தினம் ஒரு சொல் .86 [ 1 /12/2018 ] என்னோடு நடை பயிற்சியில் ஓர் நண்பர் அடிக்கடி பங்கேற்பார் .அவர் தெலுங்கர் .நீண்டகாலம் தமிழ்நாட்டில் வேலைபார்த்ததால் தமிழும் அவருக்குத் தெரியும் .தெலுங்கு போலவே தமிழையும் பேசுவார் .அவர் என்னோடு நடை பயிற்சியில் பங்கேற்கிறபோதும் பாதி வழியில் உள்ள சாய்பாபா கோவில் வரையே வருவார் .சாய்பாபா கோவிலுக்கு அவர் செல்ல ;நான் நடை பயிற்சி தொடர்வேன் . அவர் ஒரு நாளும் என்னை கோவிலுக்கு அழைத்ததில்லை .நானும் அவர் கோவிலுக்கு போவதை கேள்வி கேட்பதில்லை .சில நாள் திரும்பிவரும் போது என்னோடு இணைவார் .அவர் மனைவியும் சில நாள் வருவதுண்டு . அப்போதும் இப்படித்தான் . ஒரு நாள் நடைபயிற்சி முடித்து திரும்பும் போது என்னோடு இருவரும் வந்தனர் .அன்று சனிக்கிழமை .நாளை எந்த சர்ச்க்குப் போவீர்கள் என அந்த சகோதரி கேட்க நான் சொல்லும் முன் அவர் கணவர் சொன்னார் . “ சார் ! சர்ச் ,மசூதி ,கோவில் எதுக்கும் போகமாட்டார் .அவர் ஓர் சோஷியல் ஒர்க்கர் .” இதனைக் கேட்டதும் அந்த சகோதரி சொன்னார் , “ அதுவும் சரிதான் . நாம கோவில் கோவில்னு அலைஞ்சு என்னத்தக் கண்டோம் .வேறு போக்கிடம் இல்லாமல் கோயிலே கதின்னு கிடக்கோம்…” அந்த சகோதரி வெடித்த வார்த்தைகள் நெஞ்சின் ஆழத்திலிருந்து வந்தவை . மெய்தானே ! பெரும்பாலான முதியோர்களின் வலியை ,மகிழ்ச்சியைப் பங்குபோடவும் வழியற்ற குடும்ப இறுக்கம் .முதியோர்களுக்கு மாலை நேர சரணாலயமாக கோவில்கள் மாறிப்போய்விட்டன . இது ஆன்மீகத்தின் வெற்றி அல்ல ;சமூக நலனில் நாம் காட்டும் அக்கறையின்மையின் எதிரொலி . கடவுள் நம்பிக்கையின் ஆணிவேர் சுயபாதுகாப்பின்மைதான் .மார்க்ஸ் சொன்னது வெறும் வார்த்தை அல்ல .அனுபவ நிஜம் . சகோதரியின் வார்த்தையே அதற்கு சான்று .சமூகப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் போது கடவுள் நம்பிக்கையும் ஆட்டம் காணும் .இதைச் சொல்லுவதால் இப்போது நாத்திகப் பிரச்சாரம் வேண்டாம் என்பதல்ல . சமூகப் புரிதலோடு பக்குவமாய்ச் செய்ய வேண்டும் என்பதே ! Su Po Agathiyalingam
தினம் ஒரு சொல் .85 [ 30 /11/2018 ] நுனிப்புல் மேய்வது என்றொரு சொல்வழக்கு உண்டு. நம்மில் பலர் அந்த ரகமே .மேலோட்டமாய் பார்த்துவிட்டு எல்லாம் தெரிந்தது போல் கதை அளப்பதில் நம்மை யாரும் மிஞ்ச முடியாது .