முதலில் அதற்குப் பதில் சொல் !!!

Posted by அகத்தீ Labels:

முதலில் அதற்குப் பதில் சொல் !!!
இந்து ,முஸ்லீம் ,கிறுத்துவர் ,புத்தர் ,தலித்,ஒடுக்கப்பட்டோர் ,நாத்திகர் .இதரர் என அனைவரின் வியர்வையில்,மூளையில் உருவானதே
நீ நடக்கிற சாலை… இனி நீஅதில் நடக்காதிருப்பாயாக
இந்து ,முஸ்லீம் ,கிறுத்துவர் ,புத்தர் ,தலித்,ஒடுக்கப்பட்டோர் ,நாத்திகர் .இதரர் என அனைவரின் வியர்வையில்,மூளையில் உருவானதே
நீ உடுத்துகிற உடை… இனி உடை உடுத்தாமல் அம்மணமாய் அலைவாயாக
இந்து ,முஸ்லீம் ,கிறுத்துவர் ,புத்தர் ,தலித்,ஒடுக்கப்பட்டோர் ,நாத்திகர் .இதரர் என அனைவரின் வியர்வையில்,மூளையில் உருவானதே
நீ பயணிக்கும் வாகனம் … இனி அதில் பயணிக்காமல் புஷபவிமானத்தை தேடுவாயாக
இந்து ,முஸ்லீம் ,கிறுத்துவர் ,புத்தர் ,தலித்,ஒடுக்கப்பட்டோர் ,நாத்திகர் .இதரர் என அனைவரின் வியர்வையில்,மூளையில் உருவானதே
நீ உண்ணும் ஒவ்வொரு கவளம் உணவும் .. இனி உண்ணா நோன்பு இருப்பாயாக
இந்து ,முஸ்லீம் ,கிறுத்துவர் ,புத்தர் ,தலித்,ஒடுக்கப்பட்டோர் ,நாத்திகர் .இதரர் என அனைவரின் வியர்வையில்,மூளையில் உருவானதே
உன் நோய் தீர்க்கும் மருந்து … இனி கோமூத்திரமே கதியென நோயில் அழுந்துவாயாக
இந்து ,முஸ்லீம் ,கிறுத்துவர் ,புத்தர் ,தலித்,ஒடுக்கப்பட்டோர் ,நாத்திகர் .இதரர் என அனைவரின் வியர்வையில்,மூளையில் உருவானதே
நீ பயன் படுத்தும் ஒவ்வொரு பொருளும் … இனி எதையும் பயன் படுத்தாமல் தன்னந்தனியாய் பசியோடும் நோயோடும் பஜகோவிந்தம் பாடுவாயாக
நீ அகோரியோ ,துறவியோ, யோகாவியாபாரியோ , இந்து புனிதரோ யாராக வேண்டுமானாலும் இரு …
இந்து ,முஸ்லீம் ,கிறுத்துவர்,புத்தர் ,தலித்,ஒடுக்கப்பட்டோர் ,நாத்திகர்,இதரர் என்போர் வியர்வையில் நனையாத மூளையில் யோசிக்காத ஏதேனும் ஒற்றைப் பொருள் இருக்குமாயின் அதனைத் தாராளயாய்ப் பயன்படுத்திக் கொள்ள சாஸ்திரம் தடைவிதிக்கவில்லை .
எல்லோரையும் தீண்டிவிட்டு உன்னிடம் வரும் காற்றை நீ எப்படித் தடுக்கப் போகிறாய் … முதலில் அதற்குப் பதில் சொல் !!!!!
சு.பொ.அகத்தியலிங்கம்
1 ஆகஸ்ட் 2019.

இதயத்தில் ஈரமும் நம்பிக்கையும்

Posted by அகத்தீ Labels:இதயத்தில் ஈரமும் நம்பிக்கையும் 

யுகந்தோறும் மாறுதல் என்பது பழங்கனவாச்சு
கணம்தோறும் மாற்றம் என்பதே நிகழ்காலமாச்சு .
ஈடு கொடுக்க எங்கும் எதிலும் பெரும் போராட்டம்
எல்லோருக்கும் எதையோ இழந்த திண்டாட்டம்  

லாபவெறி பெரும்பசி நுகர்வுவெறி பெரும்பசி
பதவிவெறி பெரும்பசி பணவெறி பெரும்பசி
வெறிகொண்ட பூதத்தை மேலும்  வெறியேற்ற
சாதிவெறி மதவெறி இனவெறி  போதையுச்சம் !

