“ 2020 ஆம்
ஆண்டு டெல்லியைச் சேர்ந்த
'அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம்' (CSE) என்கிற அமைப்பு
நடத்திய ஆய்வில், மும்பையில் இருப்பது போல,
இந்தியா முழுவதும் 3,159 குப்பை மலைகளில்
800 மில்லியன் டன்னுக்கும் அதிகமான
குப்பைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.”
போகி கொளுத்த வேண்டும் :
எதை ? எங்கு ?எப்படி ?ஏன் ?
சு.பொ.அகத்தியலிங்கம்.
“உலகமே பிளாஸ்டிக் குப்பைகளின் மத்தியில்
சுழன்று கொண்டிருக்கிறது. தூக்கி எறியப்பட்ட
பிளாஸ்டிக் குப்பைகள் பசிபிக் பெருங்கடலில்
குப்பைத் தீவாக உருவெடுத்துள்ளது.
ஹவாய் தீவுகள் முதல் ஜப்பான் வரை இந்த
குப்பைத் தீவு உருவாகியுள்ளது. கடலில் ஏற்படும்
சுழல் நீரோட்டத்தின் காரணமாக பிளாஸ்டிக்
குப்பைகள் திரண்டு உருவான இக்குப்பை தீவு
அமெரிக்க நாட்டை விட இரு மடங்கு பெரியது!
இத்தீவு நீர் மட்டத்திற்கு கீழ் இருக்கிறதாம்.
உலகமே பெரும் குப்பைத் தீவாக இன்னும்
100 ஆண்டுகளில் மாறிவிடும் அபாயத்தை
இந்தத் தீவு சொல்கிறது.”
இன்னும் புராணக் கதைகளால் களங்கப்படாத ஒரே கொண்டாட்டம்
தமிழரின் பொங்கல் பண்டிகை மட்டுமே . பொங்கல் பண்டிகையின் தொடக்கம் என்பது போகிப் பண்டிகை
. அதை நாம் எப்படிப் புரிந்து வைத்திருக்கிறோம் ? எப்படிப் புரிய வேண்டும்? கொஞ்சம்
பேசலாமா ?
வீடென்பது நாலு சுவரும்
ஒரு கதவும் இரண்டு ஜன்னலும் மட்டுமா ? இல்லை. மனிதர்கள் வாழும் உயிர்க்கூடம் . மனிதர்
வாழும் இடங்களில் குப்பை சேர்வதும் இயல்பு .தவிர்க்க முடியாதது .ஆயின் குப்பைகளோடு
வாழ்வதும் இயலாது .
ஆகவே ஆண்டுக்கொரு முறை
வீட்டை ஒழுங்குபடுத்தி வேண்டாத குப்பைகளை தூக்கி வெளியே போட்டு கொளுத்துவது ஒரு பண்பாட்டு
நிகழ்வாக போகிப் பண்டிகை மூலம் வடிவம்கொண்டது என்பதுதான் சிறப்பு .
நம் தாத்தா காலத்தில்
வீட்டை ஒழுங்கு படுத்தும் போது பரணில் சேர்ந்த குப்பைகள் எவை எவை ?கொஞ்சம் மனத்திரையில்
ஓடவிடுங்கள். போகிக்கு முன்பு வீட்டை சுத்தப்படுத்துகையில் கீழே இறங்கும்.