எல்லோரும் எல்லாவற்றிலும் நிபுணராக இருக்கவும் முடியாது ; அவ்வாறு இருக்க வேண்டிய அவசியமும் இல்லை . ஆனால் ஒன்றை அரைகுறையாய் தெரிந்துவிட்டு அது குறித்த நிபுணர் போல் பேசக்கூடாது . ஒரு சம்பவம் பற்று தலைப்புச் செய்தியைக் கேட்டுவிட்டு அதைப் பற்றி அலசுவது மிக ஆபத்தானது . எடுத்துக்காட்டாக , “ கள்ளக்காதலுக்கு இடையூறாய் இருந்த கணவனை வெட்டிக் கொண்ற மனைவி .” இச்ச்செய்தி உண்மையா ? பொய்யா ? என்ன நடந்தது ? போலீஸ் தரப்பு சொன்னதைத் தவிர வேறு ஏதும் தெரியுமா ? ஆனாலும் அப்பெண்ணை புழுதிவாரி தூற்றிவிடுகிறோம் . கள்ளக்காதல் என்ற வார்த்தையே எவ்வளவு தவறானது என்பதை உணர்ந்தோமா ? அடுத்து இன்னொரு செய்தி . “ கள்ளக்காதலனோடு கையும் களவுமாய் பிடிபட்ட மனைவியை வெட்டிக் கொன்ற கணவன் .” இங்கும் அதே கேள்விகளே . செத்தது ஆணாக இருப்பினும் ,பெண்ணாக இருப்பினும் கூசாமல் “கள்ளக்காதல்” என்கிற ஒற்றைச் சொல்லில் அனைத்து பழியையும் பெண் மீதே சுமத்திவிடுவது எவ்விதத்தில் நியாயம் . போலீஸ் வழக்கை எளிதாக முடிக்க , உண்மைக் குற்றவாளியை தப்பவிட ,இப்படி கதை கட்டிவிட்டால் போதும் எல்லோரும் நம்பிவிடுவர் .ஏனெனில் இங்கு ஆணாதிக்க சமூக உளவியல் மேலோங்கி உள்ளது . இவ்வாறு ஜோடிக்கப்பட்ட வழக்குகளில் நூற்றுக்கு தொண்ணூறு யாரையோ காப்பாற்ற வலிந்து புனையப்பட்ட பொய் வழக்கே . எளியவருக்கு நீதியும் மறுக்கப்படும்தானே ! தலைப்புச் செய்தியை பார்த்தோ ,அல்லது முகநூலில் வரும் ஓரிரு வரிகளை வைத்தோ அனைத்தையும் அறிந்ததாய் காட்டிக்கொள்ள முயலுவது மகாபேதமை .முழுதாய் தெரிய முயலுங்கள் அல்லது கொஞ்சம் காத்திருங்கள் இன்னொரு பக்க விவாதமும் வரட்டும் . நீங்கள் கேள்விப்பட்டது எதுவும் சரியாகவும் இருக்கலாம் ; பிழையாகவும் இருக்கலாம் .நுனிப்புல் மேயாமல் கொஞ்சம் மெனக்கெட்டு உண்மையைத் தேடலாமே ! Su Po Agathiyalingam
தினம் ஒரு சொல் .84 [ 29 /11/2018 ] தோற்றத்தையும் மிடுக்கையும் தொடர்ந்து காப்பாற்றுவது தேவையாக இருக்கிறது .ஆள் பாதி ஆடை பாதி என்பது மட்டுமல்ல மீசை ,மற்றும் தலைக்கு சாயம் பூசுதல் உள்ளிட்டவை நமக்கே ஒரு நம்பிக்கையைத் தரும் .எனவே நான் தொடர்ந்து முடிக்கு கருப்புச் சாயம் பூசுகிறேன் என ஒருவர் அண்மையில் பதிவிட்டிருந்தார் . அவர் பார்வையோ செயலோ தவறன்று . தாரளாமாகச் செய்யலாம் .நான் என் முடிக்கு சாயம் பூசுவதில்லை . இந்த முதிய தோற்றமும் கம்பீரமே எனக் கருதுகிறேன் .இதுவும் பிழையில்லை . குழந்தைப் பருவம் ,மாணவப் பருவம் ,வாலிபப் பருவம் ,நடுத்தர வயது என ஒவ்வொன்றும் கம்பீரமே .அதே போல்தாம் முதுமையும் . எல்லா பருவத்தையும் போல் முதுமையும் அதற்குரிய குறை நிறைகளோடு அமைவதே .