குடிசைகளை இடித்த உப்புமா ….
[உப்புமா புராணம் ..]
“உப்புமா புராணம் சொல்லப் போகிறேன்” என்றதுமே,” வேண்டாம்”
என கும்புடுகிறவர்களும் , தலைதெறிக்க ஓடுகிறவர்களும் கொஞ்சம் காதுகளைத் திருப்பி இந்த
உப்புமா கதையைக் கேட்டுவிட்டு முடிவெடுங்கள் … …. ….. …..
இந்த உப்புமாவுக்கும்
என் குடும்பத்திற்கும் பூர்வஜென்மத் தொடர்பு உண்டு.இட்லி உப்புமா என்றதும் நாட்டாமை
சரத்குமார் நினைவுக்கு வந்தால் அது உங்க அனுபவம். என் தாத்தா ஞாபம் வருவது என் அனுபவம்
.
குமரி மாவட்டம்
சுசீந்திரத்தில் தொடங்குகிறது கதை .என் தாத்தா அதுதான் என் அம்மாவின் அப்பாவை உறவினர்கள்
அவர் இல்லாத போது அழைக்கும் செல்லப் பெயர்களில் ஒன்று “இட்லிஉப்புமா” . அதற்கான பூர்வ கதையை என் அம்மா
பலமுறை சொல்லியிருக்கிறார் .அவர் பெயரும் என் பெயர்தான் . சரியாகச் சொன்னால் அவர் நினைவாகத்தான்
எனக்கு அகஸ்த்தியலிங்கம் என அம்மா பெயர் சூட்டி இருக்கிறார் . [ அது அகத்தியலிங்கம்
என என்னால் மாற்றி அமைக்கப்பட்டது தனிக்கதை ]அப்பா பெயருள்ள பிள்ளை என்பதால் என் மீது
அம்மாவுக்கு பாசமும் அதிகம் .
என் பெரியம்மா
திருமணத்தின் போது என் தாத்தா காலையிலேயே இட்லி அவித்து குவித்துவிட்டாராம் . அப்போதெல்லாம்
இப்போதுபோல் இட்லி ,வடை ,பூரி ,பொங்கல் ,இடியாப்பம் ,தோசை என வரிசையாக காலை பலகாரம்
போடும் வழக்கலெல்லாம் கிடையாது.ஏதோ ஒன்றுதான் . அப்படித்தான் அவரும் இட்லி குவித்திருக்கிறார்
.எதிர்பாரா மழை . வந்து சேர வேண்டிய உறவுகள் வந்து சேரவில்லை .மதிய உணவை கணக்கிட்டு
குறைத்து செய்துவிட்டார் என் தாத்தா ! காலையில் செய்த இட்லியை என்ன செய்வது ? களத்தில்
குதித்தார் .இரவு வந்து சேர்ந்த அனைவருக்கும் இட்லி உப்புமா தேங்காய் சட்னிதான் கிடைத்தது
. ஆக அது பெருங்கதையாகி உறவுகள் மத்தியில் பலகாலம் பேசப்பட்டது .
இப்படி உப்புமாவோடு
கொண்ட உறவு என் இளமைப் பருவ வாழ்வில் இன்னொரு பரிணாமம் பெற்றது . அப்பா வியாபாரத்தில்
நொடிந்து பிழைக்க சென்னை வந்தார் .அறுபதுகளின் கடைசியில் இங்கு அவர் வேலைசெய்த கண்ணாடித் தொழிற்சாலையும்
மூடப்பட்டது . பெரும் பண நெருக்கடி அக்காலகட்டத்தில் ஐம்பது காசுக்கு அணில் சேமியா
/அம்மன் சேமியா பாக்கெட் வாங்கி உப்புமா என்கிற ஒன்றைச் செய்து எங்கள் பசிவயிற்றில்
அடைத்தாள் அம்மா .அதுவும் இல்லாவிடில் கொலைப்பட்டினிதான். அன்று பசிக்கு அதுவே பெரும்
சுவையாக மாறிப்போனது.
