தோசை புராணம்…

Posted by அகத்தீ Labels:

 


தோசை புராணம்…பெங்களூரில் எலக்ட்ரானிக் சிட்டியில் ஒரு தள்ளுவண்டி தோசைக் கடையில் ”100 வரைட்டி தோசா” என போர்டு தொங்கும் . வியாபாரம் படுவேகமாக நடக்கும் .கொரானாவுக்கு முன்பு ஒரு நாள் கிட்ட நின்று பார்த்தேன். உருளைக் கிழங்கை வைத்து மடித்தால் ஆலு தோசா , வெங்காயமெனில் ஆனியன் தோசா , கேரட் எனில் கேரட் தோசா ,பன்னீர் எனில் பன்னீர் தோசா , கீரை எனின் கீரதோசை இப்படி …
நான் ஒரு தோசையைக் குறிப்பிட்டுக் கேட்டேன் “ நஹி!” என்றான்.நான் கேட்டது கோக்கனெட் தோசை .தேங்காய் தோசை .
இந்த மசாலா தோசையை நான் 1968 ல் சென்னை வரும் வரை அறிந்ததில்லை . ஊரில் இருந்து வந்த என் உறவினர் ஒருவர் மசாலா தோசையை ஆவலோடு வாங்கி உருளைக் கிழங்கை எல்லாம் வழிச்சு எறிந்துவிட்டு சாப்பிட்டார் .உருளைக் கிழங்கு வாயுவாம் .அவர் பலமுறை அப்படித்தான் சாப்பிட்டார் .ஆனால் சதா தோசை கேட்பது கவுரவக் குறைச்சல் என்று நினைத்தார் .
முறுகலான தோசை என்பதே அன்றைக்கு அதிசயப் பொருளாகத்தான் பார்த்தோம். வீட்டில் சுடும் தோசை தடியாக மெதுவாக இருக்கும் .அதன் சுவை தனி .வாய்ப்புண்ணால் அவதிப்பட்ட போது அந்த தோசையை கேட்டேன்.ஆனால் அம்மா செய்வதுபோல் செய்ய இயலவில்லை .வறட்டி வேறு , தோசை வேறுதானே ! இப்போது கல்தோசை என சில ஹோட்டல்களில் விற்கிறார்கள் . அப்போது முறுகலான தோசைக்கு ஆசைப்பட்டு அம்மா “ஹோட்டல் தோசை” மாதிரி சுட்டுத் தா என கேட்போம். ஹோட்டல் தோசை வீட்டுத் தோசை வித்தியாசம் அன்று மிக அதிகம்.
சரி ! “கோக்கெனட் தோசா” அதுதான் “தேங்காய் தோசை” எங்கும் கிடைக்கவில்லை .
எங்க அம்மா அடிக்கடி எங்களுக்குச் செய்து தருவார்கள் . வெங்காய ஊத்தப்பம் மாதிரிதான் .வெங்காயத்துக்கு பதில் தேங்காயைத் துருவி அந்த தேங்காய் பூவை நிறைய திணிச்சால் அது “ தேங்காய் தோசை” கொத்தமல்லி சட்னி ,அல்லது மிளகாய்பொடி எண்ணை/நெய் காம்பினேஷன் தூள் !
இப்போது நாஞ்சில் நாட்டில்கூட தேங்காய் தோசை புழக்கத்தில் இருப்பதாகத் தெரியவில்லை .செய்துதர அம்மாவும் இல்லை .
இன்னொரு தோசை செய்தி . என் உறவினர் அதுதான் அந்த மசாலா தோசை ஆசாமி . என் அப்பாவிடம் கேட்டார்; “ மாப்பிளை ! பேப்பர் ரோஸ்ட்ன்னு சொல்றாங்களே அதுக்குள்ள பேப்பர் இருக்குமா ?”
எங்க அப்பாவுக்கு நாஞ்சில் குசும்பு கொஞ்சம் அதிகம் ,” அப்படியெல்லாம் இருக்காது மாமா ! நம்ம வீட்ல தோசை மாவு சட்டியைக் கழுவி ஊற்றி ‘பொருக்கு”ன்னு தருவாங்களே… அதுதான் இது …”
“ அதுக்கா ! இம்புட்டு வெல” என்றார் அவர் .
என் தோழர் ஒருவனின் மகன் படித்தது விலங்கியல் ,பணியாற்றியது கணினி துறை .அப்புறம் வேலையை விட்டுவிட்டு அமெரிக்காவில் மூன்று “ தோசா கார்னர்” லாபகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார் .
[ எப்ப பார்த்தாலும் அரசியலைத்தான் எழுதணுமா எனக் கேட்ட அன்பர்களுக்காக மாறுதலுக்காக இந்த தோசை புராணம்அவ்வளவுதான். உப்புமா புராணம் வேற இருக்கு. இன்னொரு நாள் சொல்லட்டுமா ?]
சுபொஅ.
27/12/2022.

கண்களை இடுக்கி நினைவுத் திரையில்...

Posted by அகத்தீ Labels:

 

கண்களை இடுக்கி
நினைவுத் திரையில்.....
என் வாழ்க்கையில் இதுவரை
அறுபத்தி ஒண்பது
புத்தாண்டுகள் கடந்துவிட்டன.
[பிறந்த நாளல்ல]
இன்னும்
ஐந்து நாட்களில் எழுபதாவது
புத்தாண்டும் வந்துவிடும்..
கண்களை இடுக்கி
நினைவுத் திரையில்
உற்று உற்று பார்க்கிறேன்
எட்டிய வரையில்…
வயது கூடின
அனுபவங்கள் கூடின
காயங்கள் கூடின
அவ்வப்போது தலைநீட்டிய
நம்பிக்கை ரேகைகளை
கவலையும் நாளைய பயமும்
அரித்துத் தின்றன…
இடுக்கண் வருங்கால்
நகைத்தேன்
அடுத்து அதனினும் பெரிது
வரும் என்பதறியாமலே !
அழிய வேண்டிய
மதமும் சாதியும்
வெறியோடு ஆட…
வளரவேண்டிய
மனிதமும் ஒத்துழைப்பும்
நாளும் கரைய….
பாதுகாக்க வேண்டிய
இயற்கையும் காதலும்
ஆபத்தில் உழல…
ஆதிக்கத்தை எதிர்க்க வேண்டிய
அறிவு பதுங்குகுழி தேட
போராட உயர வேண்டிய கரங்கள்
செய்வதறியாது பிசைந்து நிற்க
பாசிசமும் சர்வாதிகாரமும்
மமதையோடு சிரிக்கிறது …
நேரடி அனுபவத்திலும்
வரலாற்றின் நெடிய அனுபவத்திலும்
உரக்கச் சொல்லுவேன்…
உறுதியாய்ச் சொல்வேன்…
விடியாத இரவொன்றுமில்லை
முடியாத துயரொன்றுமில்லை
தகராத சிம்மாசனங்களில்லை
மாறதது எதுவும் இல்லை! இல்லை!!
சு.பொ.அ.
26/12/2022.