தீயவர் நானென திமிருடன் தெருவினில் ஆட்டம்
ஊரவர் அவர்முன்  கிடந்தனர் நைந்ததுணியாட்டம்
மூளையிடுக்கெலாம் அப்பியது பயம் , மூடத்தனம்
இதயத்தில் ஈரமும் நம்பிக்கையும் மிஞ்சுமோ இனி

மாறுதலின் வேகத்தை எதிர்கொண்டு புதிதாக்கி
மானுடத்தை வாழவைக்க வீயூகத்தை புதிதாக்கி
நொடிதோறும் நொடிதோறும் ஆதிக்க சதியை
பொடியாக்கி புழுதியாக்கி முன்னேறு புதிதாக !!

சு.பொ.அகத்தியலிங்கம்.
28
ஜூலை 2019


Top of Form


இது மாடுகளின் காலம்

Posted by அகத்தீ Labels:இது மாடுகளின் காலம்

மாடுகளை
மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
எந்த விதத்தில்
மனிதன் மாடுகளைவிட உயர்ந்தவன் ?

மாடுகள்
நமக்கு ஆக்ஸிசன் தரும்
மீத்தேன் தரும்
புற்றுநோய் தீர்க்கும்
நெஞ்சுவலி நீக்கும்
புத்திர பாக்கியம் தரும்
போக இன்பம் தரும்

மாட்டுக்காக
மனிதனைக் கொல்வது
வேத புண்ணியம்
மனிதன் உணவுக்காக
மாட்டைக் கொல்வது
மகா பாவம்
மனிதனைவிட
மாடே மேலானது !
ஆம்.
மனிதனைவிட
மாடே மேலானது …


மாடுகள் இருக்குமிடத்தில்
மருத்துவமனை தேவையில்லை
நூலகம் தேவையில்லை
பள்ளிக்கூடம் தேவையில்லை
ஆராய்ச்சி தேவையிலை
மாடுகளே போதும்
மாடுகளே எல்லாம்
மாடுகள் மட்டுமே எல்லாம்

மந்திரிகள்
இனி தேவை இல்லை
மாடுகளே போதும்
மந்திரிசபை
தேவையே இல்லை
மாட்டுத் தொழுவமே போதும் !

மனிதனக் கொல்லு
மாடுகளை ஆளவிடு
இது மாடுகளின் காலம்
மறந்துவிடாதே !

சு.பொ.அகத்தியலிங்கம்.
27 ஜூலை 2019.
மிஞ்சும் கேள்வி

Posted by அகத்தீ Labels:மிஞ்சும் கேள்வி

நம் தோழமையின்
ஆழ அகலங்களை
எதைக் கொண்டு அளப்பது ?

நாம் பேசிக் கொள்ளாத நாட்கள்
அநேகமாய் இருக்காது
அன்றாடம் பேசிக்கொள்ள
நமக்கு ஏதேனும் வாய்த்துவிடுகிறது

நமக்குள் ரகசியம் என்பது
கிட்டத்தட்ட இல்லை ..
வாழ்வின் ஒவ்வொரு நெருக்கடியிலும்
மனம் திறந்து புலம்பி இருக்கிறோம்
ஆனாலும்
நாம் சொந்தக் கதை பேசியதைவிட
கட்சிக் கதை பேசியதே அதிகம்


பரிமாறாத குடும்பச் சிக்கல்கள்
எதுவும் நமக்குள் இருந்ததில்லை .
எதுவாய் இருப்பினும்
அதன் மறுபுறத்தையும்
ஒருவர் இன்னொருவருக்கு
சொல்லிவிடுவதே நம் இயல்பு .

