சொல் ..66

Posted by அகத்தீ Labels:


தினம் ஒரு சொல் .66 [ 8 /11/2018 ]

 “இரண்டு நாளா வயிற்று வலி…” என சொன்னதும் , “ சார் ! வயிற்று வலின்னு சும்மா இருந்திடக்கூடாது … இப்படித்தான் என் மச்சான் அசால்ட்டா விட்டான் …கேன்சர் முற்றி ஆயுளே முடிஞ்சு போச்சு …” இப்படி மிரட்டலோடு உடனே ஸ்பெஷலிஸ்டை சந்திக்க ஆலோசனை சொல்லி முகவரியும் தருவார் சில பேர் .

சாதாரண பிரச்சனைக்குக் கூட ஸ்பெஷலிஸ்டைப் பார்ப்பதும் ; டாக்டர் சொல்லாவிட்டாலும் கூட அந்த டெஸ்ட் பார்ப்பமோ இந்த டெஸ்ட் பார்ப்போமா என அலப்பறை செய்வது இப்போது பேஷனாகிவிட்டது .

உலகில் எந்த நாட்டிலும் எடுத்தவுடன் ஸ்பெஷலிஸ்டை பார்க்க மாட்டார்கள் .பார்க்கவும் முடியாது . குடும்ப டாக்டர் எனப்படும் பொது மருத்துவர் முதற்கட்ட சிகிட்சை அளித்தபின்னரே ,அவர் சிபாரிசு அடிப்படையில் மட்டுமே ஸ்பெஷலிஸ்டைப் பார்க்க முடியும் .

 “அது சரி ! இங்கு இவருக்கும் அவருக்குமே அண்டர் ஸ்டேண்டிங்கில் கமிஷன் வியாபாரம்லா நடக்குது…” என நீங்கள் சொல்வது சரிதான் .ஆயினும் நம் மொத்தக் குடும்பமும் ஒரே டாக்டரிடம் நீண்டநாள் அனைத்துக்கும் சிகிட்சை பெறும்போது .அவருக்கு நம்மைப் பற்றிய முழு ஞானம் இருக்கும் , நமக்கும் நம்பிக்கை இருக்கும் .இச்சூழலில் நீங்கள் சொன்னது போல் நடக்கும் வாய்ப்பு குறைவுதானே !முதலில் குடும்ப டாக்டரிடம் யோசனை பெறும் பழக்கத்தை வளர்ப்போம் .

என் வீட்டருகே உள்ள ஒருவரின் மனைவி திடீரென உடல் நலிவுற்ற போது டாக்டரிடம் அழைத்துப் போக நான் உதவினேன் . டாக்டரிடம் அவர் கணவர் இதுவரை அப்பெண் பெற்ற சிகிட்சைகள் ,சாப்பிட்ட மாத்திரைகள் குறித்து ஒரு குறிப்பு நோட்டுப் புத்தகத்தைத் தந்தார் . புதிய டாக்டர் எனினும் சரியாக வழிகாட்ட அது உதவியது .

இப்படி  ‘மருத்துவ ஜாதகம்’ எழுதி வைக்கும் பழக்கம் பல நாடுகளில் பண்பாடாகவும் பயிற்சியாகவும் மாறிக்கொண்டிருக்கிறது . நம் வாழ்வில் பைசாவுக்கு பிரயோசனம் இல்லாததும் ; திருமணத்தில் மட்டும் அளவுக்கு அதிகமாக மூக்கை நுழைத்துக் கெடுப்பதுமான ஜாதகத்தை ஜோதிடர் மூலம் எழுதித் தொலைக்கிறோம் .அதற்குப் பதில்  ‘மருத்துவ ஜாதகம்’ எழுதிவைக்கும் பயிற்சியை எப்போது பெறப்போகிறோம் ?

Su Po Agathiyalingam


0 comments :

Post a Comment