சொல்.76

Posted by அகத்தீ Labels:




தினம் ஒரு சொல் .76 [ 21 /11/2018 ]

சாலை விதிகளை மதிப்பதும் . பணியிட பாதுகாப்பு விதிகளை பின்பற்றுவதும் தவிர்க்கக் கூடாத கடமை .பொதுவாக இவற்றில் நாம் காட்டுகிற அலட்சியம் சகிக்கமுடியாத அளவு உள்ளது . தண்டவாளத்தை கடக்க அந்த இடம் உகந்தது அல்ல என ஒரு தடுப்பு சுவர் கட்டியிருந்தால் அதில் சுரங்கம் அமைத்தோ எகிறிகுதித்தோ தாண்டி நம் வீரத்தைக் காட்டுவோம் .விபத்தை வாங்குவோம் .

சாலை விதிகளை நாம் மதிக்கிற லட்சணத்தை எல்லோரும் அறிவர் .சாலை விதி என்பது பயணத்திற்கு தடையோ இடையூறோ அல்ல ஒரு ஒழுங்கு .அதைப் பற்றி ஒழுகின் பெருமளவு விபத்தைத் தவிர்க்கலாம் .

தண்டனைக்குப் பயந்து சாலை விதிகளை பின் பற்றுவது வேறு ; சுய ஒழுங்காக ஒரு பண்பட்ட மனிதனாக பின்பற்றுவது இன்னொன்று .முன்னதுக்கே முணுமுணுப்போரிடம் பின்னதை எப்படி எதிர் பார்ப்பது ?

நான் கறார் பேர்வழி .சாலை விதியில் இம்மியும் பிசகமாட்டேன் என்பது சரி .ஆனால் எதிரே வருகிறவர் எதையும் மதிக்காமல் வரும் போது நீ மட்டும் விதியில் கெட்டியாக ஒட்டி நின்றால் உன் தலைவிதி தலைகீழாகிவிடுமே ! விபத்து என்பது நாம் மீறுவதாலும் நிகழும் ,நாம் ஒழுங்காக இருந்தாலும் எதிரில் வருவோர் பிசகினும் விபத்தாகும் . ஆகவே விதிகளை மதிப்பதும் தேவை ; நெருக்கடி நேரத்தில் சற்று மீறலும் தேவை .விதிகளை மதிப்பதும் மீறுவதும் பாதுகாப்புக்காகவே இருக்க வேண்டும் .

சாலை பாதுகாப்பு விதிகள் என்பது வாகன ஓட்டிகளும் ,பாதசாரிகளும் மட்டுமே பின்பற்ற வேண்டிய ஒன்றென எண்ணல் தீது ; சாலை பராமரிப்பு , ஆக்கிரமிப்பு அகற்றல் , வரைமுறையற்ற வாகனப் பெருக்கம் ,பொதுப்போக்குவரத்துக் குறைபாடு ,முறையான இதர ஏற்பாடுகள் அனைத்தும் உள்ளடக்கியதே .இதில் அரசு காட்டும் அக்கறையின்மையே சாலை பாதுகாப்பின் முதல் வைரி .

சமூகப் பொறுப்போடு சாலை பாதுகாப்பு குறித்த உரையாடலை எப்போது தொடங்கப் போகிறோம் ? இப்போது அரசு செய்யும் பிரச்சாரம் அனைத்தும் ஒரு பக்கப்பார்வை அன்றோ !
Su Po Agathiyalingam



0 comments :

Post a Comment