எந்தக் கோயிலுக்கு போனால்… சிறுகதை .10.

Posted by அகத்தீ Labels:

 

சிறுகதை .10.

 

 [ பிரச்சார சிறுகதையே என உறுதி அளிக்கிறேன் ]

 

 

எந்தக் கோயிலுக்கு போனால்…

 

 

அன்றாட அலுவலக பரப்பை சொற்களில் சொல்லிவிடவே முடியாது .பணியாற்றுகிற ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம் . அலுவலகம் திறக்கும் முன்பே வந்து காத்திருந்து ,காலை டிபனையே அலுவலகத்தில் சாப்பிடும் வேணுகோபால் முதல் .அரக்க பரக்க ஓடிவந்து அட்டெண்டன்ஸ்சை குளோஸ் செய்வதற்கு முன்னால் கையெழுத்திடும் ராமசுப்பு , சியாமளாவரை எல்லோரும் எந்நாளும் அப்படியேதான் இருக்கிறார்கள். மாற்றம் பெரிதாக இல்லை .

 

ஆனாலும் முக்கியமாக ஒரு பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது .முன்பு வந்தததும் கூடிக்கூடி கதை அடித்தபின்னர்தான் பணி தொடங்கும் .இப்போது வந்து உட்கார்ந்ததும் அலைபேசியை நோண்ட ஆரம்பித்தால் எப்போது பணியைத் துவங்குவார் என சொல்ல முடியாது . இந்த தனியார் அலுவலகத்திலேயே இதுதான் நிலைமை எனில் அரசு அலுவலகத்தில் சொல்லவே வேண்டாம்.

 

இன்றும் அப்படித்தான் . சியாமளா வந்ததும் வாட்ஸ் அப்பில்  வந்த ஒரு செய்தியை பக்தி பரவசத்துடன் படித்தாள் . கர்ம சிரத்தையோடு அதை சக ஊழியர்களுக்கும் நண்பர்களுக்கும் அனுப்பினாள் . கொஞ்ச நேரத்தில் அந்தச் செய்தி அவ்வலுவலக விவாதப் பொருளானாது .

 

 “சியாமளா மேடம்! அனுப்பின செய்தியை படிச்சீங்களா ?” பக்கத்து இருக்கை நாகபூசனத்திடம் கேட்டார் ராமசுப்பு.

 

“ படிச்சேன் … அது என்ன தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மட்டும் அந்த ஸ்பெஷல் பவரு?”ன்னு நாகபூசனம் கேள்வியை வீச ,

 

“ எங்க திருநெல்வேலியில கோயில் இல்லையா ? அங்குள்ள சாமிக்குகெல்லாம் பவர் இல்லையா ? ஒவ்வொரு ஊர்லேயும் கோயில் இருக்கே .. தஞ்சாவூருக்கு என்ன கொம்பு ?” கோமதி உரையாடலில் குதிச்சாள்

 

 

 “ இங்க இருக்குற திருச்செந்தூர் முருகனுக்கும் , வடபழனி முருகனுக்கும் ,  காளியம்பாளுக்கும் பவர் இல்லேன்னுதானே திருப்பதிக்கும் சபரிமலைக்கும் இங்கிருந்து படை எடுக்குறாங்க … விச் காட் இஸ் பவர்புள் ?” வேணுகோபால் கேள்வி .

 

“ நாத்திகன் இந்த சாமி அந்த சாமின்னு கூறுபோடலை இந்த ஆத்திகன்தான் எல்லா சாமியையும் ரொம்ப அசிங்கப்படுத்துறாங்க ..” ராமலிங்கம் சொல்ல அலுவலகத்தில் கலகலப்பு கூடியது .

 

அந்த நேரத்தில் டீ கொண்டு வந்த அலமேலு ,” காலையில இருந்து எல்லோரும் போண நோண்டி பேசிக்கிட்டே இருக்கீங்க என்னங்க சமாச்சாரம் ?”

 

அலமேலுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. ரெஜினா அலமேலுக்கு விளக்கினாள்.

 

“ கருத்தரிக்க அதிலும் பெண் குழந்தை அல்ல புத்திர பாக்கியமே கிடைக்க  கருவளர்ச்சேரி எனத் தொடங்கி ,கல்விபெற ,பதவிபெற ,செல்வம்பெற ,குடும்பத்தில் மகிழ்ச்சி கிடைக்க ,வழக்குகளில் வெற்றி கிடைக்க , கிரக பெயர்ச்சிக்கு ,என தஞ்சாவூர்ல ஒவ்வொரு கோயிலா சொல்லிட்டு நீண்ட ஆயுள் பெற திருக்காடையூர்னு கடைசியா சொல்லி  தஞ்சை மாவட்டத்தில இருபது கோயில்கள் பட்டியல போட்டு மகிமையை அளந்துவிட்டுருக்காங்க  அதுதான் பேச்சா கிடக்கு…”

 

 “ ஆமாம் இருபது கோவில் இல்ல எண்பது கோயில் ஆனாலும் எங்க பொளப்பு இப்படித்தான் என சலித்துக் கொண்டே ..” அலமேலு நகர்ந்தார் .

 

“ சார்! திருவண்ணாமலை ,திருப்பரங்குன்றம் போகாமல் திருக்கார்த்திகைக்கு இங்கே உட்கார்ந்திருக்கீங்க …” என ராமசுப்புவை நாகபூசனம் வம்புக்கிழுத்தார் .

 

மெல்ல குனிந்து காதோடு கிசிகிசுத்தார் ராமசுப்பு ,” பினான்சியல் டைட் .. அங்க கூட்டம் வேற அதிகம் இருக்கும் …”

 

 “ அங்க என்ன சார் கிசிகிசு ! சபைக்கு சொல்லுங்க ராமலிங்கம் சந்தியில் இழுத்துவிட்டார் .

 

 “ இரண்டு நாள் லீவு போட முடியுமா ? லாஸ் ஆப் பே ஆகிடும்…”ன்னு இன்னொரு உண்மையை போட்டுடைத்தார் ராமசுப்பு .