“மயில் குத்து விளக்குகள், தாம்பாளங்கள் ,வெங்கல
பிள்ளையார் சிலை , மரத்தொட்டில் , நடைவண்டி,
தொட்டில் கம்பு ,கலைவேலைப்பாடுமிக்க மரப்பெட்டி, நெல் அளக்கும் மரக்கால் ,உலக்கை,
குந்தாணி, பல்லாங்குழி, கடப்பாரை, வெட்டரிவாள்,
டிரங்பெட்டி, பித்தளை தவலைகள், வெண்கல
உருளி, செம்புக்குடம் , கிணற்றில் விழுந்த
வாளி போன்றவற்றை எடுக்கப் பயன்படும் பாதாளக் கொறடு, காலுடைந்த நாற்காலி, நாலைந்து மரப்பாச்சி
பொம்மை , பிள்ளைகள் விளையாடும் மரச் சட்டிப்பானைகள், கீறல் விழுந்த சைனா பீங்கான்கள்
, ஊறுகாய்ச் சட்டிகள், மண் அகல் விளக்குகள்,
ஜாடிகள் , பழைய புத்தகங்கள், போட்டோக்கள்
,வெற்றிலை இடிக்கிற சிற்றுரல்-குழவி, திருகை ,
தாம்புக்கயிறு , சாக்குப்பைகள், டின்கள், பிஞ்ச விளக்குமாறு, சவுரிமுடி, கொண்டையூசி
,பழைய போர்வைகள் மெத்தைகள்... இத்யாதி இத்யாதி.. “
இவற்றில் பெரும்பாலானாவை
. திருவிழாக்கள் ,உறவுகள் என பல்வேறு நினைவுகளை தன்னக்கத்தே கொண்டிருக்கும் .நம்மோடு
பேசும். பெரும்பகுதி கெட்டுப் போகாதவை.மீண்டும் பரனேறிவிடும்.
உடைந்த மரச்சாமன்களும்
பிய்ந்த கோரைப் பாய்களும் மெத்தை தலையணைகளும் போகி நெருப்பில் எரிந்து சாம்பலாகும்
. ஒப்பிட்டளவில் காற்றை பெரிதாய் மாசுபடுத்தாது .
இன்று ,வீடுகளில் பரண்கள்
அபூர்வம் .கட்டில் அடியில் ,உடைந்த பிளாஸ்டிக் நாற்காலிகள் மேல் , இண்டு இடுக்குகள்
எங்கும் அடைந்து கிடைப்பவை எவை ? எவை ?
“உடைந்த பிளாஸ்டிக் சேர், பாடாத ரேடியோ, ரிப்பேரான
(இப்போது தேவைப்படாததாகவே ஆகிவிட்ட) டேப்ரிக்கார்டர், பழுதான டேபிள் ஃபேன், பிய்ந்த
பிளாஸ்டிக் பொம்மைகள் , ஓட்டையாகிப்போன பிளாஸ்டிக் குடம் , ரிப்பேராகிப்போன குட்டி
டிவி , கொஞ்சம் பைக் உதிரி பாகங்கள், பழைய இற்றுப்போன பிளாஸ்டி பாய்கள், ஃபீஸ்
போன குண்டு பல்புகள், டியூப் லைட்டுகள், கொஞ்சம் எலக்ட்ரிக் ஒயர், சுவிட்சுகள், பிளக்குகள்,
பிய்ந்த மெத்தை, உடைந்த சோஃபா, கொஞ்சம் பழைய பாத்திரங்கள், பாழாய்போன மிக்சி,
கிரைண்டர், ஏசி மிஷின், மண்ணெண்ணை ஸ்டவ் , பழுதான கம்ப்யூட்டர், ஓட்டைக்
கடிகாரம், உடைந்த கிரிக்கெட் மட்டை, பந்து, பழைய கேசட்கள், சிடிக்கள் , வாராந்திரிகள்
, கொஞ்சம் புத்தகங்கள், ரிப்பன், பழைய பிய்ந்த தலையணை, ,சவுரிமுடி, ஹேர்பின், பவுடர்
கிரீம் டப்பாக்கள், பிள்ளைகள் வாங்கிக் குவித்த கோப்பைகள், ஷீல்டுகள், நினைவுப் பரிசுகளென்னும்
சில ஸ்டாண்டுகள், அட்டைப் பெட்டிகள் , தெர்மாகோல்கள், போட்டோக்கள்... இத்யாதி இத்யாதி...
போட்டோக்கள், சில பரிசுகள் தவிர எதுவும் ஞாபகச் சின்னமாய் இல்லை ;
அதனால் குவிந்த குப்பைகளை மொத்தமாய்த் தூக்கி பழைய சாமான்கள் வாங்குகிறவரிடம்
போடுவதைத் தவிர வேறு வழியில்லை. அபூர்வமான புத்தகங்களையும் பழைய பேப்பர் கடைக்காரனிடம்
போடுவது மட்டும்தான் வருத்தத்துக்குரியது.
போகி அன்று பிளாஸ்டிக் பொருட்கள் ,டயர்கள் போன்றவற்றை எரிக்காதீர் என பரப்புரை நடந்துகொண்டே
இருக்கிறது .மறுபுறம் எரித்துக் கொண்டே இருக்கிறோம். என்ன ஆகும் ?