நான் ஐடிஐ
[ சிடிஐ] படிக்கும் போது என் சி சியில் இருந்தேன்
.பரேடு முடிந்ததும் பூரிகிழங்கு அல்லது கிச்சடி வடைதான் .பள்ளியில் பத்தாம் வகுப்பு
படிக்கும் போது என்சிசியிலும் அப்படித்தான். [ இந்தி கட்டளைச் சொல் எதிர்ப்பால் அண்ணா
ஆட்சி காலத்தில் என் சி சி முடக்கப்பட்டது]
நான் கட்சி
ஊழியரான பிறகு இந்த உப்புமா இன்னொரு வடிவம் எடுத்தது . தோழர் .வே.மீனாட்சி சுந்தரம்
தினசரி ஒரு செவ்வக டிபன் பாக்சில் அல்லது பொட்டலமாகக் கொண்டுவரும் உணவில் பெரும் பாலும்
உப்புமாவே இருக்கும் .ஆனால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவையில் ஒவ்வொரு வகையில் உப்புமா
செய்து கொண்டுவருவார் .உப்புமாவை இவ்வளவு சுவையாக இத்தனை வகையாக செய்ய முடியும் என்பதே
அப்போதுதான் புரிந்தது . நானும் தோழர் கா.சின்னையாவும் ,இரா.வேணுவும் பதினோரு மணிக்கு
டீ குடிக்கும் போதே அதை காலி செய்துவிடுவோம். மறைந்த தோழர் செங்கல்பட்டு ராதாகிருஷ்ணன்
வந்தால் “ விஎம்எஸ்சின் உப்புமா டப்பாவை இங்கே தள்ளு” என்பார் .டிபன் பாக்ஸ் என்று
சொல்லவே மாட்டார் .
என்னுடை நெருங்கிய
நண்பரும் தோழருமான ஆர் .உத்தண்டராமன் வீட்டில் ரவை உப்புமா ,சேமியா உப்புமா , அவல்
உப்புமா , ராகி உப்புமா .ஓட்ஸ் உப்புமா,அரிசி உப்புமா ,கம்பு உப்புமா என வாரத்தில்
பெரும்பகுதி உப்புமா காலை உணவாக இருக்கும் . உப்புமாவை விதவிதமான சுவையில் செய்யும்
கலை அவர்களுக்கு கைவந்தது .
மும்பை வாலிபர்
சங்க மாநாட்டிற்குப் போனோம் .ரயில் தாமதம் . பசி வயிற்றைக் கிள்ளியது .போனதும் சுடச்சுட கிச்சடி கொடுத்தார்கள் . பக்கத்திலிருந்த மதுரைத்
தோழர் இந்த உப்புமா எங்கே போனாலும் நம்மைத் துரத்துகிறதே என்றார் .” உப்புமா இல்லாத
வாழ்க்கையே இல்லை” என நான் சொல்ல ; கடுப்பேற்றாதீங்க என அவர் சொல்ல , ஒரே உப்புமா புராணம்தான்.
பெங்களூரில்
ஓர் நண்பர் வீட்டுக்குப் போனேன் . அவர் ஒர் மகாராஷ்டிரத்துக்காரர் அவர் மனைவி வங்காளி
.ஒரு கிண்ணத்தில் உப்புமா வைத்தார்கள் .அதில் ரவையைத் தேடித்தான் கண்டடைய வேண்டும்.
கேரட் ,பீன்ஸ் ,உருளைக்கிழங்கு ,பச்சைப் பட்டாணி என காய்கறி நிரம்பி இருந்தது .அது
நிச்சயம் காய்கறி உப்புமாதான் .கிச்சடி எனச் சொன்னார்கள். அருகிலே இன்னொரு கிண்ணம்
கொண்டு வைத்தார்கள் .அதில் மிகப்பொடிப்பொடியா நறுக்கப்பட்ட ஆப்பிள் ,பப்பாளி ,வாழைப்பழம்
,அன்னாசிப்பழம் என பழங்கள் நிறைந்திருந்தது .அது மகாராஷ்டிரா உணவா ? வங்க உணவா நானறியேன்
அந்த காய்கறி உப்புமாவையும் இந்த பழங்களையும் கலந்து சாப்பிடுகிறார்கள் அல்லது இது
ஒரு வாய் அது ஒரு வாய் என சாப்பிடுகிறார்கள் . நான் இது ஒரு வாய் அது ஒரு வாய் அப்படித்தான்
சாப்பிட்டேன். அருமையான சுவை .ஆரோக்கியமான உணவு . அவர்கள் வீட்டில் வாரத்தில் பாதிநாள்
இப்படித்தானாம். வாழ்க ஆரோக்கியம் !
என் தோழர்
ஒருவருக்கு வயிற்றுப் பிரச்சனை .ஹோமியோபதி மருந்து சாப்பிட்டு வந்தார் .புளிப்புகூடாதென
சொல்லிவிட்டாராம் டாக்டர் . எனவே இட்லி தோசைகூட வேண்டாம் என்றுவிடுவார் .எங்கு போனாலும்
உப்புமாதான் கேட்பார் ;இல்லாவிடில் பொங்கல் . அவர் சொல்வார் சப்பாத்தி ,இடியாப்பம்
,புட்டு எல்லாம் சாப்பிடலாம்தான் ஆனால் போகிற இடத்தில் கிடைக்காதே ! எளிதில் கிடைக்கும்
வயிற்றைக் கெடுக்காத உணவு உப்புமா என்பது அவர் வாதம் .
