சாமியாராய் போவதொன்றும் எளிதல்ல

Posted by அகத்தீ Labels:

 


 

சாமியாராய் போவதொன்றும் எளிதல்ல

 

 

சாமியாராய் போவதொன்றும் எளிதல்ல

எல்லா சாமியாரும் ஒன்றல்ல

காவி உடையும் பிச்சைப் பாத்திரமுமாய் திரியும்

எவரையும் சாமியார் என உலகம் ஒப்புக்கொள்வதில்லை

பிச்சைக்காரர் என விரட்டியடித்துவிடும்

சாமியாராய் போவதொன்றும் எளிதல்ல

 

சாமியாராய் போவதொன்றும் எளிதல்ல

சாமியாரிலும் பலவிதம் உண்டு

வர்க்க பேதமும் வர்ண பேதமும் உண்டு

கார்ப்பரேட் சாமியார்கள் கையில் சர்க்கார்

அகோரிகளின் ரசிகர்கள் அதிகார பீடத்தில்

சாமியாராய் போவதொன்றும் எளிதல்ல

 

சாமியாராய் போவதொன்றும் எளிதல்ல

களவும் காமமும் கற்றுத் தேறணும்

கொலையும் கொள்ளையும் கைவசமாகணும்

ஆசையும் ஆஸ்தியும் ஊதிப் பெருக்கணும்

99 சதம் மூடத்தனங்களை அபத்தக் களஞ்சியங்களையும்

1 சதம் அரைகுறை அறிவியலோடு பிசைந்து

ஞானவெளிச்சம் போட்டுத் திரியணும்

சாமியாராய் போவதொன்றும் எளிதல்ல

 

சாமியாராய் போவதொன்றும் எளிதல்ல

அரசியல் பேசணும் வெறுப்பை விதைக்கணும்

கணினி நுட்பம் கைவரப் பெறணும் மேலும்

போட்டோஷாப்பில் புகுந்து விளையாடணும்

யோகா தியானம் ஆயுர்வேதம்னு குரல் கொடுக்கணும்

சிஷ்யைகளோடு ஆட்டம் போடவும் அதற்கொரு

ஆனமீக விளக்கம் கொடுக்கவும் தெரியணும்

பங்குச் சந்தையையும் ஆட்டுவிக்கணும்

பல்கலைக் கழகத்திலும் வேஷம் கட்டணும்

சாமியாராய் போவதொன்றும் எளிதல்ல

 

சாமியாராய் போவதொன்றும் எளிதல்ல

முற்றும் துறந்தவரல்ல சாமியார்

கார்ப்பரேட் கிரிமினல் குருஜீ ஆகணும்

தானே போதையில் மூழ்கணும் - மெல்ல

மதபோதையில் மக்களை மூழ்கடிக்கணும்

குருதியின் வாடை முகர்ந்து கொலைவாளோடு

பிஞ்சையும் கொல்லும் பெரும்பகை விசிறணும்

சாமியாராய் போவதொன்றும் எளிதல்ல

 

 

சாமியாராய் போவதொன்றும் எளிதல்ல

முற்றும் துறந்த சாமியார் எனில்

மொத்தமாய் மறந்து தொலைத்திடும் உலகும்

எதையும் துறக்காத எல்லாவற்றுக்கும் ஆசைப்படும்

எதற்கும் துணிந்த கார்ப்பரேட் குருஜிகளின் காலம்

விளம்பர வெளிச்சத்தில் மினுக்கும் குருஜிகளின்

வாழும் கலை அவர்கள் வாழ்வதற்கானது என்பதை

அறியாத ஏமாளிகள் மண்டையில் அவர்களின் வாசம்

சுரண்டும் வர்க்கம் கொழுக்க உழைக்கும் வர்க்கத்தை

ஏமாளியாக்க பேச்சும் செயலும் அர்ப்பணம் ஆகணும்

சாமியாராய் போவதொன்றும் எளிதல்ல

 

 

சுபொஅ.

26/2/2022.