உரைச் சித்திரம். 25.
காதலர் தினத்தின்
முன்னோடி தமிழரா ?
“கங்குல்
இருளிற் கவின்மணிபோல் ,புன்னகைபோல்
எங்கள் குடிலில்
எழிற்கோலம் தீட்டுகின்ற
சின்னஞ் சிறுவிளக்கைச்
சித்திரத்தைக் கண்டிரோ ?”
எனத் தொடங்கும்
கவிஞர் தமிழ் ஒளியின் அற்புதக் கவிதையை வாசித்தது உண்டோ ? வாசிக்காதவர் தேடி வாசிப்பீர்
!
ஐப்பசி ,கார்த்திகை
மாதங்களில் பறந்து திரியும் மின்மினிப் பூச்சியைப் பற்றிய கவிதை இது . கவிஞர் தமிழ்
ஒளி கார்த்திகை மாதம் தமிழர் கொண்டாடும் திருக்கார்த்திகை விழாவையும் மின்மினிப் பூச்சியையும்
இணைத்து பாடி இருப்பார் . அநேகமாக மின்மினிப் பூச்சியைப் பாடிய முதல் கவிஞன் தமிழ்
ஒளியாகத்தான் இருக்கும் .
திருக்கார்த்திகை
விழாதான் தீபங்களால் அலங்கரித்து பண்டை நாள் முதல் தமிழர் கொண்டாடிய தீபத் திருவிழா
! தீபாவளி பண்டிகையோ ஆரியரால் கொண்டாடப் பட்டு ,பெரும் பண்டிகை போல் தோற்றம் வலிந்து
கொடுக்கப்பட்டதே . ஆயினும் திருக்கார்த்திகையைத் தவிர்க்க முடியாமல் அதற்கொரு புராணப்
புளுகை சேர்த்ததுதான் ஆரியர் திருகுதாளம்.
விழாவும்
கொண்டாட்டமும் ஆதிகாலந் தொட்டும் மனித இயல்பு . எந்நாளும் எப்போதும் இறுக்கமாகவும்
புலம்பிக் கொண்டும் இருக்க முடியுமா ? அவ்வப்போது ஆடலும் பாடலும் விருந்தும் கேளிக்கையும்
தேவை .விழாக்களும் கொண்டாட்டங்களும் அதன் ஒரு பகுதியே .
ஆதிகுடிகள்
அறுவடை ,பருவமாறுதல் இப்படி பலவற்றை கொண்டாடித் தீர்த்தனர் .அவற்றை ஹைஜாக் செய்து மதமுலாம்
பூசிக்கொண்டன மதங்கள் .தீபாவளி ,கிருஸ்துமஸ் எல்லாம் இதுவே . பொங்கல் மட்டுமே புராணப்
புளுகற்ற ஒரே பண்டிகை .
பழந்தமிழர்
கார்த்திகை ,திருவோணம் ,பொங்கல் ,இளவேனில் விழா , தை நீராட்டு ,இந்திரவிழா ,புனாலாட்டுவிழா
,நீர்விழா.ஆடிப்பெருக்கு ,பூந்தொடைவிழா ,உள்ளிவிழா ,பங்குனிவிழா ,கோடியர் விழா , வெறியாட்டு
விழா என தமிழர் கொண்டாடிய பல்வேறு விழாக்களை முனைவர் சி.சேதுராமன் பட்டியலிடுகிறார்
.
அதில் தீபாவளி
,விநாயக சதுர்த்தி ,ஆயுதபூஜை ,சிவராத்திரி , ஆவணி அவிட்டம் எல்லாம் இடம் பெறவில்லை
என்பது கூடுதல் செய்தி . தமிழரின் பண்டிகைகள் பலவற்றிலும் கூட காலப்போக்கில் புராணப்
புளுகு சேர்க்கப்பட்டன .அது எப்படி ? யாரால் ? எப்போது ? . ஆய்ந்தறிந்த அறிஞர் பெருமக்கள்
,சான்றோர்கள் கூடி முடிவு செய்வார்களாக !
தமிழர் விழாக்களை
அலசி ஆய்ந்து கொள்ள வேண்டியனவற்றை காலத்துக்கு ஒப்ப செப்பம் செய்து கொள்ள வேண்டியதும்
; தள்ள வேண்டியதை தள்ள வேண்டியதும் நம் கடன்
.சில விழாக்கள் குறித்த பழந்தமிழ் இலக்கிய சான்றுகளைப் பார்ப்போம்.