 

 “ அதத்தான் லைவ் காட்டுறானே அதப் பார்த்தால் போதாதா ? மனுஷந்தானே அங்கே மலையில ஏறி விளக்க ஏற்றுறான் …. அங்க போயி கும்பிட்டாத்தான் சாமி ஏற்பாரா ?” வேணுகோபால் சந்தேகம் .

 

 ஏன் வேணு ! தோஷத்துக்கு பரிகாரம் இருக்காம் , கிரக பெயர்சிக்கு பரிகாரம் இருக்காம் … அப்படின்னா ஐயரு சொல்ற மந்திரம்தாம் எல்லாவற்றையும் மாற்றுன்னு சொல்றாங்களோ ….”

 

 “ மந்திரத்தால ,பரிகாரத்தால ஒரு மண்ணாங்கட்டியும் நடக்காது ; சும்மா வெட்டிச் செலவு ; அதிகக் கடன் அம்புடுத்தான்..”

 

 “ ஆமாம் ஆமாம் இவரு பெரிய ஞானி சொல்றாரு ! எல்லாமே ஒரு மன தைரியத்துக்குத்தான் .கோயில் குளம்னு போய்வந்தால் மனசு தெளிவாகும் நல்லா யோசிச்சு வழி காணலாம் அம்புடுத்தான் .. பரிகாரம்ங்கிறதும் ஒரு சைக்காலஜிகல் டிரீட்மெண்ட்தான்…” ராமசுப்பு சயின்சையும் ரிலீஜியஸ் செண்டிமெண்டையும் கலந்து கட்டி சாமாதானம் சொன்னார் .

 

“இப்படி சயின்ஸையும் மூடத்தனத்தையும் முடிச்சு போட்டு விக்கிறது இப்ப பேஷன்… சந்திரமுகின்னு ஓரு படத்தில கூட மனோதத்துவதையும் மந்திரவாதியையும் கூட்டணியாக்கி ஒரு உடான்ஸ் விட்டிருப்பாங்க … அது சினிமா … இப்ப நெஜத்திலேயே அப்படி டகால்ட்டி வேலையெல்லாம் செய்ய ஆரம்பிச்சிட்டாங்க..” வேணுகோபால் சொல்ல .

 

 “ நீங்க அது எப்படி ஏமாற்றுன்னு சொல்லலாம்..” சியாமளா சண்டைக்கு வந்தாள் …

 

”வைபிரேஷன் ,பாசிட்டிவ் என்ர்ஜி ,சைக்காலஜி எல்லாம் கலந்து விக்கிற சாமிகளா உங்க பவரைக் காமிச்சு விலையைக் குறையுங்க , எல்லோருக்கும் வேலை கொடுங்க , கொரானாவை கேன்சரை தொற்றுநோய்களை விரட்டி அடிங்க …. நாங்களும் கோவிந்தா போட்டுட்டு போறோம்… காசு டைமும் வேஸ்ட் ஆகுதே தவிர இவற்றால என்ன பிரயோசனம் ?” ராமலிங்கம் தன் பிரச்சாரத்தைத் துவக்கினார்.

 

 “ ஆள விடுங்க ! சீக்கிரம் ஆபீஸ் வேலையை முடியுங்க … மேனஜர் வர்ற நேரம்..” ராமசுப்பு நல்ல பிள்ளை அவதாரம் எடுத்து விவாதத்தைத் தவிர்த்தார்.

 

“ ஆமா ஆமாம் ! இன்னிக்கு ஏதோ முக்கிய அறிவிப்பு இருக்குன்னு சொல்லிகிட்டு இருக்காரு …”

 

“ சம்பள உயர்வா இருக்குமோ ?”

 

“ ஏதோ பெரிய இடியை இறக்கப் போறாரு தயாரா இருங்க “

 

ஆளுக்கு ஆள் பேச மெல்ல அவரவர் பணியில் மூழ்கினார் .

 

அன்று வெள்ளிக் கிழமை . ராகுகாலம் 10.30 -12 எனவே வழக்கம் போல் ராகுகாலம் தாண்டியே மேனஜர் உள்ளே நுழைந்தார் .

 

மேனஜர் வந்த சிறிது நேரத்தில் சுற்றறிக்கை வந்தது ; அது நோட்டிஸ் போர்டிலும் ஒட்டப்பெற்றது …

 

கம்பெனி பொருளாதார நிலவரம் மோசமாக உள்ளதால் . ஊழியர் எண்ணிக்கையைப் பாதியாக குறைக்க உள்ளோம் . விருப்ப ஓய்வில் போவோர் போகலாம் .அதற்கு தனி பேக்கேஜ் உண்டு . இல்லாவிடில் வயசு ,சர்வீஸ் அடிப்படையில் முடிவெடுக்கப்படும் ..” என மொட்டையான அறிவிப்பு

“எல்லோர் முகத்திலும் கவலையின் ரேகை . கனத்த மவுனம் .பெருமூச்சு . வேலைபோனால் அடுத்து என்ன செய்வது ? கடன் ,குழந்தை படிப்பு , இஎம்ஐ ,வட்டி எல்லாம் நினைவுக்கு வர ஒவ்வொருவரும் தலை சுற்ற உடகார்ந்தனர் .

 

ராகுகாலம் தாண்டி மேனஜர் வந்தாலும் செய்தி என்னமோ எமகண்டமாப் போச்சே

 

மதிய உணவு இடை வேளை .எல்லோரும் சாப்பிட மறந்தனர் .ஆட்குறைப்பை பேசிப்பேசி சோர்ந்தனர் .லீவிலிருந்த சங்கப் பொருளாளர் யூசுப்பும் வந்து சேர்ந்தான் .ராமலிங்கம் ,யூசுப் ,ரெஜினா எல்லோரும் கூடிப் பேசினர்.சங்கத் தலைவரோடும் பேசினர் .பின் வாயில் கூட்டம் நடைபெற்றது .

 

“ கம்பெனி கொரானா காலத்திலேயும் லாபத்திலதான் ஓடி இருக்கு ,இந்த ஆண்டும் லாபம்தான் .அப்புறம் ஏது பொருளாதார நெருக்கடி ? இன்னும் அதிக லாபம் வேணும்னு நம்ம வயிற்றில அடிக்கிறாங்க .. சட்டப்படியும் நம்ம சக்தியைத் திரட்டியும் ஒரு கை பார்ப்போம் .நம்பிக்கையோடு இருங்க ..” என ராமலிங்கம் பேசினார் .

