காமராஜர் : ஐம்பெரும் காப்பிய குணங்கள்

Posted by அகத்தீ Labels:


 காமராசர் : ஐம்பெரும் காப்பியக் குணங்கள்

சு.பொ.அகத்தியலிங்கம்

வாழும் தலைவரைப் பற்றி புகழ்ந்துரைப்பது பலனை எதிர்பார்த்து செய்யும் பாசாங்குத்தனம். மறைந்த தலைவரைப் பேசுவது அப்படி ஆகாது . பெருந்தலைவர் காமராசரை இப்போது முன்னிறுத்திக் காட்டுவது நிச்சயம் கைமாறு கருதாகக் கடமையாகும்.

ஒரு கம்யூனிஸ்ட் என்கிற முறையில் எனக்கு காமராசரின் அரசியல் நிலைபாடுகளில் மாறுபாடான கருத்துகள் நேற்றும் உண்டு . இன்றும் உண்டு . ஆனால் அவரின் தேசபக்தியும், அடித்தட்டு மக்கள் மீதான பரிவும் சந்தேகத்திற்கே இடமில்லாத சிகரம். அவர் குறித்து நிறைய பேசலாம். எழுதலாம் . எனினும் ஐம்பெரும் காப்பிய குணங்களை மட்டும் இங்கே சுட்ட விழைகிறேன்.

சுதந்திர இந்தியாவில்  தீட்டப்படும் எந்தத் திட்டமானாலும் அது கடையனுக்கும் கடையனாய் உள்ள தரித்திர நாராயணர்களுக்கு உதவுவதாக இருக்கவேண்டும் என்றார் மகாத்மாகாந்தி . தோழர் இ எம் எஸ் நம்பூதிரிபாடு அவர்கள் கேரள மாநிலத்தின் முதல்வராய் பொறுப்பேற்றுக் கொண்டபோது, மாநில அரசின் பட்ஜெட்டில் ஏறத்தாழ 30 விழுக்காடு நிதியை ஆரம்பக் கல்விக்கு ஒதுக்கி வழிகாட்டினார் ; கிட்டத்தட்ட அதே போல் ஆரம்பக் கல்விக்கு நிதி ஒதுக்கியவர் காமராசர் . ஒருவர் கம்யூனிஸ்ட். இன்னொருவர் காங்கிரஸ். ஆனால் இருவரும் தரித்திர நாராயணர்களை கைதூக்கிவிட கல்வி ஒரு நெம்புகோல் என உளப்பூர்வமாக உணர்ந்து செயலாற்றியவர்கள். இன்றைக்கு கல்விக்கு செலவிடுவதை பெரும் செலவாக கருதி ஆட்சியாளர்களும் பொருளாதார நிபுணர்களும் புலம்புகின்றனர் . கல்விக்கு செலவிடும் பணமென்பது வருங்காலத்திற்கான முதலீடு என்கிற தீர்க்கமான பார்வையோடு செயல் பட்டவர்கள் இந்த இருபெரும் தலைவர்களும்.

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரால் மிகச் சிறிய அளவில் பிரிட்டிஷ் ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் துவங்கப்பட்ட ஏழை மாணவருக்கான மதிய உணவுதிட்டம், பின்னர் தொலைநோக்கோடு தமிழகம் தழுவிய மதிய உணவுத்திட்டமாய் காமராஜரால் அறிமுகமானது. இதுதான் மிகப்பெரிய அளவில் சத்துணவுத் திட்டமாக - நாடே வியந்து போற்றும் திட்டமாக எம் ஜி ஆரால் உருப்பெற்றது . கல்வியின் மீதும் அதனை ஏழைகள் பெறவேண்டும் எனவும் காமராசர் காட்டிய அக்கறை அவரின் முதல் காப்பிய குணம் எனில் மிகை அல்ல.

 “ இந்திய முயற்சியில்  - இந்திய மூலதனத்தின் அடிப்படையில் உருவாகும் தொழில் முன்னேற்றத்தில்தான் நாட்டின் உண்மையான பொருளாதாரதார வளர்ச்சி அடங்கியுள்ளது “ என்று 1885-90 களில் தாதாபாய் நெளரோஜி போன்றவர்கள் கூறிவந்தனர் . தொழில் வளர்ச்சி மீதான - அது முதலாளித்துவ வளர்ச்சியாக இருப்பினும் - அளப்பரிய ஈர்ப்பு விடுதலைப் போரில் நம் தலைவர்களிடம் கருக்கொண்டது . அந்த பட்டறையின் வார்ப்பான காமராசரிடம் அந்த ஈர்ப்பு செயல் வேகத்துடன் வெளிப்பட்டது . கிண்டி தொழிற்பேட்டையும் சிவகாசியும் இன்னபிற சிறுதொழில் மையங்களும் இவரின் புகழ்பாடி நிற்கும். இது இவரின் இரண்டாவது காவிய குணம்.

