உரைச் சித்திரம். 23.
சென்னைக்கு வந்தோரெல்லாம்
சிவனாகிவிடுவாரோ?
[ பொதுவாக சாதிப் பெயர்கள் உள்ளிட்ட சில சொற்களை நான்
தவிர்த்து வருகிறேன். ஆயின் இக்கட்டுரை பழைய இலக்கியம் சார்ந்தது எனவே பயன்படுத்த வேண்டியதாகிவிட்டது
.மன்னிக்கவும் .]
“சென்னைக்கு வந்தோரெல்லாம் சிவனாகிவிடுவாரோ” என்கிறார்
புலவர் . எப்படி ? அதற்குள் போவதற்கு முன் சில செய்திகள் .
இரட்டை அர்த்தம்
தொனிக்க பேசுவது “ ஈவ் டீஸிங்” குற்றமாகும். தமிழ்நாட்டில் திரைப்படங்களில் , திரைப்பாடல்களில்
குறிப்பாக நகைச் சுவைக் காட்சிகளில் இரட்டை அர்த்தம் நிரம்பி வழியும் . அதில் நிச்சயம்
ஒன்று ஆபாசமானதாக ,பெண்களை ,சாதியை ,ஊனத்தை இழிவுபடுத்துவதாக அமையும். பட்டி மன்றங்களிலும்
ஏன் அரசியல் மேடைகளிலும் இந்த சீரழிந்த போக்கு உண்டு . இதன் வேர் எங்கே ?
இரட்டுற மொழிதல்
,சிலேடை என்கிற ஓர் வடிவம் தமிழ் இலக்கியத்தில் தொன்று தொட்டு வருகிறது .காளமேகப் புலவர்
,இரட்டைப் புலவர் திராகூடராசப்ப கவிராயர்
, இராம கவிராயர் ,சித்தர்கள் என பட்டியல் நீளும் .ஆயின் அன்று பொதுவாய் இரட்டுற மொழிதலில்
ஆபாசம் கலந்ததாக அமையவில்லை . விதிவிலக்குகள் உண்டு .ஆயின் இன்று விதிவிலக்குகளே விதியாய்ப்
போனதுதான் விபரீதம்!!!
கொஞ்சம் அந்தப்
பக்கம் உலவலாம் என நினைத்தேன் .வழக்கமாக உரைச் சித்திரத்தை முன்பகுதியில் தந்துவிட்டு
வாசித்தலுக்கு இடையூறு இல்லாமல் பாடல்களை இறுதியில் தருவேன் . சிலேடை பற்றி பேசுகையில்
அப்படிச் செய்ய இயலாது .கலந்தே தருவது தவிர்க்க முடியாதது . இதில் மாதிரிக்கு ஒரு ‘ஏ’ பாட்டு கடைசில் தருகிறேன்.
”சென்னைக்கு
வந்தவரெல்லாம் சிவனாகிவிடுவாரோ? ”.இராம கவிராயர் என்றொருவர் அப்படி மாற்றிப் பாடி இருக்கிறார்
.
புலவர் சென்னபுரிக்கி
அதுதான் சென்னைக்கு வந்துள்ளார் .சரியாகச் சோறு கிடைக்கவில்லை .சரியாக குளிக்க முடியவில்லை
.துணி துவைக்க முடியவில்லை .உடம்பெல்லாம் புழுதிபடிந்து அழுக்காகிவிட்டார் . அப்போது
புலவர் சொல்கிறார் நானும் சிவனாகிவிட்டேன் . எப்படி ?
“சென்னபுரி
மேவிச் சிவன் ஆனேன் நல்ல
அன்னம் அறியாதவன்
ஆகி - மன்னு சிரங்
கைக்கொண்டு
அரைச் சோமன் கட்டிச் சடை முறுக்கி
மெய்க் கொண்ட
நீறணிந்து மே”
சிவன் அன்னமாக
உருவெடுத்து திரிந்ததாக ஒரு கதை . ஆக சிவன் அன்னமாகி - நான்முகனாகிய பெருமாள் பார்வையில்
படாமல் ஒழிந்து - கபாலி எனும் மண்டை ஓட்டை கையில் ஏந்தி - சடாமுடியில் பிறையைக் கட்டிக்
கொண்டு - உடம்புழுழுவதும் வெண்ணீறு திருநீறு அணிந்து திரிவாரம் சிவன் .
நல்ல சோறு கிடைக்காதவனாகி – குளிக்க முடியாததால்
சொறி சிரங்கை வாங்கிக் கொண்டு-கிழிந்த ஆடையை
அணிந்து கொண்டு - பலநாள் தலையில் எண்ணெ தேய்க்காததால் சடை பிடித்து - உடம்பெல்லாம் புழுதி அப்பி -சென்னையிலே
சிவனாகவே மாறிவிட்டேன் நான் ”
இப்படி தன்னையும்
சிவனையும் ஒப்பிட்டு சென்னையோடு முடிச்சுப்போட்ட கவிராயரை மனிக்க வேண்டும் .அவர் வாழ்ந்த
காலம் அப்படி .