 

“ கைவிடு ! கைவிடு ! ஆட்குறைப்பைக் கைவிடு !” என்கிற முழக்கம் ஓங்கி ஒலித்தது .வழக்கமாய் இக்கூட்டங்களில் நழுவும் சியாமளாவும் வேறு சொலரும்கூட பங்கேற்றனர் .

 

சிலர் தாமதமாகச் சாப்பிட்டனர் . பலர் சாப்பிடவும் மனமின்றி இருக்கைக்கு திரும்பினர் .

 

“ காலையில கோயில் லிஸ்ட் போட்டீங்களே மேடம் ! எந்த கோயிலுக்கு போனா ஆட்குறைப்பு போகும்னு ..” அலமேலு அப்பிராணித்தனமாகக் கேட்க..

 

வேதனை கலந்த சிரிப்பு எங்கும் பரவியது .

 

சு.பொ.அகத்தியலிங்கம் .

6/12.2022.

 

 

பூனைக்கு யாராவது மணிகட்டத்தானே வேண்டும்.

Posted by அகத்தீ Labels:

 

சிறுகதை .9.

 

 [ பிரச்சார சிறுகதையே என உறுதி அளிக்கிறேன் ]

 

 


பூனைக்கு யாராவது

மணிகட்டத்தானே வேண்டும்.

 

 

 

 

அலுவலகத்தில் பணி புரியும் வந்தனா விபத்தில் கையொடிந்து படுக்கையில் கிடந்தாள் . அலுவலகம் வரும் வழியில் ஸ்கூட்டர் சாலையிலுள்ள பள்ளத்தில் தடுமாறி கீழே விழுந்ததால் இடது கையில் முறிவு ; சிறிய அறுவை சிகிட்சைக்குப் பின் வீட்டில் மருத்துவ விடுப்பில் ஓய்வில் இருந்தாள் .

 

ராமலிங்கம் ,ராமசுப்பு .ரெஜினா ,ஹேமா ,சியாமளா ,பத்மா .வேணுகோபால் , நாகபூசன் எல்லோரும் பார்க்க வந்திருந்தனர்.

 

 “ தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சுன்னு நெனச்சுக்க …” என்றாள் சியாமளா.

 

 “ ஹெல்மட் போட்டிருந்ததால தலையும் உயிரும் தப்பிச்சுன்னு சொல்லணும்..” ராமலிங்கம் சொன்னார் .

 

 “ ஏதோ இவ நல்ல நேரம் இதோடு போச்சு அப்ப ஏதாச்சும் தண்ணீர் லாரி வந்திருந்தா ?” பத்மா அதிர்ச்சியை சொன்னாள் .

 

 “ சனிப் பெயர்ச்சி தன் கைவரிசையைக் காட்டி இருக்கு…  கடக ராசிக்கு இந்த சனிப் பெயர்ச்சி நல்லதில்லை …” ராமசுப்பு தன் சோதிடப் புலமையையும் அக்கறையையும் சேர்ந்து கண்ணீர் விட்டார் .

 

 “ கை கொஞ்சம் குணமானதும் ஒரு எட்டு திருநள்ளாறு போய்வந்திரு வந்தனா !”என சியாமளா அக்கறையைக் குழைத்து அலோசனை நல்கினாள்.

 

“ உங்க மாமியார்ட்ட சொல்லி குலதெய்வத்த வேண்டி மஞ்ச துணியில காச முடிஞ்சு வை..” பத்மா தன் பங்கிற்கு அட்வைசினாள்.

 

 “ இப்ப கொஞ்சம் நல்ல சாப்பாடு சாப்பிடணும் … நீ நான்வெஜ்தானே … ஆட்டுக்கால் சூப்பு வச்சு குடி …” ரெஜினா யோசனை .

 

 “ அப்பாடா !ரெஜீனா நீ ஒருத்திதான் உருப்படியா யோசனை சொல்லியிருக்க..” என ராமலிங்கம் சொன்னதும் எல்லோரும் முறைத்தனர் .

 

 “ உனக்கு நம்பிக்கை இல்லாம இருக்கலாம் … இவா கடக ராசி இந்த சனிப் பெயர்ச்சி கரெக்டா வேலையைக் காட்டி இருக்கே !” என ராமசுப்பு சந்தடி சாக்கில தன் அபிப்பிராயத்துக்கு வலு சேர்க்க முயற்சித்தார் .

 

 “ உன் ராசிக்கு அதிர்ஷ்டக் காற்று வீசப் போகுதுன்னு  நேற்றுதானே சொன்னே இண்ணைக்கு உனக்கு சஸ்பென்சன் ஆர்டர் வந்திருக்கே அதுக்கு என்ன சொல்லுவே …???” ராமலிங்கம் திருப்பி அடிக்க ,

 

“ இத அவரு சொல்லவே இல்லையே …” என ரெஜினா வருந்தினாள்.

 

“ ஆடிட்டின் போது ஸ்டாக் குறையுதுன்னு மெமோ கொடுத்திருக்காங்க … அதுக்கு இவரு கொடுத்த பதில் சரியா இல்லேண்ணு இப்போ சஸ்பென்சன் கொடுத்திருக்கா …” என சியாமளா சொன்னாள்

 

பேச்சு வந்தனாவிடமிருந்து ராமசுப்பு பக்கம் திரும்ப  , வந்தனா சிரித்தாள் .

 

“ அதை விடுங்க , கொஞ்சம் கேர்லஸ்ஸா இருந்திருக்காரு .. இன்னொரு தரம் யோசிச்சு பதில் சொல்லி சஸ்பென்சன கேன்சல் செய்ய வைக்கலாம்…” ராமலிங்கம் சொல்ல நிம்மதி பெருமூச்சு சூழந்தது .

 

எல்லோருக்கும் காபி வந்தது .குடித்துவிட்டு . ஒரு சிறு தொகையை ஒரு கவரில் போட்டு வந்தனாவிடும் கொடுத்தனர் .

 

 “ எதுக்குங்க காசெல்லாம் கொடுக்கிறீங்க …” என வந்தனா கேட்டாள் .

 

“ பார்க்க வரும் போது ஆப்பிள் வாங்கலாம் ,ஆரஞ்சு வாங்கலாம் ,காம்பிளான் வாங்கலாம்னு ஆளுக்கொரு யோசனை சொன்னாங்க … ராமலிங்கம் சார்தான் சொன்னாரு காசு கொடுக்கலாம்னு…” பத்மா உண்மையைப் போட்டுடைத்தாள்.

