அவர்களின் திரிசூல நாக்குகள் ..

Posted by அகத்தீ Labels:


அவர்களின் திரிசூல நாக்குகள் ..

எப்போதும் பாசிசம் ஒற்றை நாக்கோடு பயணிக்காது .ஒன்றுக்கும் மேற்பட்ட நாக்குகளை எப்போதும் கைவசம் வைதிருக்கும் .

ஒன்று , எதிரிகளின் தத்துவத்தோடு நேரடியாக மோதாது ,மாறாக  கேரட்டர் அசாசேசன் [character assassination] எனப்படும் தனிநபரை/ இயக்கத்தை /நிறுவனத்தை இழிவு செய்தல் மூலமும் அவதூறு மூலமும் எதிர் முகாமைச் சிதைத்தல்.

இரண்டு , இமேஜ் பில்டிங் [ image building]  என்படுவதின் மூலம் ஒரு  ‘சூப்பர் மேன் மயக்கத்தை’ உள்ளத்தில் விதைப்பது .இதற்கு கூலிக்கு மாரடிக்கும் பல்வேறு ஊடகங்கள் உதவும் . இட்டுக்கட்டப்பட்ட செய்திகளும் ஜோடிக்கப்பட்ட ஆதரங்களும் வரிசை கட்டும் .

மூன்று,அராஜகங்களை எந்த குற்ற உணர்ச்சியும் இன்றி செய்துவிட்டு நியாயப்படுத்துவது . அதற்கு எல்லா முனைகளிலும் கூச்சநாச்சமின்றி மாற்றி மாற்றி பேசுவது ; குழப்பி ,சொதப்பி தம் நோக்கை நிறைவேற்றுவது

இன்னும் பல நாக்குகள் உண்டு அதில் அதிகார ,அறிவுஜீவி மொழி பேசி வருபவையும் உண்டு . அந்த தொங்கு நாக்குகள் தனி.

இதில் முதல் வகை நாக்கு காலங்காலமாய் இருப்பதுதான் . பிறரை கோட்பாடு ரீதியாக அல்லாமல் ;பிரச்சனை ரீதியாக அல்லாமல் அவதூறு செய்தல் ,இழிமொழி பொழிதல்  மூலமே ஒதுக்கித் தள்ளுதல். ஆனால் இவை எப்போதும்  “ நாலாந்தர யுத்தியாய்” ஒரு ஓரமாய் தனக்கு சம்மந்தமின்றி செய்யப்படும் . ஆயின் இப்போது அதுவே  “முதல்தர யுத்தியாய்” முன்னணியினரால் ஏவப்படுவதாக இருக்கிறது .

தனிமனித பலவீனம் எல்லோரிடமும் உண்டு .ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமாய் உண்டு .அதை நன்கு அவதானித்து ஸ்கெட்ச் போட்டு சிக்க வைப்பது ஒரு கலை . எலியை தேங்காயோ கருவாடோ வைத்து பொறியில் பிடிப்பதுபோல பிடிப்பது ஒரு பெருங்கலை . அதில் அவர்கள் இரண்டாயிரம் வருட அனுபவம் கொண்டவர்கள் . அதன்மூலம்தானே ராஜாதி ராஜன்களையும் தங்கள் சுட்டுவிரலசைவில் இயக்கினர் .

இப்போது அவர்கள் குறி சமத்துவம் ,சமூகநீதி ,மனித உரிமை ,போன்றவை பேசும் முற்போக்கு முகாம் சார்ந்தவர்களே .ஆட்சியாளரும் ஒட்டுண்ணிகளும்இங்கே ஒரே புள்ளியில் இணைகின்றனர் .

Best method to kill the principle is vulgarize the principle .அதாவது ஒரு கோட்பாட்டை எளிதாகக் கொல்ல அந்தக் கோட்பாட்டை முடிந்தவரை கொச்சைப்படுத்து என்பதுதான் . ஆளும் வர்க்கம் முற்போக்காளர்களுக்கு எதிராக ஏவும் மிகப்பெரிய ஆயுதம் இதுவே !

