காலத்தின் காலடிகளாய்
முகநூல் பதிவுகள்….
“ நேற்று மதத்தின் பகைமையைக் காட்டி பாகிஸ்தான் அணியை வெறுக்கச் சொன்னீர்கள்
… வெறுத்தோம்.
இன்று இனத்தைக் காட்டி
இலங்கை அணியை வெறுக்கச் சொல்கிறீர்கள்…வெறுக்கிறோம்.
நாளை மொழியைக் காட்டி கர்நாடக
அணியை வெறுக்கச் சொல்வீர்கள்…வெறுப்போம்.
அப்புறம் சாதியின் பெயரால்
பக்கத்து தெரு அணியை வெறுக்கச் சொல்வீர்கள்… அதையும் வெறுப்போம்.
வெறுப்பின் விதைகளை ஊன்றிக்கொண்டே
செல்லுங்கள்.உங்களுக்கு என்ன … கல்லாப் பெட்டி நிரம்பினால் போதும்.ஆனால் வெட்டிச் சாகப்
போவது நாங்கதானே !
வாழ்க வேற்றுமையில் ஒற்றுமை
!”
07/04/2014 ல் முகநூலில்
கருப்பு கருணா பதிந்தது . இன்றும் படிக்கையில் நம்மோடு உயிரோடு பேசுவது போல் உள்ளதே
.
இதே போன்ற கருப்பு கருணாவில்
நூற்றுக் கணக்கான பதிவுகளை – கடந்த பத்தாண்டில் எழுதியவற்றை ஒரே புத்தகத்தில் வாசிப்பது
என்பது புதுமையான அனுபவமே .”நட்பின் வாசல்…”
அந்த அரிய வாய்ப்பை நம்முன் திறந்துவிட்டுள்ளது .
முகநூல் பதிவுகளை நூலாக்கும்
முயற்சி அண்மையில் அதிகரித்துள்ளது . ஆயின் ஒருவர் மறைவுக்கு பின் அவரது பதிவுகளைத்
தொகுத்து உலவவிடும் முதல் நூல் இதுவாகத்தான் இருக்கும் .
கருப்பு கருணா ஒரு இடதுசாரி
கள செயல்பாட்டாளர்,நாடகக் கலைஞர் அவரது வீரியமிக்க அரசியல் சமூகப் பார்வையை இந்நூல்
முழுக்க தரிசிக்கலாம்.
அவன் யார் ? சுருங்கச்
சொல்லிவிட்டான் .17/10/2020ல் போட்ட பதிவை வாசியுங்கள் ;
“நூற்றாண்டு கண்ட கம்யூனிச இயக்கத்தில் ஒரு உறுப்பினராக
இருப்பது பெருமைக் குரிய ஒன்று .இதெல்லாம் சொன்னால் புரியாது . வாழ்ந்து பார்த்தால்தான்
தெரியும் .
நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.”
03/12/2019 ல் ஓர் பதிவின்
மூலம் “ ஒரு ஏழெட்டு வருசத்துக்கும் முன்னாடி….. கவின்மலர்தான் அரிச்சுவடி போட்டு கத்துக்
கொடுத்தார் . அதுதான் இப்போ இந்த அளவுக்கு வந்து நிக்குது . அந்த வகையில் நம்ம குரு
கவின்தான்…” என தன்னை முகநூலுக்கு அழைத்து வந்தவர் அவர்தான் என்கிறார் .
“ அரசன் அன்று கொல்வான் … தெய்வம் நின்று கொல்லும்
.. இதற்கு என்ன சார் அர்த்தம் ?
ரெண்டு பயலுமே கொல்வாங்கன்னு
அர்த்தம் … என்ன கொஞ்சம் முன்னபின்ன இருக்கும் …அம்புடுத்தான்,” [28/01/2017]
நூல் நெடுக அன்றாட அரசியல்
சமூக நிகழ்வின் மீதான கறாரான எதிர்வினை மிக அழுத்தமாக பதிவாகி இருக்கிறது . பெரும்பாலும்
பதிவின் சாரமே செய்தியை உள்ளடக்கி இருக்கும் .அந்த குறிப்பிட்ட நிகழ்வையும் சேர்த்து
அசைபோட முடிந்தால் கூர்மை தைக்கும்.
“அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டே கோயிலுக்கு
செல்கிறேன்:எல்.முருகன்.
அதே அரசியல் சட்டம்தான்
எல்லோரும் கோயில் கருவறைக்குள் போகலாம்னு சொல்லுது ..முடிஞ்சா ட்ரை பண்ணிப் பாருங்க
முருகன்.”
06/11/2020 ல் போட்ட இப்பதிவு
நறுக்கென்று தலையில் குட்டும்.
சொல்லச் சொல்ல நீளும்
.இடம் கருதி நீட்டவில்லை .!