அதனை அதன் இயல்போடு ஏற்பதே எப்போதும் இனிது .வலிந்து இளமையை அதற்குள் திணிக்க வேண்டாமே ! ஆனால் இயன்றவரை உங்கள் சிந்தனையை அப்டேட்டட்டாக புதுப்பித்துக் கொண்டே இருங்கள் .அதற்காக புதியன தேடித் தேடி படித்துக் கொண்டே இருங்கள் .அது உங்களின் மதிப்பையும் மரியாதையும் உயர்த்தும் .இளைஞர்களுக்கு வழிவிட்டும் , கைகொடுத்து தூக்கிவிட்டும் மகிழுங்கள் அது உங்கள் முதுமைக்கு அழகு சேர்க்கும் . உங்கள் தோள் மீது சாய்ந்து தங்கள் வேதனைகளைப் பங்கு போட்டுக் கொள்ள முடியும் ; உங்களிடம் எதையும் மனம் திறந்து பேசி ஆலோசனைகளைப் பெற முடியும் என்ற நம்பிக்கையை உங்களால் உருவாக்க முடிந்தால் உங்கள் முதுமை பொருள் பொதிந்ததாகும் . உங்கள் தலைமுடிக்கு சாயம் பூசுங்கள் அல்லது பூசாமலிருங்கள் .அது தனிப்பட்ட விருப்பம் .ஆனால் அழகும் அர்த்தமும் மிக்க முதுமைக்கு உங்களை நீங்களே தயார் படுத்துவது எல்லாவற்றையும்விட மிக மிக முக்கியம் . Su Po Agathiyalingam
தினம் ஒரு சொல் .83 [ 28 /11/2018 ] “அவன் கிடக்கிறான் குடிகாரன் ,எனக்கு இரண்டு மொந்தை ஊற்று” என்பது வெறும் பழமொழி மட்டுமல்ல நாட்டு நடப்பும்கூட .மதுவை வாழ்வில் தொட்டதே இல்லை என்போர் அபூர்வம் . எப்போதேனும் கொண்டாட்டத்தில் கொஞ்சம் போதை ஏற்றுவோர் ஒரு ரகம் .வேலைச் சூழலிலின் கடுமை காரணமாக கொஞ்சம் மதுவை நாடுவோர் இன்னொரு ரகம் . குடிப்பதற்காகவே நட்பு வட்டம் உருவாக்கிக் கொள்வோர் இன்னொரு ரகம் .சோகம் ,மகிழ்ச்சி என காரணம் சொல்லி குடிப்போர் இன்னொரு ரகம் . குடியில் மூழ்கி வீழந்து கிடப்போர் இன்னொரு ரகம் . எல்லோரையும் ஒற்றைச் சொல்லாய் குடிகாரர் என ஒதுக்குதல் தகாது .அது தீர்வுக்கும் உதவாது . மது வாசமே இல்லா சமூகம் என கனவு காணலாம் .பேசலாம் . ஆயின் அது வெறும் கனவாக பேச்சாகவே இன்றல்ல என்றும் இருக்கும் . ஆக மதுவுக்கு எதிராய் விழிப்புணர்வை விடாது உயர்த்திப் பிடித்தல் மட்டுமே சாத்தியம் . அதே சமயம் மதுவுக்கு அடிமையானோரை மதுநோயராய்ப் பிரித்து அறியவும் உரிய சிகிட்சை அளிக்கவும் நாம் பயில வேண்டும் . ஒருவர் குடிக்கிறார் என்பதாலேயே அவரைக் கெட்டவராகச் சித்தரித்து அவரை குடும்பத்திலும் இதர இடங்களிலும் புறக்கணிப்பதும் ; அவருக்கு உரிய நியாயங்களைக்கூட கொஞ்சமும் உறுத்தலின்றி நிராகரிப்பதும் அவரை மீட்டெடுக்க ஒரு போதும் பயன்படாது . கடும் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரை எப்படி அணுகுவோமொ அப்படி குடிநோயில் வீழ்ந்தோரை அணுகிட குடும்பத்தாருக்கே பயிற்சி தேவை . “இனி குடித்தால் வீட்டுப்படி ஏறாதே!” என மிரட்டுவது அவரை மதுக்கடையையோ அல்லது தெரு முனைகளையோ சரணடையவே உந்தித்தள்ளும் . தூங்கும் போது ஒரு பெக் குடித்துவீட்டு தூங்க வீட்டில் பிரச்சனை இல்லை எனில் தேவையற்ற அவப்பெயரை அவர் தேட வேண்டி இருக்காது .