அரசியலில் முரண்கள் உண்டு
கனல் தெறிக்கும் விவாதம்  உண்டு
அவரவர் கருத்தில் பற்றி நிற்பதுண்டு

கட்சியின் பாதைச் சறுக்கல்
அமைப்புச் சறுக்கல்
தனிநபர் சறுக்கல்
ஒவ்வொன்றையும்
பேசிப் பேசி மாய்ந்திருக்கிறோம்

விமர்சனம் கோவமாய் கொப்பளிக்கும்
ஒருபோதும் கட்சியை வெறுத்ததில்லை
இலக்கு கைக்கூடவில்லை என்கிற
ஆதங்கமே நெஞ்சில் மிஞ்சும் .

பதவிக்காய் பெருமைக்காய்
மல்லுக்கட்ட எண்ணியதில்லை
நம்மை செதுக்கிய ஆசான்களின்
வளர்ப்பு அப்படி ! சரிதானே !

இன்றும் இப்போதும் தினசரி
அரசியலாகவும் சொந்தமாகவும்
 பேசிக்கொண்டே இருக்கிறோம்
அலைபேசி கைங்கர்யம்

நாம் பேசிக் கொள்ளாத நாட்கள்
அநேகமாய் இருக்காது
அன்றாடம் பேசிக்கொள்ள
நமக்கு ஏதேனும் வாய்த்துவிடுகிறது

யார் முதலில் எப்போது
பேச்சை நிறுத்தப் போகிறோம் ?
நம்மிடம் இப்போது
மிஞ்சும் கேள்வி இதுமட்டுமே.

நம் தோழமையின்
ஆழ அகலங்களை
எதைக் கொண்டு அளப்பது ?சு.பொ.அகத்தியலிங்கம்.
14 ஜூலை 2019.

அவர்களின் திரிசூல நாக்குகள் ..

Posted by அகத்தீ Labels:


அவர்களின் திரிசூல நாக்குகள் ..

எப்போதும் பாசிசம் ஒற்றை நாக்கோடு பயணிக்காது .ஒன்றுக்கும் மேற்பட்ட நாக்குகளை எப்போதும் கைவசம் வைதிருக்கும் .

ஒன்று , எதிரிகளின் தத்துவத்தோடு நேரடியாக மோதாது ,மாறாக  கேரட்டர் அசாசேசன் [character assassination] எனப்படும் தனிநபரை/ இயக்கத்தை /நிறுவனத்தை இழிவு செய்தல் மூலமும் அவதூறு மூலமும் எதிர் முகாமைச் சிதைத்தல்.

இரண்டு , இமேஜ் பில்டிங் [ image building]  என்படுவதின் மூலம் ஒரு  ‘சூப்பர் மேன் மயக்கத்தை’ உள்ளத்தில் விதைப்பது .இதற்கு கூலிக்கு மாரடிக்கும் பல்வேறு ஊடகங்கள் உதவும் . இட்டுக்கட்டப்பட்ட செய்திகளும் ஜோடிக்கப்பட்ட ஆதரங்களும் வரிசை கட்டும் .

மூன்று,அராஜகங்களை எந்த குற்ற உணர்ச்சியும் இன்றி செய்துவிட்டு நியாயப்படுத்துவது . அதற்கு எல்லா முனைகளிலும் கூச்சநாச்சமின்றி மாற்றி மாற்றி பேசுவது ; குழப்பி ,சொதப்பி தம் நோக்கை நிறைவேற்றுவது

இன்னும் பல நாக்குகள் உண்டு அதில் அதிகார ,அறிவுஜீவி மொழி பேசி வருபவையும் உண்டு . அந்த தொங்கு நாக்குகள் தனி.

இதில் முதல் வகை நாக்கு காலங்காலமாய் இருப்பதுதான் . பிறரை கோட்பாடு ரீதியாக அல்லாமல் ;பிரச்சனை ரீதியாக அல்லாமல் அவதூறு செய்தல் ,இழிமொழி பொழிதல்  மூலமே ஒதுக்கித் தள்ளுதல். ஆனால் இவை எப்போதும்  “ நாலாந்தர யுத்தியாய்” ஒரு ஓரமாய் தனக்கு சம்மந்தமின்றி செய்யப்படும் . ஆயின் இப்போது அதுவே  “முதல்தர யுத்தியாய்” முன்னணியினரால் ஏவப்படுவதாக இருக்கிறது .

