ஒருவரையேனும்…

Posted by அகத்தீ Labels:

ஒருவரையேனும்…

 

பயணித்துக் கொண்டே இருக்கிறார்கள்

எப்போதும் எங்கும் ஏதோ

பரபரப்புடன் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்

 

பேசிக்கொண்டே இருக்கிறார்கள்

எப்போதும் யாரிடமாவது பயணிக்கும் போதும்

எதையோ பேசிக்கொண்டே இருக்கிறார்கள்

 

புறம் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்

யாரைப் பற்றியாவது யாரிடமாவது

புலம்பிக்கொண்டே இருக்கிறார்கள்

 

வருந்திக் கொண்டே இருக்கிறார்கள்

எதை எதையோ நினைத்து

சதா கலங்கிக்கொண்டே இருக்கிறார்கள்

 

அடுத்த வேளைச் சோற்றுக்கான கவலையோ

அடுத்தமுறையும் பதவிக்கான கவலையோ

அவரவர் கவலை அவரவருக்கு .

 

 

நியாயத் தீர்ப்பு நாளில்

ஒவ்வொருவரையும் கூண்டிலேற்ற வேண்டும்

இவை பற்றி கேள்வி கேட்க வேண்டும்

ஒரு சிறு கவலையுமின்றி வலியுமின்றி

மனமகிழ்வோடு வாழ்ந்தேன் என சொல்லும்

ஒருவரையேனும் கண்டடைந்து

உலகுக்கு அடையாளம் காட்ட வேண்டும்.

 

என் கோரிக்கையைக் கேட்டு

இறைவன் மயக்கம் போட்டார் .

 

மனிதன் சிரித்துக் கொண்டே

வாட்ஸப்பில் கமெண்ட் போட்டார் !

 

சுபொஅ.


0 comments :

Post a Comment