 

“அங்க பாருங்க ராமலிங்கம் சார் சொன்னமாதிரி  வீடு முழுக்க பழமும் ஹார்லிக்சும்தான்  அடைஞ்சு கிடக்கு … நோயாளிக்கு என்ன தேவை  என்ன இல்லைன்னு தெரிஞ்சுக்காமல் எதையோ வாங்கிப் போறது  சடங்குத் தனம்னு சார் சொன்னது சரிதானே…” ஹேமா சொல்லவும் ,எல்லோர் தலையும் ஆட்டினர் .

 

 “ சார் ! எனக்கு காச வாங்க ஒரு மாதிரியா இருக்கு ..” என்றாள் வந்தனா .

 

“ பார்த்தேளா ! அதுக்குத்தான் நான் அப்போதே சொன்னேன்..” என ராமசுப்பு இழுத்தார் .

 

“ நீங்க வந்ததே போதும் … காசு அது இதுன்னு எதுக்கு ?” வந்தனா சொல்ல ,

 

 “ அதுக்காக கையை நீட்டிட்டா வரமுடியும் ?” வேணுகோபால் கேட்டார் .

 

“ அதுதாம் மெடிக்கல் இன்சுரன்ஸ் இருக்கில்ல…” என்றாள் வந்தனா.

 

 “ அதுல 65 அல்லது 75 பிரசண்டேஜ் தருவாங்க மீதி நாமதான கட்டணும் .. அதுலேயும் தனியார் ஹாஸ்பிடல்ன்னா இன்சுரன்ஸ்ன்னு சொன்னாலே பில் கண்டமேனிக்கு போட்டுறான் … நம்ம பர்ஸ புடுங்காமல் ட்டிரீட்மெண்ட் இல்ல..” நாகபூசனம் விளக்கினார் .

 

 “ ஆமாம் … ஆமாம் ..” என எல்லோரும் தலையாட்டினர் .

 

 “ கெளரி பொண்ணுக்கு எப்போ கல்யாணம் … நான் வரமுடியாது .. என் பங்கு எவ்வளவுன்னு சொல்லுங்க கொடுத்திடுறேன்..” வந்தனா கேட்டாள் .

 

 திருமண கிப்ட் என்ன கொடுக்கலாம்னு பேச்சு திரும்பிச்சு ..

 

ஆளுக்கு ஒண்ணு சொல்ல …  “ராமசுப்பு இடையிட்டு மொதல்ல அவர்ட்ட கேளுங்கப்பா ன்னு ” பால ராமலிங்கம் பக்கம் தள்ளிவிட்டார் ராமசுப்பு.

 

வேணுகோபாலண்ணேன் உங்க வீட்டு கிரஹ பிரவேசத்துக்கு எத்தனை கடிகாரம் வந்திச்சுன்னு ராமலிங்கம் கேட்க …”

 

“ 18 கடிகாரம் 21 மில்க் குக்கர் ..” வேணுகோபால் பட்டியலை சொல்லத் தொடங்க …

 

“ வர்ற கிப்டெல்லாம் இப்படித்தான் வருது …” ராமசுப்பு அலுத்துக் கொண்டார் .

 “ அட ! எந்த பப்ளிக் பங்க்‌ஷனுக்கு போனாலும் ஏதோ மொமண்டம் ,சீல்டுன்னு ஒண்ணக் கொடுத்திடுறாங்க .. சால்வன்னு ஒண்ணை போத்திடுறாங்க ..அதெல்லாம் எதுக்கு ? அதனாலே என்ன உபயோகம்? இன்னைக்கு வரத் தெரியல .. எடத்தத்தான் அடைக்குது ” என ராமலிங்கம் சொல்ல எல்லோரும் அவரவர் பங்குக்கு பேசித் தீர்த்தனர் .

 

“ மரியாதை ,அன்பு ,கவுரவம் ,பாராட்டு  எல்லாம் சரி ! பணத்தை கொட்டும் போது எல்லோரும் யோசிச்சா நல்லது … இதத் திணிக்க முடியாது … நம்ம பண்பாடு மாறணும் …”

 

“ சம்மந்தப்பட்டவங்கள் கேட்டு செய்யலாம்னா அதுக்கும் இடமில்லை … கேட்க நமக்கு தயக்கம் , சொல்ல அவங்களுக்குத் தயக்கம் … என்ன செய்ய ?”

 

“ நான் திண்டுக்கல் புத்தக திருவிழாவுக்கு பேசப் போயிருந்தப்போ … மொதல்ல சுற்றிப் பார்த்தேன் … கூடவந்த விழா ஒருங்கிணைப்பாளர் ,” சார் ! நீங்க ஏதாவது உங்களுக்குத் தேவையான புத்தகத்தை சொல்லுங்கோ என்றார் … நான் தயங்கினேன் .. பின் சொன்னேன் … அதையே நினைவுப் பரிசாகக் கொடுத்தாங்க…” ராமலிங்கம் சொன்னார் .

 

 “ சார் !கெளரி பொண்ணு கல்யாணத்துக்கு காசில்லாமல் திணறுறா … நான்கூட ஒரு லோணுக்கு அரேஞ் பண்ணினேன் … பேசாமல் காசாக கெளரி கையில கொடுத்திரலாம் …” ஹேமா சொல்ல அதுவே முடிவானது .

 

ஆபிஸ்ல எல்லோருக்கும் இப்படி சொல்லியே லிஸ்ட் எடுப்போம்னு ராமலிங்கம் முடித்துவைத்தார் .

 

 “ எப்பம்மா ஆபிஸ் வருவே ..” ராமசுப்பு கேட்டார் .

 

“ சனிக்கிழமை கட்ட பிரிச்சிருவாங்க … அப்புறம் பிசியோதெரபிதான் … அப்புறம் வரவேண்டியதுதான் .. திங்கள் அல்லது புதன் ..”

 

“ புதன்தான் நல்லநாளு அண்ணைக்கே ஜாயிண்ட் பண்ணு … டைம் பார்த்துச் சொல்றேன் … மொதல்ல கோயிலுக்கு போயிட்டு வந்திடு” ராமசுப்பு விடாமல் தன் பஞ்சாங்க யோசனையைச் சொன்னார் .

 

ராமலிங்கம் சத்தம் போட்டு சிரித்தார் .

 

“ ஏன் சார் ! சிரிக்கிறீங்க ! இதெல்லாம் நம்புறவங்களுக்குத்தான் புரியும்” என ராமசுப்பு குரலை உயர்த்தினார் .

 

 “ சரி ! நம்புங்க ! விரல்ல அஞ்சு சொடக்கு போடுங்க எல்லோரும் ..” ராமலிங்கம் சொல்ல ,

 

“ ஏன் ? ஏன் ?” என எல்லோரும் கேட்க,

 

 “ பரவாயில்லையே பகுத்தறிவு வந்திடிச்சே ! போடுங்க சொல்றேன்..”