“உலகமே பிளாஸ்டிக் குப்பைகளின் மத்தியில் சுழன்று
கொண்டிருக்கிறது. தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகள் பசிபிக் பெருங்கடலில் குப்பைத்
தீவாக உருவெடுத்துள்ளது. ஹவாய் தீவுகள் முதல் ஜப்பான் வரை இந்த குப்பைத் தீவு உருவாகியுள்ளது.
கடலில் ஏற்படும் சுழல் நீரோட்டத்தின் காரணமாக பிளாஸ்டிக் குப்பைகள் திரண்டு உருவான
இக்குப்பை தீவு அமெரிக்க நாட்டை விட இரு மடங்கு பெரியது! இத்தீவு நீர் மட்டத்திற்கு
கீழ் இருக்கிறதாம். உலகமே பெரும் குப்பைத் தீவாக இன்னும் 100 ஆண்டுகளில் மாறிவிடும்
அபாயத்தை இந்தத் தீவு சொல்கிறது.”- இப்படி ஒரு கட்டுரையில் வேதனைப்படுகிறார் சுப்ர
பாரதிமணியன் .
மொத்தப் பெட்ரோலியத்தில்
5 விழுக்காடு பிளாஸ்டிக் உற்பத்திக்காகப் பயன்படுகிறது. உலக அளவில் பிளாஸ்டிக் பொருட்களை
அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் முதல் பத்து இடங்களில் இந்தியாவும் உள்ளது. பல லட்சம்
கோடி ரூபாய் புழங்கும் பெரிய தொழிலாக முன்னணியில் நிற்கிறது பிளாஸ்டிக் தொழில்.
தற்போது பிளாஸ்டிக் தடை
பற்றி அரசு உரக்கப் பேசுகிறது .ஆனால் அது மிகவும் மேலோட்டமானது . பிளாஸ்டிக் பைகளை
தடை செய்துவிட்டால் எல்லாம் நேராகிவிடும் என்கிற மாயத் தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது.
பிளாஸ்டிக் பை தடைக்கு நாம் எதிரி அல்ல .சிறு வியாபாரிகளின் மீது பாயும் அரசு ,பெரும்
வணிக நிறுவனங்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொதி பற்றி வாய் திறப்பதில்லை. ஏன்?
பிளாஸ்டிக் பை பற்றி
வாய்கிழியப் பேசும் , கட்டுரை எழுதும் பலர் மின்னணுக் குப்பை (இ வேஸ்ட்) பற்றி வாயையே
திறப்பதில்லை. ஏன்?
உபயோகப்படுத்தப்பட்ட
கம்ப்யூட்டர், செல்போன், டிவி உள்ளிட்டவை மின்னணுக் குப்பையாகும். உலகெங்கும் சுமார்
4.5 கோடி டன்களுக்கு மேல் மின்னணுக் குப்பைகள் ஆண்டுதோறும் குவிகின்றன. இதில் 70 சதம்
இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.
முந்தைய கணக்குப்படி
மின்னணு குப்பைகளை கையாளுவதில் இந்தியா 178 நாடுகளில் 155 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது
.இதனால் சுகாதார நிலையில் 127 வது இடத்துக்கும், காற்று மாசில் 174 வது இடத்துக்கும்,
தண்ணீர் மாசுபடுவதில் 124 வது இடத்துக்கும் தள்ளப்பட்டுள்ளது.இப்போது நிலைமை இன்னும்
சீர்கெட்டுள்ளது என்கின்றனர் வல்லுநர்கள்.
மின்னணுக் குப்பைகளைக்
கிளறி தரம் பிரிக்கும் வேலையில் இந்தியாவில் மட்டும் 14 வயதுக்கு உட்பட்ட 4.5 லடசம்
குழந்தைக் தொழிலாளிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்க்கைத் தரமும் நோய்களும்
சொல்லும் தரமன்று. இதை யோசித்தாலே நெஞ்சம் பதறுகிறது .
இந்தியாவில் பெங்களூரு,
மும்பை, தில்லி, சென்னை, பூனா, கொல்கத்தா, சூரத், நாக்பூர், அகமதாபாத் ஆகிய நகரங்கள்
மின்னணு குப்பைகளின் தலைநகராகத் திகழ்கின்றன என்கிறது ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல்
ஆய்வறிக்கை.