மேட்டுக்குடியிலும் இப்பிரச்சன்னையை அமுக்கமாகக் கையாண்டு விடுவர் .அடித்தட்டிலும் இதனை சமாளித்துவிடுவர் .இந்த இரண்டுக் கெட்டான் நிலையில் உள்ளோரே பெரிதும் சிக்கலாக்கி விடுகின்றனர் . எல்லோரும் குடியுங்கள் என்பதல்ல எம் வாதம் .குடிநோயில் வீழாமல் ஒவ்வொருவரையும் காக்க சமூகப் பார்வை சற்று விசாலப்பட வேண்டும் என்பதே எம் வேண்டுகோள். குடிநோய்க்கு யாரையும் தள்ளிவிடாதீர் ! Su Po Agathiyalingam
தினம் ஒரு சொல் .82 [ 27 /11/2018 ] பணம் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானதே .அதனை ஈட்ட செய்யும் தொழிலில் முழு சிரத்தை காட்ட வேண்டும் என்பதும் மெய்யே !ஆனால் அது மட்டுமே வாழ்க்கைக்கு நிறைவைத் தராது . ஒரு சிலர் வேலை ,வேலை ,பணம் ,பணம் என ஓடிக்கொண்டே இருப்பர் . குழந்தையைக் கொஞ்ச நேரம் ஒதுக்கமாட்டார் ; ஒரு பாடலை விரும்பி ரசிக்கமாட்டார் ; ஒரு சினிமாவுக்கு நேரம் ஒதுக்கி குடும்பத்தோடு சென்று களிக்கமாட்டார் .வேலை ,பணம் ,சாப்பாடு ,தூக்கம் இரவில் கொஞ்சம் தாம்பத்யம் இதுவே வாழ்க்கை என இயந்திரமாய் ஓடிக்கொண்டே இருப்பார் .இவர் இழந்தது எவ்வளவு தெரியுமா ? மொத்த வாழ்க்கையும்தான் . கல்லாவிலே உடகார்ந்திருக்கும் வியாபாரி ஒருவர் சில்லறைச் சத்தைத்தை மட்டுமே ரசிப்பார் .அவர் எதிரே பூபாளத்திலோ ,மோகனத்திலோ நெஞ்சை உருக்கும் ஒரு பாடல் பாடினாலோ , கேட்கிறவர் கால்களை எல்லாம் தாளம் போடவைக்கும் பறை முழங்கினாலோ கூட அவர் கல்லாவுக்கு வெளியே கண்ணைத் திறக்கமாட்டார் .அப்படி சிலரைப் பார்த்திருக்கிறேன் . மின் ஊழியர் சங்கத்தில் பெரும் தலைவராய் இருந்த ,கம்யூனிஸ் தோழர் து .ஜானகிராமன் அவர் நாட்குறிப்பில் மாதம் ஒரிரு நாட்கள் மனைவியோடு சினிமா . வீட்டு நிகழ்வுகள் என குறித்திருப்பார் . பொதுவாய் அந்நாட்களில் யார் அழைத்தாலும் தவிர்த்து விடுவார் .வீட்டில் இருக்கும் போது காலையில் மனைவிக்கு சின்ன சின்ன உதவிகள் செய்வார் . குடும்ப வாழ்வும் பொதுவாழ்வும் எதிர் எதிரானது என்பதை ஒப்பமாட்டார் . நேர திட்டமிடலில்தான் நமக்கு திறமைக் குறைவு .