இந்த கோவைக்காரர்களுக்கு
ரவா உப்புமா தொட்டுக்க தயிர் இருந்தால் மகிழ்வர் .எல்லா விஷேசத்திலும் ஹோட்டல்களிலும்
அது உண்டு . தமிழ்நாட்டில் கோதுமை பரவலாக அறிமுகமானதே
அறுபதுகளில் அரிசி பஞ்ச காலத்தில்தான் .கோதுமை உப்புமா ,தோசை , சப்பாத்தி செய்ய அரசே
பிரச்சாரம் செய்த காலம் அது . கொங்கு மண்டலத்தின்
பாரம்பரியத்தில் இந்த ரவா உப்புமா தயிர் எப்போது சேர்ந்திருக்கும் ?ஒரு வரலாற்று ஆய்வு
செய்யலாமே !
இன்னொரு சந்தேகம்
, அந்த அரிசி பஞ்சகாலத்தில் [ 1960 களில் ] அரசு பள்ளிகளில் காமராஜர் மதிய உணவுத் திட்டம்
அமலாக்கப்பட்டது .அப்போது பலநாள் மஞ்சள் நிறத்தில் உப்புமா என ஒன்று வழங்கப்பட்டது
.அதன் வாசமும் சுவையும் உப்புமா மீதான வெறுப்பை வளர்த்ததில் பெரும்பங்குண்டு . இப்போது
அந்த மஞ்சள் நிற உப்புமா ரவை டி மார்ட்டில் குவித்து விற்கப்படுகிறது . நிறையபேர் வாங்கிச்
செல்கிறார்கள் .பழைய மூட்டப்பூச்சி வாசம் இல்லை .அது சரி ஊரே உப்புமாவை வெறுத்த காலத்தில்
கொங்கு மண்டலம் தம் விருப்ப உணவாக்கியது எப்படி ? ஆராய்ச்சி செய்யணும்.
அதுமட்டுமா
? உப்புமாவுக்கு தேங்காய் சட்டினி அல்லது சர்க்கரைதான் காம்பினேஷன் என இருந்ததை மாற்றி
தயிரை சேர்த்ததும் கொங்குதான் . ஓமப்பொடி ,காரப்பூந்தி ,காரசேவ் இவற்றை மேட்டுக்குடியினர்
இணைத்தது பின்னால்.
போகோ என்றால்
அவல் உப்புமாதான் . எலுமிச்சை சாதம் போல் இருக்கும்
. பெங்களூரில் இதை சாப்பிட்ட முஸ்லீம் குடும்பங்களை வங்கதேசத்து அகதிகள் என முத்திரை
குத்தி குடிசைகளை சங்பரிவார் பியத்துப் போட்டதும் ;அரசு நிர்வாகம் கைகட்டி வேடிக்கை
பார்த்ததும் மறக்க முடியாத செய்தி .இதன் கிளைமாக்ஸ் என்ன தெரியுமா ? அவர்கள் வங்கதேசத்தவர்
அல்ல பன்னெடுங்காலமாக தலைமுறை தலைமுறையாக அங்கேயே வாழ்பவர் என்கிற உண்மைதான் . உண்மை
எப்படி இருந்தாலும் வாழ்விடம் பறிபோனது பறிபோனதுதான் . அவ்விடத்தை யார் விழுங்கி இருப்பார்கள்
? சொல்லவும் வேண்டுமோ ? பல மதக் கலவரங்களின் பின்னால் இந்த நிலப்பறிப்பு ஒளிந்தே இருக்கிறது
. உப்புமா புரானாத்திலும் மதவெறி அரசியலைச் சுட்ட வேண்டியதாகிவிட்டதே என்ன செய்ய ?
அது போகோ உப்புமா கதை .
இன்றைக்கும் தீடீரென வரும் உறவுகளைக் கவனிக்க – அவசரத்துக்கு
உதவ வரும் துரித உணவு ஃபாஸ்ட் புட் உப்புமாதான்
.
எல்லா உணவைப் போலவே உப்புமாவுக்கும்
சொந்த கவுரவம் ,கண்ணீர் ,கலகலப்பு எல்லாம் உண்டு என்பதை மறக்காதீர் !
உப்புமா அலர்ஜிக்காரர்களே
!
என் இணையரும்
உங்க ரகம்தான்! ஆனால் ஒன்று மட்டுமே சொல்லுவேன் ;
” உப்புமா சாப்பிடமாட்டேன் என அடம்பிடித்தால்
,
பலநாள் வயிறு காய வேண்டியதுதான் .
சம்மதமா ?”
இப்போதைக்கு
உப்புமா புராணம் முடிந்தது .
[ அரசியல்
இல்லாத பதிவு போடவே உப்புமா புராணத்தை எடுத்தேன் . ஆனால் அதிலும் அரசியல் புகுந்துவிட்டதற்கு
நான் பொறுப்பல்ல ]
சுபொஅ.
2/2/2023.
0 comments :
Post a Comment