தோசை புராணம்…

Posted by அகத்தீ Labels:

 


தோசை புராணம்…



பெங்களூரில் எலக்ட்ரானிக் சிட்டியில் ஒரு தள்ளுவண்டி தோசைக் கடையில் ”100 வரைட்டி தோசா” என போர்டு தொங்கும் . வியாபாரம் படுவேகமாக நடக்கும் .கொரானாவுக்கு முன்பு ஒரு நாள் கிட்ட நின்று பார்த்தேன். உருளைக் கிழங்கை வைத்து மடித்தால் ஆலு தோசா , வெங்காயமெனில் ஆனியன் தோசா , கேரட் எனில் கேரட் தோசா ,பன்னீர் எனில் பன்னீர் தோசா , கீரை எனின் கீரதோசை இப்படி …
நான் ஒரு தோசையைக் குறிப்பிட்டுக் கேட்டேன் “ நஹி!” என்றான்.நான் கேட்டது கோக்கனெட் தோசை .தேங்காய் தோசை .
இந்த மசாலா தோசையை நான் 1968 ல் சென்னை வரும் வரை அறிந்ததில்லை . ஊரில் இருந்து வந்த என் உறவினர் ஒருவர் மசாலா தோசையை ஆவலோடு வாங்கி உருளைக் கிழங்கை எல்லாம் வழிச்சு எறிந்துவிட்டு சாப்பிட்டார் .உருளைக் கிழங்கு வாயுவாம் .அவர் பலமுறை அப்படித்தான் சாப்பிட்டார் .ஆனால் சதா தோசை கேட்பது கவுரவக் குறைச்சல் என்று நினைத்தார் .
முறுகலான தோசை என்பதே அன்றைக்கு அதிசயப் பொருளாகத்தான் பார்த்தோம். வீட்டில் சுடும் தோசை தடியாக மெதுவாக இருக்கும் .அதன் சுவை தனி .வாய்ப்புண்ணால் அவதிப்பட்ட போது அந்த தோசையை கேட்டேன்.ஆனால் அம்மா செய்வதுபோல் செய்ய இயலவில்லை .வறட்டி வேறு , தோசை வேறுதானே ! இப்போது கல்தோசை என சில ஹோட்டல்களில் விற்கிறார்கள் . அப்போது முறுகலான தோசைக்கு ஆசைப்பட்டு அம்மா “ஹோட்டல் தோசை” மாதிரி சுட்டுத் தா என கேட்போம். ஹோட்டல் தோசை வீட்டுத் தோசை வித்தியாசம் அன்று மிக அதிகம்.
சரி ! “கோக்கெனட் தோசா” அதுதான் “தேங்காய் தோசை” எங்கும் கிடைக்கவில்லை .
எங்க அம்மா அடிக்கடி எங்களுக்குச் செய்து தருவார்கள் . வெங்காய ஊத்தப்பம் மாதிரிதான் .வெங்காயத்துக்கு பதில் தேங்காயைத் துருவி அந்த தேங்காய் பூவை நிறைய திணிச்சால் அது “ தேங்காய் தோசை” கொத்தமல்லி சட்னி ,அல்லது மிளகாய்பொடி எண்ணை/நெய் காம்பினேஷன் தூள் !
இப்போது நாஞ்சில் நாட்டில்கூட தேங்காய் தோசை புழக்கத்தில் இருப்பதாகத் தெரியவில்லை .செய்துதர அம்மாவும் இல்லை .
இன்னொரு தோசை செய்தி . என் உறவினர் அதுதான் அந்த மசாலா தோசை ஆசாமி . என் அப்பாவிடம் கேட்டார்; “ மாப்பிளை ! பேப்பர் ரோஸ்ட்ன்னு சொல்றாங்களே அதுக்குள்ள பேப்பர் இருக்குமா ?”
எங்க அப்பாவுக்கு நாஞ்சில் குசும்பு கொஞ்சம் அதிகம் ,” அப்படியெல்லாம் இருக்காது மாமா ! நம்ம வீட்ல தோசை மாவு சட்டியைக் கழுவி ஊற்றி ‘பொருக்கு”ன்னு தருவாங்களே… அதுதான் இது …”
“ அதுக்கா ! இம்புட்டு வெல” என்றார் அவர் .
என் தோழர் ஒருவனின் மகன் படித்தது விலங்கியல் ,பணியாற்றியது கணினி துறை .அப்புறம் வேலையை விட்டுவிட்டு அமெரிக்காவில் மூன்று “ தோசா கார்னர்” லாபகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார் .
[ எப்ப பார்த்தாலும் அரசியலைத்தான் எழுதணுமா எனக் கேட்ட அன்பர்களுக்காக மாறுதலுக்காக இந்த தோசை புராணம்அவ்வளவுதான். உப்புமா புராணம் வேற இருக்கு. இன்னொரு நாள் சொல்லட்டுமா ?]
சுபொஅ.
27/12/2022.

0 comments :

Post a Comment