இன்னொரு புலவர்
பார்ப்பனர் கொக்குக் கறி சாப்பிட்ட கதை சொன்னார் .அவர் திரிகூடராசப்ப கவிராயர் .திருக்குற்றாலக்
குறவஞ்சியில் பாடிய ஓர் பாடல்.
”கண்ணி கொண்டு வாடா-குளுவா
கண்ணி கொண்டு வாடா!
மீறும் அலஞ்சிக் குறத்தியைக் கொண்டசெவ்
வேட்குற வன்முதல் வேட்டைக்குப் போனநாள்
ஆறுநாட் கூடி ஒருகொக்குப் பட்டது
அகப்பட்ட கொக்கை அவித்தொரு சட்டியில்
சாறாக வைத்தபின் வேதப் பிராமணர்
தாமுங் கொண் டார்சைவர் தாமுங் கொண்டார்தவப்
பேறா முனிவரும் ஏற்றுக்கொண் டார்இதைப்
பிக்குச் சொல்லாமலே கொக்குப் படுக்கவே” (கண்ணி)
குற்றாலத்தில ஒரு குறத்தி இருந்தாளம் .அவள் யாரையும் மிஞ்சும் பேரழகியாம்
.அவள் காதல் கணவர் செவ்வேள் குறவனாம். அவன் முதல் முதலாக பறவை வேட்டைக்குப் போனான்
.ஐந்து நாட்கள் எதுவும் கிடைக்கவில்லை .கடைசியில் ஆறாவது நாள் ஒரு வெள்ளைக் கொக்கு
சிக்கியது . அதை பிடித்து சட்டியில் போட்டு வேகவைத்து மணக்க மணக்க கறி சமைதான் .
அந்த வாசனையால் ஈர்க்கப்பட்ட வேதம் ஓதும் பார்ப்பானும் , சுத்த சைவரும் ,தவம் செய்யும் முனிவரும் வந்து
ருசித்து உண்டனர் . சட்டி காலியாகிவிட்டது ஆகவே மறுபடியும் வேட்டையாடி வா என
குறத்தி சொல்ல , குறவனும் வேட்டைக்கு புறப்பட்டான் .
இப்படித்தான் இப்பாடலைப் படித்த யாவரும் பொருள் சொல்வர் .ஆயின் இன்னொரு மறை
பொருள் இதற்கு உண்டாம் . ஒரு வேளை பார்ப்பனர்,சைவர் ,முனிவர் கொக்குக்கறி
சாப்பிட்டதாக வருவதால் மறை பொருளை இட்டுக் கட்டினரோ ? யாமறியேன் பராபரமே !
முருகனாகிய குறவன் , சூரனாகிய கொக்கைத் தான் படையெடுத்துச் சென்ற ஆறாவது நாளில் வென்றான். அதாவது
சஷ்டி எனப்படும் ஆறாவது நாளில் வென்றான்
.சாறு என்றால் திருவிழா எனும் பொருளும் உண்டு. அச்சஷ்டித் திருநாளை அனைவரும் கொண்டாடுவர். இவ்வாறான உட்பொருளையும் கவிஞர் சுவைபட உரைத்துள்ளதாக
புலவர்கள் வியாக்கியானம் செய்கிறார்கள் . சரி ! ரசிப்போம்!!!
வெங்காயம் சுக்கு ஆகுமா? இஞ்சிதானே சுக்காகும். மளிகைப்
பொருட்களையும் உடம்பையும் இணைத்து ஒருவர்
பாடியுள்ளார் .அது சொக்கநாதப் புலவர் பாடலென்றும் கவி காளமேகத்தின் கைவரிசை
என்றும் சொல்கிறார்கள் .இது ஆய்வாளர் சிக்கல் . நாம் பாடலுக்குள் செல்வோம்.
“வெங்காயம் சுக்கானால்
வெந்தயத்தால் ஆவதென்ன
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை
மங்காத, சீரகத்தை தந்தீரேல்
வேண்டேன் பெருங்காயம்
வேரகத்துச் செட்டியாரே”
வெங்காயம் சுக்கு ஆகுமா? இஞ்சிதானே சுக்காகும்? வெந்தயம் உடலுக்குக் குளுமை தரும் மருந்து - உடல்
நலத்தை சீராகப் பேணும் சீரகம், பெருங்காயம் ஆகியனவும் மருந்துப் பொருள்கள். இந்த உலர்ந்த பொருள்களை வாணிகம் செய்யும் செட்டியார் இவற்றைச் ‘சரக்கு’ என்பார்.