தலைவன் தலைவியை
பிரிந்து பொருளீட்டச் சென்றுவிட்டான் .தோழி ஆறுதல் சொல்கிறார் .” திருக்கார்த்திகைத்
திருவிழாவைக் கொண்டாட தலைவன் என்னோடு இருப்பான்” என தலைவி நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்
. அகநானூறில் நக்கீரர் பாடியதாக இப்பாடல் உள்ளது . ‘அறு மீன்” என்றும் ‘அறம் செய் திங்கள்’ என்றும் திருக்கார்த்திகையைக்
கொண்டாடியாத நற்றிணை சொல்லும் . தேவாரத்திலும் இவ்விழா பற்றிய செய்தி உண்டு . அகநானூற்று
காட்சியைப் பார்ப்போம்.
”தோழி !பெரு மழையால்உழவு தொழில் முடங்கியது
; அதனாலே மற்றையத் தொழில்களும் முடங்கின
.அந்த பெரு மழையானது இப்போது ஓய்ந்துவிட்டது . மழை முகில் இல்லாமல் வானம்
பளிச்சிடுகிறது . சிறுமுயலாகிய மறுவைப்
போல் உரோகிணி நட்சத்திரத்தை தன் மார்பகத்தே விளங்கச் செய்கிறான் சந்திரன் . இப்படி
உரோகிணி சந்திரனுடன் சேரும் இருளகன்ற நடுஇரவில்,அஃதாவது திருக்கார்த்திகைத் திருவிழா நாளின் இரவு
, வீதி முழுக்க அகல்
விளக்குகளால் அலங்கரித்து , பூக்களை மாலைகளாகத் தொங்கவிட்டு தொங்கவிட்டு
ஊரே கொண்டாடுகிறது .பழைமையைத் தனக்குப் பெருமையாகக் கொண்ட மூதூரில் பலருடன் கலந்து கொண்டாடும் இவ்விழாவில்,நம்மோடு கூடிக் கொண்டாடும் வண்ணம் அவர்
வருவார்.”
இன்னொரு காட்சி .அதுவும் அகநானூற்றில்தான்.. பாலை
பாடிய பெருங்கடுங்கோ வரைந்தது . வேறுபட்ட பிரிந்த தலைவன் குறித்து தலைவி சொல்லுகிற
பாங்கில் இறுதியில் உரைப்பாள்,
“…. மழை பெய்யாததால்
அருவி நீரின்றி காய்ந்துவிட்டது . அந்த மலை முகடுகளில் இலவ மரங்களில் இலை எல்லாம் உதிர்ந்து
விட்டன .பூக்கள் மட்டும் இப்போது கண் சிமிடுகின்றன . அவை திருக்கார்த்திகை விழா அன்று
விளக்குகளை ஏற்றி வைத்தது போல அழகாய் ஒளிர்கின்றன .இந்த எழில் மிகுந்த மலையைக் கடந்து
அவர் சென்றுவிட்டார் .”
இளவேனில் விழா ! இந்திர விழா ,உள்ளி விழா ,பங்குனி
விழா ,சித்திரை விழா இன்னும் பல பெயர்களில் பங்குனி சித்திரை மாதங்களில் காதலைக் காமத்தைக்
கொண்டாடி இருக்கிறார் தமிழர்கள் .
“காதலர் தின”த்தின்
முன்னோடி தமிழரெனில் மிகையாமோ ?
இளவேனில் காலம் காமவேளுக்குரியதாகக் கொண்டாடியுள்ளனர் . வில்லவன் விழாவென்பதுகூட காமனைக் கொண்டாடும் விழாவே. கலித்தொகையில் ஓர் காட்சி .
தலைவி ஊரில் காமவேள் விழா நடக்கிறது . இவ்விழா நாளில் தலைவன் ஊரில் இல்லை எனில் விழா நடக்கும்
போது வருந்துவாளாம் . ஆகவே மலைக் குன்றில் ஏறி விரைந்து வந்தானாம் தலைவன் .
இதைச் சொல்லும் முன் வைகைக் கரையில் பரத்தையரோடு
விளையாடியது ,திருப்பரங்குன்றத்தில் களியாட்டம் போட்டதை எல்லாம் முன்னோட்டமாக
கலித்தொகையில் புலவர் கபிலர் பாடியுள்ளார்.
