சொல்.65

Posted by அகத்தீ Labels:




தினம் ஒரு சொல் .65 [ 7 /11/2018 ]

நம் வீட்டிற்கு திடீரென்று நாலய்ந்து விருந்தினர் வந்துவிட்டால் , உதடு  ‘வாங்க வாங்க’ என வரவேற்றாலும் மனசுக்குள் ஆயிரம் பிரச்சனைகள் அலை மோதும் . அவர்களுக்கு என்ன உண்ணத் தருவது , எத்தனை நாள் தங்குவார்கள் , நாம் ஏற்கெனவே திட்டமிட்ட பணிகள் என்ன ஆகும் , சொல்லாமல் கொள்ளாமல் படையெடுத்து வந்ததின் காரணம் என்னவாக இருக்கும் இப்படி பல கேள்விகள் .

பட்டென்று கேட்கவும் முடியாது . தள்ளவும் முடியாது . பெரும் தவிப்புதான். .ஆனாலும் முகத்தில் எந்தக் குழப்பத்தையும் காட்டாமல் இன்முகம் காட்டி நடித்தாக வேண்டும் .எல்லோருக்கும் இந்த அனுபவம் ஏதோ ஒரு விதத்தில் இருக்கும் .

எவ்வளவு நெருங்கிய உறவினராக ,நண்பராக இருப்பினும் செல்லுவதற்கு முன்பே அவர்கள் அந்த நாளில் இருப்பார்களா ,நம் வருகைக்கு அந்த நாள் வசதியாக இருக்குமா , எதற்கு வருகிறோம் ,எத்தனை நாள் தங்க வேண்டி இருக்கும் என்பதை பேச்சுவாக்கில் சொல்லிவிடுவது நல்லது அல்லவா ?

நம் வருகை அவர்களுக்கு சுமையாக இருக்குமா மகிழ்வாக இருக்குமா என்பதை ஓரளவு கணித்து திட்டமிட்டு செல்வதே நல்லது . திடீரெனப் போய் அவர்களையும் கஷ்டப்படுத்தி ,நீங்களும் காயப்பட்டு ,உறவிலும் முறுகல் ஏற்பட்டு வருந்துவதைவிட முன்பே குறிப்பறிந்து போதல் நல்லதல்லவா ?

விருந்தோம்பல் உயரிய பண்புதான் ,ஆனால் இன்றைய இயந்திரமாகிவிட்ட வாழ்க்கைச் சூழலில் , வீட்டின் இடவசதி ,பணிச்சூழல் , ஏனைய நெருக்கடிகள் ஒவ்வொருவர் கழுத்தையும் நெரித்துக் கொண்டிருப்பதை மறந்துவிடக் கூடாது .

விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள் என நம் முன்னோர்கள் அனுபவித்துச் சொன்னது சரியே ! இன்றைக்கு இருப்பத்தி நாலுமணி நேரம் என்பதுகூட அதிகமே ! எல்லாவற்றிலும் நிச்சயம் விதிவிலக்குகள் உண்டு ஆயினும் அதை விதியாகக் கொள்ளக்கூடாது அல்லவா ?
Su Po Agathiyalingam





















































































































































































0 comments :

Post a Comment