கூப்புக்காடு [வால்பாறையின் கதை]

Posted by அகத்தீ Labels:

 

 


தேயிலைக் காடுகளின் வாழ்க்கைப் பாட்டை எத்தனை நாவல்களில் படித்தாலும் நெஞ்சை அறுக்கும் வலி ஓயாது .கூப்புக்காடு மீண்டும் ஒரு முறை அந்த வலியை அனுபவிக்கச் செய்தது .

 

வழக்கமாக வேகமாகப் படிக்கும் நான் இந்த நாவலை வாசிக்கத் தொடங்கியதும்  ஆமைவேகத்துக்கு மாறிவிட்டேன் . இதை நாவல் என்றும் சொல்லலாம் . ஆசிரியரின் வாழ்வனுபவப் பதிவு என்றும் சொல்லலாம் . வால்பாறையின் கதை என்கிற துணை தலைப்பிற்கு பொருந்துகிறது என்றும் சொல்லலாம் .

 

வால்பாறை உருவாக்கம் விரிவாக்கம் வாழ்க்கை வலி மூன்றையும் தம் அனுபவங்களூடே நூலாசிரியர் சொல்லிச் செல்கிறார் . ஆகவே கதை என்பதைக் காட்டிலும் சிக்கிக் கொண்ட அப்பாவிகளின் வாழ்க்கையின் கண்ணீரும் இரத்தமும்தான் இந்நூல் எனலாம் . அந்தக் காட்டிலிருந்து படித்து உயர்ந்த இடத்துக்கு வந்துவிட்டவரின் நினைவலைகளில் பதிந்துவிட்ட துயரத்தின் வடுக்களை தொகுப்பதில் வெற்றி பெற்றுள்ளது .

 

 “டி.செல்வராஜின்  ‘தேநீர்’ , இராமுருகவேள் மொழியாக்கத்தில் பி.எச்.டேனியலின்  ‘எரியும் பனிக்காடு’, கொ மா கோதண்டம் எழுதிய  ‘ஏலச்சிகரம்,  ‘குறிஞ்சாம் பூ,  ‘ஜன்ம பூமிகள்கு.சின்னப்பபாரதியின்  ‘சங்கம்’ , ஜானகி ராமச்சந்திரன் மொழிபெயர்ப்பில் கோதாவரி பாருலேகர் எழுதிய  ‘மனிதர்கள் விழித்துக்கொள்ளும் போது’ , இரா சடகோபனின் மொழிபெயர்ப்பில் கிறொஸ்டின் வில்சன் எழுதிய  ‘கசந்த கோப்பி’ [ bitter berry] , அமல்ராஜின்  ‘தேரிக்காடுஉள்ளிட்ட புதினங்கள் மலைக்காடுகளில் பஞ்சம் பிழைக்க வந்தோர்கள் படும்பாட்டை ,வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு சூழல்களில் விவரித்திருக்கும் ; ஆயின் அடிநாதமாய் சுரண்டலும் ஒடுக்குமுறையும் பேசப்பட்டிருக்கும் ,அவரவர் அரசியல் சமூகப் புரிதலுக்கு ஏற்ப. [ நான் சொல்ல மறந்த நூல்களையும் இந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்க ]

 

இவை ஜனநேசனின் “ ஏலோ..லம்” நாவல் நூல் அறிமுகத்தில் நான் எழுதியது .என் சிற்றறிவுக்கு இவ்வளவு பட்டியல் தெரியும் போது ஏன் அணிந்துரையிலோ முன்னுரையிலோ “ எரியும் பனிக்காடு” மட்டுமே சுட்டப்படுகிறது . [அது மிகச் சிறந்த நாவல் சந்தேகமில்லை ] தமுஎகசவின் முன்னத்தி ஏர்கள் செல்வராசும் சின்ன்ப்பபாரதியும் என்னைப் பார்த்து கேட்பது போலிருந்தது .

 

இந்த நாவலில் வால்பாறையில் தொழிற்சங்கம் பற்றிய செய்திகள் வந்தாலும் நம்பிக்கை ஊட்டுவதாக இல்லை . 1960 ல் நடந்த போராட்டம் குறித்து போகிற போக்கில் சொல்லிச் செல்கிறார் . தோழர் மைதிலி சிவராமன் எழுதிய “வால்பாறை வீரகாவியம்” என்கிற சிறு பிரசுரம் என்நெஞ்சில் விசிறிய நெருப்பு ; ஒரு வேளை அணிந்துரை எழுதிய ஆதவன்தீட்சண்யாவையோ நூலாசிரியர் ஆராவையோ போய்ச் சேரவில்லையோ ?

 

தேயிலை செடி அல்ல மரம் , தேயிலைத் தோட்டத்தின் முன் தயாரிப்பே கூப்புக்காடு, அங்கு உழைப்புச் சுரண்டலும் பாலியல் சுரண்டலும் கோலோச்சிய கொடுமை ,மருத்துவ வசதியின்மை கொன்ற உயிர்கள் எல்லாமும் பேசப்படும் இந்நூலை வாசிப்பீர் ! வால்பாறையின் வரலாற்றை நுகர்வீர் !

 

கூப்புக்காடு [வால்பாறையின் கதை] , ஆசிரியர் : ஆரா,

வெளியீடு :பாரதி புத்தகாலயம் ,தொடர்புக்கு : 044- 24332424 /24330024/24332934  ,9498062424 ,விலை : ரூ.200 / பக்கங்கள் :208.

 

 

சுபொஅ.


0 comments :

Post a Comment