கவியரங்கம்
: ஒரு கனாக்காலம்
முதலில்
, “ நானும் பட்டிமன்றமும்” என்ற பொருளில் நான் 16 நவம்பர் 2022 ல் பதிந்ததில் மேலதிகத்
தகவல்களை தோழர் டி.கே.சண்முகம் பதிந்தார் .அதனை ஏற்கிறேன்.
“Shan
Mugam
பன்முகத்தன்மை
எப்போதுமே சிறப்பு வாய்ந்ததும், அவசியமானதும் ஆகும்.
இதில் நீங்கள்
வழிநடத்துபவராகவும், பங்கேற்பாளராகவும் எப்போதுமே இருந்து வந்திருக்கிறீர்கள் என்பது
மகிழ்ச்சி.
"ஜெயலலிதா
அரசின் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்" நிகழ்ச்சி முதலில் வில்லிவாக்கம் பஸ் நிலையம்
அருகில் நடந்தது. அப்போது நான் புரசை - எழும்பூர் பகுதிக்குழு செயலாளர். நீங்கள் அதன்
பொறுப்பாளர். பெரிய வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி இது.
அடுத்து சிஐடியு
அகில இந்திய மாநாடு சென்னையில் நடைபெற்றதையொட்டி "வீதி விசாரணை" நிகழ்ச்சி.
மக்களின் அமோக வரவேற்புடன் வடசென்னையில் 13 இடங்களில் நடைபெற்றது. இந்த
13 லும் பங்கு
பெற்றவர்கள் நீங்களும், நானும் என்பதும் மகிழ்ச்சியே. நீங்கள் குறிப்பிட்டிருக்கக்
கூடிய தோழர்களுடன் பகவதி, ஜேசுதாஸ் ஆகியோரும் இதில் அடக்கம்.
நன்றி தோழர்”
இனி கவியங்கம்
குறித்து ;
எழுபதுகளிலும்
எண்பதுகளிலும் “கவியரங்கம்” என்பது
ஒரு வலிமையான அரசியல் ஆயுதமாய்த் திகழ்ந்ததை இப்போது அசைபோட்டுப் பார்க்கிறேன் .
குறிப்பாக
திமுக கவியரங்கை மிகவும் நுட்பமாய் பயன்படுத்திய காலம் ஒன்றிருந்தது .கலைஞரின் கவியரங்கம் பலரை ஈர்த்ததுண்டு .
இடதுசாரி
அரசியலிலும் அன்று கவியரங்கம் காத்திரமான பாத்திரம் வகித்தது .
கவிஞர்கள்
தணிகைச் செல்வன் ,கந்தர்வன் ,வெண்மணி .இன்குலாப் உள்ளிட்ட கவிஞர் படையின் அனல் பறக்கும் கவிதை வரிகள் அன்று இடது சாரி அரசியலை நோக்கி வரும் இளைஞர்களின் நரம்பை முறுக்கேறச் செய்தன .
கலை
இலக்கிய மேடைகளில் மட்டுமல்ல ; வாலிபர் ,மாணவர் ,மாதர் சங்க மேடைகளிலும் கவியரங்கம் ஓர் இடத்தைப் பிடித்தது .இதன் வீச்சை இன்னும் அழுத்தமாய் புரிய ஒரு செய்தி.
சென்னையில்
நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாடு ஒன்றின் துவக்க நிகழ்வில் கவிஞர் தணிகைச் செல்வன் கவிதை பேரெழுச்சியாய் அமைந்தது . அக்கவியரங்கில் அவர் பாடிய கவிதை உடனே அச்சிடப்பட்டு ஆபிரம் பிரதிகள் விற்கப்பட்டன . வாலிபர் சங்க மாநில மாநாட்டில் அவரின் கவிதை ஆவேச உணர்ச்சியை ஊட்டியது .
நானும் கவியங்க
மேடைகளில் என் ஆற்றலை முழுவீச்சில் பயன்படுத்திய காலம் அது .வாலிபர் சங்கம் ,எழுத்தாளர்
சங்கம் என மேடைகளை தவற விடுவதில்லை . தமுஎச மாதாந்திர கூட்டம் கவியரங்கு இல்லாமல் நடந்ததில்லை
.