 

எல்லோரு சொடக்கு போட்டனர் .

 

 “ நாம இங்க சொடக்கு போட்ட நேரத்தில யாருக்கோ எங்கேயோ குழந்தை பொறந்திருக்குமா இல்லையா ?”

 

“ இதென்ன கேள்வி .. நிச்சயம் பிறந்திருக்கும்”

 

“ யாரோ எங்கேயோ செத்திருப்பாங்களா இல்லையா ?”

 

“ ஆமா ஆமா “

 

“ அப்போ ! இது யாருக்கு நல்ல நேரம் யாருக்கு கெட்ட நேரம் ?”

 

 “ ஆள விடு ராமலிங்கம் ! புறப்படுவோம் நேரம் ஆகிட்டே போகுது … வந்தனா நாங்க வரட்டா …”

 

எல்லோரும் கிளம்பினர் .

 

வழியில் ரெஜினா ஹேமாவிடம் சொன்னாள் , “ ராமலிங்கம் சார் ! சொல்றது சரிதான் ஆனாலும் ராகு காலம் ,எமகண்டம் ,சுபமுகூர்த்தம் இதெல்லாம் பார்க்காமல் நாம எதாவது செய்ய முடியுதா ? நாம நினைச்சாலும் வீட்டிலுள்ளோர் .. சுற்றி இருப்பவங்க பாடாய்ப்படுத்திவிடுறாங்களே … என்ன செய்ய ..”

 

 “ கஷ்டம்தான் ஆனாலும் இந்த பூனைக்கு யாராவது மணிகட்டத்தானே வேண்டும்..” என்றார் அருகில் இருந்த வேணுகோபால் .

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

4/12/2022.

 

 


 

 


உரைச் சித்திரம். 25. காதலர் தினத்தின் முன்னோடி தமிழரா ?

Posted by அகத்தீ Labels:

 உரைச் சித்திரம். 25.

 

காதலர் தினத்தின்

முன்னோடி தமிழரா ?

 

 

கங்குல் இருளிற் கவின்மணிபோல் ,புன்னகைபோல்

எங்கள் குடிலில் எழிற்கோலம் தீட்டுகின்ற

சின்னஞ் சிறுவிளக்கைச் சித்திரத்தைக் கண்டிரோ ?”

எனத் தொடங்கும் கவிஞர் தமிழ் ஒளியின் அற்புதக் கவிதையை வாசித்தது உண்டோ ? வாசிக்காதவர் தேடி வாசிப்பீர் !

 

ஐப்பசி ,கார்த்திகை மாதங்களில் பறந்து திரியும் மின்மினிப் பூச்சியைப் பற்றிய கவிதை இது . கவிஞர் தமிழ் ஒளி கார்த்திகை மாதம் தமிழர் கொண்டாடும் திருக்கார்த்திகை விழாவையும் மின்மினிப் பூச்சியையும் இணைத்து பாடி இருப்பார் . அநேகமாக மின்மினிப் பூச்சியைப் பாடிய முதல் கவிஞன் தமிழ் ஒளியாகத்தான் இருக்கும் .

 

திருக்கார்த்திகை விழாதான் தீபங்களால் அலங்கரித்து பண்டை நாள் முதல் தமிழர் கொண்டாடிய தீபத் திருவிழா ! தீபாவளி பண்டிகையோ ஆரியரால் கொண்டாடப் பட்டு ,பெரும் பண்டிகை போல் தோற்றம் வலிந்து கொடுக்கப்பட்டதே . ஆயினும் திருக்கார்த்திகையைத் தவிர்க்க முடியாமல் அதற்கொரு புராணப் புளுகை சேர்த்ததுதான் ஆரியர் திருகுதாளம்.

 

விழாவும் கொண்டாட்டமும் ஆதிகாலந் தொட்டும் மனித இயல்பு . எந்நாளும் எப்போதும் இறுக்கமாகவும் புலம்பிக் கொண்டும் இருக்க முடியுமா ? அவ்வப்போது ஆடலும் பாடலும் விருந்தும் கேளிக்கையும் தேவை .விழாக்களும் கொண்டாட்டங்களும் அதன் ஒரு பகுதியே .

 

ஆதிகுடிகள் அறுவடை ,பருவமாறுதல் இப்படி பலவற்றை கொண்டாடித் தீர்த்தனர் .அவற்றை ஹைஜாக் செய்து மதமுலாம் பூசிக்கொண்டன மதங்கள் .தீபாவளி ,கிருஸ்துமஸ் எல்லாம் இதுவே . பொங்கல் மட்டுமே புராணப் புளுகற்ற ஒரே பண்டிகை .

 

பழந்தமிழர் கார்த்திகை ,திருவோணம் ,பொங்கல் ,இளவேனில் விழா , தை நீராட்டு ,இந்திரவிழா ,புனாலாட்டுவிழா ,நீர்விழா.ஆடிப்பெருக்கு ,பூந்தொடைவிழா ,உள்ளிவிழா ,பங்குனிவிழா ,கோடியர் விழா , வெறியாட்டு விழா என தமிழர் கொண்டாடிய பல்வேறு விழாக்களை முனைவர் சி.சேதுராமன் பட்டியலிடுகிறார் .

 

அதில் தீபாவளி ,விநாயக சதுர்த்தி ,ஆயுதபூஜை ,சிவராத்திரி , ஆவணி அவிட்டம் எல்லாம் இடம் பெறவில்லை என்பது கூடுதல் செய்தி . தமிழரின் பண்டிகைகள் பலவற்றிலும் கூட காலப்போக்கில் புராணப் புளுகு சேர்க்கப்பட்டன .அது எப்படி ? யாரால் ? எப்போது ? . ஆய்ந்தறிந்த அறிஞர் பெருமக்கள் ,சான்றோர்கள் கூடி முடிவு செய்வார்களாக !

 

தமிழர் விழாக்களை அலசி ஆய்ந்து கொள்ள வேண்டியனவற்றை காலத்துக்கு ஒப்ப செப்பம் செய்து கொள்ள வேண்டியதும் ; தள்ள வேண்டியதை தள்ள வேண்டியதும்  நம் கடன் .சில விழாக்கள் குறித்த பழந்தமிழ் இலக்கிய சான்றுகளைப் பார்ப்போம்.