இந்தியாவில் 8 லட்சம்
டன்களுக்கும் மேல் மின்னணுக் குப்பைகள் குவிந்துள்ளன. இது உண்மையின் ஒரு பகுதி மட்டுமே.
இன்னும் பல மடங்கு குவிந்துள்ளதே மெய்.
பெங்களூருவில் ஒவ்வோர்
ஆண்டும் 20 ஆயிரம் டன்கள் மின்னணுக் குப்பை சேர்ந்துவருவதாக அசோசெம் அமைப்பு தெரிவிக்கிறது.
இந்திய அளவில் மின்ன ணுக் குப்பைகள் உருவாக்கத்தில் தமிழகம் 2ஆவது இடத்தில் உள்ளது.
மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இவை எல்லாம் பழைய கணக்கு இப்போது இது இரட்டிப்பாகிவிட்டதே
மெய்.
சென்னையில் ஒவ்வொரு நாளும்
சேரும் மின்னணுக் குப்பைகளில் 60 சதவீதத்துக்கும் அதிகமானவை பழைய கம்ப்யூட்டர்கள்.தமிழகத்தில்
மட்டும் பழைய கணக்கின்படி, 28,789 டன்கள் மின் குப்பைகள் சேர்ந்துள்ளன. இதில் 60 சதவீதம்
பழுதடைந்த கம்ப்யூட்டர் கழிவுகள்தானாம். சென்னை சுற்றுப் பகுதிகளில் எலக்ட்ரானிக் பொருட்கள்
உற்பத்தி செய்யும் 21 பெரிய நிறுவனங்களும், 100 சிறு, குறு தொழில் நிறுவனங்களும் உள்ளன.இதன்
மூலம் ஆண்டு ஒன்றுக்கு 789 டன்கள் மின்கழிவுகள் உருவாகின்றன. கடந்த பதினோரு ஆண்டுகளில்
நிலைமை சீரடையவில்லை. மேலும் மேலும் மோசமடைந்துள்ளது. அரசு கணக்குகூட சொல்வதில்லை.
இவற்றை முறையான மறுசுழற்சி
மூலம் அகற்றினால் மட்டுமே மக்களை ஆபத்திலிருந்து பாதுகாக்க முடியும் என்று உலக சுகாதார
நிறுவனம் எச்சரித்துள்ளது.
இந்த சூழ்நிலையில், சென்னையில்
அங்கீ காரம் பெற்ற மறுசுழற்சி மையங்கள் வெறும் 18 மட்டுமே உள்ளது. பத்து ஆண்டுகளுக்கு
பின்னும் இன்றும் இதே நிலைதான்.
இந்த பழைய மின்னணு குப்பையை
வாங்குவோர் , எலக்ட்ரானிக் பொருட்களில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய உதிரி பாகங்களை
பிரித்தெடுத்துவிட்டு, மற்றவைகளை இரவு நேரங்களில் ஒதுக்குப்புறங்களில் வைத்து எரித்துவிடுகின்றனர்.
இவ்வாறு மின்கழிவுகளை
எரிக்கும் போது வெளியாகும் டயாக்சின் என்ற அமிலம் பொதுமக்களுக்கு சுவாச நோய்களை ஏற்படுத்துவதாக
மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
ஒவ்வாமையால் ஏற்படும்
தோல் நோயும் வேகமாகப் பரவுகிறது. மேலும் காரீயம், குரோமியம் 6, பெரிலியம், கேட்மியம்
உள்ளிட்ட பல வேதிப்பொருட்கள் வெளிப்படுகிறது. இதனால் உடல் உறுப்புகள் மட்டுமின்றி டிஎன்ஏ
மூலக்கூறுகளும் பாதிக்கப்படும் அதிர்ச்சி தகவலையும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னையை பொறுத்தவரை
ஸ்ரீபெரும்புதூர் சுற்று வட்டார பகுதிகளில் இரவு வேளைகளில் இதுபோன்ற மின்கழிவுகளை எரிப்பதாக
கூறப்படுகிறது. இங்கு மட்டுமல்ல தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் ஊராட்சி பகுதிகளில்
எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் பிளாஸ்டிக் குப்பை தொழிலில் ஈடுபடுவோர் இதுபோன்ற செயல்களில்
ஈடுபடுகின்றனர்.
