சொல்.72

Posted by அகத்தீ Labels:
தினம் ஒரு சொல் .72 [ 16 /11/2018 ]
எதுவாயினும் வீட்டிலுள்ள அனைவரையும் கூட்டிப் பேசுவதும் ; முடிவெடுப்பதும் மிகவும் ஆரோக்கியமான நடைமுறை .ஆயின் கிட்டத்தட்ட நம் சமூக வாழ்வில் இங்ஙனம் நடக்கும் குடும்பங்களைப் பார்ப்பதே அபூர்வம் .குடும்பத் தலைவரின் சொல்லுக்கு மறு பேச்சின்றி ஒப்புக் கொள்வதே சிறந்த குடும்ப வாழ்வின் இலக்கணம் என நமக்கு சொல்லிச் சொல்லி வளர்த்திருக்கிறார்கள் .

ஆக ,குடும்ப ஜனநாயகம் என்ற சொல்லே குடும்பத்தில் குழப்பத்தை விளைவிக்கும் ஒரு வில்லனாகவே பார்க்கப்படுகிறது . அதுவும “ பெண்ணுக்கு என்ன உலக ஞானம் இருக்கும் ,, நாட்டு நடப்புத் தெரியுமா ,.. ஆம்பளைதான் அனைத்தும் அறிந்தவன் , நாலு யோசித்துத்தான் முடிவெடுப்பான் .அதற்கு கட்டுப்பட்டு வாழ்ந்தாலே மகிழ்ச்சி பொங்கும் .” இப்படித்தான் பொதுபுத்தியில் காலங்காலமாய் உறைந்து போயுள்ளது .இதை வழித்தெறிவது அவ்வளவு சுலபமல்ல .ஆனாலும் அதற்கான உரையாடலை இப்போதே துவங்கியாக வேண்டும் . வேறுவழியில்லை .

இங்கேதான் பிரச்சனை .முதலாவதாக எந்தப் பிரச்சனையை எடுத்தாலும் எல்லோரும் ஒரே போல் தெளிவாக இருப்பார்களோ ? மாட்டார்கள் .ஏனெனில் சமூகத்தோடு உள்ள உறவும் , வாய்ப்பும், ஊடாட்டமும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும் போது பார்வையும் மாறுபடத்தான் செய்யும் . அடுத்து எல்லோரும் பிரச்சனையை பரந்த மனதோடு எல்லோரும் அணுகுவார்களா ? அதிலும் ஒவ்வொரு பிரச்சனையிலும் ஒவ்வொருவரோடும் உள்ள விருப்பும் வெறுப்பும் சேர்ந்தே வினையாற்றும் . ஆக ,ஒத்த கருத்தோடு எல்லோரும் ஒரு முடிவெடுக்க இயலுமா ? சுலபமே அல்ல . என்ன செய்வது ?

அவசரமாக அன்றே முடிவெடுக்க வேண்டியவை தவிர மற்றவைகளை பற்றி ஒரே நாளில் ஏன் முடிவெடுக்க வேண்டும் . பிரச்சனையை முன்வைத்து அவரவர் கருத்தைச் சொல்லிவிடுங்கள் . முடிவெடுப்பதை மட்டும் தள்ளி போடுங்கள் .
வீட்டுக்குள் ஆளுக்கு ஆள் விவாதிப்பார்கள் .நல்லதும் கெட்டதும் வெளிப்படும் .ஒவ்வொருவரும்  அடுத்தவர் கோணத்திலும் ஒரு முறை யோசித்துப் பாருங்கள் . நிச்சயம் இங்கே ஆறின கஞ்சி பழங்கஞ்சியாக  அல்ல பக்குவப்பட்ட முடிவாக முகிழ்க்கும் !

நாட்டில் ஜனநாயகமே இன்னும் சரியாக வளரவில்லை .குடும்பத்தில் பூத்தா குலுங்கும் ? பொறுமையோடு விதையுங்கள் . நீர் பாய்ச்சுங்கள்  . உரம் போடுங்கள் .நிச்சயம் வருங்காலத்தில் மெல்ல பயன் தரத் துவங்கும் .
 Su Po Agathiyalingam0 comments :

Post a Comment