ஒரு பெரும் போராட்டம் வெடிக்கும் போது அதன் பின்னால் உள்ள அமைப்பு ரீதியான இயக்கத்தை முடிந்தவரை கண்டு கொள்ளாமல் ஒரு தனிநபரை மாபெரும் போராளியாகச் சித்தரிப்பது ; உச்சத்தில் அவரை அசிங்கப்படுத்தி – தனிநபர் ஒழுங்கீனத்தின் சாட்சியாக்கி மொத்த போராட்டத்தையும் நீர்த்துப் போகச் செய்வது . இது உலகெங்கும் கையாளப்படும் உத்தி .

 இங்கு இவ்வாறாக சங்கிகள் மேற்கண்ட எல்லா முறைகளிலும் மிகவும் நுட்பமாகச் செயல்படுகின்றனர் .எனவே ,முற்போக்காளர் இப்போது எப்போதும் இல்லாத அளவில் இரட்டை விழிப்புணர்வோடு  தூய வாழ்வும் புலனடக்கமும் கொண்டு வாழ வேண்டும் இல்லையேல் எளிதில் அசிங்கப்படுத்தப்படுவீர்கள் . மறுபுறம் கோட்பாடு ரீதியானக் கருத்துப் போரை சமரசமின்றி தொடர்வதே வழி .

ஊடகங்கள் மூலமும் கட்டமைக்கப்பட்ட தொடர் பொய்களின் மூலமும் ஆபத்பாந்தவராய் ,அனாதை ரட்சகராய் ,சவுக்கிதாராய் முன்னிறுதப்படுவோரை மிக நுட்பமாக தோலுரிக்கத் தெரிய வேண்டும் . அறிவுபூர்வமாய் இப்படி இமேஜ் பில்டிங் செய்திருந்தால் அம்பலப்படுத்தல் சுலபம் .ஆனால் அவர்கள் உணர்வு பூர்வமாய் போலி தேசிய வெறி ,மத வெறி இவற்றினூடே கட்டமைக்கிற பொய்மைகள் மூளையில் அல்ல இதயத்தில் ஊடுருவி நிற்கிறது .  அதுவும் சமூக உளவியலில் அழுந்தப் பதிக்கப்படும் இந்தப் பொய்மை பிம்பத்தை அழித்து எழுதுவது சவாலான ஆனால் தவிர்க்கவே முடியாத பணியாகும் . வழி ஒன்றுதான் ; உண்மையை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருப்பதுதான் . பொய்மை நீடித்து நிற்க முடியாது வெளிறத் தொடங்கும் , அப்போது உண்மை ஒளிருத் தொடங்கும்.

குற்றவுணர்ச்சி இன்றி அரஜாகம் செய்வதும் அதை நியாயப் படுத்துவதும் மாட்டுக்காக மனிதக் கொலை என்பதில் பார்க்கலாம் .கோட்சேவை புகழ்வதில் பார்க்கலாம் .தப்புதான் ஆனால் அவர்கள் இப்படி இவர்கள் இப்படி என இழுத்து வளைத்து நியாயப்படுத்துவதில் பார்க்கலாம் . இதனை எதிர்கொள்வதில் பெரும் சிக்கல் எனில் அவர்கள் தவறானவற்றை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டே அதனை ஆதரிக்கும் வஞ்சகமே . ஆக இரட்டை வேடத்தையும் வஞ்சகத்தையும் ஒருசேர அம்பலப்படுத்துவதும் மெய்யானதை நிலை நிறுத்துவதும் பெரும் போராட்டமே !

அதிகார மொழியும் அறிவுஜீவி மொழியும் இவற்றோடு இணைந்து ஒலிக்கும் போது பாசிசத்தை எதிர்க்கும் பெரும் சவால் ஒவ்வொருவருக்கும் வந்து சேர்கிறது .

 அரிசியில் கல் பொறுக்குவது போன்றது அல்ல ; கல்லிடை அரசி தேடலை ஒத்தது . எள்ளில் எலிப் புழுக்கையை நீக்குவதல்ல ; எலிப்புழுக்கையிடை எள்ளைப் பிரித்தெடுப்பது போன்றது . ஆனாலுல் பொறுமையாய் நுட்பமாய் தொடர்ச்சியாய் நம்பிக்கையுடன் துணிவுடன் செய்வதைத் தவிர வேறு மார்க்கமே இல்லை. அமைப்பு ,லட்சியம் ,தியாகம் மூன்றுமே மாமருந்து .

0 comments :

Post a Comment