இதற்கு ஓர் ஆன்மீக பொருளும் புலவர் பெருமக்கள் சொல்வார்கள் .
நாம் எப்போதும் விரும்பும் நம் உடம்பு சுக்கு போல் உலர்ந்தால் வெந்தயதை மருந்தாக
அரைத்துக் குடித்தும் ஆகப்போவது என்ன? இந்த உடம்பு என்ன விற்பனைச் சரக்கா
? யார் இதனை சுமந்துகொண்டு திரிவார்? இந்த
உடம்பு கால்காசு பெறுமோ ? சுவாமி மலையில் இருக்கும் (செட்டியாராக வந்த) முருகனே! சீரான உள்ளத்தை
எனக்கு அருளுவீராக ! அப்படிக் கிடைத்தால் உடம்பாகிய பெரும் காயத்தை நான் விரும்பவே மாட்டேன்.
அது பாம்பா ? வாழைப் பழமா ? காளமேகப் புலவர் சொல்விளையாட்டை
ரசிப்போம் .
”நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதன் முடிமேலிருக்கும்
வெஞ்சினத்துப் பற்பட்டால் மீளாது - விஞ்சுமலர்த்
தேம்பாயுஞ் சோலைத் திருமலைராயன் வரையில்
பாம்பாகும் வாழைப்பழம்”
பாம்பானது நஞ்சினை மிகுதியாகக் கொண்டிருக்கும் - தன் மேல் தோலை அடிக்கடி தானே உரித்துக்கொள்ளும் - சிவபெருமான் தலை முடிக்கு மேல் இருக்கும் - அது கடும் கோபத்தில் இருக்கும்போது அதன் பல் நம் உடம்பில் பட்டால் நாம் அதன் நஞ்சிலிருந்து மீளவே முடியாது இப்படி ஒரு பொருள் .
வாழைப் பழமானது நன்கு பழுத்து இருக்கும் - உண்ணும்போது அதன் தோல் உரிக்கப்படும் - இறைவனுக்குப் படையல் செய்யப்படும் - கடுமையான பசியில் இருக்கும்
போது நம் பல்லில் நாக்கில் பட்டுவிட்டால் ருசியால்
ஈர்க்கப்பட்டு மொத்தமாய்த் தின்றுவிடுவோம்.பழம் மிஞ்சாது.
இளஞ்சூரியர், முதுசூரியர் என்ற இருவர் .இரட்டைப் புலவர் என அழைக்கப்படுவர் இவர்களில் ஒருவருக்கு பார்வை கிடையாது, மற்றொருவருக்கு கால்கள் கிடையாது. இவர்களில் கால் இல்லாதவரை பார்வை இழந்தவர் தனது தோள்களில் சுமந்து நடப்பார்; கால் இல்லாதவர் அவருக்கு வழி நடத்திச் செல்வார் . கால் இல்லாதவர் கேட்பார் .கண் இல்லாதவர் பதில் சொல்லுவார் . இதனைபண்டைய இலகியச் சுவடுகள் தெரிவிக்கின்றன.
“அப்பிலே தோய்த்திட்டு அடுத்தடுத்து நாம் அதனைத்
தப்பினால் நம்மையது தப்பாதோ-இப்புவியில்
இக்கலிங்கம் போனால் என்? ஏகலிங்க மாமதுரைச்
சொக்கலிங்கம் உண்டே துணை.”
“குளிக்கும் போது துணியை
துவைக்கிறார் .துணி வெள்ளத்தில் போய்விட்டது .செய்தி இவ்வளவுதான் .இதை எப்படிச் சொல்லி
கேட்கிறார் பாருங்கள் ; ,”ஆடைகளை துணிகளை அப்பிலே தண்ணீரில் தோய்த்து – [ட]
தப்பு [ட] தப்பென அதனைத் தப்பித் தப்பி அடித்துத் துவைத்தால் - அது துன்பப்பட்டு- அந்தத் துணி நம்மைவிட்டு தப்பித்து ஓட முயற்சிக்காதா என்ன ?” என இவர் கேட்க
அதற்கு ,”இந்தத் துணி(கலிங்கம்) போனால் என்ன மாமதுரையில் உள்ள சொக்கலிங்கமான இறைவன் உண்டே துணை” என்று பதில் அளித்தார் இன்னொருவர் .
பாம்புக்கும் எள்ளுக்கும் சம்மந்தம் உண்டா ? முடிச்சுப் போட்டுவிட்டார்
காளமேகம் .
“ஆடிக்குடத்தடையும், ஆடும்போதே இரையும்
மூடித்திறக்கின் முகங்காட்டும் - ஓடி மண்டை
பற்றிற் பரபரெனும் பாரிற் பிண்ணாக்கு முண்டாம்
உற்றிடும் பாம்பெள்ளெனவே ஓது.”
