சொல்.78

Posted by அகத்தீ Labels:


தினம் ஒரு சொல் .78 [ 23 /11/2018 ]

பேச்சுத் துணை இல்லாத தனிமை எவ்வளவு கொடுமை என்பதை முதியோர்களைக் கேட்டுப்பாருங்கள் . ரயிலில் பயணம் செய்யும் போது மாலை வேளைகளில் ரயில்வே பிளாட்பாரப் பெஞ்சில் நாலய்ந்து முதியோர்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம் .மகிழ்ச்சியான அந்தப் பொழுதுக்காக பகல் முழுவதும் அவர்கள் வீட்டுக்குள்ளோ திண்ணையிலோ காத்துக்கிடப்பார்கள் .பெண்களுக்கு அந்த வாய்ப்பும் குறைவு.கிட்டத்தட்ட இல்லை.

குழந்தைகள் உலகம் போன்றதே முதியோர் உலகம் .இரண்டும் தனித்துவமானது .ஞாபக சக்தியை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வரும் அவர்கள் ; வாழ்வில் ஏதோ ஒரு காலகட்ட நினைவோடு தேங்கிப் போவதும் , திரும்பத் திரும்ப அதையே பேசிக்கொண்டிருப்பதும் வாடிக்கை .கேட்பவர்களுக்குச் சலிப்பாக இருக்கும் .ஆனால் அதுவே அவர்களுக்கு சந்தோஷம் தரும் என்பதை அறிவோமா ?

பிறந்த ஊரையோ ,பணி செய்த ஊரையோ விட்டுவிட்டு பிள்ளைகளோடு மொழி தெரியாத வெளிமாநிலத்திலோ வெளிநாட்டிலோ வாழநேரிடும் முதியோர் துயரம் தனி . பேச்சு சதந்திரம் மட்டுமல்ல ,நடமாட்ட சுதந்திரமும் கட்டுப்படுத்தப்பட்டுவிடும் .அவர்களுக்கு புத்தகக் காதல் இருப்பின் கொஞ்சம் பிழைப்பர் .இல்லையேல் தொலைகாட்சிப் பெட்டியே கதி .அங்கும் ரிமோட்டு பேரப்பிள்ளைகள் கையில் . இப்போது அலைபேசியே அவர்களுக்கு வரம் . விரும்பிய யாரிடமேனும் பேசிக்கொண்டோ , எதையேனும் பார்த்துக் கொண்டோ பொழுதை நகர்த்தலாம் .அறிவியல் தொழில் நுட்பத்திற்கு நன்றி !

எப்படி பொதுவெளி மறுக்கப்பட்ட பெண்கள் கோயில் ,சடங்கு ,சம்பிரதாயம் எனும் நுகத்தடியில் பூட்டப்பட்டு ஒரு செக்குமாட்டு வாழ்க்கைக்கு பழக்கப்படுத்தப் படுகிறார்களோ , அதேபோல் ஆன்மீக ஈடுபாட்டில் முதியோர்களும் பிணைக்கப் படுகிறார்கள். பாலின வேறுபாடின்றி முதியோர்களின் அனுபவமும் திறமையும் விருப்ப ஈடுபாடும் அறிந்து ஆக்கபூர்வ வழியில் செலுத்த நம் சமூகம் எப்போது பக்குவப்படும் ?

இன்று மக்கள் தொகையில் இளைஞர் அதிகம் .இளைஞர் இந்தியா என மகிழ்கிறோம் .இன்னும் இருபதே வருடங்களில் நிலைமை தலைகீழாகும் .  “முதியோர் இந்தியா” ஆகிவிடும் .ஆய்வுகள் அப்படித்தான் சொல்கின்றன . எனவே இப்போதே நாளைக்காக விழிப்பீர் இளைஞர்களே! முதியோர்கள் பக்கம் உங்கள் காதுகளை கொஞ்சம் சாய்ப்பீர்! !
Su Po Agathiyalingam



0 comments :

Post a Comment