சுடுகஞ்சி சுட்ட அப்பளம்.

Posted by அகத்தீ Labels:

 வெட்டியாய் இருந்தாலும்

மழைக் காலம் கூடுதல்
சோர்வைத் தருகிறது.
புதிதாய் எழுதவோ
புத்தகம் படிக்கவோ
மனம் லயிக்கவே இல்லை.
முகநூல் பதிவுகளும்
அலைபேசி அழைப்புகளும்
உற்சாகத்தை ஊட்டவில்லை.
வேர்கடலையை வேகவைத்து
சுற்றி இருந்து அரட்டை அடித்து
உரித்து உரித்து தின்னவும்
கடுங்காபி குடிக்கவுமாய்
காலம் ஒன்றிருந்தை
அசை போட்டுப் பார்க்கிறேன்.
சுடுகஞ்சியும் சுட்ட அப்பளமும்
மழைக் கால உணவான காலம்
நினைவுத் திரையில் நகர்கிறது.
உழுந்தங் கஞ்சி வற்றல் வடகம்
கொத்தமல்லி துவையல்
காலை டிபனாகக் கண்சிமிட்டிய
நாட்கள் கனவல்ல ...நிஜம்.
வேகவைத்த மரவல்லிக் கிழங்கு
சுட்ட மிளகாய் புளி உப்பு
அல்லது பொரித்த மீன்
நாக்கில் எச்சில் ஊறும்
கை முறுக்கும் சுக்கு காப்பியும்
மழைக்கேற்ற கோரிக்கை
என்னாச்சு ? என் நினைப்பு முழுக்க
தீனிகளே நிரம்பி வழிகிறதே !
இட்லி தோசை எப்போதிலிருந்து
நம் காலை உணவாக இருக்கிறது ?
முதல் நாள் கறித் தீபாவளிக்கு
இட்லி கறிக் குழம்பு
தோசை கறிக் குழம்பு
ஸ்பெஷலானது எப்படி ?
தினசரி பழையது அதுதான்
பழங்கஞ்சியும் மோரும்
ஊறுகாயும் வெங்காயமும்
தின்று பழகிய வாழ்வில்
இட்லி கறிக் குழம்பு ஸ்பெஷல்தானே
என் நாஞ்சில் நாட்டு கவிமணி
தேசிக விநாயகம் பாடினாரே !
"இட்டெலி ஐந்தாறு தின்போம் என்பீர்!-நீங்கள்
ஏதும் கருணை யிலிரோ ! அம்மா ?
பட்டினி யாக இறந்திடினும் - நாங்கள்
பாவம் பழிசெய்ய மாட்டோம் அம்மா !
தேயிலை தேயிலை என்பீர் அம்மா !-இது
தேக்கிலை தானே தெரியாதம்மா!
வாயும் வயிறும் நிறைந்திடுமோ ? -இதில்
வைத்த அமுதும் திகைத்திடுமோ?
காப்பி காப்பியென்று கத்துவீரே -அதை
கண்ணாலே கண்டதும் இல்லை,அம்மா
சாப்பிட(ற்) ஏற்ற உணவிதுவோ ?அன்றிச்
சட்டையோ தொப்பியோ !கூறும் அம்மா !"
விரைந்தோடியது காலம் பாஸ்ட் புட்
பர்க்கர் பீஸா பரோட்டா பரைடு ரைஸ்
பிரியாணி இன்னும் என்னென்னமோ யாமறியேன்....
மாறாத பண்பாடோ
ஒற்றைப் பண்பாடோ
வெறும் கிணற்றுத் தவளை பேச்சே!
இப்போது என் வேண்டல்
சுடுகஞ்சி சுட்ட அப்பளம்.
சுபொஅ.
12/11/2022 இரவு 8.30 மணி.

Like
Comment
Share

0 comments :

Post a Comment