“நம்பர் ஒண்” போட்டி அல்ல …. கலைச் சொற்களும் மொழித் தூய்மையும்…

Posted by அகத்தீ Labels:

 





 “நம்பர் ஒண்” போட்டி அல்ல ….

கலைச் சொற்களும் மொழித் தூய்மையும்…

சிந்தனைச் சிற்பி சிங்கார வேலரை அசைபோடுகிறேன்…..

 

ஒரே ஒரு புதிய சொல்லினையேனும் தமிழுக்கு ஆக்கிக் கொடுத்த யாராயினும் அவர் எம் தமிழ்ச்  சமூகத்தின் நன்றிக்கு உரியவரே !

 

” நான் தான் …நான் மட்டும்தான் … நம்பர் ஒண்…” என ஆணவம் தலைக்கேறி பேசுவதைத்தான் சகித்துக் கொள்ள முடியாது .

 

எந்த ஒரு சொல்லும் ரிஷி கர்ப்பமாய் ஒற்றை இரவில் கருத்தரித்து ஜனித்ததல்ல . ஒவ்வொரு சொல்லுக்கும் பிரசவ வலியும் , வளர்ச்சியின் படிநிலையும் மிகவும் கடுமையானது .ஒருவரல்ல பலர் செதுக்கியே புதிய கலைச் சொற்கள் உருவாகி புழக்கத்தில் வருகின்றன .

 

நம் முன்னோடிகள் பதிந்த கால்தடங்களைத் தொடர்ந்து நடந்தே நாமும் புதிபுதிதாய் சொற்கள் செய்தோம்.செய்கிறோம் .செய்வோம்.

 

இயல் தமிழ் ,இசைத் தமிழ் , நாடகத் தமிழ் என்கிற முத்தமிழ் போதாது அறிவியல் தமிழும் வேண்டும் என்றவர் மணவை முஸ்தாபா . யுனஸ்கோ கூரியர் தமிழ் பதிப்பின் ஆசிரியராக இருந்தவர் .செம்மொழிக்காக போராடியவர் . சில ஆயிரம் கலைச் சொற்களை ஆக்கிக் கொடுத்தவர் .

 

அவர் வாழ்ந்த காலத்தில் நேர்காணல் செய்து தீக்கதிரில் வெளியிட்டவன் என்கிற முறையிலும் ; அவரோடு உரையாடிய அனுபங்களில் அடிப்படையிலும் சில செய்திகளை தகவல்களை பரிமாற விழைகிறேன்.

 

தமிழில் அறிவியலை பேசமுடியும் எழுத முடியும் என உறுதியாக நம்பியவர் சிந்தனைச் சிற்பி தோழர் ம.சிங்காரவேலர் . நம்பியவர் மட்டுமல்ல பேசியும் எழுதியும் வந்தவர் . அன்றைய குடியரசு ,சமதர்மம் போன்ற ஏடுகளில் 1920 களிலேயே எழுதத் துவங்கிவிட்டவர் சிங்கார வேலர் . pure science எனப்படும் தூய அறிவியலுக்காவே  முழுக்க முழுக்க அர்ப்பணிக்கப்பட்ட  “புதுயுகம்” எனும் ஏட்டினை 1935 மே 1 ஆம் நாள்  சிங்கார வேலர் தொடங்கினார் . அப்போது அவருக்கு வயது 75 .நூற்றுக் கணக்கான புதிய கலைச் சொற்களை உருவாக்காமல் அவரால் இதனை சாதித்திருக்க முடியுமா ?

 

பொதுவுடை இயக்கமோ ,தேசிய இயக்கமோ ,திராவிட இயக்கமோ ,வேறெந்த இயக்கமோ எதுவாயினும் தன் தேவைக்கு புதுபுது கலைச் சொற்களை விடுதலைப் போராட்ட காலத்திலேயே உருவாக்கத் துவங்கிவிட்டன. உருவாக்காமல் அவை மக்களோடு உரையாடி தம் புதிய கருத்துகளை கொண்டு சேர்த்திருக்க முடியாது.

 

ஒவ்வொரு புதிய சிந்தனையும் ,புதிய சித்தாந்தமும் ,புதிய அறிவியலும் ,புதிய கண்டுபிடிப்புகளும் அவற்றோடு புதிய சொற்களைப் பெற்றுப் போட்டுக்கொண்டே இருந்துள்ளன .இனியும் அப்படித்தான் இருக்கும்.