அதை சரி செய்தாலே போதும் பிரச்சனைகளை சமாளிக்க முடியும் என்பார் . வாழ்க்கை என்பதை ஒருபோதும் சம்பாதிக்கும் இயந்திரமாக்கிவிடாதீர் ! சூரிய உதயத்தை ,மாலை செவ்வானத்தை ,பூவின் சிரிப்பை , நாலு பேரோடு கலகலப்பாய் பேசி மகிழ்வதை , சின்ன சின்ன உரசல்களை தவறவிடாதீர் !இழந்த நாலுகாசை மீண்டும் ஈட்டிவிடலாம் .இழந்த நாட்களை ஒரு போதும் திரும்பப் பெற முடியாது .வாழ்வதற்காகச் சம்பாதியுங்கள் சம்பாதிப்பதற்காக வாழாதீர் ! Su Po Agathiyalingam
தினம் ஒரு சொல் .81 [ 26 /11/2018 ] சின்ன சின்ன மகிழ்ச்சியும் ,சின்ன சின்ன காயமும் இல்லாமல் வாழ்க்கை இல்லை .ஒவ்வொரு நாளும் இவற்றை நாம் எதிர்கொண்டே ஆகவேண்டும் .எப்படி எதிர் கொள்கிறோம் என்பதில்தான் வாழ்க்கையில் சுவராசியம் அடங்கி இருக்கிறது . பயணத்தின் போது எதிர் வரிசையில் அம்மாவின் தோளில் சாய்ந்தபடி அந்த பிஞ்சு பூவாய் விரிக்கும் புன்னகை பெருமகிழ்ச்சி . அலைபேசியில் எதிர்பாரா விதமாய் வந்து நலம் விசாரித்த பால்ய சிநேகிதன் தந்த மகிழ்ச்சி . பஸ்ஸைக் கோட்டைவிட்டுவிட்டு அலுவலகம் செல்ல தவித்து நிற்கையில் தானாக முன் வந்து ஸ்கூட்டரில் லிப்ட் கொடுத்து உதவிய நம் தெருக்காரர் தந்த திடீர் மகிழ்ச்சி .இப்படி ஏதேனும் சந்தோஷத் துளிகள் இன்றி எந்தவொரு நாளும் நகர்வதில்லை . வீட்டில் ஏதோ ஒரு அவசரத்தில் கோபத்தில் வீசிய ஒற்றைச் சொல்லின் உறுத்தல் .வீட்டில் ,அலுவலகத்தில் ,நண்பரிடையே ,உறவுகளிடையே ,சமூக ஊடாட்டத்தில் அன்றாடம் ஏற்படும் சின்னச் சின்ன உரசலின் காயங்கள் இல்லாமல் யாரெனும் நாட்களைக் கடத்தியதுண்டோ ? சின்ன சின்ன மகிழ்ச்சியை ரசிக்கவும் சுவைக்கவும் பெறுகிற பயிற்சியில்தான் இனிமையின் இழைகள் பின்னிக் கிடக்கின்றன .ஆயினும் அதில் மட்டுமே மயங்கிவிட்டால் வாழ்வின் மெய்யான விடுதலையை இனங்காணத் தவறிவிடுவோம் மின்மினி வெளிச்சத்தையே கடவுளின் பெரும் கருணையெனச் சொல்லிச் சொல்லி வாழ்வில் ஆழ அகலங்களை தரிசிக்கவிடாமல் தடுத்துவிடுவார்கள் . மின்மினியை ரசிக்கவும் சூரியனை உதிக்கச் செய்யவும் முயலுவதே வாழ்க்கையாகும் . அதேபோல் சின்ன சின்ன காயங்களை ஊதிப் புறந்தள்ளத் தெரியாவிடில் வாழ்க்கை நரகமாகிவிடும் . ஆயினும் சில காயங்கள் லேசாக இருப்பதுபோல் இருப்பினும் பெரும் பாதிப்பை உருவாக்கிவிடும் .ஆகவே எதைப் புறந்தள்ள வேண்டும் ,எதை எச்சரிக்கையோடு கையாள வேண்டும் என்பது வாழ்வில் பெரும் பயிற்சியாகும் . காயமோ சந்தோஷமோ சின்னதோ பெரிதோ அதனை எடைபோட்டு எதிர்கொள்ளும் பயிற்சியை பள்ளியிலோ கல்லூரியிலோ கற்க முடியாது . அனுபவ நெருப்பில் புடம் போட்டுத்தான் தேற வேண்டும் ! Su Po Agathiyalingam