 

தலைவன் தலைவியை பிரிந்து பொருளீட்டச் சென்றுவிட்டான் .தோழி ஆறுதல் சொல்கிறார் .” திருக்கார்த்திகைத் திருவிழாவைக் கொண்டாட தலைவன் என்னோடு இருப்பான்” என தலைவி நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார் . அகநானூறில் நக்கீரர் பாடியதாக இப்பாடல் உள்ளது . ‘அறு மீன்” என்றும்  ‘அறம் செய் திங்கள்’ என்றும் திருக்கார்த்திகையைக் கொண்டாடியாத நற்றிணை சொல்லும் . தேவாரத்திலும் இவ்விழா பற்றிய செய்தி உண்டு . அகநானூற்று காட்சியைப் பார்ப்போம்.

 

”தோழி !பெரு மழையால்உழவு தொழில் முடங்கியது ; அதனாலே மற்றையத் தொழில்களும் முடங்கின .அந்த பெரு மழையானது இப்போது ஓய்ந்துவிட்டது . மழை முகில் இல்லாமல் வானம் பளிச்சிடுகிறது . சிறுமுயலாகிய மறுவைப் போல் உரோகிணி நட்சத்திரத்தை தன் மார்பகத்தே விளங்கச் செய்கிறான் சந்திரன் . இப்படி உரோகிணி சந்திரனுடன்  சேரும் இருளகன்ற நடுஇரவில்,அஃதாவது திருக்கார்த்திகைத் திருவிழா நாளின் இரவு , வீதி முழுக்க அகல் விளக்குகளால் அலங்கரித்து , பூக்களை மாலைகளாகத் தொங்கவிட்டு தொங்கவிட்டு ஊரே கொண்டாடுகிறது .பழைமையைத் தனக்குப் பெருமையாகக் கொண்ட மூதூரில் பலருடன் கலந்து கொண்டாடும் இவ்விழாவில்,நம்மோடு கூடிக் கொண்டாடும் வண்ணம் அவர் வருவார்.”

 

இன்னொரு காட்சி .அதுவும் அகநானூற்றில்தான்.. பாலை பாடிய பெருங்கடுங்கோ வரைந்தது . வேறுபட்ட பிரிந்த தலைவன் குறித்து தலைவி சொல்லுகிற பாங்கில் இறுதியில் உரைப்பாள்,

 

 “…. மழை பெய்யாததால் அருவி நீரின்றி காய்ந்துவிட்டது . அந்த மலை முகடுகளில் இலவ மரங்களில் இலை எல்லாம் உதிர்ந்து விட்டன .பூக்கள் மட்டும் இப்போது கண் சிமிடுகின்றன . அவை திருக்கார்த்திகை விழா அன்று விளக்குகளை ஏற்றி வைத்தது போல அழகாய் ஒளிர்கின்றன .இந்த எழில் மிகுந்த மலையைக் கடந்து அவர் சென்றுவிட்டார் .”

 

இளவேனில் விழா ! இந்திர விழா ,உள்ளி விழா ,பங்குனி விழா ,சித்திரை விழா இன்னும் பல பெயர்களில் பங்குனி சித்திரை மாதங்களில் காதலைக் காமத்தைக் கொண்டாடி இருக்கிறார் தமிழர்கள் .

 

 “காதலர் தின”த்தின் முன்னோடி தமிழரெனில் மிகையாமோ ?

 

இளவேனில் காலம் காமவேளுக்குரியதாகக் கொண்டாடியுள்ளனர் . வில்லவன் விழாவென்பதுகூட காமனைக் கொண்டாடும் விழாவே. கலித்தொகையில் ஓர் காட்சி  .

 

 

தலைவி ஊரில் காமவேள் விழா நடக்கிறது . இவ்விழா நாளில் தலைவன் ஊரில் இல்லை எனில் விழா நடக்கும் போது வருந்துவாளாம் . ஆகவே மலைக் குன்றில் ஏறி விரைந்து வந்தானாம் தலைவன் .  இதைச் சொல்லும் முன் வைகைக் கரையில் பரத்தையரோடு விளையாடியது ,திருப்பரங்குன்றத்தில் களியாட்டம் போட்டதை எல்லாம் முன்னோட்டமாக கலித்தொகையில் புலவர் கபிலர் பாடியுள்ளார்.

 

அந்த காமவிழாவை பற்றி மேலும் சொல்கிறார் . “ ஆற்றங்கரையில் அவர் களித்து விளையாடும் பரத்தையரோடு யாமும் அவரோடு கலந்து காமன் விழாவைக் கொண்டாடுவேன்.

 

மேலும் கலித்தொகை இன்னொரு காட்சியில் சொல்கிறது , கணவனைப் பிரிந்த மனைவியர் வருந்திப் புலம்புவராம் .  “ அங்கே மலர்கள் மிதக்கும் வைகை ஆற்றங்கரையில் பரத்தையரோடு ஆடிப்பாடி மகிழ்ந்து காமன் விழாக் கொண்டாடும் பொழுதில் விவரமான யாராவது அவரைக் கண்டால் சொல்வீர் !இங்கே நான் முகமும் வாடி பொலிவிழந்து களையிழந்து கிடக்கிறேன் என்று “

 

மதுரை மருதன் இளநாகனார் என்பவர் கொங்குநாட்டில் கொண்டாடிய உள்ளி விழா குறித்து அகநானூறில் பாடுகிறார்.உள்ளி விழா என்பது அதாவது இடையில் மணியைக் கட்டிக்கொண்டு ஆணும் பெண்ணும் மகிழ்ந்தாடும் ஆட்டம்.

 

தலைவன் பிரிவை ஆற்றாது தலைவி பாடிய போது , “ அழகிய மூங்கில் குழாயில் தேன் நிறைக்கப்பட்டிருக்கிறது .வண்டுகளுக்கு அது மயக்கும் கள் . கள்ளுண்டவர் போல் தேனை மிகுந்த மலரை வண்டுகள் மொய்க்கும் . அந்த மாலையை அணிந்தவரோடு நான் ரகசியமாக களவொழுக்கம் கொண்டது ஊருக்கே தெரிந்துவிட்டதே ! கொங்கு நாட்டில் இடையில் மணியைக் கட்டிக் கொண்டு ஆராவாராமாக கூச்சலிட்டு ஆடும் உள்ளி விழா பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன் .அதுபோல் என் களவொழுக்கம் பற்றி ஊரே உரக்கப் பேசுகிறதே !

 

இப்படி எந்த விழா தொட்டாலும் அதில் காதல் இன்பம் சொட்டும் படியாகவே தமிழர் கொண்டாடி இருக்கிறார்கள் . வாலண்டைன் டே – காதலர் தினத்தை மேற்குலகம் கொண்டாடும் முன் தமிழர் வாழ்விலும் விழாக்களிலும் அது நிரம்பி வழிந்துள்ளது .

