மிஞ்சும் கேள்வி
நம் தோழமையின்
ஆழ அகலங்களை
எதைக் கொண்டு அளப்பது
?
நாம் பேசிக் கொள்ளாத
நாட்கள்
அநேகமாய் இருக்காது
அன்றாடம் பேசிக்கொள்ள
நமக்கு ஏதேனும் வாய்த்துவிடுகிறது
நமக்குள் ரகசியம்
என்பது
கிட்டத்தட்ட இல்லை
..
வாழ்வின் ஒவ்வொரு
நெருக்கடியிலும்
மனம் திறந்து புலம்பி
இருக்கிறோம்
ஆனாலும்
நாம் சொந்தக் கதை
பேசியதைவிட
கட்சிக் கதை பேசியதே
அதிகம்
பரிமாறாத குடும்பச்
சிக்கல்கள்
எதுவும் நமக்குள்
இருந்ததில்லை .
எதுவாய் இருப்பினும்
அதன் மறுபுறத்தையும்
ஒருவர் இன்னொருவருக்கு
சொல்லிவிடுவதே நம்
இயல்பு .
அரசியலில் முரண்கள்
உண்டு
கனல் தெறிக்கும் விவாதம் உண்டு
அவரவர் கருத்தில்
பற்றி நிற்பதுண்டு
கட்சியின் பாதைச்
சறுக்கல்
அமைப்புச் சறுக்கல்
தனிநபர் சறுக்கல்
ஒவ்வொன்றையும்
பேசிப் பேசி மாய்ந்திருக்கிறோம்
விமர்சனம் கோவமாய்
கொப்பளிக்கும்
ஒருபோதும் கட்சியை
வெறுத்ததில்லை
இலக்கு கைக்கூடவில்லை
என்கிற
ஆதங்கமே நெஞ்சில்
மிஞ்சும் .
பதவிக்காய் பெருமைக்காய்
மல்லுக்கட்ட எண்ணியதில்லை
நம்மை செதுக்கிய ஆசான்களின்
வளர்ப்பு அப்படி !
சரிதானே !
இன்றும் இப்போதும்
தினசரி
அரசியலாகவும் சொந்தமாகவும்
பேசிக்கொண்டே இருக்கிறோம்
அலைபேசி கைங்கர்யம்
நாம் பேசிக் கொள்ளாத
நாட்கள்
அநேகமாய் இருக்காது
அன்றாடம் பேசிக்கொள்ள
நமக்கு ஏதேனும் வாய்த்துவிடுகிறது
யார் முதலில் எப்போது
பேச்சை நிறுத்தப்
போகிறோம் ?
நம்மிடம் இப்போது
மிஞ்சும் கேள்வி இதுமட்டுமே.
நம் தோழமையின்
ஆழ அகலங்களை
எதைக் கொண்டு அளப்பது
?
சு.பொ.அகத்தியலிங்கம்.
14 ஜூலை 2019.
0 comments :
Post a Comment