தினம் ஒரு சொல் .70 [ 11 /11/2018 ]
அவர் வாயைத்
திறந்தால் பொய்தான் .பொய்யைத் தவிர அவருக்கு வேறெதுவும் பேசத் தெரியாது .இப்படி ஒரு
சிலரை அர்ச்சிக்கிறோம் . அவர் சத்திய புத்திரன் .அவர் சொன்னால் அது உண்மையாகத்தான் இருக்கும் . வாழும்
அரிச்சந்திரன் அவர் . இப்படி சிலரை சிலாகிக்கிறோம் .
முழு உண்மை .முழுப் பொய் என்பதெல்லாம் சும்மா
பேச்சுக்குத்தான் . உண்மை அப்படி அல்ல . நீங்கள் உண்மையைச் சொல்வதாயினும் அப்படியே
சொன்னால் யாரும் நம்ப மாட்டார் .ஏற்கவும்மாட்டார் .கொஞ்சம் கைச்சரக்கும் சேர்த்தே சொல்லும்
போதுதான் அந்த உண்மைக்கும் உயிர் வரும் .
ஏனெனில் நீங்கள் அறிந்தது மட்டுமே உண்மை அல்ல
; அது உண்மையின் ஒரு பக்கம் மட்டுமே ! உண்மையின் மறுபக்கத்தை நீங்கள் தேடி இருக்கமாட்டீர்கள்
. யோசித்திருக்கவும் மாட்டீர்கள் .எல்லா உண்மையையும் எல்லா இடத்திலும் பேசிவிடவும்
முடியாது . நீதி மன்றத்தில் சத்தியம் செய்யும் போதுகூட எல்லா உண்மையையும் சொல்லுகிறேன்
என்றா சத்தியம் செய்கிறோம் .இல்லையே “ நான்
சொல்வதெல்லாம் உண்மை .உண்மையைத் தவிர வேறில்லை .” அப்படி எனில் சொல்லப்படாத உண்மையும்
உண்டுதானே !
பொய் சொல்வதற்கு துணிச்சல் மட்டுமல்ல நிறைய
கற்பனையும் ஞாபக சக்தியும் வேண்டும் .ஒரே பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லி உண்மையாக்க
வேண்டும் .பொதுவாகச் சொல்வார்கள் “ கடன் வாங்குங்கள் ஞாபக சக்தி அதிகருக்கும் . ஆம்
கடன் வாங்கும் போது சொன்ன பொய் , கடனைக் கட்டாமல் தொடர்ந்து சொல்லுகிற பொய் எல்லாம்
ஒன்றோடு ஒன்றுப் பொருந்திப் போக வேண்டும் . ஆகவே சொல்லும் ஒவ்வொரு பொய்யையும் ஞாபகம்
வைத்தாக வேண்டும் .”
எல்லா பொய்யையும் நுணுகி ஆராய்ந்தால் அது ஏதோ
உண்மையின் ஒரு சிறுகூறின் மீதே பொய்யும் கட்டமைக்கப்பட்டிருக்கும் . ஆக உண்மை கலவாத
பொய்யோ .பொய் கலவாத உண்மையோ ஒரு போதும் இல்லை .அதன் விகித்தாச்சாரமே பொய் .மெய் என்பதை
இறுதியில் முடிவு செய்யும் .
நான் சொல்வது வாழ்க்கையில் நாம் பேசும் உண்மை
/பொய் குறித்ததே . சில அரசியல் வாதிகள் பேசும் பொய் உலகின் எந்த சூத்திரத்திலும் அடங்காதென்பது
தனிக்கதை !!!!
Su Po Agathiyalingam
0 comments :
Post a Comment