காதல் … காதல் … [1]

Posted by அகத்தீ Labels:

 


காதல் … காதல் …  [1]

 

 பிப்ரவரி பிறந்ததும் லவ் ஃபீவர் காதல் காய்ச்சலும் தொடங்கிவிடும். பிப்ரவரி 14   “காதலர் தினம்” நெருங்க நெருங்க “ ஆதலினால் காதல் செய்வீர்!” என மானுடம் தழைக்க அழைப்போரும் , “நாடகக் காதல் ,பண்பாட்டுச் சீரழிவு” எனக்கூச்சலிடும் காதல் எதிரிகளும் களமாடத் துவங்கிவிடுவர் . இந்தக் கோடியிலும் அந்தக் கோடியிலும் நின்று பேசுவோரே அதிகம் . காதல் மானுட இயற்கை என்பதை உணர்ந்து , காலந்தோறும் காதலின் குணமும் பண்பும் மாறிக் கொண்டே இருக்கிறது என்பதைப் புரிந்து வினையாற்றுவோர் அரிதினும் அரிது .

 

பிபிசி என்றாலே சிலருக்கு வியர்க்கும் .கசக்கும் .காலச்சூழல் அப்படி . அந்த பிபிசி கட்டுரையும் அப்படித்தான்.  காதல் வந்தால் உடலில் நடக்கும் மாற்றங்கள் என்ன? இச்சை வந்தால் நடப்பவை என்ன?” எனக் கேள்வி எழுப்புகிறது அக்கட்டுரை.  உடலியற்கை என காதலை அறிவியலாய் அணுகும் அக்கட்டுரை . காதல் என்றாலே அலர்ஜி கொள்ளும் சங்கிகளுக்கும் ,சாதி வெறியர்களுக்கும் அதுவும் அறிவியல் ரீதியாக காதலைப் பேசப் புகின்  கசக்கத்தானே செய்யும்.

 

 

 “ரட்கெர்ஸ் பல்கலைக்கழகத்தின் ஹெலென் ஃபிஷர் கூற்றுப்படி, காதல் உணர்வில் மூன்று அம்சங்கள் உள்ளன.” என்கிறது அக்கட்டுரை .அந்த மூன்று அம்சங்கள் என்ன என விவரிக்கிறது . இச்சை ,கவர்ச்சி ,பிணைப்பு என்கிற மூன்று கூறுகளை விவரிக்கும் அக்கட்டுரை குறிப்பிடும் செய்தி என்ன தெரியுமா ?

 

 

இச்சை என்படுவது யாதெனில் ,”காதலில் பெரும்பாலும் இச்சை உணர்வு முதலாவதாக தோன்றும், ஆனால், எல்லா சமயங்களிலும் அப்படி நிகழ்வது இல்லை. பாலியல் உணர்வு அற்ற (asexual) சிலருக்கு இது எப்போதும் நிகழாது. ஆனால், இச்சை உணர்வு ஏற்படுபவர்களுக்கு அது ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன்களால் நிகழ்கிறது.”

 

கவர்ச்சி எனப்படுவது யாதெனில் ,”காதலின் இரண்டாம் அம்சம் ஒருவரால் கவரப்படுவது, இது டோப்பமின் என்கிற நரம்பு கடத்தியால் நிகழ்கிறது. இது மூளையிலிருந்து வெளிப்படும் நல்ல உணர்வை ஏற்படுத்தும் ஒரு ஹார்மோனாகும். நமக்கு நல்ல உணர்வை ஏற்படுத்தும் ஒன்றை மீண்டும் மீண்டும் செய்ய வைப்பது டோப்பமின் வேலை. இதனால்தான் ஒருவர் மீதுள்ள ஆழமான கவர்ச்சி என்பது அந்நபருக்கு அடிமையாவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.”

 

 பிணைப்பு என்படுவது யாதெனில் ,”காதலின் மூன்றாவது அம்சம் ஒருவருடனான இணைப்பு அல்லது பிணைப்பு. இதில் ஆக்சிடாசின் மற்றும் வாசோப்ரெசின் என்ற இரண்டு ஹார்மோன்கள் செயலாற்றுகின்றன. 'அரவணைக்கும் ஹார்மோன்' (cuddle hormone) என அழைக்கப்படும் ஆக்சிடாசின், பாலியல் உறவு கொள்ளும்போதோ, அல்லது ஒருவருடன் தோலுடன் தோல் தொடர்புகொள்ளும்போதோ வெளிப்படும் ஹார்மோன் ஆகும். இணையுடன் ஆழ்ந்த பிணைப்பை ஏற்படுத்தும் வகையிலான பாதுகாப்பு மற்றும் மனநிறைவை ஏற்படுத்தும் உணர்வுகளை இது அதிகரிக்கும். ”

[முழுக்கட்டுரையும் வாசிக்க : காதல் வந்தால் உடலில் நடக்கும்

https://www.bbc.com/tamil/science-61683706 ]

 

காதலிலும் பாலின ஈர்ப்பிலும் ஹார்மோன்களின் பங்கு உள்ளது என்னும் அறிவியல் கூற்றை மறுக்க முடியாது .ஆயின் காதல் அதுமட்டும்தானா ? அல்ல .அல்ல. அதற்கும் மேல் பண்பாட்டுக் கூறாகவும் உணர்ச்சி குவியலாகவும் வாழ்வின் ஆதார சுருதியாகவும் உள்ளது . வெறும் ஹார்மோன் வேலையாக மட்டும் இருப்பின் உலகெங்கும் ஒரே தரத்திலன்றோ காதல் இருக்கும். அப்படி இல்லையே !

 

உலகெங்கும் எல்லா காதலுக்கும் பொதுவிதியும் இருக்கும் ; தனித்தனி போக்கும் வளர்ச்சியும் இருக்கும் .

 

இக்காதலைப் பற்றி பாடாத கவிஞர் இல்லை .பேசாத மானுடர் இல்லை . ஆயினும் அன்று பேசிய காதலும் இன்று பேசுகிற காதலும் நாளையக் காதலும் ஒன்றல்ல .காலந்தோறும் காதல் வளர்கிறது ;செழுமையாகிறது .ஆகவே இன்றையக் காதலைப் பேசவும் நாளையக் காதலைப் பாடவும் நேற்றைய காதல் கவிதைகள் போதுமானதல்ல .

 

நாளும் புதிதாகும் காதல் அதனைப் போற்ற புதிய காதல் பார்வையும்  புதிய காதல் கவிதையும் தேவை .

 

 “உலகத் தரம்” என்கிற முத்திரை மந்திரச் சொல் போல பேசப்படும் உலகில் ; உலகத் தரமான காதல் எதுவும் இல்லை . ஒவ்வோர் நாட்டின்  வட்டாரத்தின் பண்பாட்டுச் சூழல் , புரிதல் ,பார்வை சார்ந்தே காதலும் பூக்கும் .காய்க்கும் .கனியும் . அந்த பண்பாடும் சூழலும் பார்வையும் பாலின சமத்துவ கண்ணோட்டம் சார்ந்தே இருக்கும் . பாலின சமத்துவ நோக்கு ஓங்க ஓங்க காதலும் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் .ஜீவிக்கும். நம் நாட்டில் சாதி ,மத தளைகளும் நொறுங்கும் போதே காதல் அமுதமாகும்.

 

காதலைப் பேசப் பேச நீளும். பேசுவோம் !!

 

சுபொஅ.

1/2/2023.
 

0 comments :

Post a Comment