சொல்.77

Posted by அகத்தீ Labels:


தினம் ஒரு சொல் .77 [ 22 /11/2018 ]
 “போதும் என்ற மனமே பொன் செயும் மருந்து” என அடிக்கடி நாம் சொல்கிறோம் .அவருக்கு எவ்வளவு கொடுத்தாலும் , செய்தாலும் திருப்தியே வராது ,அவர் இயல்பு அப்படி என சிலரைப் பற்றித் தீர்ப்பு எழுதுகிறோம் .

வாழ்க்கையில் பேராசை கொள்ளாமல் ,நுகர்வு வெறியில் மூழ்காமல் போதுமென திருப்தியோடு வாழப்பழகுவது அவசியத் தேவையே . குடும்ப வாழ்வில் தேவையற்ற பதற்றத்தை தவிர்க்கவும் ,இருப்பதைக் கொண்டு திருப்தியாய் வாழப் பழகுவது ஒரு குறிப்பிட்ட எல்லைவரை அவசியமே .ஆனால் அங்கேயே முடங்கிப்போவதுதான் ஆபத்து .

போதுமென்ற மனமும் ,திருப்தி மனோபாவமும் வளர்ச்சியின் முக்கிய தடைகல் என்பர் .ஆம் , மேம்பட்ட வாழ்க்கையைக் கனவு காண்பதும் , அதற்காக முயற்சி செய்வதும் மட்டுமே முன்னோட்டு உந்தித்தள்ளும் கிரியா ஊக்கியாகும் .

“ஆண்டவன் இன்றைக்கு ஏதோ கஞ்சி கொடுத்திருக்கிறான் ,குந்தக் குடிசை கொடுத்திருக்கிறான் அதற்கு நன்றி சொல்லி திருப்தியாய் வாழ்வோம்.” என ஆன்மீகவாதிகள் சொல்வது சமூக ஏற்ற தாழ்வை – அதன் காரணங்களை – தீர்வை யோசிக்க விடாமல் முடக்கும் மயக்கு வார்த்தைகளே !

மரவுரியோடும் ,மரப் பொந்தோடும் ,சிக்கிமுக்கிக் கல்லோடும் மனித குலம் திருப்தி கொண்டிருக்குமானால் ; இன்றைக்கு நாம் அனுபவிக்கிற எதுவும் கிடைத்திருக்காது .ஆசைப் படுவதும் .அதனைக் கனவு காண்பதும் ,அதனை அடையப் போராடுவதுமே மனித இயல்பு . பேராசை கூடாது என்கிற அர்த்தத்தில் திருப்தி என்பது சரி .ஆனால் அது தேங்கிய குட்டையில் நீச்சலடிப்பதாய் ஆகிவிடக்கூடாது .
Su Po Agathiyalingam



0 comments :

Post a Comment