சொல்.68

Posted by அகத்தீ Labels:



தினம் ஒரு சொல் .68 [ 10 /11/2018 ]
சிரிப்பு ஓர் யோகா ,மருத்துவம் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. அது மெய்யே !அழுகையும் அப்படித்தானே எனில் ஏற்கத் தயங்குவர் .ஆயின் அதுவும் மெய்யே !இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களே !

வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பது சரியே ! வாய்விட்டு அழுதால் மனசு லேசாகும் என்பதும் சரியே ! சிரிப்பும் அழுகையும் மனித உளநலனுக்கு அவசியமான இரண்டு வடிகால்கள் . ஆனால் இரண்டையும் இரு பாலருக்கும் உரியதாகப் பார்க்கும் சமூக உளவியல் உளதா ? ஐயமே!

பொம்பள சிரிச்சா போச்சு ,புகையில விரிச்சா போச்சு என பழமொழி சொல்லியே வாயை மூடிவிடுவர் . பொம்பள சிரிக்கிற சத்தம் வெளியே கேட்கக்கூடாதென இப்போதும் சொல்லும் ஆணாதிக்க மனிதர் உண்டு . பெண்ணின் சிரிப்புக்கு விதவிதமாய் சாயம் பூசத் தயங்காத நாடு இது . திரெளபதி சிரித்ததால்தான் மகாபாரத யுத்தம் என்று கதைவிடுவோர் உண்டு . ஆக சிரிப்பை ஆணுக்கு உரியதாக கிட்டத்தட்ட வகைப்படுத்திவிட்ட சமூகம் பெண்ணுக்கு என்ன தந்தது ?

நீ ஆம்பளயா லட்சணமா இரு ! பொம்பள மாதிரி கண்ணக் கசக்காதே . இதில் ஆண் அழக்கூடாது என்று மட்டும் சொல்லவில்லை .அழுகை பெண்ணுக்குரிய இழிந்த குணம் எனவும் சித்தரிக்கப்படுகிறது . பொதுவாய் வாய்விட்டு அழுவது பெண்ணின் இயல்பு போலவும் அமுக்கமாய் அழுவதே ஆணின் இயல்பு போலவும் ஒருவித மயக்கம் விதைக்கப்பட்டுள்ளது .

ஆணோ பெண்ணோ வாய்விட்டு சிரிப்பதும் ; வாய்விட்டு அழுவதும் இயல்பானது .தேவையானது . இதில் பாலின பேதம் கற்பித்தல் மடமை .மனதில் தேக்கிவைக்கப்பட்ட உணர்ச்சி பதட்டத்தை விசிறிவிடும் , இரத்தக் கொதிப்பை அதிகரிக்கும் .

ஆனால் எங்கு சிரிப்பது ,எங்கு அழுவது ,எதற்குச் சிரிப்பது ,எதற்கு அழுவது என்பதில்தான் வாழ்வியல் நுட்பம் அடங்கி இருக்கிறது . சிரிக்கக்கூடாத இடத்தில் சிரிப்பதும் ,அழக்கூடாத இடத்தில் அழுவதும் நம்மை பலகீனராக்கிவிடும் . சிரிப்பும் அழுகையும் ஆரோக்கியமான உணர்ச்சிகளே ; அது நம் கட்டுப்பாட்டில் இருக்கும்வரை .
Su Po Agathiyalingam



0 comments :

Post a Comment