சொல்.71

Posted by அகத்தீ Labels:
தினம் ஒரு சொல் .71 [ 12 /11/2018 ]
பிறந்த ஊர் ,படித்த ஊர் ,வளர்ந்த ஊர் ,பணிபுரிந்த ஊர்கள் ,ஓய்வு பெற்ற ஊர் ,இப்போது வாழ்கிற ஊர் . மரணம் தழுவும் ஊர் எல்லாம் வெவ்வேறாக இருப்பதே இன்றைக்கு பலரின் வாழ்க்கை அனுபவமாக மாறிப் போயுள்ளது .இப்போது நீ எந்த ஊர்க்காரன் என்பதற்கு என்ன பதில் சொல்வது ? பெருங் கேள்வியே !

போகிற போக்கைப் பார்த்தால் மேலே ஊர் எனப் போட்டிருக்கும் இடத்தில் எல்லாம் நாடு எனப் போடும் காலமே வந்துவிடுமோ ? இன்றும்  ‘அவன் வந்தேறி இவன் வந்தேறி’ எனப் பேசித்திரியும் சிலரைப் பார்த்து சிரிப்பதா அழுவதா எனத் தெரியவில்லை .

இப்படி ஊர் ஊராய் நாடு நாடாய் பந்தடாப்படும் வாழ்க்கையில் பண்பாடும் பாரம்பரியமும் மட்டும் அப்படியே ஆடாமல் அசையாமல் குத்துக்கல்லாய் தலைமுறை தலைமுறையாய் தொடருமோ ? நாம் பிறந்த ஊரும் நேற்று இருந்தது போலவா இன்றும் இருக்கிறது .நாளையும் இப்படியேதான் இருக்குமா ?

தனிமனிதர் வாழ்விலும் சமூகத்திலும் பழக்க வழக்கம் , பண்பாடு எல்லாம் கலந்துகொண்டும் மாறிக்கொண்டும்தான் இருக்கும் . வரலாறு நெடுக அப்படித்தான் இருந்தது .ஆயினும் அது மெதுவாய் நத்தையைப்போல் நகர்ந்து கொண்டிருந்தது ,இப்போதைய சூழல் சூறாவழியாய்த் தூக்கிப் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது .

நீங்களோ நானோ எந்த ஒரு சமூகமோ இதிலிருந்து தப்பிக்கவே முடியாது . ஆயினும் எதை எங்கு போனாலும் சுமந்து சென்று அடுத்தவருக்கு பெருமையாய்க் காட்ட வேண்டும் ; ஈர்க்க வேண்டும் என்பதில்தான் நம் பண்பாட்டு அளவுகோல் இறுதியில் தொக்கி நிற்கிறது .

போகிற இடமெல்லாம் சாதியத்தை ,பாலின ஒடுக்குமுறையை , மூடத்தனங்களை ,மதவெறி சம்பிரதாயங்களை ,கேள்விமுறையற்று சரண்டைவதை சுமந்து செல்லுகிற எவரும் மனிதப் பிறவி என்பதன் பொருளைச் சிதைத்துச் சீரழித்தவரே ஆவர் .

மனிதராய் வாழ்ந்திட மனதை விசாலமாக்க வேண்டிய காலம் .அறிவை ஆழ உழ வேண்டிய காலம் . நுனிப்புல் மேய்ந்து பழம்பஞ்சாங்கக் கதை பேசி திரிந்தால் வரலாறு மன்னிக்காது .தண்டிக்கும் .
Su Po Agathiyalingam0 comments :

Post a Comment