அடுக்கு மொழி துடுக்கு மொழி இவரறியார் . தெற்கு சீமையின் பாமர மொழியில் பேசினார். பள்ளிப்படிப்பு மிகக்குறைவு. ஆனால் அகில இந்தியாவும் இவர் தலைமை ஏற்றது. எதனால் ? எப்படி ?  எளிமை, கைக்கொண்ட அரசியலில் உறுதி . ஆம் அதுதான் காமராசரின் பலம் . தோற்றத்திலும் பேச்சிலும் செயலிலும் காந்திய சகாப்தத்தின் தொடர்ச்சியான எளிமையும் உறுதியும் இவரிடம் இறுதிவரை நிறைந்திருந்தது. இன்றைய அரசியலில் அரிதான ஒன்றாக மாறிவிட்ட ஒன்றல்லவா அது !

காமராசரை விருதுநகரில் தோற்கடித்தவர் பெயரை நாளைய தலைமுறை வரலாற்றை ஆய்வு செய்துதான் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கும் . ஆனால் காமராசர் பெயர் இருக்கும். ஆவடி சோசலிசம் குறித்து விமர்சனங்கள் உண்டு. எனினும் வரலாற்றில் அதற்கொரு இடம் உண்டு . அந்த வரலாற்றில் காமராஜர் பெயரும் நீக்கமற நிறைந்திருக்கும். இருபதாம் நூற்றாண்டின் முதல் எழுபதைந்தாண்டு இந்திய தமிழக வரலாற்றை எழுதுகிற யாரும் காமராசரை மறைத்துவிடவோ மறந்துவிடவோ இயலாது. வயதானாலும் பதவியைவிட மனதில்லாத இன்றைய தலைமுறைக்கு தெரியுமா கே பிளான். அதுதான் அடுத்த தலைமுறைக்கு மூத்த தலைமுறை வழிவிட்டொதுங்கும் திட்டம். இதை மற்றவர்களுக்கு  முன்மொழிந்தவரல்ல காமராசர்; தானே பதவி விலகி முன்னுதாரணமானவர் . இந்த பதவி பற்றற்ற அருங்குணம் காப்பிய வகையன்றோ!

தானே முன்மொழிந்து பிரதமராக்கிய இந்திராகாந்தி சர்வாதிகாரப் பாதையில் நடைபோடத் துவங்கியபோது - அவசர காலத்தைப் பிரகடனப்படுத்திய போது மனம் நொந்தவர் ; எதிர்த்தவர் ; அந்த மனப்புழுக்கமே அவரின் மரணத்தை விரைவுபடுத்திவிட்டது. எதை இழந்தாலும் எதிர்த்துப் போராட ஜனநாயக உரிமை இருந்தால்  – அது முதலாளித்துவ ஜனநாயகமாக இருப்பினும் போராடித் திரும்பப் பெறலாம். ஆனால் அந்த ஜனநாயகத்தையே இழந்துவிட்டால் அது பெரும் துயரமல்லவா ? கையறு நிலை அல்லவா ? எந்த ஜனநாய உரிமைகளுக்காக சுதந்திரப் போரில் கண்ணீரும் செந்நீரும் சிந்தினோமோ அந்த உரிமைகள் பறிபோவதை யார் பொறுப்பர் ? விடுதலைப் போரின் பிரசவ வலியை நன்கு உணர்ந்த காமராசர் ஜனநாயக உரிமைக்காக கண்கலங்கி வருந்தியது இயல்பான தேசபக்தி - ஜனநாயக விழைவு . அது அவர் குருதியில் கலந்த காப்பிய குணம் .

இந்த ஐம்பெரும் குணங்கள் அருங்காட்சியகப் பொருளாகிவிடாமல் சற்றேனும் இன்றைய அரசியலில் தலைநீட்டுமானால் அதுவே பெருவெற்றியாகும். அதற்கு காமராசரை பலகோணங்களில் அறிய முயல்வோம்.

[ காமராஜர் பிறந்த நாள் மலருக்காக பேரா.சுபாஷினியிடம் எழுதிக்கொடுத்த கட்டுரை]

0 comments :

Post a Comment