 

நீயு செஞ்சுரி என்ற ஒற்றை புத்தக நிறுவனம் மாஸ்கோ முன்னேற்ற பதிப்பகத்தோடும் சோவியத் பப்ளிகேஷனுடனும் இணைந்து பதிப்பித்த நூல்கள் கொண்டு சேர்த்த கலைச் சொற்கள் எண்ணிலடங்கா . தோழர்கள் வி. எஸ். வெங்கடேசன் கா. அப்பாத்துரை, கு. பரமசிவம், எஸ். சங்கரன், முல்லை முத்தையாபுதுமைப்பித்தன், ரகுநாதன், முகமது ஷெரீபு, எஸ். இராதாகிருஷ்ணன் ,பூ.சோமசுந்தரம் ,விஜய்பாஸ்கர் ,மூலதனம் மொழிபெயர்ப்பில் தியாகு ,ஜமதக்னி உட்பட  தோழர்கள் பட்டாளம் இராப்பகலாக உழைத்தது . எவ்வளவு கலைச் சொற்கள் உருவாக்கி இருப்பார்கள் ?“நம்பர் ஒண்” என்ற மெய்யான பெருமைக்கு உரியவர் அவரன்றோ ?

 

என் அனுபவம் ஒன்றைச் சொல்கிறேன் .1970 களின் முற்பகுதியில் நான் ஐடிஐ படிக்கும் போது பிட்டர் ,டர்னர் ,மெக்கானிக் என எந்த பாடத்துக்கும் தமிழில் புத்தகம் இல்லை. அப்போது நியூ செஞ்சுரி புக்ஸில் மட்டுமே  தமிழில் இது குறித்த புத்தகங்கள் கிடைத்தன .கம்யூனிஸ்ட் கட்சி எனக்கு அறிமுகமாவதற்கு முன்பே அறிமுகமானது நியூ செஞ்சுரி புகஸ்தான்.

 

மேலே குறிப்பிட்டவர்கள் மட்டுமா ? சாமிநாத சர்மா , டி.எஸ் .சொக்கலிங்கம் , ஐராவதம் மகாதேவன் ,கணக்கன் ,அரைகுறைப் பாமரன் போன்ற புனைப் பெயர்களிலெல்லாம் எழுதிய தினமணி ஏ.என்.சிவராமன் ,  ஆதித்தனார், அரு.ராமநாதன் ,மாஜினி , துமிலன் , ரா.கி.ரங்கராஜன் , சுஜாதா , கரிச்சான் குஞ்சு ,ராமச்சந்திரன் ,ரகமி ,  மஞ்சரி ஏட்டின் ஆசிரியர் தி ஜ ர , கலைக்கதிர் ஏட்டின் ஜி ஆர் .தாமோதரன் உள்ளிட்ட பல இதழாழர்கள், எழுத்தாளர்கள் புதுப்புது விஷயங்களை தமிழுக்கு கொண்டு வந்தனர் ; கூடவே புதுப்புது சொற்களையும்தான். இப்படி எண்ணற்றோரின் கலைச்சொல் பங்களிப்பை ஒரு கணமேனும் நினைத்துப் பார்க்க வேண்டாமோ ?

 

 [ நினைவிலிருந்து எழுதியதால் பல முக்கிய பெயர்கள் விடுப்பட்டிருக்கக் கூடும் .சுட்டிக் காட்டினால் இணைத்துக் கொள்ளலாம் . இது நம்பர் ஒண் போட்டி அல்ல.]

 

ஆதியில் எல்லா கலைச் சொற்களும் இப்போது இருப்பது போலவே இருந்ததில்லை . நான் படிக்கிற காலத்தில் பெளதீகம் ,இரசாயணம் , ஜியோமிதி , மிருக  சாஸ்திரம் என இருந்தது இப்போதைய தலைமுறைக்கு இச்சொற்கள் புரியாது இயற்பியல் ,வேதியல் ,வரைகணிதம் ,விலங்கியல் என அழகிய தமிழ்ச் சொற்களாய் மலர்ந்துவிட்டன. அன்றைக்கு அச்சொல்லை ஆக்கியவர் முட்டாளா ? அல்ல . அவர் முயற்சியில் உருவான சொற்கள் காலகதியில் இயல்பான சொற்களை வந்தடைந்தன .விதைத்தது அவர்களே !