நங்கநல்லூர்
இலக்கிய வட்ட மேடையை அவசரகாலத்தில் நானும் அ.லெ.கந்தனும் ,நீலக்குமணனும் தவறவிடாமல்
பயன் படுத்தினோம்.எங்கள் அரசியல் சிலருக்கு அலெர்ஜியானது .தடுக்க முயன்றனர் .சண்டை
போட்டு வாசிப்போம். மடிப்பாக்கம் திருவள்ளுவர் இலக்கிய மன்றம் பார்த்தசாரதி தவறாது
எங்களுக்கு மேடை தந்தார் .பெரம்பூர் கவின்கலை மன்றம் ,புதுவண்ணை எல்லாம் வாய்ப்பாகின
. சென்னை மாவட்ட கட்சி மேடையிலும் கவிதை ஏறியது . தோழர் மாசேதுங் இறந்த போது புதுவண்ணையில்
நடந்த அஞ்சலிக் கூட்டத்தில் நான் கவிதாஞ்சலி செலுத்தினேன். நினைக்க நினைக்க நெஞ்சம்
இனிக்கும் காலம் அது .
பொதுவாய்
கவிஞர்கள்
பலர் துவக்கம் /முடிவு இவற்றை பலமேடைகளில் தொடர்ந்து பயன் படுத்துவர் . இடையில் தலைப்புக்கு
ஏற்ப கவிதை மாறும் .இடையிடையே மின்னல் வெட்டாய் நடப்பு அரசியலை குத்திக் கீறும் வரிகள் ; நெஞ்சை ஆழ உழும் தத்துவ
விதைகள் ; நையாண்டி எரிமலை எல்லாம் இருக்கும் . ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி இருக்கும் .
கவிதையை
ஏற்ற இறக்கங்களுடன் வாசிப்பதே ஒரு பெருங்கலை .
“கணவனை இழந்ததாலே கண்ணகி சீற்றம் நியாயம்
மனைவியைப்
பறித்ததால் ராமனின் யுத்தம் நியாயம்
துயிலினை இழந்ததாலே துரோபதி சபதம் நியாயம்
உழுநிலம்
பறிக்கப்பட்டால் உழவனின் கிளர்ச்சி நியாயம்
அனைத்தையும்
இழந்த எங்கள் ஆவேசம் போர் புரட்சி
அனைத்தும்
நியாயம் ! நியாயம் ! நியாயம் !
தாக்குண்டால்
புழுக்கள்கூட தரைவிட்டுத் துள்ளும் , கழுகு
தூக்கிடும் குஞ்சுகாக்க துடித்தெழும் கோழி; சிங்கம்
மூர்க்கமாய் தாக்கும்போது முயல்கூட எதிர்த்து நிற்கும்…
சாக்கடைப் கொசுக்களா நாம் ? சரித்திர சக்கரங்கள் !
சரித்திரம் சுழலும்போதும் சமுத்திரம் குமுறும்போதும்
பொறுத்தவன் பொங்கும்போதும் புயல்காற்று சீறும்போதும்
பறித்தவன் ஆதிக்கத்தைப் பசித்தவன் எதிர்க்கும்போதும்
மறித்தவன் வென்றதுண்டா ? மறுப்பவன் உலகிலுண்டா?
…………………………………………………………….. “
இப்படி
ஆவேசமாய் தணிகை பொங்கிய போது சிலிர்த்திடும் இளைஞர் கூட்டம் .
“நாளும் கிழமையும்
நலிந்தோர்க்கில்லை
ஞாயிற்றுக்
கிழமையும்
பெண்களுக்கில்லை”
இப்படி
நறுக்கென கந்தர்வன் தலையில் கொட்டிய போது
“எம்.எல்.ஏ சட்டையில் ஒரு
பை வைத்தார்.
எம்.பி.சட்டையில் பல
பை வைத்தார்.
மந்திரி,
பையையே சட்டையாக மாட்டிக்கொண்டார்”
எனக்
கந்தர்வன் நையாண்டி செய்த போது
“ பொதுகிளாசில் டீ கேட்க
தனி
கிளாசில் டீ கொடுக்க
ஒரு
டீயின் விலை
ஒண்பது
உயிர்கள் ..”