 

ஒரு செய்தி தெரியுமா ? உலகெங்கிலும் எல்லா இனத்திலும் இது போன்ற விழாக்கள் வசந்த காலத்தில் கொண்டாடப்பட்டு வந்துள்ளன . வால்ண்டைன் டே காதலர் தினம் அதன் நவீன வடிவம் அம்புடுத்தான்.

 

இந்திராவிழாவும் அதன் இன்னொரு முகம்தான் . கொடியேற்றம் , கால்கோள் விழா ,பிறை வழிபாடெல்லாம் விழாவின் கூறாக இருந்துள்ளது.

 

கொடியேற்றம் என்பது விழாவின் துவக்கமாக எப்போதும் இருந்து வந்துள்ளது . இப்போதும் மாநாடுகள் கொடியேற்றம்தானே முதல் நிகழ்வு .

 

 

அக்காலம் முதல் இக்காலம் வரை பிறை வழிபாடு நிகழ்கின்றது. இஸ்லாமியர்கள் வளர்பிறை வழிபாட்டினைச் செய்வர். மணமாகாத பெண்கள் தங்களுக்கு மணம் முடிய வேண்டும் என எண்ணிப் பிறையைத் தொழும் நிகழ்வு சங்க இலக்கியத்தில் உண்டு .அங்கு அன்று அது மதம் சார்ந்த சடங்கல்ல.

 

 

 

 ஒளி மிகுந்த அணிகலன்களை அணிந்த பெண்கள் தங்களுக்கு விரைவில் மணமாக வேண்டும் என வேண்டி மாலை நேரங்களில் பிறையினைத் தொழுதனர் என்கிறது அகநானூறு .

 

 

 

பரத்தையர் உறவை நெடுக பெரும் உறுத்தலின்றி சொல்லும் பழந்தமிழ் இலக்கியம் , ஆணின் பாலியல் சுதந்திரத்தை நியாயப்படுத்தியதோ ? கூடா ஒழுக்கம் என பெண்களுக்கு விலங்கைப் பிணைத்ததுவோ ? பிறர் மனை நாடா சான்றாண்மை குறித்து அறிவுரையாய் சொல்லினும் கூடா ஒழுக்கத்தை வெறுக்கத் தகுந்ததாய் சித்தரித்தது போல் சித்திரித்ததா எனும் கேள்வி ஆழமானது .இவை அந்த இலக்கியத்தின் குற்றமல்ல அன்றைய காலத்தின் குற்றம். சமூக வாழ்வியல் அப்படித்தான் இருந்தது என்பதே உண்மை .

 

 

பொங்கல் விழா குறித்த சில செய்திகள் சங்க இலக்கியத்தில் காணக் கிடைப்பினும் அது மாபெரும் பண்பாட்டுக் கூறானது காலகதியில்தான்.

 

விழாவும் ,கொண்டாட்டமுமாய் இருந்த தமிழர் வாழ்வு ; இயற்கையோடி இயைந்தது ,காதலோடு பிணைந்தது எனில் மிகை அல்ல .

 

 

 

விழாக்களும் கொண்டாட்டங்களும் வாழ்வின் உயிர்துடிப்பன்றோ!

காதலர் தினத்தின் முன்னோடி தமிழரின் காமன் விழாவோ ?

 

 

‘‘மழைக்கால் நீங்கிய மாசறு விசும்பின்
குறுமுயல் மறுநிறம் கிளர் மதிநிறைந்து
அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள்
மறுகு விளக்குறுத்து மாலை தூக்கிப்
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவுடன் அயர’’ 

 

(அகநானூறு : 141 .நக்கீரர்.)

 

 “…. ….. ….. ….. …… …………..

அருவி ஆன்ற உயர்சிமை மருங்கில்,

பெரு விழா விளக்கம் போல, பல உடன்

இலை இல மலர்ந்த இலவமொடு

நிலை உயர் பிறங்கல் மலை இறந்தோரே.”        

 

 

[பிரிவிடை வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - பாலைபாடிய பெருங்கடுங்கோ]

 

 

‘‘காமவேள் விழாவயின் கலங்குவள் பெரிதென
ஏமுறு கடுந்திண்டேர் கடவி
நாம் அமர் காதலர் துணைதந்தார் விரைந்தே’’ 

 

(கலித்தொகை,குறிஞ்சிக் கலி, பா.எண்., 27)

 


‘‘
மல்கிய துருத்தியுள் மகிழ் துணைப் புணர்ந்து அவர்

வில்லவன் விழலினுள் விளையாடும் பொழுதன்றோ.”

 

[கலித்தொகை, குறிஞ்சிக் கலி,  பா.எண்.35]

 

‘‘ஆனாச் சீர்க் கூடலுள் அரும்பு அவிழ் நறு முல்லை

தேன் ஆர்க்கும் பொழுது எனத் தெளிக்குநர் உளராயின்

உறலியாம் ஒளிவாட உயர்ந்தவன் விழவினுள்
விறலிழை யாவரோடு விளையாடுவான் மன்னோ’’ 

 

(கலித்தொகை, குறிஞ்சிக் கலி,  பா.எண்.30]

 

‘‘அம்பனை விளைந்த தேக்கட் டேறல்
வண்டுபடு கண்ணியர் மகிழும் சீறூர்
வெண்கால் வாழிதோழி கொங்கர்
மணியரை யாத்து மறுகின் ஆடும்
உள்ளி விழவின் அன்ன
அலராகின்றது பலர் வாய்ப்பட்டே’’ 

 

(அகநானூறு .பா.எண், 368)

 

 

‘‘ஔஇழை மகளிர் உயர்பிறை தொழுஉம்
புல்லென் மாலை யாம்இவன் ஒழிய’’ 

 

(அகநானூறு, பா.எண். 239)

 

 

 

காதலர் தினத்தின் முன்னோடி தமிழரின் காமன் விழாவோ ?

 

 

[தொடர்ந்து இங்கு நான் எழுதிவந்த உரைச் சித்திரம் இத்துடன் நிறைவு பெறுகிறது. தொடர்ந்து வாசித்தோருக்கு நன்றி . மீள் வாசிப்பு செய்ய விரும்புவோர் akatheee.blogspot.com சென்று இலக்கியப் பிரிவில் காண்க . இதனை நூலாக்கவும் முயற்சிப்பேன்.]

 

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

1/12/2022.