 

Dialectical materialism முதலில் பல்வேறு சொற்களால் அழைக்கப்பட்டது . நானறிய முரண்தர்க்க பொருள் முதல்வாதம் ,இயக்கயியல் பொருள் முதல்வாதம் என்றெல்லாம் அழைக்கப்பட்டு இயங்கியல் பொருள்முதல்வாதம் என சரியான சொல்லை வந்தடைந்தது .

 

தியாகு ,ஜமதக்னி மொழியாக்கத்தை ஒப்பிட்டாலே ஒன்றிற்கு பல சொற்கள் புலப்படும் .தியாகுவே தனது அண்மை மூலதன பதிப்பில் பல சொற்களை மாற்றி அமைத்துள்ளார் . இந்த நெடிய போராட்டமே சரியான கலைச் சொற்களைக் கொண்டுவந்து சேர்க்கும்.

 

இப்படி ஒவ்வொரு சொல்லின் பின்னாலும் படிநிலை இருக்கும் . வலி இருக்கும் . அதன்பின்னரே ஏற்பு இருக்கும்.

 

ஆங்கில மொழி  அகராதியில் ஆண்டு தோறும் பல்லாயிரம் சொற்களை சேர்த்துக் கொண்டே இருக்கின்றனர் .அவற்றில் பல பிறமொழியிலிருந்து பெற்றவை .

 

பெயர் சொற்களை கடன் வாங்குவது பிழை அல்ல . தேவை . வினைச் சொற்களுக்கு தமிழில் பஞ்சமில்லை . ஸ்மைல் பண்ணி ,ஸ்விம் பண்ணி ,வாக் பண்ணி ,குக் பண்ணி ,மியூசிக் பண்ணி ,ஆக்ட் பண்ணி ,இப்படி பண்ணித் தமிழாக்குவதுதாம் மிகப்பெரும் சீரழிவு.

 

மத அடிப்படை வாதம் ,சாதி தூய்மை வாதம் ,இனத் தூய்மை வாதம் போல் மொழித் தூய்மை வாதமும் பாசிசமே .பேரழிவே. மக்களிடம் புழங்கும் பெயர்ச் சொற்களை ஏற்பதும் செப்பனிடுவதுமே பயன்தரும்.

 

சென்னை சட்டமன்றத்தில் ஆட்சித் தமிழ் குறித்த விவாதம் வந்த போது மாபெரும் தோழர் ப.ஜீவானந்தம் சுட்டிக்காட்டினார் . சொற்களுக்கு பஞ்சமில்லை . நிறைய உருவாக்கலாம் . எப்படி பாறைக்கல் ஆற்று நீரோட்டத்தில் அடிவாங்கி அடிவாங்கி கூழாங்கல் ஆகிறதோ அப்படி காலவெளியில் பழகப்பழக சொற்கள் கூர்மையாகும் . ஜொலிக்கும் என்றார்.

 

 “அறிவியல் வரலாற்று நூல்களை மொழி பெயர்க்காதீர்கள் .அதனை அடியொற்றி தமிழில் எழுதுங்கள் .பிழை நேரலாம் .அஞ்ச வேண்டாம் . பிழையைத் திருத்திக் கொள்ளலாம் .தயங்கி நின்றால் நின்றுகொண்டேதான் இருக்க வேண்டும்.” என இடித்துரைத்தவர் மேனாள் துணை வேந்தர் அனந்த கிருஷ்ணன் .கிட்டத்தட்ட இதே வழிக்காட்டலைத்தான் மேனாள் துணை வேந்தர் குழந்தைச்சாமியும் சொன்னார் .

 

உழைக்கும் மக்களிடம் நடைமுறையில் ஏராளமான சொற்கள் புதைந்து கிடக்கின்றன .தான் என்ற அகந்தையை தூக்கி எறிந்துவிட்டு அறிவுஜீவிகள் கீழே இறங்கி வந்தால் தமிழும் வாழும் .அவர் புகழும் ஓங்கும் !

 

தமிழை முன்னிறுத்துவோம் அதன் வேருக்கு நீர் பாய்ச்சுவோம் .உரம் சேர்ப்போம். பூச்சி போட்டு அரிக்காமல் ,நோய்நொடிகள் தாக்காமல் கண்துஞ்சாமல் காப்போம் .

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

20/11/2022.

0 comments :

Post a Comment