என
கந்தர்வன் சாட்டையைச் சொடுக்கிய போது .
“விதவிதமாய்
மீசை வைத்தாய் – உன்
வீரத்தை
எங்கே தொலைத்துவிட்டாய் ?”
எனக்
கந்தர்வன் எரிமலையாய் பாய்ந்த போது
கவியரங்கம்
அதிரும் ;கூட்டத்தில் வந்தோரின் இரத்தம் சூடேறும் .
“தாயே தமிழ்த் தாயே
நீ
தேனாக பாலாக வந்தது போதும்
இனிவரும்
போது
சுரண்டலைச்
சாய்கின்ற
கூரான
வாளாக வா ! ”
என
கவிஞர் வெண்மணி அழைத்த போது கூட்டம் ஆர்ப்பரிக்கும் .
அந்தக்
கவியரங்கங்கள் வீழ்ந்தது ஏன் ? எப்படி ? ஆராய வேண்டும் .
தனிமனித
துதி கவியரங்க மேடைகளில் நாற்றமெட்டுக்கத் துவங்கிய போது ;
தான்
எழுதிய அனைத்து குப்பைகளையும் ஒரே மேடையில் கொட்டிவிட வேண்டுமென நேரம் காலமின்றி அறுக்கத் துவங்கிய போது ;
லத்திச்
சார்ஜ் செய்து கூட்டத்தைக் கலைக்கும் மேடை பேச்சாளர்கள் போல் கவியரங்கிலும் கூர்மை, எளிமை, குத்தல், நக்கல் எதுவுமில்லாமல் அறுக்கத் துவங்கிய போது ;
சில
முத்திரை வாக்கியங்களை தொடர்ந்து பயன்படுத்துவது என்பது வேறு ; எல்லா மேடையிலும் கிளிப்பிள்ளைப்போல் சொன்னதையே சொல்லத் துவங்கிய போது ;
மேடைக்கு
வந்த பின் காகிதம் பேனா தேடி தன்னை வரகவியாய் பாவித்து கிறுக்க - அதையே வாசிக்கத் துவங்கிய போது ;
கவியரங்கம்
என்றாலே மிரண்டோடும்
நிலை உருவானது .
இது
என் தனிப்பட்ட கருத்து .
இப்போதும்
கவியரங்கை கூர்மையான ஆயுதமாய் திட்டமிட்டு கூரேற்றி பயன்படுத்த முடியுமே ! முயன்றால் என்ன ?
“ அன்னை
விலங்கொடிக்க
ஆதிக்கப்
பகை முடிக்க
தன்னைப்
பலிதந்த
சிங்க
இளைஞர்களே !
சிகப்பு
வணக்கம் !
வெள்ளையர்கள்
போனபின்பு
ஆளவந்த
கொள்ளையர்கள்
அஹிம்சா
தடியடியில்
சாத்வீகச்
சிறைகளிலே
சரித்திரத்தின்
பக்கங்களை
இரத்தத்தால்
நிறைத்தவரே!
எம்
இதயத்து வணக்கம் !
யுகயுகமாய்
புகைந்து கொண்டிருந்த
வர்க்கபகைமையும்
வர்ணப்பகைமையும்
வெண்மணியில்
வெறிகொண்டெரிந்த
போது
வீழந்த
மலர்களே
வீர
வணக்கம்!
நான்
[சு.பொ.அலி] கவியரங்க
மேடைகளில் வணக்கத்தோடு
இப்படித்தான் தொடங்கினேன்..
ஏனோ
அந்த காலம் மீண்டும் என் நினைவில் முட்டியது ….
இப்போதும்
அந்த ஆயுதத்தை சாணை பிடித்து பயன்படுத்த முடியும் ….
[ இங்கு
எடுத்தாளப்பட்ட கவிதைகள் அனைத்தும் நினைவிலிருந்து எழுதப்பட்டதால் சில பிழைகள் இருக்கக்கூடும் ]
சு.பொ.அகத்தியலிங்கம்
[ 2018 ஜூலை
பதிந்தது .சில திருத்தங்களுடன் மீள்பதிவு.]
0 comments :
Post a Comment