பாம்பானது படமெடுத்து ஆடும் -ஆடிய பின்னர் பாம்பாட்டியின் குடத்தில் போய் அடைந்துகொள்ளும்- படமெடுத்து ஆடும்போதே 'உச்' என்று இரையும் - பாம்பாட்டி பாம்புப்பெட்டியின் மூடியைத் திறந்தால் சீறி பாம்பு தன் முகத்தைக் காட்டும் - ஓடிப்போய் மண்டை ஓட்டில் சுருண்டு படுத்துக்கொண்டு - பரபர என ஒலி வருமாறு அசையும் - பார்க்கப்போனால் அதற்குப் பிளவுபட்ட நாக்கு உண்டு.
எள்ளானது செக்கில் ஆடி எண்ணெயாகக் குடத்தில் அடையும் - செக்கில் ஆட்டப்படும்போது செக்கின் இரைச்சல் கேட்கும்- எண்ணெய்க் குடத்தின் மூடியைத் திறந்தால் நம் முகத்தை அது நிழலாகக் காட்டும் - நம் மண்டையில் தலையில் ஓடிப் பரபர என எண்ணைத் தேய்க்கப்படும். பார்க்கப்போனால் அதற்குப் பிண்ணாக்கும் உண்டு.
சித்தர்கள் பாடலில் பல வைதீக மூடக் கருத்துகளைச் சாடும் ; அவற்றிற்கு
உள்ளுறையா வேறு பொருள் உண்டென இட்டுக்கட்டிச் சொல்லும் வியாக்கியானமும் காணக்
கிடைக்கிறது .அது குறித்து நான் இங்கு பேசவில்லை .
பொதுவாய் இரண்டு செய்திகளை ஒருப்போல் உவமித்து சொல்லும் சிலேடை ,இரட்டுற
மொழிதலில் பொதுவான ரசனையே மேலோங்கி இருக்கும் .சிலவற்றில் துலக்கினால் ஆன்மீகம்
வெளிப்படும் . பொதுவாய் ஆபாசம் இருக்காது . விதிவிலக்கு ஒன்றையும் பார்ப்போம்;
“கட்டித் தழுவுதலாற் கால்சேர வேறுதலால்
எட்டின்பன் னாடை யிழுத்தலால் - முட்டப்போய்
ஆசைவாய்க் கள்ளை அருந்துதலா லப்பனையும்
வேசையென லாமேவி ரைந்து. ”
பனைமரத்தில் ஏறுவோர் அதனைக் கட்டித் தழுவிக்கொண்டும் காலைச் சேர்த்து வைத்துக்கொண்டும்தான் ஏறுவர்- – பனை மரத்தில் தொங்க
விடப்பட்டிருக்கும் கள் பாணையில் படர்ந்திருக்கும் ஆடையை குப்பைகளை பன்னாடையை
வழித்து எறிவர் ; பானையை தலையில் முட்டுமாறு வைத்துக் கொண்டு தன் ஆசை வாயால் கள்ளை அருந்துவர்.
வேசையரை /பொதுமகளிரை கட்டித் தழுவுவர் - காலைச் சேர்த்து வைத்துக்கொண்டு அவள்மீது ஏறி அணைப்பர் - எட்டிப் பிடித்து அவளது மடித்துக் கட்டிய ஆடையை பன்னாடையை இழுத்து அவிழ்ப்பர்.
இப்படி பொதுமகளிருக்கும் பனைமரத்துக்கும் முடிச்சுப் போட்டார். இதுபோல்
பொதுமகளிருக்கும் தென்ன மரத்துக்கும் - வெற்றிலைக்கும்
பொதுமகளிருக்கும் ,சுண்ணாம்பு கரண்டகத்துக்கும் பெண்குறிக்கும் முடிச்சுப்
போட்டார் . கூத்தியாரை அல்லது ஆசை நாயகியை குரங்கோடு முடிச்சு போட்டும் பாடினார் .இவ்வாறு பாடிய சிலேடைக் கவிகள் “ ஏ”
சான்று பெறத் தக்கவையே !
கவி காளமேகத்தின் ரசனை மிக்க சிலேடைகளை முன்னுதாரணமாகக் கொண்டு சிலேடை
செய்யாமல் ; விதிவிலக்கான “ஏ” பாடல்களை அடியொற்றி ஆபாச இரட்டை அர்த்தப் பேச்சில்
ஆளுக்கு ஆள் மிஞ்ச நினைப்பது நியாயமா ? சரியா ? தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை
சேர்க்குமா ? யோசிப்பீர் !
கெட்ட வார்த்தையோ இரட்டுற மொழிதல்
?அல்ல .அல்ல.
சிலேடை என்பது சொற்சிலம்பம் .இலக்கிய
ரசனை .
சு.பொ.அகத்தியலிங்கம்.
21 நவம்பர் 2022
0 comments :
Post a Comment