அந்த காமவிழாவை பற்றி மேலும் சொல்கிறார் . “ ஆற்றங்கரையில் அவர் களித்து
விளையாடும் பரத்தையரோடு யாமும் அவரோடு கலந்து காமன் விழாவைக் கொண்டாடுவேன்.
மேலும் கலித்தொகை இன்னொரு காட்சியில் சொல்கிறது , கணவனைப் பிரிந்த மனைவியர்
வருந்திப் புலம்புவராம் . “ அங்கே மலர்கள்
மிதக்கும் வைகை ஆற்றங்கரையில் பரத்தையரோடு ஆடிப்பாடி மகிழ்ந்து காமன் விழாக் கொண்டாடும்
பொழுதில் விவரமான யாராவது அவரைக் கண்டால் சொல்வீர் !இங்கே நான் முகமும் வாடி
பொலிவிழந்து களையிழந்து கிடக்கிறேன் என்று “
மதுரை மருதன் இளநாகனார் என்பவர் கொங்குநாட்டில் கொண்டாடிய உள்ளி விழா
குறித்து அகநானூறில் பாடுகிறார்.உள்ளி விழா என்பது அதாவது இடையில் மணியைக்
கட்டிக்கொண்டு ஆணும் பெண்ணும் மகிழ்ந்தாடும் ஆட்டம்.
தலைவன் பிரிவை ஆற்றாது தலைவி பாடிய போது , “ அழகிய மூங்கில் குழாயில் தேன்
நிறைக்கப்பட்டிருக்கிறது .வண்டுகளுக்கு அது மயக்கும் கள் . கள்ளுண்டவர் போல் தேனை
மிகுந்த மலரை வண்டுகள் மொய்க்கும் . அந்த மாலையை அணிந்தவரோடு நான் ரகசியமாக களவொழுக்கம்
கொண்டது ஊருக்கே தெரிந்துவிட்டதே ! கொங்கு நாட்டில் இடையில் மணியைக் கட்டிக்
கொண்டு ஆராவாராமாக கூச்சலிட்டு ஆடும் உள்ளி விழா பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன்
.அதுபோல் என் களவொழுக்கம் பற்றி ஊரே உரக்கப் பேசுகிறதே !
இப்படி எந்த விழா தொட்டாலும் அதில் காதல் இன்பம் சொட்டும் படியாகவே தமிழர்
கொண்டாடி இருக்கிறார்கள் . வாலண்டைன் டே – காதலர் தினத்தை மேற்குலகம் கொண்டாடும்
முன் தமிழர் வாழ்விலும் விழாக்களிலும் அது நிரம்பி வழிந்துள்ளது .
ஒரு செய்தி தெரியுமா ? உலகெங்கிலும் எல்லா இனத்திலும் இது போன்ற விழாக்கள்
வசந்த காலத்தில் கொண்டாடப்பட்டு வந்துள்ளன . வால்ண்டைன் டே காதலர் தினம் அதன் நவீன
வடிவம் அம்புடுத்தான்.
இந்திராவிழாவும் அதன் இன்னொரு முகம்தான் . கொடியேற்றம் , கால்கோள் விழா
,பிறை வழிபாடெல்லாம் விழாவின் கூறாக இருந்துள்ளது.
கொடியேற்றம் என்பது விழாவின் துவக்கமாக எப்போதும் இருந்து வந்துள்ளது .
இப்போதும் மாநாடுகள் கொடியேற்றம்தானே முதல் நிகழ்வு .
அக்காலம் முதல் இக்காலம் வரை பிறை வழிபாடு நிகழ்கின்றது. இஸ்லாமியர்கள் வளர்பிறை வழிபாட்டினைச் செய்வர். மணமாகாத பெண்கள் தங்களுக்கு மணம் முடிய வேண்டும் என எண்ணிப் பிறையைத் தொழும் நிகழ்வு சங்க இலக்கியத்தில் உண்டு .அங்கு அன்று அது மதம் சார்ந்த
சடங்கல்ல.
ஒளி மிகுந்த அணிகலன்களை
அணிந்த
பெண்கள் தங்களுக்கு
விரைவில் மணமாக வேண்டும் என வேண்டி மாலை நேரங்களில் பிறையினைத் தொழுதனர் என்கிறது அகநானூறு .
