதை யார் பொறுப்பர் ? விடுதலைப் போரின் பிரசவ வலியை நன்கு உணர்ந்த காமராசர் ஜனநாயக உரிமைக்காக கண்கலங்கி
வருந்தியது இயல்பான தேசபக்தி - ஜனநாயக விழைவு . அது அவர் குருதியில் கலந்த காப்பிய
குணம் .
இந்த
ஐம்பெரும் குணங்கள் அருங்காட்சியகப் பொருளாகிவிடாமல் சற்றேனும் இன்றைய அரசியலில் தலைநீட்டுமானால்
அதுவே பெருவெற்றியாகும். அதற்கு காமராசரை பலகோணங்களில் அறிய முயல்வோம்.
[ காமராஜர் பிறந்த நாள் மலருக்காக பேரா.சுபாஷினியிடம் எழுதிக்கொடுத்த கட்டுரை]
Subscribe to:
Posts
(
Atom
)