அட ! பழைய முகநூல் பதிவுகளை
வாசிப்பதில் அப்படி என்ன சுவை இருக்கப் போகிறது என்கிறீர்களா ? வாசித்துதான் பாருங்களேன்.
முன்பெல்லாம் தினசரி நாட்குறிப்பு
’டைரி’ எழுதுகிற பழக்கம் பலரிடம் இருந்தது . பொதுவாய் அவற்றில் சொந்த சோகக்கதைகளும்
கொண்டாட்டமும் குடும்ப வரவு செலவும் இருக்கும் . அடுத்தவர் டைரியை ரகசியமாகப் படிப்பதில்
அப்படி ஒரு ஈர்ப்பு சிலருக்கு இருக்கும் . சில குடும்ப ரகசியம் வெளிப்படும் .அந்த டைரிகளை
புரட்டி அலசினால் அதனுள்ளும் ஓர் சமூகச் செய்தியோ அரசியல் செய்தியோ நிச்சயம் இருக்கும்
. தமிழ்ச் செல்வன் தன் தாத்தா மதுரகவி பாஸ்கரதாஸ் டைரியை தொகுத்து வெளியிட்டது நினைவுக்கு
வருகிறது .சுப்பாராவ் எழுதிய ’தாத்தாவின் டைரி’ கதை அழுத்தமான செய்தி சொன்னது . இன்று
டைரி எழுதும் பழக்கம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்றே நினைக்கிறேன்.
முகநூல் டைரிக்கு மாற்றல்ல
; அதற்கும் மேம்பட்டது ; ஆயின் ரகசியம் கிடையாது . சொந்த புலம்பல் ,ஆரவாரம் எல்லாம்
இருக்கும் .ஆயின் அதுமட்டுமே அல்ல . அன்றாடம் ஏதேனும் ஒரு செய்தியை நல்லதோ கெட்டதோ
சரியோ தவறோ நம்மை எழுத வைத்துவிடும் .இது ஓர் சமூக ஊடகம் ஆகவே விரைவாய் ஓர் கருத்தை
செய்தியைக் கொண்டு சேர்ப்பதில் ,எதிர்வினையாற்றுவதில் ஒரு முக்கிய பங்கு ஆற்றுகிறது
.
இன்று வாய்மொழி இலக்கியம்
வரலாற்று ஆய்வில் ஓர் இடத்தைப் பெறத் துவங்கிவிட்டதைப்போல , நாளை முகநூல் பதிவுகளும்
ஆய்வுப் பொருள் ஆகுமோ ? யாமறியோம் !
இந்த நூலை நீங்கள் படியுங்கள்
. வரிசையாகப் படிக்கக்கூட வேண்டாம் . அங்கும் இங்குமாய் அலைபாய்ந்தும் துணுக்குகளைக்
கொறிப்பதுபோல் கொறிக்கலாம் . இந்நூல் நமக்கு மூன்று செய்திகளை வலுவாகச் சொல்கிறது
.
1] கவிதை மொழி ,சிறுகதை
மொழி ,நாவல் மொழி ,கட்டுரை மொழி ,ஆய்வு மொழி என்று இருப்பதைப்போல் முகநூல் மொழி தனித்துவமானது
என்பதை இந்நூல் சொல்லித் தரும்.
2]கேலி ,கிண்டல் , எள்ளல்
,ஏகடியம் ,நக்கல் ,நையாண்டி ,குத்தல் ,குதறல் ,விவரம் , நுட்பம் ,விமர்சனம் , வியாக்கியானம்
என எல்லாம் கலந்து நம் அரசியலை பரந்த பகுதிக்கு கொண்டு செல்ல வழிகாட்டும் நூல் .
3] நம்மிடம் பெரும் எண்ணிக்கையிலான
மத்தியதர வர்க்கம் உண்டே . அவர்களிடம் நவீன வசதிகள் உண்டே. அவர்கள் முகநூலை கண்டு கொள்ளாமல்
இருப்பது சரியா ? எல்லோரும் நம் கருத்துகளை அவரவர் கறபனை கைத்திறன் கலந்து அளித்தால்
, வரும் பதிவுகளை ஆதரித்தால் நம் பரப்புரை வலுவாகுமே ! இந்நூல் அதற்கு தூண்டுகோல் ஆவதாக
!
தொகுத்தளித்த சிராஜுதீனுக்கு
வாழ்த்துகள்!
நட்பின் வாசல் ,
[ ‘கருப்பு
கருணா’வின் முகநூல் நிலைத்தகவல் குறிப்புகள் ]
தொகுப்பு
: சிராஜுதீன்
,
வெளியீடு :பாரதி புத்தகாலயம் ,தொடர்புக்கு : 044- 24332424 /24330024/24332934 ,9498062424
,விலை : ரூ. 384/ பக்கங்கள் :360/.
சுபொஅ.
11/11/2022.
0 comments :
Post a Comment