சொல்.75

Posted by அகத்தீ Labels:




தினம் ஒரு சொல் .75 [ 20 /11/2018 ]
அவர் பெரிய ஈகோ பேர்வழி , இவருக்கு ஈகோ ரொம்ப ஜாஸ்தி  என பலரைப் பற்றி நாம் விமர்சிக்கிற ஒவ்வொரு நொடியிலும் நம் ஈகோ அம்மணமாய் ஆட்டம் போடுவதை அறியாமல் இருக்கிறோம் .

ஈகோ எனப்படும் அகந்தை ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் மிகப்பெரும் சிக்கல் .தனக்கு ஈகோ எல்லாம் கிடையாது என ஒவ்வொருவரும் சொல்லிக் கொள்வர் .ஆனால் ஈகோ இல்லாத மனிதர் கிட்டத்தட்ட இல்லை . மத்தியதர மக்களிடம் அதிகம் தலைதூக்கும் .அடித்தட்டு உழைப்பாளிகளிடம்  சொற்பமாய் தலைநீட்டும் .பொதுவாய் ஒருவரிடம் அது ஓங்கி ஆட்டுவிக்கும் , இன்னொருவரிடம் அவ்வப்போது தலைதூக்கும் . அவ்வளவே!

ஈகோவை தவிர்க்க நிறைய உபதேசங்கள் கேட்டுச் சலித்துவிட்டோம்.தியானம் ,யோகா , ஆன்மீகம் இவையே ஈகோவுக்கு ஆகச் சிறந்த மருந்தெனச் சொல்லி விற்பர் .நடைமுறையில் அது எவ்விதத்திலும் ஈகோவைக் கட்டுப்படுத்தவில்லை என்பதை சாமியார்களும் ,மதவெறியர்களும் ஆன்மீக அன்பர்களும் தினம் தினம் ஒவ்வொரு செயலிலும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர் .

உளவியல் நிபுணர்களின் கவுன்சிலிங்கூட பலன் தருவதாய் தோற்றம் காட்டி மறைகிறது . முற்போக்காளர் ,புரட்சியாளர் இடையிலேகூட ஈகோ பெரும் சவால்தான் . கியூபாவின் பெரும் தலைவர் தோழர் ஃபிடல் காஸ்டிரோ வழங்கிய ஒரு நெடிய நேர்காணலில் இதனை பகீரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார் .

அப்படியாயின் இது தீர்வற்ற பிரச்சனையா ? இல்லை . தேங்குகிற குட்டையில் நாற்றம் அதிகம் இருக்கும் . ஓடுகிற தண்ணிக்கு சூதகம் இல்லை . ஒரு இலக்கை நோக்கி அர்ப்பணிப்போடு இயங்கும் போது ஈகோ பெரிய அளவு தலைநீட்டாது ,அப்படியே நீட்டிடினும் எதிரிலிருக்கும் சவால் அதனை மட்டுப்படுத்திவிடும் .

தனி நபர் வாழ்விலும் ஒரு இலக்கை நோக்கி ஓடும் போது . இயல்பாகவே கவனம் அதைநோக்கி குவிமையப்படும் போது ஈகோ கொஞ்சம் அடக்கி வாசிக்கும் . எல்லோருக்கும் சம வாய்ப்பும் சமூக சமநிலையும் மிக்க புதிய சமூகம் பிறக்கும் வரை ஈகோவுக்கு எதிராக நீங்களும் நானும் போராடிக்கொண்டேதான் இருக்க வேண்டும் .குளிக்க குளிக்க மீண்டும் மீண்டும் அழுக்கு சேரத்தான் செய்யும் ,மீண்டும் குளிக்கத்தான் வேண்டும் .ஈகோவுக்கும் அதேதான் .
Su Po Agathiyalingam



0 comments :

Post a Comment