தனிமனித பலவீனம் எல்லோரிடமும் உண்டு .ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமாய் உண்டு .அதை நன்கு அவதானித்து ஸ்கெட்ச் போட்டு சிக்க வைப்பது ஒரு கலை . எலியை தேங்காயோ கருவாடோ வைத்து பொறியில் பிடிப்பதுபோல பிடிப்பது ஒரு பெருங்கலை . அதில் அவர்கள் இரண்டாயிரம் வருட அனுபவம் கொண்டவர்கள் . அதன்மூலம்தானே ராஜாதி ராஜன்களையும் தங்கள் சுட்டுவிரலசைவில் இயக்கினர் .

இப்போது அவர்கள் குறி சமத்துவம் ,சமூகநீதி ,மனித உரிமை ,போன்றவை பேசும் முற்போக்கு முகாம் சார்ந்தவர்களே .ஆட்சியாளரும் ஒட்டுண்ணிகளும்இங்கே ஒரே புள்ளியில் இணைகின்றனர் .

Best method to kill the principle is vulgarize the principle .அதாவது ஒரு கோட்பாட்டை எளிதாகக் கொல்ல அந்தக் கோட்பாட்டை முடிந்தவரை கொச்சைப்படுத்து என்பதுதான் . ஆளும் வர்க்கம் முற்போக்காளர்களுக்கு எதிராக ஏவும் மிகப்பெரிய ஆயுதம் இதுவே !

ஒரு பெரும் போராட்டம் வெடிக்கும் போது அதன் பின்னால் உள்ள அமைப்பு ரீதியான இயக்கத்தை முடிந்தவரை கண்டு கொள்ளாமல் ஒரு தனிநபரை மாபெரும் போராளியாகச் சித்தரிப்பது ; உச்சத்தில் அவரை அசிங்கப்படுத்தி – தனிநபர் ஒழுங்கீனத்தின் சாட்சியாக்கி மொத்த போராட்டத்தையும் நீர்த்துப் போகச் செய்வது . இது உலகெங்கும் கையாளப்படும் உத்தி .

 இங்கு இவ்வாறாக சங்கிகள் மேற்கண்ட எல்லா முறைகளிலும் மிகவும் நுட்பமாகச் செயல்படுகின்றனர் .எனவே ,முற்போக்காளர் இப்போது எப்போதும் இல்லாத அளவில் இரட்டை விழிப்புணர்வோடு  தூய வாழ்வும் புலனடக்கமும் கொண்டு வாழ வேண்டும் இல்லையேல் எளிதில் அசிங்கப்படுத்தப்படுவீர்கள் . மறுபுறம் கோட்பாடு ரீதியானக் கருத்துப் போரை சமரசமின்றி தொடர்வதே வழி .

ஊடகங்கள் மூலமும் கட்டமைக்கப்பட்ட தொடர் பொய்களின் மூலமும் ஆபத்பாந்தவராய் ,அனாதை ரட்சகராய் ,சவுக்கிதாராய் முன்னிறுதப்படுவோரை மிக நுட்பமாக தோலுரிக்கத் தெரிய வேண்டும் . அறிவுபூர்வமாய் இப்படி இமேஜ் பில்டிங் செய்திருந்தால் அம்பலப்படுத்தல் சுலபம் .ஆனால் அவர்கள் உணர்வு பூர்வமாய் போலி தேசிய வெறி ,மத வெறி இவற்றினூடே கட்டமைக்கிற பொய்மைகள் மூளையில் அல்ல இதயத்தில் ஊடுருவி நிற்கிறது .  அதுவும் சமூக உளவியலில் அழுந்தப் பதிக்கப்படும் இந்தப் பொய்மை பிம்பத்தை அழித்து எழுதுவது சவாலான ஆனால் தவிர்க்கவே முடியாத பணியாகும் . வழி ஒன்றுதான் ; உண்மையை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருப்பதுதான் . பொய்மை நீடித்து நிற்க முடியாது வெளிறத் தொடங்கும் , அப்போது உண்மை ஒளிருத் தொடங்கும்.