பரத்தையர் உறவை நெடுக பெரும் உறுத்தலின்றி சொல்லும் பழந்தமிழ் இலக்கியம் ,
ஆணின் பாலியல் சுதந்திரத்தை நியாயப்படுத்தியதோ ? கூடா ஒழுக்கம் என பெண்களுக்கு
விலங்கைப் பிணைத்ததுவோ ? பிறர் மனை நாடா சான்றாண்மை குறித்து அறிவுரையாய்
சொல்லினும் கூடா ஒழுக்கத்தை வெறுக்கத் தகுந்ததாய் சித்தரித்தது போல் சித்திரித்ததா
எனும் கேள்வி ஆழமானது .இவை அந்த இலக்கியத்தின் குற்றமல்ல அன்றைய காலத்தின்
குற்றம். சமூக வாழ்வியல் அப்படித்தான் இருந்தது என்பதே உண்மை .
பொங்கல் விழா குறித்த சில செய்திகள் சங்க இலக்கியத்தில் காணக் கிடைப்பினும்
அது மாபெரும் பண்பாட்டுக் கூறானது காலகதியில்தான்.
விழாவும் ,கொண்டாட்டமுமாய் இருந்த தமிழர் வாழ்வு ; இயற்கையோடி இயைந்தது
,காதலோடு பிணைந்தது எனில் மிகை அல்ல .
விழாக்களும் கொண்டாட்டங்களும் வாழ்வின் உயிர்துடிப்பன்றோ!
காதலர் தினத்தின் முன்னோடி தமிழரின் காமன் விழாவோ ?
‘‘மழைக்கால் நீங்கிய மாசறு விசும்பின்
குறுமுயல் மறுநிறம் கிளர் மதிநிறைந்து
அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள்
மறுகு விளக்குறுத்து மாலை தூக்கிப்
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவுடன் அயர’’
(அகநானூறு
: 141 .நக்கீரர்.)
“…. ….. …..
….. …… …………..
அருவி ஆன்ற உயர்சிமை மருங்கில்,
பெரு விழா விளக்கம் போல, பல உடன்
இலை இல மலர்ந்த இலவமொடு
நிலை உயர் பிறங்கல் மலை இறந்தோரே.”
[பிரிவிடை வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - பாலைபாடிய பெருங்கடுங்கோ]
‘‘காமவேள் விழாவயின் கலங்குவள் பெரிதென
ஏமுறு கடுந்திண்டேர் கடவி
நாம் அமர் காதலர் துணைதந்தார் விரைந்தே’’
(கலித்தொகை,குறிஞ்சிக் கலி, பா.எண்., 27)
‘‘மல்கிய துருத்தியுள் மகிழ் துணைப்
புணர்ந்து அவர்
வில்லவன்
விழலினுள் விளையாடும் பொழுதன்றோ.”
[கலித்தொகை,
குறிஞ்சிக் கலி, பா.எண்.35]
‘‘ஆனாச்
சீர்க் கூடலுள் அரும்பு அவிழ் நறு முல்லை
தேன்
ஆர்க்கும் பொழுது எனத் தெளிக்குநர் உளராயின்
உறலியாம் ஒளிவாட உயர்ந்தவன் விழவினுள்
விறலிழை யாவரோடு விளையாடுவான் மன்னோ’’
(கலித்தொகை, குறிஞ்சிக் கலி, பா.எண்.30]
‘‘அம்பனை விளைந்த தேக்கட் டேறல்
வண்டுபடு கண்ணியர் மகிழும் சீறூர்
வெண்கால் வாழிதோழி கொங்கர்
மணியரை யாத்து மறுகின் ஆடும்
உள்ளி விழவின் அன்ன
அலராகின்றது பலர் வாய்ப்பட்டே’’
(அகநானூறு .பா.எண், 368)
‘‘ஔஇழை மகளிர் உயர்பிறை தொழுஉம்
புல்லென் மாலை யாம்இவன் ஒழிய’’
(அகநானூறு, பா.எண். 239)
காதலர் தினத்தின் முன்னோடி தமிழரின் காமன் விழாவோ ?
[தொடர்ந்து இங்கு நான் எழுதிவந்த உரைச் சித்திரம் இத்துடன் நிறைவு
பெறுகிறது. தொடர்ந்து வாசித்தோருக்கு நன்றி . மீள் வாசிப்பு செய்ய விரும்புவோர் akatheee.blogspot.com சென்று இலக்கியப் பிரிவில் காண்க . இதனை நூலாக்கவும்
முயற்சிப்பேன்.]
சு.பொ.அகத்தியலிங்கம்.
1/12/2022.
0 comments :
Post a Comment