மின்கழிவுகளில் 5 சதவீதம்
மட்டுமே முறையாக மறுசுழற்சி செய்யப்படுகிறது. இதுபோன்ற செயல்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு
மக்கள் கடும் ஆபத்தை சந்திக்க நேரிடும் என்று மாசுகட்டுப்பாடு வாரியம் எச்சரித்துள்ளது.
மின்னணு குப்பைகளை மறு
சுழற்சி செய்ய அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற வளர்ந்த நாடுகளில் தொழில்நுட்பங்கள்
உள்ளன. அதேநேரம், 10 சதவீதம் மட்டுமே முறையாக மறுசுழற்சி செய்யப்படுகிறது.
எஞ்சியவை இந்தியா, ஆப்பிரிக்கா,
ஆசிய நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. இந்தியாவில் பெங்களூரு, தில்லி ஆகிய நகரங்களில்
மட்டுமே மின்னணுக் குப்பைகளை மறுசுழற்சி செய்யும் வசதிகள் ஒரளவு உள்ளன. அதுவும் யானைப்
பசிக்கு சோளப்பொரியாகவே உள்ளது.
இந்தியாவில் தூக்கியெறியப்படும்
கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கை 2030ஆம் ஆண்டில் 500 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் அசோசெம்
தெரிவித்துள்ளது. தமிழகமும் அதில் பெரும் பங்கு வகிக்கும் .இந்த உண்மை தமிழக அரசுக்கும்
ஒன்றிய அரசுக்கும் உறுத்தவே இல்லை என்பதுதான் வேதனையின் உச்சம் .
2020 ஆம் ஆண்டு டெல்லியைச் சேர்ந்த 'அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம்' (CSE) என்கிற அமைப்பு நடத்திய ஆய்வில், மும்பையில் இருப்பது போல, இந்தியா முழுவதும் 3,159 குப்பை மலைகளில் 800 மில்லியன் டன்களுக்கும் அதிகமான குப்பைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
குப்பைகளை மக்கும் குப்பை
,மக்காத குப்பை என்று மட்டும் வகைப்படுத்த முடியாது .மின்னணுக் குப்பை ,மருத்துவக்
குப்பை ,வேதியல் குப்பை என குப்பைகளின் வகைப்பாடும் விரிந்து கொண்டே போகிறது . “வேஸ்ட் மேனஜ்மெண்ட்” என்பது மிகச்சவாலான
துறை .இதில் பல ஆய்வுகளும் முன்னேற்றங்களும் ஏற்பட்டுள்ளன .ஆயினும் நாம் இன்னும் போக
வேண்டியது நெடுந்தூரம்.
சரி ! ஓர் சமூகக் கேள்வி
.தூய்மை என்பது இந்தியர் பழக்க வழக்கமாகவோ தமிழர் நாகரீக ஒழுங்காகவோ இயல்பாக ஏன் மாறவில்லை
?
வீட்டை பெருக்குவது சுத்தம் செய்வது என்பது பெண்களின்
வேலை என்றும் ; தெருவில் குப்பைகளை அள்ளுவதும் சாக்கடை சுத்தம் செய்வதும் ஓர் குறிப்பிட்ட
சாதியின் கடமையாகவும் சாதியமும் ஆணாதிக்கமும்
ரத்த அணுக்களில் கலந்திருக்கும் வரை ,” சந்தி ,தெருப் பெருக்கும் சாத்திரம்
கற்போம்” எனும் மகாகவி பாரதியின் நல்ல வாக்கு இந்தியர் ,தமிழர் சிந்தனையில் சம்மணம்
போட்டு உட்காராது .தூய்மை பெரும் சவாலாகவே இருக்கும் .
முதலில் கொளுத்த வேண்டியது
இந்த சாதிய ,ஆணாதிக்க ,சனாதன எண்ணப் போக்குகளைத்ததானே ! செய்வோமா ?
[ காக்கைச் சிறகினிலே 2023 தமிழர்த் திருநாள் சிறப்பிதழில்
வெளியான எனது கட்டுரை ]
0 comments :
Post a Comment