குற்றவுணர்ச்சி இன்றி அரஜாகம் செய்வதும் அதை நியாயப் படுத்துவதும் மாட்டுக்காக மனிதக் கொலை என்பதில் பார்க்கலாம் .கோட்சேவை புகழ்வதில் பார்க்கலாம் .தப்புதான் ஆனால் அவர்கள் இப்படி இவர்கள் இப்படி என இழுத்து வளைத்து நியாயப்படுத்துவதில் பார்க்கலாம் . இதனை எதிர்கொள்வதில் பெரும் சிக்கல் எனில் அவர்கள் தவறானவற்றை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டே அதனை ஆதரிக்கும் வஞ்சகமே . ஆக இரட்டை வேடத்தையும் வஞ்சகத்தையும் ஒருசேர அம்பலப்படுத்துவதும் மெய்யானதை நிலை நிறுத்துவதும் பெரும் போராட்டமே !

அதிகார மொழியும் அறிவுஜீவி மொழியும் இவற்றோடு இணைந்து ஒலிக்கும் போது பாசிசத்தை எதிர்க்கும் பெரும் சவால் ஒவ்வொருவருக்கும் வந்து சேர்கிறது .

 அரிசியில் கல் பொறுக்குவது போன்றது அல்ல ; கல்லிடை அரசி தேடலை ஒத்தது . எள்ளில் எலிப் புழுக்கையை நீக்குவதல்ல ; எலிப்புழுக்கையிடை எள்ளைப் பிரித்தெடுப்பது போன்றது . ஆனாலுல் பொறுமையாய் நுட்பமாய் தொடர்ச்சியாய் நம்பிக்கையுடன் துணிவுடன் செய்வதைத் தவிர வேறு மார்க்கமே இல்லை. அமைப்பு ,லட்சியம் ,தியாகம் மூன்றுமே மாமருந்து .

இடைவெளி

Posted by அகத்தீ Labels:

இடைவெளி


சொல்லப்படாத ரகசியம்
எல்லோரிடத்திலும் எப்போதும்
எங்கும் இருக்கிறது

சொல்லப்பட்டவை
ஒரு போதும் முழுமை அல்ல
பகுதி அல்லது அதினினும் குறைவு

சொல்ல நினைத்ததையும்
முழுவதும் சொல்லிவிட
சொற்கள் அகப்படுவதுமில்லை .

சொல்லாமல் விடுபட்டவை எல்லாம்
வேண்டுமென்றே
விடுபட்டவையாகவும் இருக்கலாம்

சொல்ல முயன்றும்
தற்செயலாகவும்
விடுபட்டிருக்கவும் வாய்ப்பு உண்டு.

சொன்னவை ஒவ்வொன்றுக்கும்
முன்கதையும் பின்கதையும்
தொடர்ந்தபடியே இருக்கும்

சொல்லுகிற ஒவ்வொன்றிலும்
உள்ளொன்று வைத்து வெளியொன்று
என்பது எப்போதும் எங்கும்


சொல் மென்மையோ வன்மையோ
வர்க்க நலனும் வர்ண நலனும்
பொதிந்ததே என்பதே மெய் !!!!!


சு.பொ.அகத்தியலிங்கம்.
4 ஜூலை 2019 .

வாழ்க்கை முரண்

Posted by அகத்தீ Labels:


வாழ்க்கை முரண்

சரி பிழையாகும்
பிழை சரியாகும்
வாழ்க்கைக் கணக்கு !

பகை உறவாகும்
உறவு பகையாகும்
பயணக் கணக்கு !

பிறந்தபோது மகிழ்தலும்- ஏன்
பிறந்தோமென வருந்தலும்
வாழ்க்கை விசித்திரம் !

கிடைக்காதபோது வருத்தமும்
கிடைத்தபின் வருந்தலும்
வாழ்க்கையின் புதிர் !

பொக்கிஷமான நினைவுகள்
பெருஞ்சுமையாகும் நினைப்புகள்
வாழ்க்கையின் சுழல் !

ஓயும்வரை ஆட்டம்
ஓய்ந்தபின்னே வாட்டம்
வாழ்க்கை தடையோட்டம்

பசித்தபோது கிடைக்கவில்லை
கிடைத்தபோது பசிக்கவில்லை
வாழ்க்கை முரண்!!

கோயில்மாடாய்த் திரிந்தும்
செக்குமாடாய்உழன்றும்
அடிமாடானதோ வாழ்க்கை !!!

சு.பொ.அகத்தியலிங்கம்.
2 ஜூலை 2019.