சொல்.73

Posted by அகத்தீ Labels:




தினம் ஒரு சொல் .73 [ 18 /11/2018 ]

 “பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது” என்றொரு சொலவடை நம்மிடம் புழக்கத்தில் உண்டு . வாழ்க்கையில் பல நேரம் நாம் ஒரு நோக்கத்தோடு திட்டமிடும் செயல்கள் நேர் எதிர் விளைவை உருவாக்கிவிடுவது உண்டு .நம் திட்டமிடலில் கோளாறு இருந்திருக்கலாம் , நம் இலக்கே பிழையாக இருந்திருக்கலாம் ,நம் திறமைக் குறைவு காரணமாக இருந்திருக்கலாம் இப்படி ஏதோ ஒரு காரணம் சார்ந்து நம் செயலில் விளைவு நம் விருப்பத்துக்கு எதிராய்ப் போயிருக்கலாம் . இப்போது என்ன செய்வது என்பதே கேள்வி .

ஒன்று குரங்கை ஏற்க மனது பக்குவப்பட வேண்டும் அல்லது மீண்டும் பிள்ளையார் பிடிக்க முயல வேண்டும் .முன்னது எளிதானது ஆனால் தவறானது ,பின்னது சவாலானது ஆனால் சரியானது  .இடிந்து போய் ஆட்டையை கலைப்பதையும் சிலர் செய்யக்கூடும் .ஆக ஒவ்வொரு தோல்வியும் நமக்கு சில வாசல்களை நமக்குத் திறக்கிறது .எந்த வாசலைத் திறக்கிறீர்கள் என்பதில்தான் உங்கள் சாமர்த்தியமும் உறுதியும் அடங்கி இருக்கிறது .சுற்றி சுற்றி வந்த இடம் எது ? மன உறுதி ,ஊக்கம் இவையே  வெற்றியின் சாவி .

 “வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் /உள்ளத் தனையது உயர்வு.”என்பது குறள் தண்ணீரின் அளவுதான் அதில் மலர்ந்துள்ள தாமரைத் தண்டின் அளவும் இருக்கும். அதுபோல மனிதரின் வாழ்க்கையின் உயர்வு அவர் மனத்தில் கொண்டுள்ள ஊக்கத்தின் அளவே இருக்கும் என்பர் உரையாசிரியர் .

எல்லாம் சரி ! தண்ணீரின் அளவை எது தீர்மானிக்கும் . குளத்தின் ஆழம் ,கரையின் உறுதி ,வெள்ளம் வரும் வாய்க்கால் ,பெய்யும் மழை இன்னும் பல .  ‘வெள்ளத்தனைய’ என வள்ளுவர் சொன்னதுக்கு இவ்வளவு ஆழ்ந்த பொருளிருப்பதை அறியாதவரை ; நாம் பிடிக்கிற பிள்ளையார் குரங்காகத்தான் மாறும் .

ஆகவே சரியான சமூகப் பார்வையோடு உங்களின் திட்டமிடலும் செயலும் இணையும் போது மட்டுமே இலக்கை நோக்கிய அடிவைப்பு உறுதியானதாக மாறும் .உள்ளத்து ஊக்கம் எனப்படுவதே சமூக ஞானத்தோடு செதுக்கப்பெறுவதே என்பதை நாம் புரிந்தால் நம் தலைமுறை விழிக்கும் !
Su Po Agathiyalingam



0 comments :

Post a Comment